நக்சல்பாரி புரட்சியாளர் தோழர் சம்பத்தின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சி – உரைகள்

தோழர் சம்பத் அவர்களின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சி 18-ஆம் தேதி காலையில் 10 மணியளவில் அவர் இறுதியாக வாழ்ந்து வந்த குரோம்பேட்டை லட்சுமிபுரத்தில் உள்ள இல்லத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றிய தோழர்களின் உரைகளில் உள்ள சில முக்கியமான கருத்துகளை மட்டும் இக்கட்டுரையில் சுருக்கமாக பதிவிடுகிறோம்.

மாநில அமைப்புக் கமிட்டி, இ.பொ.க.(மா-லெ)-வின் தலைமைக் குழு உறுப்பினர், “புரட்சிப் புயல்” சித்தாந்த இதழின் ஆசிரியர் மற்றும் “புதிய ஜனநாயகம்” இதழின் முன்னாள் ஆசிரியருமான நக்சல்பாரி புரட்சியாளர் தோழர் சம்பத் என்கிற குமார் (வயது 70), புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, மருத்துவ சிகிச்சை பலனளிக்காத நிலையில், 17.11.2025 அன்று மதியம் 2.15 மணிக்கு சென்னையில் உயிரிழந்தார்.

அவரது இறுதி அஞ்சலி நிகழ்ச்சி 18-ஆம் தேதி காலையில் 10 மணியளவில் அவர் இறுதியாக வாழ்ந்து வந்த குரோம்பேட்டை லட்சுமிபுரத்தில் உள்ள இல்லத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றிய தோழர்களின் உரைகளில் உள்ள சில முக்கியமான கருத்துகளை மட்டும் இக்கட்டுரையில் சுருக்கமாக பதிவிடுகிறோம்.

தோழர் அமிர்தா, மாநிலப் பொருளாளர், மக்கள் அதிகாரக் கழகம்.

மக்கள் அதிகாரக் கழகத்தின் மாநிலப் பொருளாளர் தோழர் அமிர்தா தனது தலைமை உரையில், “தோழர் சம்பத் தன் வாழ்நாளில் தான் ஏற்றுக்கொண்ட கொள்கைக்கு எந்த சமரசமும் இல்லாமல், அர்ப்பணிப்புடன் வாழ்ந்தவர். எந்தவொரு மார்க்சிய குழுக்களும் சொல்லக்கூடிய கருத்துகளை சரியான மா-லெ பார்வையில் உடனடியாக விமர்சிக்கக்கூடிய அரசியல் ஆளுமை கொண்டவர். சொந்த வாழ்க்கையில் எந்தப் பகட்டையும் விரும்பாமல் மிக எளிமையாக வாழ்ந்த தோழர்” என்று தோழரின் கம்யூனிச பண்புகள், அரசியல் ஆளுமை குறித்து பேசினார்.

தோழர் லெனின் பாரதி, திரைப்பட இயக்குநர்.

திரைப்பட இயக்குநர் தோழர் லெனின் பாரதி, “ஐம்பதாண்டு காலம் மா-லெ அரசியலில் உறுதியாக அர்ப்பணிப்புடன் இருந்த தோழர். அவருடைய மறைவு என்பது வருத்தமானது. ஆனால் அவருடைய அர்ப்பணிப்பு உணர்வையும் மா-லெ அரசியலின் சிந்தனை தொடர்ச்சியையும் நாம் கைக்கொண்டு தொடர்ச்சியாக ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்களுக்கு பணி செய்வோம்” என்று உறுதியேற்று தன்னுடைய உரையை சுருக்கமாக முடித்துக் கொண்டார்.

தோழர் குருசாமி, மாநில இணைச் செயலாளர், மக்கள் அதிகாரக் கழகம்.

மக்கள் அதிகாரக் கழகத்தின் மாநில இணைச் செயலாளர் தோழர் குருசாமி தன்னுடைய உரையில், “புரட்சிகர அமைப்புகளில் பல பேர் பயணிக்கிறார்கள்; பலர் பாதியிலேயே சென்று விடுகிறார்கள். இந்த தோழர் இறுதிவரை எந்தவித சலனமுமில்லாமல் நீடித்து நிற்பதற்கு அவரிடம் கம்யூனிசப் பண்புகள் நிறைந்திருந்தன. அமைப்பு பிளவுப்பட்ட போதுகூட, தோழர் எந்த சஞ்சலமும் இல்லாமல், தன்னுடன் பழகியவர்கள் என்று முக்கியத்துவம் கொடுக்காமல் கொள்கைக்காக நின்று அமைப்பை பாதுகாத்தவர்.

நான் கற்ற மா-லெ கருத்துகளில் அதிகமாக அவரிடம் இருந்து கற்றுக்கொண்டது. ஏனென்றால் கற்றுக்கொடுக்கும் சிறந்த ஆசிரியருக்குரிய பண்பைப் பெற்றவர்.

மார்க்சிய கருத்துகளை இழிவுப்படுத்துவது, இனிமேல் மார்க்சியமே செல்லாது என்று பேசுவது; மார்க்சியம் காலாவதியாகிவிட்டது என்று பேசுபவர்களை எள்ளிநகையாடி மார்க்சியத்தை நிலைநாட்டிய சிறந்த தோழர்” என்று தோழர் சம்பத்துடனான தன்னுடைய புரட்சிகர பயணத்தை பகிர்ந்துகொண்டார்.

தோழர் சுந்தர், மாநில ஒருங்கிணைப்புக்குழு, பு.ஜ.தொ.மு.

பு.ஜ.தொ.மு., மாநில ஒருங்கிணைப்புக்குழு தோழர் சுந்தர், தன்னுடைய உரையில், தோழர் சம்பத் ஒரு கம்யூனிஸ்ட் எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்று தன்னுடைய வாழ்நாளில் வாழ்ந்து காட்டியது குறித்தும் சர்வதேச அரசியல் நிலைமைகளை மிக எளிதாக விளக்குவது குறித்தும் பேசினார்.

தோழர் செந்தில், தமிழ்த்தேச மக்கள் முன்னணி.

தமிழ்த்தேச மக்கள் முன்னணியைச் சார்ந்த தோழர் செந்தில் தன்னுடைய உரையில், “மக்கள் திரள் வழியை முன்வைத்து மா-லெ அமைப்புகளை சி.பி.எம் கட்சியுடன் போட்டிபோடக் கூடிய வகையில் நிறுவனமயப்பட்ட மாபெரும் இயக்கமாக வளர்த்தெடுத்ததில் தோழர் சம்பத்திற்கு மிகப்பெரிய பங்கிருக்கும். தோழர் மறையும் காலத்தில் நாடு மிகப்பெரிய இருள் சூழந்த நிலையில் இருக்கிறது. இந்த கெடுவாய்ப்பான தருணத்தில்தான் நாம் மிகவும் ஈகம் நிறைந்த, அனுபவம் மிகுந்த தோழர்களை இழந்து கொண்டிருக்கிறோம்” என்று பதிவு செய்தார்.

தோழர் தீரன், மாநில ஒருங்கிணைப்புக்குழு, புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி.

புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணியைச் சார்ந்த தோழர் தீரன் தன்னுடைய உரையில், “இந்த மரணத்தை தோழர் எதிர்கொண்டதை நாங்கள் கண்கூட பார்த்தோம். “இடையறாத போராட்டம்தான் தோழர் எல்லாம், ஒரு கட்டத்தை தாண்டி வந்துவிட்டோம். தொடர்ந்து போராடுங்கள், புரட்சிக்காக.. நான் இல்லையென்றாலும் பரவாயில்லை நீங்க போராடுங்க” என்ற வார்த்தைகள் அவர் கடைசியாக கூறியவை. எங்களுக்கெல்லாம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரலாறு எடுத்த தோழர், மிகச் சிறந்த ஆசிரியர். அவர் கூறியபடி எல்லா சந்தர்ப்பவாத போக்குகளுக்கு எதிராகவும் பு.மா.இ.மு. செயல்படும்” என்று உறுதியேற்றார்.

தோழர் இராமலிங்கம், மாநில ஒருங்கிணைப்பாளர், மக்கள் கலை இலக்கியக் கழகம்.

மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் இராமலிங்கம் தன்னுடைய உரையில், தோழர் சம்பத்தின் மார்க்சியத்தை எளிதாக விளக்குவது, அரசியல் கூர்மை, இளம்தோழர்களை வளர்க்க வேண்டும் என்ற நோக்கம் குறித்தும் பேசினார்.

தோழர் ஆ.கா. சிவா, மாநில ஒருங்கிணைப்பாளர், பு.ஐ.தொ.மு.

பு.ஐ.தொ.மு. மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ஆ.கா.சிவா தன்னுடைய உரையில், “மார்க்சிய-லெனினியவாதியாக இருப்பதற்கான அடிப்படைகளை நான் அவரிடம் இருந்து கற்றுகொண்டேன். சித்தாந்த நூல்களை  இயந்திரகதியாக புரிந்துகொள்ளாமல் அறிவியல்பூர்வமாக எப்படி புரிந்துகொள்ள வேண்டும் என்பதை விளக்கியவர்” என்று தோழருடனான புரட்சிகர பயணத்தை பகிர்ந்து கொண்டார்.

தோழர் சிவகாமு, மேற்கு மாவட்ட செயலாளர், மக்கள் அதிகாரக் கழகம்.

மக்கள் அதிகாரக் கழகத்தின் மேற்கு மாவட்ட செயலாளர் தோழர் சிவகாமு தன்னுடைய உரையில், தோழர் சம்பத் உடனான தன்னுடைய அமைப்பு அனுபவங்களையும், தன்னுடைய மனதில் நிற்கும் வகையில் தோழர் சம்பத் விளக்கும் திறன் குறித்தும் பகிர்ந்து கொண்டார்.

தோழர் ஓவியா, கழக வழக்கறிஞர் அணி.

தோழர் சம்பத்தின் இறுதி நாட்களில் அவருடன் உடனிருந்த, கழக வழக்கறிஞர் அணி தோழர் ஓவியா, தோழரின் கம்யூனிசப் பண்புகள், மக்களுடன் எளிதாகப் பழகும் பண்புகள், உழைக்கும் மக்கள் மீதான பற்று குறித்து தன்னுடைய கருத்துகளை பகிர்ந்து கொண்டார்.

தோழர் ஞானம், முற்போக்கு இளைஞர் முன்னணி.

முற்போக்கு இளைஞர் முன்னணியின் தோழர் ஞானம், “தமிழகத்தில் மா-லெ கட்சியின் பாதை தனிநபர் அழித்தொழிப்பை நோக்கி சென்ற நேரத்தில், மேற்கு பிராந்தியக் குழுதான் தனிநபர் அழித்தொழிப்பு வறட்டுத்தனமான நடவடிக்கை, இதற்கும் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் சம்மந்தம் கிடையாது. கம்யூனிஸ்ட் கட்சி என்றால் திட்டம், செயல்தந்திரம், அமைப்பு கோட்பாடுகளை எல்லாம் உருவாக்க வேண்டும் என்ற அடிப்படையில் அதனை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளில் 1970-72 காலகட்டங்களிலேயே மேற்கு பிராந்தியக் குழு ஈடுபட்டது.

1978 காலத்தில் மேற்கு பிராந்தியக் குழு மாநில அமைப்புக் கமிட்டி என்று உருவான காலக்கட்டத்தில் தான் தோழர் சம்பத் இந்த அமைப்பில் இணைகிறார். மக்களை அதிகாரத்திற்காக அணிதிரட்டி அவர்களை புரட்சிகரப் போராட்டங்களில் பங்கெடுக்க வைத்து அதன் தொடர்ச்சியாக ஆயுதப் போராட்டங்களை கட்டியமைக்க வேண்டும் என்ற அடிப்படையில் உருவான மாநில அமைப்புக் கமிட்டியில் தோழர் சம்பத் மிகப்பெரும் பங்காற்றினார் என்பதை அறிய முடிகிறது” என்று தன்னுடைய உரையில் மா.அ.க.வில் தோழர் சம்பத்தின் பங்களிப்பு குறித்து பதிவு செய்தார். மேலும், சித்தாந்த போராட்டம் நடத்தி ஒன்றுபட்ட மா-லெ கட்சியை கட்டுவதற்கான அழைப்பு கொடுத்தார்.

தோழர் வெற்றிவேல் செழியன், மாநிலப் பொதுச்செயலாளர், மக்கள் அதிகாரக் கழகம்.

மக்கள் அதிகாரக் கழகத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் தோழர் வெற்றிவேல் செழியன், “அமைப்பு பிளவுகளின் கலைப்புவாதிகளும் அராஜவாதிகளும் அமைப்பை ஒழித்துக் கட்டுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்ட போது, எல்லாவிதமான தனிநபர் கண்ணோட்டத்தையும் ஒழித்துக்கட்டி சரியான அரசியலில் உறுதியாக நின்றவர். ஆசானாக நின்று புதிய வடிவத்தை முன்னிறுத்தி துரோகிகளை எல்லாம் திரைகிழித்து ஒரு வழிகாட்டியாக நின்றவர்தான் தோழர் சம்பத் தத்துவார்த்த ரீதியில் சரியான திசைவழியில் கொண்டுசென்றவர்” என்று தோழர் சம்பத்தின் கலைப்புவாதிகள், அராஜகவாதிகளுக்கு எதிரான போராட்டம் குறித்து பேசினார்.

தோழர்களின் உரைகளுக்கு இடையே மக்கள் கலை இலக்கிய கழகத்தின் சிவப்பு அலை கலைக்குழு சார்பாக, “கஷ்டஜூவிகள் நாங்கள் கம்யூனிஸ்டுகள்”, “தோழரே வா” என்ற இரு பாடல்கள் பாடப்பட்டன.

இறுதியாக, “நக்சல்பாரி புரட்சியாளர் மூத்த தோழர் சம்பத்துக்கு செவ்வணக்கம்!, மார்க்சிய-லெனினிய-மாவோ சிந்தனை வெல்லட்டும்!, பாட்டாளி வர்க்க விடுதலைக்காக தியாகிகளே, உங்கள் தியாகத்தை மறக்க மாட்டோம், கம்யூனிச செஞ்சுடரை அணையவிடோம், உழைப்பாளர் உள்ளத்தில் உதித்தெழுந்த செங்கொடியை தாழவிடோம், அராஜகவாதத்தையும் கலைப்புவாதத்தையும் திரைகிழிப்போம், மார்க்சிய-லெனினிய-மாவோ சிந்தனையை உயர்த்திப் பிடிப்போம்” ஆகிய முழக்கங்களுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது. இதனைத் தொடர்ந்து தோழரின் இறுதி ஊர்வலம் நடைபெற்றது.


வினவு களச்செய்தியாளர்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க