சமூக-ஜனநாயகவாத இயக்கத்தில் தத்துவம் வகிக்கின்ற குறிப்புகள் பற்றி 1874-இல் எங்கெல்சு சொன்னதை மேற்கோள் காட்டுவோம். சமூக-ஜனநாயகவாதத்தின் மகத்தான போராட்டத்தின் இரண்டு (அரசியல் வகைப்பட்டது, பொருளாதார வகைப்பட்டது எனும்) வடிவங்களை அங்கீகரிப்பது நம்மிடையே ஃபேஷனாக உள்ளதே, அதுபோல், செய்யவில்லை எங்கெல்சு; அவர் மூன்று வடிவங்களை அங்கீகரிக்கிறார், முதலில் சொன்ன இரண்டு வடிவங்களுக்குச் சமமாகத் தத்துவார்த்தப் போராட்டத்தை வைக்கிறார். நடைமுறை வகையிலும் அரசியல் வகையிலும் பலமடைந்துவிட்டிருந்த ஜெர்மன் பாட்டாளி வர்க்க இயக்கத்துக்கு அவர் அளித்த பரிந்துரைகள் தற்காலப் பிரச்சினைகளின், சர்ச்சைகளின் பார்வை நிலையில் எவ்வளவோ அறிவூட்டுவதாக இருப்பதால் “ஜெர்மனியில் விவசாயிகள் போர்” எனும் தமது நூலுக்கு அவர் எழுதிய முகவுரைக் குறிப்பிலிருந்து ஒரு நீண்ட பகுதியை நான் மேற்கோள் காட்டுவதில் வாசகர் வெறுப்படைய மாட்டார் என்று நம்புகிறேன். வெகுகாலமாகவே அந்த நூல் கிடைப்பது மிகவும் அரிதாகிவிட்டது.
“ஐரோப்பாவின் மீதிப் பகுதியிலுள்ள தொழிலாளிகளுக்கு இல்லாத இரண்டு முக்கியமான அனுகூலங்கள் ஜெர்மன் தொழிலாளிகளுக்கு உண்டு. முதலாவது: ஐரோப்பாவின் மிகவும் தத்துவார்த்தப் போக்குள்ள மக்களைச் சேர்ந்தவர்கள் அவர்கள்; ஜெர்மனியின் “படித்த” வர்க்கங்கள் என்று சொல்லிக் கொள்ளும் வர்க்கங்கள் அநேகமாக முற்றும் இழந்துவிட்ட தத்துவ உணர்ச்சியை அவர்கள் தொடர்ந்து வைத்திருக்கிறார்கள். தனக்கு முற்பட்டதான ஜெர்மன் தத்துவ ஞானம் இல்லாமல், குறிப்பாக ஹெகலின் தத்துவ ஞானம் இல்லாமல், ஜெர்மன் விஞ்ஞான சோசலிசம் – விஞ்ஞான சோசலிசமாக இருந்தது அது ஒன்றுதான் – தோன்றியிராது. தொழிலாளிகளிடையே தத்துவ உணர்ச்சி இல்லாமல் விஞ்ஞான சோசலிசம் அவர்களின் சதையிலே, இரத்தத்திலே இன்று ஊறிப் போயிருக்கிற அளவுக்குப் போயிராது. ஒருபுறத்தில், தனித்தனி தொழிற் சங்கங்கள் நேர்த்தியான அமைப்பு வைத்திருந்துங்கூட ஆங்கிலேயப் பாட்டாளி வர்க்க இயக்கம் இவ்வளவு மெதுவாக ஊர்ந்து சென்று கொண்டிருப்பதற்கான முக்கியமான காரணங்களில் ஒன்றாகிய தத்துவத்தின்பாலுள்ள அக்கறையின்மை; மற்றொருபுறத்தில், புரூதோன்வாதம்* அதன் ஆதி வடிவத்தில் பிரெஞ்சுக்காரர்களிடையேயும் பெல்ஜியம் நாட்டாரிடையேயும், மற்றும் அதை பக்கூனின் மேலும் கேலிச்சித்திரமாக்கிவிட்ட வடிவத்தில் ஸ்பெயின் நாட்டாரிடையேயும் இத்தாலி நாட்டாரிடையேயும் உண்டாக்கிய தீங்கும் குழப்பமும் -ஆகியவற்றிலிருந்து இது எவ்வளவு அளவிடற்கரிய அனுகூலம் என்று அறியலாம்.
“இரண்டாம் அனுகூலம், காலவரிசையிலே பார்க்கும்போது தொழிலாளர் இயக்கத்தில் அநேகமாகக் கடைசியாக வந்தவர்கள் ஜெர்மானியர்கள். ஜெர்மன் தத்துவார்த்த சோசலிசம் ஸான்-ஸிமோன், ஃபூரியே, ஓவன் ஆகியோரின் தோள்களில் ஏறியமர்ந்திருப்பதை என்றைக்கும் மறக்காது; அம்மூவரும் விசித்திரமான எண்ணப்போக்குகளும் கற்பனாவாதமும் எவ்வளவோ கொண்டிருந்தபோதிலும் எல்லாச் சகாப்தங்களுக்கும் உரிய தலைசிறந்த சிந்தனையாளர்களிடையே இடம் பெற்றவர்கள், அவர்களின் மேதமை எண்ணற்ற விசயங்களை முன்னறிந்து கூறியது, அவை சரியே என்று நாம் அறிவியல் வழியிலே நிரூபித்து வருகிறோம். அதேபோல், ஜெர்மனியிலுள்ள நடைமுறை வழிப்பட்ட தொழிலாளர் இயக்கமும் ஆங்கிலேய, பிரெஞ்சு இயக்கங்களின் அறிவியல் தோள்களின் மீது வளர்ந்திருப்பதையும், அவை எவ்வளவோ விலை கொடுத்துப் பெற்ற அனுபவத்தை அப்படியே எடுத்துப் பயன்படுத்திக் கொள்ள முடிந்திருப்பதையும், தம் காலத்தில் அநேகமாகத் தவிர்க்கமுடியாதவையாக இருந்த அவற்றின் தவறுகளை அது இப்போது தவிர்க்க முடிந்திருப்பதையும் என்றைக்கும் மறக்கலாகாது. ஆங்கிலேயத் தொழிற்சங்கங்களின், பிரெஞ்சுத் தொழிலாளர் அரசியல் போராட்டங்களின் முன்னுதாரணமின்றி, குறிப்பாக பாரிஸ் கம்யூன் கொடுத்த பிரம்மாண்டமான தூண்டுகையின்றி இன்று நாம் எங்கே இருப்போம்?
“ஜெர்மன் தொழிலாளிகள் தமது நிலைமையின் அனுகூலங்களை அரிய ஞானத்துடன் பயன்படுத்திக் கொண்ட பெருமைக்கு உரியவர்கள் என்பதைச் சொல்லித் தீரவேண்டும். ஒரு தொழிலாளர் இயக்கம் இருந்து வந்ததிலே முதல் தடவையாக போராட்டமானது அதன் மும்முனைகளிலே – தத்துவார்த்த முனை, அரசியல் முனை, நடைமுறைவழிப்பட்ட – பொருளாதார முனை (முதலாளிகளை எதிர்ப்பது) என்று – இசைவுடனும், அதன் பரஸ்பரத் தொடர்புகளோடும், முறையாகவும் நடத்தப்படுகிறது. இவ்வகைப்பட்ட பொது மையத் தாக்குதலிலேதான் ஜெர்மன் இயக்கத்தின் வலிமையும் வெல்லவொண்ணாத் தன்மையும் அடங்கியுள்ளன.
“ஒருபுறத்தில் இந்த அனுகூலமான நிலைமையின் காரணமாகவும், மறுபுறத்தில் ஆங்கிலேயர்களின் தீவுத்தன்மையின்பாற்பட்ட தனிப்பண்புகளின் காரணத்தாலும், பிரெஞ்சு இயக்கம் பலவந்தமாக ஒடுக்கப்பட்ட காரணத்தாலும், தற்சமயத்துக்கு ஜெர்மன் தொழிலாளிகள் பாட்டாளி வர்க்க இயக்கத்தின் முன்னணியில் நிறுத்தப் பெற்றுள்ளனர். அவர்கள் இந்த மதிப்புள்ள இடத்தை நீடித்து வகித்துவர எவ்வளவு காலத்துக்கு நிகழ்ச்சிகள் அனுமதிக்கும் என்று முன்கூட்டிச் சொல்ல முடியாது. எனினும் அவர்கள் இருந்து வருகிற வரை அவ்விடத்தைத் தக்கவிதத்தில் வகித்து வருவார்கள் என்று நம்புவோமாக. இதற்கு ஒவ்வொரு போராட்டத் துறையிலும் கிளர்ச்சித் துறையிலும் இரட்டித்த முயற்சிகள் தேவைப்படும். குறிப்பாக, எல்லாத் தத்துவார்த்தப் பிரச்சினைகளிலும் மேலும் தெளிவான உட்பார்வை பெறுவதும், பழைய உலகக் கண்ணோட்டத்திலிருந்து சுவீகரித்த மரபுச் சொற்றொடர்களின் செல்வாக்கிலிருந்து மேன்மேலும் விடுவித்துக் கொள்வதும், சோசலிசம் ஒரு அறிவியலாக ஆகிவிட்டதால் அதை ஒரு அறிவியலாகப் பின்பற்றுவது அதாவது அதைப் பயில்வது – அவசியம் என்பதை இடையறாது நினைவில் கொள்வதும், தலைவர்களின் கடமையாக இருக்கும். இவ்வாறு பெற்று மேன்மேலும் தெளிவாக்கிக் கொண்ட ஞானத்தைத் தொழிலாளர் திரள்களிடையே அதிகரித்த ஆர்வத்துடன் பரப்புவதும், கட்சியமைப்பையும் தொழிற்சங்கங்களின் அமைப்பையும் ஒருங்கே மேன்மேலும் உறுதியாக இணைத்துப் பிணைத்துவருவதும், பணியாக இருக்கும்…
“… இவ்வழியில் ஜெர்மன் தொழிலாளர்கள் முன்னேறுவார்களேயானால், அவர்கள் இயக்கத்தின் தலைமை நிலையில் நடையிட்டு வருவார்கள் என்பதை விட – எந்தக் குறிப்பிட்ட ஒரு நாட்டின் தொழிலாளர்களும் இவ்வியக்கத்தின் தலைமை நிலையில் நடையிடுவது என்பது இந்த இயக்கத்தின் நலனுக்கு உகந்ததல்ல – போர் அணியில் அவர்கள் மதிப்புள்ள இடத்தை வகிப்பார்கள் எனலாம்; எதிர்பாராத அளவில் கொடிய சோதனைகளோ முக்கியமான நிகழ்ச்சிகளோ மேலும் அதிகமான தைரியத்தையும் மனத்திட்பத் தையும் செயலாற்றலையும் கோருகிறபோது முழுமையான ஆயத்தத்துடன் நிற்பார்கள்.”
எங்கெல்சின் வார்த்தைகள் தொலை நோக்குள்ளவை என்று காட்டிக் கொண்டன. ஒரு சில ஆண்டுகளுக்குள் சோசலிஸ்டுகளுக்கு எதிரான அசாதாரணச் சட்டம் என்கிற வடிவில் எதிர்பாராத அளவில் கொடிய சோதனைகளுக்கு ஜெர்மன் தொழிலாளிகள் உட்படுத்தப்பட்டனர். அவர்கள் முழுமையான போராயத்தத்துடன் அந்தக் கொடிய சோதனைகளைச் சந்தித்து வெற்றிவாகை சூடினர்.
அதைவிட அளவிடற்கரிய கொடிய சோதனைகளை ரசியப் பாட்டாளி வர்க்கம் அனுபவிக்க வேண்டியிருக்கும்; அது எதிர்த்துப் போராட வேண்டியிருக்கும் அரக்கனோடு ஒப்பிட்டால் அரசியல் சட்டமுறையில் அமைந்த நாட்டிலுள்ள சோசலிஸ்டு-எதிர்ப்புச் சட்டம் குள்ளனாகவே தெரியும். இன்று வரலாறு நம் முன் வைத்துள்ள உடனடிப் பணியானது எந்த நாட்டுப் பாட்டாளி வர்க்கத்தையும் எதிர்கொண்டுள்ள எல்லா உடனடியான பணிகளையும் விட மிகமிகப் புரட்சிகரமானது. இந்தப் பணியை நிறைவேற்றினால், ஐரோப்பாவின் பிற்போக்குக்கு மட்டுமின்றி ஆசியாவின் பிற்போக்குக்கும் (என்று இப்போது சொல்லக்கூடும்) வாய்த்ததாயுள்ள வலுமிக்க கொத்தளத்தை ஒழித்துவிட்டால், அது ரசியப் பாட்டாளி வர்க்கத்தை உலகு தழுவிய புரட்சிகரமான பாட்டாளி வர்க்கத்தின் முன்னணிப் படையாக ஆக்கிவிடும். முன்னைவிட ஆயிரம் மடங்காக அகன்றும் ஆழ்ந்தும் வளர்ந்திருக்கும் இயக்கத்திலே அதே பற்றுறுதிமிக்க மனத்திட்பத்தையும் வீரியத்தையும் பாய்ச்சி ஊக்கினால் நமது முன்னோர்களான 1870-களின் புரட்சியாளர்கள் ஏற்கெனவே சம்பாதித்த இந்த மதிப்புமிக்க பட்டத்தைப் பெறுவோம் என்று நம்புவதற்கு நமக்கு உரிமை உண்டு.
– லெனின்
(என்ன செய்ய வேண்டும்? என்ற நூலிலிருந்து)
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



