02.12.2025

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற உத்தரவிட்டார்
நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன்!

நீதிமன்ற உத்தரவை தமிழ்நாடு அரசு நிறைவேற்றக்கூடாது!

தமிழ்நாட்டுக்கும் தமிழ் பண்பாட்டுக்கும் தமிழர்க்கும் எதிரான உத்தரவு இது!

கண்டன அறிக்கை

திருப்பரங்குன்றம் மலை – தர்கா தொடர்பாக இதுவரை அளிக்கப்பட்ட முன் தீர்ப்புகளைப் புறம் தள்ளி திருப்பரங்குன்றம் மலை உச்சியில் அதுவும் தர்காவுக்கு அருகில் தீபம் ஏற்றலாம் என்ற ஒரு உத்தரவை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் வழங்கி இருக்கிறார்.

திருப்பரங்குன்றம் மலை மற்றும் தர்கா தொடர்பான வழக்கில் சில மாதங்களுக்கு முன்புதான் இரண்டு நீதிபதிகளின் மாறுபட்ட தீர்ப்பும் பின்னர் மூன்றாவது நீதிபதியின் தீர்ப்பும் வெளியானதை அனைவரும் அறிவோம். இச்சூழலில் தான் இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த ராம.ரவிக்குமார் என்ற நபர் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் என்று ஒரு வழக்குத் தொடுக்கிறார்.

திருப்பரங்குன்றத்தில் வரலாற்றில் இதுவரை கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது என்பது அதற்குரிய இடத்தில் மட்டுமே நடைபெற்று இருக்கிறது. பார்ப்பன இந்து மத வெறி பாசிஸ்டுகள் தொடர்ந்து தர்காவிற்கு அருகில் உள்ள இடத்தில்தான் தீபம் ஏற்ற வேண்டும் என்று பல ஆண்டுகளாக சதி வேலையில் ஈடுபட்டு வந்தனர்.

ஜி.ஆர். சுவாமிநாதன் தீர்ப்பு வழங்குவதற்கு முன்பே தங்களுக்கு ஆதரவாகத்தான் தீர்ப்பு வரும் என்று தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி, இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் பேசி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நீதிமன்ற தீர்ப்பு வந்துவிட்டது வேறு என்ன செய்ய முடியும் என்று நினைக்கத் தொடங்கி விட்டால், இனி தமிழர்களின் அனைத்து உரிமைகளும் இப்படியே பறிக்கப்படும். திருப்பரங்குன்றம் தர்கா தொடர்பான வழக்கில் நீதிபதி ஸ்ரீமதி அவர்கள், திருப்பரங்குன்றம் தென் கயிலாயம் என்றும் அது ஒரு சைவத் திருத்தலம் என்றும் தெரிவித்தார். திருப்பரங்குன்றம் மலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் எங்கேயும் அசைவம் விற்கப்படுவதில்லை என்றும் ஒரு தவறான தகவலைக் கூறியுள்ளார்.

திருப்பரங்குன்றம் அடிவாரத்தில் உள்ள பல்வேறு நாட்டார் தெய்வங்களுக்கு இப்போது வரை தமிழர்கள் விலங்குகளைப் பலியிட்டு வருகின்றனர். நாளை ராம. ரவிக்குமார் போன்ற இன்னொரு இந்து மத வெறி பாசிஸ்டு திருப்பரங்குன்றம் மலை, அழகர் மலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஆடு கோழி பலியிடக் கூடாது என்று வழக்குத் தொடுத்து தங்களுக்குத் தேவையான தீர்ப்பைப் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு உள்ளது என்பதை மறுக்க முடியாது. ஏற்கனவே அழகர் கோயிலிலும் பாண்டி கோயிலிலும் கிடா வெட்டு தொடர்பாக ஒழுங்குமுறைப் படுத்த வேண்டும் என்று இந்து மதவெறி பாசிஸ்டுகள் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

நீதிமன்றங்கள் மூலமாக இந்து மத வெறி பாசிஸ்டுகள் தங்களுக்கு தேவையான தீர்ப்புகளையும் நடவடிக்கைகளையும் நிறைவேற்றிக் கொள்கின்றனர் என்பதை அயோத்தி வழக்கு முதல் தர்கா வழக்கு வரை நம்மால் அறிய முடியும்.

இந்த நிலையில், திருப்பரங்குன்றம் தர்கா அமைந்துள்ள இடத்தில் அதற்கு மிக அருகில் உள்ள இடத்தில்தான் தீபம் ஏற்ற வேண்டும் என்று வழக்குத் தொடுத்து நீதிபதி ஜி. ஆர். சுவாமிநாதன் மூலமாக தீர்ப்பைப் பெற்றுள்ளனர்.

வழிபாட்டுத் தலங்கள் சட்டம், 1991 (The Places of Worship Act, 1991) என்பது, ஆகஸ்ட் 15, 1947 அன்று இருந்த மதத் தன்மையை எந்தவொரு வழிபாட்டுத் தலத்திற்கும் பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்ட சட்டமாகும். இது எந்த மதத் தலத்தையும் வேறொரு மதத் தலமாக மாற்றுவதைத் தடுக்கிறது, மத நல்லிணக்கத்தை உறுதிப்படுத்துகிறது. அயோத்தி வழக்கு இந்தச் சட்டத்தின் வரம்பிலிருந்து விலக்கப்பட்டது.

பெருமளவில் ஆதரவும் அடித்தளமும் உள்ள பகுதிகளில் கலவரங்கள் மூலம் தங்கள் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வது அப்படி இல்லாத இடங்களில் நீதிமன்றங்கள் மூலம் தங்கள் தேவையை நிறைவேற்றிக் கொள்வதே இந்து மத வெறி பாசிஸ்டுகளின் செயல்பாடாக உள்ளது.

நீதிபதி சுவாமிநாதன் அவர்களால் வழங்கப்பட்ட தீர்ப்பானது முன் தீர்ப்புகளையும் சட்டங்களையும் கணக்கில் கொள்ளாமல் இந்து மத வெறி பாசிஸ்டுகளின் நோக்கத்தை நிறைவேற்றுவதற்காகவே அமைந்துள்ளது.

இதனை மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாகக் கண்டிப்பதுடன் ஜி. ஆர். சாமிநாதனின் உத்தரவை தமிழ்நாடு அரசு நிறைவேற்றக்கூடாது என்றும் கேட்டுக்கொள்கிறது.

மேலும் அனைத்து துறைகளையும் ஆர்.எஸ்.எஸ். – பி.ஜே.பி. பாசிஸ்டுகள் கைப்பற்றி இருப்பதைப் போலவே நீதித்துறையையும் கைப்பற்றிக் கொண்டிருக்கின்றனர். இப்படிப்பட்ட சூழலில் பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசுக்கான மாற்றுத்திட்டத்தை முன்வைத்து மக்களை அணி திரட்டுவது தமிழ்நாட்டின் கட்டாயமாக உள்ளது என்பதையும் மக்கள் அதிகாரம் தெரிவித்துக் கொள்கிறது.


தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலப் பொதுச் செயலாளர்,
மக்கள் அதிகாரக் கழகம்,
தமிழ்நாடு – புதுவை.
9962366321

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க