13.12.2025

நீதிமன்றங்களிலிருந்து மக்களையும் வழக்குரைஞர்களையும் தள்ளி வைக்கும்
இ ஃபைலிங் முறை வேண்டாம்!

தமிழ்நாடு வழக்கறிஞர் போராட்டம் வெல்லட்டும்!

பத்திரிகைச் செய்தி

ட்டாய இ ஃபைலிங் முறையைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் வழக்கறிஞர்கள் கடந்த ஐந்தாம் தேதி முதல் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு எட்டப்படாததால் போராட்டத்தைத் தொடர உள்ளதாகவும் வழக்கறிஞர் சங்கங்கள் அறிவித்துள்ளன. இதனை மக்கள் அதிகாரக் கழகம் ஆதரிக்கிறது.

இதன் காரணமாக தமிழ்நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கான வழக்குகள் நடத்தப்படாமல் உள்ளன. இ ஃபைலிங் முறை என்பது வழக்கறிஞர்களுக்கு மட்டுமல்ல, மக்களுக்கும் மிகவும் எதிரானது ஆகும். ஒரே மாதிரியான சீரான வளர்ச்சியற்ற ஒரு நாட்டில் இப்படிப்பட்ட கட்டாய ஃபைலிங் முறை கொண்டு வருவது என்பது மிகவும் ஆபத்தானதாகும்.

அதிவேக இணைய வசதி, மின் வசதி, ஆற்றல் கொண்டவர்கள் மட்டுமே இனி வழக்கறிஞராக நீடிக்க முடியும் என்ற நிலை உருவாகி வருகிறது. இதன் மூலம் தொடர்ந்து பல தலைமுறைகளாக வழக்கறிஞராக இருப்பவர்கள், பெரும் பணக்கார கும்பல் மட்டுமே நீதித்துறையில் ஆதிக்கம் செலுத்த முடியும் அல்லது ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்ற நிலை உருவாகும்.

சிறையில் உள்ள ஒருவரின் உரிமை கோரி பிணை போடுவதற்கும் மனு கொடுப்பதற்கும் கூட இ ஃபைலிங் முறை கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டது மிகவும் ஆபத்தானதாகும். மேனாள் நீதிபதி கிருஷ்ணய்யர் காலத்தில் அஞ்சல் அட்டையில் கூறப்பட்ட புகாரினைக் கூட தானாக முன்வந்து உச்சநீதிமன்றம் எடுத்து விசாரித்த வரலாறு இருக்கிறது. ஆனால் இப்பொழுது மக்கள் அவசர தேவைக்குக் கூட நீதிமன்றத்தை நாட முடியாத ஒரு நிலையை பாசிச மோடி கும்பல் உருவாக்கி உள்ளது.

ஏற்கெனவே ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி பாசிச சக்திகள் நீதிமன்றத்தை முழுமையாக ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிற இந்தச் சூழலில் தான், கட்டாய இஃபைலிங் போன்ற முறைகள் மூலம் நீதித்துறை மக்களிடமிருந்து முழுமையாக விலக்கி வைக்கப்படுகிறது என்பதையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

அனைத்து விசாரணை நீதிமன்றங்களிலும் வழக்கு ஆவணங்களை நீதிமன்றமே ஸ்கேன் செய்து இணைய முறையில் பதிவேற்றுவது மட்டுமே மக்களுக்கும் வழக்குரைஞர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

தமிழ்நாடு முழுவதும் சீரான ஒரே மாதிரியான இணையதள வேகத்தையும் இணையதள பயன்பாட்டையும் கொண்டு வருவதற்கு அரசு நினைத்தால் கூட உடனே சாத்தியம் இல்லை. அதனையும் படிப்படியாகவே நடைமுறைப்படுத்த முடியும்.

உயர்நீதிமன்றம் இ ஃபைலிங் முறையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும் அனைத்து விசாரணை மற்றும் உயர்நீதிமன்றங்களில் நீதித்துறையே பொறுப்பேற்று அனைத்து ஆவணங்களையும் ஸ்கேன் செய்து பதிவேற்ற வேண்டும் என்றும் மக்கள் அதிகாரக் கழகம் கேட்டுக் கொள்கிறது.


தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலப் பொதுச் செயலாளர்,
மக்கள் அதிகாரக் கழகம்,
தமிழ்நாடு – புதுவை.
9962366321

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க