கரூர்: சாதி வெறியால் அரசுப் பள்ளி சமையலர் பணிநீக்கம் செய்யப்பட்ட கொடூரம்!

“பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் ஒரே மாதிரியான சீருடைதான் வழங்கப்படுகிறது. அதனையும் சாதிக்கு ஏற்றாற்போல் வழங்க வேண்டியதுதானே? அருந்ததியர் சமூகத்தில் பிறந்தது தீண்டாமையா?” என்று பணிநீக்கம் செய்யப்பட்ட நிரோஷா கேள்வி எழுப்பியுள்ளார்.

0

ரூர் மாவட்டம் தோகை மலை அருகே சின்னரெட்டியபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் காலை உணவுத் திட்ட சமையல் பணியாளர் நிரோஷா ஆதிக்கச் சாதி வெறியர்களின் எதிர்ப்பால் வேலையை விட்டு நீக்கப்பட்ட கொடூரம் அரங்கேறியுள்ளது.

இப்பள்ளியில் பொன்னாம்பட்டியை சேர்ந்த நிரோஷா (35) கடந்த 4 மாதங்களாக சமையல் பணியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் பள்ளி மாணவர்களின் சாதி வெறிபிடித்த பெற்றோர்கள் நிரோஷாவை வேலையை விட்டு நீக்கம் வேண்டும் என்று வலியுறுத்தி வந்துள்ளனர்.

இதனை சாதி வெறி பிடித்த தலைமை ஆசிரியை பானுமதி ஏற்றுக்கொண்டு, நிரோஷாவை அழைத்து “நீ சமைத்த உணவை ஆதிக்க சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் சாப்பிட மறுக்கிறார்கள். எனவே இனி நீ சமைக்க வர வேண்டாம்” என்று கூறி பள்ளியை விட்டு வெளியேற்றியுள்ளார்.

பாதிக்கப்பட்ட காலை உணவுத் திட்ட பணியாளர் நிரோஷா கூறுகையில், “கடந்த 16- ஆம் தேதி அன்று, பள்ளி தலைமை ஆசிரியை பானுமதி, இனி நீ சமைக்க வரக் கூடாது” என என்னை அழைத்துச் சொன்னார். அடுத்த நாள் காலையில், எனக்குப் பதிலாக வேறொரு பெண் சமையல் வேலை செய்து கொண்டிருந்தார்.

உடனடியாக தாந்தோணிமலை வட்டார மகளிர் உரிமை திட்ட மேலாளர் சத்யாவை நிரோஷா தொடர்புகொண்டு கேட்டபோது, “வேறொரு நபரை பணிக்கு நியமித்து விட்டேன்; இனி வேலைக்கு வர வேண்டாம்” என்று அதிகாரத் திமிருடன் தெரிவித்துள்ளார். நேரில் விளக்கம் கேட்க நிரோஷா சென்ற போது, அவரை ஒரு நாள் முழுவதும் தகைமை அலுவலகத்தில் அமர வைத்து, சந்திக்காமல் திருப்பி அனுப்பியுள்ளார்.

அரசுப் பள்ளியில் குழந்தைகளுக்கு சாதி இல்லை என்று பாடம் சொல்லித் தரும் தலைமை ஆசிரியர் ஆதிக்கச் சாதி வெறியுடன் மாணவர்களின் பெற்றோர்கள் பேச்சைக் கேட்டு தன்னை பள்ளியை விட்டு நீக்கியது குறித்து நிரோஷா ஆதங்கத்துடன் கேள்வி எழுப்பியுள்ளார். “பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் ஒரே மாதிரியான சீருடைதான் வழங்கப்படுகிறது. அதனையும் சாதிக்கு ஏற்றாற்போல் வழங்க வேண்டியதுதானே? அருந்ததியர் சமூகத்தில் பிறந்தது தீண்டாமையா? சிறு வயதிலிருந்து யாரும் என்னை சாதியைச் சொல்லிப் பேசியது கிடையாது. ஆனால் இப்போது தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவள் என்ற காரணத்திற்காக வேலையை விட்டு நீக்கப்பட்டதைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு மனவேதனையில் இருக்கிறேன்” என்று அழுதபடி தெரிவித்துள்ளார்.

மேலும் “நான் எனக்கு வேலை, சம்பளம் வேண்டும் என்பதற்காக போலீசில் புகார் அளிக்கவில்லை. சாதிய வன்கொடுமையால் நான் பாதிக்கப்பட்டதை போல பல பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே எனக்கு நடந்தது போன்று என்னுடைய குழந்தைகளுக்கும், மற்ற குழந்தைகளுக்கும் இதுபோன்ற கொடூரம் நடக்கக் கூடாது என்பதற்காக மாவட்ட ஆட்சியர், மாவட்ட போலீசு கண்காணிப்பாளர் மற்றும் தோகை மலை போலீசு நிலையம் ஆகிய இடங்களில் புகார் அளித்தேன். அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

“புகார் அளித்ததன் காரணமாக மீண்டும் பணிக்கு என்னை அழைக்கின்றனர். ஆனால், எனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்குக் காரணமான தலைமை ஆசிரியர் பானு, வட்டார மகளிர் உரிமை திட்ட மேலாளர் சத்யாவை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும். அப்போதுதான் இது போன்ற சம்பவங்கள் இனியும் தொடராது” என்று தெரிவித்துள்ளார்.


படிக்க: சாதி, மதம் கடந்து திருமணம்: பெண் குடும்பத்தினர் கொலைவெறித் தாக்குதல்


இதற்கு முன்பாக கரூர் அருகே உள்ள அரவக்குறிச்சி வேலன்செட்டியூர் அரசு தொடக்கப் பள்ளியில் பட்டியலின பெண் சமைக்கக் கூடாது என்று ஆதிக்க சாதிவெறியர்கள் எதிர்ப்பு தெரிவித்த சம்பவம் நடந்தது. அதன் வடுக்கள் மறைவதற்குள் மற்றொரு கொடூரச் சம்பவம் அரங்கேறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக தமிழ்நாட்டில் வேங்கைவயலில் குடிநீர் தொட்டியில் ஆதிக்க சாதிவெறியர்களால் மலம் கலக்கப்பட்டது , நாங்குநேரியில் மாணவன் சின்னதுரை மீதான கொலை வெறி தாக்குதல், திண்டிவனத்தில் தி.மு.க. பெண் கவுன்சிலரின் காலில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த அரசு அலுவலரை விழச் செய்தது, சிவகங்கையில் புல்லட் ஓட்டியதற்காக பட்டியலின இளைஞரின் கை ஆதிக்கச் சாதி வெறியர்களால் வெட்டப்பட்டது என தலித் மக்கள் மீதான சாதிய வன்கொடுமைகள், கொலைவெறித் தாக்குதல்கள் போன்ற கொடூரங்கள் தொடர்ந்து அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.

மறுபுறம் அரசு கட்டமைப்பில் அதிகாரத்தில் உள்ள ஆதிக்க சாதிவெறியர்கள் பல தடைகளைத் தாண்டி அரசு வேலைக்கு வருகின்ற தலித் மக்களை இழிவாக நடத்துவது, அதிக வேலை கொடுத்து பணிச்சுமையை ஏற்படுத்துவது, வேலையை விட்டு நீக்குவது போன்ற கொடூரங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இவை தி.மு.க, அ.தி.மு.க என எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அரங்கேறுகின்றன; அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.

எனவே ஆதிக்க சாதிவெறியில் சமையல் பணியாளர் நிரோஷாவை வேலையை விட்டு நீக்கிய பள்ளியின் தலைமை ஆசிரியர் பானுமதி, காலை உணவுத் திட்ட அலுவலர் சத்யா இருவரையும் பணி நீக்கம் செய்து, பட்டியலின பழங்குடியின வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் உடனடியாக கைது செய்ய வேண்டும் என்பதை ஜனநாயக சக்திகளும், புரட்சிகர இயக்கங்களும் வலியுறுத்த வேண்டும். இதன் மூலமே தலித் மக்கள் மீதான தாக்குதலைக் கட்டுப்படுத்த முடியும்.


இன்குலாப்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க