23.12.2025

பணி நிரந்தரம் கோரும் செவிலியர் போராட்டம் வெல்லட்டும்!

பத்திரிகைச் செய்தி

ணி நிரந்தரம், சம வேலைக்கு சம ஊதியம் கோரி தொகுப்பூதியத்தில் பணியாற்றி வரும் செவிலியர்கள் “தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம்” சார்பில், தமிழ்நாடு முழுவதும் பல இடங்களில் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

போராடுவோரின் கோரிக்கையை இதுவரை நிறைவேற்றாத தமிழ்நாட்டை ஆளும் தி.மு.க. அரசு, போலீஸ் துணையோடு மிகக் கொடூரமாக அவர்களின் போராட்டத்தை ஒடுக்கி வருகிறது.

கொரோனா காலகட்டத்தில் ஓய்வு, உறக்கம் இன்றி மிகக் கடுமையாக பணியாற்றி தமிழ்நாட்டு மக்களின் உயிரைக் காப்பாற்றியவர்களில் முதன்மையானவர்கள் செவிலியர்களே.

அப்படிப்பட்ட செவிலியர்களின் பணியைப் பாராட்டுவது அல்ல பிரச்சனை. அவர்களின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்றுவதற்காக – மேம்படுத்துவதற்காக அவர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டும் என்ற நியாயமான கோரிக்கையைக் கூட தமிழ்நாடு அரசு இதுவரை ஏற்காமல் இருப்பது மிகவும் கண்டனத்திற்குரியதாகும்.

ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி; அம்பானி – அதானி பாசிச கும்பல் நாட்டையே கபளீகரம் செய்து வருகின்ற இச்சூழலில், தி.மு.க அரசின் தொழிலாளர் விரோத நடவடிக்கைகள் தமிழ்நாட்டை மேலும் வலுவிழக்கச் செய்வதாகவே அமையும்.

பாசிச சக்திகள் மென்மேலும் வளரக்கூடாது என்பதில் போராடும் இயக்கங்களுக்கு மட்டுமல்ல, தமிழ்நாடு அரசுக்கும் அந்த பொறுப்பு வேண்டும். தனியார்மய – தாராளமய – உலகமய நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துவது,போலீசு ஆட்சியை நடத்துவது ஆகியவை பாசிச சக்திகளுக்குப் பயன்தரக்கூடியவையாகும்.

எனவே, தமிழ்நாடு அரசு செவிலியர்களின் போராட்டத்தை ஒடுக்காமல் செவிலியர்களின் போராட்ட கோரிக்கையை உடனடியாக ஏற்க வேண்டும் என்று மக்கள் அதிகாரக் கழகம் கேட்டுக் கொள்கிறது.


தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலப் பொதுச் செயலாளர்,
மக்கள் அதிகாரக் கழகம்,
தமிழ்நாடு – புதுவை.
9962366321

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க