சமத்துவப் பொங்கலில் சாதிய நஞ்சா?
கபடி விளையாட்டில் தீண்டாமையைப் புகுத்தும்
‘தமிழ்நாடு ரெட்டி ஜன சங்கத்தை’ தடை செய்!
சங்கத்தின் நிர்வாகிகள் மீது தீண்டாமை ஒழிப்புச் சட்டத்தின் கீழ்
வழக்குப் பதிவு செய்!
ஜனவரி 12, 2026,
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை அருகே வேலாயுதபுரம் பகுதியில், தமிழ்நாடு ரெட்டி ஜன சங்கம் (பதிவு எண்: 85/2025) சார்பில் அண்ணாமலை கவிராயர் நினைவாக நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள மாநிலம் தழுவிய கபடி போட்டி மற்றும் கலைநிகழ்ச்சிகளில், அப்பட்டமான சாதியப் பாகுபாடு கடைப்பிடிக்கப்படுவதற்கு எதிராக தூத்துக்குடி மக்கள் அதிகாரக் கழகம் தனது வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.
சமத்துவத்தின் அடையாளமான பொங்கல் திருவிழாவை சாதிய நஞ்சாக மாற்றும் வகையில், இந்தப் போட்டியில் “ரெட்டி சமுதாய இளைஞர்கள் மட்டுமே” பங்கேற்க வேண்டும் என்றும், வீரர்களின் சாதிச் சான்றிதழைப் பெற்று ‘இ-ஸ்கேன்’ (E-Scan) செய்து சரிபார்ப்போம் என்றும் அந்தச் சங்கம் அறிவித்துள்ளது. மாற்றுச் சமுதாய இளைஞர்கள் பங்கேற்றால் அந்த அணிக்கு ஓராண்டு தடை விதிக்கப்படும் என்ற இவர்களது அறிவிப்பு, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையை மீறுவதாகும். இது அரசியலமைப்புச் சட்டப் பிரிவுகள் 14, 15, 17 மற்றும் 1955-ஆம் ஆண்டு தீண்டாமை ஒழிப்புச் சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய பெருங்குற்றமாகும்.
பொது அமைதிக்கும் சமூக நல்லிணக்கத்திற்கும் வேட்டு வைக்கும் இத்தகைய தீண்டாமைச் செயல்களை எக்காலத்திலும் அனுமதிக்க முடியாது. இது தொடர்பாக, ஜனவரி 12 அன்று மக்கள் அதிகாரக் கழகம் மாவட்டச் செயலாளர் தோழர் தாளமுத்து செல்வா, AICCTU தூத்துக்குடி மாவட்டத் தலைவர் தோழர் மின்னல் அம்ஜத் மற்றும் தமிழ்நாடு மக்கள் நல இயக்கம் மாநில தலைவர் தோழர் ச.மு. காந்தி ஆகியோர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி மனு அளித்தனர்.


மாவட்ட நிர்வாகமும் போலீசும் உடனடியாகத் தலையிட்டு, சாதி வெறியை உருவாக்கும் இந்தப் போட்டியை ரத்து செய்ய வேண்டும் என்றும், மக்களிடையே பிரிவினையைத் தூண்டும் தமிழ்நாடு ரெட்டி ஜன சங்கம் நிர்வாகிகள் மீது தீண்டாமை ஒழிப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, அந்தச் சங்கத்தின் பதிவை ரத்து செய்து நிரந்தரத் தடை விதிக்க வேண்டும் என்றும் மக்கள் அதிகாரக் கழகம் சார்பாகக் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
தோழர் தாளமுத்து செல்வா,
தூத்துக்குடி மாவட்டச் செயலாளர்,
மக்கள் அதிகாரக் கழகம்.
95974 94038
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram





