
17.01.2026
தொடரும் சாதிவெறிப் படுகொலைகள்!
பத்திரிகைச் செய்தி
15.01.2026 அன்று தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தாலுக்காவுக்கு உட்பட்ட பெஞ்சமின் காலனியில் வசித்து வந்த அருந்ததிய சாதியைச் சேர்ந்த இளைஞர் ஏழுமலை (வயது 27) என்பவர் நாடார் சாதியைச் ராஜாவால் வீடு புகுந்து கழுத்தில் கத்தியால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதில் சம்மந்தப்பட்ட மூன்று பேரை போலீஸ் வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளது. இந்த சாதிவெறி கொலை பாதகச் செயலை மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது.
இரு பாகங்களாகப் பிரிக்கப்பட்டு வாடகைக்கு விடப்பட்டிருந்த ஒரே வீட்டில் ஒரு பாகத்தில் கொலை செய்யப்பட்ட ஏழுமலையின் குடும்பமும், மற்றொரு பாகத்தில் கொலை செய்தவர்களின் குடும்பமும் வசித்து வந்துள்ளனர்.
மின்சார இணைப்பு ஒன்றாக இருந்ததால் அதை மாதம் ஒரு குடும்பமாக இந்த இரு வீட்டாரும் செலுத்தி வந்துள்ளனர்.
இதில் கொலை செய்யப்பட்ட ஏழுமலை தனது தவணை முறையிலான மின்சார கட்டணத்தைச் சரியாகச் செலுத்தி வந்துள்ளார். கொலை செய்தவர்களின் முறை வரும் போது வன்மத்துடன் அவர்கள் மின்சாரத்தை அடிக்கடி துண்டித்து விட்டுள்ளனர். ஏழுமலை இது குறித்து கேள்வி கேட்க, இது சம்பந்தமாக அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
இப்படி அடிக்கடி நிகழ்ந்த நிலையில் 15.01.2026 அன்றும் அவர்கள் மின் இணைப்பைத் துண்டிக்க, மீண்டும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த நாடார் சாதியைச் சேர்ந்த அவர்கள் ஏழுமலை மதியம் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது வீடு புகுந்து ‘சக்கிலியப் பையனுக்கு அவ்வளவு திமிரா, எங்களையே எதிர்த்து கேள்வி கேட்கிறாயா’ என்று கூறி வெட்டிப் படுகொலை செய்துள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே ஏழுமலை பலியானார்.
‘தனக்குச் சமமாக வந்து தன்னையே கேள்வி கேட்கிறானா’ என்ற சாதிய வன்மத்தோடு இந்த கொலை நடந்துள்ளது. தொடர்ந்து தென்மாவட்டங்களில் சாதியின் பெயரிலான படுகொலைகள் அதிகரித்த வண்ணம் உள்ளன. போலீசும், மாவட்ட நிர்வாகமும் சாதி ரீதியிலான படுகொலைகளை அந்த கண்ணோட்டத்தில் அணுகி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். ‘ஆளுகின்ற தி.மு.க-வும் தங்களுடைய அரசாங்கத்திற்குக் கெட்ட பெயர் ஏற்படும்’ என்று இச்சம்பவங்களை மூடிமறைக்க நினைக்கிறது. இப்போக்கினை நிறுத்தி விட்டு, சாதியப் படுகொலைகள் தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கைகளை முடுக்கி விட வேண்டும்.
சாதியப் படுகொலைகளின் பின்னால் இருந்து சாதிய வெறியைத் தூண்டிவிடும் ஆதிக்கச் சாதி சங்கங்களையும், ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பலையும் தடை செய்ய வேண்டும். இக்கோரிக்கைகள் நிறைவேறும் வரை உழைக்கும் மக்கள், ஜனநாயக சக்திகள் விடாது ஒன்றிணைந்து போராட வேண்டும் என கழகம் சார்பாகக் கேட்டுக்கொள்கிறோம்.
![]()
தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலப் பொதுச் செயலாளர்,
மக்கள் அதிகாரக் கழகம்,
தமிழ்நாடு – புதுவை.
9962366321
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram





