‘சாதி’ தான் முக்கியம்; சாமியெல்லாம் அப்புறம்!

“சாமிக்கு தீட்டு ஏற்பட்டுவிட்டது எனக் கூறி கோவிலைப் பூட்டிய கோவில் நிர்வாகம் மற்றும் குருக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவில் ஏன் பூட்டப்பட்டுள்ளது என்பதற்கு விளக்கம் அளிக்க வேண்டும், அறநிலையத்துறை மற்றும் போலீசு இவ்விசயத்தில் தலையிட வேண்டும்” என நொச்சிலி கிராம மக்கள் கோரியுள்ளனர்.

‘சாதி’ தான் முக்கியம்; சாமியெல்லாம் அப்புறம்!

‘காலனி’க்குள் சாமி ஊர்வலமாகச் சென்றதால்
தீட்டாகிவிட்டது என கோவிலைப் பூட்டிச் சென்ற குருக்கள்!

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகில் உள்ள நொச்சிலி கிராமத்தில் அமைந்துள்ள 17-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அருள்மிகு கங்காதீஸ்வரர் திருக்கோயில் பழமையான சிவாலயமாகும். பொங்கல் பண்டிகையான காணும் பண்டிகையை முன்னிட்டு ‘சாமி சிறப்பு வீதி உலா’ ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.

இந்த ஆண்டு நடைபெற்ற வீதி உலாவில் கோவிலைச் சுற்றியுள்ள ஏழு கிராமக் ‘காலனி’களில் சாமி ஊர்வலம் வரக்கூடாது எனவும், அப்படி வந்தால் ஆபத்து ஏற்படும் எனவும் கோவில் குருக்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் இதை ஏற்க மறுத்து கிராம மக்கள் போலீசு அனுமதியுடன் சாமியை அழைத்துச் செல்ல முயன்றனர். இதனால் குருக்கள் – கோவில் நிர்வாகம் மற்றும் கிராம மக்கள் ஆகிய இருதரப்பிற்கும் இடையே கடுமையான வாக்குவாதம் நடைபெற்றது. இதனால் 2 மணி நேரம் ‘சாமி’ வீதியிலேயே காக்க வைக்கப்பட்டது. போலீசு தலையீட்டில் ஏழு கிராம ‘காலனி’களிலும் ‘சாமி வீதி உலா’ அனுமதிக்கப்பட்டது. வீதி உலா முடிந்து சாமி கோவிலுக்குத் திரும்பிய போது, ‘காலனி’க்குள் சென்று வந்ததால் சாமி தீட்டாகிவிட்டது என கோவில் நிர்வாகமும், குருக்களும் சேர்ந்து கோவிலை இழுத்து மூடிவிட்டனர்.

இதனால் போலீசார் பூட்டை உடைத்து உற்சவரை உள்ளே வைத்தனர். அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருந்தாலும் அதிகாரிகள் யாரும் இல்லாததால் கோவில் பூட்டப்பட்ட நிலையில் உள்ளது.

இதனால் திருத்தணி உதவி ஆய்வாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மக்கள் புகார் அளித்துள்ளனர். அதில் “சாமிக்கு தீட்டு ஏற்பட்டுவிட்டது எனக் கூறி கோவிலைப் பூட்டிய கோவில் நிர்வாகம் மற்றும் குருக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவில் ஏன் பூட்டப்பட்டுள்ளது என்பதற்கு விளக்கம் அளிக்க வேண்டும், அறநிலையத்துறை மற்றும் போலீசு இவ்விசயத்தில் தலையிட வேண்டும்” எனக் கோரியுள்ளனர்.

தங்களுக்கான நியாயம் கிடைக்கவில்லை எனில் சாலை மறியல் மற்றும் கோவில் முற்றுகை போராட்டம் நடத்துவோம் எனவும் மக்கள் எச்சரித்துள்ளனர்.

‘காலனி’ என்ற சொல்லே தீண்டாமையின் குறியீடு என அதை அழிக்க நடவடிக்கை எடுத்து வருகிறது தமிழ்நாடு அரசு. காலனி என்று இருப்பதாலேயே சாமி நுழையக் கூடாது என கோவிலைப் பூட்டுவது அப்பட்டமான தீண்டாமையின் வெளிப்பாடு.

2026-லுமா இப்படி என கிராம மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். “மனிதனைக் கடவுள் படைத்தான். அந்த கடவுளே எங்கள் மந்திரத்திற்குக் கட்டுப்பட்டது தான்” எனக் கூறி கடவுளுக்கும் மேலாக தன்னை நிறுவிக் கொண்டு உழைக்கும் மக்களை வெளியேற்றி கர்ப்ப கிரகத்திற்குள் அமர்ந்து கொண்டது பார்ப்பனிய கும்பல். உழைக்கும் மக்களின் உரிமைகளை மறுத்து, அவர்தம் உழைப்பையும் அதில் விளைந்த சொத்துகளையும் திருடித் தின்ற பார்ப்பனிய கயவர் கூட்டம் ஆர்.எஸ்.எஸ் என்கிற நிறுவனத்தை நிறுவிக் கொண்டு இன்று அதிகாரத்தில் அமர்ந்திருக்கிறது. அது பல வடிவங்கள் எடுத்து உழைக்கும் மக்களைத் தீட்டு என்கிறது. சாதியின் பெயரால் தள்ளி வைக்கிறது. மீறி எழுச்சி கொள்ளும்போது ஆதிக்கச் சாதி வெறிச் சங்கங்களைக் கையில் வைத்துக் கொண்டு தாக்குதல், படுகொலைகள் நடத்துகிறது. மக்களுக்கான ஜனநாயக உரிமைகளை மறுக்கிறது. அதன் ஒரு பகுதிதான் திருத்தணி நொச்சிலி கிராமத்து மக்களுக்கு மறுக்கப்படும் உரிமைகள். ஒடுக்கப்பட்ட அம்மக்களின் ஜனநாயக உரிமைக்குக் குரல் எழுப்புவோம்.

இது தலித் மக்களுக்கான பிரச்சினை மட்டுமல்ல. பாண்டி, முனீஸ்வரன், அய்யனார்… என தலித்துகள், பிற்படுத்தப்பட்ட உழைக்கும் மக்கள் வழிபடும் சிறு தெய்வ வழிபாடுகளையும் ஆடு, கோழி பலியிடும் உரிமையையும் காவு வாங்க ஆர்.எஸ்.எஸ் கும்பல் துடிக்கிறது. அனைத்து மக்களின் மீதும் மேலாதிக்கத்தை நிறுவத் துடிப்பதோடு மார்வாடிகள், கார்ப்பரேட் கும்பல்களுக்கும் இதன் மூலம் சேவை செய்கிறது.

ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பலை இம்மண்ணில் இருந்து அகற்றாமல் சாதி ரீதியிலான இக்கொடுமைகளை அகற்ற முடியாது. உழைக்கும் மக்கள், ஜனநாயக சக்திகள் ஒன்றிணைந்து நமது ஜனநாயக கோரிக்கைகளுக்காக வேண்டும் ஜனநாயகம் என்று களமிறங்குவோம்.

பதிவு
மக்கள் அதிகாரக் கழகம்,
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள்.
9385353605

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க