26.01.2026

கறிக்கோழி விவசாயிகளின் போராட்டம் வெல்லட்டும்!

பத்திரிகைச் செய்தி

க்களின் உணவுத் தேவையில் கோழிக்கறி மிக முக்கியத்துவம் வாய்ந்த மலிவு விலை புரத உணவாகும். அத்தகைய கோழிகள் வளர்ப்பு சார்ந்து இலட்சக்கணக்கான விவசாயிகள் தமிழ்நாட்டில் உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் வெளித்தோற்றத்திற்கு கோழிப் பண்ணையாளர்களாக இருந்தாலும், உண்மையில் கோழி வளர்ப்பிற்காக கார்ப்பரேட் நிறுவனங்களிடம் ஒப்பந்தம் செய்து கொண்டு அதற்கான கூலி பெறுபவர்களாகவே உள்ளனர்.

தனியார் கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்கள், பண்ணை வைத்திருக்கும் விவசாயிகளிடம் கோழிக்குஞ்சுகளைக் கொடுத்து வளர்த்து மீண்டும் அந்த நிறுவனங்களே எடுத்துக் கொள்கின்றன. இதற்காக குறைந்தபட்ச விலையாக ஒரு கிலோ கோழிக்கறி அதிக விலையில் விற்கப்பட்டு வருகின்ற போதும், கோழிகளை வளர்க்கும் விவசாயிகளுக்கு தரப்படும் கூலி கிலோவுக்கு ரூ-6.50 பைசா தான். இவ்வாறு பெருத்த இலாபம் ஈட்டும் கார்ப்பரேட் நிறுவனங்களின் அடிமைகளாக கறிக்கோழி விவசாயிகள் சுரண்டப்படுகின்றனர்.

கோழி வளர்ப்புக்காக தங்களுக்கு வழங்கப்படும் ரூ.6.50 பைசா கட்டுபடியாகவில்லை; ஆள்கூலி, மின்சாரம், தேங்காய்நார் மற்றும் இதர உற்பத்திக்குத் தேவையான பொருட்களின் விலை உயர்ந்துள்ளதால் 2013-ல் நிர்ணயிக்கப்பட்ட ரூ- 6.50 பைசா தொகையை கறிக்கோழி நிறுவனங்கள் ரூ-20 தாக உயர்த்தித்தரக்கோரியும் மற்றும் கறிக்கோழி விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் தமிழ்நாடு கோழிக்கறி பண்ணை விவசாயிகளும், தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கமும் இணைந்து ஜனவரி 1 முதல் கறிக்கோழி உற்பத்தி நிறுத்த போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

அதன் அடுத்தகட்டமாக 07.01.2026 அன்று சென்னை இயக்குநர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டமும் நடத்தப்பட்டது. அந்த போராட்டத்தின் எதிரொலியாக 21.01.2026 அன்று கால்நடைத்துறை இயக்குநர் தலைமையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அரசு தரப்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது.

ஆனால், விவசாயிகளின் போராட்டத்தை ஒடுக்கும் விதமாக தமிழ்நாடு அரசு, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் வழக்கறிஞர் ஈசன் முருகசாமி உள்ளிட்ட ஒன்பது பேரைப் பொய் வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. இதனை மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது.

கறிக்கோழி வளர்ப்போருக்கும் கோழி உற்பத்தி நிறுவனங்களுக்கும் இடையில் நடப்பது ஒப்பந்த அடிப்படையிலான தொழில் என்பதால், இதில் அரசு நேரடியாகத் தலையிட முடியாது என ஜனவரி – 21 ஆம் தேதி அரசு தரப்பில் அறிவித்திருந்த முத்தரப்பு பேச்சுவார்த்தையும் அரசு ரத்து செய்து விட்டது. தற்போது விவசாயிகளின் தொடர்ச்சியான உறுதிமிக்க போராட்டங்களின் காரணமாக, கறிக்கோழி வளர்ப்புப் பண்ணை உரிமையாளர்களின் கோரிக்கை குறித்து ஆய்வு செய்து தீர்வு காணுவதற்காக மாவட்ட அளவில் தொழில்நுட்பக் குழு அமைப்பதாக தமிழ்நாடு அரசு அறிவித்திருக்கிறது.

இது வெறும் கண்துடைப்பாக இல்லாமல் விவசாயிகளிடமிருந்து ஆய்வறிக்கை பெற்று அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றித் தருமாறும் உடனடியாக தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் முறுகசாமி உள்ளிட்ட ஒன்பது பேர் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை ரத்து செய்து எவ்வித நிபந்தனையுமின்றி விடுதலை செய்ய வேண்டும் என்றும் மக்கள் அதிகாரக் கழகம் தமிழ்நாடு அரசை கேட்டுக் கொள்கிறது.


தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலப் பொதுச் செயலாளர்,
மக்கள் அதிகாரக் கழகம்,
தமிழ்நாடு – புதுவை.
9962366321

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க