
01.02.2026
யு.ஜி.சி. புதிய விதிமுறைகளுக்கு உச்ச நீதிமன்றம் தடை!
இந்துராஷ்டிரத்திற்கான வழி அமைக்கும் நீதித்துறை!
கண்டன அறிக்கை
பல்கலைக்கழக மாணவர்கள் ரோஹித் வெமுலா மற்றும் பயல் தட்வி ஆகியோர் மீது உயர்கல்வி நிறுவனங்களில் நடத்தப்பட்ட ஆதிக்கச் சாதி வெறி கொடுமைகளுக்கு எதிராக நாடு முழுவதும் மிகப் பெரிய போராட்டங்கள் வெடித்தன.
ரோகித் வெமுலா மற்றும் பயல் தட்வி ஆகியோரின் தாய்மார்கள் 2019ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்ததன் விளைவாக, 2012ஆம் ஆண்டின் பழைய விதிமுறைகளை மறுபரிசீலனை செய்யுமாறு பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு (யுஜிசி) உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன் தொடர்ச்சியாக ‘உயர்கல்வி நிறுவனங்களில் சமபங்கை மேம்படுத்துதல் ஒழுங்குமுறை 2026’ விதிமுறைகளை யு.ஜி.சி. வெளியிட்டது.
புதிய விதிமுறைகள் மதம், இனம், சாதி, பாலினம், பிறந்த இடம் அல்லது மாற்றுத்திறன் ஆகியவற்றின் அடிப்படையில் நிலவும் அனைத்து பாகுபாடுகளையும் ஒழிப்பதை நோக்கமாகக் கொண்டதாகத் தெரிவித்திருந்தது.
குறிப்பாக, எஸ்.சி./எஸ்.டி., பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு எதிரான பாகுபாடுகளைத் தடுப்பதில் இது கவனம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்திருந்தது.
மேற்கண்ட விதிமுறைகளுக்கு எதிராக, ஆர்.எஸ்.எஸ். மற்றும் பார்ப்பன – பனியா, மார்வாடி சாதியைச் சேர்ந்தவர்கள் வட இந்தியாவில் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தினர். பார்ப்பன – இந்து மதவெறி சாமியார்கள் அரசுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.
இந்த நிலையில் தான் யு.ஜி.சி. புதிய விதிமுறைகளுக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் வந்ததும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள நீதிபதிகள் அதற்குத் தடை விதித்து, இந்த புதிய விதிகள் தெளிவற்றதாகவும் தவறாகப் பயன்படுத்தக் கூடியதாகவும் உள்ளது என்று கருத்து தெரிவித்துள்ளனர்.
பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று அறிக்கை கொடுத்த மண்டல் குழுவைக் கண்டித்து வட இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ். மற்றும் பார்ப்பன – பனியா மதவெறி சக்திகள் போராடியதைப் போலவே இப்பொழுதும் போராடி தங்களுக்குத் தேவையானதை நிறைவேற்றிக் கொண்டனர். நாடு முழுவதும் உள்ள உயர் கல்வி நிறுவனங்களில் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாற்றுத்திறனாளிகள், ஏழைகள், பெண்கள் ஆகியோர் மீது நாங்கள் வன்கொடுமையை மேற்கொள்வோம் அதை யாரும் தடுக்க முடியாது என்பதைத்தான் அவர்கள் ஆணவமாகக் கொக்கரித்துள்ளனர்.
பார்ப்பன – பனியா மார்வாடி அல்லாத பிற சாதியினர், கடந்த இரண்டு தலைமுறைகளாகத்தான் படிப்பைத் தொடர்ந்தும் பதவிகளுக்குச் செல்வதற்கான வாய்ப்புகளைப் பெறவும் தொடங்கியுள்ளனர். அப்படிப்பட்ட பின்தங்கிய மாணவர்கள் மீது பார்ப்பன – பனியா – மார்வாடி ஆதிக்க சாதிவெறி மாணவர்கள் – ஆசிரியர்கள் நடத்துகின்ற வன்கொடுமையைக் கண்டிக்கக் கூடாது, அதை எதிர்க்கக் கூடாது என்று ஒரு வழக்குப் போட்டு அந்த வழக்கையும் உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டிருப்பது என்பது மிகவும் கண்டிக்கத்தக்கதாகும். இந்த நிலை தொடர்ந்தால் விரைவில் எஸ்.சி./ எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்வதற்கான அனைத்து வேலைகளையும் நீதித்துறை வழியாகவே இந்து மதவெறி கும்பல் மேற்கொள்ளும் என்பதையும் எச்சரிக்கையாகக் கொள்ள வேண்டும்.
உச்ச நீதிமன்றத்தின் இந்த அநீதிக்கு எதிராக நாடு முழுவதும் மிகப்பெரிய போராட்டங்களை நாம் மேற்கொள்ள வேண்டும். மேலும் வருகின்ற நாடாளுமன்ற கூட்டத் தொடரில் உயர்கல்வி நிறுவனங்களில் சாதியப் பாகுபாடுகளுக்கு எதிரான சிறப்புச் சட்டம் இயற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தனிநபர் மசோதா கொண்டு வர வேண்டும் என்று மக்கள் அதிகாரக் கழகம் கேட்டுக் கொள்கிறது.
![]()
தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலப் பொதுச் செயலாளர்,
மக்கள் அதிகாரக் கழகம்,
தமிழ்நாடு – புதுவை.
9962366321
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram





