விவசாயிக்கும் விதைக்குமான உறவை முறித்துவைக்கும் வரைவு விதைகள் மசோதா 2025

ஒவ்வொரு பகுதியின் மண் வளம், நீர் வளம், காற்று போன்ற சூழலியல் காரணிகளுக்குத் தகுந்தாற்போல் தாக்குப்பிடித்து வளரும் வகையில் உள்ள பாரம்பரிய விதைகளைத் தரமற்றவை என்று கூறி அதை நிராகரித்து ஒரே மாதிரியான விதை வடிவங்களை உருவாக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக வருகிறது இந்த சட்டம்.

ன்றிய அரசு தொடர்ச்சியாக இந்திய உற்பத்தித் துறையில், முக்கியமாக விவசாயத்தில், தனியார்மயத்தை ஊக்குவிப்பது என்ற வகையில் ஒவ்வொரு அம்சத்திலும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக விவசாயத்தின் உயிர் ஆதாரமான விதையில் வரைவு விதைகள் மசோதா 2025 மூலம் இப்போது கை வைத்துள்ளது.

தரமான விதைகள் கிடைப்பதை உறுதி செய்தல், போலி விதைகளைத் தடுத்தல், பாதுகாப்பான விதைகளை உறுதிப்படுத்தல் ஆகியவற்றுக்காக இந்த சட்ட வரைவு என சொல்லிக்கொண்டு விவசாயிகளுக்கு விதை மீதுள்ள உறவை முழுவதுமாக துண்டிக்கும் ஏற்பாடாகத்தான் நவம்பர் மாதம் 2025 விதைகள் சட்ட மசோதாவை முன் வைத்துள்ளது.

இணையதளம் வழியாக வெளியிடப்பட்ட இந்த வரைவு மசோதாவுக்கு ஒரு மாதத்திற்குள் கருத்து சொல்லும்படி ஒன்றிய அரசு கூறுகிறது. ஆனால் இது எந்த மாநில மொழிகளும் வெளியிடப்படாமல் ஆங்கிலத்தில் மட்டும் வெளியிடப்பட்டு சாதாரண மக்களுக்குப் போய்ச் சேராதபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயம் மற்றும் விதைகள் மேலாண்மை அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்டிருந்த இந்த விதைச் சட்டம் விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த விதைகளை தனிநபர்களாகவோ சங்கமாகவோ குழுக்களாகவோ விற்பனை செய்வதைத் தடை செய்கிறது.

அப்படி விற்பனை செய்ய வேண்டும் என்றால் அதை முறையாக அரசிடம் பதிவு செய்ய வேண்டும் என்று கூறுகிறது. அப்படி பதிவு செய்வது என்பது பல வழிமுறைகளைக் கொண்டுள்ளது குறிப்பாக அந்த மண்ணின் வளம், அதனுடைய காய் மற்றும் பழங்கள் குறித்து முன்னணி ஆய்வகங்களில் பரிசோதனை அறிக்கை என பல கட்டங்களைக் கடக்க வேண்டி இருக்கிறது. இது ஒரு சாதாரண விவசாயியால் நிச்சயம் சாத்தியம் இல்லை என்கின்றனர் விவசாய சங்கங்கள்.

ஒருபுறம் விவசாயிகள் விதைகளை விற்பனை செய்ய வேண்டும் என்றால் அதை சட்டப்படி பதிவு செய்ய வேண்டும் என்று கூறும் இந்த புதிய விதிமுறை, அவ்வாறு பதிவுசெய்ய வரும்போது அந்த விதைகள் எல்லா சூழலுக்கும் பொருந்தும் வகையில் இருக்க வேண்டும் என்று கூறுவது மரபணு மாற்றப்பட்ட பன்னாட்டு நிறுவனங்களின் விதைக்கு இணையாகப் பாரம்பரிய விதைகள் இருந்தால்தான் தரமானது என்று கூறும் அயோக்கியத்தனமாகும்.

அதையும் மீறி பதியப்பட்ட நபர்களுக்கு கியூ ஆர் கோடு வழங்கப்படும். அதன் மூலம் உற்பத்தியாகும் இடத்திலிருந்து அது பயன்படுத்தப்படும் இடம் வரை யார்,யார் கைமாறிச் செல்கிறது என்பது தீவிரமாகக் கண்காணிக்கப்படும் என்றும் இதை மீறினால் சிறிய குற்றங்களுக்கு ஒன்றிலிருந்து இரண்டு லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் பெரிய குற்றங்களுக்கு பத்து முதல் 30 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் அதன் விதிமுறைகளில் கூறப்பட்டுள்ளது.

இந்த வரைவு மசோதா இந்திய விதை சந்தையையே தலைகீழாகப் புரட்டிப் போடும் அபாயமுள்ளது என்பதே விவசாயிகளின் கவலையாகும். பெரிய நிறுவனங்களை வலுவாகக் காலூன்ற வைக்கப் போடப்பட்டுள்ள சட்டம் என்பது இதன் அமலாக்கத்தின் மூலம் அறியலாம்.

சிறு விவசாயிகள், பாரம்பரிய விதை பாதுகாக்க முயற்சிக்கும் ஆர்வலர்கள் ஆகியோர் சுதந்திரமாக இயங்க முடியாத நிலைமைகளை இது தோற்றுவிக்கும். மேலும் அப்படி இயங்கும்பட்சத்தில் இவை அனைத்தும் சட்டவிரோத சமூக விரோத நடவடிக்கையாக மாற்றப்பட்டுத் தண்டிக்கப்படக்கூடும் என்பதும் கவனிக்கத்தக்கது.

பலதரப்பட்ட சோதனை அளவுகோல்கள் மூலமாக பல்வேறு சூழல்களை எதிர்கொண்டு தாக்குப்பிடிக்கவல்ல பாரம்பரிய விதைகள் மெல்ல, மெல்ல காலி செய்யப்படலாம்.

ஏற்கெனவே மரபணு மாற்றப்பட்ட விதைகளை நம் தலையில் திணிக்கும் இந்திய அரசு உண்மையில் நல்ல விதைகளை நாடு கடத்தி போலி விதைகளைத் திணிக்கவே இந்த விதை சட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. தன் நிலத்திற்கு, தன்னுடைய மண்ணுக்கு, தான் சாப்பிடும் உணவுக்கு என்ன விதை தேவை என்பதை டெல்லியில் இருக்கும் அதிகார மையம் தீர்மானிப்பதை எந்த விவசாயியும் விரும்பமாட்டார்.

20 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவின் விதைச் சந்தை 4,000 கோடி ரூபாயாக இருந்தது. இப்போது 20 ஆயிரம் கோடி ரூபாயாக வளர்ந்துள்ளது.

இதில் மான்சாண்டோ (Monsanto) நிறுவனத்துக்கு மட்டும் விதை சந்தையில் கிடைக்கும் வருமானம் ஒரு ஆண்டுக்கு 50 ஆயிரம் கோடி ரூபாய். இந்தப்போட்டியில் அதானியின் (AALL) நிறுவனம் முக்கியத்துவம் பெறுகிறது. கார்ப்பரேட்டுகள் இதை முழுவதுமாக கைப்பற்றிக் கொள்வதற்காகத்தான் இந்தச் சட்டங்களை ஒன்றிய பாசிச மோடி அரசு கொண்டுவரத் துடிக்கிறது.

ஆனால் விவசாயிகளுக்குத் தவறான விதைகள் விற்கப்பட்டு நிலமும் பயிர் விளைச்சலும் பெரும் பாதிப்புக்கு ஆளானால் என்ன இழப்பீடு என்பதற்கு இவர்களால் எந்த உத்தரவாதமும் தர இயலவில்லை. ஆக, மொத்தத்தில் விவசாய நலன்களைக் கருத்தில் கொண்டு இந்த சட்டம் கொண்டு வரப்படுவதாகப் பம்மாத்து காட்டி, கார்ப்பரேட் நலன்களை உறுதிப்படுத்தவே கொண்டு வரப்படுகிறது என்பதே நிதர்சனமாகும்.

எனவே இதை வெறும் விவசாயிகள் பிரச்சினை என்று மட்டும் சுருக்கி பார்க்க முடியாது. நாட்டு மக்களின் ஆரோக்கியம் பற்றிய பிரச்சினையோடு நாம் இதை இணைத்துப் பார்க்க வேண்டும். நமது நாட்டில் 150க்கும் மேற்பட்ட பாரம்பரிய காய்கறிகள், தானியங்களால் உருவாக்கப்பட்ட உணவு வகைகள் இன்று மெல்ல மெல்ல குறைந்து பெரும்பான்மையாக இரண்டே வகை கோதுமை,அரிசி என்ற அளவில் முழுவதுமாக சுருங்கி விட்டது. இது மக்களின் ஆரோக்கியமான வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் விதை மேலாண்மை குறித்த நடவடிக்கையில் மாநில அரசுக்கு எந்த உரிமையும் இல்லாததை இந்த புதிய சட்டம் உறுதிப்படுத்துவதால் இது மாநில உரிமையை முழுவதும் விவசாயத் துறையிலிருந்து அப்புறப்படுத்தும் நடவடிக்கை ஆகும்.

ஒவ்வொரு பகுதியின் மண் வளம், நீர் வளம், காற்று போன்ற சூழலியல் காரணிகளுக்குத் தகுந்தாற்போல் தாக்குப்பிடித்து வளரும் வகையில் உள்ள பாரம்பரிய விதைகளைத் தரமற்றவை என்று கூறி அதை நிராகரித்து ஒரே மாதிரியான விதை வடிவங்களை உருவாக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக வரும் இந்த சட்டம் ஒரே நாடு ஒரே மொழி ஒரே சட்டம், ஒரே தேர்தல் என்பது போல விதையையும் ஒரே மாதிரியான முறைக்கு மாற்றும் பாசிச நடவடிக்கையின் போக்காகும்.

ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க; அம்பானி – அதானி பாசிச போக்குகளுக்கு எதிராக நடைபெறும் பல்வேறு போராட்டங்களில், 2025 விதைகள் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தையும் இணைக்க வேண்டும்.

தோழர் சிவகாமு,
செயலாளர்,
மதுரை மேற்கு மாவட்டம்,
மக்கள் அதிகாரக் கழகம்.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க