லெனின்: ஓர் அமெரிக்கரின் குறிப்பிலிருந்து | ரைஸ் வில்லியம்ஸ் | பாகம் 8

ஒவ்வொரு மனிதக் குழுவும் சோஷலிஸத்தை நோக்கித் தனக்கே உரிய தனி வழியில் செல்கிறது என்பதை அனுபவம் நிரூபிப்பதாகத் தோன்றுகிறது. பற்பல தாற்காலிக வடிவங்களும் விதங்களும் இருக்கும். ஆனால் அவை எல்லாம் ஒரே குறிக்கோளை நோக்கி இயங்கும் புரட்சியின் வெவ்வேறு கட்டங்களே ஆகும்.

13. லெனின் தீர்க்கதரிசி என்ற முறையிலும் ராஜதந்திரி என்ற முறையிலும்

ராஜதந்திரி என்ற முறையிலும் வருங்காலத்தை உணர்ந்தவர் என்ற முறையிலும் லெனினது ஆற்றல் ஏதேனும் மாயாவாத உள்ளுணர்விலிருந்தோ வருவதை அனுமானிக்கும் சக்தியிலிருந்தோ அல்ல, ஒரு விஷயம் பற்றிய எல்லா மெய் விவரங்களையும் ஒன்று திரட்டவும் பின்பு அவற்றைப் பயன்படுத்தவும் அவருக்கு உள்ள திறமையிலிருந்தே தோன்றுகிறது என்பது தெளிவு. ருஷ்யாவில் முதலாளித்துவத்தின் வளர்ச்சி என்னும் நூலில் இந்தத் திறமையை அவர் காட்டினார். ருஷ்யக் குடியானவர்களில் பாதிப் பேர் பாட்டாளிகள் ஆக்கப்பட்டு விட்டார்கள் என்றும், ஒரு சிறிது நிலம் அவர்களிடம் இருந்த போதிலும் இந்தக் குடியானவர்கள் எதார்த்தத்தில் “ஒரு துண்டு நிலம் வைத்திருக்கும் கூலி உழைப்பாளிகளே” என்றும் அந்த நூலில் லெனின் வலியுறுத்தித் தம் காலத்துப் பொருளாதாரச் சிந்தனைக்குச் சவால் விடுத்தார். இந்த வலியுறுத்தல் துணிகரம் மிக்கதாக இருந்தது எனினும் பிந்திய வருஷங்களில் செய்யப்பட்ட ஆராய்ச்சிகள் இதைச் சரி என்று காட்டின. லெனின் இந்த விஷயத்தை வெறுமே ஊகிக்கவில்லை. ஜெம்ஸ்த்வோக்களிலும்²¹ பிற துறைகளிலும் புள்ளிவிவரங்களை விரிவாகத் திரட்டித் தொகுத்த பின்னர் அது அவர் அளித்த தீர்ப்பு ஆகும்.

லெனின் பெற்றுள்ள பெருமதிப்புக்கு மூல காரணங்கள் யாவை என்பது பற்றி ஒரு நாள் பீட்டர்ஸுடன் பேசிக்கொண்டிருந்தேன். அவன் சொன்னான்: “அடிக்கடி எங்கள் கட்சியின் பிரத்தியேகக் கூட்டங்களில் நிலைமை பற்றிய தமது பகுத்தாராய்வின் அடிப்படையில் லெனின் குறித்த யோசனைகளை முன்வைப்பார். நாங்கள் அவற்றைப் பெரும்பான்மை வாக்குகளால் நிராகரித்து விடுவோம்.

லெனின் சொன்னது சரி, எங்கள் கருத்து தவறு என்பது பிற்பாடு நிரூபணமாகிவிடும்.” லெனினுக்கும் கட்சியின் மற்ற உறுப்பினர்களுக்கும் இடையே செயல் தந்திரம் குறித்துக் கடும் போராட்டங்கள் நடந்துள்ளன. அப்புறம் வந்த நிகழ்ச்சிகள் இவற்றில் பொதுவாக லெனினது மதிப்பீட்டைச் சரி என்று காட்டியிருக்கின்றன.

திட்டமிடப்பட்ட நவம்பர் புரட்சியில் வெற்றி பெறுவது இயலாது என்று பிரபல போல்ஷெவிக்குகளாகிய காமினெவும் ஸினோவியேவும் அபிப்பிராயப்பட்டார்கள். “அது தோல்வி அடைவது இயலாது என்றார் லெனின் அவர் சொன்னதே சரி ஆயிற்று. போல்ஷெவிக்குகள் ஒரு பாய்ச்சல் காட்டியதுமே அரசாங்க அதிகாரம் அவர்கள் கைகளுக்கு வந்துவிட்டது. அரசாங்க அதிகார மாற்றம் இவ்வளவு சுளுவாக நடந்தேறியது குறித்து மற்றவர்களைவிட அதிக வியப்பு அடைந்தவர்கள் இந்த போல்ஷெவிக்குகளே.

அதிகாரத்தைக் கையில் எடுத்துக்கொள்வது முடியலாம் எனினும் அதை நிலையாக வைத்திருப்பது இயலாது என்று மற்ற போல்ஷெவிக் தலைவர்கள் சொன்னார்கள். லெனின் சொன்னார், “ஒவ்வொருநாளும் நமக்குப் புதிய பலத்தைக் கொண்டுவரும்” என்று லெனின் கூறியதே சரி ஆயிற்று எல்லாப் புறங்களிலுமிருந்து நெருக்கும் பகைவர்களுக்கு எதிராக இரண்டு ஆண்டுகள் போரிட்ட பின்னர் சோவியத் எல்லா முனைகளிலும் முன்னேறிக் கொண்டிருக்கிறது.

ஜெர்மானியர்களை ஆசைகாட்டி மயக்குவதும் ஆனால் சமாதான உடன்படிக்கையில் கையெழுத்திட மறுப்பதுமாகத் தமது ஜாலவித்தைத் தந்திரத்தைக் காட்டிக்கொண்டிந்தார் த்ரோத்ஸ்கிய். அப்போது லெனின் சொன்னார்: “அவர்களுடன் விளையாடாதீர்கள். முன் வைக்கப்படும் முதல் உடன்படிக்கையில், அது எவ்வளவு மோசமாகயிருந்தாலும் சரி, கையெழுத்துதிடுங்கள். இல்லாவிட்டால் நாம் இன்னும் படுமோசமான உடன்படிக்கையில் கையொப்பம் இட நேரும்” என்று. இம்முறையும் லெனின் சொன்னதே சரி ஆயிற்று. வழிப்பறிக்காரர்களின்”, “கொள்ளைக் கூட்டத்தாரின்” சமாதான உடன்படிக்கையில் ருஷ்யர்கள் பிரேஸ்த்லித்தோவ்ஸ்க்கில் கையெழுத்திட வேண்டியதாயிற்று.

1918ஆம் ஆண்டு வசந்த காலத்தில் ஜெர்மானியப் புரட்சி பற்றிய கருத்தை உலகம் முழுவதும் எள்ளி நகையாடிக்கொண்டிருந்தபோது, பிரான்சில் நேச நாட்டினரின் படையணியைக் கெய்ஸரின் சேனை நொறுக்கிக்கொண்டிருக்கையில், என்னுடன் ஓர் உரையாடலின்போது லெனின் கூறினார்: “கெய்ஸரின் வீழ்ச்சி ஓர் ஆண்டுக்குள் வந்துவிடும் என்று இதற்கு ஒன்பது மாதங்கள் பின்னர் கெய்ஸர் தமது சொந்த நாட்டு மக்களிடமிருந்து தப்பி ஓட நேர்ந்தது.

“நீங்கள் அமெரிக்கா திரும்புவதாயிருந்தால் வெகு சீக்கிரம் புறப்பட  வேண்டும். இல்லாவிட்டால் அமெரிக்கச் சைனியம் சைப்பீரியாவில் உங்களுக்கு எதிர்ப்படும்” என்று 1918 ஏப்ரலில் லெனின் என்னிடம் சொன்னார். இது வியப்பூட்டும் கூற்று. ஏனெனில் அந்தக் காலத்தில் மாஸ்கோவிலிருந்த நாங்கள் புதிய ருஷ்யாவின்பால் அமெரிக்கா மிக மிக நல்லெண்ணமே கொண்டிருப்பதாக நம்பத் தொடங்கியிருந்தோம். “அது நடவாத காரியம். சோவியத்துக்கள் அரசு அங்கீகாரம் பெறுவதற்குக்கூட வாய்ப்பு இருப்பதாக ரேய்மண்ட் ராபின்ஸ் நினைக்கிறாரே” என்று நான் மறுத்துரைத்தேன்.

“மெய்தான். ஆனால் ராபின்ஸ் அமெரிக்காவின் மிதவாத பூர்ஷ்வாக்களின் பிரதிநிதி. அமெரிக்காவின் கொள்கையை நிர்ணயிப்பவர்கள் அவர்கள் அல்ல. நிதி மூலதனமே அதை நிர்ணயிக்கிறது. நிதிமூலதனமோ சைபீரியாவைத் தன்வசம் வைத்திருக்க விரும்புகிறது. சைபிரியாவைக் கைப்பற்றுவதற்காக அது அமெரிக்கப் படைவீரர்களை அனுப்பும்” என்றார் லெனின். இந்த நோக்கு எனக்கு அபாண்டமாகப் பட்டது. ஆயினும், பிற்பாடு, 1918, ஜூன் 29ந் தேதி, விளாதிவஸ் தோக்கில் அமெரிக்கக் கடற்படைவீரர்கள் இறங்குவதை நான் கண்கூடாகப் பார்த்தேன். அதே சமயம் ஜாரின் ஆதரவாளர்களும் செக்குகளும் பிரிட்டிஷாரும் ஜப்பானியரும் பிற நேச நாட்டினரும் சோவியத் குடியரசின் கொடியை இறக்கி அகற்றிவிட்டுப் பழைய எதேச்சாதிகார அரசின் கொடியை ஏற்றினார்கள்.

லெனினுடைய முன்மொழிவுகள் நிகழ்ச்சிகளால் மிக அடிக்கடி மெய்ப்பிக்கப்பட்டுள்ளன. ஆதலால் வருங்காலம் பற்றிய அவருடைய அபிப்பிராயம் குறைந்தபட்சம், அக்கறை என்பது முக்கியமானது. 1919, ஏப்ரலில் பாரிஸ் “தான்” பத்திரிகையில் லெனினுடன் நோதோவின் புகழ்பெற்ற பேட்டி விவரம் வெளியாயிற்று. அதன் சுருக்கம் வருமாறு:

லெனின் கூறினார்: “உலகின் வருங்காலமா? நான் தீர்க்கதரிசி அல்ல. ஆனால் இது மட்டும் நிச்சயம். முதலாளித்துவ அரசு, இங்கிலாந்து இதற்கு ஓர் எடுத்துக்காட்டு, மடிந்துகொண்டிருக்கிறது. பழைய அமைப்பின் தலைவிதி தீர்க்கப்பட்டுவிட்டது. யுத்தத்தின் விளைவாக ஏற்பட்ட பொருளாதார நிலைமைகள் புதிய அமைப்புக்கு வலிய இட்டுச் செல்லுகின்றன. மனிதகுலத்தின் வளர்ச்சி தவிர்க்க இயலாதவாறு சோஷலிஸத்துக்குக் கொண்டு செல்லுகிறது.

“அமெரிக்காவில் ரெயில் பாதைகள் தேசிய உடைமை ஆக்கப்படும் என்று சில ஆண்டுகளுக்கு முன்பு யார்தாம் நம்பியிருப்பார்கள்? அந்தக் குடியரசு எல்லா தானியத்தையும் அரசின் முழு நலத்துக்கு ஏற்பப் பயன்படுத்தும் பொருட்டு விலைக்கு வாங்குவதை நாம் பார்த்துவிட்டோம். அரசுக்கு எதிராகச் சொல்லப்பட்டது எல்லாம் இந்தப் பரிணாமத்தைத் தடைப்படுத்தவில்லை. குறைபாடுகளை நீக்கும் பொருட்டுப் புதிய கட்டுப்பாட்டுச் சாதனங்களை உண்டாக்குவதும் அமைப்பதும் அவசியம் என்பது உண்மையே. ஆனால் அரசு சர்வாதிகாரமாக உள்ளது. ஆவதைத் தடுக்கும் எந்த முயற்சிகளும் வீணே ஆகும். ஏனெனில் தவிர்க்க இயலாதது வருகிறது, தனது சொந்த விசையாலேயே வருகிறது. ‘பணியாரம் நன்றாயிருப்பதற்குச் சான்று அது உண்ணப்படுவதில் இருக்கிறது’ என்று ஆங்கிலேயர்கள் கூறுவதுண்டு சோஷலிஸப் பணியாரத்தைப் பற்றி நீங்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லிக்கொள்ளுங்கள். எல்லா நாடுகளும் அதை உண்கின்றன. மேலும் மேலும் அதிகமாக உண்ணும்.

“தொகுத்துரைக்கிறேன். ஒவ்வொரு மனிதக் குழுவும் சோஷலிஸத்தை நோக்கித் தனக்கே உரிய தனி வழியில் செல்கிறது என்பதை அனுபவம் நிரூபிப்பதாகத் தோன்றுகிறது. லாட்வியர்கள் கூட அதை நோக்கி ருஷ்யர்களிலிருந்து வேறான முறையில் செல்கிறார்கள். பற்பல தாற்காலிக வடிவங்களும் விதங்களும் இருக்கும். ஆனால் அவை எல்லாம் ஒரே குறிக்கோளை நோக்கி இயங்கும் புரட்சியின் வெவ்வேறு கட்டங்களே ஆகும். பிரான்சிலோ ஜெர்மனியிலோ சோஷலிஸ அரசு அமைப்பு நிறுவப்பட்டால் அதை நிரந்தரம் ஆக்குவது இங்கே ருஷ்யாவில் ஆக்குவதைக் காட்டிலும் மிக எளிதாயிருக்கும். ஏனென்றால் ருஷ்யாவில் காணப்படாத அமைப்புச் சட்டங்கள், ஸ்தாபனங்கள், எல்லா வகையான அறிவுத் துணைக்கருவிகள், பொருள்கள் ஆகியன மேற்கே சோஷலிஸத்துக்குக் கிடைக்கும்”

14. அறிவாளிகள்பால் லெனினது போக்கு

“நேர்மையுள்ள ஒவ்வொரு போல்ஷெவிக்குக்கும் முப்பத்தொன்பது கயவர்கள், அறுபது முட்டாள்கள் வீதம் இருக்கிறார்கள்.” விரிவாக மேற்கோள் காட்டப்படும் இந்த வாக்கியம் லெனினால் கூறப்பட்டதாகச் சொல்லப்பட்டுள்ளது. பொதுமக்கள் மீது இகழ்ச்சியும் அவநம்பிக்கையும் கொண்ட, பெருமிதம் மிக்க உயர்குலத்தவராக லெனினைச் சித்திரிக்கும் நோக்கத்துடன் இது புனையப்பட்டுள்ளது. விந்தையான இக்குற்றச்சாட்டுக்கு ஆதரவாகப் பதினைந்து ஆண்டுகளுக்கு முந்திய ஓர் அறிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. உழைக்கும் வர்க்கங்கள் ஒழுங்கமைப்பு பற்றிய அறிவு, முதலாளிக்கு எதிராக வேலைநிறுத்தம் செய்தல், ஒரு நாளைக்கு எட்டு மணி நேர வேலை கோருதல் முதலியவை தொழிற்சங்க உணர்வை மட்டுமே வளர்த்துக் கொண்டிருக்கின்றன என்றும் சோஷலிஸக் கருத்துகள் பெருமளவு வெளியிலிருந்தே, அறிவுஜீவிகளிடமிருந்தே தொழிலாளர்களுக்குக் கிடைத்துள்ளன என்றும் கூறுகிறது இந்த அறிக்கை.

லெனினும் சோவியத் அரசாங்கமும் தங்கள் எல்லாச் செயல்களிலும் ஆணைகளிலும் அறிவுக்குத் தாங்கள் அளிக்கும் பெருமதிப்பைக் காட்டுகிறார்கள் என்பது உண்மையே. ஒவ்வொரு துறையிலும் லெனின்  நிபுணருக்குப் பணிந்துபோகிறார். ஜார் ஆட்சிக் காலத்திய ஜெனரல்களைக்கூட இராணுவ விவகாரங்களில் நிபுணர்கள் என்ற வகையில் லெனின் மதிக்கிறார். புரட்சிச் செயல் தந்திரத்தில் லெனின் பிரமாணமாகக் கருதுவது ஜெர்மானியரான மார்க்ஸை என்றால் அமெரிக்கரான டெய்லர் உற்பத்திச் செயல்திறமைக்கு வெனினால் பிரமாணமாகக் கருதப்படுகிறார். தேர்ந்த கணக்கர், பெரிய பொறி இயலறிஞர், ஒவ்வொரு செயல் துறையிலும் தனித் தேர்ச்சியாளர் மிக மதிப்புள்ளவர்கள் என்பதை லெனின் எப்போதுமே வலியுறுத்தித்தி வந்திருக்கிறார் உலகம் முழுவதிலிருந்தும் இத்தகைய நிபுணர்களை ஈர்க்கும் காந்தமாக சோவியத் விளங்கும்  என்று அவர் நம்பினார். தங்கள் படைப்பு ஆற்றல்களுக்கு வேறு எந்த அமைப்பிலும்விட சோவியத் அமைப்பில் அதிக விரிவான செயல் வாய்ப்புகள் இருப்பதை அவர்கள் காண்பார்கள் என லெனின் எண்ணினார்.

ஹாரிமன் தமது பெரிய ரெயில்வேயை இயக்கி நடத்தும் வேலையைவிட அதற்கு நிதி வசதி செய்யும் பிரச்சினை காரணமாகவே பெரிதும் களைத்துச் சோர்ந்து போனார் என்று சொல்லப்படுகிறது. சோவியத் அமைப்பில் அவர் தமது ஆற்றலை நிர்வாக வேலையிலிருந்து நிதிவசதி செய்யும் வேலையில் ஈடுபடுத்த வேண்டியிராது. ஏனெனில் நாம் காங்கிரஸில் உள்ள நமது பிரதிநிதியிடம் அரசியல் அதிகாரத்தை ஒப்படைப்பது போலவே சோவியத் அமைப்பில் பொருளாதார அதிகாரம் தலைமை நிர்வாகியிடம் ஒப்படைக்கப்படுகிறது ருஷ்யாவின் பெருத்த வளங்கள் பண்படுத்தும் பொருட்டு அவர் பொறுப்பில் விடப்படுகின்றன. சோவியத் ஆட்சியில் ருஷ்யா பொறி இயலருக்கோ, நிர்வாக நிபுணருக்கோ செவ்வைப்படுத்துவதற்குத் தனது விசாலமான வளங்களை மட்டும் அல்ல, அவ்வாறு செயல்படுத்துவதற்கான கருவியாகப் பயன்படும் உற்சாகமும் உயிரோட்டமும் உள்ள உழைப்பாளிகளையும் நல்குகிறது.

கடைசியில் இந்த நிலைமை முதலாளித்துவ அமைப்பில் கிடையாது. அங்கே தொழிலாளியின் மிகப்பெரிய அக்கறை தனது வேலையை விடச் சம்பளத்தில்தான் இருக்கிறது. நிர்வாக அதிகாரிகளுக்கும், தொழிலாளர்களுக்கும் இடையே அங்கே இடைவிடாது பிணக்கு விளைந்துகொண்டிருக்கிறது. சோவியத் அமைப்பில் மனிதர்களின் ஆற்றல்கள் உற்பத்திப் பொருளின் பங்கீடு குறித்துச் சச்சரவிடுவதில் செலவிடப்படுவதற்குப் பதிலாக, அதிக விரிவான உற்பத்தியின் பொருட்டு விடுவிக்கப்படுகின்றன. வெகுஜனங்களின் உற்சாகம் மிக்க படைப்பு ஆற்றல்களை வெளிக்கொணரும் அதே சமயத்தில் அறிவாளிகளுக்கும் மேதாவிகளுக்கும் செயலாற்றச் சுதந்திரம் அளிக்கும் சோவியத் முறையிலிருந்து பெருத்த பயன்கள் விளையும் என லெனின் நம்பினார்.

தமது பார்வையில் சமூகச் சக்திகளின் வெவ்வேறு வகையான எல்லாப் பகுதிகளதும் மதிப்பை லெனின் அனுமானித்தார். புரட்சிக்கு முன்பும் பின்பும் அறிவாளிகள் தங்களுக்கு உரிய இடம் பெற்றார்கள் பிரசாரக் கிளர்ச்சியாளர்கள் என்ற முறையில் புரட்சி சாத்தியமாக அவர்கள் உதவ முடிந்தது. திறமையும் தொழில் நுட்பமும் வாய்ந்த நிபுணர்கள் என்ற வகையில் புரட்சியைச் சாசுவதமும் நிலைப்பும். கொண்டது ஆக்குவதற்கு அவர்கள் உதவ முடிந்தது.


21. ஜெம்ஸ்த்வோக்கள் மாபெரும் அக்டோபர் புரட்சிக்கு முன் மத்திய ருஷ்யப் பிரதேசங்களில் ஸ்தல அதிகாரத்தைச் செலுத்திய நிறுவனங்கள்.

(தொடரும்…)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க