ஏர் இந்தியா விமானத்தில் அசைவ உணவுக்கு தடை ! – நிர்வாகம் அறிவிப்பு

டந்த 2017 மார்ச் மாதத்தில் வெளியிடப்பட்ட மத்திய தணிக்கை கணக்காயர் அறிக்கையில் ஏர்-இந்தியா நிறுவனம் கடந்த நிதி ஆண்டில் சுமார் 321.4 கோடி அளவிற்கு இழப்பைச் சந்தித்திருப்பதாகக் கூறப்பட்டிருக்கிறது. இந்நிறுவனம் கடந்த பல ஆண்டுகளாக தொடர்ச்சியான இழப்பைச் சந்தித்து வருவதையும் அறிக்கை சுட்டிக் காட்டுகிறது. இதனையே காரணமாக வைத்துக் கொண்டு, அந்நிறுவனத்தை தனியாருக்குத் தாரை வார்ப்பதற்கான வேலைகளை துரிதப்படுத்தியுள்ளது மத்திய அரசு.

கடந்த வாஜ்பாய் ஆட்சியிலிருந்து, பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு அடிமாட்டு விலைக்குத் தாரைவார்க்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில், இலாபத்தில் ஓடும் பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களையும், நிர்வாகத்தைச் சீர்குலைத்து, ஊழல்மயப்படுத்தி அவற்றை நட்ட்த்தில் தள்ளி வருகிறது இந்திய அரசு. மன்மோன்சிங் காலத்தில் இது மேலும் வேகமெடுத்தது. தற்போது மோடி அரசில் தனியார்மயத்தை முடித்து வைக்கிறார்கள்.

குறிப்பாக ஏர்-இந்தியா நிறுவனத்தைப் பொறுத்தவரையில், விமான நிலையங்களில், அதிக பயணிகள் பயணத்தைத் தொடங்க விரும்பும் நேரங்களில் தனியார் விமானங்களை இயக்க அனுமதிப்பது, குறைவான பயணிகள் பயணம் செய்யும் நேரங்களில் ஏர்-இந்தியா நிறுவனத்தின் விமானங்களை இயக்குவது, விமானி தங்கும் விடுதிக்கு அதிகக் கட்டணம் செலுத்தி அதில் முறைகேடுகளை நடத்துவது என பல்வேறு முறைகேடுகள் மூலம் அந்நிறுவனத்தை நட்டத்தில் தள்ளியது இந்திய அரசு.

ஆகவே ஏர்-இந்தியா நிறுவனத்தை அடிமாட்டு விலைக்கு வாங்குவதற்கு டாட்டாவும், இன்ன பிற தரகு முதலாளிகளும் தயாராக உள்ளனர். இடையில், ஏர்-இந்தியா நிறுவனம், செலவுக் குறைப்பு நடவடிக்கை என்ற பெயரில் உள்நாட்டில் செலுத்தப்படும் விமானங்களில் 2ம் வகுப்பு (எக்கனாமிக்) பயணிகளுக்கு அசைவ உணவு இனி வழங்கப்படமாட்டாது என அறிவித்துள்ளது.

இதற்குக் காரணமாக ஏர்-இந்தியா நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனரான அஸ்வனி லோஹனி கூறுகையில், “அசைவ உணவு அதிக அளவில் மீந்து விரயமாவதைத் தடுப்பதற்காகவும், அதற்கு ஆகும் அதிகச் செலவைக் குறைக்கும் பொருட்டும்”, “பல்வேறு சமயங்களில் சைவ உணவுக்காரர்களுக்கு உணவு வழங்குகையில், அதில் அசைவ உணவு எதிர்பாராத விதமாகக் கலந்து விடுவதைத் தடுப்பதற்காகவும், உணவு வழங்கலை இன்னமும் செழுமைப்படுத்தவுமே இந்த நடவடிக்கை” என்றும் கூறியுள்ளார்.

சிறு குழந்தைகள் கூட எள்ளி நகையாடும் அளவிற்கு இட்டுக்கட்டப்பட்ட விளக்கங்களை அளித்துள்ளது ஏர்-இந்தியா நிர்வாகம்.

மத்தியில் ஆளும் பாஜக அரசு ஆட்சியில் அமர்ந்தவுடனேயே மக்கள் மத்தியில் சைவ உணவைத் திணிக்கும் வேலைகளையும், அசைவம் உண்பவர்களை இழிவாகச் சித்தரிக்கும் வேலைகளையும் பல்வேறு துறைகளிலும் செய்து வருகிறது. ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த எஸ்.கே.ஜெயின் என்பவர் எழுதிய ஒரு கடிதத்தைக் கடந்த 2014-ம் ஆண்டு, மனித வளத்துறை அமைச்சகம், அனைத்து ‘இந்தியத் தொழில்நுட்பக் கழகங்களுக்கும்’ (ஐ.ஐ.டி) அனுப்பியது.

அக்கடிதத்தில் சைவ மற்றும் அசைவ உணவு உண்பவர்களைத் தனித்தனியாகப் பிரிக்குமாறு எஸ்.கே. ஜெயின் வலியுறுத்தியிருக்கிறார். மேலும், அசைவ உணவு உண்ணுபவர்கள் தங்களது தமஸ் (இருள்நிறைந்த / கடுமையான) குணத்தால் தங்களது பெற்றோர்களை வருத்தத்திற்கு உள்ளாக்குபவர்களாக உருவெடுப்பர் என்றும், அவர்களது உணவு முறை நேரடியாக அவர்களது சிந்தனையோடு தொடர்புடையதாக இருப்பதால் இந்தியப் பாரம்பரியத்திலிருந்து அக்குழந்தைகள் விலகிச் செல்கிறார்கள் என்றும் கூறியிருக்கிறார்.

சைவம் உயர்ந்தது, அசைவம் தாழ்ந்தது என்ற பார்ப்பனீயக் கருத்தை அனைத்துத் தளங்களிலும் நிலைநாட்ட முயற்சிக்கிறது. சுருக்கமாகச் சொன்னால் மறைமுகமாக ஒரு இந்துராட்டிரத்தை நிலைநாட்ட முயற்சித்து வருகிறது. இந்தியாவைப் பொறுத்தவரையில் மொத்த மக்கள் தொகையில் சுமார் 88% பேர் அசைவ உணவு சாப்பிடுபவர்கள் ஆகும். அவர்களை, அதாவது ஆகப்பெரும்பான்மையான மக்களை இழிவு படுத்துகிறது ஆர்.எஸ்.எஸ். கும்பல்.

தனது இந்துராட்டிரப் பெருங்கனவிற்காக, பசு புனிதம் என்று கூறி விவசாயிகளின் வாழ்க்கையைச் சீரழித்து, முட்டை அசைவம் என்று கூறி பள்ளிகளில் மதிய உணவு சாப்பிடும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துக் குறைவை உண்டாக்கி, மாட்டுக்கறிக்குத் தடை எனக் கூறி இந்தியா முழுவதும் ஏழைகளுக்கு குறைவான விலையில் கிடைத்து வந்த சத்தான உணவையும் முடக்கியிருக்கிறது ஆர்.எஸ்.எஸ். – பாஜக கும்பல்.

நமது உணவையும், பாரம்பரியத்தையும் பார்ப்பனியத்தின் கலாச்சாரத்திற்குக் கீழானதாக மதிக்கும் ஆர்.எஸ்.எஸ். கும்பலை அடித்து விரட்டாவிடில், சொந்த நாட்டிலேயே அடிமைகளுக்குரிய மரியாதையோடு தான் நாம் வாழும் நிலை ஏற்படும்.

_________________________________________

இந்த பதிவு பிடித்திருக்கிறதா?