”பாசிசம் முதலில் கைப்பற்றுவது ஊடகங்களை. அதனூடாக உருவாக்கப்படும் பொதுக்கருத்தே மக்களை பாசிச நடவடிக்கையில் ஈடுபடச் செய்யும்”
மதுர…..
மதுரையில….
எதைச் சொல்ல. சொன்னால் தெரிந்து விடுவோ..என்கிற அச்சம்.
மதுர டவுணு சார்.
டவுணேதானா? இல்ல பக்கத்துல கிராமமா? நீங்க கும்புடுற சாமி என்ன சாமி? டவுணல எங்க இருக்கீங்க?
சட்டைக்குள் நெளியும் பூணூல் என்னையும் சேர்த்து வளைக்கிறது நான் நெளிகிறேன் கூச்சமாக இருக்கிறது. ஒருவர் சாதியை இன்னொருவர் கேட்பது அநாகரிகம் என்பதனால் கூச்சம் ஏற்படுவதுண்டு. என் உண்மையான சாதி உனக்குத் தெரிந்தால் இந்த உறவு இத்தோடு முறிந்து விடும் என்ற அச்சத்தினால் ஏற்படும் கூச்சமே நடப்பில் அதிகம்.
………………………
சட்டக் கல்லூரிக்காக ஊடகங்களில் எழுதுகிற, பேசுகிற ஒவ்வொருவனின் சாதியையும் தெரிந்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் நாம் நிற்கிறோம். நட்பு முறிந்தாலும் பரவாயில்லை “தலித்துக்களின் காட்டுமிராண்டித்தனம்” பற்றி பேசுகிறவனின் யோக்கியதையை அம்பலப்படுத்துவதற்கு ‘அவர்களின்’ன சாதியை தெரிந்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இந்தக் கட்டாயம் கூட சாதி வெறியர்கள் எங்கள் மீது திணித்ததுதான்.
கடந்த 12 -ஆம் தேதி சட்டக் கல்லூரியில் நிகழ்ந்த ‘தாக்குதலின் இரண்டாவது பாகத்தை’ மட்டும் ஒளிபரப்பிய, எழுதிய தமிழக ஊடகங்கள் பொதுப் புத்தியில் தலித்துக்கள் பற்றி உருவாக்கி வைத்திருக்கும் எண்ண ஓட்டங்கள்தான் தலித் விரோத அரசு வன்முறையாக மாறி போலீஸ் ஒட்டுக்குமுறையாக பரிணாமம் பெற்றிருக்கிறது. இச்சூழலில் ஊடகங்களில் சாதி குறித்து எப்படி பேசாமல் இருக்க முடியும்?
ஒருவனை பத்து பேர் சேர்ந்து புரட்டி எடுப்பதையும்.அதை வேடிக்கை பார்த்த போலீசையும் நோக்கி இன்று வீசப்படும் கேள்விகள், இதுவரை தமிழக ஊடகங்களால் கேட்கப்படாதவை. இதுவரை தலித் மக்கள் தாக்கப்பட்ட எல்லா இடங்களிலும் வேடிக்கை மட்டுமே பார்த்தது போலீஸ். சில இடங்களில் சாதி வெறியர்கள் செய்ய வேண்டிய வேலையை போலீசே செய்தது. அடிப்பவன் ஆதிக்க சாதிக்காரனாகவும் அடிபடுபவன் தாழ்த்தப்பட்டவனாகவும் இருந்த எல்லா தாக்குதல்களிலும் போலிஸ் வேடிக்கை மட்டுமே பார்த்தது. வெண்மணியில் தொடங்கி மேலவளவு,கொடியங்குளம்,தாமிரபரணி படுகொலைகள்,உத்தபுரம்,என வரலாற்றின் நீண்ட பக்கங்கள் அனைத்திலும் போலீசு வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தது.
இன்றும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது.
இந்த நீண்ட வன்முறைப் பட்டியலில், சட்டக் கல்லூரியில் மட்டும் ஒரு வித்தியாசம் இது வரை எவன் அடித்தானோ அவன் இங்கே அடிவாங்குகிறான். இது வரை எவன் இங்கே அடிவாங்கினானோ அவன் அடிக்கிறான்.
சரி, ஆதிக்க சாதிக்காரன் அடிவாங்கும் போது போலீஸ் ஏன் கைகட்டி வேடிக்கை பார்க்க வேண்டும்?
நண்பர்களே, உண்மையில் போலீசும் சரி ஊடகங்களும் சரி பொது மக்களும் சரி முதலில் என்ன நினைத்தார்கள் என்றால் “வழக்கம் போல தலித் அடிவாங்குகிறான் ஆதிக்க சாதிக்காரன் அடிக்கிறான்” என்றுதான் நினைத்தார்கள்.அதனால்தான் நீண்ட நேரம் லத்தியைச் சுருட்டி கமுக்கட்டுக்குள்ளாற வெச்சிக்கிட்டிருந்தது போலீஸ். ஊடகங்களும் முதலில் குழம்பித்தான் போயின. அடிவாங்கியவர்கள் பற்றி சரியான தகவல் இல்லாத சூழலில், நடப்பது சாதிக்கலவரம் என்பதை மட்டும் தெரிந்து கொண்டு அடித்ததும் அடிவாங்கியதும் எந்த சாதிக்காரன் என்று தெரியாத சூழலில் பிரபல ஊடகவியலாளர்கள் முக்கிய பிரமுகர்களுக்கு போன் செய்து.” சார் தேவர் சாதி பசங்க ரெண்டு தலித் பசங்கள போட்டு அடிச்சிட்டாங்களாமே சார். பொழைக்கிறதே கஷ்டமாமே?” என்று கேள்வியாக கேட்டு பதிலை தெரிந்திருக்கிறார்கள்.
தமிழ் சினிமாவுக்கு கொஞ்சமும் குறைவில்லாத வகையில், அவசர அவசரமாக கிடைத்த வன்முறைக் காட்சிகளை வைத்து ‘சட்டக் கல்லூரியில் வன்முறை’ என்றுதான் முதலில் ஆரம்பித்தது சன் டிவியும் ஜெயா டிவியும். கிடைத்த க்ளிப்பிங்ஸை வைத்து அரசுக்கு நெருக்கடியை உருவாக்கும் நோக்கம் மட்டுமே அப்போது அவர்களுக்கு. அரை மணிநேரத்திற்கு அப்பறம்தான் தெரிந்தது – இங்கே அடிவாங்கியது நம்பியார் அல்ல எம்.ஜி.ஆர் என்று. ரத்தம் சொட்ட சொட்ட எம்.ஜி.ஆர் விழுந்து கிடந்ததை பொதுப்புத்தியால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
இடைவேளை. இதற்குப் பின் வன்முறைகளைப் பற்றி எழுதிய பத்திரிகைகள் இதன் மூன்றாவது பாகத்தை துவங்கி வைத்தன. அது ஒட்டு மொத்தமாக தலித் சமூகத்தையே அச்சுறுத்தும் அளவுக்கு பிரச்சாரம் செய்து, பொது நீரோட்டத்திலிருந்து அவர்களை அப்புறம் படுத்தும் படியான பிரச்சாரம்.
”கொடூரமான காட்டுமிராண்டிகள்”
”இவங்கெல்லாம் ஜட்ஜ் ஆனா என்ன நடக்கும்”
”சட்டம் படிச்சு இவங்க என்ன செய்யப் போறாங்க ”
‘இவங்க தங்கியிருக்கிற ஹாஸ்டல்ல இருந்து அடிச்சு துரத்தணும்”
இம்மாதிரியான தலித் விரோத வசவுகளை தொடந்து பரப்பி வந்தன ஊடகங்கள். இன்று வரை இந்த பிரச்சாரம் ஓய்ந்த பாடில்லை.
இந்தப் பிரச்சாரங்கள் இவளவு கொடூரமாக அப்பட்டமான சாதி வெறியாக இதற்கு முன்னரும் தமிழக அச்சு, காட்சி ஊடகங்களால் தொடர்ந்து செய்யப்பட்டு வந்தாலும், “இந்த அளவுக்கு மோசமாக இதற்கு முன் இருந்ததே இல்லை” என்று சிலர் சொல்கிறார்கள்.
சரி விஷயத்துக்கு வருவோம்,
உண்மையில் தலித் விரோத ஊடக பிரச்சாரத்திற்கு என்ன காரணம்? காட்சி,அச்சு ஊடகங்கள் என அனைத்திலும் நூற்றுக்கு நூறு சதம் இருப்பது ஆதிக்க சாதி ஆட்கள்தான்.சாதி இந்து வெறியின் வன்மம்தான் தலித் விரோத போக்காக ஊடகங்களில் வளர்ந்திருக்கிறது. அனைத்து ஊடகங்களுமே இவ்விதமான விஷத் தனமான பிரச்சாரத்தில் ஈடு பட்டிருந்த சூழ்நிலையில், முற்போக்கு முகமூடியைக் கொண்ட ஆனந்த விகடனின் 26-11-08 இதழில் ”சட்டம் சதி சாதி” என்ற தலைப்பில் சட்டக் கல்லூரி நிகழ்வு பற்றிய கட்டுரை ஒன்றை வெளியிட்டிருக்கிறது.
எல்லா ஊடகங்களுமே ஆதிக்க சாதிக் கருத்தியல்களை வாந்தியெடுத்துக் கொண்டிருப்பவைதான். “நாம் ஆனந்த விகடனை மட்டும் எடுத்து குறை கூறுவது ஏன்?” என நண்பர்கள் சிலர் கேட்கக் கூடும். ஆனந்த விகடனுக்கும் குமுதத்திற்கும் என்ன வித்தியாசம்? என்றால் இது முற்போக்கு அது பிற்போக்கு என்பார்கள் (முன்னால போறது முற்போக்கு பின்னால போறது பிற்போக்கு) அதில் ஆனந்த விகடன் முற்போக்கு நாளிதழ் என இன்னும் நம்பிக்கொண்டிருக்கும் ஏமாளி வாசகர்களுக்காக மட்டுமே நாம் ஆனந்த விகடனை அம்பலப்படுத்தியிருக்கிறோம்.
சங்கர்ராமன் கொலை வழக்கில் சிக்கிக் கொண்ட ஜெயேந்திரனுக்காக வரிந்து கட்டிய ஆனந்த விகடனின் பூணூலை நாமெல்லாம் அறிந்திருக்கிறோம். ஆனால் அதே பார்ப்பனத் திமிரை கையிலெடுத்து தலித்துக்களை செருப்பால் அடிக்கிற ஆனந்த விகடனை பார்க்க வேண்டும் என ஆசைப்படுகிறவர்கள் 26-11-08 தேதியிட்ட ஆனந்த விகடனைப் பார்க்கவும்.
”சட்டம்….சதி…சாதி” என்கிற தலைப்பில் சட்டக் கல்லூரி கலவரத்தையொட்டி எழுதப்பட்டிருக்கும் கட்டுரை இப்படி துவங்குகிறது…
”அதிகாரத்துடன் அதட்டித் தடுக்க வேண்டியவர்கள் ஒதுங்கி நிற்க, பட்டப்பகலில், தலைநகரத்தில், உயர் நீதிமன்றத்தின் அடுத்த கட்டடத்தில் அரங்கேறி முடிந்தது அந்த அட்டூழியம்!
உருட்டிப் புரட்டியதில் உணர்ச்சியற்றுக்கிடக்கும் ஓர் இளைஞனை இன்னமும் ஆத்திரம் தீராமல் அடித்து எலும்புகளைச் சில்லு சில்லாக்குகிறது அடாவடிக் கும்பல். அருகில் நிற்கும் மாணவர் கூட்டம் உற்சாகப்படுத்துகிறது. வளாகத்துக்குள் என்ன நடந்தாலும், பொறுப்பேற்க வேண்டிய கல்லூரி முதல்வரோ, தன் அறைக் கதவைப் பூட்டிக்கொள்கிறார். கொடுமையிலும் கொடுமையாக, போலீஸ்காரர்களோ வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்.”(ஆனந்த விகடன் 26-11 –08)
வார்த்தைகளை உருட்டி வசன மெருகேற்றி இப்படி துவங்குகிற அந்தக் கட்டுரை கிலோ கணக்கில் மலத்தை எடுத்து தலித்துக்களின் வாயில் திணிக்கிற வக்கிரத்துடன் துவங்குகிறது.ஒரு வேளை வழக்கம் போல அடிவாங்கியது தலித்தாக இருந்திருந்தால் வழக்கம் போலீஸ் வேடிக்கை பார்த்திருந்தால் அது கொடுமையிலும் கொடுமையாக ஆனந்தவிகடனுக்கு தெரிந்திருக்காது.காட்சி மாறியதுதான் இந்தக் கொதிப்புகளுக்குக் காரணம்.
அந்தக் கட்டுரையின் அடுத்தடுத்த வரிகளைப் படியுங்கள்..
“மாணவர்கள், அதிகாரிகள், ஆட்சியாளர்கள் அனைவரின் முகத்திரைகளையும் கிழித்துக் கடாசியிருக்கிறது ஒரே ஒரு வெறிச்செயல்!”
”இப்படி நடுரோட்டுல நாயா அடிபடுறதுக்கா புள்ளையைப் பெத்து தங்கமா வளர்த்து பட்டணத்துக்குப் படிக்க அனுப்புனேன். யய்யா, பட்டணத்து மவராசனுங்களா, கண்ணு முன்னாடி ஒருத்தனை உசுர் போக அடிக்கிறப்போ, ‘என்ன ஏது?’ன்னுகூடக் கேக்க மாட்டீங்களா? மனுசனாயா நீங்க?” – சுளீரெனக் கேள்வி கேட்கிறார் ஆறுமுகத்தின் தாயார். கட்டை, கம்பி, மண்வெட்டி கொண்டு கால்கள் இரண்டும் உடைக்கப்பட்ட பிறகும் மரக் கிளையைப் பற்றி எழுந்து, தப்பித்து ஓடத் தடுமாறினானே அவன்தான்… ஆறுமுகம். மூன்றாவது அடியிலேயே நினைவிழந்து, நிலைகுலைந்து சாவைத் தொட்டு நிற்பவனை விடாமல் மொத்தி எடுக்க, வெறும் சதைப் பிண்டமாகக் குப்புறப் படுத்திருந்த இளைஞன்… பாரதி கண்ணன்.”
படித்ததுமே பற்றிக் கொண்டு பாரதிகண்ணன் மீது பரிதாபம் வருகிற மாதிரியான இந்த வார்த்தை உருட்டல்களில் ‘கத்தியோடு பாய்ந்து வந்த பாரதி கண்ணன்’
குறித்து ஒப்புக்கான ஒரு வரி கூட இல்லை.ஆனால் அடுத்தடுத்து வருகிற வார்த்தைகளும் வரிகளும் பார்ப்பன ஆர்.எஸ்.எஸ் சின் அதிகாரபூர்வ ஏட்டுக்கு குறையாத விஷ வரிகள்.பாரதிகண்ணன் மேல் பரிதாபத்தை வரவழைக்கும் ஆனந்த விகடன் பாரதி கண்ணனால் காது அறுக்கப்பட்ட சித்திரைச் செல்வனின் பதில் தாக்குதலை பயங்கர பழிவாங்கல் வன்முறையாக சித்தரிக்கிறது.
“சட்டக் கல்லூரி மாணவர்களிடையே அனலைக் கிளப்பியதில் இவர்கள் இருவருக்கும் பங்கு உண்டு என்றாலும், அதற்கான தண்டனையை அளிக்கும் அதிகாரத்தை மாணவர்கள் கையில் யார் கொடுத்தது? ‘எவன் பார்த்தால் என்ன? நாங்கள் மாணவர்கள், அதுவும் சட்டக் கல்லூரி மாணவர்கள். எங்களுக்கு எந்தச் சட்டமும் இல்லை!’ என்ற மமதையைத்தான் வெளிப்படுத்தியது அந்த ஒவ்வொரு அடியும்!”
“சமீபத்தில் முடிந்த தேவர் ஜெயந்திதான் இதற்கான பிள்ளையார் சுழி. ஒரு தரப்பு மாணவர்கள் அடித்த போஸ்டரில், ‘டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி’ என்ற கல்லூரியின் பெயரில், டாக்டர் அம்பேத்கர் பெயர் மிஸ்ஸிங். ‘ஏன் இப்படிச் செய்தீர்கள்?’ என்று மற்றொரு தரப்பு கேள்வி கேட்க, கேட்டவர்களுக்கு அடி விழுந்தது. பாலநாதன், ஜெகதீஸ் ஆகிய இருவருக்கும் பலத்த அடி…”
அந்த பலத்த அடியை வழங்கிய மாணவர்கள் யார்? அவர்கள் மீது ஏன் வழக்கு போடப்படவில்லை? இந்தக் கேள்விகளை ஆ.வி எழுப்பவில்லை. ‘இந்த’ ஸ்டோரிக்கு ‘அந்த கதை’ தேவையில்லை!
…. “பழி வாங்கக் குறிக்கப்பட்ட நாள்தான் நவம்பர், 12. பொதுவாக, நவம்பர் மாதம் சட்டக் கல்லூரிகளில் அரியர்ஸ் தேர்வுகள் நடக்கும். கொஞ்சம் சேட்டைகளைக் குறைத்துவிட்டு படிக்கத் துவங்குவார்கள். தேர்வு நேரமென்பதால், கூட்டம் குறைவாக இருக்கும். தேவை யானவர்களைப் பொளந்து கட்டிவிடலாம் என்பது பிளான். கத்தி, உருட்டுக்கட்டைகள், இரும்பு ராடுகள், கூர்மையான கற்கள், மண்வெட்டி போன்ற ‘பொருள்கள்’ விடைத் தாள், வினாத்தாள்களுக்கு முன்னரே வந்து இறங்கிவிட்டனவாம்.” (ஆனந்த விகடன் 26-11 –08)
கத்தியோடு பாய்ந்த பாரதி கண்ணனின் சாதிவெறியை மறைத்த ஆனந்த விகடன், அனலைக் கிளப்பிய பாரதிக்கண்னுக்கும் ஆறுமுகத்துக்கும் தண்டனை வழங்கும் அதிகாரம் யார் கொடுத்தது என கேள்வி எழுப்புகிறது. ஏண்டா, உங்க சட்டபடிதானே ஒரு தலித் மேலவளவில் பஞ்சாயத்து தலைவராக வந்தார். ஆனால் வந்தவர் தலித்துங்கறதாலதானே சட்டத்தை நீங்களே கையெலெடுத்து வெட்டிக் கொன்னீங்க?
“என்ன தோழர் நீங்க, ஏதோ மேலவளவு முருகேசனை ஆனந்த விகடன் ஆட்கள் கொன்னுட்ட மாதிரி நீங்க என்று ஆனந்த விகடனை கைகாட்டுறீங்களே?” என்று உங்களுக்கு கேள்வி வருகிறதா? அதற்கும் பதில் இருக்கிறது.
மிகவும் ஒரு தலைபட்சமாக தலித் மாணவர்களையும் ஆம்ஸ்ட்ராங்கையும் குற்றம் சாட்டும் கட்டுரையின் எந்த இடத்திலும் கள்ளரின மாணவர்களை அடியாட்களாக உருவாக்கும் ஸ்ரீதர் வாண்டையார் பற்றி எந்தக் குறிப்பும் இல்லை.
அடுத்து கட்டுரை வரவேண்டிய இடத்துக்கு வருகிறது. அது பெரும்பாலான தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு இன்றும் உறைவிடமாக இருக்கின்ற, ஹாஸ்டல்கள் என்ற பெயரிலான திறந்தவெளிக் கழிப்பிடங்கள்தான். கள்ளர் சாதி வெறியர்களின் பிரதானமான இரண்டு கோரிக்கைகளில் ஒன்று – ‘ஹாஸ்டல்களை மூட வேண்டும்’ என்பது.
ஆதிதிராவிட நலத்துறையால் நடத்தபப்டும் ஹாஸ்டல்களை ‘அனைவருக்கும் பொதுவான ஹாஸ்டல்’ என கரடி விடும் ஆனந்த விகடன், “பொது ஹாஸ்டலை தலித்துக்கள் ஆக்ரமித்துக் கொண்டார்களாம்” என்று திரி கொளுத்துகிறது. தாங்கள் வாழும் சேரிகளை விடக் கேவலமாக இருக்கும் ஹாஸ்டலுக்குள் உணவு கழிப்பறை வசதி கேட்டும் போராடும் மாணவர்களின் குரலை இப்படிப் பதிவு செய்கிறது ஆனந்தவிக்டன். “அப்பளம் போடவில்லை, ஆப்பம் வேகவில்லை!” என்று தொடங்கி, நித்தமும் அடிப்படை வசதிகள் கேட்டு போராட்டம்தான்!
”மோதல்கள் வெடிக்கின்றன என்றால், அதற்கான காரணங்களை ஆராய்ந்து களைய வேண்டும். அதை விட்டுவிட்டு, சட்டக் கல்லூரியையே மூட வேண்டும் என்று சொல்வது என்ன நியாயம்? நிச்சயமாக இந்த வன்முறை கண்டிக்கத்தக்கது என்பதில் சந்தேகம் இல்லை. ஒடுக்கப்பட்ட மக்களுக்கான தலைவர்கள் இந்த மாணவர்களை அரசியல்மயப்படுத்த முன்வர வேண்டும். வெறுமனே வன்முறையைக் கற்றுக்கொடுக்காமல், சமூகப் பிரச்னைகளின் அடிப்படைகளையும் கற்றுத்தர முன்வர வேண்டும்” என்கிறார் வழக்கறிஞர் அஜிதா. (ஆனந்த விகடன் &26&11&08)
மோதலுக்கான காரணங்களை கண்டெடுத்து தீர்க்க வேண்டும் என்று சொல்கிற அஜிதா அம்பேத்கர் சட்டக் கல்லூரியும் இந்த சாதி இந்து சாக்கடைக்குள் தான் இருக்கிறது என்கிற உண்மையை பேச மறுத்து விட்டதன் பின்னணி என்ன? குறைந்த பட்சம் தாக்குதலுக்கான காரணங்களைக் கூட கேள்வி கேடகத் தோன்றாதது ஏன் என்றும் நமக்கும் கேட்கத் தோன்றுகிறது.
அடுத்து நம்ம கம்யூனிஸ்ட் கனகராஜாவது உண்மையைப் பேசுவாருண்ணு பார்த்தா…
”பொதுமக்களில் பல தரப்பினரும் இயக்கங்களும் ஜனநாயகரீதியாகப் போராடும்போது, இதே போலீஸ் எந்தப் புகாரும் இல்லாமல் தடியடி தொடங்கி துப்பாக்கிச்சூடு வரை நடத்துவதில்லையா? கல்லூரி வளாகத்துக்குள் நுழைய முதல்வரின் அனுமதி வேண்டுமென்றால், வளாகத்துக்கு வெளியே மோதலில் ஈடுபட்ட மாணவர்களைத் தடுத்திருக்கலாமே. இந்த மாதிரியான காரணங்கள் சிறுபிள்ளைத்தனமானது” என்கிறார் இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் கனகராஜ்.(ஆனந்த விகடன் 26&11&08)
எப்பா, எவ்ளோ பெரிய உண்மையைச் சொல்லிட்டாரு பாருங்க. கள்ளனும், தலித்தும் ஒண்ணாச் சேந்து விலைவாசிக்கு எதிரா போராடினாதான் போலீஸ் உதைக்கும். அதுவே தலித்தை கள்ளர் தாக்கினால் போலீஸ் அடிக்காது குண்டாந்தடியைக் கொடுத்து அடிக்கச் சொல்லும். சட்டக் கல்லூரியில் ஏமாந்தது ஆதிக்க சாதிக்காரங்க மட்டுமல்ல.சாதி இந்துப் போலீசும்தான்.அதானலதான் ஒரு கள்ளர் சமூக இளைஞன் அடிவாங்கினதும் உங்களுக்கெல்லாம் உதறுது.இத்தனை காலமும் தலித் அடிவாங்கும் போதெல்லாம் மௌனமாக இருந்த போலீசைப் பார்த்து கேள்வி கேட்காத இவர்கள் இப்போது கேட்கிறார்கள்.
அடுத்து வந்தார் நம்ம கொம்யூனிஸ்டு நல்லக்கண்ணு…
”ஏற்கெனவே சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல்களை விசாரிக்க போடப்பட்ட கார்த்திகேயன் கமிஷன், பக்தவச்சலம் கமிஷன் ஆகியவை ‘பிரச்னைக்குரிய சூழலில் காவல் துறை, கல்லூரி முதல்வரின் அனுமதி இல்லாமலே கல்லூரிக்குள் நுழையலாம்’ என்று சொல்லியிருக்கிறது. எனவே, காவல் துறையின் வாதங்கள் எந்தவிதத்திலும் ஏற்புடையதல்ல. மேலும், இப்படி மாணவர்கள் இரு தரப்பினர் மோதலில் ஈடுபடுவதை போலீஸ் கைகட்டி வேடிக்கை பார்ப்பதைப் பொதுமக்களும் பார்த்தனர். இந்த போலீஸ், நாளை பொதுமக்களை எப்படிப் பாதுகாக்கப் போகிறது என்கிற நியாயமான அச்சம் தமிழக மக்களுக்கு ஏற்பட்டிருக்கிறது” என்கிறார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு.(ஆனந்தவிகடன் 26&11&08)
அதாவது அடிபட்ட கள்ளரைப் பாதுகாக்காத போலீஸ் எப்படி ஏனைய சாதி இந்துக்களை பாதுகாக்கப் போகிறது என்று கேட்டிருக்கிறார், இந்த மூத்த கொம்யூனிஸ்ட் தலைவர். அஜிதாவோ,கனகராஜோ,நல்லகண்ணுவோ யாருமே கள்ளர் சாதி வெறியைப் பற்றிப் பேசவில்லை. குறைந்த பட்சம் ஜனநாயக ரீதியில் எழுப்பியாக வேண்டிய கேள்விகளைக் கூட எழுப்பவில்லை. என்பதோடு ஆதிக்க சாதி தடித்தனத்துக்கு ஒத்து ஊதியிருக்கிறார்கள்.
கட்டுரைக்கு தோதாக பாரதிகண்ணன் அடிவாங்குகிற மூன்று படங்களை வெளியிட்டிருக்கிறது ஆனந்த விகடன் அதன் லேஅவுட் கூட மிக தந்திரமாக உசுப்பேற்றும் வகையில் உள்ளது.ஒரு படத்தில் காது அறுந்து தொங்குகிற சித்திரைச் செல்வன் பாரதிக்கண்ணனை அடிப்பதை போட்ட லேஅவுட் ஆர்ட்டிஸ்ட் பாரதிகண்ணன் கத்தியோடு கொலைவெறியோடு ஓடிவரும் படத்தை மட்டும் போடவில்லை.
அப்படி ஓடி வந்து சித்திரைச் செல்வனின் காதையும் கழுத்தையும் அறுத்த பிறகுதான் சித்திரைச் செல்வன் கொல்லப்படுவார் என்ற சூழலில் தலித் மாணவர்கள் சேர்ந்து பாரதிகண்ணனை புடைத்து எடுத்தார்கள்.இந்த உண்மைகளை உண்மை கண்டறியும் குழுவின் அறிக்கை வெளிக் கொண்டு வந்திருக்கிறது.
பத்திரிகைத் தொழிலில் மூன்று வகையான ஜர்னலிசம் உள்ளதாக அடிக்கடி பீற்றிக் கொள்வோர் உண்டு.ஒன்று ”ரியல் ஜர்னலிசம்”. இன்னொன்று ”கவர் ஜர்னலிசம்”. மூன்றாவது ”டெஸ்க் ஜர்னலிசம்”
இதில் ரியல் ஜர்னலிஸ்ட் உண்மைக்காக எழுதுவான்.ஆனந்த விகடன் சட்டக் கல்லூரி பிரச்சனை பற்றி எழுதிய மாதிரி.
கவர் ஜர்னலிஸ்ட் கவர் கொடுக்கிறவனை புகழ்ந்து எழுதுவான் வாராவாரம் ஆனந்த விகடன் விஜயாகாந்தை சொறிகிற மாதிரி. இப்படி சொறிவதுதான் கவர் ஜர்னலிசம்.
மூன்றாவது வருகிற டெஸ்க் ஜர்னலிசம் எந்நேரமும் வாந்திதான். இந்த வாந்தி எடுக்கிற பேர்வழிகள் அரைகுறையாக இன்டர்நெட்டை திறந்து எதையாவது படித்து விட்டு அப்படியே உவ்வே… பண்ணி வைப்பார்கள்.
இதை எழுதும் போது விகடன் பாணி ஜோக் ஒன்றுதான் நினைவுக்கு வருகிறது…
ஒருவன்: ”விக்டன் ஏன் உப்பு சப்பில்லாம இருக்கு”
விகடன் ஓனர்: ” நீ ஏண்டா அதை நக்கிப் பாக்கிறே?”.
இந்த நக்கலுக்கும் வாந்திக்கும் இடையில் ஆனந்த தாண்டவம் ஆடுவதுதான் விகடனின் பவர் ஜர்னலிசம்.
இதே பிரச்சனை குறித்து ஜுனியர் விகடனும் கடந்த இருவாரங்களாக கட்டுரை வெளியிட்டபடி இருக்கிறது. முதல்வாரத்தில் வெறித்தனமான கட்டுரையை வெளியிட்ட ஜூவி, இந்த வாரம் ‘தனது நடு நிலையை நிலைநாட்டுவதற்காக’ ரஜினிகாந்த் என்கிற வழக்கறிஞரின் நேர்காணலை வெளியிட்டது அதில் தேவர் ஜாதி அரசியல் சட்டக் கல்லூரிக்குள் வளர்ந்த கதை, பாரதிகண்ணனின் வன்முறை வரலாறு, முக்குலத்தோர் பேரவை சட்டக் கல்லூரிக்குள் துவங்கப்பட்டமை என பல விஷயங்களையும் வெளிப்படுத்தியிருந்தார்.
ஆனால் அந்தக் கட்டுரையின் முடிவில் ரஜினிகாந்த் தலித் சமூகத்தை சார்ந்தவர் என்று போகிற போக்கில் போட்டு விட்டுப் போகிறது. அதாவது ‘தலித் சமூகத்தைச் சார்ந்த வழக்கறிஞர் இப்படித்தான் பேசுவார் அதனால் கண்டு கொள்ளாதீர்கள்’ என்று சொல்லாமல் சொல்லியிருந்தது.
ஆனால் இதே ஜுவி அதற்கு முந்தைய வாரம் எழுதிய சட்டக் கல்லூரி கட்டுரையில் ராஜாசெந்தூர்பாண்டி என்ற ஒரு வழக்கறிஞரிடம் பேட்டி எடுத்திருந்தது. அவரும் வெறுப்பில் தலித் விரோத விஷத்தைக் கக்கியிருந்தார். ஆனால் அவர் எந்த சாதி என்று போட வில்லை.
எப்பா ரியல் ஜர்னலிஸ்டுகளே. ரஜினிகாந்தை ஒரு தலித் வழக்கறிஞர் என்று போடத் தெரிந்த உங்களுக்கு ராஜாசெந்தூர்பாண்டியை நாடார் என்று போடத் தெரியாதா….குறைந்த பட்சம் சாதி இந்து என்றாவது போட்டிருக்காலமே…
சரி அதெல்லாம் கிடக்கட்டும்..
தமிழ மக்களின் மனசாட்சி என்று சொல்லப்படும் ஆனந்த விகடன் வார இதழில் எப்படி ஒரு குறிப்பிட்ட சாதிக்கு ஆதரவான இவளவு மோசமான கட்டுரைகள் வெளிவரும் என்று ஆராய்ந்தால்.தோழர்களே….
விசாரித்த பின் தான் தெரிந்தது.ஆனந்த விகடனில் தலைமை இணை ஆசிரியரில் தொடங்கி முக்கிய பொறுப்புகளில் இருக்கும் பெரும்பாலானவர்கள் அனைவரும் தேவரினத்தைச் சேர்ந்தவர்கள் என்று.
குறிப்பிட்ட ஒரு சாதி ஒரு ஊடகத்தை ஆக்ரமிப்பது என்பதை மிகவும் நுட்பமான விஷயம். இந்த ஆதிக்க சாதி ஆக்ரமிப்பை மறைக்கத்தான் ஆனந்த விகடன் முற்போக்கு முகமூடி போட்டிருக்கிறது.அது அம்பேத்கர் பற்றியும் எழுதும் அம்பேத்கரின் மக்களை காட்டிக் கொடுக்கவும் செய்யும்.
ஜுனியர்விகடனில் உள்ள அனைத்து ஆதிக்க சாதிக் கூட்டு உணர்வுதான் வழக்கறிஞர் ரஜினிகாந்தை தலித் என்று அடிக்குறிப்போடு கட்டுரையை வெளியிடத்தூண்டுகிறது. ராஜாசெந்தூர்பாண்டி என்னும் நாடார் இன வழக்கறிஞரின் ஜாதியைக் குறிப்பிடாமல் அவரைப் பொதுவாக வைப்பதும் அதே சாதி இந்து உண்ர்வுதான்.
அது போல ஆனந்த விகடனைக் கைப்பற்றியிருக்கும் தேவர் சாதி உணர்வுதான் சட்டக் கல்லூரி நிகழ்வில் தலித்துக்கள் மேல் இவ்வளவு வன்மத்தைப் பாய்ச்சுகிறது.
இது தொடர்பாக விசாரித்த போது. கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்ந்து ஆனந்த விகடனில் இருந்து தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கட்டம் கட்டப்பட்டு ஓரம் கட்டப்பட்டு வந்தது தெரிகிறது. ஒரு தலித் பத்திரிகையாளர் தன் ப்ளாக்கில் தன் கிராமத்தின் மீது படர்ந்துள்ள சாதி வெறி பற்றி ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்.அந்தக் கட்டுரை ஆனந்தவிகடனுக்குள் கடும் சர்ச்சைகளை உருவாக்க அன்றிலிருந்து கட்டம் கட்டப்பட்ட அவர் கடைசியில் ராஜிநாமா செய்ய நிர்பந்திக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார்.
உத்தபுரத்தில் கொடிக்கால் பிள்ளைமார் தலித் மக்களை தனித்துப் பிரித்துக் கட்டிய சுவரின் ஒரு பகுதி இடிக்கப்பட்டதை ஒட்டி எழுந்த பதட்டத்தின் போது அனைத்து ஆதிக்க சாதிகளும் பிள்ளைமாரை ஆதரிக்க, அதைத் தொடர்ந்து எழுந்த விவகாரங்கள் பற்றி அனைத்து பத்திரிகைகளுமே செய்திகளைப் பதிவு செய்திருந்தன.
அதே செய்தியை மதுரையில் இருந்து ஒரு விகடன் நிருபர் ரிப்போர்ட் பண்ணியிருக்கிறார். ஆனால் அந்தச் செய்தி ஒரு தலைப்பட்சமாக இருக்கிறது என்று கூறி இந்த தேவர் சாதிக் கும்பல் அதனை ஒரு துண்டுச் செய்தியாகக் கூட வெளியிடவில்லை என்ற குமுறல் அப்போதே அங்குள்ள நிருபர்கள் சிலரிடம் எழுந்ததாம்.
மீண்டும் சொல்கிறோம். சட்டக் கல்லூரி விவாகரத்தில் மிக மிக ஒருதலைப்பட்சமான கட்டுரையை ஆனந்த விகடன் வெளியிட்டிருப்பதோடு, ‘முக்குலத்தோர் பேரவை’க்காக அடியாள் வேலை பார்த்திருக்கிறது. மற்றெல்லா ஊடகங்களும் அனைத்து சாதி ஆதிக்க சக்திகளிடம் சிக்கியிருக்கின்றன என்றால், ஆனந்த விகடனை குறிப்பிட்ட ஒரு சாதி கைப்பற்றியிருக்கிறது.
பார்ப்பன-தேவர் சாதிக் கூட்டு ஆனந்த விகடனில் இருந்து கொண்டு பொது மக்களிடம் தலித்துக்கள் பற்றிய பொய்யான சித்திரத்தை ஏற்படுத்த முயல்கிறது என்பதாலேயே இதை நாம் எழுதுகிறோம்.
________________
தொம்பன்
__________________