90களில் பயங்கரவாதத்தினால் பரிதாபமாக்கப்பட்ட காதலர்களைப் படமாக்கிய மணிரத்தினம் 2000ஆம் ஆண்டுகளில் பொருளாதாரத்தை முன்னேற்றிய முதலாளித்துவ நாயகர்களை நாடிச் சென்றிருக்கிறார். காலத்திற்கேற்ற மாற்றம்தான். 2020இல் இந்தியா வல்லரசாகுமெனப் பிதற்றித்திரியும் அரசவைக் கோமாளி அப்துல் கலாம் இளைஞர்களிடம் விற்கப்படும் காலத்தில், இன்போசிஸ் நாராயணமூர்த்தியும், விப்ரோவின் பிரேம்ஜியும் பொன்முட்டையிடும் வாத்துக்கள் எனப் போற்றப்படும் நேரத்தில் இவர்களுக்கு முன்னோடியான அம்பானியை வெள்ளித்திரையில் நினைவு கூர்கிறார் மணிரத்தினம்.
எனினும் குரு திரைப்படத்தில் அவரது வழக்கமான காதல் சங்கதிகள் இல்லை. பணம் சம்பாதித்து முன்னேறவேண்டும் என்று போதிப்பதற்கு காதல் முதலான சென்டிமென்ட் பீடிகைகள் தேவையில்லையே?
இலட்சக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் நாட்டில் நீங்கள் மட்டும் முன்னேறலாம் என்று தூண்டில் போடும் சுயமுன்னேற்ற வெறியைக் கலைக்கு கைமாற்றித் தந்திருக்கிறார் மணிரத்தினம். ஆனாலும் சமூகத்தில் கோலோச்சும் இந்த உணர்ச்சி கலையில் வெற்றி பெறவில்லை.
ஒரு வண்டிச்சக்கரத்தில் காலம் சுழன்று விஜயகாந்தோ, ரஜினிகாந்தோ மாபெரும் முதலாளிகளாவதை இரசித்துச் சலித்திருக்கும் இரசிகர்கள் அதையே இராஜீவ் மேனனின் லிரில் சோப் ஒளிப்பதிவிலும், ரஹ்மானின் கீ போர்டு அலறல் இசையிலும், மென்று முழுங்கும் மணிரத்தினத்தின் வசனத்திலும் லயிப்பதற்குத் தயாரில்லை. படத்தைப் பலரும் பார்த்திருக்க மாட்டீர்கள் என்பதாலும், பார்க்க வேண்டாம் என்பதாலும் கதையைச் சுருக்கமாகத் தருகிறோம்.
குஜராத்தின் கிராமமொன்றில் பள்ளிக்கூட ஆசிரியரின் மகன் குரு (நிஜத்தில் அம்பானி), தந்தையின் விருப்பத்தை மீறி துருக்கி (ஏடன்) நாட்டிற்குச் செல்கிறான். பன்னாட்டு எண்ணெய் நிறுவனத்தில் சாதாரணப் பணியாளாய் வேலை செய்கிறான். ஓய்வு நேரத்தில் மல்லிகா ஷெராவத்தின் முக்கால் நிர்வாண நடனத்தை இரசிக்கிறான். கூடவே மூன்று சீட்டு விளையாட்டில் விடாமல் வெல்கிறான். காரணத்தைக் கேட்டால் கவனம் என்கிறான். அடுத்து சூபர்வைசர் பதவிக்கு உயருகிறான். அவனுக்கு டை கூடக் கட்டத் தெரியவில்லை என்று சுட்டிக் காட்டும் வெள்ளையனது பதவி உயர்வுக் கடிதத்தைக் கடாசிவிட்டு இனிமேல் வெள்ளைக்காரனுக்கு உழைப்பதில்லை எனவும் சொந்தமாகத் தொழில் தொடங்கி வெற்றி பெறுவேன் எனவும் கூறி நாடு திரும்புகிறான்.
வியாபாரத்தில் தோற்றுப் போவாய் என்று எச்சரிக்கும் தந்தையின் சாபத்தைப் புன்னகையால் மறுக்கிறான். வியாபாரத்துக்குத் தேவையான 15000 ரூபாயை வரதட்சிணையாக வாங்குவதற்காக, தன்னைவிட ஒரு வயது அதிகமென்ற போதிலும் நண்பனின் அக்காவை (கோகிலா பென்) திருமணம் செய்து கொள்கிறான். மச்சான் மற்றும் மனைவியுடன் வியாபாரம் செய்ய நெரிசல் மிகுந்த பம்பாய்க்கு இடம் பெயர்கிறான்.
நூல் மார்க்கெட் தரகனாக வணிகம் செய்யத் தொடங்கி மின்னல் வேகத்தில் வளருகிறான். ஜவுளி வியாபாரத்தில் ஆதிக்கம் செலுத்தும் கான்ட்ராக்டர் (பாம்பே டையிங்கின் நுஸ்லி வாடியா) எனும் முதலாளியின் தடைகளை மீறி தனது சக்தி (ரிலையன்ஸ்) நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்துகிறான். இலட்சிய வேட்கை கொண்ட இந்த கிராமத்து இளைஞன் மீது காந்தியவாதியான ஒரு பத்திரிகை அதிபருக்கு (இந்தியன் எக்ஸ்பிரஸ் இராம்நாத் கோயங்கா) அனுதாபம் ஏற்படுகிறது. அதன் பிறகு அவனது தொழில் பிரம்மாண்டமாக வளருகிறது. ஜவுளி தொழிற்சாலை, பாலியஸ்டர் ஆலை, பங்குகள் வெளியீடு, மைதானத்தில் பங்குதாரர் கூட்டம் என்று உச்சத்திற்குப் போகிறான். இடையிடையே மணிரத்தினத்தின் திருப்திக்காக மனைவியைக் கொஞ்சி நடனம் ஆடுகிறான். இரட்டைக் குழந்தைகளைப் பெற்றுக் கொள்கிறான்.
இவனது அசுர வளர்ச்சி குறித்து பத்திரிகை அதிபருக்குச் சந்தேகம் வருகிறது. அவனது முறைகேடுகளை அம்பலப்படுத்தி நிர்வாணப்படுத்தப் போவதாக அவர் எச்சரிக்கிறார். “என்னை நிர்வாணப்படுத்துவதற்கு எல்லோரையும் நிர்வாணப்படுத்த வேண்டும்” என்று பதிலளிக்கிறான் குரு. பத்திரிக்கை அதிபரின் நிருபர் (அருண்ஷோரி) குருவின் வணிக மோசடிகளை அம்பலப்படுத்துகிறார். குருவோ எல்லா பத்திரிக்கைகளுக்கும் விளம்பரத்தைக் கொடுத்து வாயடைக்க முயல்கிறான். இருப்பினும் இதனால் அவனுக்கு தொழிலில் நெருக்கடி ஏற்படுகிறது. அத்துடன் பக்கவாதத்தில் வேறு விழுகிறான். பத்திரிக்கை அதிபர் வருத்தப்படுகிறார். இறுதியில் அரசாங்கம் சக்தி நிறுவனத்தின் மோசடிகளை ஆராய விசாரணைக் கமிஷன் அமைக்கிறது.
“எதுவும் தெரியாத கிராமத்து இளைஞன் தொழில் துவங்க நினைத்தது தவறா, தன்னை முடக்க நினைத்த பரம்பரை முதலாளிகளை வென்று காட்டியது குற்றமா, பல இலட்சம் பங்குதாரர்களின் வாழ்வில் ஒளியேற்றும் வண்ணம் தனது தொழில் சாம்ராச்சியத்தைக் கட்டியமைத்தது முறைகேடா” என்று நீதி விசாரணையில் இறுதிக் காட்சியில் விஜயகாந்த் ஸ்டைலில் பொரிந்து தள்ளுகிறான். இவன் தொழிற்துறையின் தாதாவா அல்லது அறிவுஜீவியா என்று வியக்கும் நீதிபதிகள் அவன் மீதான குற்றச்சாட்டுகளில் பெரும்பாலானவற்றைத் தள்ளுபடி செய்து அபராதம் மட்டும் விதிக்கின்றனர். கடைசிக் காட்சியில் பல்லாயிரம் பங்குதாரர்கள் ஆரவாரம் செய்ய, சக்தி நிறுவனத்தை உலகின் நம்பர் ஒன் நிறுவனமாக மாற்றுவேன் என்று மைதானத்தில் நின்று சூளுரைக்கி றான் நடுத்தர வயதைக் கடந்துவிட்ட குரு. இத்துடன் படம் முடிகிறது.
அம்பானியின் வாழ்க்கையை அட்சரம் பிசகாமல் எடுத்திருக்கும் மணிரத்தினம் இந்தப் படத்தின் மூலம் கூறுவது என்ன? வணிகம் செய்து முன்னேற வேண்டும் என்பதை இரத்தத்தில் வரித்திருக்கும் ஒரு கிராமத்து இளைஞன் ஒரு இலட்சியவாதியைப் போலப் போராடுகிறான். அந்த இலட்சியமே வாழ்க்கை குறித்த அவனது அணுகுமுறை அனைத்தையும் நியாயப்படுத்துகிறது. தடையரண்களாய் வரும் அரசு, சட்டம், ஏனைய முதலாளிகள், அதிகாரவர்க்கம் முதலானவற்றை அவன் தகர்த்துச் செல்கிறான். தொழிற்துறையில் அவன் செய்யும் முறைகேடுகளைக் கூட இப்படித்தான் புரிந்து கொள்ள வேண்டும் என்கிறார் மணிரத்தினம்.
குருவை அம்பலப்படுத்தும் பத்திரிக்கை அதிபரும், நிருபரும் ஏதோ பகவத்கீதையின் கர்மவீரர்களைப் போலத்தான் செயல்படுகிறார்கள். குருவுக்கு எதிரான அவர்களது அறப்போராட்டம் மக்கள் நலன் குறித்த அக்கறையிலிருந்து எழவில்லை. பக்கவாதம் வந்து விழுந்தவுடனே குருவின் மீது அவர்கள் பரிதாபம் கொள்கிறார்கள். “நீ மட்டும் எப்படி ஒரு பெரிய முதலாளியானாய்” என்பது மட்டுமே அவர்களது கேள்வி. இந்தக் கேள்விக்கான விடைதான் இந்தியத் தொழிற்துறையின் முன்னோடி எனப் போற்றப்படும் அம்பானியின் கதை.
1980களில் இந்தியன் எக்ஸ்பிரஸின் ஆசிரியராக இருந்து அம்பானியை அம்பலப்படுத்திய அருண்ஷோரி, 2002இல் அம்பானி மரணமடைந்த போது பின்வருமாறு கூறினார்: “அம்பானி தகர்க்க வேண்டிய சட்டங்களைத்தான் தகர்த்தெறிந்தார். இன்று அந்த சட்டங்களெல்லாம் காலாவதியாகி தாராளமயம் அமலில் உள்ளது. இதற்காக இந்தியத் தொழிற்துறையே அம்பானிக்கு பெரிதும் நன்றிக் கடன் பட்டுள்ளது.” அருண்ஷோரி சுயவிமர்சனம் மட்டும் செய்து கொள்ளவில்லை. பா.ஜ.க. அமைச்சராக இருந்தபோது ஐ.பி.சி.எல். எனப்படும் அரசின் எண்ணெய்க் கம்பெனியை அம்பானியின் ரிலையன்சு நிறுவனத்துக்குச் சொந்தமாக்கி பிராயச்சித்தமும் செய்து கொண்டார்.
அருண்ஷோரி, மணிரத்தினம் மட்டுமல்ல ஆளும் வர்க்கங்களும், ஊடகங்களும் கூட இப்படித்தான் அம்பானியைக் கொண்டாடுகின்றன. சுமார் 35 இலட்சம் பங்குதாரர்கள் அம்பானியால் வசதியுடன் வாழ்கிறார்கள், “அம்பானியைப் போல ஒரு பத்து தொழிலதிபர்கள் இருந்தால் இந்தியா ஒரு பணக்கார நாடாகிவிடும்” என்று சுயமுன்னேற்ற மதத்தின் குருவாகவே அம்பானி சித்தரிக்கப்படுகிறார். இந்த குருவின் உண்மையான கதை என்ன?
தொழில் முனைவோர்களை வளரவிடாமல் நசுக்கிக் கொண்டிருந்த அரசாங்கத்தின் லைசன்ஸ் பெர்மிட் கோட்டா ராச்சியத்தைத் தகர்த்தார், பழம்பெருச்சாளிகளின் கோட்டையாக மோன நிலையில் தேங்கி இருந்த இந்தியத் தொழில்துறையை உடைத்து உள்ளே புகுந்து அதை விறுவிறுப்பானதாக்கினார் என்பதுதான் அம்பானிக்கு மணிரத்தினம் சூட்டும் புகழாரம்.
அன்று நேருவின் சோசலிசம் என்று புகழப்பட்டதும், தற்போது லைசன்ஸ், பெர்மிட், கோட்டா ராச்சியம் என்று இகழப்படுவதுமான அந்த கொள்கை, உண்மையில் தேசிய முதலாளிகளைத் தான் நசுக்கியதேயன்றி, டாடா பிர்லா போன்ற தரகு முதலாளிகளையல்ல. அதிகார வர்க்க முதலாளிகள் மற்றும் தரகு முதலாளிகளின் நலன்களை ஒரே நேரத்தில் பாதுகாக்கும்படி உருவாக்கப்பட்டிருந்த அந்தக் கொள்கையின் ஆதாயங்களை சட்டபூர்வமாகவும் சந்து பொந்துகளில் புகுந்து லஞ்ச ஊழல்களின் மூலமும் அனுபவித்துக் கொண்டே, அவ்வப்போது தம் அதிருப்தியையும் வெளியிட்டுக் கொண்டிருந்தனர் அன்றைய தரகு முதலாளிகள்.
பாரம்பரியத் தரகு முதலாளிகளைவிடத் திறமையாகவும், துணிச்சலாகவும் லஞ்ச ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்டு அரசு எந்திரத்தையும் சட்டங்களையும் தனக்கு ஏற்றபடியெல்லாம் வளைத்து, ஊடகங்களை விலைக்கு வாங்கி குறுகிய காலத்தில் கொள்ளை லாபம் ஈட்டினார் என்பதுதான் அம்பானியின் சாதனை. ரிலையன்சின் வளர்ச்சிக்கேற்ப சட்டங்கள் மாற்றப்பட்டன. ஏற்றுமதி செய்யும் மதிப்புக்கேற்ப இறக்குமதி செய்யலாம் என்ற விதிமுறையின் கீழ் மண்ணையும், மசாலாப் பொருட்களையும், படத்தில் வருவது போல் காலி அட்டைப் பெட்டிகளையும் ஏற்றுமதி செய்து உள்நாட்டில் கிராக்கியாக இருந்த ரேயான், நைலான், பாலியஸ்டர் செயற்கை இழைகளை இறக்குமதி செய்து பல மடங்கு இலாபம் ஈட்டினார். அம்பானியின் சாரத்துக்கு இந்த ஒரு சோறு முழுப்பதமாகும்.
அம்பானியின் ஆலைகளுக்கான இயந்திரங்கள் இறக்குமதி வரி செலுத்தாமல் மோசடி முறையில் கொண்டு வரப்பட்டதை கோயங்கா அம்பலப்படுத்தியதற்குக் காரணம் மணிரத்தினம் சித்தரிப்பது போல சில தனிமனிதர்களுக்கிடையே நடந்த ஈகோ பிரச்சினையோ, கோயங்காவின் அறவுணர்வோ அல்ல. புதிய தரகு முதலாளிகளின் பிரதிநிதியாக வந்த அம்பானியை பழையவர்களின் பிரதிநிதியான நுஸ்லிவாடியா எதிர்த்தார். தரகு முதலாளிகளுக்கிடையான இந்த முரண்பாட்டில் நாட்டு நலனும் இல்லை, ஒரு வெங்காயமும் இல்லை.
அவர்களின் இந்த முரண்பாடு அரசியலிலும் பிரதிபலித்தது. அம்பானியை இந்திராவும் ராஜீவும் காங்கிரசும் ஆதரித்தன; வாடியாவை ஜனதா ஆதரித்தது. 1980 தேர்தலை இவ்விரண்டு முதலாளித்துவப் பிரிவினரும்தான் ஸ்பான்சர் செய்தனர். அந்தத் தேர்தலில் இந்திரா வென்றதற்காக அம்பானி விருந்து வைத்துக் கொண்டாடினார். அதன் பிறகு ரிலையன்சின் மோசடிகள் கொடிகட்டிப் பறந்தன. ராஜீவும், பிரணாப் முகர்ஜியும், முரளி தியோராவும் அம்பானியின் தூதர்களாக அரசாங்கத்தில் செயல்பட்டனர். பல சட்டங்கள் ரிலையன்சின் வளர்ச்சிக்காக இயற்றப்பட்டன, மாற்றப்பட்டன, ஒத்தி வைக்கப்பட்டன. “நாட்டின் ஆண்டு வரவு செலவுத் திட்டம் பாராளுமன்றத்தில் ஒப்புதல் பெறுவதற்கு முன்னர் ரிலையன்சின் அனுமதியைப் பெறும்” என்று ஒரு பழமொழியே டெல்லிப் பத்திரிக்கையாளர்களிடம் உருவாகியிருந்தது. மேல்மட்டத்து அதிகாரவர்க்கத்தின் பணிநியமன உத்தரவுகள் அரசாங்கத்திடமிருந்து வருவதற்குள் ரிலையன்ஸ் அலுவலகத்திலிருந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குச் சென்றன.
வி.பி.சிங் பிரதமரானதும் அம்பானியின் மீது விசாரணைக் கமிஷன் நடந்து பல மோசடிகள் வெளிச்சத்திற்கு வந்தன. அதிலொன்று அமெரிக்காவிற்கு அருகிலிருக்கும் ஒரு தீவிலிருந்து அம்பானியின் பினாமி ஒருவர் முதலீடு செய்து வரிஏய்ப்பு செய்தது. ஃபேர்பாக்ஸ் எனும் அமெரிக்கத் துப்பறியும் நிறுவனம் ரிலையன்சின் அந்நியச் செலாவணி மோசடி குறித்து புலனாய்வு செய்ய நியமிக்கப்பட்டது. ஆயினும் இவற்றினாலெல்லாம் அம்பானியைத் தண்டிக்க முடியவில்லை. ஏனென்றால் இத்தகைய மோசடிகளை எல்லா தரகு முதலாளிகளும்தான் செய்து வந்தனர். அம்பானியோ அதில் பழம் தின்று கொட்டை போட்டார்.
எனவே, ஒரு கட்டத்துக்கு மேல் அம்பானி குறித்த விசாரணை செல்ல முடியவில்லை. கிணறு வெட்ட பூதம் கிளம்பும் என்பதால் மேலோட்டமாகத் தோண்டப்பட்ட கிணறு அவசர அவசரமாக மூடப்பட்டது. அம்பானியின் மீதான விசாரணைகள் நியாயமானவைதான் என்று விசாரிப்பதற்கு உச்சநீதி மன்ற நீதிபதிகள் இருவர் அடங்கிய விசாரணைக் கமிஷனொன்று நியமிக்கப்பட்டது. இந்த நீதிபதிகளும் அம்பானியின் மீதான புலனாய்வு, நாட்டு நலனுக்கும், பாதுகாப்புக்கும் குந்தகம் விளைவிப்பவை என்று தீர்ப்பளித்தனர்.
இரண்டு தரகு முதலாளித்துவக் கும்பல்களிடையேயான மோதல், தரகு முதலாளித்துவ வர்க்கத்தின் ஒட்டு மொத்த நலன் கருதி முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. அதுவே நாட்டுநலன் என்றும் அறிவிக்கப்பட்டு விட்டது. பிறகென்ன, நாட்டுப் பற்றுக்கு புதிய இலக்கணம் கண்ட அம்பானி இதன்பிறகு மாபெரும் ஏகபோக முதலாளியாக எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டார். அம்பானியின் பிரதிநிதிகள் எல்லா ஓட்டுப் பொறுக்கிக் கட்சிகளிலும் இருந்தனர். முலாயம் சிங் யாதவ், அமர்சிங், பிரமோத் மகாஜன், அருண்ஷோரி, பிரணாப் முகர்ஜி, முரளிதியோரா, முரளி மனோகர் ஜோஷி, அருண்ஜெட்லி, சந்திரபாபு நாயுடு, மோடி, கடைசியாக தயாநிதி மாறன் வரை இந்தப் பட்டியலில் பலர் உள்ளனர்.
நூல், ஜவுளி விற்பனையிலிருந்து ஜவுளி ஆலை, பாலியஸ்டரில் ஏகபோக ஆலை, அதன் மூலப்பொருள் ஆலை. அதன் மூலப்பொருளான கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை, தற்போது செல்பேசி சேவை, தகவல் தொழில்நுட்பத் துறை, நிதிக் காப்பீடு நிறுவனங்கள் என ஆக்டோபஸ் போல நாட்டையே கவ்வியிருக்கிறது அம்பானியின் சாம்ராச்சியம். எல்லாவற்றிலும் கால் பதித்திருக்கும் அம்பானி தான் முதலாளியாக உருவெடுத்த பின்னராவது தனது மோசடி முறைகளை மாற்றிக் கொண்டாரா? இல்லை முன்பை விட அதிகமாகவே செய்தார். முன்னர் பல தடையரண்களுடன் செய்ததை இப்போது சுதந்திரமாகச் செய்தார்.
தொழில் வளர்ச்சியைத் தடுக்கும் பத்தாம்பசலிச் சட்டங்கள் என்ற கூட்டை உடைத்துப் பிறந்த இலட்சிய வேட்கை கொண்ட சுதந்திரப் பறவையாக அம்பானியை மணிரத்தினம் சித்தரித்திருப்பது அப்பட்டமான பித்தலாட்டமாகும். முதலாளித்துவத்துக்கு உரிய சுதந்திரம் வழங்கப்பட்டால், அது சட்டபூர்வமான வழிகளிலும், நீதி நியாயத்துக்குக் கட்டுப்பட்டும் தனது சுரண்டலை நடத்தும் என்ற கருத்தே மோசடியானது. அத்தகைய சுதந்திரம் வழங்கப்படாததால்தான் அம்பானி சட்டத்தை மீற நேர்ந்தது என்று இந்தக் கிரிமினலுக்கு வக்காலத்து வாங்கியிருக்கிறார் மணிரத்தினம்.
90களில் தாராளமயக் கொள்கைகள் இந்தியத் தரகு முதலாளிகளுக்கு பூரண சுதந்திரத்தை வழங்கிய பின்னரும் என்ன நடந்தது? வில்போன் சேவைக்கு மட்டும் லைசன்சு பெற்ற ரிலையன்சு செல்போன் சேவையை முறைகேடாக அளித்து பல கோடி ரூபாய் கட்டண மோசடி செய்தது. இது அம்பலமானதும் அம்பானிக்குத் தகுந்தபடி சட்டத்தை மாற்றியது பா.ஜ.க. அரசு. அடுத்து வெளிநாடு அழைப்புக்களை உள்ளூர் அழைப்புக்களாக மாற்றி சுமார் 1300 கோடி ரூபாய் பகற்கொள்ளை அடித்தது ரிலையன்ஸ். தேசத்துரோகம், மோசடி போன்ற கிரிமினல் குற்றங்கள் சாட்டப்பட்டன. சில கோடி ரூபாய் அபராதம் மட்டும் விதித்து வழக்கை முடித்துக் கொண்டது காங்கிரஸ் அரசாங்கம். ரிலையன்சின் நிறுவனங்கள் அனைத்தும் கொள்ளையில் பழுத்த புழுக்கள். இந்தக் கொள்ளையனைத்தான் இந்தியத் தொழில்துறையின் குரு என்கிறார் மணிரத்தினம்.
திரைப்படத்தில் ரிலையன்சின் பங்குதாரர்கள் ஏதோ ஒரு மக்கள் திரள் இயக்கம் போல சித்தரிக்கப்படுகிறார்கள். நட்சத்திர விடுதிகளில் நடந்து கொண்டிருந்த பங்குதாரர்கள் கூட்டத்தை திறந்தவெளி மைதானத்தில் நடத்தியவர், இலட்சக்கணக்கான நடுத்தர வர்க்கத்தினரைப் பங்குச்சந்தையை நோக்கிக் கவர்ந்திழுத்தவர் என்பவை நிஜத்திலும் அம்பானிக்குச் செலுத்தப்படும் புகழாரங்கள்.
இலட்சக்கணக்கான நடுத்தர வர்க்கத்தினரை நாட்டின் தொழில் வளர்ச்சியில் பங்கேற்கச் செய்தவர் அம்பானி என்பது போன்ற தோற்றம் இதன்மூலம் உருவாக்கப்படுகிறது. இலட்சக்கணக்கான சூதாடிகளை அம்பானி உருவாக்கினார் என்பதே உண்மை. பங்குச் சந்தையைப் பற்றிப் புரிந்து கொள்ளாதவரை இந்த உண்மையையும் புரிந்து கொள்ள இயலாது.
பங்குச் சந்தை வர்த்தகம் என்பதற்கும் நாட்டின் உண்மையான பொருளாதாரத்திற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. அதன் இலக்கணமே சூதாட்டம்தான். புளூ சிப் கம்பெனிகள் என்று அழைக்கப்படும் 10, 15 பெரிய நிறுவனங்களின் பங்குகள் வாங்கி விற்கப்படும் மதிப்பை வைத்துத்தான் பங்குச் சந்தையின் குறியீட்டு எண் தீர்மானிக்கப்படுகிறது. நூற்றுக்கணக்கான பிற நிறுவனங்களின் பங்கு வர்த்தகத்தில் பலர் ஏமாறுவார்கள், சிலர் இலாபம் சம்பாதிப்பார்கள். பங்குகளின் முகமதிப்பு 10 ரூபாய் என்றால், அதன் சந்தை மதிப்பு 500 அல்லது 1000 ரூபாயாகக் கூட இருக்கும். இந்த விலை உயர்வை பன்னாட்டு நிதி நிறுவனங்களும், பங்குச் சந்தைத் தரகர்களும் செயற்கையான முறையில் உருவாக்குகின்றனர். பங்குகளுக்கான டிவிடெண்ட் எனப்படும் லாப ஈவுத் தொகை பங்கின் முகமதிப்பை வைத்தே வழங்கப்படுமேயன்றி அதன் சந்தை மதிப்பை வைத்து அல்ல.
இந்நிலையில், சிறுமுதலீட்டாளர் எனப்படும் நடுத்தர வர்க்கத்தினர் ஒரு நிறுவனத்தின் பங்குகளை வாங்கி அதில் கிடைக்கும் வருடாந்திர ஈவுத் தொகையால் ஒரு போதும் இலாபம் சம்பாதிக்க முடியாது. மாறாக, அந்த பங்கின் சந்தை மதிப்பு பலமடங்கு உயரும் போது அவற்றை விற்று இலாபம் சம்பாதிக்க முடியும் என்பதுதான் பங்குச் சந்தையின் கவர்ச்சி. நடுத்தர வர்க்கத்தின் ஒரு பிரிவினருக்குக் கிடைக்கக்கூடிய இந்த இலாபம் என்பது இன்னொரு பிரிவினரின் நட்டம். திரைப்படத்தில் மூன்று மகள்களின் திருமணத்தை ரிலையன்சின் பங்குகளை விற்றுத்தான் நடத்தினேன் என்று கூறி ஒருவர் அம்பானிக்காக உருகுகிறார். தோற்றுப்போன வேறொரு சூதாடியின் 3 மகள்கள் முதிர்கன்னிகளாக மறுகிக் கொண்டிருப்பார்கள் என்பதே இதன் பொருள்.
பங்குகளின் மதிப்பு ஏன் உயர்கிறது, ஏன் சரிகிறது என்று தெரியாமல் நடுத்தர வர்க்கம் தத்தளித்துக் கொண்டிருக்க, இந்த உயர்வையும் சரிவையும் திரைமறைவில் இருந்து ஆட்டிவைக்கும் அம்பானிகளும், பன்னாட்டு நிதி நிறுவனங்களும் ஒவ்வொரு உயர்விலும் ஒவ்வொரு சரிவிலும் கோடிக்கணக்கில் சுருட்டிக் கொள்வார்கள். இந்த நரவேட்டையில் இவர்களோடு சேர்ந்து சில எலும்புகளைக் கடிக்கும் வாய்ப்புப் பெற்ற நபர்கள்தான் “ஐயா உங்கள் அருளால்தான் 3 பெண்களுக்குக் கல்யாணம் செய்தேன்” என்று அம்பானியிடம் உருகுவார்கள்.
70, 80களில் ரிலையன்ஸ் நிறுவனம் பங்குகளை வெளியிட்டபோது அது அவரது மாநிலமான குஜராத்தில் பெரு வெற்றி பெற்றது. இன்றைக்கும் ரிலையன்சின் பங்குதாரர்களில் பெரும்பான்மையினர் குஜராத்தைச் சார்ந்த பனியாக்களே. இந்தச் சூதாடி வர்க்கம்தான் இந்துத்துவ வெறி எனும் அரசியல் ஒழுக்கக் கேட்டிலும் முன்னணியிலிருக்கிறது என்பதையும் வாசகர்கள் இங்கே ஒப்பிட்டுப் பார்க்கவேண்டும்.
நாடா குத்துபவன் போல தனது பினாமி கம்பெனிகள் மூலம் ரிலையன்ஸ் பங்குகளைத் தானே வாங்கினார் அம்பானி. பங்குகளின் விலையை செயற்கையாக உயரச் செய்தார். விலை குறையும்போது தானே தனது பங்குகளை வாங்கி விலை சரியாமல் இருத்தவும் செய்தார். பணம் தேவைப்பட்ட போது, கடன் பத்திரங்களை வெளியிட்டார். கடன் பத்திரங்களுக்கு சட்டப்படி வட்டி கொடுத்தே ஆகவேண்டும். ஆனால் பங்குகளுக்கு ஈவுத்தொகை கொடுக்கவேண்டும் என்ற கட்டாயமில்லை. ஒரு கட்டத்தில் அவருக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டபோது, அரசியல் செல்வாக்கால் கடன் பத்திரங்களையே பங்குகளாக மாற்றிக் கொண்டார். ஆண்டுதோறும் வட்டி கிடைக்கும் என்று நம்பி கடன் பத்திரங்களை வாங்கிய நடுத்தரவர்க்கத்திற்குப் பட்டை நாமம் போட்டார்.
இத்தனையும் செய்து விட்டு, சாவதற்கு முன்பு ஒரு தத்துவத்தையும் சொன்னார் அம்பானி: “ரிலையன்சை நான் உருவாக்கினேன் என்பது உண்மைதான். அம்பானிகள் வரலாம், போகலாம். ஆனால் ரிலையன்சின் பங்குதாரர்கள் அதை உயிர்ப்புடன் வைத்திருப்பார்கள்” என்றார். ஆனால் அம்பானி செத்த இரண்டே வருடங்களுக்குள் அவரது மகன்கள் அம்பானியின் இந்த மரண வாக்குமூலமும் பொய்யே என்பதை நிரூபித்து விட்டார்கள்.
ரிலையன்சின் 52% பங்குகள் பொதுமக்கள் வசம் இருப்பதாகவும், 43% பங்குகளை பன்னாட்டு, உள்நாட்டு நிதி நிறுவனங்கள் வைத்திருப்பதாகவும், எஞ்சியுள்ள 5 சதவீத பங்குகள்தான் தங்கள் வசம் இருப்பதாகவும் அம்பானி குடும்பத்தினர் புளுகி வந்தனர். புத்திரர்களின் சொத்துச் சண்டையில் இந்தப் புளுகுணியாட்டமும் வெட்டவெளிச்சமானது. பொதுமக்களது கையில் இருக்கும் பங்குகள் உண்மையில் 13 சதவீதம் மட்டுமே. மீத 39 சதவீதம் அம்பானியின் பினாமி நிறுவனங்களிடம் இருக்கின்றன. இந்த நிறுவனங்களின் எண்ணிக்கை மட்டும் 500ஐத் தாண்டும்.
மேட்ரிக்ஸ் எனும் ஆங்கிலப் படத்தில் பிரம்மாண்டமான கணினியொன்று செயற்கையான காட்சி உலகை உருவாக்கி எது மெய் எது பொய் என்று அறிய முடியாத குழப்பத்தை உருவாக்குவது போல, அடியையும் நுனியையும் கண்டுபிடிக்க முடியாத வண்ணம் இந்த பினாமி கம்பெனிகளை உருவாக்கியிருக்கிறார் அம்பானி. முதலீட்டாளர்களையும் அரசாங்கத்தையும் ஒரே நேரத்தில் ஏமாற்றும் இந்த கிரிமினல் குற்றம், வாரிசுச் சண்டையில் அம்பலமாகி நாறியது.
எனினும், ரிலையன்ஸ் குடும்ப பிரச்சினையில் அரசு தலையிடாது என ப.சிதம்பரமும், ஏனைய மத்திய அமைச்சர்களும் அறிவித்தனர். இந்தியா டுடே உள்ளிட்ட ஊடகங்கள், அம்பானி வளர்த்த சாம்ராஜ்ஜியம் இப்படி அழியலாமா என்று சோக கீதம் இசைத்தனரேயொழிய யாரும் அம்பானி குடும்பத்தினர் தண்டிக்கப்பட வேண்டும் என்று எழுதவில்லை, அவர்களால் சூறையாடப்பட்ட சிறுமுதலீட்டாளர்களுக்காக ஒரு சொட்டுக் கண்ணீர் சிந்தக் கூட இல்லை.
“நாம் இந்தியாவிலேயே முதல் கம்பெனியானால் போதுமா, உலகத்திலேயே முதல் கம்பெனி ஆகவேண்டாமா” என்று பங்குதாரர்கள் கூட்டத்தில் குரு முழங்கும் காட்சியுடன் படம் முடிகிறது. அன்று குருவின் மோசடிகள் என்று கூறப்பட்டவை அனைத்தும் இன்று சட்டபூர்வமாக்கப்பட்டு விட்டன. நடுத்தரவர்க்கத்துக்குப் பேராசை காட்டி பங்குச் சந்தைச் சூதாட்டத்தை நோக்கி அன்று அம்பானி கவர்ந்திழுத்தார் என்றால் இன்று ப.சிதம்பரம், நடுத்தர வர்க்கத்தின் சேமிப்புகளைப் பங்குச் சந்தையை நோக்கி நெட்டித் தள்ளுகிறார்.
வங்கிகளின் வைப்புநிதி, தபால் சேமிப்பு, அரசின் கடன் பத்திரங்கள் ஆகிய அனைத்துக்கும் வட்டி விகிதத்தைக் குறைத்து, நடுத்தரவர்க்கம் தனது சேமிப்பை பங்குச் சந்தையில்தான் போடவேண்டும் என்று நிர்ப்பந்திக்கிறார் சிதம்பரம். இதுவும் போதாதென்று தற்போது தொழிலாளர்களின் சேமநல நிதி மூன்று இலட்சம் கோடி ரூபாயையும், பென்சன் நிதியையும் பங்குச் சந்தையில் வைத்துச் சூதாடவிருப்பதாக மத்திய அரசு அறிவித்திருக்கிறது. இப்படி போதும் போதுமென்னும் அளவுக்கு முதலீட்டுக்கான பணம் தளும்பி வழிந்தும் பங்குதாரர்களைக் கொள்ளையடிக்கும் அம்பானியிசம் முடிவுக்கு வந்துவிடவில்லை. அதனைப் புதிய எல்லைக்கு வளர்த்திருக்கிறார்கள் அவரது புத்திரர்கள்.
“ஒரு தபால் கார்டு விலையில் ஃபோன் பேசலாம் திருபாய் அம்பானி கனவுத் திட்டம்” என்ற பெயரில் பங்குச் சந்தையில் குதித்த ரிலையன்ஸ் இன்போகாம், ஒரு பங்கின் முகமதிப்பு ரூபாய் ஒன்று எனவும் பிரீமியம் மதிப்பு 49 ரூபாய் என 50 ரூபாயில் பங்குகளை வெளியிட்டது. இதற்கு 10 வருடங்களுக்கு ஈவுத் தொகையோ வட்டியோ கிடையாது என்ற நிபந்தனையும் உண்டு. பிரீமியம் எனப்படுவது அந்நிறுவனத்தின் சந்தை மதிப்பை வைத்துக் கணக்கிடப்படும் போலி மதிப்பு ஆகும். இந்தப் பங்குகள் வெளியீட்டில் முகேஷ் அம்பானியும், ரிலையன்சின் மேல்மட்ட அதிகார வர்க்கக் கும்பலும் தொழில் முனைவோர் என்ற பெயரில் பெருமளவு பங்குகளை தம் வசம் வைத்துக் கொண்டு 1 ரூபாய் விலையில் வாங்கிய பங்குகளை 50 ரூபாய்க்கு விற்று கோடிக்கணக்கில் சுருட்டினர். வாரிசுரிமைச் சண்டையின்போது அனில் அம்பானி கும்பல் இதை அம்பலப்படுத்தியது. அவலையும் உமியையும் கலந்து விற்கும் இந்தக் கலவையைத் திறமை என்று போற்றுவதா, மோசடி என்று குற்றம் சாட்டுவதா?
‘அம்பானி ஒரு வெற்றிக் கதை’ என்ற புத்தகத்தை எழுதிய என்.சொக்கனது கண்ணோட்டப்படி “இது நடுத்தர வர்க்கப் பங்குதாரர்க ளின் அசட்டுத்தனத்துக்குக் கிடைத்த தண்டனை.” கிழக்குப் பதிப்பகம் பெருமையுடன் வழங்கியுள்ள இந்தப் புத்தகம் பல்லாயிரக்கணக்கில் விற்றுத் தீர்ந்திருக்கிறதாம்.
அதில் அம்பானி வளைகுடா நாடான ஏமனில் இருக்கும்போது நடந்த சம்பவம் ஒன்றைக் குறிப்பிடுகிறார் சொக்கன். அங்கே ஷெல் பெட்ரோல் கம்பெனியில் வேலை செய்து கொண்டிருந்தபோது அம்பானி சைடு பிசினஸ் ஒன்றைச் செய்கிறார். அது என்ன? ஏமனின் செலாவணியான ரியால் வெள்ளியில் தயாரிக்கப்பட்டதாம். அதன் நாணய மதிப்பைவிட அதில் கலந்துள்ள வெள்ளியின் மதிப்பு மிக அதிகமாம். இதைக் கண்டுபிடித்த அம்பானி ரியால் நாணயங்களைச் சேகரித்து வெள்ளியை உருக்கிப் பாளம் பாளமாகத் தயாரித்து இங்கிலாந்து நாட்டிற்கு ஏற்றுமதி செய்தாராம். அதில் அவருக்கு மிகப் பெரிய இலாபமாம்.
இந்தச் சம்பவம் குறித்து உங்கள் மனதில் தோன்றுவது என்ன? அட கயவாளி, ஒரு நாட்டின் நாணயத்தையே உருக்கி மோசடி செய்திருக்கிறானே என்று நினைக்கிறீர்களா? அம்பானியின் பக்தர் சொக்கன் அப்படிக் கருதவில்லை. அவர் சொல்கிறார், “ஏமன் அரசாங்கத்தின் அசட்டுத்தனத்தை தனக்குச் சாதகமாக்கிப் பயன்படுத்தியதன் மூலம் அந்த அரசாங்கத்திற்குச் சரியான தண்டனை கொடுத்திருக்கிறார்” என்று மெச்சுகிறார். மணிரத்தினத்தின் கருத்தும் இதுதான்.
குரு திரைப்படம் தமிழகத்தில் வெற்றி பெறவில்லையென்றாலும் அது கூறவரும் செய்தி சமூகத்தில் செல்வாக்கு பெற்று வருகிறது. சுயநலன் என்பது ஒரு இழிந்த குணமாக கருத்தளவிலாவது பார்க்கப்படுவது, பொதுநலன் என்பது உயர்ந்த பண்பாக வாயளவிலாவது போற்றப்படுவது என்ற நிலை மாறி, பொதுநலன் பேசுவோர் ஏமாளிகளாகவும், சுயநலவெறி முன்னுதாரணமாகவும் சித்தரிக்கப்படும் காலத்தில் அத்தகையதொரு கயவனை நாயகனாகச் சித்தரிக்கிறது குரு. ரவுடிகள் நாயகர்களாக்கப்படுவதைக் காட்டிலும் இது அபாயகரமானது.
ஏமாற்றுவதையும், சக மனிதர்களை மோசடி செய்வதையும், சமூகத்தை ஊழல்படுத்துவதையும் எவ்விதக் கூச்சமும் இன்றிச் செய்த ஒரு மனிதனை இலட்சியவாதியாகக் காட்டுகிறார் மணிரத்தினம். அம்பானியின் குற்றங்களை திரையில் அடக்கி வாசித்துக் காட்டுவதன் மூலம் அவன் கூறும் விழுமியங்களுக்கு வலுச்சேர்க்கிறார். அம்பானியின் கிரிமினல் குற்றங்கள் கூட தெரிந்து செய்தவையோ, வேண்டுமென்றே செய்தவையோ அல்ல என்பது போலவும், ஒரு இலட்சியத்தைத் துரத்திச் செல்லும் மனிதனை ஒரு கட்டத்துக்கு மேல் அந்த இலட்சியமே இழுத்துச் செல்வது போலவும், அதற்கு அந்த மனிதனைக் குற்றம் சாட்ட முடியாது என்பதாகவும் சித்தரிக்கிறார் மணிரத்தினம்.
சினிமாவில் மணிரத்தினம் சித்தரிக்கும் சென்டிமென்டுகள் உள்ளிட்ட குணாதிசயங்கள் அம்பானியைப் போன்ற முதலாளிகளிடம் அறவே இருப்பதில்லை. ஊனமுற்ற பெண்ணிடம் பாசம் வைக்கும் அம்பானி, கோயங்காவின் காரை உடைத்ததற்காக தன் மானேஜரைக் கண்டிக்கும் அம்பானி போன்ற காட்சிகள் ஒரு கிரிமினலுக்கு மனித முகம் தருவதற்காகவே உருவாக்கப்பட்ட காட்சிகள். சினிமா ரவுடிகளைப் பார்த்து ஸ்டைல்களைக் கற்றுக் கொண்ட நிஜ ரவுடிகள் போல சினிமா அம்பானிகளைப் பார்த்து நிஜ அம்பானிகளும் இனி வேடம் போடக்கூடும்.
குரு திரைப்படத்தைப் பார்த்துவிட்டு அம்பானியின் மனைவியும், மகன்களும் பாராட்டு தெரிவித்தார்களாம். பின்னே, இறுதிக் காட்சியில் பல்லாயிரம் பங்குதாரர்களின் மத்தியில் குரு “நமது சக்தி நிறுவனத்தை உலகின் நம்பர் ஒன் நிறுவனமாக மாற்றுவோம்” என்று சூளுரைப்பானே, அம்பானிகளை அந்தக் காட்சி வானத்தில் பறப்பது போலப் பரவசமடைய வைத்திருக்கும். பால்தாக்கரே பாராட்டிய பம்பாய்! அம்பானிகள் பாராட்டிய குரு! த.மு.எ.ச. விருதுதான் பாக்கி. அவர்களை முந்திக் கொண்டு சுஜாதா மிகப் பெரிய விருது கொடுத்துவிட்டார். குரு திரைப்படம் இந்தியத் திரையுலகை ஹாலிவுட் தரத்திற்குக் கொண்டு சென்று விட்டதாம். அப்புறம் என்ன? புஷ், என்ரான் போன்ற அமெரிக்க வில்லன்களை நாயகர்களாகச் சித்தரிக்கும் திரைக்கதைகளை சுஜாதா எழுதிக் கொடுக்க மணி இயக்கலாமே!
ஒரு கொசுறுச் செய்தி: குரு திரைப்படத்தின் தயாரிப்பில் அனில் அம்பானியின் அட்லாப் என்ற நிறுவனமும் இருக்கிறது. அதாவது இது (குரு) அம்பானி கம்பெனியின் விளம்பரப்படம். விளம்பரப் படத்தைப் போட்டுக் காட்டுவதற்கு இரசிகர்களிடம் காசு வசூலிக்கப்பட்டதாக எங்கேயாவது நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அதுதான் அம்பானி. செத்தபின்னும் திருடுவார், திருட்டுபாய் அம்பானி!
அம்பானியின் குரு : மோசடியின் கரு,
குரு திரைப்பட விமரிசனம், புதிய கலாச்சாரம் பிப்ரவரி – 2007
இப்ப அம்பானி மணிரத்தினத்த அம்போன்னு விட்டுட்டாராமே…பேசாம் மணி டாடாவை பத்தி ‘பதன்’னு ஒரு படம் எடுக்கலாம் அப்படியே படிப்படியா போய் மல்கேட்ஸ் அது இதுன்னு ஒரு ஹாலிவுட் படம் கூட எடுக்கலாம்.
>>சுயநலவெறி முன்னுதாரணமாகவும் சித்தரிக்கப்படும் காலத்தில் அத்தகையதொரு கயவனை (அம்பானி) நாயகனாகச் சித்தரிக்கிறது குரு. ரவுடிகள் நாயகர்களாக்கப்படுவதைக் காட்டிலும் இது அபாயகரமானது.
திருடு, ஏமாற்று, மோசடி செய். இதுவே “இன்றைய நீதி”யாக மாறி வருகிறது. எதை செய்தாவது “முன்னேறுவது” (பணக்காரனாவது) என்பதே லட்சியமாக இளைய சமுதாயம் ஊட்டி வளர்க்கப்படுகிறது. இது வெட்க கேடான நிலை. இதை நியாயப்படுத்துகிறது மணிரத்தினத்தின் படம் – குரு.
அருமையான பதிவு, நீங்கள் ஒரு ஜீனியஸ், எவ்வளவு தகவல்கள் , நேர்த்தியான் வாதம் , அழகான விமர்சனம்…
ஆடிபோய்விட்டென்
antha nayai kolla vendum.aruvarupanavan.serupala podavendum
இது ஒரு அற்புதமான கட்டுரை. ஆனால் 2020இல் இந்தியா வல்லரசாகுமெனப் பிதற்றித்திரியும் அரசவைக் கோமாளி அப்துல் கலாம். இது கண்டிக்க படவேண்டிய வார்த்தைகள். இன்று புரிந்திருக்கும் மக்களுக்கு பங்கு தரகு எப்படி பட்ட அய்யோக்கியத்தனம் என்று
This is the appropriate time (Recession) to expose such N number of ambanis, who suck our blood!!! What are we still doing?
“விளம்பரப் படத்தைப் போட்டுக் காட்டுவதற்கு இரசிகர்களிடம் காசு வசூலிக்கப்பட்டதாக எங்கேயாவது நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அதுதான் அம்பானி. செத்தபின்னும் திருடுவார், திருட்டுபாய் அம்பானி”
அம்பானி படத்தில் கை கால் வராமல் இருக்கும் போது தானே அப்படி இருப்பதாய் ரசிகர்கள் உணந்தார்கள் உண்மையாய் நடந்த போது தரகர்களும்,பத்திரிக்கைகளும் நம்மையும் அப்படி இருக்க சொன்னார்கள்.திரு பாய் அம்பானியின் மனைவி விதவையானது குறித்து நாடே துக்கம் கொண்டது.ஆனால் மழைக்கு செத்து போன 150 பேரின் கவலையோ இங்கிலாந்து தாயகம் திரும் பியவுடனே மறந்து போனது. ஆயிரக்கனக்கான கொடிகள் மதிப்புள்ள எண்ணை வயல்கள் அரசால் கொடிகளுக்கு விற்கப்பட்டன . இன்று தன் ரெண்டு பையன்களுக்கும் தலா லட்சம் கோடி இருக்கின்றதெனில் அது உண்மையில் 80 கோடி பேர் சாப்பாட்டுக்கு வழியின்றி இருப்பதாலேயே சாத்தியமாயிற்று
“அம்பானி பட்ட கஷ்டம் உனக்கு தெரியுமா?அவரு வெளிநாட்டுல பெட்ரொல் பம்ப் புடிச்சவரு” என அங்கலாய்ப்பவர்கள் ஏரினை அப்போதிலிருந்து இன்று வரை உழுது கொண்டிருக்கும் நம் பாட்டன்கள் ஏன் பிச்சைகாரனாக்கப்பட்டார்கள் என்ற கேள்விக்கு அது விதியென்று மட்டும் தான் பதில் சொன்னார்கள்.
ரிலையன்ஸ் டெலிகாம் நிறுவனத்தில் வெளினாட்டு கால்களை லோக்கல் கால் என பொய் சொல்லி நூற்று கணக்கான கோடிகளை கட்டாமல் ஏய்த்து வரும் இந்த நாய்களுக்கு போலீசு பாதுகாப்பு,நீதி மன்றமோ சப்பைகட்டு,
அவர்களாய் சுரண்டப்பட்ட மக்களுக்கோ குண்டாந்தடியும்,அல்சரும் தான் இலவசமாய் கிடைக்கும்
கலகம்
http://kalagam.wordpress.com/
நேத்து Moneyரத்னம் எங்க வீட்டுக்கு வந்தார். பேட்டான்னு சாரூக்கான போட்டு உங்க story பண்ணேறன் பாய்ன்னாரு. நான் போயா stupid அம்பானி மாதிரி என்ன loosஆன்னு கேட்டு விரட்டிவிட்டேன்!
Not just Ambani, There is no Businessman who has grown honestly and neither can any. Even a small business owner has to bribe the officers and swindle the staff
“அம்பானி பட்ட கஷ்டம் உனக்கு தெரியுமா?அவரு வெளிநாட்டுல பெட்ரொல் பம்ப் புடிச்சவரு”
அவரு பசங்க பெட்ரோலையே புடிச்சுடாங்களே!
எவ்வளவோ இருக்கு.. மிதிக்காமல் படி தாண்ட முடியாது..
அய்யா,
பார்ப்பன/பனியா கூட்டு களவானித்தனம் ஒன்றும் நமக்கு புதிதல்லவே! மணிரத்னம் என்கிற பார்ப்பான் அம்பானி என்கிற பனியாவை புகழ்ந்து படமெடுக்காமல் ஜி.டி.நாயுடு பற்றிப் படமெடுத்தால்தான் அதிசயம்.
ரெண்டு பா.உ. இடம் கொடுத்தாங்கன்னா அம்பானிகூடயே நாங்க கூட்டணி வைப்பொம்…
[…] à®à®©à®¤à¯ âà® à®®à¯à®ªà®¾à®©à®¿: à®à®°à¯ வà¯à®±à¯à®±à®¿à®à¯à®à®¤à¯â பà¯à®¤à¯à®¤à®à®¤à¯à®¤à®¿à®©à¯ விமரà¯à®à®©à®®à¯: âவினவà¯, வின௠à®à¯à®¯à¯â தளதà¯à®¤à®¿à®²à®¿à®°à¯à®¨à¯à®¤à¯: à®à¯à®¤à¯à®¤à®ªà®¿à®©à¯à®©à¯à®®à¯ திரà¯à®à¯à®µà®¾à®°à¯, திரà¯à®à¯à®à¯à®ªà… […]
vellatum makkal puratchi, kattuvom parpaniyathuku samathi
அருமையான கட்டுரை. எவ்வளவு நுட்பங்கள், கயமை, தந்திரம் மேலோங்கி இருக்கிறது நம் அரசியல்வாதிகளிடமும் தொழிலதிபர்களிடமும்?! யாரோ சொன்னார்கள், நம் இந்திய ஏழை நாடே அல்ல. சுவிஸ் பாங்கில் இந்தக் கயவர்களின் பணம் மொத்தம் 1500 பில்லியன் டாலர்களாம். அதாவது, நம் இந்திய நாட்டின் மீதிருக்கும் கடனைப் போல 12 மடங்கு அதிகமாம். சுவிஸ் வங்கி சமீபத்தில் உலக நாடுகளின் வற்புறுத்தலின் பேரில் “எந்த நாடு எங்களிடம் கணக்கைக் கேட்கின்றதோ, அந்த நாட்டு மக்கள் வைத்திருக்கும் கணக்கினைத் தருவோமென்றது.
ஆனால்…நம் இந்திய புண்ணியவான்களான அரசியல்வாதிகள் இன்னமும் அதைக் கோரவில்லையாம்!!!
பின்குறிப்பு: எப்போதும் பார்ப்பான் என்ற குறிப்பின் மூலம் தங்கள் வெறுப்பு உணர்வுகளை வெளிப்படுத்த முயலுவது கிணற்றுத் தவளையின் மனப்பான்மையைக் காட்டுவதாகும். தேச மக்கள் அனைவரும் தான் பாதிக்கப் பட்டிருக்கின்றனர். நாம் அனைவரும் ஒன்று சேர வேண்டும். நீயா நானா போன்ற குறுகிய மனப்பான்மையினால் தான் நாம் பிறரால் ஆளப்பட்டோம். இப்போதும் உள்நாட்டு பயங்கரவாதிகள் (அம்பானி போன்றவர்கள்) அனைவராலும் ஆளப்படுகிறோம்.
Hai,
Mr. Vinavu,
Why are you blames all people?
as per your measuments which politician and business man is good?
Tell me
அடேயப்பா! அசத்தலான கட்டுரை. பங்குச் சந்தை, முதலாளிகளின் மோசடிகள் என்று எனக்குப் புரியாத விஷயங்களைக் கூட விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகவும் விளக்கி இருக்கிறீர்கள்.
அக்னிபார்வையின் மறுமொழியை வழிமொழிகிறேன்.
ஆமாம், த.மு.எ.ச மீது ஏன் சம்பந்தமில்லாமல் ஒரு இடி?
செத்தபின்னும் திருடுவார், திருட்டுபாய் அம்பானி! | வினவு!…
90களில் பயங்கரவாதத்தினால் பரிதாபமாக்கப்பட்ட காதலர்களைப்…
அருமையான பதிவு. ஆனால் 2020இல் இந்தியா வல்லரசாகுமெனப் பிதற்றித்திரியும் அரசவைக் கோமாளி அப்துல் கலாம். இது கண்டிக்க படவேண்டிய வார்த்தைகள்.
இந்தப் பங்கு சந்தை வியாபாரத்தைப் பத்தி எனக்கு சில சந்தேகங்கள். கணினி முன் உட்காந்துகிட்டு நாள் பூராவும் ஷேர் கான் வலைத்தளத்தில் குதிரை மேல் பணம் கட்டுபவனைப் போல பார்த்துக் கொண்டிருக்கும் சூரப் புலிகளிடமும் கேட்டு விட்டேன் விடை தான் கிடைக்கவில்லை. கேள்வி இதுதான்: நீங்கள் ஒரு கம்பனியின் பங்கை வாங்குகிறீர்கள், அதன் மதிப்பு பத்து ரூபாய். கொஞ்ச நாளைக்கப்புறம் அந்த பங்கு நால்லாயிரம் ரூபாய் என்றெல்லாம் போகிறது. எதை வைத்து இந்த விலை நிர்ணயம் செய்யப் படுகிறது? அந்த பங்கிலிருந்து முதலீட்டர்களுக்கு கிடைக்கப் போவது என்ன? வருடத்துக்கு பத்து சத்தத்திலிருந்து ஐம்பது சதம் வரை டிவிடென்ட், அப்புறம் சில சமயம் சில பங்குகள் கிடைக்கலாம். அட, ஒரு பங்கிற்கு நூறு சதவிகிதம் டிவிடென்ட், ஒரு பங்கு கூடுதலாகக் கொடுத்தாலும், பத்து +பத்து = இருபது ரூபாய்தானே வருகிறது, அதற்க்கு ஏன் நான்காயிரம், ஐந்தாயிரம் என்றெல்லாம் முதலீடு செய்கிறீர்கள்? இன்னொரு இளிச்சவாயன் வாங்கத் தயாராக இருக்கிறான் என்பதைத் தவிர வேறு காரணம் எதுவும் தெரியவில்லை. நிறுவனத்தின் செயல்பாடு, லாபம், சொத்து மதிப்பு இவையெல்லாம் வைத்துதான் பங்கள் மதிப்பிடப் படுகின்றன என்றும் சொல்லிக் கொள்கின்றனர். அப்படியென்றால் கூட உனக்கு அதிலிருத்து வருடத்திற்கு அடாவடியாக வைத்துக் கொண்டால் கூட இருபது ரூபாய்க்கு மேல் கிடைக்காதே? மேலும் இரண்டாண்டுகளுக்கு முன்பு பங்கு சந்தை குறியீட்டு எண் இருபத்தியோராயிரத்திலிருந்து வெறும் எட்டாயிரத்துக்கு வீழ்ந்தன. அப்போது இரண்டாயிரம், மூவாயிரம் என விற்ற பங்குகள் விலை வெறும் இருநூறு, முன்னூறுக்கு வீழ்ச்சியடைந்தன. எந்த நிறுவனமும் முன்வந்து எங்கள் நிறுவனத்தி சொத்து மதிப்பு அதிகம் எனவே பங்குகளை ஐந்நூறுக்கு வாங்கிக் கொள்கிறோம் என்று சொல்லவில்லை. [உண்மையில் மதிப்பு அதிகம் என்றால் சல்லிசாகக் கிடைக்கிறது என்ர திரும்பப் பெற்றிருப்பார்களே?] ஆக பங்கு சந்தை என்பது இன்னொரு குதிரை ரேசு தான். குதிரைக்கும் உனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, அது முதலில் வரும் என்று நீயாக பணம் கட்டுவது போல, நிறுவனங்களின் பங்குகளை இவர்களாக ஏற்றி விடுகிறார்கள். அந்த விலைக்கு நேரிடையாகவோ, மறைமுகமாகவோ எந்த உண்மையோ, மதிப்போ இல்லை.
அழ்ந்த கருத்துள்ள பதிவு எனக்கு புதிதாக பல விசயங்களை கற்று கொண்டேன் இன்று. நன்றி.
// 2020இல் இந்தியா வல்லரசாகுமெனப் பிதற்றித்திரியும் அரசவைக் கோமாளி அப்துல் கலாம்.// இது கண்டிக்க படவேண்டிய வார்த்தைகள்.
ivan maranam makkal kaiyil
அம்பானி செத்தா குரு படம் .டாட்டா செத்த என்ன படம் எடுபர்களோ …நல்ல நேர்த்தியான நடையில் விளக்கம் தந்ததுக்கு நன்றி ,,,,
நன்றி வினவு. மிக அருமையான பதிவு.
மிக மிக அற்புதமான — பெரும் தகவல்களை உள்ளடக்கிய –நாடெஙுகும் கொண்டு சேர்க்க வேண்டிய– கட்டுரையை 9 ஆண்டுகள் கழித்து வாசித்து சிலிர்த்து போகிறேன்.வினவுக்கு நெஞார்ந்த நன்றிகளை சமர்ப்பிக்கிறேன்.