privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திஅழகிரி அண்ணன் வர்றாரு , எல்லாம் ஒதுங்கி நில்லுங்க !

அழகிரி அண்ணன் வர்றாரு , எல்லாம் ஒதுங்கி நில்லுங்க !

-

கட்அவுட் ஆடம்பர விளம்பரங்களை
கைவிட வேண்டும்!
கையில் தீச்சட்டி ஏந்தி
தீ மிதிக்கும் மூடத்தனம் ஒழிய வேண்டும்!
–  இது கருணாநிதியின் ஊருக்கு உபதேசங்கள்.
“பெருசு அப்படித்தான் வயசான காலத்துல
பேசிவிட்டு திரியும்.
நீ பெருசு பெருசா வைடா என் கட் அவுட்டை,
எடுடா கரகத்தை,
குத்துடா அலகு காவடியை,
வெட்டுடா பிறந்தநாள் கேக்கை
–  இது மு.க. அழகிரியின் மதுரைக் கொண்டாட்டங்கள்.

மனைவி காந்தி கிரிக்கெட் போட்டியைத் துவக்கி வைக்க,
மகன் துரை தயாநிதி பிளக்ஸ் பேனர்களில்
பாட்டன் சொத்துக்கு உரிமை கோர,
மகள் கயல்விழி அப்பாவுக்கு வந்த வாழ்த்துச் செய்திகளை
மலராகத் தொகுத்து வெளியிட்டு வீரவாளைப் பெற,
அழகிரியின் 57ஆவது பிறந்தநாள் படையெடுப்பில்
தங்கை கனிமொழியும் தன் பங்குக்கு
அண்ணா வழியில் போய்
அட்டாக் பாண்டியனைக் கண்டெடுத்த
அண்ணனின் போர்க்குணத்தைப் பாராட்ட
குடும்ப அரசியல் சந்தி சிரித்தது.

ஐம்பத்தியேழாவது பிறந்தநாளையொட்டி
ஐந்து கல்யாண மண்டபங்களில் சாப்பாடு
ஐநூற்று எழுபது பேருக்கு வேட்டி, சேலை
ஐம்பத்தியேழு பேருக்கு தையல் மிஷின்
ஐம்பத்தியேழு பேருக்கு அயர்ன் பாக்ஸ்
ஐம்பத்தியேழு ஜோடிகளுக்கு இலவசத் திருமணம்
ஐம்பத்தியேழு கோயில்களில் அன்னதானம்
இதுகளோடு ஒரு மூன்றை மட்டும் சேர்த்தால்
‘அம்மா’ பிறந்தநாளுக்கும்
அழகிரி ஆர்ப்பாட்டத்திற்கும் வேறுபாடில்லை.

“மதுரையின் ஐந்தாவது அதிசயம் அழகிரி” என்று
வித்தகக்கவி முதுகைச் சொறிய,
“அழகிரி என் தந்தைக்கு இணையானவர்” என்று
தங்கம் தென்னரசு மடியில் கையை வைக்க,
“கழகத்தின் ஆபத்தாண்டவரே” என்று
கம்பம் செல்வேந்திரன் காலைச் சுற்ற,
பழைய பெருச்சாளி ராஜ கண்ணப்பனோ
“தி.மு.க.வின் இதயத்துடிப்பே ” என்று
பதவித் துடிப்பில் பல்லைக் காட்ட,
ஆற்றலரசர் தனது அதிகாரச் செல்வாக்கை
அனுபவித்து மகிழ்ந்தார்.

பிறந்தநாளையொட்டி வேட்டி மட்டுமா,
விளங்காத ஜென்மங்களுக்கு பேட்டியும் கொடுத்தார்:
“நேரு குடும்ப அரசியல் செய்யவில்லையா?
அன்புமணியை ராமதாஸ் அழைத்து வரவில்லையா?
விஜயகாந்த் மச்சானுக்கு பொறுப்பு தரவில்லையா?
அது மாதிரிதான்டா தி.மு.க.வும் எங்கப்பன் சொத்து
இதுக்கும் மேல புரியலைன்னா
என் மவனைக் கேளுடா வெண்ணை!” என்று
பிய்த்து உதறி விட்டார்.

அ.தி.மு.க.வின் அடாவடிகளை எதிர்கொள்ள
இனி அழகிரி தி.மு.க.வாலேயே முடியும்!
அடிக்குற போஸ்டர் அளவை வைத்தே  நாளை
அண்ணன் நிழலில் பொறுக்கித் திங்க முடியும் என்று
ஐம்பத்தி எட்டாவது பிறந்தநாளுக்கு இதை விட
பெரிதாகக் கலக்குவது பற்றி இப்போதே
சிந்திக்க ஆரம்பித்து விட்டார்கள் உடன்பிறப்புகள்.

தம்பி பரதனுக்காக முடிதுறந்த ராமர் அழகிரி
அம்பினை ஹாத்வே கேபிளுக்குள் நுழைக்க
இந்தியில் புகழ்பாடும் சுவரொட்டிகள்
எந்தப் பதவியிலும் இல்லாத ஏழைப் பங்காளனுக்கு
போலீஸ் துரத்தி, துரத்தி ராயல் சல்யூட்டுகள்.

பிழைப்புவாதிகள், துதிபாடிகள், சாதியக் கழிசடைகள்
அண்ணனின் பார்வையால்
தெருக்கோடியிலிருந்து பல கோடிக்குப் போனவர்கள்
அடித்த கூத்தில் கூச்சமில்லாமல் திளைக்கும்
அழகிரியைப் பார்த்து..
அடக்கி வாசித்த ஜெயலலிதாவே
இனி நமக்கென்ன தயக்கம் என்று
கழட்டிப் போட்ட பட்டுப்புடவையையும்
வைரக் கம்மலையும் மாட்டிக்கொண்டு
களத்தில் குதித்தாயிற்று..

முதலாளித்துவ அரசியல் போக்கை விமர்சித்த
காரல் மார்க்ஸ் இப்படிச் சொன்னார்:
“இனி பொய்ச்சத்தியம்தான் மதத்தைக் காப்பாற்றும்
ஒழுக்கக்கேடுதான் குடும்பத்தைக் காப்பாற்றும்
திருட்டுதான் சொத்தைக் காப்பாற்றும்”.
கழகக் கண்மணிகள் சொல்கிறார்கள்:
“இனி அழகிரிதான் கட்சியைக் காப்பாற்றுவார்.”

புதிய கலாச்சாரம், மார்ச்’ 08 (அனுமதியுடன்)