Saturday, July 13, 2024
முகப்புசெய்திகறுப்பர்களுக்கு இனவெறி கற்பித்த வெள்ளையின கனவான்கள் !

கறுப்பர்களுக்கு இனவெறி கற்பித்த வெள்ளையின கனவான்கள் !

-

ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா – 6

pulitzer-rwanda-africa-mapருவான்டா, 1994 ம் ஆண்டு, நவீன உலகை உலுக்கிய இன அழிப்பு நடவடிக்கை, ஒரு வானொலி அறிவிப்புடன் ஆரம்பமாகியது: “ஹூட்டு சகோதரர்களே! எம்மை இதுவரை காலமும் அடிமைகளாக அடக்கி ஆண்டு வந்த துட்சி கரப்பான் பூச்சிகளை அழிக்கும் காலம் வந்துவிட்டது.” இனவாத வெறுப்பை கக்கும் அந்த அறிவிப்பை செய்த “மில் கொலின்ஸ் சுதந்திர வானொலி” ஹூட்டு பாஸிச சக்திகளால் நடத்தப்பட்ட தனியார் வானொலி என நம்பப்படுகின்றது. ருவான்டாவில் நீண்ட காலமாகவே ஹூட்டு இனவெறி அரசியல் நடத்தி வந்த, பாஸிச “குடியரசு பாதுகாப்புக் கூட்டணி” (CDR) கட்சியுடன், ஆளும்கட்சி தலைமையிலான Interahamwe என்ற துணைப்படையும் சேர்ந்து கொண்டு சிறுபான்மை துட்சி இன மக்களை நரபலி வேட்டையாடிக் கொன்று குவித்தனர். ருவான்டாவின் தேசிய இராணுவம் பெரும்பான்மை ஹூட்டு இனத்தவரின் ஆதிக்கத்தில் இருந்ததால், இனப்படுகொலையில் இராணுவத்தின் நேரடி பங்களிப்பை மறுக்கமுடியாது.

ருவான்டாவின் பெரும்பான்மை இனமான ஹூட்டுக்களுக்கும், சிறுபான்மை இனமான துட்சிகளுக்கும் இடையிலான பகைமை, கசப்புணர்வு நீண்ட காலமாக நீறு பூத்த நெருப்பாக அடங்கிக் கிடந்தது.  ருவான்டா பெல்ஜியத்திடம் இருந்து சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்து,  துட்சி சிறுபான்மையினருக்கு எதிரான இனக்கலவரங்களையும், துட்சி கிளர்ச்சியாளர்களின் அரசுக்கு எதிரான ஆயுதமேந்திய போராட்டத்தையும் சந்தித்துள்ளது. 1994 ல் பதவியில் இருந்த ஜனாதிபதி “ஹபியாரிமனா” வெளிநாட்டு அழுத்தம் காரணமாக, அமைதிப் பேச்சுவார்த்தைக்கும், அதிகாரப் பரவலாக்கத்திற்கும் சம்மதித்திருந்தார். இதனால் ஹபியாரிமனா ஒரு ஹூட்டு இன மிதவாதியாக, இன்னும் சொன்னால் “ஹூட்டு இனத் துரோகியாக”, பாஸிச சக்திகளால் கணிக்கப்பட்டிருக்க வாய்ப்புண்டு. இருப்பினும் 1994 ம் ஆண்டு, ஏப்ரல் 6 ம் திகதி, தான்சானியாவில் பேச்சுவார்த்தை நடத்தி விட்டு நாடு திரும்பிக் கொண்டிருந்த ஜனாதிபதியின் விமானத்தை சுட்டு வீழ்த்திய ஏவுகணையை ஏவியது யார் என்ற மர்மம் இன்று வரை துலங்கவில்லை. ஹூட்டு பாசிஸ்டுகள் சுட்டு வீழ்த்தி இருக்கலாம் என்று அப்போது நம்பப்பட்டாலும், இன்றைய ருவான்டா அதிபர் “போல் ககாமே” யின் துட்சி கெரிலாக்களினது வேலை என்று பிரான்ஸ் குற்றஞ் சாட்டியது. (விமானி ஒரு பிரெஞ்சுக் காரர் என்பதால் பிரெஞ்சு நீதிமன்றம் விசாரணை நடத்தியது.)

rwanda210எது எப்படி இருந்த போதிலும், ஜனாதிபதி ஹபியாரிமனாவின் மரணத்திற்குப் பின்னர் நாட்டில் அராஜகம் தலைவிரித்தாடியது. “துட்சி கிளர்ச்சியாளர்கள் எமது ஜனாதிபதியை படுகொலை செய்துவிட்டார்கள்.” என்ற செய்தி ஹூட்டு மக்கள் மத்தியில் காட்டுத்தீ போல பரவியது. விரைவில் அதுவே முழு துட்சி இனத்தவருக்கும் எதிரான துவேஷமாக உருவெடுத்தது. நாடு முழுவதும் வீதித்தடைகள் போடப்பட்டன. ஹூட்டு ஆயுததாரிகளின் வீதித்தடைச் சோதனையின் போது மறிக்கப்பட்ட வாகனங்களில் இருந்து துட்சி இனத்தை சேர்ந்தவர்களை தனியாக பிரித்தெடுத்தனர்.  அடையாள அட்டையில், “இனம்: துட்சி” என்று குறிப்பிட்டிருப்பதே அவர்களை காட்டிக் கொடுக்க போதுமானதாக இருந்தது. 01(அடையாள அட்டையில் இனத்தை குறிப்பிடும் வழக்கம் பெல்ஜிய காலனிய ஆட்சியாளர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது.) பெண்கள், குழந்தைகள் என்று வேறுபடுத்தாது துட்சி என்ற காரணத்திற்காகவே கொலை செய்யப்பட்டனர். துப்பாக்கிச் சன்னங்களை வீணாக்குவது செலவு என்று, அரிவாளால் வெட்டிக் கொல்லப்பட்டனர். குடியிருப்புகளுக்கு சென்று துட்சிகளை கொலை செய்த படையினர், சுடப்பட்ட துப்பாக்கிக் குண்டுகளுக்கான செலவை அவர்களே பொறுப்பெடுக்க வேண்டும் என்று மரணத்திலும் கணக்குப் பார்த்தனர். சாதாரண மக்களும் கொலை வெறியாட்டத்தில் பங்குபற்றுமாறு ஊக்குவிக்கப்பட்டனர். ஒரு கொலையை செய்தவனுக்கு, இன்னும் இன்னும் கொலை செய்ய வேண்டும் என்ற வெறி ஏறியது. கொலை செய்யப்பட்டவர்கள் துட்சி இனத்தவர்கள் மட்டுமல்ல. இன நல்லிணக்கத்தை விரும்பிய, மிதவாத ஹூட்டுகளும் கொல்லப்பட்டனர். உலகம் மறுபக்கம் பார்த்துக் கொண்டிருக்கையில், சில மாதங்களுக்குள் எட்டு லட்சம் முதல் ஒரு மில்லியன் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

rwanda204“இரண்டாம் உலகப்போரில் நடந்த யூத இன அழிப்பிற்குப் பின்னர், இன்று உலகம் ஆப்பிரிக்காவின் மாபெரும் இனப்படுகொலையை பார்த்தக் கொண்டிருக்கிறது.” என்று நெஞ்சை நெகிழ வைக்கும் உருக்கமான காட்சிகளை விபரித்துக் கொண்டிருந்த சர்வதேச தொலைக்காட்சிகளால் உலகின் மனச்சாட்சியை உலுக்க முடியவில்லை. சோவியத் ஒன்றிய வீழ்ச்சிக்குப் பின்னர் உலகின் ஒரேயொரு வல்லரசாக திகழ்ந்த அமெரிக்கா, தன்னால் எதுவும் செய்ய முடியாது என்று கையை விரித்தது. “குழந்தை வல்லரசான” ஐரோப்பிய ஒன்றியம் வாய்ச்சொல்லில் மட்டுமே தான் கெட்டிக்காரன் என்று காட்டிக் கொண்டிருந்தது. இவ்வாறு இனப்படுகொலையை தொடராது தடுக்க வழி இருந்த போதும், சந்தர்ப்பத்தை தவற விட்ட காரணம் என்ன? அரசியலில் நண்பர்கள் கிடையாது. நிரந்தர நலன்கள் மட்டுமே உள்ளன. பிரான்ஸ் அன்று ருவான்டாவை ஆட்சி செய்த ஹூட்டு இராணுவத்திற்கு பயிற்சி அளித்து, ஆயுதங்கள் கொடுத்து வந்தது. அதே போல துட்சி கிளர்ச்சியாளர்களுக்கு அமெரிக்கா ஆதரவளித்து வந்தது. அவரவருக்கு தமது ஆட்கள் வெல்ல வேண்டும் என்ற எதிர்பார்ப்பே மேலோங்கி இருந்தது.

402019401_bbae7999e2_oசோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர், அமெரிக்காவின் கவனம் ஐரோப்பிய வல்லரசுகளின் மீது திரும்பியது. ஆப்பிரிக்காவில் நவ-காலனிய அரசியலில் மும்முரமாக ஈடுபட்டிருந்த பிரான்ஸ் அதன் கண்ணில் துருத்திக் கொண்டிருந்தது. ருவான்டாவில் துட்சிகளின் கிளர்ச்சி, பிரான்சின் ஆதிக்கத்தை துடைத்தெறியும் பதிலிப் போராக அமெரிக்காவால் கருதப்பட்டது. துட்சிகளின் கெரில்லா இராணுவமான “ருவான்டா தேசாபிமான முன்னணி” (RPF) அயல் நாடான (ஆங்கிலம் பேசும்) உகண்டாவில் தளம் அமைத்திருந்ததும், RPF படைத் தளபதி (இன்றைய ஜனாதிபதி) போல் ககாமே உட்பட பல தலைவர்கள் உகண்டாவில் ஆங்கில மொழி வழிக் கல்வி கற்றிருந்தும், அமெரிக்கா இலகுவாக ஊடுருவ வாய்ப்பாக அமைந்தது. உகண்டாவின் இன்றைய ஜனாதிபதி முசவேனி, ஆட்சியைக் கைப்பற்ற நடத்திய ஆயுதப் போராட்டத்தில், RPF போராளிகள் பங்குபற்றி இருந்தனர். முசவேனி, ககாமே ஆகியோரை “ஆப்பிரிக்காவின் நம்பிக்கை தரும் இளம் தலைமுறையை சேர்ந்த தலைவர்கள், மக்களுக்கு ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்குவார்கள்” என்று அமெரிக்க ஊடகங்கள் புகழ் பாடிக் கொண்டிருந்தன. ஒருவேளை ருவாண்டாவில் ககாமே ஆட்சிக்கு வந்த பின்னர், அரச கரும மொழியாகவும், கல்வியிலும் பிரெஞ்சை ஒதுக்கி விட்டு ஆங்கிலத்தை நடைமுறைக்கு கொண்டு வந்ததை சாதனையாக கூறலாம்.

ருவாண்டாவில் இருப்பது இனப்பிரச்சினையா? ருவாண்டா மக்கள், காலங்காலமாக ஹூட்டு, துட்சி என்ற இன அடிப்படையில் பிரிந்து வாழ்ந்து வந்தனரா? இது ஆயிரம் வருடக்கால இனப்பகையா? நாம் முதலாளிய ஊடகங்கள் சொல்வதை நம்பினால், மேற்குறிப்பிட்ட கேள்விகளுக்கு “ஆம்” என்று பதில் வரும். ஆனால் இந்தக் கருத்தியல் எவ்வளவு தூரம் சரி என்று, எந்த சமூக விஞ்ஞானியும் ஆராயவில்லை, அல்லது அவர்களது முடிவுகள் பாரபட்சமின்றி இருப்பின் பிரசுரிக்கப்படுவதில்லை. முதலில் “இனம்” (Ethnicity, Race எதுவாக இருந்தாலும்) என்ற சொல்லே ஒரு ஐரோப்பியக் கண்டுபிடிப்பாகும். ருவான்டாவின் இனப்பிரச்சினை, ஆச்சரியப்படத்தக்க வகையில் இலங்கை இனப்பிரச்சினையுடன் பெரும்பாலும் ஒத்திருப்பதை, நீங்கள் இந்தக் கட்டுரையை வாசிக்கும் போது புரிந்து கொள்வீர்கள். இது ஒன்றும் தற்செயல் அல்ல. காலனிய எஜமானர்களின் பிரித்தாளும் கொள்கை, எங்கேயும் ஒரே மாதிரித் தான் நடைமுறைப் படுத்தப்பட்டது. ஆங்கிலேயர்கள் எவ்வாறு இலங்கையில் வாழ்ந்த சிங்கள, தமிழ் மொழி பேசும் மக்களுக்கிடையில் இனப் பகையை தோற்றுவித்து, இனவாதப் படுகொலைகளுக்கு வழிவகுத்தார்களோ, அதே வேலையை பெல்ஜியர்கள் ருவான்டாவில் செய்தனர்.

19 ம் நூற்றாண்டின் இறுதியில், உலகின் மிக நீண்ட நதியான நைலின் நதிமூலத்தை தேடிச் சென்ற ஐரோப்பியர் சிலர் ருவான்டாவை “கண்டுபிடித்தனர்”. அவர்களைத் தொடர்ந்து கிறிஸ்தவ மதம் பரப்புவோரும் அந்தப் பிரதேச மக்களை கத்தோலிக்கர்களாக மாற்றும் பணியில் ஈடுபட்டனர். இவர்கள் எல்லோருக்கும் ருவான்டாவில் எதிர்பாராத ஆச்சரியங்கள் காத்திருந்தன. இன்றைய ருவான்டா, புரூண்டி, மற்றும் உகண்டாவின் தென் பகுதி, கொங்கோவின் கிழக்குப்பகுதி என்பனவற்றை உள்ளடக்கிய, ஒரே அதிகார மையத்தைக் கொண்ட மன்னரின் ஆட்சிப்பிரதேசமாக இருந்தது. மன்னரின் கீழ் நூற்றுக்கணக்கான சிற்றரசர்கள் மாகாணங்களை நிர்வகித்து வந்தனர். சுருக்கமாக சொன்னால், ஐரோப்பாவில் இருந்த அதே நிலப்பிரபுத்துவ சமுதாய அமைப்பு முறை ருவான்டாவிலும் காணப்பட்டது. ஆயிரம் வருடங்களாக மக்கள் விவசாயம் செய்யும் அறிவைப் பெற்றிருந்தனர். அழகிய மலைநாடான ருவான்டாவில், ஒவ்வொரு குன்றும் ஒரு குடும்பத்திற்கு சொந்தமான விவசாய நிலமாக இருந்தது.

ருவான்டாவில் துவா (அல்லது பிக்மீ) என்றழைக்கப்படும் பழங்குடியினரும் வாழ்ந்து வருகின்றனர். பிற ஆப்பிரிக்க மக்களிடமிருந்து வேறுபடுத்தி அறியக்கூடிய தோற்ற அமைப்பைக் கொண்ட (குள்ளமானவர்கள், பழுப்பு நிறத்தவர்கள்) துவா மக்கள் இன்றும் கூட புராதன வேடுவர் சமூகமாகத் தான் வாழ்கின்றனர். யாருக்கும் தீங்கு செய்யாத, தானுண்டு, தனது வேலையுண்டு என வாழ்ந்து வரும் துவா மக்களை, ருவான்டா அரசர்கள் அடிமைகளாக வைத்திருந்தனர். அரசன் மட்டுமல்ல, நிலப்பிரபுக்களும் துட்சி இனத்தை சேர்ந்தவர்களாக அதிகாரம் செலுத்தினர். அதற்கு மாறாக பெரும்பான்மை ஹூட்டு இன மக்கள் நாட்டுப்புறங்களில் பண்ணையடிமைகளாக, குத்தகை விவசாயிகளாக இருந்தனர். இந்த உண்மையே ஹூட்டு-துட்சி இனப் பிரிவினையை நிரூபிக்க போதுமானதல்ல. ஏனெனில் “நாகரிக காலத்தை” சேர்ந்த நாம் இனம் பற்றி புரிந்து வைத்திருப்பதற்கும், அன்றைய மக்களின் சிந்தனைக்கும் இடையில் நிறைய வேறுபாடு இருக்கின்றது. தனது சொந்த விவசாய நிலங்களில் அதிக விளைச்சலைப் பெறக்கூடியதாக பயிரிட்டு, தனது செல்வத்தை பெருக்கிக் கொள்ளும் ஹூட்டு ஒருவர் நிலப்பிரபுவாக வர முடிந்தமை குறிப்பிடத்தக்கது. எனினும் அதிகாரத்தில் இருப்பது யாராக இருந்தாலும் துட்சி என அழைக்கப்படலாயினர்.

துட்சிகளின் மூதாதையர் எத்தியோப்பியாவில் இருந்து வந்தவர்கள் என்ற கருத்து நிலவுகின்றது. இரு பக்க இனவாதிகள் மத்தியிலும், ஐரோப்பிய காலனியாதிக்கவாதிகள் மத்தியிலும் இது போன்ற கருத்துகள் பிரபலமானவை. (“துட்சிகளை எத்தியோப்பியாவிற்கு திருப்பி அனுப்புவோம்.” என்பது ஹூட்டு இனவாதிகளின் முழக்கங்களில் ஒன்று.)  எத்தியோப்பியர், அல்லது சோமாலியர்கள் போல (இவர்களை பிற ஆப்பிரிக்கர்களிடம் இருந்து இலகுவில் பிரித்தறிய முடியும்)  பெரும்பாலான துட்சிகள் தோன்றுவதை மறுப்பதற்கில்லை. துட்சிகள் என்றால் உயரமானவர்கள், ஒடுங்கிய முகம், மெல்லிய உடல்வாகு கொண்டவர்கள்; ஹூட்டுகள் பருமனானவர்கள், வட்டமான முகம் கொண்டவர்கள்,  என்றெல்லாம் பிரித்துப் பார்ப்பது எல்லோருக்கும் பொருந்தாது. இருப்பினும் இனப்படுகொலை செய்யும் இனவாதிகளுக்கு அந்த வெளித் தோற்றமே போதுமானதாக இருந்தது.

ருவான்டாவின் எழுதப்படாத செவிவழி வரலாற்றின் படி, கி.பி. 700 ம் ஆண்டளவில் வருகை தந்த ஹூட்டுகள், மரங்களை வெட்டி, நிலங்களை பண்படுத்தி விவசாயம் செய்து வந்துள்ளனர். பல்வேறு வகையான பழ மரங்களை நட்டு, உணவுப்பயிர்களை பயிரிட்டு, அதன் பலனை அனுபவித்து வந்தனர். இயற்கையோடு ஒன்றி வாழ்ந்த துவா வேடர்களைப் போலன்றி, குடிசைகளை கட்டி, கிராமங்களில் வாழ்ந்தனர். சமுதாயம் வளர்ச்சி அடைந்த போது “முவாமி” என அழைக்கப்படும் மன்னனின் அதிகார மையமாக பரிணமித்தது. ஆயிரம் வருடங்களுக்கு முன்பே மத்திய ஆப்பிரிக்க இராச்சியமான, ருவான்டா முழுவதும், ஒரே மொழி, ஒரே மதம், ஒரே கலாச்சாரம் நிலவியது.

ஹூட்டு நாகரீகம் தொடங்கி முன்னூறு வருடங்களுக்குப் பின்னர், வடக்கே இருந்து மாடுகளை மேய்த்துக் கொண்டு வந்தனர், துட்சிகள் என்ற வந்தேறுகுடிகள்.  இது இந்தியாவில் ஆரியரின் வருகையுடன் ஒப்பு நோக்கத்தக்கது. துட்சிகள் சமுதாயத்தில் மாடுகள் வைத்திருப்பது செல்வச் செழிப்பின் அடையாளம். ஒருவர் எத்தனைமாடுகள் வைத்திருக்கிறார் என்பதை வைத்துதான், அவர் பணக்காரரா இல்லையா என்பது தீர்மானிக்கப்பட்டது. இந்த கலாச்சாரம் இன்றும் கூட (துட்சி இனக்குடும்பத்தை சேர்ந்த) கென்யாவின் மாசாய் இன மக்கள் மத்தியில் நிலவுகின்றது. தமது மாடுகளுக்கு மேய்ச்சல் நிலம் தேடியே துட்சிகள், ருவான்டாவிற்கு வந்தனர். அதனால் அங்கே விவசாயம் செய்து வந்த ஹூட்டுகளுடன் நிலத்திற்கான போட்டி, பொருளாதார முரண்பாடுகளை (கவனிக்கவும்: இன முரண்பாடுகள் அல்ல) தோற்றுவித்தது. வேறுபாடான பொருளாதார நலன்கள் இருந்த போதிலும், காலப்போக்கில் துட்சிகள், தம்மை விட நாகரீகத்தில் மேலோங்கியிருந்த ஹூட்டுகளின் மொழியையும், மதத்தையும் மட்டுமல்ல கலாச்சாரத்தையும் தமதாக்கிக் கொண்டனர். முரண்நகையாக அதுவே துட்சி இன மேலாதிக்கத்திற்கு ஆதாரமாக அமைந்தது.

அதிகார வெறி கொண்ட துட்சிகள் விரைவில் ருவான்டாவின் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றினர். ஹூட்டுகள் விவசாயத்தையே பெரிதாக மதித்ததால், அவர்களை தமது ஆட்சிக்கு கீழ்ப்படிய வைப்பது, புதிய ஆட்சியாளருக்கு இலகுவாக அமைந்தது. ஹூட்டுகள் உழைக்கும் வர்க்கமாகவும், துட்சிகள் ஆளும் வர்க்கமாகவும் மாறியது அப்போது தான். தேச நிர்வாகத்தில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. துட்சிகள் ஆரம்பத்திலேயே மேலிருந்து கீழே வரும் அதிகாரப் படிநிலைச் சமூகமாக வாழ்ந்தவர்கள். அதனால் தான் 20 ம் நூற்றாண்டிலும், அதிகார வர்க்கம் முழுவதும் துட்சிகளை கொண்டிருந்தது. தேசப் பாதுகாப்பும் அவர்கள் வசமே இருந்தது. விவசாயம் சார்ந்த உற்பத்தி உறவுகளில் பண்ணையடிமை முறையை புகுத்தினர். துட்சி பண்ணையார்களின் மாடுகளுக்கு மேய்ச்சல் நிலம் தேவைப்பட்ட போது, ஹூட்டு விவசாயிகளிடம் நிலங்களை பெற்றுக் கொண்டு, பண்டமாற்றாக சில மாடுகளைக் கொடுத்தனர். ஹூட்டு விவசாயிகள் மாடுகளை பராமரித்தாலும், பிறக்கும் கன்றுக்குட்டிகளை மட்டும் துட்சி உரிமையாளருக்கு கொடுத்து விட வேண்டும். நிலப்பிரபுத்துவ சமுதாயத்தில் உற்பத்தியின் பலன்களை அனுபவிப்பது நிலப்பிரபுவாகத் தானே இருக்க முடியும்?

19 ம் நூற்றாண்டில் ஐரோப்பிய வல்லரசுகள் ஆப்பிரிக்காவை பங்கு போட்ட போது, ஜெர்மனிக்கு கிடைத்த துண்டுகளில் ருவான்டாவும் ஒன்று. ஏற்கனவே இராச்சியத்தின் பகுதிகள் பிரிட்டனுக்கும் (உகண்டா), பெல்ஜியத்திற்கும் (கொங்கோ)  தாரை வார்க்கப்பட்டது பற்றியோ, தன் நாடு தற்போது ஜெர்மன் ஏகாதிபத்தியத்திற்குள் அடங்குகின்றது என்பதையோ ருவான்டா மன்னன் அறிந்திருக்கவில்லை. இருப்பினும் தான்சானியாவில் இருந்து ருவான்டா விவகாரங்களை கவனித்துக் கொண்ட ஜெர்மன் ஆளுநர், அரசாட்சியில் தலையிடவில்லை. முதலாம் உலக யுத்தத்தில் ஜெர்மனியை தோற்கடித்த பெல்ஜியம், ருவான்டாவை தனது காலனியாக்கியது. “பெல்ஜியத்தால் பாதுகாக்கப்படும் பிரதேசம்” என்று ஐ.நா. மன்றத்தின் முன்னோடியான உலக மக்கள் பேரவை தீர்மானித்தது. காலனிக்கும், பாதுகாப்புப் பிரதேசத்திற்கும் இடையில் அதிக வித்தியாசம் இருக்கவில்லை. பெல்ஜியம் தனது முப்பது வருட காலனிய ஆட்சிக்காலத்தில் ஐரோப்பியமயப்பட்ட கல்வியையும், நிர்வாகத்தையும் அறிமுகப்படுத்தியது. அப்போது தான் இனவாதக் கருத்துகள் துட்சி, ஹூட்டு இன மக்கள் மத்தியில் விதைக்கப்பட்டன.

துட்சி நிலப்பிரபுக்களின் அதிகாரம் செலுத்தும் திறமையை கண்டு வியந்த ஐரோப்பியர்கள், துட்சிகள் “சாதாரண ஆப்பிரிக்கர்களாக” இருக்க முடியாது என முடிவுசெய்தனர். அந்த எண்ணத்தில் உதித்தது தான் இன்றைய இனவாத கோட்பாடுகள்.  பாப்பரசரின் பிரதிநிதியான வணக்கத்திற்குரிய “லெயோன் கிளாஸ்”, மிஷனரி பாடசாலைகள் மூலம் இனவாதக் கருத்துகளையும் போதித்து வந்தார். ஆரம்ப காலங்களில் துட்சி இனப் பிள்ளைகளுக்கு மட்டுமே ஐரோப்பிய பாணி கல்வி போதிக்கப்பட்டது. “துட்சிகள் ஆளப்பிறந்தவர்கள்”, “இனரீதியாக ஹூட்டுக்களை விட சிறந்தவர்கள்”, போன்ற இனவாதக் கருத்துகள், பாடசாலை சென்ற பிஞ்சுமனங்களில் விதைக்கப்பட்டன. புதிய மத்தியதர வர்க்கமாக உருவாகிய, கல்வி கற்ற துட்சிகளை அரச கருமங்களை முன்னெடுக்கவும், மாவட்டங்களாக பிரிக்கப்பட்ட புதிய நிர்வாக அலகுகளில் அதிகாரிகளாகவும் நாடு முழுவதும் நியமிக்கப்பட்டனர். அதே நேரம், இன்னொரு பக்கத்தில் பெல்ஜியர்கள் சிறிய அளவு ஹூட்டு நடுத்தர வர்க்கத்தையும் உருவாக்கத்தவறவில்லை. இருப்பினும் ருவான்டா சுதந்திரம் பெற்ற நேரம், பெரும்பாலான அரச பதவிகளில் துட்சிகளே வீற்றிருந்தனர்.

1958 ல் எடுத்த கணக்கெடுப்பின் படி, மொத்த சனத்தொகையில் 14 வீதமான துட்சிகள், பல்கலைக்கழகங்களில் மூன்றில் இரண்டு பங்கு மாணவர்களாக இருந்தனர். சுதந்திரத்திற்குப் பின்னர் நடந்த பொதுத் தேர்தலில், பெரும்பான்மை ஹூட்டு மக்களின் வாக்குகளால் வெற்றி பெற்ற அரசாங்கம் தரப்படுத்தலை கொண்டு வந்து, இனப்பிரச்சினைக்கு வழி சமைத்தது. மெல்ல மெல்ல அதிகாரம் துட்சிகளின் கைகளில் இருந்து பறிக்கப்பட்டது.  பேரினவாத அரசாங்கம், ஹூட்டுகளுக்கு அதிக சலுகைகள் வழங்கி, பெரும்பான்மை வாக்குவங்கியை தக்க வைத்துக் கொண்டது. துட்சியினத்தை பிரதிநிதித்துவப் படுத்தும் கட்சிகள், இனப்பிரச்சினையை தீர்க்குமாறு அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதும், ஹூட்டு இனவாத சக்திகளின் எதிர்ப்புக் காரணமாக ஒப்பந்தங்களை முறிப்பதும் நடந்தேறின. ஒவ்வொரு தடவையும் துட்சிகள் அஹிம்சா வழியில் எதிர்ப்புக் காட்டிய போதெல்லாம், இனக்கலவரங்கள் தூண்டி விடப்பட்டன. இதனால் பெருமளவு துட்சி மக்கள் அகதிகளாக அயல் நாடுகளில் புகலிடம் கோரினர். துட்சிகள் ஆயுதமேந்திய போராட்டத்தின் மூலமே தமது உரிமைகளைப் பெற முடியும் என இளைஞர்கள் நம்பினார்.  ஹூட்டு பேரினவாத அரசிற்கெதிராக ஆரம்பிக்கப்பட்ட துட்சி விடுதலை இயக்கம் (RPF) கெரில்லாத் தாக்குதல்களை நடத்தியது.   இதையெல்லாம் எங்கேயோ கேட்ட மாதிரி இல்லையா? ஆமாம், ருவான்டா-இலங்கை, துட்சிகள்-தமிழர்கள், ஹூட்டுகள்-சிங்களவர்கள், பெல்ஜியம்-பிரிட்டன், இந்தச் சொற்களை மாற்றிப் போட்டுப் பாருங்கள். வரலாறு ஒரே மாதிரித் தோன்றும்.

rpf1994 ம் ஆண்டு, துட்சியின மக்கள் வகைதொகையின்றி கொன்று குவிக்கப்பட்டாலும், துட்சிகளின் விடுதலைப்படையான RPF கெரில்லாக்களின் முன்னேற்றத்தை தடுத்து நிறுத்த முடியவில்லை. தலைநகர் கிகாலியை கிளர்ச்சிப்படை கைப்பற்றியதும், ஹூட்டு மக்களும் அரச படையினரும் கொங்கோவிற்குள் புகலிடம் கோரினர். இதனால் யுத்தம் அயல்நாடான கொங்கோவிற்கும் பரவியது. RPF இயக்கத்தில் துட்சி இன மேலாண்மைக் கருத்துகளை கொண்ட போல் ககாமே போன்ற தலைவர்களின் ஆதிக்கம் நிலவுகின்றது. அதுவே புதிய அரசின் கொள்கையை தீர்மானிக்கின்றது.  இன அழிப்புக் குற்றத்தில் ஈடுபட்ட மாஜி இராணுவ வீரர்களை தேடுவதாக காரணம் காட்டி, இரண்டு தடவை ருவான்டாவின் புதிய (துட்சி) இராணுவம் கொங்கோவிற்குள் படையெடுத்தது. அது சர்வதேச கண்டனங்களையும் தோற்றுவித்தது. இருப்பினும் பலமான அமெரிக்க வல்லரசின் ஆதரவு காரணமாக, கொங்கோவில் நிலை கொண்டிருந்த ஐ.நா.சமாதானப் படை சும்மா வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. (ஐ.நா. படை அதிகாரிகள் துட்சி இராணுவத்துடன் ஒத்துழைத்தாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.)

“பெரும்பான்மை ஹூட்டு இன மக்கள் கொங்கோ அகதி முகாம்களில் வசித்துக் கொண்டிருக்கையில், ருவான்டாவில் தங்கி விட்ட சிறுபான்மை துட்சிகளை மட்டுமே பிரதிநிதித்துவப் படுத்தும் RPF அரசாங்கம் நீதி நெறிமுறைக்கு உட்பட்டதா?” என்ற கேள்வி சர்வதேச அரங்கில் முன் வைக்கப்பட்டது. ஆனால் சிறுபான்மையினரின் அரசாங்கம் கடந்த பத்தாண்டுகளாக நிலைத்து நிற்பதுடன், சர்வதேச அங்கீகாரத்தையும் பெற்றுள்ளது. சில வருடங்களுக்குப் பின்னர், கணிசமான அளவு ஹூட்டுகள் தயக்கத்துடன் தாயகம் திரும்பினர். RPF ம் இன அழிப்பில் ஈடுபட்டது என்பதும்,  துட்சி ஆயுததாரிகள் ஹூட்டு மக்களை கொன்றுள்ளனர் என்ற குற்றச்சாட்டும், மறுக்க முடியாத உண்மைகள். ருவான்டாவில் துட்சியின ஆதிக்கம் நிலைநாட்டப்பட்ட பின்னர், RPF அரசிற்கு ஹூட்டுகளை வேட்டையாட வேண்டிய தேவை இருக்கவில்லை. ஜனாதிபதி போல் ககாமேயின் கவனம் பின்னர் தனது இனத்திற்குள் இருக்கும் எதிரிகளை நோக்கி திரும்பியது. “இன அழிப்பில் ஈடுபட்ட கொலைகாரர்கள்” என்பது தான் தீர்த்துக் கட்டப்படும் அனைத்து எதிரிகள் மீதும் வைக்கப்படும் குற்றச்சாட்டு. கொங்கோவை தளமாகக் கொண்ட, ஹூட்டுகளின் புதிய கெரில்லா இயக்கம் ஒன்று அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருவதாக அண்மைக்காலமாக கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

நவீன ருவான்டாவின் வரலாற்றில் ஏகாதிபத்திய தலையீடு பல்வேறு நோக்கங்களுக்காக வெளிப்பட்டுள்ளது. இதற்காக ஏகாதிபத்தியம் தனது  பிரசைகளின் உயிரையும், தேசத்தின் நன்மதிப்பையும் கூட விலையாக கொடுத்துள்ளது.  காலனிய ஆதிக்கம் காலாவதியாகி, நவ-காலனிய காலகட்டம் ஆரம்பித்த நேரம், பெல்ஜியம் ருவான்டாவை பிரான்சிற்கு தத்துக் கொடுத்து விட்டிருந்தது. அந்நியக் கடன் வழங்குவதில் முதன்மையான நாடான பிரான்சின் வற்புறுத்தலுக்கு இணங்கித் தான், ருவாண்டாவின் ஹூட்டு அரசும், RPF இயக்கமும் பேச்சுவார்த்தைக்கு உடன்பட்டன. சமாதானத்தை நிலைநாட்ட ஐ.நா.சமாதானப்படை (MINUAR) வந்தது. ஒப்பந்தம் மீறப்பட்டு, மீண்டும் யுத்தம் மூண்ட பின்னர், ஜனாதிபதி ஹபியாரிமனா கொல்லப்பட்டதற்கு பழிவாங்கும் முகமாக, ஐ.நா.சமாதானப்படையில் பணியாற்றிய பத்து பெல்ஜிய வீரர்கள் ஹூட்டு தீவிரவாதிகளால் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்திற்குப் பிறகு ஐ.நா. படைகள் முற்றாக விலக்கிக் கொள்ளப்பட்டன.

இனப்படுகொலைக்கு தலைமை தாங்கிய, ஹூட்டு துணைப்படையான Interahamwe க்கு பிரான்ஸ் இராணுவப் பயிற்சி வழங்கி வந்தது. இதனால் “பிரான்சிற்கும் இன அழிப்பில் பங்குண்டு” என்ற குற்றச்சாட்டை இன்றைய ருவான்டா (துட்சி) அரசு பன்னாட்டு ஊடகவியலாளரின் முன்னால் (டிசம்பர் 2008)  சமர்ப்பித்தது. அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள, காலஞ்சென்ற பிரெஞ்சு ஜனாதிபதி மித்தரோன் உட்பட பல பெரிய தலைகள் இன அழிப்பு குற்றத்திற்காக சர்வதேச நீதிமன்றத்திற்கு முன்னால் நிறுத்தப்படுவது சாத்தியமானதல்ல. இருப்பினும் இஸ்ரேலைப் போல, ருவான்டாவும் அமெரிக்காவின் செல்லப்பிள்ளையாகி வருவதை இது எடுத்துக் காட்டுகின்றது. மத்திய ஆப்பிரிக்காவில் இன்னொரு இஸ்ரேலை உருவாக்குவது தான் அமெரிக்காவின் நோக்கமும். இஸ்ரேல் “யூத இனப்படுகொலையை தேசிய அரசியல் சித்தாந்தமாக” கடைப்பிடிப்பதைப் போல, இன்றைய ருவான்டாவில் துட்சி இனப்படுகொலை பற்றிய நினைவுகூரல் தவிர்க்கவியலாத அம்சமாகி விட்டது. இனப்படுகொலைக்கு பலியானவர்களின் ஞாபகச் சின்னங்கள் பற்றி ஒவ்வொரு பிரசையும் அறிந்திருக்க வேண்டும். ருவான்டாவும் இஸ்ரேலைப் போலவே சர்வதேச கண்டனங்களைப் பொருட்படுத்தாது அயல்நாடுகள் மீது படையெடுக்க முடிகிறது. கொங்கோவில் கபிலாவின் தேசியவாத அரசு, சீனாவுடன் வர்த்தக ஒப்பந்தங்களை போட்ட கையோடு, கிழக்கெல்லையில் படையெடுத்த ருவான்டா இராணுவத்துடன் நீண்ட போருக்கு செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. பேரழிவை ஏற்படுத்திய யுத்தம் கொங்கோவை அமெரிக்காவின் நிபந்தனைகளுக்கு கட்டுப்பட வைத்தது. அமெரிக்க இராணுவ ஆலோசகர்கள் ருவான்டா இராணுவத்தை, ஆப்பிரிக்காவின் தலைசிறந்த நவீன இராணுவமாக்க பாடுபடுகின்றனர். வருங்காலத்தில் ஒரு குட்டி நாடான ருவான்டா, தன்னை சுற்றியிருக்கும் பலவீனமான பெரிய நாடுகளை பயமுறுத்தப் போகின்றது.

– தொடரும் –

 

தோழர் கலையரசன் ஈழத்திலிருந்து இனவாதப் போரினால் அகதியாய் விரட்டப்பட்டு முதலில் சுவிஸ் நாட்டிலும் பின்னர் அந்த நாட்டு அரசின் இனப்பாகுபாடு அரசியலால் வெறுப்புற்று நெதர்லாந்திலும் வாழ்பவர். அகதியாய் ஆரம்பித்த வாழ்வு, அதனால் ஐரோப்பிய நாடுகளின் அகதிகள் குறித்த சட்டங்களைத் தெரிந்து கொண்டமை, பல் நாட்டவருடன் பழகியமை, 20 நாடுகளில் சுற்றுப் பிரயாணம் செய்து பெற்ற சமூக அனுபவம், நெதர்லாந்து கம்யூனிஸ்ட்டு கட்சியுடனான தொடர்பு, நடைமுறைப் போராட்டங்களில் ஈடுபட்டமை எல்லாம் சேர்ந்து அவருக்கு ஒரு உலக அனுபவத்தையும் முக்கியமாக பல்நாட்டவரின் வாழ்க்கையையும் அந்த வாழ்க்கையைத் தீர்மானிக்கும் அரசியலையும் கற்றுத் தந்திருக்கிறது. இந்த அனுபவங்களினூடாக மேற்குலகின் பொய்ச்சித்திரங்களை கலைத்துப் போடும் வல்லமை கொண்ட தோழர் கலையரசன், இத்தளத்தில் பங்கேற்பதில் வினவு மகிழ்ச்சி அடைகிறது. அவரது வலைப்பூ முகவரி http://kalaiy.blogspot.com
 1. ருவான்டாவின் வரலாற்றை கண் முன்னே நிறுத்துகிறது ஆசிரியரின் எழுத்து. நன்றி

 2. எந்த ஒரு இன ஒழிப்பு போரையும் ஏகாதிபத்திய நாடுகளும் ‘வளர்ந்த’ நாடுகளும் கைகட்டி வேடிக்கைதான் பார்க்கும் என்றில்லை ஆளுக்கொரு பக்க்கமெடுத்து தட்டிவிட்டும் வேடிக்கை பார்ப்பர். இன்று இலங்கைக்காக அமெரிக்கா ஐரோப்பா என மனு அனுப்புகிறோம், அவர்கள் நினைத்தால் இந்த போரை முடிவுக்கு கொண்டு வர ஒரு தொலைபேசி அழைப்பு போதுமென்றாலும் ஆயுதங்களின் விற்பனைக்கான வாய்ப்பு இருக்கும் வரை அவர்கள் அதை செய்யப்போவதில்லை என்பது தெளிவு. ருவான்டா கதை நமக்கு சொல்லும் பாடம் அது!

 3. துண்டு துண்டாகப் படித்துப் புரிந்து கொள்ள முயற்சித்த விஷயத்தை விளங்கும்படி ஒரே கட்டுரையில் தெளிவாகவும் அழகாகவும் எழுதியிருக்கும் நண்பர் கலையரசனுக்கு நன்றி.

  இந்தக் கட்டுரைக்கும் இனி தொடர்ந்து வரப்போகும் கட்டுரைகளுக்கும் உங்களுடைய references ஐயும் கொடுக்க முடிந்தால் விருப்பமும் நேரமும் வாய்ப்பும் இருப்பவர்கள் மேலும் படித்துப் புரிந்துகொள்ள ஏதுவாக இருக்கும்.

 4. ருவாண்டாவின் கொலை வெறியாட்டங்களையும் ஐரோப்பிய அமெரிக்க பின்னணியையும் படிக்கும் போது இனம் என்பதையே மறுபரிசீலனை செய்யவேண்டிய அவசியமிருப்பது புரிகிறது. இனம் என்பதில் அறிவியலோடு அரசியலும் கொஞ்சம் கலந்திருக்கும் எனத்தான் கருதிவந்தேன். ஆனால் அரசியல் தான் நிறைய இருக்கிறது என்பது தெரிகிறது. அதே நேரம் ஆரிய இனம் என்பது கற்பனையானது திராவிட இனத்தின் அதிகாரப்பிரிவு தான்ஆரிய மாகியது என முன்னர் படித்தது நினைவுக்கு வருகிறது.

  தோழமையுடன்
  செங்கொடி

 5. இன்று, எழுத்தாளர் அருந்ததிராய் சென்னை லயோலா கல்லூரி திறந்தவெளி அரங்கில், மாலை 5.30க்கு மணிக்கு ஈழம் குறித்து பேசுகிறாராம்.

 6. உண்மையில் ஈழம் மற்றும் ருவான்டா இவற்றின் ஒப்பிடு மிகவும் எளிதக ஏகாதிபத்தியத்ன் தோளை உரித்துள்ளது.

  கலையின் எழுத்து ஒவ்வொன்றும் சாட்டை அடியாக உள்ளது.

  சு.ராஜன்

 7. ஒரு இருண்ட வரலாற்றை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த கலையரசன் அவர்களுக்கு நன்றி!

  //ருவான்டா-இலங்கை, துட்சிகள்-தமிழர்கள், ஹூட்டுகள்-சிங்களவர்கள், பெல்ஜியம்-பிரிட்டன், இந்தச் சொற்களை மாற்றிப் போட்டுப் பாருங்கள். //

  துட்சிகளையும் தமிழர்களையும் ஒப்பிடுவது சரியானதா? தமிழர்கள் வந்தேறிகள் அல்ல ஹூட்டுகள் போன்று தமிழர்கள் மீதான சிங்களவர்கள் பேரினவாத தாக்குதலுக்கு எந்த வரலாற்று ஆதாரங்களையும் சிங்கள பேரினவாதிகளால் காட்டமுடியாதே?

 8. கலையரசன், நீங்கள் ஈழப்பிரச்சனையை ருவாண்டாவுடன் ஒப்பிட்டு ஒரு தெளிவான விளக்கத்தை கொடுக்கவில்லை என்பது என் குற்றச்சாட்டு. எனக்கு சற்று குழப்பமாக உள்ளது. ஈழ்த்தில் யார் துட்சிகள்? யார் ஹீட்டுகள்? ஈழத்தில் தமிழன அழிப்பை யார் பின்னாலிருந்து இயக்குகிறார்கள்? ச‌ற்று தெளிவாக விளக்குங்கள்.

 9. //யார் எங்கே இருந்து வந்தார்கள் என்பது முக்கியமல்ல. அப்படிப் பார்த்தால், வெள்ளையினத்தவரும் ஆப்பிரிக்காவில் இருந்து தான் வந்திருக்கிறார்கள்//

  அடித்துச் சொல்லுங்கள் கலை. இனம், மதம், மொழி, தோல் நிறம் மட்டும் பார்த்து உணர்வு பூர்வமாக கூட்டமாக சேரும் மனித மனம் செறிவடைந்து, எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க நாம் சேர்ந்து உழைக்க வேண்டுமென்றால் இதுதான் சரியான ஆரம்பப் பாடம்.

 10. //இனிமேல், இங்கிலாந்து காலனி ஆதிக்கத்தை குறை சொல்லிக்கொண்டிருப்பதால், வன்னியில் மடிந்துகொண்டிருக்கும் என் உடன் பிறப்புகளுக்கு மீட்சி வந்து விடுமா? //

  அப்படியானால் எதற்காக ஈழத் தமிழர் பிரச்சினையில் இங்கிலாந்து தலையிட வேண்டும் என்று கேட்கிறீர்கள்? சிங்களவனோடு அடி பட்டோ பேசியோ தீர்த்துக் கொள்ள வேண்டியது தானே?

 11. //யாழ்ப்பாணத்தில் வேளாள ஆதிக்கம் என்பது யதார்த்தமான உண்மைதானே. இன்று ஈழப் போராட்டம் காரணமாக இந்த முரண்பாடு பின்னுக்கு போயிருக்கலாம். //

  அது இன்னும் பின்னுக்கு போகவில்லை, வினவு. வேறு வடிவம் எடுத்திருக்கிறது. கனடாவிலும், ஐரோப்பாவிலும் வாழும் புலம்பெயர்ந்த தமிழ் மக்களில் பெரும்பான்மையானோர் யாழ் சைவ வேளாளர்கள் தான் என்ற உண்மையை மறுக்க முடியாது. அதனால் ஈழப் போராட்ட அரசியலை தமது நலன்களுக்கு ஏற்ற மாதிரி நடத்திக் கொண்டிருக்கிறார்கள். வெளிநாடு போக வசதியில்லாமல் ஈழத்தில் தங்கி விட்ட தாழ்த்தப்பட்ட சாதி மக்கள் போராடி சாகிறார்கள். அது வரை வெளிநாடுகளிலும், கொழும்பிலும் வசதியாக வாழ்ந்து கொண்டிருக்கும் யாழ் சைவ வேளாளர்கள், தமிழீழம் கிடைத்தால் தாமே சென்று ஆளலாம் என்று கனவு காண்கிறார்கள். இதைதான் ஆண்ட பரம்பரை மீண்டும் ஒரு முறை ஆள நினைப்பதில் என்ன தவறு என்று கேட்கிறார்கள்.

  ரதி கேட்கிறார்:
  //கிழ‌க்கு மாகாண‌, மலைய‌க‌ தமிழ‌ர்க‌ள் முன்னுக்கு வ‌ந்தார்களா? You must be kidding me. //

  இதற்குப் பின்னே யாழ் பிராந்திய மேலாதிக்கவாதம் மறைந்திருக்கிறது. கிழக்கு மாகாண, மலையகத் தமிழர்கள் குறுக்கு வழியால் தான் முன்னுக்கு வர முடியும் என்று ஏளனமாகப் பார்க்கிறார்.

  மலையக மக்கள் எல்லோருமே குடியுரிமையற்ற தோட்டத் தொழிலாளர்கள் இல்லை. இன்று பெரும்பாலான மக்கள் குடியுரிமையுடன் படித்து வேறு தொழில்களில் இருக்கிறார்கள். ரதியைப் பொறுத்தவரை மலையக மக்கள் அனைவரும் குதிரை லாயங்களில் வாழ்வதாக சொல்வதும், இந்தியாவில் சேரிகளில் வாழும் மக்கள் எப்படி முன்னுக்கு வர முடியும் என்று கேட்பதும் ஒன்று தான். இந்தியாவில் பிற்படுத்தப் பட்ட சாதிகளுக்கு இட ஒதுக்கீடு வழங்கிய மண்டல் கமிஷனை எதிர்த்த மேல்சாதி திமிர் ரதியிடமும் தெரிகின்றது.

 12. //மேல்சாதியின் சாதிவெறிதான் களையப்படவேண்டும்//

  வினவு,

  மேற்கண்ட விவாதத்தில், நீங்கள் பதிலளிக்கும் பொழுது, ‘மேல்சாதி’ என குறிப்பிடுகிறீர்கள்.

  இப்படி சுட்டுவது சரியா? கீழ்சாதி என சொல்வதில்லை. தாழ்த்தப்பட்ட சாதி என்று தான் சொல்கிறோம்.

  அதுபோல, மேல் சாதி என அழைப்பது எந்த விதத்தில் சரி! ஒன்று – ஆதிக்க சாதிகள் என அழைக்க வேண்டும். அல்லது ‘மேல்’சாதி சாதி என சுட்டவேண்டும். அல்லது வேறு சரியான வார்த்தை இருந்தால், சொல்லவேண்டும்.

  கொஞ்சம் விளக்குங்களேன்.

 13. வினவு,

  முதலில் எனது ஓர் கருத்தை தெளிவாக உங்களிடம் முன் வைக்க விரும்புகிறேன். Eurasin, நான், நாம் இருவருமே ஈழத்தமிழர்கள். நாங்கள் இருவரும் உங்கள் Bloq இல் வந்து சாதியை சொல்லி வாதம், எதிவாதம் செய்வது அநாகரிகம் என்று கருதுகிறேன். அதற்காக வருந்துகிறேன்.

  ஈழத்தில் சாதிப்பாகுபாடும் அதனால் சமூகத்தில் ஏற்பட்ட ஏற்றத்தாழ்வுகளையும் அறியாதவள் அல்ல நான். ஆனால், நான் விடுதலை புலிகளின் De facto state இல் அதெல்லாம் களையப்பட்டதை பார்த்திருக்கிறேன். சந்தோசப்பட்டிருக்கிறேன். அதனால் தான் நான் இனிமேலும் சாதி பற்றி விவாதிக்க வேண்டாம் என்று நினைக்கிறேன். அது தவிர, ஈழத்தில் சாதி பார்த்தா தமிழன் தலை மீது குண்டு விழுகிறது?

  //யாழ்ப்பாணத்து மேல்சாதியினர் தமது சமூக மேலாண்மையின் காரணமாக மற்ற மக்களைவிட எல்லா விசயங்களிலும் முன்னணி வகித்தார்களா இல்லையா?// ஒடுக்கப்பட்ட சாதிகளின் சமூகப் பொருளாதார விடுதலையின் மூலமே அந்த திமிர் களையப்பட முடியும். சாரமாகச் சொன்னால் சாதி வெறியின் சமுக இருப்பை நீங்கள சரியாக புரிந்து கொள்ளவில்லையோ எனத் தோன்றுகிறது.//

  இதை நீங்க‌ள் சொன்ன‌தையிட்டு மிக‌வும் ச‌ந்தோச‌ம். கார‌ண‌ம், நீங்க‌ள் சொன்ன‌ “யாழ்ப்பாண‌து மேல்சாதியின‌ர்” அவ‌ர்க‌ளால் தாழ்த்த‌ப்ப‌ட்ட‌ சாதி என்று க‌ருத‌ப்ப‌ட்ட‌ ஒரு சாதியில் இருந்து வ‌ந்த‌வ‌ள் தான் நானும். ந‌ன்றாக‌ க‌வ‌னியுங்க‌ள், அவ‌ர்க‌ளால் “க‌ருத‌ப்ப‌ட்ட‌”, நான் ஒரு நாளும் என்னை தாழ்த்த‌ப்ப‌ட்ட‌ சாதியாக‌ நினைத்த‌து கிடையாது. அப்ப‌டி நான் நினைத்தால் நீங்கள் சொன்ன என் ச‌மூக‌ பொருளாதார‌ விடுத‌லையை யார் என‌க்கு பெற்று கொடுப்பார்கள். என‌க்கு நியாயமாக கிடைக்க‌ வேண்டிய‌தை, நான் போராடி பெற‌வேண்டியிருப்ப‌து தான் துர‌திஷ்ட‌ம். வினவு, நீங்க‌ள் சொன்ன சாதி வெறியின் சமூக இருப்பை மேல்சாதியினரின் சிந்தனையை மாற்றுவதன் மூலம் தான் மாற்ற முடியும் என்று ஒவ்வொரு தனிமனிதனும் நினைத்தால் அவன் வாழ்க்கையில் முன்னேறுவது எப்போது? எந்தவொரு தனிமனிதனும் சாதி, பொருளாதாரம் என்கிற தடைகளை எல்லாம் தாண்டி முன்னேற வேண்டும். ஒருவர் தான் தாழ்த்தப்பட்ட சாதி என்று தன்னைத்தானே முடக்கிக்கொள்ளாமல், த‌ன் அறிவையும் சிந்த‌னையையும் வ‌ள‌ர்ப்ப‌தோடு த‌ன்ன‌ம்பிக்கையையும் வ‌ள‌ர்க்க‌ வேண்டும். அப்பொழுது கிடைக்கும் தாழ்த்த‌ப்ப‌ட்ட‌வ‌னுக்கு சமூக‌ பொருளாதார விடுத‌லை. நீங்க‌ள் சொன்ன‌ “சாதி திமிரை” யாரோ த‌ன் ம‌ன‌திலிருந்து க‌ளையும் வ‌ரை தாழ்த‌ப்ப‌ட்ட‌வ‌ன் காத்திருக்க‌ வேண்டுமா? அது ந‌டைமுறைக்கு சாத்திய‌மா?

 14. //நீங்கள் என்னைப்பற்றி என்ன அவதூறு சொன்னாலும் சரி.//

  ரதி, நான் சொன்னது எதுவும் உங்கள் மனதை புண்படுத்தி இருந்தால் அதற்காக மன்னிப்புக் கேட்கிறேன். உங்களது கருத்தை தான் எதிர்த்தேன் தவிர உங்கள் மீது அவதூறு கூறும் எண்ணம் இல்லை.

  //மறுபடியும் நான் சொல்வது எம் முன்னோர்களும் பெரியோர்களும் செய்த தவறை நாங்கள் செய்ய வேண்டாம் என்பதுதான்.//

  எம் முன்னோர்களும் பெரியோரும் சிங்கள சிறுவர்களை வீட்டு வேலைக்காரர்களாக வைத்திருந்தார்கள். சிங்களப் பெண்களை அனுபவித்து பிள்ளை கொடுத்து விட்டு யாழ்ப்பாணத்திற்கு கம்பி நீட்டினார்கள். அப்படி தமிழருக்கு பிறந்த bastard kids தான் சிறி லங்கா ஆமியில் சேர்ந்து பழி வாங்க வந்தார்கள். இது கதையல்ல. இது தான் எமது முன்னோர்கள் மோட்டுச் சிங்களவனை அடக்கியாண்ட லட்சனம். உடனே அப்படி எதுவும் நடக்கவில்லை என்று மறுக்க வருவீர்கள்.
  எமது முன்னோர்களும் பெரியோர்களும் மலைநாட்டு தமிழனை தோட்டக் காட்டான் என்று இகழ்ந்தார்கள். வன்னியில் கூலியாட்களாக வைத்து கசக்கி பிழிந்தார்கள். யாழ்ப்பாணத்தில் வீட்டு வேலைக்காரர்களாக வைத்திருந்தார்கள்.
  இந்தக் காலத்தில திருந்தின தமிழர் என்ன செய்திட்டினம்? கிழக்கு மாகானத்திலை சிங்களவனையும் முஸ்லிமையும் இனப்படுகொலை செய்தார்கள். இந்த இனப்படுகொலை நடக்கேக்கை நீங்கள் நித்திரையில் இருந்தீங்களோ?
  அதென்னை தமிழன் சாகிற நேரம் மட்டும் உங்களுக்கு விழிப்பு வருது. தமிழ் இனப்படுகொலை நடந்தால் சத்தம் போடுறியள். சிங்கள இனப் படுகொலை, முஸ்லிம் இனப் படுகொலை நடக்கும்போது கண்டுகொள்ளாமல் கம்மெண்டு இருக்கிறியள். இது தான் உங்கட மனச் சாட்சியோ?

  அம்மா தாயே ஆள விடுங்கப்பா. இனிமே நீங்க என்ன சொன்னாலும் ஆமா எண்டு தலை ஆட்டுரன். சரியே?

 15. அவர்கள் கருப்பினத்தவருக்கு மட்டுமா இனவெறி கற்பித்தனர் ?
  தமிழகத்தில், ஸ்ரீலங்காவில் கூடத்தான் அதே இனவெறியை கற்பித்துள்ளனர்.

  தமிழகத்தில் பிரச்சனை ருவாண்டா போல், இலங்கையைப் போல் பெரிதாகப் போகவில்லை. அவ்வளவு தான் வித்தியாசம்.

  ஆரியம்-திராவிடம் என்பது டுட்சி-ஹூடு என்று வைத்துக் கொள்ளலாம்.

  மரபணுச் சோதனைகள் மூலம் ஹூடு இனமும் டூட்ஸி இனமும் வேறுபட்டது அல்ல. அவர்களுக்குள் ஒற்றுமைகளே அதிகம் உள்ளன என்றும் நிறுவப்பட்டுவிட்டது.

  ஆரியம்-திராவிடம் என்கின்ற குப்பையை எத்தனை முறை அள்ளி இந்து மஹா சமுத்திரத்தில் வீசினாலும் அதை மீண்டும் மீண்டும் கொண்டு வந்து கொட்டும் விஷ ஜந்துக்கள் எல்லாம் இங்கு அதிகம் இருக்கிறார்கள்.
  அவர்களுக்குத் தமிழகமும் ருவாண்டா அல்லது இலங்கை போல் பற்றிக் கொண்டு எரிய வேண்டும், அதில் அவர்கள் குளிர் காய வேண்டும் என்று எத்தனை ஆசை!

 16. ரதி அவர்களே,

  ஓஹோ இப்ப தான் புரியுது….
  நீங்கள் சொல்வது என்னவென்றால்…
  கங்கை சென்று கடாரம் வென்ற சோழனின் கொடியை ஈழத்தமிழர்கள் தமது தேசியக் கொடியாக வரித்துக் கொண்டதேன்? புலிகளும் சோழர்கள் மாதிரி நாடுகளைப் பிடித்து, அதாவது இந்தோனேசியா வரை தமிழ் சாம்ராஜ்யத்தை கொண்டு வர விரும்புகிறார்களா?

  தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிட்டு பேசுகிறார்களே. அவர்களின் நோக்கம் பாலஸ்தீனம் போல இலங்கை முழு நாட்டையும் ஆக்கிரமிப்பதா?

  உங்களுடைய புலி அனுதாபிகள் இஸ்ரேலியர்கள் பாலஸ்தீனத்தை ஆக்கிரமித்ததை போல சோழர்கள் நாடுகளைப் பிடித்ததை போல முழு இலங்கையையும் ஆள விரும்புகிறார்களா? இப்படி ஒரு நோக்கம் இருப்பதாக நீங்கள் சொல்லவேயில்லை?

 17. உங்களுக்கு நல்ல கற்பனை வளம் உள்ளது போலுள்ளது. நீங்கள் ஆணா அல்லது பெண்ணா?

 18. கலையரசன்,

  உங்கள் பதிலுக்கு நன்றி.//கட்டுரையில் என்னால் வெவ்வேறு இடங்களில் கூறப்பட்ட வாக்கியங்களை வெட்டி ஒட்டி பேசுவது சரியானதாகப் படவில்லை// கலை, மறுபடியும் நான் உங்களுக்கு தெளிவு படுத்த விரும்புவது எதையும் வெட்டி ஒட்டி உங்கள் கட்டுரையில் குற்றம் கண்டுப்டிப்பது என் நோக்கம் அல்ல.

  Brithish colonization screwed up many countries. I agree with you. Here, let us talk about the cureent conflicting issues in Srilanka.

  நீங்களாக இருந்தாலும் சரி, யாராக இருந்தாலும் சரி, எங்கள் ஈழப்பிரச்சனையை ஏதோ ஒரு நாட்டின் பிரச்சனையுடன் ஒப்பிட்டு எங்கள் பக்கமுள்ள நியாயத்தை மறுக்கவோ அல்லது சிங்கள அரசு செய்யும் தமிழின இனப்படுகொலையை பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்று நியாயப்படுத்துவதையோ ஒரு ஈழத்தமிழன் எப்படி ஏற்றுக்கொள்வான்? //தமிழ் தேசியவாதம் தனக்கென உருவாக்கி வைத்துள்ள ஒரு தலைப்பட்சமான சரித்திரம்.// எனக்கு தெரிந்தவரை, தமிழ் தேசியம் எந்த ஒரு தலைப்பட்சமான சரித்திரத்தையும் புதிதாக உருவாக்கவில்லை. மகாவம்சத்தில் தமிழர்கள் பற்றி திரித்துக் கூறப்பட்ட விடயங்களைத்தான் மறுக்கிறது. இலங்கை தேசியத்தில் தனக்கு மறுக்கப்பட்ட உரிமைகளைத்தான் தமிழன் கேட்கிறான்.அதற்காக தமிழ் தேசியத்தை கட்டி எழுப்ப நினைக்கிறான்.நீங்கள் ஆயிரம் உதாரணம் அல்லது வரலாறு காட்டிப் பேசினாலும் இலங்கை இனப்பிரச்சனையில் த‌மிழன் தான் அதிக இழப்புகளையும் தாங்க முடியாத வேதனைகளையும் இன்னும் அனுபவித்துக் கொண்டிருக்கிறான். இதை உங்களால் மறுக்க முடியுமா? உயிர் பயமின்றி வாழவும், எங்கள் உரிமைகளைப் பாதுகாக்கவும் தனியாக பிரிந்து போக நினைத்தால் அது தவறு என்று நினைகிறீர்களா?

 19. //Brithish colonization screwed up many countries. I agree with you. Here, let us talk about the cureent conflicting issues in Srilanka.//

  இன்றைய இலங்கைப் பிரச்சினையில் பிரிட்டனுக்கு எந்த வித சம்பந்தமும் இல்லை என்று நம்பும் அப்பாவித்தனம் அசர வைக்கின்றது. ஈழப்போர் ஆரம்பமாகிய காலத்தில் இருந்து பிரிட்டனும், பின்னர் அமெரிக்காவும் இலங்கை அரச படைகளுக்கு இராணுவ பயிற்சியும் ஆலோசனையும் வழங்கி வருகின்றன. இஸ்ரேலோ இலங்கை இராணுவத்திற்கும், விடுதலைப் புலிகளுக்கும் ஒரே முகாமில் வைத்து பயிற்சியளித்தது. மேற்கத்திய நாடுகள் தமிழனும், சிங்களவனும் இப்படியே அடிபட்டுக் கொண்டிருக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றன. ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்ற பழமொழியை கேள்விப் படவில்லையா? மற்றும்படி தமிழன் அழிந்தாலும், சிங்களவன் அழிந்தாலும் அவர்களுக்கு எந்த கவலையுமில்லை. இலங்கையை மறுகாலனியாதிக்கத்தின் கீழ் கொண்டு வர விரும்பும் அவர்களின் நோக்கம் நிறைவேறினால் சரி. நிலைமை இப்படி இருக்கையில் தமிழினம் மட்டும் அதிகமாக அழிகிறது என யாரும் இரக்கப்பட்டு வரப்போவதில்லை. அதேநேரம் தமிழனும் உலகில் வேறு எந்த இனம் அழிந்தாலும் அக்கறைப்படுவதில்லை என்பது குறிப்பிடப்பட வேண்டிய உண்மை. அதனால் தமிழனுக்காக பேச இன்னொரு தமிழன் மட்டுமே வருவான்.

  //சிங்கள அரசு செய்யும் தமிழின இனப்படுகொலையை பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்று நியாயப்படுத்துவதையோ ஒரு ஈழத்தமிழன் எப்படி ஏற்றுக்கொள்வான்?//

  ஜோர்ஜ் புஷ் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் அறிவித்த காலத்தில் இருந்தே நான் உட்பட பலர் அதனை எதிர்த்து வந்திருக்கிறோம். விரைவில் இலங்கை அரசும் அதனை கையில் எடுக்கும் என்று ஆரூடம் கூறியுள்ளோம். இலங்கை மட்டுமல்ல ஈராக், ஆப்கானிஸ்தான், இஸ்ரேல், இந்தியா ஆகிய நாடுகளில் நடக்கும் பயங்கரவாதத்திற்கு எதிரான போர்களை தொடர்ந்து கண்டித்தே வந்திருக்கிறேன். ஆனால் அன்று புஷ்ஷின் பயங்கரவாதத்திற்கு எதிரான போரை ஆதரித்த தேசியவாதத் தமிழர்கள் (உங்கள் மொழியில்: ஈழத் தமிழர்கள்) நிறையப்பேர். பாலஸ்தீன இன அழிப்பு செய்யும் இஸ்ரேலிய பயங்கரவாதத்திற்கு எதிரான போரையும், காஷ்மிரில் இன அழிப்பு செய்யும் இந்தியாவின் பயங்கராதத்திற்கு எதிரான போரையும் ஆதரிக்கும் ஈழத்தமிழரை பற்றி உங்களுக்கு நன்றாகவே தெரியும். அதே தமிழர்கள் ராஜபக்ஷவின் பயங்கரவாதத்திற்கு எதிரான போரை எதிர்ப்பதாக சொன்னால் அது சிரிப்புக்குரியதாகாதா? கருத்து நேர்மையற்ற அவர்கள் இரட்டை வேடம் போடுவது உங்கள் கண்களுக்கு தெரியவில்லையா?

  //எனக்கு தெரிந்தவரை, தமிழ் தேசியம் எந்த ஒரு தலைப்பட்சமான சரித்திரத்தையும் புதிதாக உருவாக்கவில்லை. மகாவம்சத்தில் தமிழர்கள் பற்றி திரித்துக் கூறப்பட்ட விடயங்களைத்தான் மறுக்கிறது. //

  நான் ஏற்கனவே சொன்னதை இங்கே நீங்கள் நிரூபிக்கின்றீர்கள். தமிழன் தனக்கு சாதகமாக சொல்லிக் கொள்ளும் சரித்திரத்தை உலகில் தமிழன் மட்டுமே ஏற்றுக் கொள்வான். அதே போலத்தான் சிங்கள சரித்திரம் சிங்களவர் மத்தியில் மட்டும் தான் எடுபடும். அரசர்கள் காலத்தில் நடந்த கதைகளை கூறும் மகாவம்சத்தை எடுத்துக் காட்டி பேசுவது காலத்திற்கு ஒப்பானது அல்ல. மகாவம்சம் மட்டுமல்ல, இராமாயாணம், மகாபாரதம் கூட அன்று அரசியல் அதிகாரத்தை வைத்திருந்தவர்கள் தமக்கு சாதகமாக எழுதிக் கொண்டவை தான். இவற்றில் அரைவாசி உண்மையும், அரைவாசி கற்பனையும் கலந்திருக்கும். இராமாயணத்தில் இலங்கை, தென்னிந்திய மக்களை குரங்குகளோடு ஒப்பிட்டு எழுதப்பட்டுள்ளது. அதற்காக நீங்கள் இராமனை கடவுளாக வழிபடும் இந்துக்களை எதிர்த்து சண்டைக்கு போவீர்களா?

  //இலங்கை இனப்பிரச்சனையில் த‌மிழன் தான் அதிக இழப்புகளையும் தாங்க முடியாத வேதனைகளையும் இன்னும் அனுபவித்துக் கொண்டிருக்கிறான். இதை உங்களால் மறுக்க முடியுமா? உயிர் பயமின்றி வாழவும், எங்கள் உரிமைகளைப் பாதுகாக்கவும் தனியாக பிரிந்து போக நினைத்தால் அது தவறு என்று நினைகிறீர்களா?//

  உங்களது இரட்டை அளவுகோல் முறை இங்கேயும் தென்படுகின்றது. இலங்கையில் ஆயிரம் வருடங்களாக உயர்த்தப்பட்ட சாதியினரால் இன அழிப்பு செய்யப்பட்ட தாழ்த்தப்பட்ட சாதிகளை சேர்ந்த மக்கள் அதையெல்லாம் மறந்து சகோதர பாசத்துடன் வாழ வேண்டும் என்று புத்தி சொல்கிறீர்கள். மறு பக்கம் அதே இனப்படுகொலையை காரணமாக காட்டி சிங்களவனிடம் இருந்து பிரிந்து போக வேண்டும் என்று வாதாடுகிறீர்கள். ஆயிரம் வருடங்களாக தமிழரில் ஒரு பிரிவினரை (சாதி) அடிமைகளாக வைத்திருந்த கொடுமையை, “குடுமிப்பிடி சண்டை” என்று உங்களால் சாதாரணமாக எடுக்க முடிகிறது. ஆனால் மறுபக்கம் ஈழத்தமிழன் சிங்களவனால் பட்ட வேதனையை மறக்கக் கூடாது என்று வாதாடுகிறீர்கள். இந்தியாவில் குஜராத்தில் இந்துக்களால் நடத்தப்பட்ட முஸ்லீம் இன அழிப்பு கூட உங்களுக்கு ஒரு பொருட்டாக தெரியவில்லை. இவ்வாறு ஆளுக்கொரு நியாயம் பேசுவதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

  //இலங்கை தேசியத்தில் தனக்கு மறுக்கப்பட்ட உரிமைகளைத்தான் தமிழன் கேட்கிறான்.அதற்காக தமிழ் தேசியத்தை கட்டி எழுப்ப நினைக்கிறான்.//

  உலகில் தமிழர் மட்டும் தான் பாதிக்கப்படுவதாகவும், தமிழருக்கு மட்டுமே பிரச்சினை இருப்பதாகவும் கருதுவது வெகுளித்தனமானது. அது தமிழரின் குறுகிய மனப்பான்மையை எடுத்துக் காட்டுகின்றது. ஈழத் தமிழருக்கு இருக்கும் அதே உரிமை, இந்தியாவில் இன அழிப்பு செய்யப்படும் காஷ்மீரியருக்கும், அசாமியருக்கும் உண்டு. இஸ்ரேலில் பாலஸ்தீனியர் முதல் அவுஸ்திரேலியாவில் அபோரிஜின் மக்கள் வரை இனப்படுகொலையை காரணமாகக் காட்டி பிரிந்து சென்று தனிநாடு அமைக்க விரும்பும் இனங்கள், உலகம் முழுவதும் நூற்றுக் கணக்கில் இருக்கின்றன. ஆனால் இந்த தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமையை ஏற்றுக்கொள்ளும் ஈழத்தமிழர்கள் எத்தனை பேர்?

  உலகில் பிற ஒடுக்கப்பட்ட மக்களுடன் ஒற்றுமையை ஏற்படுத்த விரும்பாத, அவர்கள் கொல்லப்பட்டும் போது ஒரு துளி கண்ணீர் சிந்தாத ஈழத்தமிழர்கள், உலகம் முழுவதும் தம் மீது இரக்கம் காட்ட வேண்டும் என்று எப்படி எதிர்பார்க்க முடிகிறது? கொங்கோவில் நடந்த போரில் ஐந்து மில்லியன் மக்கள் கொல்லப்பட்டதை கண்டு கொள்ளாத உலக நாடுகள், காஸாவில் ஒரே வாரத்தில் இஸ்ரேலால் ஆயிரம் பேர் கொல்லப்பட்டதை கண்டும் காணாமல் இருந்த உலக நாடுகள், சோமாலியாவில் கடந்த வருடம் மட்டும் ஒரு மில்லியன் மக்கள் கொல்லப்பட்ட செய்தியையே வெளியில் சொல்லாத உலகநாடுகள், ஈழத் தமிழர் மரணிக்கும் போது மட்டும் அனுதாபம் காட்டுவார்கள் என எதிர்பார்க்கிறீர்களா?

  இங்கே கூறப்பட்ட உண்மைகள், கருத்துகள் யாவும் உங்களுக்கு புரியவில்லை என்று சொல்ல முடியாது. இவையெல்லாம் நீங்கள் ஏற்கனவே நம்பிகொண்டிருக்கும் அரசியல் கொள்கையுடன் முரண்படுவதால், உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாமல் உள்ளது. ஆகவே ஒரே கேள்வியை திரும்பத் திரும்ப கேட்கும் போது, அதற்கு நானும் திரும்ப திரும்ப ஒரே பதிலை சொல்லிக் கொண்டிருப்பது சரியாகப் படவில்லை. மன்னிக்கவும்.

 20. //முதலாம் உலக யுத்தத்தில் ஜெர்மனியை தோற்கடித்த பெல்ஜியம், ருவான்டாவை தனது காலனியாக்கியது. “பெல்ஜியத்தால் பாதுகாக்கப்படும் பிரதேசம்” என்று ஐ.நா. மன்றத்தின் முன்னோடியான உலக மக்கள் பேரவை தீர்மானித்தது.//
  கலையரசன் இந்த பகுதியில் நீங்கள் விவரித்த விசயங்களில் முதல் மற்றும் இரண்டாம் உலகப் போர்களை இணைத்து ஒரே போராக விவரித்துள்ளீர்கள் என நினைக்கிறேன். அன்றைய ருவாண்டா புருண்டி என்ற இருநாடுகளின் கூட்டாக 62 வரை இருந்த்து என நினைக்கிறேன். இது சரியா என சரிபார்க்கவும்.

  லீக் ஆப் நேசன்ஷ்க்கு இப்படி ஒரு பெயரை எப்படி தமிழ்படுத்தினீர்கள்… கொஞ்சம் சரி செய்யலாமே..

  ஆர் பி எப் எப்படி துட்சி விடுதலை இயக்கம் ஆனது என்பதும் சந்தேகம். அதன் தன்மை அப்படி இருந்த்து என்பது வேறு.

  ஐநா சமாதானப் படையின் பெயர் கூட ஏதோ தவறு போல தெரிகின்றது.

 21. மணி,
  நீங்கள் சுட்டிக்காட்டும் விடயங்களில் அதிக விளக்கம் தேவை தான். இரண்டாம் உலகப் போரிற்கு பின்னர் தான் ஐக்கிய நாடுகள் சபை உருவானது. அதற்கு முன்னர் குறிப்பிட்ட சில நாடுகள் அங்கம் வகித்த கூட்டமைப்பு இருந்தது. “லீக் ஒப் நேஷன்சிற்கு” சரியான தமிழ்ப்பெயர் இந்தக்கட்டுரையை எழுதிக்கொண்டிருந்த போது புலப்படவில்லை. தெரிந்தவர்கள் சொல்லவும். இனிமேல் திருத்திக் கொள்கிறேன்.

  ஐ.நா. சமாதானப்படை அனுப்பப்படும் போது ஒவ்வொரு நடவடிக்கைக்கு ஒவ்வொரு பெயரிடுவது வழக்கம். வெவ்வேறு நாடுகளில் இருக்கும் சமாதானப்படைகளை வேறுபடுத்தி அறிவதற்காக இந்த ஏற்பாடு. அப்படி ருவாண்டாவிற்கு சென்றது MINUAR என அழைக்கப்பட்டது.

  RPF துட்சிகளின் விடுதலை இயக்கம் என்று அந்த இனத்தை சேர்ந்தவர்கள் சொல்லிக்கொள்கின்றனர். அநேகமாக உலகின் எந்த இனத்தின் விடுதலை இயக்கமாயினும், அங்கே இனவாத கொள்கைகளும் இருக்கத் தான் செய்யும்.

  62 வரை ருவாண்டாவும், புருண்டியும் ஒரே பெல்ஜிய நிவாகத்தின் கீழ் இருந்தது சரியானதே. சுதந்திரம் வழங்கும் போது இரு வேறு நாடாக்கினார்கள். இருப்பினும் இந்தக் கட்டுரை ருவாண்டா பற்றி மட்டும் சொல்வதால், புரூண்டி பற்றி அதிக அக்கறை செலுத்தவில்லை. அதேநேரம் புரூண்டியும், ருவாண்டா போல ஒரே மாதிரியான இனப்பிரச்சினை கொண்டுள்ளதால், காலனிய கால சரித்திரம் அந்த நாட்டிற்கும் பொருந்தும்.

  தான்சானியாவும், ருவாண்டாவும் முதலாம் உலகப்போர் வரை ஜெர்மனியின் காலனியாக இருந்தன. முதலாம் உலகப் போரில் பெல்ஜியமும், ஜெர்மனியும் இருவேறு அணிகளில் நின்ற போது, பெல்ஜியப்படைகள் கொங்கோவில் இருந்து படையெடுத்து ருவாண்டாவை கைப்பற்றின. இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனி தனது இழந்த ஆப்பிரிக்க காலனிகளை மீட்க முயலவில்லை.

 22. United Nations Assistance Mission for Rwanda (UNAMIR) என்ற பெயரில்தான் ஐநாவின் அமைதிப்படை சென்றது என நினைக்கிறேன்.

  இரண்டாம் உலகப் போருக்குப் பிறகுதான் ஐநா சபையின் பாதுகாக்கப்பட்ட பகுதி என ருவாண்டா புருண்டி பகுதி அறிவிக்கப்பட்டது என நினைக்கிறேன். இதற்கு முன் முதல் மற்றும இரண்டாம் உலகப்போருக்கு இடைப்பட்ட காலத்தில் இப்பகுதி பெல்ஜியத்தின் நேரடியான காலனியாக இருந்த்து என நினைக்கிறேன்

 23. United Nations Assistance Mission for Rwanda (UNAMIR)
  நன்றி, நீங்கள் ஆங்கிலத்தில் சொன்னதை நான் பிரெஞ்சில் (MISSION DES NATIONS UNIES POUR L’ASSISTANCE AU RWANDA )குறிப்பிட்டிருக்கிறேன். அதனால் தான் இந்தக் குழப்பம்.

  //இரண்டாம் உலகப் போருக்குப் பிறகுதான் ஐநா சபையின் பாதுகாக்கப்பட்ட பகுதி என ருவாண்டா புருண்டி பகுதி அறிவிக்கப்பட்டது என நினைக்கிறேன். இதற்கு முன் முதல் மற்றும இரண்டாம் உலகப்போருக்கு இடைப்பட்ட காலத்தில் இப்பகுதி பெல்ஜியத்தின் நேரடியான காலனியாக இருந்த்து என நினைக்கிறேன்.//

  நீங்கள் கூறும் தகவல் சரியானது என்றே நானும் நம்புகின்றேன். திருத்தற்கு நன்றி.

 24. //இரண்டாம் உலகப் போருக்குப் பிறகுதான் ஐநா சபையின் பாதுகாக்கப்பட்ட பகுதி என ருவாண்டா புருண்டி பகுதி அறிவிக்கப்பட்டது என நினைக்கிறேன். இதற்கு முன் முதல் மற்றும இரண்டாம் உலகப்போருக்கு இடைப்பட்ட காலத்தில் இப்பகுதி பெல்ஜியத்தின் நேரடியான காலனியாக இருந்த்து என நினைக்கிறேன்.//

  ருவாண்டா தொடர்பான பெல்ஜிய ஆவணங்களை (French/Dutch) படித்துப் பார்த்த போது, அதில் ஜெர்மனியிடம் இருந்து கைப்பற்றிய கைப்பற்றிய காலம் தொடக்கம் தனது பாதுகாப்பு பிரதேசம் என்று நிர்வகித்ததாக எழுதப்பட்டிருந்தது. இருப்பினும் நடைமுறையில் பெல்ஜியம் ருவாண்டாவை தனது காலனியாகவே நடத்தி வந்தது. இந்த ஐரோப்பிய ஆட்சியாளர்கள் பத்திரத்தில் ஒன்றை எழுதிவிட்டு, நடைமுறையில் இன்னொன்றை நடைமுறைப்படுத்தி வந்துள்ளனர்.

 25. My reference is from the Class B Mandate of league of nations. The summary of event is given below .. is it correct or not… pls clarify with ur sources

  “Ruanda-Urundi (Belgium), formerly two separate German protectorates, joined as a single mandate from 20 July 1922, but 1 March 1926–30 June 1960 in administrative union with the colony Belgian Congo. After 13 December 1946, this was a United Nations Trust Territory (till the separate independence of Rwanda and Burundi on 1 July 1962) “

 26. நிறைய விஷயங்களைத் தெரிந்து கொண்டேன்.. மிக்க நன்றி..

  கலையரசன் உங்களுடைய ஒவ்வொரு பதிவும் காலத்தின் பொக்கிஷம்.. வரலாற்று ஆவணங்களைப் போல தாங்கள் தொகுத்து வழங்கியிருப்பது காலத்திற்கும் தமிழ் இனத்திற்கு மிகவும் உதவும்..

  வாழ்க உமது தொண்டு..

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க