privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்அமெரிக்காடிரேஸி சாப்மன் : நான் போராடப் பிறந்தவள்

டிரேஸி சாப்மன் : நான் போராடப் பிறந்தவள்

-

ன்னிடம் உள்ளதை உரித்தெடுத்து
என் தன்மானத்தைப் பறித்துச்செல்லப் பார்க்கிறார்கள்
என் உள்ளத்தை வதைத்து
வெள்ளையனுக்கு ஒத்தூதும்
குழலாக்க நினைக்கிறார்கள்
ஆனால் என் ஆன்மா விற்பனைக்கல்ல
நான் போராடப் பிறந்தவள்
அவர்களுக்கு நான் ஒரு சவால்!”

– ஓயாது சுற்றிச் சுற்றி வட்டமிடும் குரல், வைரம் பாய்ந்த குரல்; இது கறுப்பினப் பாடகி டிரேஸி சாப்மனின் குரல். அமெரிக்காவில் முப்பதுகளில் எழுந்த கறுப்பின போராட்ட இசை மீண்டும் பிறந்திருக்கிறது. இதில் முக்கியப் பங்கு டிரேஸிக்கு உண்டு.

அமெரிக்காவில் இன்று காட்டுக் கூச்சல் போடும் இசையே எங்கும் பரப்பப்பட்டுள்ளது. இதன் மத்தியில் மக்களின் வாழ்க்கைப் பிரச்சினை பற்றிய அக்கறையோடு பாடும் டிரேஸி சாப்மன் புதிய நம்பிக்கை நட்சத்திரமாக ஒளிவீசுகிறார்.

டிரேஸி சாப்மன்
டிரேஸி சாப்மன்

பிரமாண்டமான மேடை, கண்ணைப் பறிக்கும் அலங்கார விளக்குகள், மிகையான ஒப்பனைகள், எலெக்ட்ரானிக் ஜாலங்கள் – இவைகளோடு தான் எல்லா ‘பாப்’ இசைக்குழுக்களும் பாடுகின்றன, ஆடுகின்றன; இந்த ஆட்டங்கள் டிரேஸியின் நிகழ்ச்சிகளில் இல்லை.

அதோ டிரேஸி பாடுகிறார். ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் டிரேஸியின் மகுடிக்குக் கட்டுப்படுகிறார்கள் – உறங்குவதற்கல்ல, சிந்திப்பதற்கு. டிரேஸியின் பாடல் லட்சக்கணக்கானவர்களை சிந்திக்க வைக்கிறது. சிந்திக்க வைப்பவர்களை அமெரிக்க முதலாளிகளுக்குப் பிடிப்பதில்லை. அப்படிப்பட்டவர்களை பராமரிக்கப் போவதாகச் சொல்வார்கள். ஏதாவதொரு கெளரவப் பதவி கொடுத்து ஒரு நிறுவனத்தில் கட்டிப் போட்டு விடுவார்கள். சிறந்த இளைஞர்களை இப்படித்தான் விலைக்கு வாங்கி அடிமைகளாக்கி விடுகிறார்கள். இப்படி ‘வாய்ப்பு’ கிடைக்காமல் போனவர்கள் பிழைப்பு தேடி இசைக் கச்சேரிக்கு ஏறி இறங்கி அலைவர்கள் மக்களிடமிருந்தும், அவர்களது பிரச்சினைகளில் இருந்தும் இப்படிப் பட்டவர்கள் ரொம்பத் தொலைவு விலகிப் போய்விடுவார்கள்.

இரண்டிலுமே டிரேஸி அகப்படவில்லை.

எனக்கொரு விலை உண்டு என்று நினைக்கிறீர்கள்
இருப்பதை ஒரு விலைக்கு விற்பேன் என்று நம்புகிறீர்கள்
காசே கடவுள் மற்றது பொய் என்று அலறுகிறீர்கள்”

என்று சாடுகிறார் டிரேஸி. அவர் எப்படி வலைகளில் அகப்படாமல் தப்பினார்? அவரது வாழ்க்கைதான் அவருக்குக் கற்றுக் கொடுத்தது. அவர் வளர்ந்த ஏழை கருப்பின குடியிருப்பு அமெரிக்கச் சமுதாயத்தின் உண்மை முகத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியது.

டிரேஸியின் தாய் அவருக்கு கஷ்டம் என்றால் என்ன என்பதைக் கற்றுக் கொடுத்தாள். தனது குழந்தைகள் கஷ்டப்படக் கூடாது என்பதில் அவள் கவனமாக இருந்தாள். சுரண்டும். ஒடுக்கும் வெள்ளை இன அடக்குமுறை பற்றி நிறைய சொல்லிக் கொடுத்தாள். கறுப்பினக் குடியிருப்பில் டிரேஸி தான் வாழ்ந்து அனுபவித்ததன் மூலம் அமெரிக்கா பற்றிய ஆரம்பப் பாடங்களை நேரடியாகவே கற்றுக் கொண்டார்.

“அப்படியா அப்படி ஓர் இடம் இருக்கிறதா?
ஒன்றும் தெரியாததுபோல
பாசாங்கு செய்கிறார்கள்
ஒப்புக் கொள்ள மறுக்கிறார்கள்.

அப்படி ஒரு ரகசிய உலகம் இருக்கிறது என்பதை
சகமனிதர்கள் உமிழும் கழிவிலும்
குப்பை களத்திலும்தான்
சிலர் வாழ்கிறார்கள் என்பதை
ஒப்புக் கொள்ள மறுக்கிறார்கள்”.

அனுபவம் செறிந்த இந்தச் சொற்கள் எங்கிருந்து டிரேஸிக்குக் கிடைத்தன? அவருக்கு முன்னால் வாழ்ந்த கவிஞர்களிடம் எடுத்ததா? அகராதிகளில் முக்குளித்து அகழ்ந்தெடுத்ததா? அல்ல. அதே குப்பை அழுகல் நிறைந்த கறுப்பின மக்களின் சேரிகளில் வாழ்ந்த அனுபவமே பாடல்களாக வந்திருக்கிறது.

பள்ளிப்படிப்பு மற்றொரு தரப்பான வெள்ளையர் உலகத்தை அறிமுகப்படுத்தியது. ஏழைப்பெண் ஒருத்தியை முதன்முதலாக அங்கே அவர்கள் சந்தித்தர்கள் ஏழ்மை, நிறப்பாகுபாடு பற்றி அறியாதவர்கள் “கறுப்பர் இனத்தில் பிறந்த நீ என்ன நினைக்கிறாய்” என்ற கேள்வியைக் கேட்டார்கள். தன் இனத்துக்கு ஏற்பட்ட இழிவுகள் பற்றி, யார் இழிவு ஏற்படுத்தியதற்குக் காரணமானவர்களோ அவர்களிடமே விளக்க வேண்டிய சூழ்நிலை அவருக்கு திகைப்பையும், அருவெறுப்பையும், எரிச்சலையும் மூட்டியது. நிறவெறி அவரது கன்னத்தில் மாறி மாறி அறைந்தது. “நீ நீக்ரோ, நீ நீக்ரோ!” அதுவே அடுத்த கேள்வியையும் அடிமனத்தில் விதைத் துவிட்டது “விடுதலை எப்போது?”

”நீ
ஆடம்பர மோகத்தில்
பொருளாசையில் விழுந்து
கண்ணுக்குத் தெரியாத ரத்தச்
சங்கிலிப் பிணைப்பைக்
காணத் தவறிவிட்டாய்!

அந்தஸ்தில் உயரப் பார்க்கிறாய்
ஆனால் கீழே உன்னைச் சந்தையில் விற்கிறார்கள்
இது இன்னொருவகை அடிமைத்தனம்
மனிதன் படைத்த உலகம் முழுதும் வெள்ளையர் கையில்
அதுவே உனது எசமான் – இன்றும்.”

கறுப்பின விடுதலை என்ற லட்சியத்தில் தானே தன்னைப் புடம் போட்டு எடுத்துக் கொண்ட டிரேஸிக்கு ஒரு பெரிய மனவருத்தம். டிரேஸி மட்டுமல்ல; இந்த லட்சியத்துக்காகவே கலையைப் பயன்படுத்திய பலருக்கு இதே போன்ற மனவருத்தம் உண்டு. யார் தங்களது கருத்துக்களைக் கேட்க வேண்டுமென்று படைத்தார்களோ, அந்தச் சகோதரர்கள் ஆடம்பர மோகத்தில் அடிமைப்பட்டு கானல் நீர் தேடி ஓடும் விலங்குகளாக அலைவதைப் பார்க்கிறார்கள்; ரத்தக் கண்ணீர் வடிக்கிறார்கள்.

இங்கே இந்தியாவில் இடஒதுக்கீட்டுச் சலுகையினால் மிகவும் கஷ்டப்பட்டு முன்னேறிய சிலர் கீழே உழலும் தன் சக மக்களை, அவர்களது துன்ப துயரங்களை என்றென்றைக்குமாக மறந்துவிட்டுப் புதுப் பார்ப்பனர்களாக மாறிவிடுகிறார்கள். இதுபோலவே தான் கறுப்பர் இன மக்களில் சிலர் சொந்தச் சங்கிலிப் பிணைப்பை மறப்பது மட்டமல்ல, வெள்ளை இன எஜமானர்கள் பூட்டுவது பூவிலங்கு, பொன் விலங்கென்று விளக்கவும் தொடங்கி விட்டார்கள். இந்த அவலத்தில் விளைந்ததுதான் டிரேஸி பாடல்களின் ஆதங்கம் கோபம் அழுத்தம் சோகம், விம்மல், வெடிப்பு எல்லாம்.

அமெரிக்க இசை உலகத்தில் மன எழுச்சி உணர்வுகள் ஆபாசமான, பகட்டான, பசப்புணர்ச்சியாகி விட்டது; வலுவும் பலமும் ஆரவாரமாகிவிட்டது; நகைச்சுவை உணர்வு அற்ப உணர்வாகிவிட்டது. மொத்தத்தில் – இசை முட்டாள்தனத்தின் உச்சகட்டமாகி விட்டது. கறுப்பின மக்களின் வாழ்க்கையும் இசையும் சீரழிக்கப்பட்டதைக் கண்டு உள்ளம் கொதிக்கும் டிரேஸி அந்தக் கனலைத் தன் பாடல் வரிகளுக்கு மாற்றிக் கொடுக்கிறார்.

ஒருநிமிடம் தமிழகத்தில் இசை ஞானியாக்கப்பட்டு வலம் வரும் இளையராஜாவை இங்கே ஒப்பிட்டு பாருங்கள். தாழ்த்தப்பட்ட சமூகத்திலிருந்து, கிராமப்புறத்திலிருந்து சினிமா ஆசையால் ஈர்க்கப்பட்டு நகருக்கு வந்தார்; பார்ப்பன. மேல்ஜாதி கோடம்பாக்கத்து ஸ்டுடியோக்கள் அவரைப் புறம் ஒதுக்கித் தள்ளின; விடாது போராடி வலுவான இசையால் காரியங்களை சாதித்தார். ஆனால் அவர் நந்தனார் பாணியில் தீக்குளியல் போட்ட பிறகே ‘சின்ன சங்கராச்சாரியாக’ அங்கீகரிக்கப்பட்டு இருக்கிறார். அதாவது ஒருவகை சமரசம் (’சொன்னா வெட்கக் கேடு, சொல்லாட்டி மானக்கேடு!’) அவருக்கும் பிடித்திருக்கிறது. தான் வெக்கங் கெட்டுப் போனதையே ஆன்ம விடுதலையாக வருணித்து தத்துவ உபதேசமும் அளிக்கிறார்.

யார் மக்கள் கலைஞன்? இளையராஜாவா? அல்லது போராடும் டிரேஸி சாப்மானா?

தாய் வாங்கிக் கொடுத்த கிடாரை மீட்டிய இளம் விரல்கள் பள்ளி வயதிலேயே புரட்சியை இசையாக்கித் தீட்டிப் பார்த்தன:

“புரட்சி ஒலி இதோ இந்தக் கணம்
உன் காதில் விழவில்லையா?”

1982-ல் பள்ளி ஆண்டுக்குறிப்பில் இப்படி எழுதினார்கள்: “டிரேஸி சாப்மன் தன் கிடாரையே மணம்செய்துகொண்டு நீண்டகாலத்துக்கு இன்பமாக வாழ்க்கை நடத்துவார்.”

வாழ்க்கை கலை இரண்டிலும் முரண்பாடில்லாத ஒற்றுமையை அடைந்த டிரேஸிக்கு எந்த இசை அலங்காரமும் தேவைப்படவில்லை. 1939-ல் அமெரிக்காவின் மிக உயர்ந்த கிராமிப் பரிசுகள் மூன்றினை அவர் வென்றார். மெல்லிசைக்காரர்களின் பகட்டான கவர்ச்சி இசை போல அல்லாமல் டிரேஸியிடம் இயல்பான நாட்டுப்புற மக்கள் இசை இருக்கிறது என்று பத்திரிக்கைகள் பாராட்டின.

“என் உடமை அத்தனைக்கும்
ஒரு விலை உண்டென
பணமே வெல்லும் மற்றவை தோற்கும் என
நீங்கள் நினைக்கிறீர்கள்
போய் ஆன்மாவை விற்று
தோலை காப்பற்றிக் கொள்ளுங்கள்!
என்னுள்ளே எரியும் சுடரை நான்
காப்பாற்ற வேண்டும் – நான்
உயிர் வாழ்வது அதற்காக தான்!”

செயற்கையான இசையை குரலை மட்டுமல்ல, செயற்கையான பணத்துக்கு அடிமையான வாழ்க்கையை அவர் வெறுக்கிறார். பண அடிமை மட்டுமல்ல, எல்லாவகையான அடக்குமுறைகளையுமே அடிமைத்தனத்தையுமே அவர் எதிர்க்கிறார். சமூக விடுதலை பற்றிய அவரது சிந்தனையை அவரது விடுதலை இப்போதே பாடலில் கேட்கலாம்.

“அவர்கள் அவரைச் சிறையில் அடைத்தார்கள்
சீக்கிரம் செத்துப் போவார் என்று
பூட்டி வைத்தார்கள்.
உடல் மெலிந்து உறுதி குலைந்து பின்
சிந்தனையும் சிதறுமென நம்பினார்கள்”

சிறையில் அடைக்கப்பட்டாலும் தென் ஆப்பிரிக்க விடுதலை உணர்வை பெருந்தீயாகக் கிளப்பிய நெல்சன் மாண்டேலா தான் பாடலில் குறிப்பிடப்படுகிறார். நெல்சன் மாண்டெலாவை விடுதலை செய் என்று தொடங்கி மனித குலமே விடுதலை அடைய வேண்டும் என்று உயர்ந்த லட்சியத்தோடு முடிக்கிறார் டிரேஸி. சிறப்பான கட்டமைப்போடு அவர் பாடலை எழுதியிருக்கிறார்.

– “ஒவ்வொரு நாளும் ஒரு முட்டாள் பிறக்கிறான். தானே அரசாள முடியும் என்று நினைக்கிறான். சிறைகளை வரிசையாக எழுப்புகிறான். நியாயவான்களை இங்கிலியால் பிணைத்து உள்ளே இடைக்கிறான். ஒவ்வொரு நாளும் ஒரு மனிதன் பிறக்கிறான். முட்டாள்களுக்கு எதிராக நியாயத்துக்காகக் கலகம் செய்கிறான். பளிச்சிடும் வாதங்களுக்குப் பிறகு டிரேஸி பாடுகிறார்: “அந்த மனிதரை விடுதலை செய்யுங்கள்; உங்கள் மனசாட்சியை விடுதலை செய்யுங்கள்; நம் அனைவருக்கும் விடுதலை விடுதலை விடுதலை”.

அவரது பாடல்களில் சமூக விமரிசனம் இல்லாத வரிகளே இல்லை. அத்தனையும் அமெரிக்க சுரண்டல் சமுதாயத்தை திரை கிழிக்கும் கேள்விகள். இறுகி கெட்டி தட்டிப்பேன அமெரிக்க மதிப்பீடுகளை அடித்து நொறுக்கும் கேள்விகள்.

”உலகுக்கே ஊட்ட உணவிருக்கும் போதும்
குழந்தைகள் ஏன் பசியால் துடிக்கின்றன?
விட்டுக்குள்ளே பெண்கள் இருக்கும்போதும்
ஏன் அவர்களுக்குப் பாதுகாப்பே இல்லை?”

ஏன்? ஏன்? ஏன்? – மிக மிகச் சாதாரண கேள்விகள் ஆனால் அடிப்படையான கேள்விகள்.

அமெரிக்கச் சமுதாயத்தை ஆள்கின்ற சுரண்டும் வர்க்கத்துக்கு கேள்வி எழுப்புபவர்களைக் கண்டால் பிடிக்காது. அவர்களை ஒன்று மயக்கி விலைகொடுத்து வாங்கப் பார்க்கும்; அல்லது வெட்டிக் கொன்று விடும்; சுட்டுத் தள்ளிவிடும். முப்பதுகளில் மெக்கார்த்தியிச அடக்குமுறை இயக்கம் எழுந்து சோசலிசத்தை ஆதரித்த, கறுப்பர் விடுதலைக்குக் குரல் கொடுத்த போராளிகளை கலைஞர்களை அமெரிக்க அரசு நரவேட்டையாடியது. அன்று முன்னணியில் நின்ற கறுப்பினப் போராளிப் பாடகர் பால் ராப்சன்.

“மற்றவர்கள் பெற்றிராத நேரடி அனுபவம் கருப்பின மக்களுக்கு உண்டு. ஏகாதிபத்தியச் சுரண்டல் என்றால் என்ன என்பது அவனுக்கு மிக நன்றாகத் தெரியும். அவனைப் பொறுத்த அளவில் அது எங்கோ தொலைவில் உள்ள தத்துவப் பிரச்சினை அல்ல. எந்த ஏகாதிபத்தியம் உலகெங்கிலும் உள்ள பலகோடி காலனிய மக்களை வேலை கொடுப்பதில் பாரபட்சம் – வெள்ளையன், கறுப்பன் என்கிற பாகுபாடு – ஜனநாயக உரிமைகள் மறுப்பு என்ற முறைகள் மூலம் அடக்கி ஒடுக்கி ஆள்கிறதோ அதே முறைகளைத் தான் நீக்ரோக்கள் மீதும் காட்டுகிறது” என்று அன்று சாடினார் ராப்சன்.

அறுபதுகளில் இதேபோல வியட்நாம் ஆக்கிரமிப்புக்கு எதிராகக் கேள்வி எழுப்பி இயக்கங்களில் பங்கெடுத்தார் அமெரிக்கப் பாடகி ஜோன்பெய்ஸ். பால்ராப்சன், ஜோன்பெய்ஸ் பாரம்பரியம் டிரேஸி சாப்மனிடம் தொடருகிறது. “அரசின் எச்சில் காசு வேண்டாம், தேவை மானத்தோடு வாழ ஒரு வழி” என்ற பாடல் வரிகள் ராப்சனின் தொடர்ச்சி.

வெறுமனே வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று கேள்வி கேட்டுவிட்டுப் போகிறவர் அல்ல டிரேஸி. நெல்சன் மாண்டெலாவை விடுதலை செய்யக் கோரும் இயக்கம், மனித உரிமைகள் இயக்கம் போன்றவற்றில் நேரடியாகப் பங்கேற்றார். இந்தியாவுக்கு வந்து நிகழ்ச்சிகள் நடத்தியிருக்கிறார்.

இதுமட்டுமின்றி அமெரிக்க வாழ்க்கையில் இனப் பாகுபாடில்லாமல் இன்றைய தலைமுறை சீரழிந்து பொறுக்கி வர்க்கமாக விட்டேற்றியாகச் சுற்றுவதைப் பார்த்து ஆளும் வர்க்கத்தின் ஒட்டாண்டித் தனத்தை மிக நுணுக்கமான சிறு விஷயங்களை விளக்கியும் அம்பலப்படுத்துகிறார். இளைஞனின் இதயத்தைத் தொட்டுக் கேட்கிறார்

“எனதருமைச் செல்வமே
உன்மேல் எனக்குக் கோபமில்லை
சிலநேரம் நான் நல்லதை நினைப்பது மட்டும்
உன் பிரச்சினையைத் தீர்ப்பதில்லை.
… …
… …
கொஞ்சநேரம் எடுத்துக்கொள்
உன் வாழ்க்கை பற்றி யோசி!
கொஞ்சநேரம் எடுத்து யோசி
வாழ்க்கையை வீசித் துர எறிவதற்கு முன்
யோசி!”

’செல்வமே’ என்று அழைக்கிறார். ’உன்னைப் புண்படுத்துவதற்காகச் சொல்லவில்லை’ என்று பீடிகை போட்டுப் பேசுகிறார். ஏன் இவ்வளவு முயற்சிகள்? சமூகத்திலிருந்து, குடும்பத்திலிருந்தே அன்னியப்பட்டுப் போய் இளைய தலைமுறை தனித்தீவுகளாக நரம்பியல் நோய் பிடித்தவர்களாக வாழ்கிறது. எப்படியாவது இதயத்தைத் தொட்டுப் பேச முடியாதா என்ற அக்கறை, ஆர்வம் அவருக்கு இருக்கிறது.

இந்த அளவிற்கு மக்கள் எதிரியை உணர முடியாதபடி அவன் சமூக கலாச்சார ரீதியில் பரப்பிவிடும் புகைமூட்டத்தில் சிக்கிக் கிடக்கிறார்கள். அதை விளக்கிய பிறகுதான் எதிரிக்கு எதிரான சண்டைக்கே தயார் செய்ய முடியும். இதை நன்றாக டிரேஸி விளங்கிக் கொண்டிருக்கிறார்.

இளையதலைமுறை இழந்துவரும் பல அற்புதக் கனவுகளையும், வாழ்க்கையையும் எடுத்துச் சொல்லிப் புரியவைக்கிறார் டிரேஸி. பாடல்கள் பாடிப் பணம் குவிக்கும் பல இசைக் குழுக்களும், முறையான கம்பெனி காரியதரிசிகள் போல இசை அதிகாரிகளாக பல ’இசைமேதைகளும்’ சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். அதன் மத்தியில் புரட்சியைப் பாடும் டிரேஸியைத் தேடி புகழ் ஓடிவந்தது. முதல் இசைத்தட்டு மட்டும் 10 கோடி பிரதி விற்றது. இப்போதும் அவர் ஒரு பேட்டியில் சொல்கிறார்: “எனக்குப் புகழில் நாட்டம் இல்லை”

என்னை விலை பேசாதீர்கள் என்று அவரே ஒதுங்கினாலும் அவரது குரலை அடக்கிவிடத் துடிக்கும் அமெரிக்க ஆளும் கூட்டம் பல விசேஷ நபர்களை அனுப்பிப் பார்த்தது. கடுமையாக நடந்து கொண்டு வெறிநாய்களை விரட்டுவதுபோல அவர்களைத் துரத்தியடித்தார். இதுவே கலகக்காரர் டிரேஸியின் நேர்மைக்கு சாட்சி.

எளிமையான பாடலும் உண்டு கவிதைச் செறிவுள்ள பாடலும் உண்டு – இதுவே டிரேஸியின் சிறப்பம்சம். சொல்கின்ற விஷயமே அவருக்கு முக்கியம்; பிரச்சினையை யார் விளங்கிக்கொள்ள வேண்டுமோ அவர்கள் விளங்கிக்கொள்ளும் விதத்தில் அவர் பாடல்களை அமைக்கிறார்.

டிரேஸி சொற்களைத் தெளிவாக உச்சரிக்கிறார். மேற்கத்திய இசைப்பாடகர் அனேகரிடம் இல்லாத சிறப்பம்சம் இது. ’ஆரம்பத்தில் நானும் வேண்டுமென்றே தெளிவில்லாமல் பாடினேன்’ என்கிறார் டிரேஸி. மேற்கத்திய இசை என்றால் புரியாமல் கத்துவது என்றுதான் பலரும் நினைக்கிறார்கள். அது கேட்பவரது அறியாமை அல்ல; உண்மையிலேயே பாடுபவரே அப்படித்தான் நினைக்கிறார். தான் பாடுவதில் சமூக அக்கறை, கவிதை எழுச்சி, ஈடுபாடு, ஆர்வம் எதுவுமே அவருக்குக் கிடையாது. பாடுகிற விஷயத்தில் ஒன்றுமே இல்லை என்றும் அவருக்குத் தெரியும் பிறகு ஏன் அவர் புரியும்படி பாடப் போகிறார். அதனால்தான் அவர் வடிவத்தில் மட்டுமே கவனம் செலுத்துகிறார். ஒன்றுமில்லாத உள்ளடக்கத்துக்குப் பொருத்தமான வடிவம் என்ன? – சந்தை இரைச்சல்தான்.

டிரேஸி ஆரம்பத்தில் தெளிவில்லாமல் பாடியபோது அவரது தாயும் தமக்கையாரும் ’நீ பாடுவது ஒன்றுமே புரியவில்லை’ என்று சொல்வார்கள். பிறகுதான் அவர் புரிந்து கொண்டார் சொல்ல வருகிற விஷயம் மிக முக்கியமானது என்றால் அதை நாம் தெளிவாகச் சொல்ல வேண்டும்.

எனவே தான் டிரேஸியின் இசைப்பாடல் பால்ராப்சன், ஜோன் பெய்ஸ் போலவே தெளிவாக இருக்கிறது. மிக வலுவான செய்தி இருப்பதால்தான் ஒரு பாடலை எந்த பின்னணி இசையுமில்லாமல் தனது கிட்டாரைக் கூட மீட்டாமல் பாடியிருக்கிறார். பாடலின் பெயர்: சுவருக்குப் பின்னே (BEHIND THE WALL).

டிரேஸி சாப்மனின் இசைப் பாடல்களைக் கேட்பது ஒர் ஆழ்ந்த அனுபவம். அந்தந்த உணர்ச்சிகளுக்கு ஏற்ப இசையைக் குழைத்து அவர் சித்திரம் தீட்டுவதைப் பலமுறை கேட்க வேண்டும். உணர்ச்சிகளும் இசைவடிவமும் ஒன்றறக் கலந்து விடுகின்றன.

“உனது பதிலுக்குக் காத்திருக்க நேரமில்லை
நான் சொல்வதைக் கேட்கத் தயாரென்றால்
எவ்வளவு நேரமும் காத்திருப்பேன்”

என்று இதயத்தைத் தொட்டுப் பேசும் லாவகம்;

பளபளக்கும் ஆப்பிளுக்கு ஆசைப்படாதே
அது கசப்பான பழமாக இருக்கக்கூடும்
நியாய ருசிக்கு மட்டும் பசித்திரு
உண்மை உலகத்தை அடையப் பசித்திரு
ஏனெனில் உனக்கிருக்கும் சொத்து
உன் ஆன்மா மட்டுமே!”

என்று பல பாடல்களில் ஊடாடும் அடிநாதமான செய்தி.

இப்படிப் பலப்பல உணர்ச்சிகளை டிரேஸி அடுக்கடுக்காய்த் தந்து நம் சிந்தையில் தீக்கொளுத்துகிறார்.

கீழை ஜெர்மானிய மார்க்சிய இசை அறிஞர் ஐஸ்லர் கூறுவது போல ஒரு புதிய இசை அமைப்பாளனுக்கு இரண்டே இரண்டு பாத்திரங்கள் மட்டுமே உண்டு. ஒன்று: இன்றுள்ள சுரண்டும் சமூகத்தின் மேல் ஒட்டிக் கொண்டு அதன் ஜீவரசத்தை உறிஞ்சிக் கொழுத்து ஆள்பவரோடு கூட்டுச் சேர்ந்து உல்லாசமாக வாழ்வது; மற்றது: ஒரு புரட்சிப் போராளியாக வாழ்வது.

டிரேஸி சாப்மன் ஒரு அமெரிக்க கறுப்பின இசைப் போராளி. உலகின் ஆகப் பிற்போக்கின் குருபீடமான அமெரிக்காவிடமிருந்து ஜனநாயகத்தின் முணுமுணுப்பைக் கேட்டால் கூட பாட்டாளி வர்க்க அணி இன்று வரவேற்க வேண்டும்.

உலகில் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போரில் பாட்டாளி வர்க்கம் இதனைப் பயன்படுத்த வேண்டும். டிரேஸீ சாப்மன் அந்த வகையில் போராடும் – ஒடுக்கப்படும் மக்களுக்குக் கிடைத்துள்ள வலுவான போர் ஆயுதம்.

  • புதிய கலாச்சாரம், ஆக, செப், அக் 1990.