மார்ச் 8 உழைக்கும் மகளிர் தினம். சமையலறையிலும், குழந்தைப் பேறுவளர்ப்பிலும், பாலியல் இச்சைக்காகப் படுக்கையறையிலும் காலங்காலமாகக் கட்டிப் போடப்பட்ட பெண்கள், மனித குல வரலாற்றில் தங்களுக்கும் சரிபாதிப் பங்குண்டு என வர்க்கப் போராட்டத்தில் ஈடுபட்டு செந்நீர் சிந்தி, சில உயிர்களைப் பலிதானமிட்டு உணர்ந்த நாள் மார்ச் 8. ஆனால் 21 ஆம் நூற்றாண்டில் மனித சமூகம் அடியெடுத்து வைத்திருக்கும் இக்காலத்திலும், நவீன வாழ்க்கையின் அடையாளமாக எத்தனையோ வசதிகள் சகஜமாகிவிட்ட இச்சூழ்நிலையிலும் பெண்கள் தங்கள் தளைகளை அறுக்க முடியாமல் அடிமைகளாக நீடித்திருக்கும் நிலையே தொடர்கின்றது.
முக்கியமாக ஒரு பெண் தன் காதலை, திருமணத்தை, குடும்பத்தை, வேலையை, மொத்தத்தில் வாழ்வை தான் விரும்பியபடி தெரிவு செய்யும் சுதந்திரம் இல்லை. வேலைக்குச் சென்று தனது பொருளாதார சுயேச்சை நிலையை அடைந்திருக்கும் பெண்ணுக்குக் கூட முழுச் சுதந்திரத்தை இந்தச் சமூகம் கொடுத்து விடுவதில்லை. சமூகம் மரபாகப் பின்பற்றி வரும் எல்லாப் பிற்போக்குத்தனங்களுக்கும் பெண்தான் முதல் பலிகடாவாகின்றாள். சாதி, மத, இனங்களின் கவுரவமே ஒரு பெண்ணின் ‘தூய்மையை’ வைத்தே அளவிடப்படுகின்றது. கீழ்க்கண்ட இரண்டு உண்மைச் சம்பவங்களைப் பார்த்துவிட்டு இந்த விமரிசனத்தை மேற்கொண்டு பரிசீலிக்கலாம்.
___________
ஈரோடு மாவட்டம், குன்னத்தூரைச் சேர்ந்தவர் சங்கீதா. வெண்ணெய்க்குப் பிரபலமான ஊத்துக்குளியைச் சேர்ந்தவர் சதாசிவம். சொந்த மண்ணில் வாழ வழியில்லாதவர்களுக்கு சற்றே சிரமமென்றாலும், ஒரு குறைந்தபட்ச வாழ்வை உத்திரவாதம் செய்யும் திருப்பூருக்கு இருவரும் சில ஆண்டுகளுக்கு முன்பு பிழைப்பதற்கு வந்தனர். தமிழகத்தின் தெற்கு, கிழக்கு, மேற்கு என எல்லாப் பகுதிகளிலுமிருந்தும் இலட்சக்கணக்கான தொழிலாளிகள் திருப்பூரில் குவிந்துள்ளனர். பனியன் தொழிற்சாலைகளில் நூற்றுக்கணக்கில் ஆண்களும், பெண்களும் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு இருப்பதால் மற்ற ஊர்களில் சிரமப்படும் காதல் வாழ்க்கை இங்கே ஒப்பீட்டுரீதியில் சற்றே சுலபமானது எனலாம்.
அப்படித்தான் சதாசிவமும், சங்கீதாவும் காதலித்தனர். பிழைப்பதற்கு வந்த ஊர் காதலுக்கு வழியேற்படுத்தினாலும், அவர்களின் பிறந்த ஊர்கள் இந்தக் காதலை அடியோடு நிராகரித்தன. இந்த உண்மைக்கதையை வெளியிட்டிருக்கும் ஜூனியர் விகடனில் (28.01.09) அவர்களின் சாதி குறித்த விவரமில்லை. இருப்பினும் இருவரும் ஓரே தகுதி கொண்ட வெவ்வேறான சாதிகளாகவோ, அல்லது இருவரில் ஒருவர் சற்றே ஆதிக்கசாதியாகவோ இருக்கலாம். எப்படியும் இருவரின் குடும்பத்தாரும் இவர்களின் காதலுக்கு பச்சைக் கொடி காட்டவில்லை என்பதோடு உறவை அறுத்துக்கொண்டு தலைமுழுகினர். வேறுவழியின்றி இந்த ஜோடிகள் திருப்பூர் கோவிலொன்றில் திருமணம் செய்து கொண்டனர்.
திருமணத்திற்குப் பிறகாவது தன் குடும்பம் தன்னை எற்றுக் கொள்ளும் என்ற நம்பிக்கையில் தந்தைக்கு தொலைபேசியில் பேசினார் சங்கீதா. தந்தையோ “உன் குடும்பத்தில் பிள்ளை பிறந்தாலும் எங்களுக்குச் சொல்லாதே! இழவு விழுந்தாலும் எங்கிட்ட வராதே” என வெட்டு ஒன்று துண்டு இரண்டென பேசி முடித்துக் கொண்டார். சதாசிவம் வீட்டிலும் இதே கதைதான் என்பதால், இந்தப் புதுமணத் தம்பதியினர் திருப்பூரில் தங்கள் குடும்ப வாழ்க்கையைத் துவங்கினர். சொந்த பந்தங்களின் ஆதரவின்றி ஒருவருக்கொருவர் ஆறுதலாக அந்த வாழ்க்கை நகர்ந்தது.
முதல் வருடத்திலேயே சங்கீதாவுக்கு ஒரு குழந்தை மூளை வளர்ச்சியின்றி இறந்தே பிறந்தது. தலைப்பிரசவத்துக்கு ஒரு பெண் தயாராகும்போது சுற்றமும் உற்றமும் புடைசூழ பார்த்துக் கொள்ளும். ஆனால் சங்கீதாவுக்கு அவளது கணவனைத் தவிர யாரும் துணையில்லை, வந்து பார்க்கவுமில்லை. பேறுகாலச் சிரமங்களை மிகுந்த சிரமத்துடன் பொறுத்துக்கொண்ட சங்கீதா அதன் பின் நான்கு வருடங்களுக்குப் பிறகுதான் கர்ப்பமானார்.
உறவுகள் அற்றுப்போய் தனித்தீவுகளில் வாழ்வது போல தனிமைப்பட்டிருந்த அந்த ஏழைத் தம்பதியினருக்கு ஒரு குழந்தையின் மூலம் புதிய உறவு வரப்போகின்றது என அளவில்லாத மகிழ்ச்சி! தன் மனைவியை அவளது தாய் பார்ப்பது போல பராமரித்து வந்த சதாசிவம், சங்கீதா கர்ப்பமான ஒன்பதாவது மாதத்தில் அதிக இருமலும் சளியுமாக அவதிப்பட்டார். திருப்பூர் அரசு மருத்துவமனையில் காட்டிய போது அவருக்கு காசநோய் முற்றியிருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டார். ஏதோ ஒரு நோய், கோவை சென்றால் சரியாகிவிடும் என்று புரிந்து கொண்ட அந்தப் பெண் கணவனைக் கோவைக்கு அழைத்துச் சென்றாள்.
திருப்பூரின் சாயப்பட்டறைகளினால் நொய்யல் ஆறு ரசாயன ஆறாக மாறி உயர்நீதி மன்றம் அதற்கு பல உத்திரவுகளைப் பிறப்பித்து சரி செய்வதற்கு முயன்ற விசயம் வாசகர்களுக்கு தெரிந்திருக்கலாம். ஆனால் பனியன் தொழிற்சாலைகளில் வேலை செய்யும் தொழிலாளிகள் பலருக்கு பஞ்சுத் தூசியினால் ஆஸ்துமாவும், காசநோயும், தோல் வியாதிகளும் இருக்கின்றது என்ற விசயம் அரசால் கூட கவனிக்கப் படவில்லை. திருப்பூர் மருந்துக் கடைகளில் இந்த நோய்களுக்கான மருந்துகள்தான் அதிகம் விற்பனையாகின்றது என்றால் இதன் பரிமாணத்தைப் புரிந்து கொள்ளலாம். அமெரிக்காவின் வால்மார்ட்டுக்காக ஆர்டர்கள் எடுத்திருக்கும் திருப்பூரின் முதலாளிகள் இப்படி தொழிலாளர்களின் நுரையீரலையும், எலும்புகளையும் சிதைத்துத்தான் ஆயத்த ஆடைகளைத் தயாரிக்கின்றனர் என்பது யாரும் கவலைப்படாத ஒன்று.
சங்கீதா நிறைமாதக் கர்ப்பிணியாய் தனக்கு எப்போது குழந்தை பிறக்கும் என்பது தெரியாமல் கணவனைக் கருத்தாகப் பார்த்துக் கொண்டாலும், கோவை அரசு மருத்துவர்கள் எவ்வளவோ முயன்றாலும் காசநோய் முற்றிய சதாசிவம் ஒரு சில நாட்களில் இறந்து போகின்றார். இந்த உலகில் தனக்கென இருந்த ஒரே உறவையும் தொலைத்து விட்ட அந்தப் பெண் அழுது புரண்டாள். பிறகு கணவனின் பிணத்தை எரிப்பதற்கு பணமில்லாமலும், தூக்குவதற்கு ஆளில்லாமலும் தவித்த அந்த அபலைப்பெண் பைத்தியமாய்ச் சுற்றியிருக்கின்றாள். சவக்கிடங்கில் இருக்கும் கணவனின் பிணத்தைத் தொட்டு அழுவதற்குக் கூட வாய்ப்பில்லாமல் தனது பெற்றோருக்கு தொலைபேசி மூலம் உதவுமாறு கேட்டிருக்கின்றாள் சங்கீதா.
எந்தச் சனியன் எக்கேடு கெட்டாலும் எங்களுக்கென்ன என குடும்பத்தினர் இரக்கமின்றி முறித்துக் கொண்டனர். பிறகு தோழமை அறக்கட்டளை என்ற தொண்டு நிறுவனத்தைக் கேள்விப்பட்டு அவர்களின் உதவியை நாடியிருக்கின்றாள் சங்கீதா. இந்தத் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் மூலம் கணவனது இறுதிச் சடங்கை முடித்த சங்கீதாவுக்கு தற்போது குழந்தை பிறந்திருக்கும். இருந்த ஒரே துணையையும் இழந்தவருக்கு ஆறுதலாக யாருமில்லை என்பதால் கைக்குழந்தையுடன் அவதிப்படப்போகும் சங்கீதாவின் எதிர்காலம் எப்படி நகரும்?
_____________
புது தில்லியில் இருக்கும் ஜவஹர்லால் நேரு மேல்நிலைக் கல்வி நிறுவனத்தில் ஆராய்ச்சியளராகப் பணிபுரியும் மீரா நந்தா அவரது சொந்த ஊரான சண்டீகரில் அவர் கண் முன்னே ஒரு இளம் பெண் கடத்தப்படுவதைப் பார்த்துவிட்டு அந்த அனுபவத்தை ‘தி ஹிந்து’ தினசரியின் ஞாயிறு மலரில் (01.03.09 ) எழுதியிருக்கின்றார்.
பிப்ரவரி மாதத்தின் துவக்கத்தில் சண்டீகருக்கு வந்த மீரா நந்தா ஒரு பகல் பொழுதில் தனது வீட்டிலிருந்து அருகாமையில் இருக்கும் நீதிமன்ற வளாகத்தைக் கடந்து கடைத்தெருவுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவரைக் கடந்து ஒரு இளம்பெண் வேகமாகச் சென்று கொண்டிருந்தாள். திடீரென வந்த ஒரு வெள்ளை வேனில் இருந்து இறங்கிய நான்கைந்து இளைஞர்கள், அவர்களைப் பார்த்துப் பதறி ஓடிய அந்தப் பெண்ணை விரட்டுகின்றார்கள். கணப்பொழுதில் அவளைப் பிடித்து தரதரவென இழுத்து அடித்து வேனில் ஏற்றிச் செல்கின்றார்கள்.
அதிர்ச்சியில் உறைந்திருந்த மீரா நந்தா அந்த வண்டியின் எண்ணைக் குறித்துக் கொண்டிருந்தபோது, நீதிமன்றத்தில் இருந்த மக்கள் கூட்டம் இச்சம்பவத்தைப் பார்த்து கூடுகின்றது. அந்தப் பெண் கடத்தப்பட்டதைப் போலீசிடம் புகார் கொடுக்கலாம் என்று அவர்கள் பேசியபோது கூட்டத்தில் நடுத்தர வயதிலிருக்கும் ஒரு சீக்கியர் குறுக்கிடுகின்றார். அந்த பெண்ணுக்கு ஒன்றும் ஆபத்தில்லை எனவும், தான் அவளது தந்தை, வேனில் பிடித்துச் சென்றது அவளது சகோதரர்கள்தான் என்றும் அவர் நிதானமாகத் தெரிவிக்கின்றார்.
உடனே மீரா நந்தா பெற்ற மகளையே இப்படி அடித்துக் கடத்துகின்றீர்களே! நீங்களெல்லாம் ஒரு தந்தையா, உங்களுக்கு வெட்கமில்லையா என்று கோபத்துடன் கேட்கிறார். தனது மகள் பொறியியல் கல்லூரியில் படிக்கும் ஒரு புத்திசாலிப் பெண்ணென்றும், அவளை ஒரு முசுலீம் இளைஞன் காதலிப்பதன் மூலம் அவளது வாழ்க்கை பாழாகக் கூடும் என்பதால் நீதிமன்றத்தில் வழக்குப் போட்டிருந்த அந்தக் காதலர்களைப் பிரிப்பதற்கு தான் எடுத்த நடவடிக்கை சரியானது என்றும் அந்தச் சீக்கியர் வாதிடுகின்றார்.
இதைக் கேட்டவுடன் கூட்டம் சமாதனத்துடன் கலைந்து செல்கின்றது. மீராவுடன் நான்கைந்து இளைஞர்கள் மட்டும்காவல் நிலையம் சென்று புகார் கொடுக்கலாம் என முடிவு செய்கின்றார்கள். காவல் நிலையத்தில் பொறுப்பிலிருந்த அதிகாரி சீக்கியரின் விளக்கத்தைக் கேட்டவுடன் திருப்தி அடைகின்றார். இப்போது மீராவுடன் ஒரு இளைஞர் மட்டுமே இருக்கின்றார். அந்த இளம்பெண் ஒரு மேஜர் என்பதால் தனது வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பதற்கு அவளுக்கு முழு உரிமை உண்டென மீரா அதிகாரியிடம் வாதிடுகின்றார். உங்கள் மகளுக்கு இப்படி நடந்திருந்தால் என்ன செய்வீர்கள் என அந்த அதிகாரி மீராவின் பதிலுக்குக்கூட காத்திராமல் அந்தத் தந்தையின் செயலை நியாயப்படுத்துகின்றார். அந்தச் சீக்கியரோ தான் குறுகிய எண்ணம் கொண்டவனல்ல, தனது மகள் ஒரு தாழ்த்தப்பட்ட சாதிக்காரனைக் காதலித்திருந்தால் கூட அதை ஏற்றுக் கொள்வாரெனவும், ஆனால் ஒரு முசுலீமைத் தனது மகள் காதலிப்பதை ஏற்க முடியாது என்றும் வாதிடுகின்றார்.
இறுதியில் மீரா போலீசு இதில் நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் தான் இந்தப் பிரச்சினையை ஊடகங்களுக்குக் கொண்டு செல்வதாக மிரட்டியதும் அந்த அதிகாரி இதைப் பற்றிக் கண்டிப்பாக விசாரிப்பதாக உறுதியளிக்கின்றார். அவரது செல்பேசி எண்ணை வாங்கிவிட்டு மீரா திரும்புகின்றார். அன்று மாலையே அந்த இன்ஸ்பெக்டர் மீராவுக்கு தொலைபேசியில் பேசுகின்றார், அதன்படி அந்தப் பெண்ணைச் சந்தித்து விட்டதாகவும், அவள் தனது சொந்த விருப்பத்தில் குடும்பத்துடன் சேர்ந்து இருக்க விரும்புவதாகவும் கூறிவிட்டு அந்தப் பெண்ணையே பேச வைக்கின்றார். அந்தப் பெண்ணும் ஏதோ கடமைக்குப் பேசுவது போல தனக்கு ஒரு பிரச்சினையுமில்லை எனவும் சுரத்தில்லாமல் கூற, எந்தப் பிரச்சினை என்றாலும் தனது செல்பேசி எண்ணுக்கு அழைக்குமாறு கூறிவிட்டு மீரா இந்த சம்பவத்தை அசை போடுகின்றார். துயரம் தோய்ந்த அந்தப் பெண்ணின் முகம் அவரைத் தொந்திரவு செய்கின்றது.
___________
சங்கீதா செய்த ‘குற்றம்’ சாதி மாறித் திருமணம் செய்தது, சண்டீகர் பெண் செய்த ‘குற்றம்’ மதம் மாறிக் காதலித்தது. சங்கீதாவின் பெற்றோரும், உறவினரும் அவளைப் புறக்கணித்து எந்த உதவியும் செய்யாமல் இருந்ததன் மூலம் அவளைத் தண்டித்தார்கள். சண்டீகர் பெண்ணின் குடும்பமோ அவளை வன்முறையின் மூலம் மிரட்டி அவளது காதலை நசுக்கித் தண்டிக்கின்றார்கள். தாங்கள் விரும்பியபடி மணவாழ்க்கையை அமைத்துக்கொள்ள முயன்ற அந்தப் பெண்களுக்கு இந்தச் சமூகம் ஒப்புதல் தரவில்லை.
சாதிவெறியும், மதவெறியும் பெண்ணின் இரத்தக் கலப்பில்லாத தூய்மையை வைத்ததே தத்தமது கவுரவத்தைக் காப்பாற்ற நினைக்கின்றன. ஆனால் இந்தப் புனிதக்கடமை ஆண்களுக்கில்லை. ஆதிக்கசாதி ஆண்கள் ஊருக்கு வெளியே இருக்கும் தலித் பெண்களைப் பாலியல் வன்முறை செய்வது இந்தியா முழுவதும் நடக்கும் விசயம். இதை மட்டும் சாதியின் கவுரவக் குறைச்சலாகக் கருதாமல், ஆதிக்கசாதி ஆண்களின் கம்பீரமாக இந்தச் சமூகம் பார்க்கின்றது. மேலும் தன்மானத்துடன் வாழ நினைக்கும் தலித் மக்களைக் கேவலப்படுத்துவதற்கும் அடக்குவதற்கும் ஆதிக்கசாதி வெறியர்கள் செய்யும் முதல் விசயம் தலித் பெண்களைப் பாலியல் வன்முறை செய்வதுதான். ஒரு ஆதிக்கசாதிப் பெண் ஒரு தலித் ஆணைக் காதலித்து திருமணம் செய்தால் ஊரே பற்றி எரியும். இந்தக் காதலை கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாத சூழலே இந்தியாவெங்கும் இருக்கின்றது.
வட இந்தியாவில் ஒரு ஆதிக்கசாதி அல்லது பிற்படுத்தப்பட்ட பெண் ஒரு முசுலீமைக் காதலித்தால் மேற்கண்ட வெறியால் இன்னும் தீவிரமாக எதிர்க்கப்படும். இதைத் தடுப்பதற்கென்றே இந்தி பேசும் மாநிலங்களில் இந்து மதவெறியர்கள் தனி இயக்கமே நடத்துகின்றார்கள். சண்டீகர் பெண்ணின் தந்தை கூறியதைப் பாருங்கள், இந்துமதத்தில் இருக்கும் தலித் ஆணைக் கூட ஏற்றுக் கொள்வாராம், ஆனால் ஒரு முசுலீமை ஏற்றுக்கொள்ள மாட்டாராம். உண்மையில் அப்படி ஒரு தலித்தை அந்த சீக்கியப் பெண் காதலித்தாலும் இதுதான் நடக்கும். என்றாலும், முசுலீம் என்றால் அந்தக் கவுரவ வெறி சில மடங்கு அதிகமாக இருக்கின்றது.
உலகெங்கும் முசுலீம்களைப் பற்றிய வெறுப்பும், தவறான கற்பிதங்களும் திட்டமிட்டே பரப்பப்படுகின்றன. இதில் இந்தியாவைப் பொறுத்தவரை பிரிவினை காலந்தொட்டு நடந்துவரும், இந்துமதவெறியர்களால் இயக்கப்படும் இந்துமுசுலீம் கலவரங்கள் அந்த வெறுப்பைப் பிரச்சாரம் ஏதுமின்றி ஒரு இந்துவின் மனதில் ஏற்படுத்தி விடுகின்றன. எனவேதான் இந்தி பேசும் மாநிலங்களில் இதற்காக அதாவது இந்து மற்றும் ஆதிக்கசாதியின் கவுரவத்தைக் காப்பாற்றும் விதமாக யாரெல்லாம் அந்த எல்லையை மீறுகின்றார்களோ அவர்களெல்லாம் கொல்லப்படுவது சகஜமாக இருக்கின்றது. இந்தக் கவுரவக் கொலைகளில் பத்து சதவீதம் பஞ்சாப் மற்றும் ஹரியாணாவில் நடக்கின்றது. முக்கியமாக இந்தக் கொலைகளுக்கு ஆளாவதில் பெரும்பான்மையினர் பெண்கள்தான்.
____________
விஜய் டி.வியில் நீயா நானா நிகழ்ச்சி ஒன்றில் காதலைத் தீர்மானிப்பது அப்பியரன்சா, அப்ரோச்சா என ஒருமுறை விவாதிக்கும் போது எப்படி கடலை போடுவது, எதிர்பாலைக் கவருவது அல்லது கவிழ்த்துவது, இன்ன பிற அயிட்டங்களையெல்லாம் பயங்கரமாக அலசினார்கள். ஆனால் கலப்பு மணம் செய்தால் அதைத் தீர்மானிப்பது அரிவாள்தான் என்பதை அங்கிருக்கும் நடுத்தர வர்க்க அறிவாளிகள் எவரும் மருந்துக்குக் கூட தொட்டுப் பேசவில்லை.
இந்த விவாதம் நடந்து சில மாதங்கள் இருக்கலாம். இதே காலத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிவாஜிராவ் எனும் தலித் இளைஞரும், லட்சுமி எனும் கள்ளர் சாதிப் பெண்ணும் காதலிக்கின்றார்கள். கள்ளர் சாதி கோலோச்சும் இம்மாவட்டத்தில் இருக்கும் அபாயத்தைக் காதலர்கள் உணர்ந்திருந்ததால் யாருக்கும் தெரியாமல் திண்டுக்கல் சென்று ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டு வாழ்கின்றார்கள். இதை எப்படியோ மோப்பம் பிடித்த லட்சுமியின் மூன்று அண்ணன்கள் ஒரு டாடா சுமோவில் சில ரவுடிகளை ஏற்றிக்கொண்டு திண்டுக்கல் சென்று லட்சுமி கதறக் கதற அவளது கணவனை அடித்து வண்டியில் எற்றுகிறார்கள். சில நாட்கள் கழித்து அந்த தலித் இளைஞன் கொடைக்கானல் சாலையில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு பிணமாகக் கிடக்கின்றான்.
தனது அண்ணன்கள் கொலை செய்யுமளவு துணிய மாட்டார்கள் என நம்பிய அந்தப் பெண் இன்றும் அழுது கொண்டிருக்கின்றாள். சில ஆண்டுகளுக்கு முன் விருத்தாச்சலம் அருகே ஒரு தலித் ஆணும் வன்னிய சாதிப் பெண்ணும் திருமணம் செய்து கொள்ள அந்தப் பெண்ணின் ஊர்க்காரர்கள் அதாவது வன்னியர்கள் முன்னிலையில் அந்தக் காதல் ஜோடி உயிரோடு எரித்துக் கொளுத்தப்பட்டது. வழக்கு இன்றும் நடக்கின்றது என்றாலும் மொத்த ஊரே இதில் சம்பந்தப்பட்டிருக்கும் போது யாரைத் தண்டிப்பது?
ஸ்ரீராம் சேனா என்ற இந்து மதவெறி இயக்கத்தினர் மங்களூர் பஃப்புகளில் இருந்த மேல்தட்டுப் பெண்களைத் தாக்கியதை வாசகர்கள் அறிந்திருக்கலாம். இதே போல காதலர் தினத்தில் சங்க பரிவாரங்கள் இந்தியா முழுவதும் செய்த அராஜகங்களையும் அறிவோம். ஆணாதிக்கத்தினோடு இந்து மதவெறியும் சேரும்போது அதனுடைய வெறி தீவிரமாகத்தான் இருக்கின்றது. இங்கும் கூட கவனியுங்கள் பெண்தான் குறிவைக்கப்படுகின்றாள். ஆண்கள் டாஸ்மாக் தொட்டு நட்சத்திர விடுதி மதுவறைகள் வரை குடித்து விட்டு ஆடலாம். ஆனால் இதை இயல்பு எனக் கருதும் இந்து மனம் பெண்கள் குடிப்பதை மாபெரும் கவுரவக் குறைச்சலாக நினைக்கின்றது. ஸ்ரீராம் சேனாவின் அத்துமீறலைக் கண்டித்து பல பெண்கள் அமைப்புக்கள் அந்த சேனாவின் தலைவருக்கு பிங்க் நிற ஜட்டிகள் அனுப்பித் தங்களது எதிர்ப்பைக் காண்பித்தன.
ஒரு பெண்ணுக்கு பஃப்புக்கு செல்வதற்கு சுதந்திரம் தேவை எனப் போராடுவதை விட சங்கீதாவும், சண்டீகரின் சீக்கியப் பெண்ணும் நடத்தும் போராட்டம் மிகவும் கடினமானது. மதுவறைகளுக்கு மேல்தட்டு பெண்கள் செல்வதை போலீசு உதவியுடன் கூட செய்து விடலாம். ஆனால் சங்கீதாவுக்கும், லட்சுமிக்கும் கறுப்புப் பூனைகள் போட்டாலும் பாதுகாக்க முடியாது. ஏனெனில் இங்கே முழுச் சமூகமுமே அந்த அபலைகளை எதிர்த்து நிற்கின்றது.
மேலும் மாநகரங்களைச் சேர்ந்த நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த மக்களிடத்தில்இவர்களில் ஐ.டி துறையில் பணிபுரியும் இளைஞர்களும் உண்டுஎடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பின் படி 75% பேர் பெற்றோர் நிச்சயம் செய்யும் திருமணத்தைத்தான் செய்யப் போவதாகத் தெரிவித்திருந்தார்கள். படித்து, சற்றே வசதியுடன் வாழும் இந்த வர்க்கத்துக்கே இதுதான் கதியென்றால் அந்த ஏழைப் பெண் சங்கீதா என்ன செய்ய முடியும்?
ஆகவே பெண்ணுக்கு உரிமை என்பது தனிநபர் உரிமையாக சுருக்கிப் பார்த்தால், பஃப்புக்கு செல்வது, மானாட மயிலாட அல்லது ஜோடி ஒன்று நிகழ்ச்சியில் பங்கேற்பது, பார்வையாளராகச் செல்வது, தனியாக ஸ்கூட்டரிலோ, காரிலோ ஓட்டிச் செல்வது, வேலைகளில் ஏற்றத்தாழ்வின்றி எல்லா வகை வேலைகளுக்கும் செல்வது… இப்படித்தான் பலரும் புரிந்து கொள்கின்றனர். ஆனால் இத்தகைய தனிநபர் உரிமைகளைப் பெற்றுள்ள பெண்கள் தமது மணவாழ்க்கையைச் சுயேச்சையாக முடிவெடுக்க முடியாது. அப்படி மீறி எடுத்தால் கொலைவெறியைச் சந்திக்க வேண்டும் எனும் போது இங்கே எது பெண்ணுரிமை? ஏது பெண்ணுரிமை?
இந்தக் கட்டுரை எழுதும் சமயத்தில் சங்கீதாவுக்கு குழந்தை பிறந்திருக்கலாம், சண்டீகர் பெண்ணுக்கு வேறு மணம் கூட நடந்திருக்கலாம். ஆனால் அந்தப் பெண்கள் தனிமையில் கதறி அழுதவாறு இந்த வாழ்க்கையை எப்படி ஓட்டப் போகின்றோம் என விரக்தியில் உறைந்திருப்பார்கள். ஒருவேளை தற்கொலைக்குக் கூட முயற்சிக்கலாம். பரவாயில்லை, விரும்பியபடி வாழ்வதற்கு கதியில்லாத போது உயிரை முடித்துக் கொள்வது ஒன்றும் மோசமானதல்ல.
-புதிய கலாச்சாரம் மே’ 2009
புதிய கலாச்சாரம் மே 2009 இதழ் மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்
பெண் என்றால் எப்படி இருக்கவேண்டும்? ஆண் ஒருவன் பார்க்கும் போது தலையை குனியவேண்டும்,பேருந்தில் என்வனாவது உரசினால் விலகிப்போகவேண்டும்.எதுக்குடா இப்படி இடிக்குற என்றால் பெண்மையின் புனிதம் கெட்டு விடும்.பள்ளி,கல்லூரி சலைகள்,பணிபுரியுமிடம் எங்கும் இவை தொடர்ந்து கொண்டே இருக்கும்.
பலருக்கும் ஆணாதிக்கம் என்றாலே கோபம் பொத்துக்கொண்டு கோபம் வருகின்றது. தனியாக சக பெண் ஊழியரை ஆபாசமாக பேசுவது,அப்பெண்ணிடம் இயல்பாக பேசுவது இப்படி செய்பவர்கள் பொறுக்கிகள் எனில் அதை அமைதியாகவோ அல்லது களிப்படைந்து கேட்டுக்கொண்டிருப்பது ஆணாதிக்கம் தவிர வேறென்ன.உன் தாயை ஒருவன் விபச்சாரி எனும் பொருள் படும் படி பேசினால் வரும் கோபம் உனக்குஏன் சக ஊழியரை அப்படி கீழ்த்தரமாக பேசும் போது கோபம் வரவில்லை.அதற்கு பேரென்ன?தன்னுடன் வேலை செய்யும் பெண் பாதிக்கப்பட்கிறார் மற்றவனால் கேலிக்குள்ளாக்கப்படுகிறார் எனில் உன்னை அமைதியாய் இருக்க வைப்பது எது?
http://kalagam.wordpress.com/tag/%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d/
பெண்கள் வாழக் கூடாதா?…
சங்கீதாவுக்கு குழந்தை பிறந்திருக்கலாம், சண்டீகர் பெண்ணுக்கு வேறு மணம் கூட நடந்திருக்கலாம். ஆனால் அந்தப் பெண்கள் தனிமையில் கதறி அழுதவாறு இந்த வாழ்க்கையை எப்படி ஓட்டப் போகின்றோம் என விரக்தியில் உறைந்திருப்பார்கள். ஒருவேளை தற்கொலைக்குக் கூட முயற்சிக்கல…
அண்ணன்கள் வித்தகன் மற்றும் ஆர்வி எங்கேயிருந்தாலும் மேடைக்கு அருகில் வரவும்.
நான் என்ன சொல்ல வேண்டுமென்று நீங்கள் எதிர் பார்க்கிறீர்கள் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் என்னுடைய எண்ணங்களை நீங்கள் முன் கூட்டியே ஊகிக்கும் அளவுக்கு என் கருத்துக்களை உங்களிடம் கொண்டு சேர்த்திருப்பதில் எனக்கு மகிழ்ச்சி என்பதை ஒப்புக்கொள்கிறேன்.
நான் சொல்ல விரும்புவதும் கட்டுரையின் உள்கருத்தும் ஒன்றுதான். பெண்கள் என்ன செய்ய வேண்டும், எங்கு போக வேண்டும், எப்படி வாழவேண்டும் என்று சொல்லுகின்ற பெரும்பான்மை சமூகத்தின் ஆணாதிக்க புத்தி மாறத்தான் வேண்டும். சமுதாய அக்கறை உள்ளவர்கள் தொடர்ந்து இதை அடித்துதான் சொல்ல வேண்டும்.
மேடைக்கு வந்துவிட்டேன். சோடா எங்கே நண்பா?
அட கோச்சுகாதிங்க பாஸ், இன்னிக்கு நெட்டுல சீரியசான மேட்டரல்ல சமரசமில்லாம தன்னோட கருத்துகள சொல்லுறவங்கள வினவு சைட்டுலதான் பாக்கலாம்.. அதுல நீங்க ஆர்.வி, ஆஃப்டிக்கட், வினவு, மாசே, நொந்தகுமார், கலகம் பின்னே ஞானும் என ரெகுலரா கமென்ட போடுரவங்க இந்த மாதிரி ஒரு பதிவுக்கு வரலன்ன எப்படி… நீங்க நேத்தே வரல இன்னிக்காவது வருவீங்களான்னுதான் ஒரு ஆவாஜ் குட்தேன்
எனக்கு மாற்றுக் கருத்து இருக்கும் போதுதான் எழுதும் ஆர்வம் வருகிறது. ஒத்துப் போகும் கட்டுரைகளையும் மறு மொழிகளையும் ரசித்துப் படித்து விட்டு சைலண்டாக ஒதுங்கி விடுகிறேன். திரு. ஆர். வி. யை ஏன் கொஞ்ச நாளாகவே காணோம்?
காணவில்லையே என்று கவலைப்படும் வினவு குழுவினருக்கும், மாம்போ, வித்தகனுக்கும் நன்றி!
தவறு என் கண்ணிலா, இல்லை வினவின் பதிவுகளிலா என்று தெரியாது – எனக்கு வினவின் பதிவுகளில் வர வர, இந்துக்களை குறை சொல்வதும், குறிப்பாக பார்ப்பன ஜாதியில் பிறந்தவர்கள் அனைவரையும் இழிவுபடுத்தி எழுதுவது அதிகரித்திருப்பதாகவும் தோன்றுகிறது. இந்த பதிவுகளை படிப்பவர்களுக்கு உலகில் பாசிசம் என்பது இல்லவே இல்லை, பார்ப்பன பாசிசம்தான் இருக்கிறது என்று தோன்றலாம். 🙂 தன வேற்று ஜாதி மனைவியை தவறாக நடத்தும் அம்பி என்று பதிவு வரும், அவர் அம்பிதானா என்பது நிச்சயமாக தெரியாவிட்டாலும். பம்பாயில் குண்டு வீசிய துலுக்கன் என்று பதிவு எழுதுவது தவறு என்று யாரும் சொல்லாமல் புரிந்துகொள்ளும் இந்த குழுவினருக்கு இப்படி அம்பி என்று தலைப்பு வைப்பது தவறு என்று புரியவில்லை என்றால் என்ன செய்வது? சமீபத்தில் எழுதப்பட்ட திருச்சபை வக்கிரம்/புனிதம் பதிவையும், இந்த அம்பி பதிவையும் பாருங்கள், அம்பி பதிவில் ஒரு தனி மனிதன் தன மனைவியை சரியாக நடத்தாதை வைத்து பார்ப்பனராக பிறந்த அத்தனை பேர் மேலும் வெறுப்பை உமிழும் தொனி தெரியும். அதே நேரத்தில் இந்த திருச்சபை பதிவு மிக நிதானத்துடன் எழுதப்பட்ட ஒரு நல்ல பதிவு – அவர்கள் இப்பிட் சொல்கிறார்கள், இவர்கள் இப்படி சொல்கிறார்கள் என்றுதான் நிறைய வரிகள் வரும். இந்த reverse casteism அணுகுமுறை எனக்கு மிக சலிப்பை ஏற்படுத்துகிறது. பின்னூட்டம் இடுபவர்களின் பார்ப்பன வெறுப்பை பற்றி சொல்லவே வேண்டாம். அதிலும் இப்போதெல்லாம் என்னை பற்றி பொய் சொல்லும் பின்னூட்டங்கள் வேறு.
இப்போதெல்லாம் இந்த பார்ப்பன வெறுப்பை பற்றி எழுதும்போது இந்த பதிவின் முக்கிய கருத்தை விட்டுவிட்டு பதிவை திசை திருப்புகிறேனோ என்று தோன்றுகிறது. அதே நேரத்தில் இந்த reverse casteism பற்றி எழுதாவிட்டால் நானும் இதை implicit ஆக அங்கீகரிக்கிறேன் என்றாகிவிடுகிறது. அதனால் விலகி இருப்பதே மேல் என்று தோன்றிவிட்டது.
வினவு, ம.க.இ.க.வின் theoretical framework-இல நான் பல குறைகளை – கம்யூனிசம், ஸ்டாலின், மாவோ ஆகியோர் மீது கண்மூடித்தனமான பக்தி, சர்வாதிகார நோக்கம், கருத்து சுதந்திரம என்பது கம்யூனிச ஆதிக்க வர்க்கத்தின் கையில் இருக்க வேண்டும் – காண்கிறேன்தான். அவர்கள் செயல் முறைகளில் எனக்கு பல கருத்து வேறுபாடுகள் இருக்கின்றனதான் – உதாரணமாக, சு. சாமியின் மீது முட்டை வீச்சு என்பது கேனத்தனம். ஆனால் அவர்களது நோக்கங்களை நான் மதிக்கிறேன். அவர்கள் பொதுவாக நேர்மையாளர்கள்தான். சிதம்பரம் கோவில் விஷயத்தில் கேஸ் போட்டு ஜெயித்த ஒரு விஷயமே அவர்கள் வெறும் வாய்ச்சொல் வீரர்கள் இல்லை என்பதை காட்டுகிறது. வாழ்த்துகள்!
பாசிசம் இந்தியாவைத் தவிர வேரு எங்கும் இல்லை என்று வினவு சொல்லவும் இல்லை, சொல்லவும் முடியாது. இந்தியாவில் இருப்பது பார்ப்பன பாசிசம், பாகிஸ்தானில் இருப்பது இஸ்லாமிய பாசிசம், இலங்கையில் இருப்பது சிங்களப் பாசிசம், ஈழத்தில் இருந்தது புலிப் பாசிசம்
[…] here https://www.vinavu.com/2009/06/30/women/ to read more […]
இந்த பதிவை படித்ததும், கடந்த வாரம் நடந்த ஒரு நிகழ்வு தான் நினைவுக்கு வருகிறது.
நண்பர் ஒருவருக்கு சாதி மறுப்பு திருமணம் செய்ய பெண் தேடிக்கொண்டிருக்கிறோம். (இந்த சாதி மறுப்பு திருமணம் செய்வதில், செய்து வைப்பதில் பலவித மலைகளை, தடைகளை கடந்தாக வேண்டும். அதை தனி ஒரு பதிவாக பின்னொரு நாளில் பதிவிடுகிறேன்.) இதற்காக திருமண வலைத்தளத்தில் பதிந்து வைத்திருந்தோம். கடந்த வாரம் தென் மாவட்டத்திலிருந்து ஒரு பெண் பேசினார். போனில் அழைத்து… போனில் பணம் இல்லை. அதனால், நீங்கள் அழையுங்கள் சொல்லி… கிட்டத்தட்ட 45 நிமிடம் பேசியிருக்கிறார். பேசியதின் சாரம் இது தான்.
என் பெயர் பிரேமா. பி.எஸ்.சி படிச்சிருக்கேன். வயது 32. கொஞ்சம் பூசுனாப்பல (குண்டா!) இருப்பேன். சிகப்பா, அழகா இருப்பேன். எங்கள் குடும்பம் தொண்டை மண்டல முதலியார் சாதியை சேர்ந்தவர்கள். அப்பா இறந்துவிட்டார். ஒரு அண்ணன், மூன்று அக்காக்கள். அக்காக்கள் மூவருக்கும் திருமணமாகிவிட்டது. அண்ணனுக்கு இன்னும் ஆகவில்லை. மூன்று அக்காக்களுக்கு திருமணம் முடிக்க நிறைய கடன்பட்டோம். சிரமப்படுகிறோம். இப்பொழுது எனக்கு செலவழிக்க ஏதும் இல்லை. “உனக்கெல்லாம் நாங்க திருமணம் செய்ய முடியாது. யாரையாவது காதலிச்சு இழுத்துகிட்டு ஓட வேண்டியது தானே! இருந்து கிட்டு எங்க உசிரை வாங்கிகிட்டு!” என அடிக்கடி திட்டுகிறார்கள். இந்த வயசுல நான் யாரை போய் காதலிப்பேன்?
நீங்க வரதட்சணை தேவையில்லை என குறிப்பிட்டு இருக்கிறீர்கள். அதனால் தான் உங்ககிட்டே பேசறேன். நீங்க எப்படி? போட்டோவில் இருப்பது போல(வாவது) இருப்பீர்களா! உங்க படிப்புக்கு அரசு வேலை விரைவில் கிடைத்துவிடும் அல்லவா! உங்க அம்மா, அப்பா எங்க இருக்காங்க? கல்யாணத்துக்கு பிறகு, அம்மா, அப்பா எங்கே இருப்பார்கள்?
அன்பா இருப்பேன். நீங்க அன்பா இருப்பீங்க தானே!
நான் நல்லா சமைப்பேன். எங்க வீட்ல சைவம் தான். ஆனால், உங்களுக்காக அசைவம் சமைப்பேன்.
ஒரு மெயில் ஐ.டி தர்றேன். அதுல என் போட்டோ இருக்கு. பார்த்துட்டு சொல்லுங்க! நீங்க சரின்னு சொன்னா, இன்னைக்கே சென்னைக்கு கிளம்பி வந்துர்றேன்!
***
இப்படி பேசிய விசயத்தை சொல்லி முடித்ததும்… சிறிது நேரத்திற்கு என்னால் எதுவும் பேச
முடியவில்லை. மெளனம் தான் நிலைத்தது.
முகம் பார்த்ததில்லை. முகவரி தெரியாது. ஆனால், மொத்த வாழ்க்கையையும் நம்பி ஒப்படைக்கும் இழிநிலை கொடுமை. அந்த பெண்ணின் பேச்சில், வாழ்க்கையை வாழ வேண்டும் என ஆவல் இருந்தது. இப்படி அந்த பெண்ணை வாழ்வின் அடுத்த நிலைக்கு போகவிடாமல்… திட்டி, திட்டி ஆளுமையை நாள்தோறும் சிதைக்கிறார்கள்.
இந்த பெண்ணை மேற்கொண்டு தொடர்பு கொள்வதிலும்… நிறைய சிக்கல்கள் எழுகின்றன. அந்த பெண் சொல்வது மாதிரி… உடனே பஸ் ஏறி வாம்மா! என நம்மால் சொல்ல முடியவில்லை. வீட்டிற்கு போய் பேசினால்… “வேறு சாதிகாரருக்கு நாங்கள் கொடுக்கிற எண்ணம் இல்லை” என்பார்கள். அப்பபடியே அந்த பெண்ணின் அம்மா, அண்ணன் இருவரிடமும் பேசி… சம்மதம் வாங்கினால் கூட… மூன்று சகோதரிகளின் மாப்பிள்ளைக் குடும்பங்கள் “சாதி, குடும்ப கெளவரம்” என வழிமறித்து நிற்கும். அந்த பெண்ணிடமே.. வீட்டிற்கு வந்து பேசுகிறோம் என்றதற்கு… காரணம் ஏதும் சொல்லாமல்…வீட்டிற்கு வந்து பேசவேண்டாம் என்றது.
இனி, மேற்கொண்டு ஏதும் எங்களால் முன்னேற முடியவில்லை. அந்த பெண்ணும் பிறகு பேசவில்லை. இப்பொழுது… யாரிடம் போன் பண்ணி தன் நிலையை சொல்லிக்கொண்டிருக்கிறதோ தெரியவில்லை. அந்த பெண்ணின் நிலை கண்டு வருத்தப்பட தான் முடிகிறது.
பின்குறிப்பு : அந்த பெண்ணுக்கு ஏதும் சிரமம் வந்துவிடக்கூடாது என்பதற்காக.. பெயர் மட்டும் மாற்றப்பட்டுள்ளது. பிரேமா என்பது இயல்பாக இருக்கிறது. தொண்டை மண்டல முதலியார் என்பது முற்பட்ட பிரிவைச் சேர்ந்தது என்பதால்… உண்மை பெயரிலும் ஒரு “கெத்” இருந்தது.
http://socratesjr2007.blogspot.com
Hi
உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான http://www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.
உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.
நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்
அமெரிக்காவாழ் இந்திய இளைஞர் அவர். யு.எஸ்.ஸுக்கு விமானமேறும் முன் அவசரமாக அவர் நம்மைப் பார்க்க விரும்பியதால், விமான நிலையத்தில் பிரசன்னமானோம்.
கண்ணில் ரேபான் குளிர்க்கண்ணாடி, ஆப்பிள் சிவப்பு நிறம், நெற்றியில் விழும் சுருள் முடி, சுருக்கமாகச் சொல்லப்போனால் இளவரசன் போல இருந்தார் அந்த இளைஞர்.
அப்படி என்ன பேசப்போகிறார்? சர்வதேச பயங்கரவாதம், பேரழிவு ஆயுதம், அணுசக்தி ஒப்பந்தம், டாலர் மதிப்பு உயர்வு பற்றி ஏதாவது பேசப்போகிறாரா என்றபடி அவரது முகத்தை நாம் ஏறிட்ட நேரம், அந்த இளைஞரின் கண்களில் இருந்து பொலபொலவென கண்ணீர்.
‘‘விளக்கைப் பிடிச்சுக்கிட்டு கிணற்றில் விழுந்த கதை மாதிரி ஆயிட்டுது சார் என் வாழ்க்கை. என்னால் ஒரு பாவமும் அறியாத எழுபது வயதைத் தாண்டிய என் அப்பாவும், அம்மாவும் சிறைக்குப் போகப் போகிறார்கள் சார்!’’ என்று அரற்ற ஆரம்பித்தார் அவர். அது விமானநிலையம் என்பதை அவருக்கு நினைவூட்டி, ஆசுவாசப்படுத்தி பேச வைத்தோம். பெயர் வேண்டவே வேண்டாம் என்றபடி பேசத் தொடங்கினார் அவர்.
‘‘சென்னைதான் என் சொந்த ஊர். ஆசாரம் மிக்க குடும்பத்தைச் சேர்ந்தவன் நான். இரண்டு அக்காள், இரண்டு அண்ணன்கள். நான் கடைக்குட்டி. அண்ணன்கள் இருவரும் கலி போர்னியா மாநிலத்தில் சாஃப்ட்வேர் இன்ஜினீயர்களாக கைநிறைய சம்பாதிக்கிறார்கள். அக்காள்கள் திருமணமாகி டில்லியிலும், மும்பையிலும் வசிக்கிறார்கள். எங்களை ஆளாக்கிய அப்பா ஓய்வு பெற்ற ஆசிரியர். அம்மா ஹவுஸ் ஒய்ப்.
அக்காள் இருவருக்கும் திருமணம் நடந்தபின் மூத்த அண்ணா திருமணம் செய்ய நினைத்திருந்ததால் அப்படியிப்படியென்று அவருக்கு 46 வயதாகி விட்டது. நம் கலாசாரத்துக்கு ஒத்துப் போகிற மாதிரி, குறைவாகப் படித்த, குடும்பப்பாங்கான பெண் வேண்டும் என்று அவர் விரும்பியதால் பட்டுக் கோட்டை பக்கம் ஒரு பெண்ணைப் பார்த்தோம்.
பட்டப்படிப்பு படித்திருந்த அவளை, அண்ணா வுக்குப் பிடித்துப்போனதால் திருமணம் நடந்தது. அண்ணனுடன் அமெரிக்கா போன அவள், போன ஒரே மாதத்தில் அண்ணாவிடம் வம்பு செய்ய ஆரம்பித்தாள். உறவுக்கு முயலும்போது ஹிஸ்டீரியா வந்த மாதிரி அவள் கத்தி ஆர்ப்பாட்டம் செய்திருக்கிறாள். ‘நீ கிழவன். உன்னுடன் வாழ்வது நரகம். என்னைத் தொட்டால் தற்கொலை செய்து கொள்வேன்’ என்று அவள் மிரட்ட, அண்ணா நொறுங்கிப் போனார். ‘என்னைப் பிடிக்கவில்லை என்றால் திருமணத்துக்கு நீ மறுத்திருக்கலாமே?’ என்று அண்ணா சொன்னபோது, ‘வீட்டில் என் விருப்பத்தை யார் கேட்டார்கள்? ‘அமெரிக்க மாப்பிள்ளையைக் கட்டிக் கொண்டால் நீ இஷ்டம் போல இஷ்டப்பட்டபடி வாழலாம். அவனைப் பிடிக்காவிட்டால் வரதட்சணைக் கொடுமை வழக்குத் தொடுக்கலாம். நீ கேட்கிற பணத்தை அவன் கதறிக் கொண்டு உன் காலடியில் வைப்பான்’ என்றார்கள். அந்த யோசனை பிடித்திருந்ததால்தான் நான் திருமணத்துக்குச் சம்மதித்தேன்’ என்றிருக்கிறாள்.
அதிர்ந்து போன அண்ணா, ‘சீ! நீயும் ஒரு பெண்ணா?’ என்று திட்ட, அதற்காகவே காத்திருந்ததுபோல அவள், அமெரிக்க போலீஸாரிடம் போய், கணவர் தன்னை சூடு வைத்தும், மின்சாரம் பாய்ச்சியும் கொடுமைப்படுத்துவதாகப் புகார் கூறிவிட்டாள். ஆத்திரத்தில் அண்ணா அவளை கைநீட்டி அடித்துவிட, அண்ணா மீது வழக்கு விழுந்தது. அந்தப் பெண் இந்தியாவுக்குத் திருப்பியனுப்பப்பட்டாள்.
ஊருக்கு வந்த வேகத்தில் என் அப்பா, அம்மா, அண்ணன், அக்காள்கள் எல்லோர் மீதும் அவள் வரதட்சணைக் கொடுமை வழக்குத் தொடர்ந்து விட்டாள். ஜீவனாம்சமாக ஒரு கோடி ரூபாய் கேட்டாள். திருமணமாகி அவள் எங்கள் வீட்டில் இருந்ததே இரண்டு நாட்கள்தான். அந்த இரண்டு நாளில் நாங்கள் ஓராயிரம் கொடுமை செய்ததாக இருநூறு பக்கப் பட்டியல் தயார் செய்து கோர்ட்டில் கொடுத்து விட்டாள்.
இதனால் என் அப்பா, அம்மா, அக்காள்கள் இருவரும் 15 நாட்கள் சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவர வேண்டியதாயிற்று. அண்ணாவுக்கு வேலை போனது. வழக்குக்காக அவர் அமெரிக்காவில் இருந்து இங்குவந்து மீண்டும் அமெரிக்கா போய் புதுவேலை தேடுவதற்குள் போதும்போதுமென்று ஆகிவிட்டது. அண்ணாவின் மனைவி எங்கள்மேல் தொடர்ந்த பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருக்கும் நிலையில்தான் அடுத்த கொடுமையும் நிகழ்ந்தது’’ என்ற அந்த இளைஞர் தன் கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டார்.
‘‘அண்ணாவுக்கு நேர்ந்த கதியைப் பார்த்து திருமணம் என்றாலே பதுங்க ஆரம்பித்த என் 2-வது அண்ணனுக்கும் வீட்டில் பெண் பார்க்கத் தொடங்கினார்கள். கும்பகோணத்தில், முதுகலை முடித்த ஒரு பெண் கிடைத்தாள். ‘அமெரிக்க மாப்பிள்ளை, மாதம் 40,000 யு.எஸ்.டாலர் சம்பளம்’ என்றதும் அவளது வீட்டார் குதிபோட்டு வந்தனர். ‘கல்யாணம் ஆனதும் பெண்ணை அமெரிக்காவுக்கு அழைச்சுண்டு போவீர்களா? அமெரிக்க பிரஜைக்கான கிரீன் கார்டு அவளுக்குக் கிடைக்குமா?’ என்பதில்தான் பெண்வீட்டார் அநியாய ஆர்வம் காட்டினார்கள்.
திருமணம் நடந்து அண்ணன் புதுமனைவியுடன் விமானமேறினார். அங்கு போனதும் அந்தப் பெண்ணுக்கு கால் ஒரு இடத்தில் பாவவில்லை. கண்டவர்களுடன் போனில் பேசுவது, ஆண் நண்பர்களைச் சேர்த்துக் கொண்டு நைட்கிளப்களில் சுற்றி குடித்து, கூத்தடிப்பது என்று ஆரம்பித்து விட்டாள். ‘நீ இந்தியப் பெண்தானா?’ என்று அண்ணா எரிச்சல்பட்டுக் கேட்ட போது அவள் அளித்த பதில் ‘நான் உனக்குக் கழுத்தை நீட்டியதே இதற்காகத்தான் கண்ணா!’
தகராறு முற்றி, என் 2-வது அண்ணன் அந்தப் பெண்ணை கும்பகோணத்துக்குக் கொண்டுபோய் பிறந்த வீட்டில் விட்டுவிட்டார். அவர்கள் அமெரிக்க மாப்பிள்ளையைப் பிடித்ததே வரதட்சணைக் கொடுமை வழக்குத் தொடுத்து கோடிக்கணக்கில் கறக்கத்தான் என்பது பின்னர்தான் எங்களுக்குத் தெரிய வந்தது. மூத்த அண்ணாவுக்கு நேர்ந்த கதி இளைய அண்ணாவுக்குத் தெரியும் என்பதால் அவர், அந்த கும்பகோணம் பெண்ணிடம் நஷ்டஈடாக ரூ.15 லட்சம் தருவதாக பேரம் பேசிப் பார்த்தார். அவளோ, ‘ரூ.2 கோடியை வை!’ என்று ஒற்றைக்காலில் நின்றாள்.
அண்ணன் அதற்கு மசியாத நிலையில், எங்கள் மேல் வழக்கு விழுந்தது. அனைவரும் சிறைக்குப் போய் முன்ஜாமீனில் வெளிவந்தோம். வழக்கு நடந்து வந்த வேளையில் இப்போது ஒரு புரோக்கர் மூலமாக அந்தப் பெண், ரூ.50 லட்சம் கேட்க, நாங்கள் ரூ.25 லட்சத்தில் நிற்கிறோம். இந்தப் பிரச்னையில் என் அக்காள்கள் இருவரும் கூட சிறை செல்ல நேரிட்டதால் எரிச்சலடைந்த என் அத்தான்கள் ‘வழக்கு முடியும் வரை இருவரும் பிறந்த வீட்டில் வாழாவெட்டியாக இருங்கள்’ என்று அவர்களை பிறந்தகத்துக்கு அனுப்பி விட்ட கொடுமையும் நடந்தது.
நான் விசாரித்தபோது, இப்படி ஜீவனாம்சம், வரதட்சணை வழக்குத் தொடர்ந்து பல கோடிகளைக் கறப்பதற்காகவே இந்தியாவில் பலர் அமெரிக்க மாப்பிள்ளைகளைத் தேடுகிறார்கள் என்பதைத் தெரிந்து கொண்டோம். இதில் சிக்கிய அமெரிக்க மாப்பிள்ளைகள் பலர் வேலையை மட்டுமின்றி அமெரிக்கக் குடியுரிமையையும் இழந்திருக்கிறார்கள். என் அண்ணன்களுக்கும் இதுதான் நடந்திருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டேன்.
இதற்குள் சூடுபட்ட பூனைபோல ஆகிவிட்ட நான், ‘இந்தியப் பெண்ணா? ஐயோ வேண்டாம்!’ என்று உஷாராகி, அமெரிக்காவில் ஒரு வெள்ளைக்கார பெண்ணைக் காதலித்து மணந்து கொண்டேன். ஒரு வருடம் மட்டுமே என்னுடன் வாழ்ந்த அவள் எக்காரணம் கொண்டும் எனக்கு பிள்ளை ஒன்றைப் பெற்றுத் தர மறுத்துவிட்டாள். ‘ஒரு கருப்பனுடன் என்ஜாய் பண்ணலாம். ஆனால் பிள்ளை பெற்றுக்கொள்ளக் கூடாது’ என்பது அவளது பாலிஸி.
அந்த அமெரிக்கப் பெண்ணுக்கு நிறைய பாய் ஃப்ரெண்ட்ஸ் இருந்ததால் அவளை டைவர்ஸ் செய்து விட்டேன். இனி என் வாழ்வில் திருமண பந்தமே கூடாது என்று ஒரு சன்னியாசி போல லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில், நானுண்டு என் வேலையுண்டு என்றிருந்தேன். ஆனாலும் விதி ‘இந்தியப் பெண்’ வடிவத்தில் வந்து என்னைப் டித்துக் கொண்டது’’ என்ற அந்த இளைஞர் கைக்கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டு சோகக் கதையைத் தொடர்ந்தார்.
‘‘என் வாழ்வில் இனி திருமணமே வேண்டாம் என்றிருந்த நிலையில், என்னுடன் பணிபுரிந்த நண்பர்கள், ‘ராஜகுமாரன் மாதிரி இருக்கும் நீ சும்மா இருப்பதா? உன் அந்தஸ்துக்குத் தக்கபடி ஒரு பெண்ணைப்பார். எந்தப் பிரச்னையும் வராது’ என்று ஆசை காட்டினார்கள். எனக்காக அவர்களே மேட்ரிமோனியல் விளம்பரம் செய்தார்கள்.
அந்தவகையில் என் இ-மெயிலுக்கு பெண்களின் பெற்றோர்கள் பலர் பயோடேட்டா அனுப்பினார்கள். ஆனால் ஒரு பெண் தன்னிச்சையாக அவளே அவளது பயோடேட்டாவை அனுப்பியிருந்தாள். புகைப்படத்தில் அப்சரஸ் மாதிரி அவள் அழகாக இருந்தாள். அவளை நான் தொடர்பு கொள்ளாத நிலையிலும் அவள் விடாமல் எனக்கு இ-மெயில் அனுப்பினாள். திடீரென ஒருநாள் சாட்டிங்கில் பேசினாள்.
‘‘நான் பேரழகி. என்னைத் துரத்தும் எந்த ஆண் மகனையும் எனக்குப் பிடிக்காது. நான் விரும்புகிற ஆணை நான்தான் துரத்தித் துரத்தி காதலிப்பேன் என்று என் ஜாதகம் சொல்கிறது. அவன் என்னைவிட வயதில் சின்னவன் என்றும் ஜாதகத்தில் இருக்கிறது. அதுபோல எனக்கு 32 வயது. உனக்கு 31 வயது. நான் தேடிய ஆண்மகன் நீதான்’’ என்று அவள் சாட்டிங்கில் பிதற்ற ஆரம்பித்தாள்.
அவள் பைத்தியமோ என்று நினைத்து தவிர்த்துப் பார்த்தேன். அவளோ போனில் வாய்விட்டுக் கதற ஆரம்பித்தாள். ஒருவேளை பணத்துக்காக வெளி நாட்டு மாப்பிள்ளைகளை வளைக்கும் மணப்பெண் கும்பலைச் சேர்ந்தவளோ என்ற சந்தேகத்தில், தமிழகத்தில் உள்ள என் நண்பர்களிடம் அவளைப் பற்றி விசாரிக்கச் சொன்னேன். கிடைத்த தகவல்கள் அதிர்ச்சிகரம்.
அவள் தமிழ்நாட்டின் முக்கிய நகரமொன்றில் வசிக்கும் கோடீஸ்வர வைர வியாபாரியின் மகள். முதுகலை முடித்தவள். வீட்டில் அவளுக்கு வேலை செய்ய மட்டுமே மூன்று வேலைக்காரிகள் இருக்கிறார்கள். அவளது பங்களாவில் மொத்தம் 9 கார்கள். அவளது அப்பா அவளுக்காக சிம்லா முதல் கன்னியாகுமரி வரை மாப்பிள்ளை தேடிவருகிறார். அவளோ அனைத்து வரன்களையும் தட்டிக் கழித்து வருகிறாள். ‘பேரழகி என்ற கர்வத்துடனேயே மகள் வயதாகி கிழவியாகி விடுவாளோ?’ என்ற பயத்தில் அவளது அப்பா இருக்கிறார். இவையே நான் தெரிந்து கொண்ட தகவல்கள்.
அந்தப் பெண் மீண்டுமொருமுறை என்னிடம் பேசியபோது, ‘இந்தியப் பெண்கள் எல்லோருமே பிளாக்மெயிலர்கள்’ என்ற நான், என் அண்ணன்களின் கதைகளைச் சொன்னேன். கோபப்பட்ட அவள், ‘என்னையும் அப்படி நினைத்து விட்டாயா?’ என்று பொங்கினாள். திடீரென ஒரு நாள் திடுதிப்பென அவள் டூரிஸ்ட் விசாவில் அமெரிக்கா வந்து, என்முன் நின்றபோது திகைத்துப் போய் விட்டேன்.
‘உன் மீது நான் உயிராய் இருக்கிறேன். உன் மேல் எந்த வழக்கும் போட மாட்டேன் என்று வெற்று பேப்பரில் நான் கையெழுத்துப் போட்டுத்தரத் தயார்’ என்று அவள் உருகினாள். ‘நான் ஏற்கெனவே திருமணமாகி டைவர்ஸ் பெற்றவன்’ என்ற உண்மையை அவளிடம் சொன்னேன். அவள் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ‘உனக்கு எத்தனை கல்யாணம் ஆகியிருந்தால் என்ன? என் புருஷன் நீதான்’ என்று என்னைக் கட்டியணைத்துக் கொண்டாள். அவளை ஊருக்கு அனுப்பி வைப்பதற்குள் போதும் போதுமென்றாகி விட்டது.
ஊருக்குப் போனபிறகும் போன்கால், சாட்டிங், இ-மெயில் தொடர்ந்தது. ஒருநாள் என் இல்லத்துக்கு ஒரு பார்சல் வந்தது. பிரித்தபோது அதில், அவள் கையெழுத்துப் போட்ட வெற்று ஸ்டாம்ப் பேப்பர்கள் இருந்தன. ‘இனியும் நீ என்னைத் திருமணம் செய்து கொள்ள மறுத்தால் என் பிணம்தான் வீட்டில் கிடக்கும்’ என்று அவள் மிரட்ட, உடனே ஊருக்கு விமானமேறினேன். அப்பா, அம்மாவிடம் பேசி, இரண்டே நாளில் பத்திரிகை அச்சடித்து, சுமார் 300 பேரை அழைத்து, ஒரு கோயிலில் என் திருமணம் நடந்தது. ஒரு வார காலத்துக்குப் பின் அவளுக்கு ஒரு மாதகாலம் தாற்காலிக விசா எடுத்துக¢கொண்டு அமெரிக்கா புறப்பட்டேன்’’ என்ற அந்த இளைஞர் மீண்டும் தன் கைக்கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டு வேகமாகக் கதை சொல்ல ஆரம்பித்தார்.
‘‘ஒரு வாரம்தான் அவள் நல்லமாதிரி இருந்தாள். என் குடும்ப நண்பர்கள் இருவர் என் வீட்டுக்கு வந்த போது அவளும், நானும் சமையல் செய்து உணவு பரிமாறினோம். செக்ஸில் என்னைவிட அவள் ஆர்வமாக இருந்தாள். புதுப்புது வித்தைகளைச் சொல்லித் தந்தாள். ‘இதெல்லாம் உனக்கு எப்படித் தெரியும்?’ என்று கேட்டபோது, ‘படித்துத் தெரிந்து கொண்டேன். ஃப்ரெண்ட்ஸ் சொல்லித் தந்தார்கள்’’ என்றாள்.
அப்பாவியாக அவள் சொன்னதை நம்பினேன். ஆணுறை பயன்படுத்தாமல் ஒருமுறைகூட அவள் என்னை நெருங்கவிடவில்லை. ‘கணவன், மனைவிக்குள் ஆணுறை எதற்கு?’ என்று நான்கேட்ட போது, ‘தாற்காலிக விசாவில்தானே என்னை இங்கே கூட்டி வந்திருக்கிறாய்? கிரீன்கார்டு வாங்கிக் கொடு. உனக்கு குழந்தையைச் சுமப்பது பற்றி அப்போது யோசிக்கிறேன்’ என்றாள்.
அதன்பின் ஊருக்குக் கிளம்பிய அவள், அங்கிருந்து போன் செய்தபோது கேட்ட முதல் கேள்வியே, ‘கிரீன் கார்டு எப்போது கிடைக்கும்?’ என்பதுதான். ‘ஒரு வருடம் என்னுடன் தங்கினால்தான் கிரீன் கார்டு கிடைக்கும். தாற்காலிக விசாவில் வந்து என்னுடன் தங்கு’ என்று நான் சொன்னபோது, தனக்கு குளிர்க் காய்ச்சல் என்று பினாத்திய அவள்,
‘உன்னிடம் ஒரு வாரத்தில் என்ன சுகம் கண்டேன்? உன் நண்பருக்கும் அவர் மனைவிக்காகவும் என்னை வெங்காயம், காய்கறி வெட்ட வைத்து விட்டாயே? நீ என்னை செக்ஸ் டார்ச்சர் செய்தாய். அதனால்தான் எனக்கு உடம்பு சரியில்லாமல் போய் விட்டது’ என்றாள். ‘நான் எப்போது உன்னை செக்ஸ் டார்ச்சர் செய்தேன்?’ என்று கேட்டபோது, ‘என் மேல் அமர்ந்து நீ ஏதோ செய்ததில் என் தொடையில் ரத்தம் கன்றிப்போய் விட்டது’ என்று பச்சை பச்சையாக ஏதேதோ சொன்னாள்.
அவளுடன் செல்போனில் பேசிய அந்த நேரம் பீப்பீப் ஒலி எழுந்ததால் என் பேச்சை அவள் பதிவு செய்கிறாள் என்பதைப் புரிந்து கொண்டேன். ‘இவள் யார்? ஏன் இப்படி நாடகமாடுகிறாள்?’ என்று அதிர்ச்சியாக இருந்தது. மீண்டுமொரு முறை தமிழக நண்பரை அழைத்து அவளைப் பற்றி விசாரிக்கச் சொன்னேன். அப்போது கிடைத்த தகவல்கள் அதிர வைத்தன.
‘அவள் பல ஆண்களுடன் தொடர்புள்ளவள். பிடித்த ஆண் கிடைத்தால் அவனை அடைந்தே தீரும் ஒரு மாதிரியான சைக்கோ அவள். திருமணம், தாலி, குடும்பம் இதிலெல்லாம் அவளுக்கு நம்பிக்கையில்லை. திடீரென வெளிநாட்டு ஆண்கள் மேல் மோகம் முட்டியதால், ஒரு கிரீன் கார்டு வாங்கி அமெரிக்காவில் செட்டிலாகிவிடும் எண்ணத்தில் திருமணம் செய்திருக்கிறாள்.
‘கார்டு கிடைக்கத் தாமதமானால் கணவன் மீது அமெரிக்க போலீஸில் டார்ச்சர் புகார் கொடுத்து, இந்தியாவில் ஜீவனாம்ச வழக்குத் தொடுத்தால் அமெரிக்க கிரீன் கார்டு கிடைத்துவிடும்’ என்று சில வக்கீல்கள் அவளுக்கு யோசனை சொல்லியிருப்பதால் தற்போது அந்த முடிவில் அவள் இருக்கிறாள். அதனால்தான் செக்ஸ் டார்ச்சர் பற்றி போனில் பேசியபோது அதைப் பதிவு செய்திருக்கிறாள். இது போக ஒரு மருத்துவரிடம் போய், தனக்குத் தொடையில் காயம், மார்பில் காயம் என்று சர்டிஃபிக்கேட் தர முடியுமா? என்று கேட்டிருக்கிறாள். அதற்காக தன்னையே அந்த மருத்துவருக்குத் தந்திருக்கிறாள்.
திருமணத்துக்கு முன் டூரிஸ்ட் விசாவில் அவள் அமெரிக்கா வந்திருந்தாள் அல்லவா? அப்போது உடனடி பாஸ்போர்ட், விசாவுக்காக சம்பந்தப்பட்ட சிலருடன் அவள் சில இரவுகளைக் கழித்திருக்கிறாள். இதையெல்லாம் எனக்குத் தெரிவித்த நண்பர், ‘எழுபது வயதைத் தாண்டிவிட்ட உன் அப்பா, அம்மா மீதும் அவள் வழக்குத் தொடுக்கும் மூடில் இருப்பதால் உஷாராக இருந்து கொள்’ என்று எச்சரித்தார்.
அதிர்ந்து போன நான் அடுத்த விமானத்தில் சென்னை வந்தேன். அவளைச் சந்தித்தபோது, ‘ஓ! டார்லிங். ரொம்ப முடியலை’ என்று குலாவினாள். அவள் எந்தநேரத்தில் வேண்டுமானாலும் என்மீது புகார் தந்து என்னையும், என் வயதான பெற்றோரையும் சிறைக்கு அனுப்பப் போவது உறுதி. அதற்காக யாருடனும் படுக்கையைப் பகிர்ந்து கொள்ள அவள் தயங்க மாட்டாள். இனி என் கதி என்ன? அடிக்கடி நான் இங்கே வந்து அலைய வேண்டியிருக்குமா? கடவுளே! ஒன்றுமே புரியவில்லையே.
அந்த மனப்பாரத்தைச் சொல்லத்தான் உங்களைக் கூப்பிட்டேன். இந்திய மணமகள்கள் என்றால் அமெரிக்க மாப்பிள்ளைகளை இனி எட்டியிருக்கச் சொல்லி உங்கள் பத்திரிகையில் எச்சரிக்கைக் கட்டுரை எழுதுங்கள்’’ என்று சொல்லிவிட்டு ரோலிங் சூட்கேசை இழுத்துக் கொண்டு விமானத்தை நோக்கி நகர்ந்தார் அந்த இளைஞர்.
அவர் சென்ற திசையையே அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தோம்.
நன்றி குமுதம் ரிப்போர்ட்டர்