privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்ஊழல்ரத்தன் டாடா: உலக முதலாளியா? பிளேடு பக்கிரியா?

ரத்தன் டாடா: உலக முதலாளியா? பிளேடு பக்கிரியா?

-

ratan‘‘கடன்பட்டார் நெஞ்சம் போலக் கலங்கினான் இலங்கை வேந்தன்” என்ற கம்பனின் கூற்றுப்படி பார்த்தால், வாங்கிய கடனை அடைக்க முடியாமல் தவிக்கும் துயரம்தான் கொடிய துயரம். அத்தகைய துயரத்திற்கு, வாங்கிய கடனை அடைக்க முடியாமல் தவிக்கின்ற நிலைக்கு ஆளாகிப் போனாராம், நம் நாட்டு தரகுப் பெருமுதலாளி ரத்தன் டாடா. பன்னாட்டு முதலாளியாக வளர்ந்துவிட்ட டாடாவிற்குக் கடனா? அதை அடைக்க முடியாமல் தவித்துப் போனாரா? இதைக் கேள்விப்படும்பொழுது இந்திய மக்களுள் பலருக்கு அதிர்ச்சிகூட ஏற்படலாம். இதைவிட அதிர்ச்சியான விசயம் என்னவென்றால், டாடா தனது கடனை அடைக்கச் செய்திருக்கும் தகிடுதத்தங்கள்தான்!

டாடாவின் இந்தக் கடன் துயரம் 2007-ஆம் ஆண்டில் தொடங்கியது. அந்த ஆண்டில் இந்தியாவின் டாடா நிறுவனம் இங்கிலாந்தைச் சேர்ந்த மிகப்பெரிய, ஏகபோக இரும்புத் தொழிற்சாலை நிறுவனமான “கோரஸை’’யும், உலகப் புகழ் பெற்ற ஜாகுவர் மற்றும் லேண்ட் ரோவர் என்ற கார்களைத் தயாரிக்கும் தொழிற்சாலையையும் பலத்த போட்டிக் கிடையே விலைக்கு வாங்கியது. முதலாளித்துவ வியாபாரக் கலாச்சாரத்தின்படி, ரத்தன் டாடா தனது சோந்தக் கைக்காசைப் போட்டு இந்தத் தொழிற்சாலைகளை வாங்கவில்லை. சர்வதேச நிதி நிறுவனங்களிடம் கடன் வாங்கித்தான் இந்த நிறுவனங்களை டாடா கைப்பற்றியது. கோரஸை வாங்கிய டாடா ஸ்டீல் நிறுவனத்தின் தலையில் 450 கோடி அமெரிக்க டாலர் கடனும் (23,850 கோடி ரூபா) ஜாகுவர் கார் தொழிற்சாலையை வாங்கிய டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலையில் 15,900 கோடி ரூபா கடனும் விழுந்தது.

ரத்தன் டாடா இந்த இரு ஏகபோக நிறுவனங்களையும் வாங்க முட்டிமோதிக் கொண்டிருந்தபொழுதே, இந்தியாவைச் சேர்ந்த சில பொருளாதார அறிஞர்கள் உலகப் பொருளாதாரத்தின் போக்கைக் கணக்கில் எடுத்துக்கொண்டு, இவ்வளவு விலைக்கு இந்த அந்நிய நிறுவனங்களை வாங்கத் தேவையில்லை என அவருக்கு அறிவுரை சோன்னார்கள். ஆனால், டாடா நிறுவன அதிகாரிகளும், முதலாளித்துவப் பத்திரிகைகளும் கைகோர்த்துக் கொண்டு, அறிவுரை சோன்ன பொருளாதார நிபுணர்களை, “உலகமயத்தைப் புரிந்து கொள்ளாத கிணற்றுத் தவளைகள்” எனச் சாடினார்கள். இந்த ஏகபோக நிறுவனங்களை டாடா கைப்பற்றியதை, இந்தியா வல்லரசாகிவிட்டதன் வெளிப்பாடாக ஊதிப் பெருக்கிய இந்திய அரசு, சர்வதேச நிதி நிறுவனங்களிடம் டாடா கடன் வாங்குவதற்குப் பக்கபலமாக நின்றது.

ரத்தன் டாடா, இலாபத்துடன் இயங்கி வந்த இந்த நிறுவனங்களை வாங்கியபொழுது, அடுத்த ஒரே ஆண்டில் உலகப் பொருளாதாரமே அதல பாதாளத்தில் விழுந்துவிடும் எனக் கனவில்கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டார். 2008-ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் கார் விற்பனை படுத்துப்போனதால், ஜாகுவர் லேண்ட் ரோவர் கார் தொழிற்சாலையை இழுத்து மூடிவிட வேண்டிய அபாயம் ஏற்பட்டது.

இத்தாலி, சுவிட்சர்லாந்து, தென்கொரியா, அர்ஜென்டினா நாடுகளைச் சேர்ந்த சில நிறுவனங்கள், டாடாவின் “கோரஸ்” இரும்பு உருக்காலையுடன் போட்டுக் கொண்டிருந்த 10 ஆண்டு கால வர்த்தக ஒப்பந்தத்தை ரத்து செய்ததால், கோரஸ் ஆலையை விற்க வேண்டிய அல்லது மூடவேண்டிய நிலைக்கு டாடா தள்ளப்பட்டார். பட்ட காலிலே படும் என்பது போல, இந்த நெருக்கடியான நேரத்தில் சர்வதேச நிதி நிறுவனங்களிடம் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டிய காலக்கெடுவும் நெருங்கியது.

டாடா, கடனை அடைக்க முடியாமல் தற்கொலை செய்து கொள்ளும் இந்திய விவசாயிகளைப் போல சூதுவாது தெரியாத அப்பாவியா? ஐரோப்பாவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியையே தனது கடனை அடைக்கும் கருவியாகப் பயன்படுத்திக் கொண்டார், டாடா.

“நெருக்கடியில் சிக்கிக் கொண்டுள்ள கோரஸ் மற்றும் ஜாகுவார் நிறுவனங்களை மீட்பதற்கு   இங்கிலாந்தின் வங்கிகளில் இருந்து 50 கோடி பவுண்ட் கடனும், ஐரோப்பிய முதலீட்டு வங்கியில் இருந்து 34 கோடி பவுண்ட் கடனும் கொடுக்க ஏற்பாடு செய்யுங்கள்; இல்லயென்றால், இந்த நிறுவனங்களை மூடிவிடுவதற்கு அனுமதியுங்கள்” என டாடா இங்கிலாந்து அரசிடம் பேரம் பேசினார். டாடா, தனது கடனை அடைக்க இங்கிலாந்து தொழிலாளி வர்க்கத்தைப் பிணையக் கைதியாகப் பயன்படுத்திக் கொண்டார் என்பதுதான் இந்த மிரட்டலின் பொருள்.

இந்த பேரத்தின் முடிவில் டாடா, ஐரோப்பிய முதலீட்டு வங்கியிடமிருந்து 17.5 கோடி பவுண்ட் கோடி கடனாகப் பெற்றுக் கொண்டார். இந்தக் கடனை வழங்குவதற்கு கோரஸ் மற்றும் ஜாகுவார் நிறுவனங்களில் ஆட்குறைப்பு செய்யக் கூடாது என நிபந்தனை விதிக்கப்பட்டதாகவும், அதனை டாடா ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டார் என்றும் கூறப்படுகிறது.

இங்கிலாந்து அரசின் தலையைத் தடவிய டாடா, அடுத்து இந்திய மக்களைக் குறி வைத்தார். கடனை அடைக்க முடியாமல் டாடா தலை குனிந்தால், அது இந்தியாவிற்கே ஏற்பட்ட தலைகுனிவாகும் என உருவேற்றிய இந்திய அரசு, டாடாவின் கடன் பிரச்சினையைத் ‘தேசிய’ப் பிரச்சினையாக்கியது. இந்திய அரசு வங்கியும் அதன் பத்து துணை வங்கிகளும், டாடா இந்திய நிதிச் சந்தையில் இருந்து 4,200 கோடி ரூபா கடன் திரட்ட துணை நின்றதோடு, இந்தக் கடன் முழுவதற்கும் தாங்கள் உத்தரவாதமளிப்பதாகவும் உறுதி கூறின. டாடா இந்த 4,200 கோடி ரூபாயை, ஜாகுவார் கார் நிறுவனத்தை வாங்குவதற்கு பட்ட கடனில் ஒரு பகுதியைத் திருப்பிச் செலுத்துவதற்குப் பயன்படுத்திக் கொண்டார்.

மேலும், இந்த கார் தொழிற்சாலையைத் தூக்கி நிறுத்துவதற்காக லேண்ட் ரோவர் கார்களை இந்திய இராணுவத்தின் தலையில் கட்டும் வர்த்தகப் பேச்சுவார்த்தைகளும் நடந்து வருகின்றன. இவை ஒருபுறமிருக்க, ஜாகுவார் நிறுவனத்தை வாங்கியுள்ள டாடா மோட்டார்ஸ் நிறுவனம், இந்தியப் பங்குச் சந்தையில் இருந்து 5,800 கோடி ரூபா அளவிற்கு மூலதனத்தைத் திரட்டிக் கொள்ளவும், அதனைத் தனது சர்வதேசக் கடனை அடைக்கப் பயன்படுத்திக் கொள்ளவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக, இந்திய நடுத்தர வர்க்கத்திடம் டாடாவின் “நானோ” காரை வாங்குவதற்கு இருந்த ஆசையையும், தனது கடனை அடைப்பதற்கு நரித்தனமாகப் பயன்படுத்திக் கொண்டார், டாடா. டாடாவின் நானோ காருக்கான முன்பதிவு கடந்த ஏப்ரல் 10 தொடங்கி ஏப்ரல் 25 வரை நடந்தது. “காரை முன்பதிவு செய்வதற்கான விண்ணப்பத்தின் விலை முன்னூறு ரூபா. வங்கிக் கடன் மூலம் காரை முன்பதிவு செய்யும்பொழுதே காருக்கான முழுத் தொகையையும் வங்கியிடமிருந்து வாடிக்கையாளர் பெயரில் டாடா நிறுவனம் வசூலித்து விடும். அந்தத் தொகைக்கான வட்டியாக கார் மாடலை பொறுத்து ரூ.2,500 முதல் ரூ.4,000 வரை வாடிக்கையாளர்கள் முன்கூட்டியே செலுத்த வேண்டும்” என்ற நிபந்தனைகளின் அடிப்படையில் 2,03,000 பேர் முன்பதிவு செய்துள்ளனர். இந்த முன்பதிவு மூலம் மட்டும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 2,500  கோடி ரூபாயை இந்திய மக்களிடமிருந்து வசூலித்துள்ளது.

‘‘டிமாண்டில்” உள்ள காரை வாங்குவதற்கு முன்பதிவு செய்யும்பொழுது, அக்காரின் விலையில் நான்கில் ஒரு பங்கைத்தான் முன்பணமாகச் செலுத்தும் வழக்கமும், குலுக்கலில் கார் கிடைக்காதவர்களுக்கு அம்முன்பணத்தைத் திருப்பிக் கொடுத்துவிடும் வழக்கமும்தான் நடைமுறையில் இருந்து வருகிறதாம். ஆனால், டாடாவோ, பாம்பு-கீரிச் சண்டையைக் காட்டப்போவதாகக் கூறியே அப்பாவிகளிடம் காசு பறித்துவிடும் மோடி மஸ்தான் போல, நானோ பிரியர்களிடம் முழுத் தொகையையும் வசூலித்து விட்டார்.
இந்த 2,03,000 நானோ பிரியர்களுக்கும் கையில காசு வாயில தோசை என்றபடி உடனே கார் கிடைத்துவிடாது. இவர்களுள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் ஒரு இலட்சம் பேருக்கு 2010-ஆம் ஆண்டில்தான் கார் கிடைக்கும். மீதிப் பேருக்கு 2011-ஆம் ஆண்டின் இறுதியில் கிடைக்கக்கூடும் எனக் கூறப்படுகிறது. ஒரு நானோ காரைத் தயாரிப்பதற்குப் பல்வேறு வரிச் சலுகைகளின் மூலம் 60,000 ரூபாயை மானியமாக ஏற்கெனவே டாடாவிற்கு வழங்கிவிட்டார், குஜராத் முதல்வர் நரேந்திர மோடி. இப்பொழுது இந்திய நடுத்தர வர்க்கத்திடமிருந்து எவ்வித ஈடும் இன்றி, வெண்ணிலையாக 2,500 கோடி ரூபாயைச் சுருட்டிக் கொண்டுள்ளார், டாடா.

இந்த 2,500 கோடி ரூபாயும் டாடாவின் கடன் நெருக்கடியைத் தீர்க்கப் பயன்படக் கூடும். டாடா தனது கடனை அடைக்க 2,03,000 இந்தியர்களின் சட்டைப் பைக்குள் கையை விட்டுள்ளார். நடிகர்-நடிகைகள் தங்களது கவர்ச்சியைக் காட்டி அப்பாவி ரசிகர்களை வீழ்த்துவதைப் போல, டாடா தனது நிறுவனத் தயாரிப்புகளுக்கு இருக்கும் கவர்ச்சியைக் காட்டி, இந்திய நடுத்தர வர்க்கத்தை வீழ்த்தியிருக்கிறார். இந்த வேசித்தனத்திற்கு இந்திய அரசும், இந்திய அரசு வங்கியும் மாமா வேலை பார்த்துள்ளன.

டாடா இப்படி ஊரான் பணத்தை விழுங்குவது புதிய விசயமல்ல. இந்தியப் பொதுத்துறை நிறுவனமாக
இருந்த விதேஷ் சன்சார் நிகாமை (வீ.எஸ்.என்.எல்.) ரத்தன் டாடா கைப்பற்றியபொழுது, அந்நிறுவனத்தின் சேமிப்பாக இருந்த 1,000 கோடி ரூபாயை நட்டத்தில் இயங்கிக் கொண்டிருந்த தனது தொலைதொடர்பு நிறுவனத்தைக் காப்பாற்றக் கடத்திக் கொண்டு போனார், அவர். வெளியில் அம்பலமாகாத ரத்தன் டாடாவின் நிதி மோசடிகள் இன்னும் எத்தனை இருக்குமோ? மாட்டிக் கொள்ளாதவரை எல்லா முதலாளிகளும் யோக்கிய சிகாமணிகள்தானே!

_________________________________________

புதிய ஜனநாயகம் ஜூலை 2009
_________________________________________