ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா – நிறைவுப் பாகம்
ஆப்பிரிக்க கண்டம் பற்றிய எமது அறிவு மிகக் குறுகியது. பிரிட்டிஷ் காலனியாதிக்கவாதிகள் கற்பிக்கும் வரை, இந்து சமுத்திரத்திற்கு அப்பால் இருந்த பாரிய நிலப்பரப்பு எமது கண்ணிற்குப் புலப்படவில்லை. நாம் கற்றுக் கொண்ட வரலாற்றுப் பாடங்கள் யாவும், பிரிட்டிஷ் கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட தரவுகள் தாம். அதனால் தான், இன்றும் கூட ஆப்பிரிக்கர்களுக்கும், தமிழருக்கும் இடையில் எந்த வித தொடர்பும் இல்லை, என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். வெள்ளையினத்தவர்களும், சீனர்களும் தனித்தனியே தோன்றிய இனங்களாக கருதிக் கொள்வதைப் போல, திராவிடர் வரலாறும் தனித்துவமாக காட்டிக் கொள்கின்றது. அண்மையில் தான், சமூக விஞ்ஞானிகள் நீண்ட ஆராய்ச்சிக்குப் பின்னர், உலகின் அனைத்து இனங்களும் ஆப்பிரிக்க மூதாதையரைக் கொண்டிருப்பதை நிரூபித்தனர்.
தமிழரின் மூதாதையரை ஆப்பிரிக்காவில் தேடுவதா? சிலருக்கு இது அபத்தமாகப் படலாம். ஐரோப்பாவின் பழமை வாய்ந்த மொழியை பேசும் பாஸ்க் (ஸ்பெயின்) இனத்திற்கும், தமிழருக்கும் தொடர்பிருப்பதாக ஒரு தமிழறிஞர் தேடிக் கண்டுபிடித்து கட்டுரை வரைந்திருந்தார். தமிழர்கள் “தொலைந்து போன யூத இனக்குழுக்களில் ஒன்று” என்று நிறுவத் துடிக்கும் மேதாவிகளும் இருக்கின்றனர். இவையெல்லாம் பலருக்கு அபத்தமாக தோன்றுவதில்லை. அதற்குக் காரணம், ஒவ்வொரு பின்தங்கிய இனமும் தம்மை விட முன்னேற்றமடைந்த இனத்துக்கு நிகராக வர விரும்புகின்றன. உலகில் ஐரோப்பியர் வகிக்கும் மேலாண்மை, பலருக்கு “கடவுள் கொடுத்த வரமாகத்” தெரிகின்றது. மேலாண்மை பெற ஐரோப்பியர் செய்த இனப்படுகொலைகள், கொள்ளைகள், பித்தலாட்டங்கள் என்பன பற்றி அறிந்தவர்கள் குறைவு.
எமது நாடுகளில் காலனிய காலத்தில் ஆதாயம் பெற்ற வர்க்கம் ஒன்று, பரம்பரை பரம்பரையாக ஏகாதிபத்திய விசுவாசம் காட்டத் தவறுவதில்லை. ஒருவரின் அரசியல் கருத்தமைவு, அவர் சார்ந்த வர்க்க நலன்களில் இருந்தே பிறக்கின்றது. இதனால் வளர்ச்சியடைந்த ஐரோப்பியருக்கும், நாகரீகமடையாத ஆப்பிரிக்கர்களுக்கும் நடுவில் தாம் நிற்பதாக ஒரு கற்பிதத்தை உருவாக்கிக் கொள்கின்றனர். பஞ்சமும், பிணியும் சூழ்ந்த இருண்ட கண்டமான ஆப்பிரிக்காவுடன் தம்மை இனம் காண யார் தான் விரும்புவர்? அதற்கு மாறாக செல்வச் செழிப்பு மிக்க அமெரிக்காவுடன் தம்மை இரண்டறக் கலக்க போட்டி போடுகின்றனர். இந்த தாழ்வுச் சிக்கல் தமிழரை மட்டும் பாதிக்கவில்லை. அமெரிக்க கண்ட நாடுகளில் வாழும், ஆப்பிரிக்க வம்சாவழி கருப்பினத்தவரும், பசுபிக் பிராந்திய ஆதிவாசிகளும் தமது வேர்களை ஆப்பிரிக்காவில் தேட விரும்புவதில்லை.
தமிழ் நாட்டில் வாழும் இருளர்கள், இலங்கையில் வாழும் வேடுவர்கள் ஆகியோர், இன்றும் ஆப்பிரிக்க அடையாளங்களை காவித் திரியும் ஆதிவாசி இனங்கள். இந்திய உபகண்டத்தில், ஆப்பிரிக்க ஆதிவாசிகள் வந்தேறு குடிகளுடன் கலந்து புதிய இனங்கள் உருவாகின என்ற வரலாற்று உண்மையை பலர் தெரிந்து கொள்ள விரும்புவதில்லை. ஆயிரம் ஆண்டுகளாக தாம் இனத் தூய்மை பேணி வருவதாக, தமக்கு ஏற்றவாறு வரலாற்றை திருத்தி எழுதிக் கொள்கின்றனர். ஒரு காலத்தில் நில ஆதிக்கத்திற்காக இனக்குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட சச்சரவுகள், நாகரீகமடைந்த காலத்திலும் தொடர்கின்றன. கால்நடை மேய்த்த காலத்தில் இருந்து, கணணி வேலை செய்யும் காலம் வரை, மனிதன் தனக்குள்ளே பிரிவினைகளை வளர்த்துக் கொண்டே போகிறான்.
சாதி வேற்றுமைகள் இந்தியாவின் வளர்ச்சியை தடைப்படுத்தும், என்று பெரியார் தீர்க்கதரிசனத்துடன் கூறிச் சென்றார். ஆப்பிரிக்கர்கள் தமக்கிடையிலான இனக்குரோதங்களை தீர்த்துக் கொள்ளாவிட்டால், சமூகப் புரட்சி இன்னும் நூறு வருடங்களுக்கு பின்தள்ளப்படும் என்று குறிப்பு எழுதிவைத்தார் சே குவேரா. இந்திய உப கண்டத்திற்கும், ஆப்பிரிக்க கண்டத்திற்கும் இடையில் நிறைய ஒற்றுமைகள் இருக்கின்றன. சாதி அமைப்பு முறை, இந்திய உபகண்டத்திற்கு மட்டுமே உரியது என்று, பலர் தவறாக நினைத்துக் கொள்கிறனர். வர்ணாச்சிரம காலம் என்பது வேறு, சாதிகளின் மூலம் வேறு. இயற்கலை வளங்களின் மேலான ஆதிக்கத்திற்காக, ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டுக் கொண்டிருந்த பண்டைய இனங்கள், வெற்றி பெற்ற இனத்தின் அதிகார வலையத்திற்குள் வந்த போது சாதிகளாக உருமாறின. ஆப்பிரிக்காவின் பல பகுதிகளில் இந்த சமூக மாற்றம் நடப்பதற்குள் ஐரோப்பியர் காலனிப்படுத்த தொடங்கி விட்டனர்.
சோமாலியா, மொரிட்டானியா, போன்ற ஆப்பிரிக்க நாடுகளில் இன்றும் சாதி அமைப்பு உள்ளது. இந்திய உபகண்டத்தில் நிலவும் அதே சாதி வேற்றுமை, பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் கட்டிக் காக்கப்படுவது வியப்புக்குரியதாக தோன்றலாம். இந்தியாவில் ஆரியரின் வருகையும், சுதேசி இனங்களின் மீதான ஆதிக்கமும் சாதியத்தை நிறுவனப் படுத்தியது. அதே போல, அரேபியரின் வருகையுடன் தான், மொரிட்டானியா, சோமாலியா ஆகிய நாடுகளில் ஸ்தாபன மயப்பட்ட சாதியம் தோன்றியது. அரேபியரின் தாயகபூமியில் உள்ள ஏமனிலும் சாதி அமைப்பு உள்ளமை குறிப்பிடத் தக்கது. புதிய சமுதாய மாற்றம் வரும் போது, இனக்குழுக்கள் சாதிகளாக தொடர்கின்றன. ஆதிக்க இனத்தின் மொழியை சுவீகரித்த பின்னர் அவர்களது பாரம்பரிய வேர்கள் அழிகின்றன. மொரிட்டானியா, சோமாலியா பற்றிய விரிவான ஆய்வு தேவை.
இந்தியாவில் நிலவும் சாதிப் பாகுபாட்டைப் பற்றி நான் ஐரோப்பியருக்கு விளக்கிய போது, அவர்களால் அதனை சரியாக கிரகித்துக் கொள்ள முடியவில்லை. ஆனால் பல்வேறு ஆப்பிரிக்க நாட்டினருடன் உரையாடிய போது, அதிசயத்தக்க விதத்தில் பல ஒற்றுமைகள் இருப்பதைக் கண்டுகொண்டேன். கிணற்றில் தண்ணீர் அள்ள உரிமையில்லாதது முதல், அகமண முறை வரை ஆப்பிரிக்க சமூகங்கள் இந்தியாவின் பிம்பமாக இருக்கின்றன. இன்றும் சில ஆப்பிரிக்க பகுதிகளில், ஒரு இனத்திற்கு(சாதிக்கு) சொந்தமான கிணற்றில், வேற்றினம் தண்ணீர் அள்ளிய குற்றத்திற்காக கொலைகள் நடக்கின்றன. சூடானின் டார்பூரில் நடந்த யுத்தம் அதற்கு ஒரு சிறந்த உதாரணம். ஆப்பிரிக்காவில் உள்ளதை இனம் என்றோ, குலம் என்றோ அல்லது வேறு எந்தப் பெயரிட்டு அழைத்தாலும், உள்நாட்டுப் பிரிவினை பல யுத்தங்களுக்கு வழி கோலியுள்ளதை மறுக்கமுடியாது.
இந்தியர்களும், ஆப்பிரிக்கர்களும் ஒரு காலத்திலும் பொருளாதார ரீதியாக முன்னேற முடியாது என்பதில் ஐரோப்பியர்கள் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்துள்ளனர். ஆப்பிரிக்க, ஆசிய நாடுகள் கலந்து கொள்ளும் “அணிசேரா நாடுகளின் உச்சி மகாநாட்டை”, பிச்சைக்காரர்களின் மாநாடு என்று மேற்கத்திய பத்திரிகையாளர்கள் பரிகசிப்பார்கள். அதற்கு காரணம், அவர்களுக்கிடையே இருக்கும் தீர்க்க முடியாத பிரச்சினைகள். ஐரோப்பியர்கள் தோன்றிய காலத்தில் இருந்து நாகரீகமடைந்த சமூகமாக இருக்கவில்லை. ஐரோப்பாவிலும் இனக்குரோதங்களும், சாதிப் பிரிவினைகளும் ஒரு காலத்தில் இருந்து வந்துள்ளன. இந்தியாவில் கால்பதித்த போர்த்துக்கேயர்கள், இந்திய சாதியமைப்பை தமது நாட்டில் உள்ளது போன்ற வேலைப்பிரிவினை என்று புரிந்து கொண்டார்கள். ஐரோப்பிய சாதிகள் இன்று சரித்திரமாகி விட்டன. சிலருடைய (தொழில் அடிப்படையிலான) சாதிப் பெயர்கள், தற்போது குடும்பப் பெயராக மாறி விட்டன. அவை இன்று அர்த்தமற்ற வெறும் பெயர்கள்.
ஆப்பிரிக்காவில் இனங்களை ஒன்றோடொன்று மோத விடுவதில், ஐரோப்பியர்களின் பங்கு குறைத்து மதிப்பிடக்கூடியதல்ல. இடது கையால் அரசுக்கு உதவுவார்கள், வலது கையால் கிளர்ச்சிக் குழுவிற்கு உதவுவார்கள். அரசு ஒரு இனம் சார்ந்ததாகவும், யுத்த பிரபுக்கள் (அல்லது கிளர்ச்சியாளர்கள்) இன்னொரு இனம் சார்ந்தும் இருப்பதால் தான், அவர்களால் தொடர்ந்து யுத்தம் செய்ய முடிகிறது. காலனியாதிக்கத்தை எதிர்த்து எழுந்த தேசிய விடுதலை, வர்க்க விடுதலை போன்ற கோஷங்களை இப்போது கேட்க முடிவதில்லை. தனது சொந்த இனமே சிறந்தது என்ற இனவாதம் நிகழ்கால அரசியலை தீர்மானிக்கின்றது. சியாரா லியோன், லைபீரியா போன்ற நாடுகளில் இடம்பெற்ற உள்நாட்டுப் போர்கள் சிறந்த உதாரணம். இனங்களுக்கிடையிலான யுத்தங்களில் ஐரோப்பிய ஆயுத வியாபாரிகள் கொள்ளை லாபம் சம்பாதித்தார்கள். இந்த இரகசியங்கள் வெளியே வரும் போது, ஒரு சில தனியார் கம்பெனிகள் மட்டும் தண்டிக்கப்பட்டன.
ஆப்பிரிக்காவை பற்றி சொல்வதற்கு இன்னும் நிறைய இருக்கின்றன. இருப்பினும் “ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா” என்ற கட்டுரைத் தொடர் இத்துடன் முடிவுறுகின்றது. இந்த தொடரில் விடுபட்டுப் போன நாடுகளின் கதைகள் இன்னும் உள்ளன. அவற்றை பிறிதொரு தொடரில் எழுதுகின்றேன். அதற்கான குறிப்புகளை மட்டும் இங்கே சொல்லியிருக்கிறேன். இது முதலாவது பாகத்தின் முடிவுரை மட்டுமல்ல, இரண்டாவது பாகத்தின் தொடக்கவுரை. அரபு பேசும் வட ஆப்பிரிக்க நாடுகளைப் பற்றி, மத்திய கிழக்கு சம்பந்தமான பிறிதொரு தொடரில் எழுதவிருக்கிறேன். புதிய தொடர்களுக்கான தரவுகளை சேகரிப்பதற்கு எனக்கும் கால அவகாசம் தேவைப்படுகின்றது. அதற்கிடையில் இதுவரை வந்த ஆப்பிரிக்க தொடர் கட்டுரைகள், நூல் வடிவில் உங்கள் கைகளில் தவழ்ந்து கொண்டிருக்கும். என்னை எழுத ஊக்குவித்த தோழர் வினவுக்கும், கட்டுரைகளை வாசித்து உற்சாகப் படுத்திய மதிப்புக்குரிய வாசகப் பெருமக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
…..
வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…
தொடர்புடைய பதிவுகள்
ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா
காங்கோவை விழுங்கிய பெல்ஜிய பூதம் !
ஐரோப்பிய காட்டுமிராண்டிகள் திருடிய ஆப்பிரிக்க அறிவுடமை !
நைஜீரியா: எண்ணை வளம் தொல்லை இந்த வல்லரசில் !
ஐவரி கோஸ்ட்: சாக்லெட்டின் தாயகம் !
கறுப்பர்களுக்கு இனவெறி கற்பித்த வெள்ளையின கனவான்கள் !
அகில ஆப்பிரிக்க ஆட்சிக்கவிழ்ப்பு நிறுவனம் (LTD
கறுப்பினப் பேரழகியின் கிறிஸ்தவ சாம்ராஜ்யம்
சிம்பாப்வே : வெள்ளையனே வெளியேறு!
நைல் நதி: ஆப்பிரிக்காவின் நீளமான இரத்த ஆறு
லைபீரியா : ஐக்கிய அடிமைகளின் குடியரசு
அங்கோலாவின் அலங்கோலம் : பனிப்போரின் பதிலிப் போர்
தோழர் கலையரசன் ஈழத்திலிருந்து இனவாதப் போரினால் அகதியாய் விரட்டப்பட்டு முதலில் சுவிஸ் நாட்டிலும் பின்னர் அந்த நாட்டு அரசின் இனப்பாகுபாடு அரசியலால் வெறுப்புற்று நெதர்லாந்திலும் வாழ்பவர். அகதியாய் ஆரம்பித்த வாழ்வு, அதனால் ஐரோப்பிய நாடுகளின் அகதிகள் குறித்த சட்டங்களைத் தெரிந்து கொண்டமை, பல் நாட்டவருடன் பழகியமை, 20 நாடுகளில் சுற்றுப் பிரயாணம் செய்து பெற்ற சமூக அனுபவம், நெதர்லாந்து கம்யூனிஸ்ட்டு கட்சியுடனான தொடர்பு, நடைமுறைப் போராட்டங்களில் ஈடுபட்டமை எல்லாம் சேர்ந்து அவருக்கு ஒரு உலக அனுபவத்தையும் முக்கியமாக பல்நாட்டவரின் வாழ்க்கையையும் அந்த வாழ்க்கையைத் தீர்மானிக்கும் அரசியலையும் கற்றுத் தந்திருக்கிறது. இந்த அனுபவங்களினூடாக மேற்குலகின் பொய்ச்சித்திரங்களை கலைத்துப் போடும் வல்லமை கொண்ட தோழர் கலையரசன், இத்தளத்தில் பங்கேற்பதில் வினவு மகிழ்ச்சி அடைகிறது. அவரது வலைப்பூ முகவரி http://kalaiy.blogspot.com
ஆப்ரிக்காவில் தமிழனின் வேர்கள்…
தமிழரின் மூதாதையரை ஆப்பிரிக்காவில் தேடுவதா? சிலருக்கு இது அபத்தமாகப் படலாம்….. https://www.vinavu.com/2009/07/29/africaepi/trackback/…
அருமை..
கட்டுரையை வாசித்ததும் சில கேள்விகள் எழுகிறது –
ஐரோபாவில் சாதிகள் சரித்திரமாகி விட்டன என்கிறார் கட்டுரையாசிரியர் – எனில் அது எப்படி சரித்திரமானது?
ஐரோபா போலல்லாது இந்தியாவில் மட்டும் ஏன் சாதிப்பிரிவினை இறுகி கெட்டிபட்டுப் போய் நிற்கிறது?
இந்தியாவின் சாதி முறையும் ஐரோப்பியாவில் இருந்த சாதி முறையும் ( அல்லது படி நிலை சமூக அமைப்பு ) சொத்துடைமை வடிவத்தோடு
எவ்வகையில் தொடர்புடையது?
இந்தியாவில் சாதி தொடர்வதற்கு ஏற்புடையதான சொத்துடைமை வடிவமும் உற்பத்தி முறையும் இருந்ததே காரணம் எனக் கருதுகிறேன் – இது குறித்து விரிவான விளக்கம் ( தவறு என்றால் ஏன் – சரி என்றால் ஏன்? )
சாதி தொடர்வதற்கான சொத்துடைமை வடிவம் / சாதியால் உறுதிப்படுத்தப்பட்ட சொத்துடைமை வடிவம் – இப்படி ஒன்றை ஒன்று தக்க வைத்துக்
கொள்ளும் ஒரு ஏற்பாடு இங்கே உருவாகி இருந்தது என்பது எனது புரிதல் – இது சரியா? ( தவறு என்றால் ஏன் – சரி என்றால் ஏன்? )
ஆசிய பாணி சொத்துடைமை வடிவம் என்று மார்க்ஸ் குறிப்பிடுகிறார் – அப்படியானால் சீனத்தில் ஏன் சாதி வடிவம் இத்தனை இறுகியதாக
இருக்கவில்லை?
கேள்விகளை வழிமொழிகிறேன். நல்ல கட்டுரை தொடருக்கு நன்றி
அருமையான கட்டுரை தொடரை வாசிக்க வாய்ப்பளித்த தோழர் கலையரசன் மற்றும் வினவுக்கு பாராட்டுக்களும் நன்றிகளும். நீங்கள் குறிப்பிட்டதைப்போல விரைவில் இது நூலாக வந்தால் இணைய வாசகர்கள் அல்லாத பலருக்கு உதவும். குறிப்பாக மாணவர்களுக்கும் வரலாற்று ஆர்வலர்களுக்கும். அடுத்த தொடர் நீங்கள் துவங்கும் நாளை எதிர் நோக்கி இருக்கிறேன். மீண்டும் நன்றிகள்
ஆரம்பத்தில் தோழர் கலையரசன் வினவில் எழுதுவது முடிவானதும் சில தனிக்கட்டுரைகளுக்குத்தான் யோசனை செய்தோம். அதிலொன்று ஆப்ரிக்காவைப் பற்றியது. பின்னர் இதையே தொடராக எழுதலாம் என ஒரு கோரிக்கை வைத்தபோது தோழர் அதை உற்சாகமாக ஏற்றுக்கொண்டார். இந்த தொடர் எத்தனை பாகங்களாக வந்தாலும் அதை வெளியிடலாம் என்றிருந்தோம். இப்போது 13 பாகங்களில் ஆப்ரிக்காவை பற்றிய ஒரு தெளிவான சித்திரத்தை இத்தொடர் நமக்கு கற்றுத்தந்திருக்கிறது. வறுமையும், இனக்குழு போர்களுமாய் சிக்கி சின்னாபின்னமாகியிருக்கும் ஆப்ரிக்காவை ஏகாதிபத்தியங்கள்தான் இப்படி அவல நிலையில் தள்ளி ஆதாயம் பார்த்திருக்கின்றன என்ற புரிதலை இத்தொடர் நமக்கு வழங்கியிருக்கிறது. தமிழில் துறை சார்ந்த சுய சிந்தனை கொண்ட எழுத்தாளர்கள் மிகவும் குறைவு. அத்தகைய வறட்சியான சூழ்நிலையில் தோழர் கலையரசன் நமக்கு கிடைத்திருக்கும் விலைமதிப்பில்லா வைரம். வினவு தளம் ஆரம்பித்து ஒரு சில மாதங்களிலேயே எங்கள் கோரிக்கையை உற்சாகப்படுத்தி ஒரு தோழனாக வினவு குழு தோழராக கலையரசன் நம்மிடம் சங்கமித்துவிட்டார். புரட்சிகர மாற்றத்திறாக கருத்திலும் களத்திலும் போராடும் நமக்கு இந்த தோழர் ஒரு உற்ற துணை. இந்த தொடரை அவரது கடுமையான பணிச்சுமைக்கிடையிலும் கிரம்மாக அவர் அனுப்பி வந்தார். நாங்கள்தான் வினவு.காம் மாறும் தொழில்நுட்ப காரணங்களினால் இடைவெளியுடன் வெளியிட்டோம். தோழரின் அடுத்த தொடருக்கு எல்லா வாசகர்களும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். தோழர் கலையரசனுக்கு எமது நன்றிகளும், புரட்சிகர வாழத்துக்களும்! தோழர்களும், நண்பர்களும், வாசகர்களும் தங்களது கருத்துக்களை எழுதுங்கள். விரைவில் இந்த தொடர் ஒரு நூலாக வெளிவரும். நன்றி!
பத்தாவது எபிசோட்லதான் நான் படிக்காரமிச்சேன், அதுவே மொத்தமா படிக்குற இன்ட்ரெஸ்t தூண்டிச்சு. அப்பறம் மொத்மா எல்லாத்தையும் ஒரு வாரத்துக்களா படிச்சிட்டேன். நல்ல கட்டுரைகள் நன்றி தோழr கலையரசன்
கலையரசன். வாழ்த்துக்கள். புத்தகமாக உங்கள் கட்டுரைகள் வெளிவரும் நாளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்; அன்று உங்களை நேரில் சந்திப்பதையும்.
உங்களின் அனைத்து கட்டுரைகளுக்கும் நன்றி !
ஒட்டு மொத்தமாக உங்களின் அனைத்து கட்டுரகளையும் மீன்டும் ஒருமுறை படிக்க வேண்டும் !
இதே போல மேலும் ஆய்வுக் கட்டுரைகள் எழுத வாழ்த்துக்கள்
இது வரலாற்றை மார்க்சிய நோக்கில் வழங்கிய ஒரு சாதனை தொடர்; இது போல இன்னும் பல தொடர்களை எழுதவேண்டும் என்ற விண்ணப்பத்துடன் நன்றி தோழரே…
அருமையான விஷயங்கள் மற்றும் நிகழ்வுகளின் அடிப்படையில் அமைந்த ஆழமான பதிவுகள். உங்களின் பதிவுகளின் மூலம் ஆப்ரிகர்களை பற்றிய நவீன அரசியல் கண்ணோட்டம் பெற முடிந்தது.
ஆப்ரிக்கர்களின் கலை, அறிவியல் மற்றும் கணிதம் சார்ந்த தரவுகளையும் எதிர்பார்க்கிறோம். தமிழ் நாட்டில் முனைவர் . க. பா. அறவாணன் மற்றும் அவரின் துணைவியார் தாயம்மாள் அறவாணன் அவர்களும் திராவிடர் – ஆப்ரிக்கர் பற்றிய பண்பாடு ஒப்பீட்டு நூல் ஒன்று எழுதி உள்ளனர். தமிழர்களுக்கும், அப்ரிகர்களுக்கும் காணப்படும் ஒற்றுமையையும் விவரித்து உள்ளனர்.
தமிழர் பண்பாட்டு நெறிகளுக்கும் , அப்ரிகர்கள் வாழ்வியல் கூறுகளுக்கும் நிறைய ஒற்றுமைகள் தெரிகின்றன. ஒப்பீட்டு முறையில் பார்த்தல் ஐரோப்பியர்களை விட அப்ரிகர்களே நமக்கு நெருக்கமாக இருக்கின்றனர். ஆன்மீகம் சார்ந்த விசயங்களிலும் ஏறத்தாழ ஒரே மாதிரி இருப்பதாக பலர் கூறி கேட்டு உள்ளேன்.
மிக்க நன்றி வினவு மற்றும் தோழர் கலை அவர்களுக்கு.
சிவா.
போடா டுபுக்கு
தோழர் கலை, உங்களின் அயராத உழைப்பும், விரிவான தகவல்களும் பிரமிக்க வைக்கின்றன. உங்களுக்கு புரட்சிகர வாழ்த்துக்களும், நன்றிகளும். உங்களின் இந்த கட்டுரை நூலாக வெளிவருவது மிகவும் அவசியமானதும் வரவேற்க தக்கதும் ஆகும்.
ஆப்பிரிக்காவிலும் சாதிக்கொடுமைகள் என்பது அதிர்ச்சியான தகவலாக இருக்கிறது. ஐரோப்பிய ஏகாதிபத்திய கனவான்கள் கலாச்சாரப்படுத்துகிறேன் என்ற போர்வையில் ஆப்பிரிக்காவில் இனமோதலை தீவிரமாக்கியுள்ளனர்.
கலையரசனின் ஆய்வுக் கட்டுரைகள் எனக்கு ஆப்ரிக்காவை அறிமுகம் செய்துள்ளது.
“எமது வேர்களை தேடி”, என்ற தலைப்பு “ஏழு தலைமுறைகள்” (Roots) நாவலை ஞாபகப்படுத்துகிறது
மிக அருமையான மனியான கட்டுரைகள்
இவ்வாறான் இல்க்குய்ங்களை தொடர்ந்து எழுத உங்களை உச்சாகப்படுத்துகிறேன்
இது போன்ற சர்வதே அரசியல் கட்டுரைகளை
ஆங்கிலத்தில் எழுதுபவர்கள் தான் அதிகம்
அப்படியே தமிழில் எழுதினாலும் சுய சிந்தனையுடன்,
அரசியல் கண்ணோட்டம் எதுவும் இல்லாமல் டவுன்லோட்
எழுத்தர்களாகவே பெரும்பாலோர் இயங்கும் இந்த தமிழ்சூழலில்
தோழர் வினவு கூரியது போல தோழர் கலையரசன்
நமக்கு கிடைத்திருக்கும் விலைமதிப்பில்லா வைரம் தான்
தோழர் கலை இன்னும் பல்வேறு தலைப்புகளிலும்
எழுத எனது புரட்சிகர வாழ்த்துக்கள்.