privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

பார்ப்பனியம் – ஒரு விவாதம்!

-

பார்ப்பனியம் – ஒரு விவாதம்! (அல்லது) ஆர்வியும் ஜெனோடைப்பும் !!

இந்தக்கட்டுரை குறித்து புதிய வாசகர்களுக்கு சிறு அறிமுகம். பார்ப்பனிய இந்து மதம் குறித்த எமது பதிவுகளின் விவாதத்தில் பங்கேற்கும் நண்பர் ஆர்வி பார்ப்பனியம் என்ற வார்த்தையில் எல்லா பார்ப்பனர்களையும் குற்றவாளிகளாக பார்ப்பது தவறு என்று வாதிடுகிறார். மருத்துவர் ருத்ரன் சென்ற ஆண்டு அவரது வலைப்பபதிவில்  ஆர்.வியின் கருத்தை அவரது  ஜேனாடைப்பே தீர்மானிக்கின்றது என்று எழுதியதை ஆர்வி பலமுறை கண்டித்திருக்கிறார். பார்ப்பனர்களின் சாதிய உயர்வு கண்ணோட்டம் பிறப்பிலா, வளர்ப்பிலா என்பதை விட பார்ப்பனிய சாதி அமைப்பு ஒழிக்கப்பட வேண்டியதா, நியாயப்படுத்த வேண்டியதா என்ற கேள்வியை இக்கட்டுரை முன்வைத்து வாதிடுகிறது.தன் சாதியினரைக் குற்றவாளிகள் என்று அழைப்பதால் வரும் கோபம் இந்த அநீதியான சாதி அமைப்பு அழியவேண்டும் என்று ஏன் வரவில்லை என்பதை இக்கட்டுரை கேள்வி கேட்கிறது.பார்ப்பனியம், ஜெனோடைப் குறித்து நாம் விவாதிக்க வேண்டிய மையமான கருத்து எது என்பதை கோடிட்டுக் காட்டுகிறது இக்கட்டுரை. நிதானமாக படியுங்கள். தெளிவாக கருத்துக்களை முன்வைத்து வாதிடுங்கள்.

வார்த்தைகளைப் பிடித்துக் கொண்டு தொங்குவதில், நிரூபிப்பதில் பயனில்லை. பிறப்பால் ஒரு மனிதனின் சிந்தனை தீர்மானிக்கப்படுவதில்லை என்று ஆர்வி கூறுகிறார். மகிழ்ச்சி. நாங்களும் அதைத்தான் சொல்கிறோம். இனி மேலே போவோம். வேறு எதனால் சிந்தனை தீர்மானிக்கப்படுகிறது என்று ஆர்வி கருதுகிறார்? சில மனிதர்கள் சில மாதிரி சிந்திப்பதற்கும், வேறு சிலர் வேறு மாதிரி சிந்திப்பதற்கும் என்ன காரணம்? அவர்களது அறிவா, அறியாமையா, நல்லெண்ணமா, விபத்தா, வாழ்நிலையா?

ஜெனோடைப் என்ற வார்த்தைக்கு மருத்துவ அகராதியில் பொருள் தேடுவது இருக்கட்டும். சமூகத்தைப் பார்ப்போம். ஏன் பெரும்பான்மையான பார்ப்பனர்கள் நடுத்தரவர்க்கமாகவும், பெரும்பான்மையான பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட சாதியினர் ஏழைகளாகவும் இருக்கின்றனர்? ஏன் சிறுபான்மையினரான பார்ப்பனர்கள் கூட விவசாயிகளாக இல்லை? ஏன் பெரும்பான்மையினரான பார்ப்பனர்களும், முதலியார்களும், செட்டியார்களும், வெள்ளாளக் கவுண்டர்களும் தங்களை உயர்ந்த சாதி என்று இன்னமும் கருதுகிறார்கள்? ஏன் பெரும்பான்மையான தலித்துகள் தங்களை தாழ்ந்த சாதி என்று முன்னர் கருதிக் கொண்டிருந்தார்கள்? ஏன் இப்போது அவ்வாறு கருதுவதில்லை?

இவற்றையெல்லாம் ஜெனோடைப் தீர்மானிக்கவில்லை என்பது உண்மையே. ஆனால் எது தீர்மானிக்கிறது, என்ன காரணம் என்ற கேள்விக்கு விடை வேண்டும்.

காரணம் எதுவாக இருந்தால் என்ன? வெங்காயம்! எதற்கு இந்த ஆராய்ச்சி என்ற அடுத்த கேள்வியும் இருக்கிறது. ஒரு குறிப்பிட்ட நோய்க்கு இதுதான் காரணம் என்று வேறுபட்ட காரணங்களை முன்வைத்து விவாதிக்கும் அறிவியலாளர்கள் எதற்காக அந்த விவாதத்தை நடத்துகிறார்கள்? தமது அறிவின் மேன்மையை நிரூபிக்கவா? அல்லது நோய் முதல் நாடுவதன் மூலம் அதற்கு மருந்து கண்டுபிடிக்கவா?

இந்த விவாதத்தில் காரணம் குறித்து இரு வேறு கருத்துகள் இருக்கலாம். ஆனால் விவாதிப்பவர்களிடையே நோக்கத்தில் ஒற்றுமை இருக்கிறதா? சாதி என்பது இந்த நாட்டையும் சமூகத்தையும் கெடுத்து, முடமாக்கி, சீரழித்துக் கொண்டிருக்கும் ஒரு சாபக்கேடு மட்டுமல்ல, ஒழுக்கக் கேடுகளிலெல்லாம் தலையாய ஒழுக்கக்கேடு என்பதை ஆர்வி ஒப்புக் கொள்கிறாரா? அதன்பால் மென்மையான அணுகுமுறையைக் காட்ட முடியாது. அதை ஈவு இரக்கமின்றி ஒழிக்க வேண்டும் என்பதில் உடன்படுகிறாரா? அப்படி ஒரு உடன்பாடு இருக்கும் பட்சத்தில் எப்படி அதை ஒழிக்கலாம் என்பது பற்றி நாம் விவாதிக்கலாம். எப்படித் தோன்றியது யார் காரணம் என்ற ஆராய்ச்சி அதற்காகத்தான். அதற்காக மட்டும்தான்.

இப்படி ஒரு நோக்கம் இல்லாமல் வெறும் அகெடமிக் இன்டெரெஸ்ட்டுக்காக நடத்தப்படும் விவாதமாக இது இருக்க முடியாது. அல்லது நீ பெரியவனா நான் பெரியவனா விவாதத்துக்கோ, வார்த்தைகளைப் பிடித்துக் கொண்டு தொங்குவதற்கோ இங்கு வேலை இல்லை.

ஜெனோடைப் என்று மருத்துவர் ருத்ரன் சொன்னது அறிவியல் பூர்வமாகத் தப்பு என்பதை வினவு ஒத்துக் கொள்கிறதா இல்லையா என்பதுதான் சாதிப்பிரச்சினை தொடர்பாக இப்போது ஆர்வியுடைய கவலை. ஜெனோடைப்பின் பெயரால் இந்த நாட்டின் பெரும்பான்மை மக்களை முடமாக்கி வைத்திருக்கும் சித்தாந்தம், மதம், சாதி அவற்றின் புனிதம் போன்ற கருத்துகள்;  இன்னமும் அவற்றை நியாயப்படுத்துவது மட்டுமல்ல, சூத்திரன் தொட்டால் சாமி தீட்டாகி விடும் என்று சுப்ரீம் கோர்ட் வரை போய் வாதாடுபவர்கள் .. இவர்களை என்ன செய்யலாம்? கருத்தை கருத்தால் வெல்ல வேண்டுமா, அல்லது இவர்கள் மீது வேறு எதையாவது பிரயோகிக்கலாமா, ஆர்வி எதை சிபாரிசு செய்கிறார்?

ஜெனோடைப் என்று ஒரு வார்த்தையை டாக்டர் ருத்ரன் சொன்னதற்கு வரிந்து கட்டிக் கொண்டு எழுதும் அளவுக்கு, அந்த ஜெனோடைப்பை சித்தாந்தமாக்கி பல நூற்றாண்டுகளாக அதனையே ஒரு மதமாகவும் உறுதிப்படுத்தியிருக்கும் நபர்கள், அவர்களில் பெரும்பாலோர் “தற்செயலாக” ஒரு சாதியைச் சேர்ந்தவர்களாகவே இருப்பது ..என்பனவற்றைப் பற்றி ஆர்வி எவ்வளவு கவலைப்படுகிறார்? அல்லது கோபப்படுகிறார்?

இதனை எளிமைப்படுத்திக் கூறுவதானால், “பரப்பயலுக்கு அவ்வளவுதான் புத்தி” என்று இந்தக் கணம் வரை உயர்சாதியினர் என்று தம்மைக் கூறிக்கொள்வோர் பேசி வருவதில் பலருக்கு உறுத்தல் இல்லை. “மேல் சாதிகளை”ச் சேர்ந்த படித்த அறிவாளிகளைப் பொருத்தவரை அது முதியவர்களின் அறியாமை, அல்லது சம்பிரதாயப் பிடிப்பு இன்ன பிற, இன்னபிற. ஆனால் “பாப்பார புத்தி” என்று ஒரு சூத்திரனோ தலித்தோ போகிற போக்கில் சொல்லி விட்டால் கூட உடனே சுர் என்று வந்து விடுகிறது. உடனே இந்த ஜெனோடைப் கொள்கையை லண்டன் ராயல் இன்ஸ்டிடியூட்டின் லேப்புக்கு அனுப்பி நிரூபிக்கத் தயாரா என்ற அளவுக்கு தாண்டிக் குதிக்கிறார்கள். இது அறிவியல் மீது உள்ள பிடிப்பு தோற்றுவிக்கும் கோபமா, அல்லது வேறா? கொஞ்சம் நியாயமாக யோசித்துப் பார்த்தால், அல்லது சுய பரிசீலனை செய்து பார்த்தால் விடை கிடைக்கும்.

“நான் அப்படி இல்லை”, அல்லது “நான் சாதியை ஆதரிக்கவில்லை” என்ற எதிர்மறையான தன்னிலை விளக்க ஸ்டேட்மென்டுகள், தார்மிக ரீதியில் தன் நிலையை நியாயப்படுத்திக் கொள்ள மட்டுமே உதவும்.

“நான் அப்படி இல்லை” என்பது கிடக்கட்டும். என் சாதியைச் சேர்ந்தவர்கள் (பார்ப்பனர்களை மட்டும் சொல்லவில்லை) பெரும்பாலான பேர் என்னைப் போல ஏன் இல்லை என்ற கேள்விக்கு ஆர்வி போன்றோர் விடை தேடவேண்டும். “இட்ஸ் நாட் மை கப் ஆஃப் டீ” என்பது பதிலாக முடியாது. சாதிய சமுதாயத்தின் ஆதாயங்களை மரபுரிமையாக (இது ஜெனோடைப் அல்ல என்று கூறலாம், ஹெரெடிடரி பிரிவிலேஜ் என்று வாதிடலாம். பூவுன்னும் சொல்ல்லாம், புட்பம்னும் சொல்லலாம், அய்யிரு சொல்றமாதிரியும் சொல்லலாம்) அனுபவிக்கும் யாருக்கும் அப்படி ஒரு பதிலைச் சொல்லும் உரிமை கிடையாது. ஏனென்றால், you have grown, drinking from that cup.. அந்தக் கோப்பையிலிருந்து அருந்தித்தான் நீங்கள் இப்போதிருக்கும் நிலையை அடைந்திருக்கிறீர்கள்.

இந்தக் கோணத்திலிருந்து இப்பிரச்சினையைப் பார்த்தால் மட்டும்தான்

“ஆர்.எஸ்.எஸ் பற்றி எனக்கு அரசல் புரசலாகத்தான் தெரியும்” என்ற தனது கூற்று அறியாமை ignorance சார்ந்ததும் மன்னிக்கத்தக்கதும் அல்ல, மாறாக அறம் வழுவியது, immoral, எனவே குற்றவுணர்வு கொள்ளத்தக்கது என்பதை ஆர்வி புரிந்து கொள்ள முடியும். “மோடி பிரதமராக வேண்டும்” என்று “கருத்து” வைத்திருக்கும் டோண்டு ராகவன் தனக்கு ஃப்ரெண்டாக இருக்க முடியாது என்பதை ஆர்வி உணர்ந்து கொள்ளவும் முடியும்.

மொத்தத்தில், இந்த விவாதம் ஒரு அறிவுசார் சுய இன்ப நடவடிக்கையாக இருக்கக்கூடாது என்றால் விவாதத்தின் “உணர்ச்சி”, விவாதிப்பவர்களின் (கவனிக்க ஆர்வியை மட்டும் சொல்லவில்லை) அறிவை நெறிப்படுத்த வேண்டும். விவாதிப்பவர்களுக்கு ஒத்த நோக்கம் இருக்க வேண்டும்.

அப்படி ஒரு ஒத்த நோக்கம் இருப்பின், தன்னுடைய கூற்றை “சரி” என்று நிரூபித்துக் கொள்வதில் காட்டும் அக்கறையை விட, சமூகத்தில் உள்ள தவறைச் “சரி” செய்வதின் மீதான நமது அக்கறைக்கு முதலிடம் கொடுப்போம். அப்போது மட்டுமே நடுநிலையான, பக்கசார்பற்ற அறிவியல் ஆய்வுகளும் சாத்தியப்படும்.