Thursday, September 19, 2024
முகப்புசமூகம்சினிமா8MM (1999) திரை விமர்சனம் - பாலியல் வக்கிரம்: அமெரிக்கா முதல் காஞ்சிபுரம் வரை !!

8MM (1999) திரை விமர்சனம் – பாலியல் வக்கிரம்: அமெரிக்கா முதல் காஞ்சிபுரம் வரை !!

-

வேறு யாருக்கும் தெரியாமல், உங்கள் கைபேசியில் காஞ்சிபுரம் தேவநாதனின் வீடியோ கிடைத்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்? அனுப்பியவன் மீது புகார் கொடுப்பீர்களா, அந்தக் கணமே அதனை அழித்து விடுவீர்களா, அல்லது ஒரே ஒரு முறை பார்த்தால்தான் என்ன என்று தடுமாறுவீர்களா? அறம், ஒழுக்கம், விழுமியங்கள் என்ற காரணங்களின் அடிப்படையில் சிந்தித்துப் பதிலளிக்கக் கூடிய நிலையில் நீங்கள் இருந்தால், பதிலளிப்பதில் சிரமமிருக்காது.

எனினும், இன்றைய சூழலில் பலரால் இதற்கு நிச்சயமான ஒரு பதிலைச் சொல்லிவிட இயலாது. கைபேசிகள் எனப்படுபவையே கையடக்கமான நீலப்படத் திரையரங்குகளாக மாறிக்கொண்டிருக்கும் இந்தக் காலத்தில், மேற்படி கேள்வியே கூட கொஞ்சம் அபத்தமானதாகவும், காலத்தால் பின்தங்கியதாகவும் சிலருக்குத் தோன்றலாம்.

ஷகீலாக்களின் காலம் முடிந்து கொண்டிருக்கிறது. நாம் தேவநாதன்களின் காலத்தில் நுழைந்து விட்டோம். தொலைக்காட்சிகளில் கூட சீரியல்களின் நடிப்பு திகட்டிப்போய், அவற்றின் இடத்தை ரியாலிடி ஷோக்கள் மெல்ல ஆக்கிரமித்து வரும் காலம் இது. ஒரு மனிதன் அடுத்தவன் வீட்டுக்கதவின் சாவித்துவாரத்தில் கண் வைத்துப் பார்ப்பதை அநாகரிகமாகக் கருதும் பொது ஒழுக்க நெறியே போய்விட்டதென்று கூறிவிட முடியாது. அதேநேரத்தில் சாவித்துவாரத்தில் காமெராவை வைத்துப் படம் பிடித்து, அதை மொத்த சமூகமும் உட்கார்ந்து பார்க்கும் புதிய ரசனை வளர்ந்து வருவதையும் மறுக்க முடியாது. இந்த இரசனையைக் காட்டிலும் முக்கியத்துவம் வாய்ந்தது, இந்தக் கலைக்கு சூட்டப்பட்டிருக்கும் பெயர்தான்- ரியாலிட்டி ஷோ.

காதல், படுக்கையறைக் காட்சிகள், அடிதடி, கொலை ஆகியவற்றை நடிப்பில் பார்த்துப் பார்த்துத் திகட்டிப் போன ஒரு மனிதன்,  ஒரு பாலியல் உறவை, வல்லுறவை, சித்திரவதையை, கொலையை உண்மையாகவே நிகழ்த்தி, அதனை ரியாலிட்டி ஷோவாகப் படம் பிடித்துப் பார்க்க முடியாதா? என்று ஏங்குகிறான். இப்படிக்கூட ஒரு மனிதன் சிந்திக்க முடியுமா என்று நீங்கள் நினைத்தால், முடியும் என்று கூறும் திரைப்படம் ஒன்றை சமீபத்தில் பார்க்க நேர்ந்தது. கதையின் களம் – வேறெந்த நாடு, அமெரிக்காதான்.

8 எம்.எம்: ஆங்கிலத் திரைப்பட விமரிசனம்!

1995இல் வெளிவந்த எட்டு மில்லி மீட்டர் திரைப்படச்சுருள் என்பதைக் குறிக்கும் 8 எம்.எம் ஹாலிவுட் திரைப்படத்தை ஜோயல் ஷூமேக்கர் இயக்க நிக்கோலஸ் கேஜ் முதன்மைப் பாத்திரம் ஏற்று நடித்திருக்கிறார்.

கதைச் சுருக்கம்: பணக்காரச் சீமாட்டியான திருமதி கிறிஸ்டியானியின் கணவர் முதுமை காரணமாக இறக்கிறார். மரணத்துக்குப் பின் அவரது இரகசிய லாக்கரை உடைத்துப் பார்த்த போது வழமையான ஒரு கோடீசுவரனுக்கே உரிய பத்திரங்கள், விலையுயர்ந்த பொருட்கள் ஆகியவற்றோடு, அந்த லாக்கரில் ஒரு திரைப்படச்சுருளும் இருக்கிறது. வயது முதிர்ந்த அந்தச் சீமாட்டி, படச்சுருளைத் திரையிட்டுப் பார்க்கிறாள். அந்தப் படத்தில் உள்ளாடைகளுடன் இருக்கும் ஒரு பதின்வயது இளம் பெண்ணை வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கி கொடூரமான முறையில் கொலை செய்கிறான் ஒரு முகமூடி அணிந்த மனிதன். இந்தப் படத்தைப் பார்த்து அதிர்ச்சியடைகிறாள் அந்தச் சீமாட்டி.

அந்தப்படத்தில் வரும் கொலை உண்மையாய் இருந்துவிடக்கூடாதே என்று அவள் பதறுகிறாள். அந்தப் பெண் நலமாக இருக்கிறாளா என்பதை அறிந்து கொள்ளவும் விரும்புகிறாள். இப்படி ஒரு படத்தை தனது கணவன் எதற்காக இரகசிய லாக்கரில் வைத்திருக்க வேண்டும் என்ற கேள்வியும் அவளை நிம்மதி இழக்கச் செய்கிறது. இது குறித்து புலனாய்வு செய்து கண்டுபிடிக்க முடிவு செய்கிறாள். அதற்காக டாம் வெல்லஸ் எனும் தனியார் துப்பறிவாளன் நியமிக்கப்படுகிறான்.

ஸ்னஃப் என்று அழைக்கப்படும் பாலியல் கொடூரக் கொலைகளை சித்தரிக்கும் இத்தகைய படங்களெல்லாம் வெறும் நடிப்பு என்றும், இது ஒரு நகர்ப்புறத்து மாயை என்றும் சொல்கிறான் துப்பறிவாளன் வெல்லஸ். சீமாட்டி திருப்தியடையவில்லை. எனவே, உண்மையைக் கண்டுபிடிப்பதாக வாக்கு கொடுக்கிறான்.

முதலில் படத்தில் இருக்கும் பெண் யாரென்பதை காணாமல் போனவர்களின் பட்டியலை வைத்து கண்டுபிடிக்கிறான். அவளது வீட்டிற்கு சென்று அந்தப் பெண்ணின் தாயார் -ஜானட்- என்பளைச் சந்திக்கிறான். தனது மகள் மேரி ஆனி மாத்தீவ்ஸ், ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு நாள் (கடிதம் எழுதிவைத்துவிட்டு) வீட்டை விட்டு வெளியேறிவிட்டதாகக் கூறுகிறாள் தாய். அந்தக் கடிதத்தில் தான் ஒரு ஹாலிவுட் நட்சத்திரமாக மாறப்போவதாகவும், அதற்காகத் தனது காதலுடனுன் சேர்ந்து முயற்சி செய்யப்போவதாகவும் குறிப்பிட்டிருக்கிறாள் மேரி ஆனி. வெல்லஸ் அந்தக் காதலனை கண்டுபிடிக்கிறான். அவர்கள் காதல் அப்போதே உதிர்ந்து போய்விட்டதையும், ஆனி மட்டும் தனியாக ஹாலிவுட் சென்றதையும் அறிகிறான்.

கனவுகளைச் சுமந்தவாறு வாழ்க்கையைத் தொலைப்பதற்கு ஆண்டுதோறும்  கோடம்பாக்கத்திற்கு வருபவர்களே பல்லாயிரம் பேர். ஹாலிவுட் என்பது உலகத்துக்கே கோடம்பாக்கம். எனில், அதை நோக்கிப் படையெடுப்பவர்களின் எண்ணிக்கையை மட்டுமல்ல அதன் பரிமாணத்தையும் புரிந்து கொள்ளலாம். அந்த மாய உலகத்தில் ஆனியைத் தேடுவது எங்கனம்? கன்யாஸ்தீரிகள் இல்லமொன்றில் ஆனி ஒரு மாதம் தங்கியிருந்ததைக் கண்டுபிடித்து, அங்கே இருந்த அவளது உடமைகளையும் பெற்றுக்கொள்கிறான். அவளுடைய டைரியில் இருந்த தொலைபேசி எண்களை வைத்து அவளது தடத்தை பின்தொடர்கிறான்.

அந்தப்படம் 92ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்டது என்பதைக் கண்டு பிடிக்கும் வெல்லஸ், அதே ஆண்டில் இறந்து போன சீமாட்டியின் கணவனது வங்கிக் கணக்கிலிருந்து ஒரு மில்லியன் டாலர் பணம் எடுக்கப்பட்டிருப்பதையும் சீமாட்டியின் உதவியுடன் கண்டுபிடிக்கிறான். இதிலிருந்து அந்தப்படம் சீமாட்டியின் கணவனுக்காகத்தான் எடுக்கப்பட்டிருக்கிறது என்பது உறுதியாகிறது.

ஹாலிவுட்டில் போர்னோ கடை ஒன்றில் (ஆபாக புத்தகங்கள், சி.டிக்கள் விற்கும் கடை) வேலை செய்யும் மாக்ஸ் கலிபோர்னியா என்ற இளைஞனைப் பிடித்து, அவன் உதவியுடன் ஹாலிவுட்டிற்குள் இயங்கும் அந்த இரகசிய உலகத்தில் நுழைகின்றான் வெல்லஸ். ஆபாசப்படங்கள், புத்தகங்கள், பணத்திற்கேற்ப நம்பகத்தன்மை கூடும் கொடூர ஆபாசப்படங்கள், கடைகள், தரகர்கள், விலைமாதர்கள் என அந்த இருண்ட உலகம் விரிகிறது. இனி நீ பார்க்கவிருக்கும் காட்சிகளை உன் கண்களிலிருந்து இனி அகற்றவே முடியாது என்று கூறி வக்கிரப் பாலுறவின் உலகத்துக்குள் வெல்லஸை அழைத்துப் போகிறான் மாக்ஸ். சித்திரவதை செக்ஸ், சாட்டையடி செக்ஸ், குழந்தைகள் செக்ஸ் என்று எண்ணிப்பார்க்கவே முடியாத வக்கிரங்களின் உலகம் விரிகிறது. இயல்பான மனநிலையில் நுழையும் எவரையும் விரைவிலேயே வெறி கொண்டவர்களாக மாற்றும் இந்த உலகில்தான் ஆனி சிக்கியிருக்கிறாள் என்பது தெளிவாகிவிட்டது.

செலிபிரிட்டி பிலிம்ஸ் எனும் உப்புமா கம்பெனியின் முதலாளி எடிபோலி என்பவனே ஆனிக்கு நட்சத்திர ஆசை காட்டி ஏமாற்றியிருப்பதை பல முயற்சிகளுக்குப் பிறகு வெல்லஸ் தெரிந்து கொள்கிறான். அவனை வைத்து கொடூர ஆபாசப்படங்களை இயக்கும் வெல்வெட், அந்தப்படங்களில் முகமூடி அணிந்து கொண்டு நடிக்கும் மெஷின் ஆகியோரையும் வெல்லஸ் புலனாய்வின் மூலம் அறிகிறான். உண்மையான பாலியல் வல்லுறவையும் உண்மையான கொலையையும் சித்தரிக்கும் ஒரு ரியாலிட்டி படத்தைத் தயாரிப்பதற்கு இவர்களிடம்தான் சீமாட்டியின் கணவன் பணம் கொடுத்திருக்கிறான். இந்தக் கும்பல் ஆனியை ஏமாற்றி இந்தப் படத்தில் நடிக்க வைத்து, பின்னர் கொலை செய்திருக்கிறது என்பதை வெல்லஸ் கண்டுபிடிக்கிறான். இதற்கு ஆதாரபூர்வமாக நிறுவுவதற்கான முயற்சியில் இறங்குகிறான். இயக்குநர் வெல்வெட்டை தொடர்பு கொண்டு தனக்கு ஒரு பலான படம் ஒன்று எடுக்கவேண்டுமென கேட்கிறான்.

இதற்குள் வெல்லஸ் தங்களது கொலைப்படத்தை கண்டுபிடித்து விட்டான் என்பதை அந்த கயவர் கும்பல் புரிந்து கொள்கிறது. வெல்லஸை அழைத்து வந்த அந்த இளைஞனைச் சித்திரவதை செய்து, வெல்லஸிடம் இருக்கும் படச் சுருளையும் கைப்பற்றித் தீ வைத்து அழிக்கிறது. அந்த இளைஞனும் கொலை செய்யப்படுகிறான். கடுமையாக தாக்கப்பட்ட வெல்லஸ்,  அவர்களிடமிருந்து தப்பிக்கிறான். சீமாட்டியைத் தொடர்பு கொண்டு, அவளிடம் உண்மைகளை கூறி, அடுத்த நாளே நாம் போலீசிடம் போக வேண்டும் என்று சொல்கிறான்.

ஆனால் சீமாட்டியோ அடுத்த நாள் தற்கொலை செய்து கொள்கிறாள். தனது கணவனின் வக்கிர வெறிக்காக ஒரு இளம் பெண் கொலை செய்யப்பட்டிருப்பதை அவளால் தாங்க முடியவில்லை. ஒரு கவரில் வெல்லசுக்கான ஊதியம், இன்னொரு கவரில் கொல்லப்பட்ட பெண் மேரி ஆனியின் தாய்க்குச் சேர்ப்பதற்கான நிவாரணத்தொகை. “எங்களை மறப்பதற்கு முயற்சி செய்” என்று மட்டும் அந்தக் கவரின் மேல் எழுதியிருக்கிறாள் அந்தச் சீமாட்டி.

கைவசம் இருந்த ஆதாரமான படச்சுருள் எரிக்கப்பட்டு, அதை பார்த்த ஒரே சாட்சியான சீமாட்டியும் இறந்திருக்கும் நிலையில் வெல்லஸ் செய்வதறியாது திகைக்கிறான். அதே சமயம் இத்தகைய படுபாதகச்செயலை சாதாரண சினிமா படம் போல எவ்வித குற்றவுணர்வும் இல்லாமல் எடுத்திருக்கும் அந்த மூவர் கும்பலை விட்டுவிடவும் அவனுக்கு மனம் ஒப்பவில்லை. அவர்களை கொல்வதென முடிவு செய்து அதற்கு ஆனியின் தாய் ஜேனட்டிடம் ஒப்புதல் பெறுகிறான்.  அந்தப் படத்தின், அதாவது அந்தக் கொலையின், தயாரிப்பாளர், இயக்குநர், நடிகன் ஆகிய மூவரையும் தனித்தனியே கொல்கிறான் வெல்லஸ்.

ந்த இரகசிய உலகத்துக்குள் காலடி வைத்த கணத்திலிருந்து ஒரே ஒரு கேள்விதான் வெல்லஸை துன்புறுத்துகிறது. இவ்வளவு கொடூரமாக, வக்கிரமாக, இரக்கமற்றவர்களாக சில மனிதர்கள் இருக்க முடியுமா- என்பதுதான் அந்தக் கேள்வி. நம்பமுடியாததாகவும் அதே நேரத்தில் மறுக்க முடியாததாகவும் இருக்கும் இந்த எதார்த்தம், உண்மை என்று ஒப்புக் கொள்ள முடியாமலும், பொய் என்று நிராகரிக்க முடியாமலும், முன்னும் பின்னும் அலைக்கழித்து, இரம்பம் போல இரசிகனையும் அறுக்கிறது.

படத்தின் இறுதியில், மேரி ஆனியை வன்புணர்ச்சிக்கு ஆளாக்கி, கொல்லும் அந்தத் திரைப்படத்தின் நடிகனான மெஷினை, வெல்லெஸ் கொலை செய்யும் காட்சி இப்படி அமைந்திருக்கிறது.  கொலை செய்வதற்கு முன், அவனது முகத்தைப் பார்த்துவிட வேண்டும் என்ற வெறியில், அவனுடைய மூகமூடியைப் பிய்த்தெறிகிறான் வெல்லெஸ்.

ஒரு திரைப்படத்துக்காக யாரோ ஒரு சின்னஞ்சிறு பெண்ணுக்கு போதை ஊசி போட்டு, அவளைத் துடிக்கத் துடிக்க வன்புணர்ச்சிக்கு ஆளாக்கி, மெல்ல, நிதானமாகக் கொலை செய்த அந்த மெஷினிடம் “ஏன் இதைச் செய்தாய்?” என்று கேட்கிறான் வெல்லெஸ். “ஒரு காரணமும் இல்லை. எனக்குப் பிடித்திருக்கிறது, செய்தேன்” என்று பதிலளிக்கிறான் மெஷின்.

முகமூடி இல்லாத மெஷினை வெல்லெஸ்  நிதானமாக வெறித்துப் பார்க்கிறான். வழுக்கை விழுந்த, கண்ணாடி அணிந்த ஒரு சராசரி மனிதன். அவன் உண்மைப் பெயர் ஜார்ஜ். வெல்லெஸுடைய பார்வையின் அர்த்தத்தைப் புரிந்து கொண்ட மெஷின், அவனிடம் ஏளனமாகக் கேட்கிறான், எப்படி எதிர்பார்த்தாய்? ஒரு மிருகம் போல இருப்பேன் என்றா?

0000

ரு கிரிமினல் குற்றத்தைத் கண்டுபிடிக்கும் புலனாய்வாளனின் பின்னால்தான் இத்திரைக்கதையே செல்கிறது என்ற போதிலும், ஒரு துப்பறியும் படம் தோற்றுவிக்கும் திகில் உணர்ச்சியை இது நம்மிடம் தோற்றுவிக்கவில்லை. மாறாக இப்படம் சித்தரிக்கும் உலகமும் அதன் மனிதர்களும்தான் நம்மைத் திகிலில் உறைய வைக்கின்றனர்..

பாலியல் வல்லுறவு, கொலை, பிணத்தைப் புணர்தல், வயிற்றைக் கிழித்து கருவை சிதைத்தல்.. என வன்முறையின் காணச்சகியாத கோரங்களையெல்லாம் சமீப காலங்களில் நாம் கண்டிருக்கிறோம். போஸ்னியாவின் வக்கிரங்களுக்குக் காரணம் மதவெறி-நிறவெறி; இலங்கையில் இனவெறி; குஜராத்தில் மதவெறி. பல்லாயிரம் பேரைப் பலி கொண்ட இத்தகைய வன்முறைகளைக் காட்டிலும், மேரி ஆனியைச் சிறுகச் சிறுகக் கொலை செய்த அந்த வன்முறையைக் காட்டிலும், நம்முடைய இரத்ததைச் சில்லிட வைப்பது, ஏன் செய்தாய், என்ற கேள்விக்கு மெஷின் கூறும் பதில்: ஒரு காரணமும் இல்லை. எனக்குப் பிடித்திருக்கிறது. செய்தேன்.

அந்தப் பதில் திமிர்த்தனமாகக் கூறப்பட்ட பதில் அல்ல. யாரோ ஒரு அப்பாவிப் பெண்ணைப் படுகொலை செய்த தனது செயலை மனிதத்தன்மையற்ற செயலாக அவன் கருதவே இல்லை. எனவேதான்,  தன்னுடைய செயலுக்காக சக மனிதனுக்கு விளக்கமளிக்க வேண்டிய அவசியமோ, ஏதோ ஒரு நியாயம் கற்பிக்க வேண்டிய அவசியமோ இருப்பதாகக் கூட அவன் நினைக்கவில்லை. எனக்குப் பிடித்திருந்தது, செய்தேன். என்பதை அவன் வெகு இயல்பாகக் கூறுகிறான். அவனுடைய பதிலில் காணப்படும் இந்த இயல்புத் தன்மைதான் மனிதர்கள் என்ற முறையில் நம்மைக் குலைநடுங்கச் செய்கிறது.

செத்துப்போன அந்தக் கோடீசுவரன், இலட்சக்கணக்கில் செலவு செய்து இப்படி ஒரு கொடூரத்தைப் படமெடுக்கச் செய்திருக்கிறானே, ஏன் செய்தான்? அவனுக்குப் பிடித்திருந்தது. செய்தான். யாரோ ஒரு பெண்ணை காதலிப்பதாகச் சொல்லி ஏமாற்றி, அவளுடன் உறவு கொண்டு, அதனைப் படமெடுத்து, பிறகு அதனைக்காட்டி மிரட்டியே அவளை மீண்டும் மீண்டும் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கும் குற்றங்கள் பற்றி அன்றாடம் படிக்கிறோமே, அந்த இளைஞர்கள் ஏன் அப்படிச் செய்கிறார்கள்? அவர்களுக்குப் பிடித்திருக்கிறது. செய்கிறார்கள். மற்றப்படி கசக்கி எறியப்பட்ட அந்தப் பெண்கள் மீது அவர்களுக்கு வேறு எந்த விரோதமும் கிடையாது.

ஏன் முஸ்லிம்களைக் கொன்றோம் என்று குஜராத் வன்முறையாளர்கள் பேசுவதைக் கேட்கும்போது நமக்கு ரத்தம் கொதிக்கிறது. இந்த வன்முறையாளர்களின் பதிலைக் கேட்கும்போதோ ரத்தம் சில்லிடுகிறது.

எனக்குப் பிடித்திருக்கிறது என்பதைத் தவிர தனது செயலுக்கு வேறு விளக்கம் எதுவும் சொல்லத் தேவையில்லை என்பதாக ஒரு மனிதனின் விழுமியங்கள் மாறுவதென்பது, வெறும் பாலியல் வேட்கை அல்லது வெறி தொடர்பான பிரச்சினை அல்ல. பாலியல் வேட்கை தோற்றுவிக்கும் பலவீனமான தருணங்கள் மட்டுமே இந்த மாற்றத்தை ஒரு மனிதனிடம் ஏற்படுத்தி விடுவதில்லை.

அரசியல் சமூக வாழ்வின் வெவ்வெறு தளங்களில் வெவ்வேறு விதமாக இந்த மாற்றம் துரிதகதியில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. முறுக்கிப்பிழிந்த பின் ஒதுக்கித் தள்ளப்படும் சக்கையாகவும், பல் குத்தியபின் விட்டெயெறியப்படும் குச்சியாகவும் தொழிலாளர்களைக் கருதுகின்ற முதலாளிகளை எடுத்துக் கொள்ளுங்களேன். அவர்களுக்கு அந்தத் தொழிலாளர்கள் மீது தனிப்பட்ட எந்தப் பகையுணர்ச்சியும் கிடையாது. அதேபோல, வீசியெறியப்பட்ட அந்தத் தொழிலாளிகளுக்கு என்ன நேரும் என்று சிந்திக்கும் இரக்கமும் அவர்களுக்குக் கிடையாது. பல்லைக் குத்தியபின் குச்சியை வீசியெறிவது என்ற ஏற்பாடு அவர்களுக்குப் பிடித்திருக்கிறது. அவ்வளவே.

நுகர்ந்துவிட்டுத் தூர எறியும் பண்டமாக மட்டுமே சக மனிதனையும் கருதப் பயிற்றுவிக்கும் இந்தச் சமூக அமைப்பின் முலையில் ஞானப்பால் குடித்து வளரும் மனிதன், மெஷினைப் போலப பேசுவது வியப்புக்குரியதல்ல.

யாரோ ஒரு அப்பாவிப் பெண்ணைக் கொலை செய்து விட்டு, எனக்குப் பிடித்திருந்தது செய்தேன் என்று மெஷின் கூறும் பதில் நம் ரத்தத்தை உறையவைக்கலாம். ஆனால் இதே வகையான பதில்கள், இதிலிருந்து வேறுபட்ட  பல சந்தர்ப்பங்களில்,  பல உதடுகளிலிருந்து அலட்சியமாக உதிர்வதை நாம் கேட்காமலா இருக்கிறோம்?

இது எளிமைப் படுத்தலோ, பொதுமைப்படுத்தலோ அல்ல. தனது விருப்பங்கள், தெரிவுகள், செயல்கள் ஆகியவை சக மனிதர்கள் மீது ஏற்படுத்தும் பாதிப்புக்கு, தான் விளக்கமளிக்கத் தேவையில்லை என்ற கருத்து, துவக்கத்தில்  ஒரு ஆணவம் போலத்தான் வெளிப்படுகிறது.  அதுவே மெல்ல மெல்ல வளர்ந்து அவனுடைய இயல்பாகவும், பண்பாடாகவுமே மாறும்போது அந்த மனிதன் மெஷின் ஆகிவிடுகிறான்.

எனினும் மெஷின் முகமூடி அணிய வேண்டியிருக்கிறது. சட்டத்தின் கரங்களிலிருந்து தப்பிக்கும் காரணத்துக்காக மட்டுமல்ல, இன்னமும் இந்தச் சமூகத்தில் மனிதர்களே பெரும்பான்மையாக இருப்பதன் காரணமாகத்தான் மெஷினுக்கு முகமூடி தேவைப்பட்டிருக்கிறது. உண்மையைக் கேள்விப்பட்டவுடனே தற்கொலை செய்து கொள்ளும் மனைவியைப் பெற்றிருக்கின்ற காரணத்தினால்தான், அவளிடமிருந்து ஒளிந்து கொள்வதற்கு, அந்தக் கோடீசுவரக் கிழவனுக்கு ஒரு லாக்கர் தேவைப்பட்டிருக்கிறது. பக்தர்களுடைய கண்களிலிருந்து மறைந்து கொள்ளும் பொருட்டுத்தான் தேவநாதனுக்கும் கருவறை தேவைப்பட்டிருக்கிறது.

சில நூறு பக்தர்களுக்குப் பிடிக்காது என்று கருதி எந்தக் காட்சியை மறைப்பதற்கு தேவநாதன் முயன்றானோ, அந்தக் காட்சி பல ஆயிரம் ரசிகர்களுக்குப் பிடித்தமான எதார்த்தக் காட்சியாக (Reality show) இருந்திருக்கிறது என்ற உண்மை, இப்போது தேவநாதனுக்குப் புரிந்திருக்கும்.

தான் முகமூடி அணிந்து நடித்த போதிலும், தன்னுடைய படத்தைப் பார்க்கும் ரசிகர்கள் முகமூடி அணிவதில்லை என்ற உண்மை மெஷின் என்று அழைக்கப்பட்ட ஜார்ஜுக்கு ஏற்கெனவே தெரிந்திருக்கிறது. அதனால்தான் முகமூடி கிழிக்கப்பட்ட மறுகணமே வெல்லஸிடம் ஏளனமாக அந்தக் கேள்வியைக் கேட்கிறான் மெஷின்: என்ன எதிர்பார்த்தாய்? ஒரு கொடிய மிருகம் போல இருப்பேன் என்றா?

என்ன எதிர்பார்த்தீர்கள், ஹாலிவுட் திரைப்பபட விமரிசனத்தையா? காஞ்சிபுரம் கைபேசிகளில் ஓடிய படங்களுக்கு இந்த விமரிசனம் பொருந்தவில்லையா? காஞ்சிபுரத்துக்கும் ஹாலிவுட்டுக்கும் என்ன வேறுபாடு? காஞ்சிபுரம் அமெரிக்காவில் இல்லை என்பதைத் தவிர.

–          புதிய கலாச்சாரம், ஜனவரி – 2010

vote-012

தொடர்புடைய பதிவுகள்

  1. ஹாஸ்டல் என்ற படம் பார்த்த பின் இம்மாதிரியான படங்கள் பார்ப்பதில்லை என தவிர்த்து வருகிறேன்!

    இம்மாதிரியான படங்களை விரும்பி பார்பவர்கள் மனநோயாளியாகத்தான் எனக்கு படுகிறது!

    (எனது பதிவில் உங்களது முதல் பின்னூட்டத்திற்கு நன்றி!)

    • வால்பையன், இந்த படம் ஹாஸ்டலைப்போல ‘கொலை-கொலைக்காவே’ படம் இல்லை, இந்த படத்தில் இரத்தக் காட்சிகள் மிகவும் குறைவு ஆனால் இது எழுப்பும் கேள்விகளின் தாக்கத்திலிருந்துவிடுபெறுவது கடினம். ஹாஸ்டலும், ‘சா’வும் பல பகுதிகளாக வந்த வண்ணம் இருக்கின்றன, அது ஏன் என்பதுதான் இந்த சினிமா, பதிவு முன்வைக்கும் கேள்வி. வாய்பிருந்தால் இந்த படத்தை அவசியம் பாருங்கள்

      • தம்பி கேள்விக்குறி, இந்தப் பதிவுல உள்ள படத்தையும் பாத்திருக்கீக, வால்பையன் சொன்ன படத்தையும் பாத்திருக்கீக, பெரிய ஆளா இருப்பீக போலிருக்கே, ஹாஸ்டல் படத்தோட கதைய கொஞ்சம் சுருக்கமா சொல்லுவீகளா?

        • அண்ணாச்சி கதைசொல்லுற அளவுக்கெல்லாம் நமக்கு வராதுங்க, ஆணா ஹாஸ்டல், சா மாதிரியான படங்களெல்லாம் மனுசங்கள சித்தரவத செஞ்சு கொலை செய்யறத என்னவோ டிசைன் டிசைனா சிந்திச்சு?? படம் புடிச்சிருப்பாங்க, (அபுகிரைப்புக்கு அசிஸ்டன்டு டைரக்டரோ???). நம்ம ஹாலிவுட்டு அண்ணாச்சி பாலா இந்த சினிமாவ பத்தி எழுதிகிட்டு வறாரு http://www.hollywoodbala.com/ காலி வயத்துல படிங்க, இளகுன மனசிருக்குறவங்களுக்கு குமட்டியெடுத்துறும்.

  2.  இந்தப்படத்தைப்பற்றி ஹாலிவுட் பாலாகூட எழுதியிருந்தார்.
     முகமூடி அணிந்த ஜார்ஜை குற்றம் சொல்லி பயனில்லை. இது போன்ற படங்களை பார்க்க விருப்பப்படுபவர்கள் இருக்கிறார்கள்(என்னையும்சேர்த்து) என்றுதான் இது போன்றபடங்கள் எடுக்கப்படுகின்றன. இப்படங்களை இயக்கும் இயக்குனர்கள்தான் உண்மையில் முகமூடி அணியவேண்டும். ஹாஸ்டல் படத்திலும் வன்முறைகள் அதிகம் இருந்தாலும் இந்தப்படம்  பாதித்த அளவுக்கு  ஹாஸ்டல் பாதிக்கவில்லை. 70 80 களில் வந்த பல கானிபலிசம் படங்கள் கூட இதுபோன்ற மனிததன்மையற்றவர்களால் எடுக்கப்பட்டதே.

    • நாஞ்சில் பிரதாப்,

      8 எம்.எம் படத்தில் ஆபாச வக்கிரக் காட்சிகள் எதுவுமில்லை, மாறாக அப்படி படம் எடுத்து இரசிக்கும் வக்கிர மனோபாவத்தை உணர்த்துவதற்கு முயல்கிறது. பதின்வயது சிறுமியைக் கொன்று அதை படமாக்கும் கும்பல் அதை ஒரு தொழில் போன்று நேர்த்தியாக செய்திருக்கும் மனோபாவம் பார்ப்பவர்களுக்கு அதிர்ச்சியாக இருக்கும். ஒரு திரில்லர் என்ற படத்தை தாண்டி இந்தப் படம் சொல்லும் சேதி முக்கியமானது. அனைவரும் பார்க்கவேண்டிய படம். இது கானிபலிசம் போன்ற படமல்ல.

      • முழுடிக்கெட்ட்டு சார் உங்க கேள்வி புரியல, படம் நல்ல படம்தான் நீங்க பாத்ததில்லையா? டைரக்சன் நடிப்பு (நிகோலஸ்-ஜாக்குவஸ் ஃபீனிகஸ்) எல்லாமே சிறப்பு. ஓடாதுன்னும் தெரிஞ்சே விமர்சனப்பூர்வமான இப்படி ஒரு படத்த எடுத்ததுக்கு நிச்சயம் பாராட்டனும் 

  3. நல்ல விமர்சினம், மனிதம் அழிந்துகொண்டு வருகிறது என்பதை எடுத்துகாட்டுகிறது 🙁

  4. //”””
    யாரோ ஒரு அப்பாவிப் பெண்ணைக் கொலை செய்து விட்டு, எனக்குப் பிடித்திருந்தது செய்தேன் என்று மெஷின் கூறும் பதில் நம் ரத்தத்தை உறையவைக்கலாம். ஆனால் இதே வகையான பதில்கள், இதிலிருந்து வேறுபட்ட  பல சந்தர்ப்பங்களில்,  பல உதடுகளிலிருந்து அலட்சியமாக உதிர்வதை நாம் கேட்காமலா இருக்கிறோம்?//

    மேலே குறிப்பிட்டுள்ளது போன்ற வசனங்களை நாம் கேட்டிருப்போம். தோழர்கள் இங்கு அவற்றை பட்டியலிட்டால் சிறப்பாக இருக்கும்.

    • உதாரனதிற்க்கு ஒன்று.90களின் சாதி கலவரங்களின் பொழுது ஒருவர் தனது விரதீரபிரதாபஙகளை பற்றி விவரித்து கொண்டிருந்ததாக கேள்விப்பட்டது “தாயோளி அவன அந்தமானெக்கு வெட்டி சாச்சு வெரசானு காட்டுக்குள்ள இழுதுட்டு போய்ட்டோம். எல்லாம் நல்லா நாட்டு சாரயத்த குடிச்சு இருந்தோம். வகுத்து பசி கொடல புடுங்குது. அவன் மொனங்கிட்டெ கெடந்தான். அப்ப்டியே அருவாள ஓங்கி கழுதல இருந்து வகுறு வரைக்கும் ஒரு இழுவை. உயிர் அடங்கிடுச்சு. உள்ள இருந்து இருதையம், ஈரலு எல்லாதையும் எடுத்து சுட்டு தின்னோம், என்ன பன்றது பசி” சொல்லிவிட்டு ஓங்கி சிரித்து விட்டு தன் வாழ்வின் உச்ச சாதனை படைத்து விட்ட‌ ஒரு லுக் விட்டாராம், சொன்னவர். 

  5. அடிக்கவே முடியாத ஒரு அசுரத்தனமான இன்சுவிங் யார்க்கர் பாலை அனாயாசமாய் சிக்சருக்கு விலாச, அது பவுண்டரி கோட்டுக்கு ஒரு இன்ச் உள்ளேயே விழுந்து சொத்தென்று அடர்ந்த ஈர புல் தரையில் புதை மணலில் அகப்பட்டதை போல விழுந்து நகராமல் நிற்க, ‘எப்படியும் பவுண்டரியாவது நிச்சயம்’ என்று ரன் எடுக்காமல் கிரீசிலேயே நின்று வேடிக்கை பார்க்கும் அந்த முட்டாள் சோம்பேறி பேட்ஸ்மன் போல இருக்கிறார், இந்த பதிவை நன்றாக ஆரம்பித்து சரியாவே எழுதிவிட்டு கடைசியில் நியாயமான முடிவு சொல்லாமல் சோம்பேறியாக நிற்கிறார் கட்டுரையாளர்.

    //என்ன எதிர்பார்த்தாய்? ஒரு கொடிய மிருகம் போல இருப்பேன் என்றா?
    “ஏன் இதைச் செய்தாய்?” என்று கேட்கிறான் வெல்லெஸ். “ஒரு காரணமும் இல்லை. எனக்குப் பிடித்திருக்கிறது, செய்தேன்” என்று பதிலளிக்கிறான் மெஷின்.//

    — இவனை இப்படி ஒரு குற்ற உணர்ச்சியற்ற மனசாட்சியை கொண்ட மனித விலங்காக மாற்றியது எது? என்பதை பற்றி மூச்…

    //பலவீனமான தருணங்கள் மட்டுமே இந்த மாற்றத்தை ஒரு மனிதனிடம் ஏற்படுத்தி விடுவதில்லை.// பின்னர் வேறு எது என்று சொல்லமால் போய் விட்டீர்களே…

    ///எனினும் மெஷின் முகமூடி அணிய வேண்டியிருக்கிறது. சட்டத்தின் கரங்களிலிருந்து தப்பிக்கும் காரணத்துக்காக மட்டுமல்ல, இன்னமும் இந்தச் சமூகத்தில் மனிதர்களே பெரும்பான்மையாக இருப்பதன் காரணமாகத்தான் மெஷினுக்கு முகமூடி தேவைப்பட்டிருக்கிறது. உண்மையைக் கேள்விப்பட்டவுடனே தற்கொலை செய்து கொள்ளும் மனைவியைப் பெற்றிருக்கின்ற காரணத்தினால்தான், அவளிடமிருந்து ஒளிந்து கொள்வதற்கு, அந்தக் கோடீசுவரக் கிழவனுக்கு ஒரு லாக்கர் தேவைப்பட்டிருக்கிறது. பக்தர்களுடைய கண்களிலிருந்து மறைந்து கொள்ளும் பொருட்டுத்தான் தேவநாதனுக்கும் கருவறை தேவைப்பட்டிருக்கிறது./// — இந்த பாராகிராப் மிக அருமை.
    இதில் சிந்திக்க வேண்டியன….
    —–மக்களிடம் நற்பெயர் வாங்க மத முகமூடி தேவை (எல்லா மத)பயங்கரவாதிகளுக்கும். அவர்களுக்கு கடவுளிடம் மறுமை பயம் இருந்திருந்தால் இதனை செய்திருப்பார்களா? மாட்டார்கள்.
    —–பிற நல்லோரிடம் தானும் மானம் இழக்காமல் வாழ முகமூடி தேவைபடுகிறது. அப்படிஎன்றால் பிறர் நல்லோராய் இருக்கும்வரை. அவர்கள் எப்படி நல்லோராய் ஆவது? கடவுள் நம்பிக்கை. மறுமை பயம்.
    —–தேவநாதன், கருவறையில் உள்ள சாமிக்கு பயப்படவில்லை என்று புரிகிறது. அது தன்னை ஒன்றும் பண்ணாது என்று தெரிந்திருக்கிறது. ஆனால், ஒரே ஒரு கடவுள் உலகையே கண்காணித்துக்கொண்டு தவறிழைப்போரை மறுமையில் நரகில் வேதனைப்படுத்துவார் என்ற பயம் இருந்திருந்தால் தேவனாதனை அந்த பயம் தடுத்திருக்கும்.
    ——கடவுள் நம்பிக்கை இல்லாவிட்டாலும் மனசாட்சிக்கு பயப்படுவேன் என்பவர்கள் (மானம் இழந்தபின் தற்கொலை செய்து கொள்வது போன்ற) சீமாட்டி போன்ற செயலை செய்வார்கள். அதனால் யாருக்கு என்ன பயன்.

    என் பார்வையில் மறுமை நம்பிக்கை இல்லாத (முஸ்லிம்/கிருத்துவ/யூத/ஹிந்து)ஆத்திகர்களும் கடவுள் நம்பிக்கை இல்லாத (கம்யூனிச)நாத்திகர்களும் சமூக குற்றங்கள் செய்ய என்றுமே எந்த தயக்கமும் காட்டியதில்லை.

    //அறம், ஒழுக்கம், விழுமியங்கள் என்ற காரணங்களின் அடிப்படையில் சிந்தித்துப் பதிலளிக்கக் கூடிய நிலையில் நீங்கள் இருந்தால், பதிலளிப்பதில் சிரமமிருக்காது.// — இப்படி சில விதிவிலக்குகள் இருக்கலாம்.

    ஆனால் அந்த விதிவிலக்குகள், மறுமை பயம், இறை தண்டனை ஆகியன இல்லையென்றால்…//இந்தக் காலத்தில், மேற்படி கேள்வியே கூட கொஞ்சம் அபத்தமானதாகவும், காலத்தால் பின்தங்கியதாகவும் சிலருக்குத் தோன்றலாம்.// என்று விரைவில் தடம் புரண்டுவிடும்.

    ஆக, இறுதியாக….
    தெளிவான உறுதியான மறுமை பயத்துடன் கூடிய இறை நம்பிக்கை ஒன்றே, எக்காலத்திலும் மனிதர்களை பிறருக்கு தீங்கிழைக்கா நல்லோராய் நிலை நிறுத்தும்.

    • உலகம் எப்பொழுது இறைவன் அழிப்பான் எனக் கேட்கின்றார்கள் அல்லவா? அவர்களுக்குச் சொல்லுங்கள் எப்பொழுது இப்படிப்பட்ட மனிதர்கள் மிகைக்க ஆரம்பிக்கின்றனரோ அப்பொழுது உலகம் அழிக்கப்படும் என்பதை.

  6. பல வகையான வக்கிரங்கள் ஆதிகாலம் தொட்டே இருந்து கொண்டுதான் இருக்கின்றன. பல நூற்றாண்டுகளுக்கு முன் அய்ரோப்பாவில் மார்குவேஸ்
    டி சேட் http://en.wikipedia.org/wiki/Marquis_de_Sade என்ற ‘பிரபு’, சிறுவர்களை தன் முன் கொலை செய்ய விட்டு, அதை கண்டு இன்புற்றான். ஸாடிஸம் என்ற ஆங்கில சொல் அவனின் பெயரில் இருந்தே உருவானது. நவீன கால டெக்நாலஜி இன்று இதை பல மடங்கு அதிகம் பரவ ஏதுவாக்கியுள்ளது. இதை சட்டம் மற்றும் law enforcement agencies
    எப்படி தடுக்க முயல்கின்றனர் என்பதை விவாதிக்க வேண்டும்.

    • adhiyaman – marquis de sade was against christianity( read dying man and the priest) thats y the clergy villified him and made him a monster. he was one of the adherent proponents of french revolution. they forbade him to write – as his writings were against christianity. undaunted he wrote on the prison walls with his own shit. that was also stopped. he then used his blood to write. he was one of the greatest influence on modern thought and sexual liberation of women.

  7. உலகம் முழுவதும் வக்கிரம் கொட்டிக்கிடக்கிறது ………………..வக்கிரம் என்னும் எண்ணத்தில் தேவனதனுக்கும் அதை பார்பவனுக்கும் பெரிய வித்யாசம் இல்லை

  8. என்னால் பேசமுடியவில்லை… அந்த அளவிற்கு மிக்ச் சரியான கட்டுரை, மிக்ச் சரியான விமரிசனம்…

  9. Why devanathan affair is discussed here.Are there no porn movies in India or in Tamil. Why dont you write about them, who produces them,who sees them.

    ‘தெளிவான உறுதியான மறுமை பயத்துடன் கூடிய இறை நம்பிக்கை ஒன்றே, எக்காலத்திலும் மனிதர்களை பிறருக்கு தீங்கிழைக்கா நல்லோராய் நிலை நிறுத்தும்.’
    For such muslims islam is the solution, for commies revolution is the solution.

  10. என் தாய் என்னை பாவத்தில் கர்பந்தரிதால். தாவீது சங்கீதத்தில் சொல்வார்.
    யோவான் 3 16 என்ன சொல்கிறது படித்து பாருங்கள். தேவன் தம்முடைய ஒரே குமாரனான இயேசு கிருஸ்துவை வுலகுக்கு அனுப்பி இவ்விதமாய் நம்மில் அன்பு கூர்ந்தர். 
    நாம் அவரை ஏற்று கொண்டால் எல்லா பாவத்தையும் நீக்கி நம்மை சுத்திகரிபதற்கு அவர் வுண்மை வ்வுள்ளவராய் இருக்கிறார்.

  11. அபராம் அய்யா மிக நேர்த்தியாகவும் சொல்லவந்ததை தெளிவாகவும் சொல்லிஉள்ளிர்கள் உங்கள் கட்டுரைகளை மேலும் எதிர்பார்க்கும் ..

  12. காஞ்சிபுரம் குருக்களின் சிடியை பார்த்த நண்பன் அதிர்ந்து போய் உள்ளான். குடும்ப (?) பெண்களின் ‘அந்த’ இயக்கங்கள் தொழில் ரீதியான அல்லது பலான படங்களில் நடிக்கும் நடிகைகளை தூக்கி சாப்பிடும் விதமாக இருந்ததாம். தவிர ஒவ்வொரு பெண்ணை வீழ்த்தியதும் குருக்கள் கேமிராவை நோக்கி வெற்றிக்கான சைகையை காண்பிப்பதும் ஒரு சைக்கோவின் செயலாகவே தெரிகிறதாம். மொத்தத்தில் அதுவும் ஆராயப்படவேண்டிய படமே.

  13. நல்ல படம் ஆனால் வெல்லெஸ் இறுதியில் வன்முறைய் கையில் எடுத்து கொலை செய்கிறார். . தவறு செய்பவரகளை கொலை செய்துதான் அவர்கலை தண்டிக்க முடியும் என்னும் சினிமா தனத்தை டைரக்டர் காட்டி விட்டார். . . வெல்லெஸ் அவர்கலை பத்தி வெளீஉலகிர்கு எடுத்து காட்டு வது போல் படம் எடுத்திருந்தர்ல் நல்லா இருந்துருகும். . டைரக்டர் , தயாரிபாளர்க்கு எச்சரிக்கையாய் இருந்து இருகும்…

  14. மொத்த கதையும் துப்பறிவது, பாலியல் காட்சிகள் என நகர்வதால், நிறைய வல்லுறவு காட்சிகள், சண்டைக் காட்சிகள், சேஸிங் காட்சிகள் என ஒரு பக்கா ஹாலிவுட் மசாலாவாக எடுக்க எல்லா வாய்ப்புகள் இருந்தாலும், இயக்குநர் அதையெல்லாம் தவிர்த்து கதையம்சம் கொண்ட, உணர்ச்சிமயமான அருமையான படமாக தந்திருக்கிறார். முழுக்க முழுக்க மனித உணர்ச்சிகள் எல்லாவற்றையும் கொன்று, பணம், பணம் அதற்காக எதை வேண்டுமென்றாலும், எந்த உணர்ச்சியுமில்லாமல் மனிதர்களை கொல்லலாம் என்கிற ஹாலிவுட்டின் நிழல் உலகம் உண்மையில் அதிர்ச்சியானது.

    http://nondhakumar.blogspot.in/2013/01/blog-post_31.html

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க