privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசமூகம்சாதி – மதம்அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்குவோம்! மதுரையில் உண்ணாவிரதம்!!

அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்குவோம்! மதுரையில் உண்ணாவிரதம்!!

-



அறிமுகக் குறிப்பு: அனைத்து சாதியனரும் அர்ச்சகராக வேண்டுமென்ற பெரியாரின் கனவை நனவாக்குவதாக சில ஆண்டுகளுக்கு முன்னர் கருணாநிதி அரசு ஒரு அரசு உத்தரவை(GO) வெளியிட்டது. அதன்படி சம்பிரதாயம், மரபு என்ற பெயரில் மற்ற சாதியினர் அர்ச்சகராவதை தடுக்க முடியாது என்று அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து அனைத்து சாதி மாணவர்களுக்கும் பயிற்சி அளிக்க அர்ச்சகர் பள்ளியும் திறக்கப்பட்டது. மாணவர்களும் சேர்க்கப்பட்டு பயிற்சி தொடங்கியது. இடையில் மதுரை பட்டர்கள் எனப்படும் பார்ப்பன அர்ச்சகர்கள் இந்த அரசு உத்தரவிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தடையுத்தரவு பெற்றனர்.

இதற்குப் பிறகு தி.மு.க அரசு வெளியிட்ட அவசரச் சட்டம், சட்டம் இரண்டிலும் மேற்கண்ட சம்பிரதாயம், மரபுக்கெதிரான என்ற வரிகள் இல்லை. அதாவது இந்த சட்டப்படியே அனைத்து சாதியினரும் அர்ச்சகராக முடியாது என்பதுதான் அதன் பொருள். பார்ப்பனர்களின் நீதி மன்ற தடையாணையை முறியடிக்க வேண்டிய கருணாநிதி அரசு அதற்குப் பதில் நீதிமன்றத்தின் ஆணைக்கு பங்கம் வராமல் நடந்து கொள்ள முடிவெடுத்தது. அர்ச்சகர் பள்ளியில் முதல் அணியாய் பயிற்சி பெற்ற 206 மாணவர்கள் இப்போது செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர். இப்போது இந்த பள்ளியில் புதிய மாணவர்கள் சேர்க்கப்படவில்லை.

தி.மு.க அரசின் பார்ப்பன அடிமைத்தனத்தை உணர்ந்து இந்தப் பிரச்சினையை நீதிமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் போராடுவதற்கு மனித உரிமை பாதுகாப்பு மையம் (ம.க.இ.கவின் தோழமை அமைப்பு) முடிவெடுத்து செயல்பட்டு வருகிறது. அந்த மாணவர்களை அணிதிரட்டி சங்கம் அமைத்து வீதியில் இறங்கிய பிறகுதான் அவர்களுக்குரிய சான்றிதழே அளிக்கப்பட்டது. அடுத்து இந்த பிரச்சினையில் உச்சநீதிமன்றம் சென்று வாதடவும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. மக்கள் மத்தியில் பார்ப்பனர்கள் மற்றும் தி.மு.க அரசின் சதிகளை விளக்கும் வண்ணம் தொடர் பிரச்சாரமும் செய்யப்படுகிறது. இங்கே அதை ஒட்டி சமீபத்தில் மதுரையில் அந்த அர்ச்சக மாணவர்கள் பங்கேற்ற உண்ணாவிரதத்தை ம.உ.பா.மை நடத்தியது. அதன் பதிவு கீழே தரப்படுகிறது.

___________________________________

“அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்குவோம், ஆலயத் தீண்டாமைக்கு முடிவு கட்டுவோம்” ஆகிய கோரிக்கைகளை முன் வைத்து மதுரையில் 10.3.2010 புதன்கிழமை காலை 9.00 மதி முதல் 5.00 மதி வரை மதுரை ஜான்சிராணி பூங்கா அருகில் உண்ணாநிலைப் போராட்டம் நடைபெற்றது.

மனித உரிமை பாதுகாப்பு மையம், தமிழ்நாடு மற்றும் அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம், தமிழ்நாடு ஆகியவை இணைந்து நடத்திய இப்போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் கூட்டம் சற்றும் கலையாமல் அமர்ந்திருந்தது.

அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் 29 பேர் அர்ச்சகர்களாகவே கலந்து கொண்டனர். மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் சார்பில ஒருங்கிணைப்பாளர் ராஜூ கூட்டத்திற்கு தலைமை வகித்தார். இந்து சமய அறநிலையத்துறை முன்னாள் அமைச்சர் வி.வி.சாமிநாதன் உண்ணாநிலைப் போராட்டத்தைத் தொடங்கி வைத்து உரையாற்றினார். சிதம்பரம் நடராசர் கோவிலை மக்கள் சொத்தாக்கியதைப் போல அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் போராட்டத்தில் மனித உரிமை பாதுகாப்பு மையமும் அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கமும் பிற போராட்ட அமைப்புகளும் இணைந்து வெற்றியை ஈட்டுவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

தலைமை உரையாற்றிய ராஜூ “அரசியல் சட்டம் 17வது பிரிவு தீண்டாமை குற்றம் என்று கூறுகிறது. ஆனால் ஆலய கருவறைக்குள் பார்ப்பனர் அல்லாதவர்கள் நுழைய முடியாது என்ற தீண்டாமை இருந்து வருகிறது. அரசியல் சட்டமா? ஆகம விதிகளா? என்று கேள்வி எழும்போது உச்சநீதிமன்றம் என்ன தீர்ப்பு வழங்கப்போகிறது? சட்டப்படி போராடி தீர்வு கண்டாலும் பார்ப்பனர்கள் கருவறைக்குள் பிற சாதியினரை நுழைய அனுமதிப்பார்களா? அனுமதிக்கமாட்டார்கள் என்பதை சிதம்பரம் போராட்ட அனுபவம் உணர்த்துகிறது. எனவே மக்கள் இந்த கோரிக்கைக்கு பெருவாரியாக ஆதரவு அளிக்க வேண்டும். அப்போது தான் இந்தப் போராட்டம் வெல்லும்” என்று வலியுறுத்தினார்.

உண்ணா நிலைப் போராட்டத்தில் கலந்துகொண்ட அர்ச்சக மாணவர்கள் அனைவரும் தங்களுடைய கருத்தை வெளிப்படுத்த தவறவில்லை. மேடைகளில் பேசிப் பழக்கமில்லாதவர்கள் மந்திரம் மற்றும் பாடல் வடிவங்களில் தங்களுடைய திறனை வெளிப்படுத்தினர்.

“வேதம், ஆகமம் அதன் விதிகள் சொல்லுகின்ற அடிப்படையில் பார்ப்பனர்கள் யாருமே இல்லை. ஆகம விதிகளுக்கு புறம்பாக கருவறைக்குள் பூஜை செய்யும் சிவாச்சாரியார்கள், பட்டாச்சாரியார்கள் மந்திரம் சொல்லும் போது வருகிற கடவுள் நாங்கள் சொல்லும் போது மட்டும் வராது என்று ஆகம விதிகளை நீதிமன்றத்தில் காரணம் காட்டுகின்றார்கள். ஆகம விதிகளின் படி தலைவழுக்கையாக இருந்தால் கூட அர்ச்சகராக இருக்க தகுதியில்லை. திருமணமாகி பிள்ளைகள் பெற்றவர்கள் மட்டும் தான் அர்ச்சகராக இருக்க வேண்டும். ஊனம் இருக்கக் கூடாது. பத்துவிரல்களுக்கு மேலோ, கீழோ இருக்கக் கூடாது.”

திருவண்ணாமலையைச் சேர்ந்த மாணவர் ஆனந்தன் பார்ப்பனர்களைப் போலவே தோற்றத்தில் இருந்தார். ஆனால் பூணூல் மட்டும் இல்லை. சமஸ்கிருதத்திலும், தமிழிலும் மிக அழகாக, துல்லியமாக மந்திரங்களை ராகத்துடன் அவர் பாடிக் காட்டி இது எந்த வகையில் பார்ப்பனர்களின் திறமைக்கு குறைவானது என்று கேட்டார்.

மேலும் “படித்து அர்ச்சகராகி நமது பிள்ளை எதிர்காலத்தில் சிறந்த வாழ்க்கை வாழுமென்று எதிர்பார்த்த பெற்றோர்களும், நாங்களும் இப்போது வேறு வழியில்லாமல் திகைத்துக்கொண்டிருக்கின்றோம். நம்முடைய பிள்ளையின் எதிர்கால வாழ்க்கை வீணாகி விடுமோ என்று கவலைப்படுகின்றனர். இதற்கு யார் காரணம். உச்சநீதிமன்றத்தில் தடைஆணை பெற்ற மதுரை பார்ப்பன பட்டர்கள் தான் இதற்கு காரணம். பார்ப்பானுடைய பிள்ளைகள் பட்டம் பெறாமலே, தகுதியில்லாமலே அர்ச்சகர்களாக சொகுசாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். நாங்கள் தகுதி பெற்றவர்கள், முச்சந்தியிலே நின்று போராடிக் கொண்டிருக்கிறோம். அரசாங்கம் இந்த வேலையை செய்யாமலிருந்திருக்கலாம். அனைத்துச்சாதியினரையும் அர்ச்சகராக்கி விட்டோம் என்று பெயரளவில் செய்து விட்டு தன்னைத் தானே பாராட்டிக் கொண்டிருக்கிறது அரசாங்கம்.” என்றும் குமுறினார்.

மாணவர் சங்க பொருளாளர் திரு.சண்முகம் பார்ப்பனர்களின் பகல் வேசத்தை தோலுரித்துக் காட்டினார். “தன்னை ஒரு பூஜைக்காக அழைத்துச் சென்ற பார்ப்பனர் ஒருவர் தன்னையும் ஒரு பார்ப்பனராகவே காட்டிக்கொள்ள வேண்டும் என்று எச்சரிக்கை செய்தார். ஹோமம் ஆரம்பிக்கும் முன் ஒரு சரம் பான்பராக்கை எடுத்து எனக்கு இரண்டு கொடுத்தார். எனக்குப் பழக்கமில்லை என்று சொன்னேன். அவரோ இதைப் போட்டால் தான் எனக்கு மந்திரமே வரும் என்று சொன்னார். ஆறிப்போன காப்பியை ஹோமத்தில் சுடவைத்து குடித்தார். மறு நாள் காப்பி வரவில்லை என்பதால் ஹோமத்திற்காக வைத்திருந்த பாலை எடுத்து ஹோமத்தில் வைத்து காப்பி போட்டுக் குடித்தார். இது தான் பார்ப்பன அர்ச்சகர்களின் லட்சணம்.” என்றார்.

தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த மாணவர் ஒருவர் சமஸ்கிருதத்திலும், தமிழிலும் மந்திரங்களை மிக இனிமையாக பாடி, தான் எத்தனையோ திருமணங்கள் மற்றும் கிரகப்பிரவேசங்கள் நடத்தி வைத்திருக்கிறதாகவும் அவர்கள் எல்லாம் நன்றாகத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். கடவுள் அவர்களைத் தள்ளியா வைத்துவிட்டார் என்று வினா எழுப்பினார்.

மாணவர்கள் சிலர் “பள்ளியில் பயிற்சி பெறும் போது எப்படிப்பட்ட பிரச்சனைகளை எல்லாம் சந்தித்தோம். எவ்வளவு நம்பிக்கையோடு கல்வியை கற்றோம். அத்தனையும் பார்ப்பனர்களுடைய சாதி வெறியினாலே தகர்க்கப்பட்டு விட்டது. அதற்கு சட்டமும் துணை நிற்கிறது” என்று மனம் வருந்தினர். மாணவர்கள் அனைவரையும் ஒன்று சேர விடாமல் பல்வேறு வேண்டாத சக்திகள் தடுத்து வருவதாகவும் தெரிவித்தனர். மதுரை மாணவர் மாரிமுத்து முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி அவர்கள் மனது வைத்தால் நாங்கள் எல்லோரும் அர்ச்சகர் ஆகிவிடலாம் என்று கருணாநிதிக்குக் கோரிக்கை வைத்தார்.

பார்ப்பனர்கள் கருவறைக்குள் பிற சாதியினர் நுழையக்கூடாது. தாங்கள் அழைக்கும் போது மட்டுமே கடவுள் வருவார் என்று சொல்லிவிட்டு அவர்களுடைய பிள்ளைகளையெல்லாம் கலெக்டர், செக்கரட்டரி, வங்கி மேலாளர், தொழில் அதிபர்கள்  ஆக்கிவிட்டு சொகுசாக வாழ்கின்றனர். பார்ப்பனர்கள் கடல் கடந்து செல்லக்கூடாது என்று ஆகமங்கள் சொல்கின்றன. ஆனால் இந்தியாவிலுள்ள பெரும்பாலான பார்ப்பனர்களின் வாரிசுகள் கடல் கடந்து கண்டம் கடந்து பல நாடுகளில் வாழ்கின்றனர். பிற சாதியினர் கருவறைக்குள் நுழையக்கூடாது என்று சொல்கின்ற பார்ப்பனர்களைப் பார்த்து நீங்கள் கருவறையைத் தவிர வேறு எங்கும் வரக்கூடாது என்று நாங்கள் சொன்னால் அவர்கள் அதை ஏற்றுக் கொள்வார்களா? அர்ச்சகர் வேலையைத் தவிர வேறு வேலை கிடையாது என்று சொன்னால் ஒப்புக் கொள்வார்களா? எல்லா இடத்திலும் அவர்கள் தங்களை முன்னணியில் வைத்துக்கொள்வதற்கு அவர்களுக்கு உரிமை இருக்கிறது. நமக்கெல்லாம் அந்த உரிமை மறுக்கப்படுகிறது. இது எந்த வகையான நீதி?

சாதி, தீண்டாமை, அர்ச்சகராகுவதற்கான தடை, தங்கள் மூலமாக மட்டுமே கடவுள் வருவார் என்ற குருட்டுத்தனமான நம்பிக்கை இவற்றுக்கெல்லாம் பார்ப்பனியமே காரணம் என்பதை மாணவர்கள் உணர்ந்து கருத்துக்களை வெளிப்படுத்தினர்.

மதுரை வழக்கறிஞர் சங்கச் செயலாளர் திரு.ஏ.கே. ராமசாமி பேசும் போது “நித்யானந்தா, சங்கராச்சாரி போன்றவர்களுடைய காமவக்கிரங்களுக்கு அடிப்படை கிருஷ்ணனுடைய லீலைகள்தான். கிருஷ்ணன் ஒழுக்கக் கேட்டினுடைய சின்னம். அவன் தமிழ் கடவுளே அல்ல. ராமன் கடவுளுடைய அவதாரம் என்று சொல்வதும் உத்தமன் என்று சொல்வதும் பொய். பார்ப்பனர்கள் மட்டும் தான் பூஜை செய்ய வேண்டும் என்று சொல்வது ஏமாற்று வேலை. நான் ஒருமுறை கோவிலுக்குச் சென்ற போது அங்கே அர்ச்சகர் இல்லை. அர்ச்சகர் இதோ வருவார் அதோ வருவார் என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஆனால் அர்ச்சகர் வந்த பாடில்லை. பொறுமை இழந்த நான் கருவறைக்குள் நுழைந்து பூஜை செய்வேன் எனக்கு எல்லா மந்திரங்களும் என்று கூறி கருவறைக்குள் நுழைய முயற்சி செய்தேன். அதற்குள் பட்டரை அழைத்து வந்துவிட்டார்கள். சிவாச்சாரியார்கள் பட்டாச்சாரியார்களை விட ஆகம வேத மந்திரங்கள் அனைத்தும் எனக்குத் தெரியும். என்னுடன் மோதத் தயரா என்று நான் சவால் விட்டேன். மதுரையிலுள்ள திருப்புகழ் பக்த சபையை கட்டிக்காத்தவர்களிலே நானும் ஒருவன்” என்று கூறினார்.

குச்சனூர் ஆதீன நிர்வாகி குச்சனுர் கிழார் அவர்கள் “வடநாட்டு கடவுளர்களையும் கந்த சஷ்டி, பிள்ளையார் சதுர்த்தி, தீபாவளி போன்ற விழாக்களை தமிழர்களாகிய நாம் கொண்டாடுவது தவறு.  நம்மை அறியாமலேயே கொண்டாட வைத்து விட்டார்கள். விநாயகன், ராமன், கிருஷ்ணன், ராமாயணம், மகாபாரதம் இவையெல்லாம் தமிழர்களுக்குரியதே இல்லை” என்று அடித்துக் கூறிய அவர் சைவ சித்தாந்தம் பற்றி அவர் வெளியிட்ட இரண்டு நூல்களை மேடையில் அறிமுகம் செய்து பலரும் அதை வாங்கி சென்றார்கள்.

திராவிடர் கழகத்தின் மாநில சட்டத்துறை தலைவர் வழக்கறிஞர் திரு.கி.மகேந்திரன் கி.மகேந்திரன் பேசியது : “1970ல் தந்தை பெரியார் கர்பக்கிரக நுழைவுப் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தார். அப்போது ஆட்சியில் இருந்த கருணாபிதி இதற்காக நீங்கள் போராட்டம் நடத்த வேண்டாம். என்னுடைய அரசு அதற்கான சட்டம் ஒன்றினை இயற்றும் என்று கூறினார். கர்ப்பக்கிரகத்துக்குள் நிற சாதியினர் நுழைய முடியாத பிலை என்னுடைய நெஞ்சிலே தைத்திருக்கின்ற முள் என்று கூறினார். பெரியார் மறைந்த போது பெரியாரின் நெஞ்சிலே தைத்த முள்ளோடு அவரை நான் புதைக்கும்படியாக ஆகிவிட்டது என்று கருணாநிதி கூறியதை” கருணாநிதிக்கு நினைவுபடுத்தினார்.

தமிழ்நாடு வழக்கறிஞர் தமிழ் சங்கத் தலைவர் வழக்கறிஞர் சின்ன ராஜா, ம.தி.மு.க மாவட்ட பொருளாளர் வழக்கறிஞர் ஆசைத்தம்பி, மதச்சார்பற்ற ஜனாதாத்தள பிரமுகர் வேலுச்சாமி, ம.க.இ.க தோழர்கள் கதிரவன், எழில்மாறன், வி.வி.மு தோழர் குருசாமி, பு.ஜ.தொ.மு.தோழர் நாகராஜன் ஆகியோர் உரையாற்றினர். ஆதித் தமிழர் பேரவை மற்றும் சில அமைப்புகளைச் சேர்ந்தவர்களும், வழக்கறிஞர்கள் சிலரும், தனிநபர்களும், தாங்களும் தங்களுடைய கருத்துக்களை வெளிப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்ட போதிலும் நேரமின்மையின் காரணமாக அவர்களுக்கு வாய்ப்பளிக்க இயலவில்லை. மாலை 5.15 மதியளவில் குமுடி மூலை ஆறுமுகசாமி அவர்கள் போராட்டத்தை முடித்து வைத்தார். அனைத்து ஊடகங்களும் செய்தி சேகரித்துச் சென்றன.

போராட்டத்தின் இறுதியில் கோரிக்கைகள் முழங்கப்பட்டன. அதன்பின் அர்ச்சக மாணவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து “”””வாழ்மிகு வராது பொய்க மதிவளம் சுரக்க மன்னன் கோல்முறை அரசு செய்க”” என்ற பெரியபுராண பாடல் வரிகளைப் பாடி உண்ணாநிலைப் போராட்டம் முடிக்கப்பட்டது.

–          தகவல், புகைப்படம்: மனித உரிமைப் பாதுகாப்பு மையம் (HRPC), தமிழ்நாடு. செல்பேசி: 94432 60164