privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்தி"கற்பு", கட்டற்ற பாலுறவு: குஷ்பு, திருமா, ராமதாஸ் – யார் சரி?

“கற்பு”, கட்டற்ற பாலுறவு: குஷ்பு, திருமா, ராமதாஸ் – யார் சரி?

-

vote-012திருமணத்திற்கு முந்தைய பாலுறவை ஏற்பதும், அதை பாதுகாப்பாக செய்யவேண்டுமெனவும் 2005ஆம் ஆண்டு குஷ்பு கூறியதை அடுத்து தமிழினவாதிகளும், தலித்தியவாதிகளும் காட்டிய எதிர்ப்பும், வழக்கும் வாசகருக்கு நினைவிருக்கலாம். தற்போது இந்த வழக்குளையெல்லாம் ரத்து செய்து தீர்ப்பளித்திருக்கும் உச்சநீதிமன்றம் கூடவே வயது வந்த ஆணும், பெண்ணும் உறவு வைத்திருப்பது அரசியல் சட்டம் அளித்திருக்கும் உரிமை என்றும் விளக்கம் அளித்திருக்கிறது. குஷ்பு சார்பில் பெண்ணியவாதிகள், பின்நவீனத்துவவாதிகளும், ‘கற்பு’ அணியில் தமிழினார்வலர்களும் அணிவகுக்கின்றனர். ஆனால் இந்த இருதரப்புமே தவறு என்பதையும் பாலுறவில் எது சரி என்பதை விளக்கி புதிய ஜனநாயகம் எழுதிய மிக முக்கியமான கட்டுரையை காலப்பொருத்தம் கருதி இங்கு பதிவு செய்கிறோம். விவாதத்திற்கும் அழைக்கிறோம்.

வினவு

____________________________________________

இந்தியா டுடேயின் செக்ஸ் விற்பனையும், தமிழ்க் கற்பின் கூச்சல்களும்!

பெண்கள் திருமணமாகும் போது கன்னித்தன்மை கலையாமல் இருக்க வேண்டும் என்பது போன்ற எண்ணங்களில் இருந்து நமது சமூகம் விடுதலையாக வேண்டும். கல்வி பெற்ற எந்த ஆண்மகனும் தான் திருமணம் செய்யப் பேகிறவள் கன்னித் தன்மையோடு இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க மாட்டான். ஆனால், திருமணத்திற்கு முன்பு செக்ஸ் வைத்துக் கொள்ளும் போது கர்ப்பமாகமலும், பால்வினை நோய்கள் வராமலும் பெண் தன்னைத் தற்காத்துக் கொள்ள வேண்டும்” எனத் திரைப்பட நடிகை குஷ்பு, இந்தியாடுடே (தமிழ்) வார இதழில் சொல்லி வெளியான கருத்துகள், “”கற்பு” மற்றும் பாலியல் ஒழுக்கம் தொடர்பாக வாத பிரதிவாதங்களைத் தொடங்கி வைத்திருக்கிறது.

இந்தியாடுடே வாசகர்களோடு முடிந்து போயிருக்க வேண்டிய இந்தக் கருத்தை, கருணாநிதி குடும்பத்தினரால் வெளியிடப்படும் தமிழ் முரசு இதழ், தனது வியாபார அரசியல் நோக்கத்திற்காக, “”தமிழ்ப் பெண்கள் கற்பு இல்லாதவர்களா?” எனும் தலைப்பில் பரபரப்பூட்டும் செய்தியாக மாற்றியது. இதையடுத்து, தினத்தந்தி (24.9.05) நாளிதழுக்கு பேட்டியளித்த குஷ்பு, “”திருமணத்திற்கு முன் செக்ஸ் வைத்துக் கொள்ளாத ஆண்பெண் எத்தனை பேர் இருக்கிறார்கள்?” என அதிமேதாவித்தனமாகக் கேட்டு வைத்தார். இதையடுத்து, பா.ம.கவும், விடுதலை சிறுத்தைகளும் தமிழ் பெண்களை குஷ்பு அவமானப்படுத்தி விட்டதாகக் குற்றஞ் சுமத்தி, அவருக்கு எதிராகத் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தியிருப்பதோடு, அவருக்கு எதிராக கிரிமினல் வழக்குகளும் தொடுத்துள்ளன.

இந்தியாடுடே வெளியிட்டுள்ள இந்தக் கருத்துக் கணிப்பில், “”பெண்கள் மணமாகும்வரை கன்னியாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா?” என்ற கேள்விக்கு 66 சதவீதப் பெண்கள், “ஆம்’ என்று பதில் அளித்துள்ளனர். குறிப்பாக, சென்னையில் 82 சதவீதப் பெண்கள் திருமணமாகும்போது பெண்ணின் கன்னித்தன்மை கலையாமல் இருக்க வேண்டும் என்று கருத்து சொல்லியுள்ளார்கள். திருமணத்திற்கு முன்பு உடலுறவு வைத்துக் கொள்வதை 71 சதவீதப் பெண்கள் தவறு என்று குறிப்பிட்டுள்ளனர்.

மேட்டுக்குடி திமிரோடு குஷ்பு கேட்டிருக்கும் கேள்விக்கு, இந்தப் புள்ளிவிவரங்களே முகத்தில் அடித்தாற் போல பதில் சொல்லி விடுகின்றன. ஆனால், பா.ம.கவும், விடுதலைச் சிறுத்தைகளும் போராட்டம் நடத்துவதற்கு வேறு பிரச்சினையே இல்லை என்பது போல, “நீதி’ கேட்டு குஷ்புவுக்கு எதிராக வரிந்து கட்டிக் கொண்டு நிற்கின்றன.

நகர்ப்புறத்தைச் சேர்ந்த படித்த, வேலைக்குப் போகும் பெண்கள் கூட, மோசமான, பொறுப்பில்லாத கணவனிடமிருந்து மணவிலக்கு பெறத் தயங்கும்போது, கிராமப்புறங்களில், பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட குடும்பங்களில் “”அறுத்துக் கட்டும் பண்பாடு” ஆண்டாண்டு காலமாக நடைமுறையில் இருந்து வருகிறது. கணவன் மோசமானவனாக, பெண் பித்தனாக இருந்தாலும், இந்த ஒழுங்கீனத்தைப் பொறுத்துக் கொண்டு, வாழ்நாள் முழுவதும் அவனுக்காகவே வாழ்வதுதான் “”கற்புடைமை” என்ற பண்பாட்டிற்கு நேர் எதிரானது, இது. “யாருடன் சேர்ந்து வாழ்வது?” என்று தீர்மானிக்கும் உரிமையை “கற்பு” தட்டிப் பறித்து விடுகிறது. ஆனால், மணமான மறுநாளே அறுத்துக் கொண்டு, தனக்குப் பிடித்த வேறொருவனுடன் சேர்ந்து வாழும் ‘கீழ் சாதிப் பெண்களை’ கிராமப்புறங்களில் காண முடியும்.

கறாராகச் சொன்னால், “கற்பு” சாதிகளைக் கடந்த தமிழ்ப் பண்பாடு அல்ல. சொத்துடைமை கொண்ட பார்ப்பன வேளாள சாதிப் பண்பாடுதான் “கற்பு”. இம்மேல்சாதி பண்பாட்டை, தொன்று தொட்ட தமிழர்களின் கலாச்சாரம் போல ஊதிப் பெருக்கியதில், இந்துத்துவாவாதிகள், திராவிடக் கட்சிகள், தமிழினவாதிகள், தமிழ் சினிமாக்களுக்கு முக்கிய பங்குண்டு. குறிப்பாக, “கீழ் சாதிகள்” “இந்து” என்ற போர்வையில் எவ்வளவு தூரம் பார்ப்பனமயமாக்கப்படுகிறதோ, அதற்கு நேர் விகிதத்தில் “கற்பு” என்ற பண்பாடு அச்சாதிப் பெண்கள் மீது திணிக்கப்படுகிறது.

பெரியார், அம்பேத்கர் வழிநடப்பவர்கள் என சுயதம்பட்டம் அடித்துக் கொள்ளும் வன்னியரான இராமதாசிற்கும், தாழ்த்தப்பட்டவரான தொல்.திருமாவளவனுக்கும் இந்த உண்மை தெரியாதா? இந்த உண்மைக்கு நேர் எதிராக அவர்கள் கற்பை தொன்றுதொட்ட தமிழ் கலாச்சாரம், பண்பாடு போல கொண்டாடுவது வரலாற்று மோசடி. பார்ப்பன வேளாளப் பண்பாடான கற்பிற்கு வக்காலத்து வாங்குவதன் மூலம், “கீழ் சாதி” பெண்கள் ஆண்டாண்டு காலமாக அனுபவித்து வந்த உரிமைகளை, அவர்கள் தட்டிப் பறிக்கின்றனர். மேலும், “கீழ்ச்சாதி”களைப் பர்ப்பன பண்பாட்டில் மூழ்கடிக்கும் இந்து மதவெறி பாசிஸ்டுகளின் வேலையை இவர்கள் சுலபமாக்கி விடுகிறார்கள்.

கட்டற்ற பாலுறவுக்கு கடைவிரிக்கும் தாராளமயம்!

“கற்பு”, “கன்னித்தன்மை” போன்ற பழைய சமூக கட்டுப்பாடுகள் மதிப்பீடுகளுக்கு எதிராக, “திருமணத்துக்கு முன்பே உறவு கொள்ளலாம்”, “கணவன் தவிர்த்த வேறு ஆடவனுடன் உறவு கொள்ளலாம்” என்பது போன்ற “பாலியல் புரட்சி’ கருத்துக்கள் (மேட்டுக்குடி) பெண்கள் மத்தியில் தோன்றுவதற்கு, தராளமயம்தான் மூலகாரணமாக இருக்கிறது. இதனைப் பாலியல் மருத்துவர்கள் தொடங்கி பெண்ணியவாதிகள் உள்ளிட்டு அனைவரும் ஏற்றுக் கொள்கிறார்கள்.

இந்த தாராளமயத்தை நடைமுறைப்படுத்துவது, ப.சிதம்பரமும், மன்மோகன் சிங்கும் மட்டும்தானா? பா.ம.க.விற்கு இதில் கொஞ்சம்கூடப் பங்கு கிடையாதா? கிட்டத்தட்ட கடந்த ஏழு ஆண்டுகளாக மைய ஆட்சியில் பங்கு பெற்று வரும் பா.ம.க., “தமிழ் பண்பாட்டிற்கு” எதிராக இப்படிப்பட்ட சீரழிவுகளைத் தோற்றுவிக்கும் தாராளமயத்தைக் கண்டித்து ஒரு வார்த்தையாவது முணுமுணுத்திருக்குமா?

ஒருபுறம் மேட்டுக்குடி பெண்களிடம் “”பாலியல் புரட்சி” கருத்துக்களைத் தோற்றுவிக்கும் தாராளமயம், இன்னொருபுறமோ அடித்தட்டு வர்க்கப் பெண்களின் “கற்புக்கே” உலை வைத்து விடுகிறது. தனியார்மயம் தாராளமயம் விவசாயத்தையும், கைத்தொழிலையும், சிறு தொழில்களையும் அழித்துக் கொண்டே போவதால், பிழைக்க வேறு வழியில்லாமல், அடித்தட்டு பெண்கள் விபச்சாரத்திற்குள் தள்ளப்படுவது தாராளமயத்தின் பின் அதிகரித்திருப்பதைப் பல்வேறு ஆய்வுகள் சுட்டிக் காட்டியுள்ளன.

பல்வேறு அழகு சாதனப் பொருட்களைச் சந்தையில் இறக்கிவிட்டு, பெண்களை அழகுப் பதுமைகளாக மாற்றும் போக்கும் தாராளமயத்தின் பின்தான் தீவிரமாக நடந்து வருகிறது. ஊருக்கு ஊர் அழகிப் போட்டிகள் நடப்பதும், அதில் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த சிறுமிகள் தொடங்கி மணமான பெண்கள் வரை கலந்து கொள்ளுவதையும் தாராளமயத்திற்கு முன் நாம் கேள்விப்பட்டதுண்டா?

எந்த தாராளமயம் தாழ்த்தப்பட்டோர் உள்ளிட்டு அடித்தட்டு மக்களின் வாழ்க்கைக்கும், பண்பாட்டிற்கும் உலை வைக்கிறதோ, அதே தாராளமயத்தை கெயில் ஓம்வட் போன்ற தலித் சிந்தனையாளர்கள், “தாழ்த்தப்பட்ட மக்களை உய்விக்க வந்த வழியாக”க் கொண்டாடுகிறார்கள். தொல்.திருமாவளவனோ பா.ம.க. இராமதாசு மூலம் தி.மு.க. கூட்டணிக்குள் நுழைந்துவிட காத்துக் கொண்டிருக்கிறார். அவர், தி.மு.க. கூட்டணிக்கு நுழைந்து விட்டால், “தமிழ் பண்பாட்டையும் தமிழச்சிகளின் கற்பையும்” பாதுகாக்கும் கேடயமாகத் தாராளமயம் மாறிவிடுமா?

எனவே, இவர்கள் ஒருபுறம் தாராளமயத்தை ஆதரித்துக் கொண்டு, மறுபுறம் “கற்பு’ என்ற “தமிழ் பண்பாட்டிற்காக”ப் போராட்டம் நடத்துவது பித்தலாட்டத்தனமானது

இந்தியா டுடேயின் தாராளமயச் சேவையும் பாலியல் சர்வேயும்

“செக்ஸ் பிரச்சினைகளை” கிளுகிளுப்பூட்டும் கட்டுரைகளாக எழுதிவரும் நாராயண ரெட்டி போன்ற மருத்துவர்கள் கூட, “திருமணத்திற்கு முன் செக்ஸ் போன்ற பாலியல் சுதந்திரங்கள் தேவையில்லாத ரிஸ்க்; ஆபத்தான சங்கதி” என்றே குறிப்பிடுகிறார்கள். ஆனாலும், இந்தியாடுடே வகையறாக்கள், இப்பாலியல் சுதந்திரத்தை எதிர்க்கும் அனைவரையும் ஒரே தட்டில் வைத்து, “பழமைவாதிகள், பத்தாம்பசலிகள், கலாச்சார காவலர்கள்” எனச் சாடுகிறார்கள்.

இந்திய ஓட்டுக் கட்சிகளிலேயே படுபிற்போக்கான இந்து மதவெறி பாசிஸ்டுகளை ஆதரித்து எழுதி வரும் பத்திரிகையான இந்தியா டுடே, இந்தப் பாலியல் சுதந்திரப் பிரச்சினையில், தன்னை கருத்து சுதந்தரத்தின் காவலனாகக் காட்டிக் கொள்கிறது. தாராளமயத்தின் பின், விபச்சாரம், பாலியல் சுற்றுலா சேவைத் தொழிலாக மாறிவிட்டதைப் போல, கருத்துக் கணிப்பு என்ற பெயரில் இந்தியா டுடே வெளியிட்டுள்ள வக்கிரமான கேள்விகள் கூட கருத்துச் சுதந்திரம் ஆகிவிட்டன.

இந்தியா டுடேயில் கருத்து சொன்ன குஷ்புவை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தும் திருமாவளவன் ராமதாசு கூட்டணி, அவரைவிட வக்கிரமான கேள்விகளைக் கேட்டுள்ள இந்தியாடுடே பத்திரிகையை கண்டித்து ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. நடிகர் சங்க கட்டிடத்திற்குள் துடைப்பத்தை வீசிய அக்கூட்டணி, இந்தியாடுடே அலுவலகத்தின் மீது கை வைக்கத் துணியவில்லை.

அவர்கள் இந்தியா டுடேயைக் கண்டு கொள்ளாமல் விட்டதற்கு, ஒரு நடிகையை எதிர்த்துப் போராட்டம் நடத்தினால் கிடைக்கும் மலிவான விளம்பரம், இந்தியா டுடேயை எதிர்த்து நடத்தினால் கிடைக்காது என்பது மட்டும் காரணம் அல்ல் அவர்களின் ஓட்டுச்சீட்டு அரசியலுக்கு இந்தியா டுடே போன்ற பிரபலமான பத்திரிகைகளின் ஆதரவு தேவை என்பதால்தான் மௌனமாக இருக்கிறார்கள். இந்தியா டுடேயை எதிர்த்துப் போராட்டம் நடத்தினால், அதில் விருந்தினர் பக்கம் எழுத மீண்டும் வாய்ப்பு கிடைக்காது என்பது கூட திருமாவளவனின் வாய்க்குப் பூட்டு பூட்டியிருக்கலாம்.

தாராளமயம் பெண்கள் மீது எத்தனையோ சுமைகளை ஏற்றி வைத்திருக்கிறது. பெண்களின் செக்ஸ் பிரச்சினை குறித்து வருடத்திற்கு இரண்டு, மூன்று இதழ்கள் கருத்துக் கணிப்பு வெளியிடும் இந்தியா டுடே, பெண்கள் மீது தாராளமயம் திணித்துள்ள சுமைகளைப் பற்றி ஒரேயொரு கருத்து கணிப்பாவது நடத்தியிருக்குமா?

இந்தியா டுடே, பெண்களின் செக்ஸ் பற்றி கிளுகிளுப்பூட்டும் படங்களோடு கருத்துக் கணிப்பு வெளியிடுவதற்கு காரணம், அதனின் வியாபார நோக்கம் மட்டும் அல்ல வாழ்க்கையை விதவிதமாக அனுபவிக்கத் துடிக்கும் மேட்டுக்குடி வர்க்கத்தின் பாலியல் கலாச்சாரத்தை, நடுத்தர வர்க்கப் பெண்களையும் தாண்டி கீழே கொண்டு சென்றுவிட வேண்டும் என்ற இந்தியா டுடேயின் வர்க்கப் பார்வைக்கும் முக்கிய பங்குண்டு.

திருமாவளவன் ராமதாசு கூட்டணியைக் கண்டிக்கும் பலரும், “குஷ்புவுக்கு கருத்துச் சொல்ல உரிமையில்லையா?” எனக் கேள்வி எழுப்புகிறார்கள். குஷ்புவுக்கு கருத்துச் சொல்ல உரிமையில்லையா என்பதல்ல இங்கே பிரச்சினை. இப்படிக் கேள்வி எழுப்புவதன் மூலம் இந்த அறிவுஜீவிகள் பலரும் மையமான விசயத்திற்குள் நுழையாமல் நழுவிக் கொள்கிறார்கள். மாறாக, பாலியல் சுதந்திரம், பெண்ணுரிமை என்பது குறித்து இந்தியா டுடேயும், குஷ்புவும் சொல்லியிருக்கும் கருத்துகள் சமூகத்திற்குப் பயனுள்ளதா என்பதுதான் மையமான கேள்வி.

தனிப்பட்ட ரீதியாகப் பார்த்தால் கூட, பாலியல் சுதந்திரம் போன்ற சமூகப் பிரச்சினைகளில் கருத்துக் கூறும் அளவிற்கு குஷ்புவிற்குத் தகுதியும், அனுபவமும் உண்டா? திரைப்படத் துறையில் பாலியல் ரீதியாகப் பெண்கள் சுரண்டப்படுவதை அம்பலப்படுத்தி ஒரு வார்த்தை இவர் பேசியதுண்டா? தனது சொந்தப் படத்தில் கூட நடிகைகளை அரைகுறை ஆடையுடன் நடனமாட விடும் ஒரு மேல்தட்டு காரியவாத நடிகையை, ஏதோ பெண்ணுரிமை போராளியை போல, இந்த அறிவுஜீவிகள் தமிழக மக்களின் முன் தூக்கிப் பிடிப்பது கேவலமானது.

கற்பும்’, காதலும், கட்டற்ற பாலுறவும் – எது சரி?

பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு கூட, தனது பாலியல் தேவைகளை இவ்வளவு பச்சையாகப் பேசியிராத மேட்டுக்குடி வர்க்கமும், அவர்களது பத்திரிகைகளும், இப்பொழுது அதைப் பெண்ணுரிமையாக, புதிய சமூக ஒழுங்காகப் பிரகடனப்படுத்துவதற்குக் காரணம், தாராளமயம் புகுத்தியிருக்கும் நுகர்வு வெறி கலாச்சாரம்.

தினந்தோறும் புதிது புதிதாகக் கேட்கும் இந்த நுகர்வு வெறி, உணவு, உடை, நுகர்வுப் பொருட்கள் ஆகியவற்றோடு மட்டும் நின்று விடுவதில்லை. பாலியல் உறவுகளிலும் தினுசுதினுசான வகைகளைக் கோருகிறது. அதுதான் வரைமுறையற்று பாலுறவு கொள்ளுதல் என்ற பழைய காட்டுமிராண்டி கால பாலுறவு பழக்கத்தை, நவீன பாலியல் சுதந்திரமாக — பாலியல் புரட்சியாக அறிமுகப்படுத்துகிறது.

குஷ்புவுக்கு ஆதரவாக துண்டறிக்கை வெளியிட்டுள்ள மாற்றுக் குரல்கள், “கால் சென்டர், கணினி தொழில் நுட்பம் போன்ற வேலைகள் ஆடவர்களுடன் பழகும் வாய்ப்பை அதிகரிக்கிறது… இத்தகைய சூழ்நிலை பெண்களின் பாலியல் நிலைகளிலும், பாலியல் தேர்வுகளிலும் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது” எனக் குறிப்பிடுகிறது. இதற்குக் காரணம், இந்த நுகர்வு வெறிப் பண்பாடு தொழிலாளி வர்க்கத்தையும் விட்டு வைக்கவில்லை என்பதுதான்.

குறிப்பாக, தாராளமயத்தின் பின் வந்துள்ள கால் சென்டர் போன்ற தகவல் தொழில் நுட்ப (நவீன மூளை உழைப்பு) தொழிற்சாலைகளில், ஊழியர் சங்கங்கள் இருக்காது; மாறாக, இந்தத் தொழில்கள் மொத்தமாகக் குவிந்துள்ள தொழில் நுட்ப பூங்காங்களுக்குப் போனால், நுகர் பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனங்களின் “ஷோரூம்களை”ப் பார்க்கலாம்.

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் வேலைக்கு ஆளெடுப்பதே, அழகிப் போட்டி ஸ்டைலில் நடத்தப்படுகிறது. இதனால், அங்கு புதிது புதிதாக அழகிகளும், அழகன்களும் வந்து போன வண்ணம் இருக்கிறார்கள். வேலைப் பளுவில் ஏற்படும் மனச்சோர்வைக் குறைக்க, “அவுட்டிங்” என்ற மேல்தட்டு “”பார்ட்டி” கலாச்சாரம் அறிமுகப்படுத்தப்படுகிறது. இதனால், மேல்தட்டு வர்க்கத்துக்கேயுரிய எல்லா பண்பாடுகளும், இவர்களிடம் தொற்றிக் கொள்கிறது. ஏற்கெனவே மனதளவில் பணக்காரர்களைப் போலவே வாழ ஆசைப்படும் நடுத்தர வர்க்க இளைஞர்கள், எளிதாக இந்தக் கலாச்சாரத்தில் மூழ்கி விடுகின்றனர்.

இந்த நவீன மூளை தொழிற்சாலையில் உள்ள வேலைப்பளு காரணமாக, கணவன் மனைவி இடையே பாலுறவில் பல சிக்கல்கள் தோன்றுவதாக மனநல மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர். கணவன் மனைவி இடையே உறவு சரியில்லாத பொழுது, சோரம் போவது எளிதாகி விடுகிறது. நகர்ப்புறத்தைச் சேர்ந்த படித்த, நடுத்தர வர்க்கத்து ஆண்பெண்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கும் துறையாக தகவல் தொழில்நுட்பம் இருப்பதால், இந்தக் கலாச்சாரத்தை மனதளவில் முன்னரே ஏற்றுக் கொள்ளும்படி, அவர்களது பழைய பாலியல் கருத்துக்களை மாற்றியமைக்கும் வேலையை இந்தக் கருத்துக் கணிப்புகள் செய்து விடுகின்றன.

ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே காதல் பிறக்க, அவர்கள் இருவர் இடையே ஏதோ ஒருவித ஈர்ப்பு இருந்தால் மட்டும் போதாது; இருவரும் ஒருவருக்கொருவர் உண்மையாய் இருப்போம் என்ற நம்பிக்கையும் இருக்க வேண்டும். இந்த நம்பிக்கை குலைந்து போய்விட்டால், காதல் மரித்துப் போய், வாழ்க்கையே சவமாகிவிடும்.

பாலியல் புரட்சியோ, ஆண்பெண் இருவரும் ஒருவருக்கொருவர் உண்மையாய் இருக்கத் தேவையில்லை என்பதை முன் நிபந்தனையாகக் கொள்கிறது. எனவே, இந்த உறவில் காதல் இருக்காது. காதல் இல்லாத உறவு நெறியுடையதாகவும் இருக்காது.

பாலியல் மருத்துவர்கள் பாலுணர்வை வெறும் உடல் சார்ந்த விசயமாகப் பார்க்கவில்லை. மனத்தின் பல்வேறு உணர்ச்சி நிலைகளின் ஒரு வெளிப்பாடே பாலுணர்வு எனக் கூறுகிறார்கள். ஆனால், பாலியல் சுதந்திரமோ ஆண்பெண் இடையேயான பாலுணர்வை வெறும் உடல் இச்சை சம்பந்தப்பட்ட விசயமாக குறுக்கி விடுகிறது. எனவே, இது அறியவிலுக்கே எதிரானதாகிறது. மேலும், காதல் போன்ற சமூக உறவுகள் இல்லாத காட்டுமிராண்டி காலத்தில், வெறும் பாலுணர்ச்சியை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு ஆண் பெண் இடையே உறவு இருந்த நிலைக்கு, நாகரிக மனித சமூகத்தை தாழ்த்தி விடுகிறது.

பெண்ணின் கன்னித்தன்மை என்பதே முட்டாள்தனமானது என மருத்துவ அறிவியல் சாடுகிறது. ஏனென்றால், பெண்ணின் “கன்னித் திரை” மிதிவண்டி ஓட்டுவது, நீந்துவது போன்ற நடவடிக்கைகளால் கூடக் கிழித்து போய் விடக் கூடியது. குஷ்பு இந்த அறிவியல் அர்த்தத்தில் கன்னித் தன்மையை எதிர்பார்க்கக் கூடாது எனச் சொல்லவில்லை.

ஒருவரை நம்பி ஏமாந்து போகும் பெண்களையும், பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆட்பட்ட பெண்களையும் கன்னித்தன்மை இல்லாதவர்களாகக் கூறும் சமூகம், அவர்களை மானம் இழந்தவர்களாக, திருமணத்திற்குத் தகுதியில்லாதவர்களாகச் சாடுகிறது. இந்தப் பிற்போக்குத்தனங்களை எதிர்த்து, அதன் அடிப்படையில் கன்னித்தன்மையை எதிர்பார்க்கக் கூடாது என குஷ்பு கூறவில்லை. மாறாக, திருமணத்திற்கு முன்பே பாலுறவு கொள்வது தவறில்லை என்ற அடிப்படையில் தான் கூறியிருக்கிறார்.

பாலுறவில் சுய கட்டுப்பாடுடன் இருப்பது அடிமைத்தனமாகாது என லெனின் குறிப்பிடுகிறார். இந்த சுய கட்டுப்பாடு பெரும்பாலான இளைஞர்களிடையே கலாச்சாரமாகவே காணப்படுகிறது. ஆனால், பெண்ணியவாதிகள் இந்த சுய கட்டுப்பாட்டை மீறுவதுதான் சுதந்திரம் என்கிறார்கள். சுய கட்டுப்பாட்டை மீறி திருமணத்திற்கு முன்பே பாலுறவு கொள்ளலாம்; கணவன் அல்லாத வேறு ஆண்களுடன் உறவு கொள்ளலாம் என்பவர்கள் திருணத்தையே ஒதுக்கித் தள்ள வேண்டியதுதானே? ஆற்றில் ஒரு கால், சேற்றில் ஒரு கால் ஏன் வைக்க வேண்டும்?

“திருமணத்திற்கு முன்பே பாலுறவு வைத்துக் கொள்ளலாம்; திருமணமான பெண்கள், வேறு ஆண்களுடன் உறவு வைத்துக் கொள்ளலாம்” என்பதை பெண்ணியவாதிகள், ஆணாதிக்கத்தை எதிர்த்த பெண் விடுதலையின் அம்சங்களாகச் சுட்டிக் காட்டுகிறார்கள். இது, நடைமுறையில், பல பெண்களோடு உறவு கொள்ள அலையும் ஆண்களுக்கு, தனது பெண்டாட்டி, அம்மா, சகோதரிகளின் “கற்பை”த் தவிர, மற்ற பெண்களின் “கற்பை”யெல்லாம் துச்சமாக மதிக்கும் ஆண்களுக்கு, பழம் நழுவி பாலில் விழுந்த கதையாகக் கைகொடுக்கும்.

பெரும்பாலான தமிழ் பெண்கள் “”கட்டுப்பெட்டித்தனமாக” வாழும் போதே, ஆண்கள் வழிதவறிப் போனதற்கு பெண்கள்தான் காரணம், அவர்கள் உடுத்தும் உடைதான் காரணம் எனப் பழிப்போடும் ஆணாதிக்கத் திமிருக்கு, இப்பாலியல் சுதந்திரம் பெண்களைச் சீண்டுவதற்கும், பெண்களைப் பாலியல் ரீதியாகச் சுரண்டுவதற்கும் ஏராளமான வாய்ப்புகளை அள்ளிக் கொடுப்பதில் முடியும்.

எதிர் எதிரான கருத்துக்களான ஆணாதிக்கமும், பெண் விடுதலையும் ஒன்றையொன்று அனுசரித்துக் கொண்டு சமாதான சகவாழ்வு முடியுமா? ஆண்கள், பல பெண்களோடு உறவு வைத்துக் கொள்ளலாம் எனும் பொழுது, பெண்களும் அப்படி இருக்கலாம் என்பது கேட்பதற்கு “மிகுந்த புரட்சிகரமானதாக”த் தோன்றினாலும், இதற்கும் பெண் விடுதலைக்கும் ஒட்டும் கிடையாது; உறவும் கிடையாது; ஒரு சீரழிவு, இன்னொரு சீரழிவை நியாயப்படுத்தி விடாது.

“ஒருவனுக்கு ஒருத்தி” என்ற நவீனக் குடும்பம், ஆணாதிக்கம் நிறைந்ததுதான். அவன் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களுடன் உறவு வைத்துக் கொள்ள அனுமதிக்கக் கூடியதுதான். இதைக் காட்டி குடும்பத்தையும், திருமணத்தையும் மறுக்கும் அராஜகவாதத்திற்குப் பதில் குடும்பம் மற்றும் ஆண் பெண் உறவுகளை ஜனநாயகப்படுத்துவதற்குப் போராட பெண்களைத் தூண்டிவிடுவதுதான் மாற்றுத் தீர்வாக அமைய முடியும். பெண்கள் இப்படிப்பட்ட போராட்டங்களை தமது அன்றாட வாழ்க்கையில் நடத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

நடைமுறை வாழ்க்கையில், கணவன் வேறாரு பெண்ணுடன் உறவு கொண்டிருப்பது தெரியவரும் பொழுது, பெரும்பாலான பெண்கள் பஞ்சாயத்துப் பேசியோ, போலீசு நிலையத்தில் கணவன் மீது புகார் கொடுத்தோதான் பிரச்சினையைத் தீர்க்கப் போராடுகிறார்களேயொழிய, வீம்புக்காக வேறொரு ஆணுடன் தொடர்பு வைத்துக் கொள்வது கிடையாது. கணவனின் கள்ள உறவு காரணமாகவோ, பாலியல் சித்திரவதை வரதட்சணை கொடுமை காரணமாகவோ அவனுடன் இனியும் சேர்ந்து வாழ முடியாத நிலை ஏற்பட்டால், அவனிடமிருந்து பிரிந்து போய் தனியாக வாழுகிறார்கள்; இல்லை, மணவிலக்கு பெற்றுக் கொண்டு மறுமணம் கூடச் செய்து கொள்கிறார்கள்.

பிடிக்காத கணவனோடு சேர்ந்து சலிப்போடு வாழ்வதை விட, வேறொரு ஆணுடன் இரகசியக் கள்ள உறவு வைத்துக் கொண்டு போலித்தனமாக வாழ்வதைவிட, மணவிலக்கு பெற்று, மறுமணம் செய்து கொள்வது, பாலியல் சுதந்திரத்தைவிட, முற்போக்கானது மட்டுமல்ல் சமூக ரீதியில் ஏற்றுக் கொள்ளக் கூடியதும், நியாயமானதும்கூட.

திருமணம், குடும்பம் ஆகியவற்றின் வரலாற்று வளர்ச்சி குறித்து ஆராய்ந்த எங்கெல்ஸ், “ஆண்களுடைய வழக்கமான ஒழுக்கக் கேட்டைப் பெண்கள் சகித்துக் கொண்டிருக்கும்படி கட்டாயப்படுத்துகின்ற பொருளாதார நோக்கங்கள் தமது வாழ்க்கையைப் பற்றிய கவலை, அதற்கும் மேலாக, தமது குழந்தைகளின் எதிர்காலத்தைப் பற்றிய கவலை மறைகின்ற பொழுது ஏற்படுகின்ற ஆண்பெண் சமத்துவம், பெண்கள் பல கணவர் முறைக்குப் போய் விடுவதைவிட, ஆண்கள் உண்மையிலேயே ஒருதார மணத்தைக் கடைப்பிடிப்பதற்கும் பேருதவி செய்யும்” என்று குறிப்பிடுகிறார்.

எங்கெல்ஸ் குறிப்பிடுகின்ற பெண்களின் கவலைகள் மறைய வேண்டும் என்றால், ஆணாதிக்கத்தைத் தூக்கிப் பிடிக்கின்ற, முதலாளித்துவ சமூகம் மறைந்து போக வேண்டும். இச்சமூக மாற்றத்திற்கான போராட்டத்திற்கு பெண்களை அணிதிரட்ட, பாலியல் கருத்துக்களைத்தான் முன்னிலைப்படுத்த வேண்டும் என்ற அவசியமே கிடையாது. “பெண்கள் உழைப்பு கொடூரமாகச் சுரண்டப்படுவது; பெண் கல்வி மறுக்கப்படுவது; வரதட்சணை சாவுகள்; வரதட்சணைக் கொடுமையால் திருமணம் தள்ளிப் போவது” எனப் பெண்களைப் பாதிக்கும் பிற பிரச்சினைகளை முன் வைத்தே அவர்களை அணிதிரட்டிவிட முடியும்.

தாராளமயம், மேட்டுக்குடிப் பெண்களைப் “பாலியல் சுதந்திரத்தை” நோக்கித் துரத்துகிறது என்றால், அடித்தட்டு வர்க்கப் பெண்களை சமூகப் புரட்சியை நோக்கி நெட்டித் தள்ளுகிறது. தாராளமயத்தை எதிர்த்து நடக்கும் போராட்டத்தின் வீச்சு அடுப்படியில் முடங்கிக் கிடக்கும் பெண்களைத் தெருவுக்கு இழுத்து விடுகிறது. சென்னை இராணி மேரி கல்லூரி மாணவிகள் நடத்திய போராட்டம் தமிழகத்தையே உலுக்கி எடுத்ததையும்; மணிப்பூர் மாநிலத்தில் வயதான தாய்மார்கள், இந்திய இராணுவத்தின் பாலியல் வன்கொடுமைகளை எதிர்த்து நடத்திய நிர்வாணப் போராட்டம் இந்தியாவையே உலுக்கி எடுத்ததையும் நாம் மறந்து விட முடியுமா?

அடித்தட்டு மற்றும் நடுத்தர வர்க்கப் பெண்கள் மத்தியில் உருவாகி வரும் இப்புதிய பண்பாட்டை ஆதரித்து இந்தியாடுடே சிறப்பிதழ் வெளியிடாது. குஷ்பு கருத்துச் சொல்ல மாட்டார்; இப்புதிய பண்பாட்டை நாம் தான் அடையாளப்படுத்தி வளர்த்துச் செல்ல வேண்டும்.

ஆனால், இராமதாசும், திருமாவளவனும் “கற்பு என்ற தமிழ் பண்பாட்டைப் பாதுகாப்பதற்காக” அடித்தட்டு பெண்களைத் தூண்டிவிடுகிறார்கள். இந்தக் “கற்புடமை” பண்பாடு பெண்களை, சமூக உற்பத்தியிலும், வர்க்கப் போராட்டத்திலும் பங்கெடுத்துக் கொள்ள விடாமல் தடுத்து, அவர்களை அடுப்படியிலேயே முடக்கிவிடும் நயவஞ்சகம் நிறைந்தது என்பதை நாம் புதிதாக எடுத்துச் சொல்ல வேண்டியதில்லை. அதேசமயம், “கற்பு”க்கு எதிராக இந்தியாடுடே வகையறாக்கள் முன் வைக்கும் “பாலியல் சுதந்திரமோ” இளைஞர்களின் சிந்தனையை நஞ்சாக்கக் கூடியது!

___________________________________________________

நரியைப் பரியாக்கும் திருமா

சென்னை மெரீனா கடற்கரையில் இருந்த கண்ணகி சிலை ஜெயாவின் சோதிட மூடநம்பிக்கைக்காக அகற்றப்பட்ட பொழுது, “ஆண்களின் சொத்தாசைதான் கற்பு என்கிற கற்பிதத்தை உருவாக்கியது” எனப் புரட்சிகரமாக வாய்ச்சவடால் அடித்த திருமாவளவன், இப்பொழுது, “குஷ்பு இருப்பது கற்பைப் போற்றுகிற கண்ணகிகள் நடமாடும் தமிழ்நாட்டில் என்பதை மறந்துவிட்டுப் பேசியிருக்கிறார்.” (ஜூ.வி. 2.10.05) எனக் கற்பை ஏற்றிப் போற்றுகிறார். “கற்பு என்பது மானுட சமூகத்தின் பொது ஒழுங்காக வரையறுக்கப்பட்டு முறைப்படுத்தப்பட்டுள்ளது” என இந்தியாடுடே (அக்.12, 2005) யில் முன்னுக்குப் பின் முரணாகப் பிதற்றுகிறார்.

திருமாவளவனுக்கு, முன்பு திருடர் பாதையாகத் தெரிந்த தேர்தல் பாதை, இப்பொழுது தலித்துகளைப் பாதுகாக்கும் ஜனநாயகப் பாதையாக மாறிவிட்டதைப் போல, ஆணாதிக்க கருத்தியலான கற்பும், தமிழ்ப் பண்பாடாக, பொது ஒழுங்காக மாறிவிட்டது.

____________________________________________________

தங்கர்பச்சானின் ஆண்டைத்தனம்

இராமதாசும், திருமாவளவனும், “குஷ்புவுக்கு ஒரு நீதி, தங்கர்பச்சானுக்கு ஒரு நீதியா?” எனக் குமுறிக் கொண்டிருப்பதே, இப்போராட்டத்தின் பிற்போக்குத்தனத்தை மட்டுமல்ல, இவர்கள் நோக்கத்தையும் அம்பலப்படுத்திக் காட்டி விடுகிறது. “பணத்துக்காக நடிக்கும் நடிகைகள் விபச்சாரிகள்” என தங்கர்பச்சான் கேவலமாகப் பேசியதால் அவர் நடிகர் சங்கத்தால், குஷ்பு, மனோரமா ஆகிய நடிகைகளின் முன் மன்னிப்பு கேட்க வைக்கப்பட்டார்” என்பது பிரச்சினையின் ஒரு பகுதிதான். இதனின் இன்னொரு பக்கத்தை சம்மந்தப்பட்ட இரண்டு தரப்புமே திட்டமிட்டே மூடி மறைத்து விட்டார்கள்.

தங்கர்பச்சான் சொந்தமாகத் தயாரித்த “சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி” திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த நவ்யா நாயரின் ஒப்பனைக்காரப் பெண்ணுக்கு 600 ரூபாய் சம்பள பாக்கியைத் தராமல் தங்கர்பச்சான் இழுத்தடித்து வந்தார். படப்பிடிப்பு வேலைகள் முழுவதும் முடியப் போகும் நேரத்தில் கூட தங்கர்பச்சான் இந்த சம்பள பாக்கியைத் தராததால், நவ்யா நாயர் ஒப்பனைக்காரப் பெண்ணுக்கு சம்பள பாக்கியைக் கொடுத்தால்தான் நடிப்பேன் என நியாயமான முறையில் தனது எதிர்ப்பைக் காட்டியிருக்கிறார்.

இதனால் ஆத்திரம் அடைந்த தங்கர்பச்சான், ஒரு வார இதழுக்கு அளித்த பேட்டியில், “பணத்துக்காக நடிக்கும் நடிகைகள் விபச்சாரிகள்” எனத் திட்டித் தீர்த்தார். சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி பாடல் ஒலிநாடா வெளியீட்டு விழாவில், “கோடி கோடியா ரூபாயைப் போடுறோம். கேவலம், 600 ரூபாய்க்கா ஒரு மேக்கப் போடுற பொம்பளெ ஷூட்டிங்கை கேன்சல் பண்ண வச்சிடுச்சின்னா இந்தத் தமிழ் சினிமா எப்படி உருப்படும்?” என இந்தத் தமிழ் படைப்பாளி தனது ஆணவத்தைக் கக்கியிருக்கிறார்.

வேலை செய்வதன் கூலி கேட்டால், அதைக் கொடுக்காமல் திமிராகப் பேசுவது ஆண்டைகளின் மனோபாவம். தங்கர்பச்சான் நடிகைகளை விபச்சாரி என்று கேவலப்படுத்தியதற்காக மட்டுமல்ல, அவரின் இந்த தொழிலாளர் விரோத ஆண்டை மனோபாவத்துகாகவும் தண்டிக்கப்பட்டிருக்க வேண்டும். தனது திரைப்படங்கள் அனைத்திலும் பெண்ணடிமைக் கருத்துக்களை விற்பனை செய்து வரும், இந்தப் பிற்போக்கு வியாபாரியைத் தமிழர்கள் புறக்கணித்திருக்க வேண்டும். ஆனால், பாட்டாளி மக்கள் பெயரில் கட்சி நடத்தும் இராமதாசும்; மார்க்ஸ், அம்பேத்கர் என வாய்ச்சவடால் அடிக்கும் திருமாவளவனும், தங்கர்பச்சான் தமிழ் படைப்பாளி என்பதற்காகத் தண்டிக்கப்பட்டதாகப் பூசி மெழுகுகிறார்கள்.

இராமதாசும், திருமாவளவனும் தங்கர்பச்சானுக்காக வக்கீல்களாக மாறி வாதாடுவதற்கு, அவர் தமிழ் பாதுகாப்பு இயக்கத்திற்கு நெருக்கமானவர் என்பது மட்டுமல்ல் அவர் வன்னிய சாதியைச் சேர்ந்தவர் என்பதும் முக்கிய காரணம். இறுதியாகப் பார்த்தால், தமிழ் பாதுகாப்பு என்பது, இப்படிப்பட்ட பிற்போக்கு ஆண்டைகளைப் பாதுகாப்பதுதானா?

_________________________________________________

–          புதிய ஜனநாயகம், 2005ஆம் ஆண்டு