privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்ஈழம்கனடாவில் கரையும் ஈழத்தமிழ் வாழ்க்கை !!

கனடாவில் கரையும் ஈழத்தமிழ் வாழ்க்கை !!

-

 

ஈழத்தின் நினைவுகள்: பாகம் – 12

சமகால கனடாவும் அதன் வரலாற்றுப் பின்னணியும்!

 

O Canada! Our home and native land! கனடாவின் மண்ணின் மைந்தர்கள் இந்த மண்ணை எங்களின் வீடு மட்டுமல்ல பூர்வீகமும் கூட என்று தேசியகீதத்தில் பாடுமளவிற்கு அனுமதித்திருக்கிறார்கள். கனடா ஒரு வந்தேறு குடிகளின் நாடு. அவலப்பட்டு வரும் அகதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த இந்த மண்ணின் சொந்தக்காரர்களுக்கு நன்றியை சொல்லிக்கொண்டு தொடர்கிறேன்.

முதலில் பிரான்சிலிருந்தும் பிறகு பிரித்தானியாவிலிருந்தும் வந்தவர்கள் கனடாவை தேசியகீதத்தில் தங்கள் பூர்வீக பூமி என்று அழைத்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் என் புரிதல். கால ஓட்டத்தில் உலகின் எல்லா மூலைகளிலிருந்தும் குடிபெயர்ந்தோ அல்லது அகதியாகவோ வருபவர்கள் எல்லோரும் அவர்களை தொடர்ந்து அதையே பாடிக்கொண்டிருக்கிறோம். கனடாவுக்கு உண்மையாகவும் இருக்கிறோம். பிடிக்கிறதோ, பிடிக்கவில்லையோ இரண்டு விடயங்கள் கனடியர்களை அவ்வப்போது சில சமயங்களில் எதையாவது முணு, முணுக்கவைக்கிறது.

அமெரிக்காவுக்கு அருகாமையில் தெற்கு எல்லையில் பெருநிலப்பரப்போடும் தனக்குரிய மரபுகளோடும் யாருடைய வம்புச்சண்டைக்கும் போகாமல் இருக்க கனடா முடிந்தவரை முயற்சி செய்கிறது. அமெரிக்காவின் அருகாமையில் இருந்துகொண்டு அதை தக்கவைத்துக்கொள்வது எவ்வளவு சிரமம் என்று நான் நினைப்பதுண்டு. இரண்டாவது கனடாவின் Constitutional Monarchy.  இன்னமும் இங்கிலாந்தின் ராணிதான் கனடாவுக்கும் ராணி. முந்தையது மாற்ற முடியாது.  முணுமுணுக்க மட்டுமே முடியும். பிந்தயதை மாற்ற வேண்டுமென்று ஒரு சாரார் வாதிடுகிறார்கள்.

கனடாவுக்குள் நுழையுமுன் வரலாற்றின் கரையோரம் கொஞ்சம் கால் நனைக்கலாம். கனடாவுக்கென்று ஓர் சுவாரசியமான வரலாறு உண்டு. ஐரோப்பியர்கள் கிழக்கு இந்தியாவை கண்டுபிடிக்கிறோம் என்று அதிர்ஷடவசமாக தடுமாறி பகுதி, பகுதியாக   கனடாவையும் கண்டுபிடித்தார்கள். இந்த மண்ணில் ஆரம்பத்தில் ஐரோப்பாவிலிருந்து வந்தவர்கள் இங்கிருந்த பூர்வீக குடிகளோடு வியாபாரத் தொடர்புகளை ஏற்படுத்தி இங்கேயே தங்கியும் விட்டார்கள். இந்த நாட்டை சீரும்  சிறப்புமாய் கட்டி எழுப்பியவர்களும் அவர்கள்தான். அதில் எனக்கு மாற்றுக் கருத்தில்லை.

இந்த நாட்டின் மூத்த குடிகள் கனடாவை கட்டியெழுப்புவதில் அதிகம் பங்களிக்கவில்லை என்ற ஓர் கூற்றும் முன் வைக்கப்படுகிறது. கனடாவின் மூத்த குடிகளை (Aboriginal Peoples) மூன்று வகையாக அடையாளப்படுத்தியிருக்கிறார்கள். First Nations (Indians), Inuits அல்லது Metis அல்லாதவர்கள். இவர்களில் (First Nations) பாதிப்பேர் அவர்களுக்கென்று ஒதுக்கப்பட்ட நிலங்களில் (Reserve Land) தான் வாழ்வதாக சொல்லப்படுகிறது. Inuits, இவர்களின் முன்னோர்களின் பூர்வீகம் Arctic ஆதலால் இன்றும் சிறு, சிறு குழுக்களாக அங்கேதான் வாழ்கிறார்கள். பூர்வீக குடிகள் அல்லாத ஐரோப்பியர்களை மணந்தவர்கள் Metis என்றும் அழைக்கப்படுகிறார்கள். இவர்கள் எல்லோரினதும்  பூர்வீக பூமி இதுவென்றாலும் அதற்குரிய சலுகைகளைப் பெறுவதற்கு தங்களை கனடிய அரசிடம் பதிந்து வைத்துக் கொள்ளவேண்டும் என்பது அரசியல் நடைமுறை.

சில சமயங்களில் ஒரே நாட்டிற்குள்ளிருக்கும் இன, மத, மொழி, பண்பாடு, கலாச்சாரம் இன்னும் என்னென்னெல்லாம் உண்டோ அதன் முரண்பாடுகளிலேயே மக்கள் தங்களுக்குள் பிளவுபட்டுப் போயிருப்பார்கள். பாரபட்சமாக நடத்தப்படுவார்கள். ஒருவேளை அப்படியேதும் இல்லையென்றாலும் தங்கள் பங்கிற்கு அரசியல்வாதிகள் எதையாவது கிளப்பிவிடுவார்கள். ஒத்துவராது என்றால் சிலசமயங்களில் அரசியல்வாதிகளை ஓரங்கட்டிவிட்டு ஜனநாயக வழிகளில் முயல்வதே மேல் என்பது என் கருத்து.

கனடாவிலும் Quebec மாகாணத்தின் மொழி, கலாச்சாரம் முதல் அனைத்து உரிமைகளுக்கும் சட்டரீதியான சமவுரிமை வழங்கப்பட்டிருந்தாலும் தன் பிரெஞ்ச் தனித் தன்மைகளோடு வாழ, பிரிந்துபோக இரண்டுமுறை ஜனநாயக வழியில் (Referendum) முயன்று வெற்றியளிக்காமல் போனாலும் இன்னோர் சந்தர்ப்பத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றுதான் தோன்றுகிறது. ஈழத்தில் எங்கள் அடிப்படை உரிமைகளுக்கு மட்டுமல்ல உயிருக்கு கூட உத்தரவாதம் இல்லாத எங்களுக்கு இப்படியோர் ஜனநாயக ரீதியான ஓர் சந்தர்ப்பத்தை கொடுக்க மறுக்கும் உள்ளூர், உலக அரசியல் சதுரங்க விளையாட்டுகள் ஊமைப்படங்கள். உலகத்தமிழரெல்லாம் அதன் பார்வையாளர்கள்.

கனடாவில் நீண்ட காலமாக வெவ்வேறு நாடுகளிலிருந்து வந்த பல்லின, பல்கலாச்சார மக்கள் (Multiculturalism) அடுத்தவர் நம்பிக்கைக்கும் உரிமைகளுக்கும் மதிப்பு கொடுத்து இங்கே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். தங்கள் தனித்தன்மைகளை பேணிக் காப்பதோடு, இந்த நாட்டின் ஆங்கில, பிரெஞ்சு மொழி, கலாச்சாரம், பொருளியல் வாழ்க்கை முறை என்பவற்றிற்க்கு தங்களை பழக்கப்படுத்தி தேசிய நீரோட்டத்தில் கலந்து போகிறார்கள் (Assimilation). வாழச்சிறந்த நாடுகள் என்ற பட்டியலில் கனடா தனக்கென்றோர் இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது. மூன்றாம் உலக ஜனநாயகம் போலல்லாது அந்த தலைப்பை தக்க வைத்துக்கொள்ளும் அல்லது தீர்மானிக்கும் காரணிகளில் ஒன்றான தனி மனித உரிமைகளுக்கு அதிகம் மதிப்புக் கொடுப்பதில் கனடாவை யாரும் குறை கூற முடியாது.

ஆனாலும் கனடாவின் வரலாற்றுப் பக்கங்களை பின்னோக்கிப் புரட்டிப் பார்த்தால் கழிசடை அரசியல் கொஞ்சம் முகம் சுழிக்க வைக்கும். பூர்வீக குடிகளுக்கும், 1800 களில் Canadian Railway யை கட்டி முடிக்க குறைவான கூலியில்  கொண்டு வரப்பட்ட சீன தேசத்தவர்களுக்கும் இந்த அரசு செய்த தவறுகள் “White-Collar Crime” என்று தான் வர்ணிக்கப்பட்டிருக்கிறது. மேலைத் தேசங்களின் வரலாறு, அரசியல், பொருளாதார கொள்கைகளை கொஞ்சம் விளங்கிக் கொண்டால் தான் புரியும், எங்களைப்போன்ற அகதிகள் எல்லாம் இந்நாடுகளில் வேண்டப்படாத விருந்தாளிகள் என்பது. அதுவும் கடந்த வருடம் மே மாதத்திற்குப் பிறகு அதை எங்கள் மனங்களில் இன்னும் ஆழமாக பதிந்து போக வைத்து விட்டார்கள்.

கனடாவின் சமூகவாழ்க்கை – ஒரு பறவைப் பார்வை

கனடாவுக்கு அகதியாகவோ அல்லது குடிபெயர்ந்தோ வருவதென்பது உரிமையல்ல. அது மனிதாபிமானத்துடன் கூடிய ஓர் சலுகை. இங்கு வருபவர்களின் இன, மத, கலாச்சார முரண்பாட்டுக் கோலங்களை தன்னக்கத்தே உள்வாங்கி அதற்குரிய மதிப்பையும் மரியாதையையும் கொடுப்பது மட்டுமன்றி அவர்களை கெளரவ மனிதர்களாக வாழவும் வழிவகைகளை செய்துகொடுக்கிறது கனடா. நிறைகளும் குறைகளும் அதனதன் அளவுகளில் பரிமாணங்களில் இருந்தாலும் (pros and cons), கனடாவின் ஒவ்வொரு சமூக, பொருளாதார, அரசியல் கொள்கைகளும் சிறப்பாகத்தான் கட்டி எழுப்பப்பட்டிருக்கிறது.

சமூக நலத்திட்டங்களில் ஒன்றான Social Assistance என்பது புதிதாக வருபவர்களுக்கும் அல்லது வேலையை இழந்தவர்களுக்கும் (Unemployment Insurance தவிர்த்த) குறைந்த பட்ச உணவு, உடை, உறைவிடம் என்பவற்றுக்கான செலவுகளை வழங்குகிறது. வேலை பறிபோனால் அதன் தாக்கங்கள் தனிமனிதனையும், குடும்பத்தையும், சமூகத்தையும் பாதிக்காமல் விடாது. அது மனித இயல்பு. துன்பியல் வாழ்வு. ஆனால், வேலை போய்விட்டதே இனி ஒருவேளை உணவுக்கு என்ன செய்வது, பிள்ளை குட்டிகளோடு வீதியில் உறங்கமுடியுமா என்ற கவலைகள் எல்லாம் இங்கு வாழ்பவர்களுக்கு வரக்கூடாது என்று அரசு கவனமாகவே இருக்கிறது.

இதையெல்லாம் கவனிக்காமல் விட்டால் அது தனிமனித வாழ்வில், சமூகத்தின் அத்தனை நிலைகளிலும் அதன் பன்முகத்தாக்கத்தை உண்டுபண்ணுமே; பஞ்சம், திருட்டு, சமூகவாழ்வின் சீர்கேடுகள், கொள்ளை, எல்லாவற்றுக்கும் மேல் குடும்ப உறவுகள் சீரழியும் என்பது வரை. குடும்ப உறவுகள் சீரழிந்தால் குழந்தைகளின் மனநலம் மற்றும் எதிர்காலம்  பாதிக்க கூடாது என்ற அக்கறையோடு திட்டங்கள் வகுக்கப்பட்டிருகின்றன. அரச சேவைகள் ஆயிரந்தான் செலவு செய்தாலும் இங்கேயும் வருமானம் குறைந்த மக்கள் வாழும் பகுதிகள், அதன் விளைவான சமூகப் பிரச்சனைகள், வீடில்லாதவர்கள் பிரச்சனை (Homeless people) என்பதெல்லாம் அரசுக்கு தலையிடியாக இல்லாமலும் இல்லை.

என்னைப்பொறுத்த வரை இந்த வீடில்லாதவர்கள் என்போர் அவர்கள், மன நலம் பாதிக்கப்பட்டவர்கள் தவிர்த்த, தாங்களாக தெரிந்தெடுத்த வாழ்க்கை அது. அரசு எவ்வளவுதான் ஆராய்ந்து அதற்குரிய திட்டங்களை கொண்டு வந்தாலும் அவர்களில் பலர் மறுபடியும் வீதியில் வந்து முடிகிறார்கள். ஆனாலும் அவர்களுக்கு shelters என்று வைத்து உணவு, உறங்கும் வசதிகள் எல்லாம் இலவசமாக செய்து கொடுக்கிறார்கள். பொதுமக்கள் பலபேர் அங்கே சேவையாக (Volunteer) பணியாற்றுகிறார்கள். இங்கே volunteer work என்பது மிகவும் மதிக்கப்படும் ஓர் விடயம். அதாவது, நான் சொல்லவருவது என்னவென்றால் அரசு, மக்கள் தாங்கள் வாழும் சமூகத்தின் மீது, சகமனிதர்கள் மீது அக்கறையோடும் விழிப்புணர்வோடும்  இருக்கிறார்கள் என்பது தான்.

எங்களைப்போல் தஞ்சம் கோரி வருபவர்களுக்கு வாழ்வின் அடுத்த படியில் காலடிஎடுத்து வைக்க உண்டான எத்தனையோ திட்டங்களை அமுல்படுத்தியிருக்கிரார்கள். புதிதாக வருபவர் தனக்குப் பிடித்த ஓர் வேலையை, தொழிலை, அல்லது படிப்பை தொடருவதற்கான வசதிகள், கடன்கள் வழங்கப்படுகின்றன. அதற்கான வழிகாட்டிகள் எத்தனையோ பேரை அரசு பணிக்கமர்த்தியிருக்கிறது. கனடாவில் வாழும் ஒருவர் சொந்த வாழ்வில் முன்னேற முடியவில்லை என்றால் அது நிச்சயமாக நம்பும்படியாக இருக்காது. முன்னேறுவதற்கான சந்தர்ப்பங்கள் இங்கே நிறையவே இருக்கின்றன. கல்லில் நார் உரிக்கும் கடும் முயற்சி மட்டுமே அதன் மூலதனம்.

கல்லூரிக்கோ அல்லது பல்கலைக்கழகம் சென்று மேல் படிப்பை தொடர கடனுதவிகள் வழங்கப்படும். எனக்கு மிகவும் பிடித்தது இதுதான். வாங்கிய கடன் வட்டியோடு குட்டிபோடும் என்பதால் மாணவர்கள் பொறுப்போடு படிப்பார்கள். பெற்றோருக்கும் அது பொருளாதார சுமையாக இருக்காது. காரணம், வாங்கும் கடனுக்கும் வட்டிக்கும் அவரவரே (மாணவரே) பொறுப்பு. வேலைக்கு செல்பவராயின் அவரின் வருமானத்திற்கேற்றவாறு குழந்தை பராமரிப்பு வசதிகள் வழங்கப்படும். ஒருவர் வீட்டில் இருந்து குழந்தையை பராமரிப்பதிலும் படித்து வேலைக்கு போனால் அரசுக்கு வரி வருமானம் வரும் அல்லவா. வரி செலுத்தும் போது வலித்தாலும், அதன் பலன்களை கல்வி, சுகாதாரம் என்று உலகின் எத்தனையோ பேருக்கு கிடைக்காத சர்வதேச தராதரத்துடனான சலுகைகளை நாங்கள் பெற்றுக்கொள்ளும் போது மூன்றாம் உலக ஜனநாயகத்தில் இருந்து தப்பி வந்த ஓர் visible minority யின்  மனம் நிறைந்து போகிறது.

இந்த நாட்டின் பிரதம மந்திரிக்கு கிடைக்கும் அத்தனை மருத்துவ வசதிகளும் ஓர் சாதாரண கடைநிலை குடிமகனுக்கும் கிடைக்கும் படி செலவின்றி, பாரபட்சமின்றி இருக்கிறது. கனடா வந்தாரை அவரவர்க்குரிய தனித்தன்மைகளோடு, திறமைகளோடு, முயற்சிகளோடு சுகதேகிகளாக வாழவைக்கிறது. நாங்களும் வாழ்ந்து எங்களுக்கு புதுவாழ்வு தந்த இந்த நாட்டையும் வாழவைக்கவேண்டும் என்பது தான் என் கருத்து.

கனடாவில் ஈழத்தமிழர்கள் – வந்த விதமும், இணைந்த நிலையும்!

கனடாவில் ஈழத் தமிழர்களில் பெரும்பான்மையானோர் அகதிகளாய் தஞ்சமடைந்தவர்கள்தான். ஆசியாவிற்கு பிறகு தமிழர்கள் அதிகமாக வாழுவது இங்குதான். மேல்தட்டு இந்தியர்களைப் போல் நாங்கள் படித்துவிட்டு வேலைதேடி குடிவந்தவர்களோ அல்லது மில்லியன் டாலர் வியாபாரத்தை முதலீடு செய்தவர்களோ கிடையாது. ஆனாலும் பூஜ்ஜியத்திலிருந்து தொடங்கி இன்று கல்வி, வியாபாரம், பொருளாதாரம் என்று மிக குறுகிய காலத்திலேயே ஆண்கள், பெண்கள் என இரு சாராரும் மற்றவர்கள் வியக்கும் படி அதன் எல்லைகளைத் தொட்டிருக்கிறோம். அதற்கான சந்தர்ப்பங்கள் கனடாவில் பாரபட்சமின்றி எல்லோருக்கும் பொதுவாயிருப்பதால் அது சாத்தியமும் ஆயிற்று.

முயற்சி திருவினையாக்கும் என்பதை என் அனுபவத்தினூடே உணர்ந்து கொண்டது இங்கேதான். கனடாவின் வாக்கு வங்கியில் எங்கள் வாக்குகளின் இருப்பு லட்சத்திற்கு மேல் என்பதால் அரசியலிலும் கொஞ்சம் கொஞ்சமாக இப்போது தான் உள்வாங்கப்படுகிறோம். கனடாவின் வளங்கள், பொருளாதாரம் பற்றி தெரிய வேண்டுமானால் அண்மையில் கனடா மற்றும் இந்திய பிரதமர்கள் சந்தித்து சிரித்துபேசி போட்டுக்கொண்ட ஒப்பந்தத்தை நினைவுகூர்ந்து பாருங்கள் புரியும்.

செல்வமும், செழுமையும் புதைந்தும் ஒளிந்தும் கிடக்கும் இந்த பரந்த பூமியில் தான் தஞ்சமடைவேன் என்று கங்கணம் கட்டிக்கொண்டு இங்கே வரவில்லை. தமிழ்நாட்டில் அகதி வாழ்வின் கசப்பான அனுபவங்கள், கொழும்பில் எந்த நேரமும் ஏதோ ஓர் இனம்புரியாத பயம், உயிரை பிச்சையாய் கேட்கும் தலைவிதி இவற்றிலிருந்து தப்பிக் கொள்ளவும், தற்காத்துக் கொள்ளவும் முயன்று எனக்கு கிட்டியது கனடா என்ற நாடு. “சிங்கள” என்ற அடைமொழியோடு கூடிய எல்லாமே என்னை, என் உயிரை வதைத்தது. இதில் நல்லது, கெட்டது எது என்று பிரித்துப்பார்த்து பயப்படுமளவிற்கு ஓர் ஈழத்தமிழ் என்ற வகையில் எனக்கு தெரிவுகள் எப்போதுமே இருந்ததில்லை.

தலைநகரில் தமிழர் என்றாலே வெளியில் தலைகாட்டப் பயம். கைது, சித்திரவதை, தமிழனா காவல் நிலையத்தில் உன் வரவை பதிந்துகொள் என்ற நடைமுறைகளும் பீதியை கிளப்பின. பாரதியார் பாணியில் சொல்வதானால், ஈழத்தமிழன் அஞ்சாத பொருள் இல்லை இலங்கையிலே. அது அப்படியே எங்களுக்குப் பொருந்துவது போல் கொழும்பில் அன்றும் சரி இன்றும் சரி தமிழர்கள் ஏதோ Phobia வால் பீடிக்கப்பட்டவர்களாய்தான் உலாவந்து கொண்டிருக்கிறார்கள். அதற்காக “தெனாலி” திரைப்படத்தில் எங்களை பரிதாபத்திற்குரிய கோமாளிகளைப்போல் போல் உருவகப்படுத்தியது, கேலிபேசியது எல்லாம் கசப்பானதே. பசியை கூட பிணி என்ற உவமையால் அதன் கொடுமையை உணரவைக்கலாம். சிங்களப்பேரினவாதம் எங்கள் மனங்களில் அதன் வன்கொடுமைகள் மூலம் உண்டாக்கிய வலிகள், வடுக்கள், தீராப்பயம் அனுபவங்களால் மட்டுமே உணர முடியும். அதை எழுத்துக்களில் விவரிக்க முடியாது.

கடல் கடந்து பரதேசம் வந்த உடனேயே பயம் மறைந்து சந்தோசம் ஓடிவந்து ஒட்டிக் கொள்ளவில்லை. ஆரம்பத்தில் புதிதாய் எதுவுமே புரியாத ஓர் தேசமாய் தோன்றியது. இலங்கை ராணுவம், மனித உரிமை மீறல்கள் பற்றிய பயம் போலில்லாமல் புதிதாய் ஓர் இனம்புரியாத மிரட்சி மனமெங்கும் விரவிக் கிடந்தது; மொழி, கல்வி, வேலை, கலாச்சாரம், காலநிலை முதல் மனிதர்கள் வரை. இலங்கையிலிருந்து வந்ததாலோ என்னவோ கருத்து சுதந்திரம் (Freedom of Speech) என்பதின் யாதார்த்தபூர்வமான அர்த்தத்தை புரிந்துகொள்ளவே சில காலம் பிடித்தது.

பயமுறுத்தும் ஆங்கிலத்தை கற்ற கதை!

கனடாவில் ஆங்கிலம், பிரெஞ்சு இரண்டுமே தேசிய மொழியாக அங்கீகரிக்கப்பட்ட மொழிகள். அந்நாட்களில் ஆங்கிலத்தோடு எனக்கு ஏதோ ஒரு பயம் கலந்த சிறிய பரிச்சயம் மட்டுமே இருந்தது. ஆனாலும் அதுவே தொடர்பாடலுக்கான என் ஊடகமானது. ஆரம்பத்தில் ஆங்கிலத்தை கண்டு நான் மிரண்டதுதான் அதிகம். பொது இடங்களுக்குப் போனாலும் யாராவது ஆங்கிலத்தில் ஏதாவது கேட்டு தொலைத்து விடுவார்களோ

என்ற பயம் மூளையின் முடுக்கில் கூட மண்டிக் கிடந்தது. கனடாவில் என் சுய முன்னேற்றத்திற்கு பிள்ளையார் சுழி போட்டது ஆங்கிலம்தான். ஆங்கிலத்தை நான் ஓர் வெறியோடுதான் படித்தேன். அதற்கு வேறோர் காரணமும் உண்டு. புலத்தில் ஆங்கிலம் தெரியாவிட்டால் எம்மவர்களில் ஒருசாரார் அடுத்தவரை இளக்காரமாய் பார்த்த, பார்க்கும் சமூக அவலம் தான் அது.

ஈழத்தில் நான் என் சொந்த ஊரில் கல்வி கற்ற நாட்களில் யாழ்ப்பாணம் நகர்ப்புறத்தில் இருக்கும் பாடசாலைகளில்தான் ஆங்கில வழிக்கல்வி கற்கும் வசதிகள் இருந்தன. அது அந்த காலங்களில் எனக்கு கொஞ்சம் பொறாமையாகவும் எரிச்சலாகவும் கூட இருந்தது.

இங்கே குடியேறியோ அல்லது தஞ்சமடைந்தோ வருபவர்கள் இந்த நாட்டின் பொருளாதாரத்திற்கு ஓர் பாரமாய் அல்லது சுமையாய் இருக்கக் கூடாது என்பதில் கவனமாயிருந்து கனடிய அரசு புதிதாய் வருபவர்களுக்கு மொழியை அரச செலவில் கற்றுத் தருகிறார்கள். நாங்கள் மொழியை கற்றுக் கொண்டு மேலும் படிப்பிலோ அல்லது வேலையிலோ முன்னேறி இந்நாட்டிற்கு எங்களின் பங்களிப்பை வரியாகவும், வேறு வழிகளிலும் செலுத்திக் கொண்டிருக்கிறோம்.

ஆங்கிலத்தில் எனக்கு அதிகம் பிடித்த வார்த்தை “determination”. அது மட்டும் இருந்தால் ஆங்கிலம் கற்பதும் ஒன்றும் கடினமல்ல என்பது என் சொந்த அனுபவம். ஆங்கிலத்தை சரியான உச்சரிப்புகளோடு பேசவேண்டுமென்ற அவாவோடு நான் குழந்தைகளின் Cartoon மற்றும் செய்திகளிலிருந்துதான் தொடங்கினேன். அதில்தான் நிறுத்தி நிதானித்து அழகாக பேசுகிறார்கள். ஆனாலும், புலம் பெயர் வாழ்வில், பொருளுலகில் மனிதம் தொலைத்த மானுட வாழ்வு ஒளியின் வேகத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறது என்ற பிரம்மையை என்னிலிருந்து உதறமுடியவில்லை.

இந்த அக்கப்போரில் எனக்கு ஏதாவது தெரியவில்லை என்றால் அதற்காக யாரும் எனக்காக காத்திருந்து என்னை இழுத்துக்கொண்டு ஓடுவார்கள் என்ற குழந்தைத்தனமான எதிர்பார்ப்புகளை தவிர்த்துவிட்டு, எல்லோருக்கும் சமமாய் நானும் ஓடவேண்டுமானால் என்னை நான் தயார்ப்படுத்த வேண்டும். இப்படித்தான் கனடாவில் ஓட ஆரம்பித்தேன். ஆரம்பத்தில் ஆங்கிலத்தோடு மல்லுக்கட்டி, அப்படியே படிப்படியாக படிப்புவரை சென்று, அகதியாய் அடிமேல் அடிவாங்கினேன். அழுவதற்கு கூட நேரமில்லாமல் அடித்துப் பிடித்து படித்து முடித்து அந்நியதேசத்தில் ஓர் கெளரவமான  வேலைசெய்து வாழ்க்கைப் பாடத்தை கற்றுக்கொண்டே இன்றுவரை ஓடிக்கொண்டிருக்கிறேன்.

உத்தியோகம் புருஷலட்சணம் என்ற பழமைவாதம் ஈழத்திலே குழிதோண்டிப் புதைக்கப்படுமளவிற்கு பெண்கள் படிப்பில், வேலைக்குப்போவதில் அக்கறை காட்டவில்லை என்பதுதான் என் கருத்து. போர்பூமியில் ஏதோ இயன்றவரை படித்தார்கள். தலைநகர் வாழ்வின் சம்பிரதாயம் மீறாமல் அங்கே வாழ்ந்தவர்கள் ஆங்கில வழிக்கல்வி கற்றார்கள். இந்த வாழையடி வாழை வழமைகளை வேரோடு தறித்தது புலத்தின் பொருளாதார வாழ்க்கை முறை. கனடாவில் தமிழ்ப் பெண்களின் மன உறுதியையும் முயற்சிகளையும் நான் கண்டு வியப்படைந்திருக்கிறேன்.

ஈழத்திலும் சரி, புலத்திலும் சரி குழந்தைகள், கணவன், உறவுகள் என்பவற்றுக்கு நடுவே தங்களையும் வளர்த்து முன்னேறும் அளவிற்கு ஈழப்போர் பெண்களை புடம்போட்டு புதியவர்களாக்கியிருக்கிறது. இது நிஜம். ஈழத்தவர்களின் யதார்த்த வாழ்க்கை. குறைந்தபட்ச கூலியை கொடுக்கும் வேலைகள். படித்து கொஞ்சம் கெளரவமான நான்கிலக்க ஊதியத்துடனான வேலை. புலத்தில் இதில் எது வேண்டுமென்று தீர்மானிக்க வேண்டியது அவரவர் பொறுப்பு அல்லது முயற்சி. தனி ஆளாய் அல்லது மாணவராய் இருக்கும் பட்சத்தில் இதில் கஷ்டங்கள் குறைவே. ஆனாலும், இங்கே படிப்பை தொடர்ந்து கொண்டே ஈழத்திலோ அல்லது தமிழ்நாட்டிலோ இருக்கும் குடும்பத்தின் பொருளாதார சுமையையும் தாங்கிக்கொள்ளும் ஆண்கள், பெண்கள் பலர் இங்கே இருக்கிறார்கள்.

குடும்பத்தையும் கட்டிக்காக்க வேலை ஒருபுறம், பகுதிநேர படிப்பு மறுபுறம் என்ற முன்னேற்றத்திற்கான முயற்சிகள் அதன் அழுத்தங்கள் எங்களுக்கு புதிது. புலத்தில் ஈழத் தமிழர்கள் என்னென்ன சவால்களை எல்லாம் தாண்டி ஓடிக் கொண்டிருக்கிறார்கள் என்று சொல்ல ஓர் தனிப்பதிவே போடவேண்டும். ஆனாலும் சுருக்கமாகவேனும் அதை சொல்லாமல் விடமுடியாது.

கடின உழைப்பில் காலம் தள்ளும் ஈழத்து அகதிகள்

சாதாரண வேலை,General Labor, (தமிழாக்கம் சரியா தெரியவில்லை) செய்பவர்கள் இங்கே இரண்டு, மூன்று வேலை செய்து மனைவி, குழந்தைகள் குடும்பம் வீட்டிலிருக்க இவர்களில் சிலர் தங்கள் வாழ்க்கையை வேலை தளத்திலேயே வாழ்பவர்களும் உண்டு. அவர்கள் மத்தியில் பொதுவான ஓர் சொல்வழக்கு, “நான் double அடிக்கிறன்”. அதன் அர்த்தம் ஒன்றில் பதினாறு மணித்தியாலங்கள் மாடாய் உழைக்கிறார்கள் அல்லது இரண்டு வேலை செய்கிறார்கள் என்பது தான். கணவன் மனைவி இருவரும் வேலை பார்ப்பவர்களாயிருந்தால் ஒருவரையொருவர் சந்திக்காமலேயே குடும்பம் என்ற பெயரில் வாழ்க்கையை ஓட்டுபவர்களும் இருக்கிறார்கள்.

யார் எந்த வேலை செய்தாலும் அடிப்படை தேவைகள் இந்த நாட்டின் வாழ்க்கைத் தரத்திற்கேற்ப நிர்ணயிக்கப்படவேண்டுமென்று அதற்கான கூலியும் சட்டத்தால் வரையறுக்கப்பட்டுள்ளது. ஒருவரின் வருமானத்திற்கேற்றவாறு தனக்கென்றோர் வீட்டையோ, சொத்தையோ வாங்குமளவிற்கு பொருளாதார உரிமைகள் பாதுகாக்கப்பட்டிருக்கின்றன. எல்லலாமே சரிதான். ஆனால் அன்றாட வாழ்விலும், வேலைவாய்ப்பு என்று தேடும் சந்தர்ப்பங்களிலும் என் சிந்தனையில் அடிக்கடி இடறும் ஓர் வார்த்தை “Visible Minorities”. இவர்கள் யாரென்று கேட்டால், பூர்வீக குடிகள் தவிர்ந்த இனத்தாலோ அல்லது நிறத்தாலோ வெள்ளையர்கள் அல்லாதவர்கள். (Visible Minorities, “Persons, other than Aboriginal peoples, who are non-caucasian in race or non-white in colour” -Federal Employment Equity Act). Visible Minority என்று சொல்லப்படும் சிறுபான்மை சமூகங்களில் நாங்களும் அடக்கம்.

எங்களுக்கும் வேலைவாய்ப்புகளில் சமமாக சந்தர்ப்பங்கள் அளிக்கப்படவேண்டுமென்று சட்டம் போட்டது சந்தோசம்தான். ஆனால் சட்டத்தின் அளவுகோலும் சமூகத்தின் அளவுகோலும் எப்போதுமே ஒன்றாய், சமமாய் இருப்பதில்லையே. வேலை வாய்ப்புகளில், வேலைத்தளங்களில், அன்றாடவாழ்வில், ஊடகங்களில் இந்த சிறுபான்மை சமூகங்கள் (Visible Minority) என்ற பதம் அதன் அரசியல் அர்த்தங்களை பிரதிபலிக்காமல் இல்லை. அந்த வார்த்தை எனக்கு கனடாவில் என் உரிமை பற்றிய உறுதியை அளித்தாலும் அதன் அரசியல் பரிமாணம் அந்த உறுதியை சில சமயங்களில் சோதித்தும் பார்க்கிறது. இதை பலபேரின் அனுபவங்களை கேட்டபின்னே பதிய வேண்டுமென்று தோன்றியது.

இப்படி அரசியல், பொருளாதார, சமூக நிலைகளிலுள்ள சவால்களை எதிர்கொண்டுதான் வாழ்க்கையையும் ஈழத்தில் எங்கள் உரிமைப்போருக்கான அங்கீகாரத்தை பெறுவதையும் முன்னெடுத்து செல்லவேண்டியுள்ளது.

பண்பாட்டு அதிர்ச்சியும், பாதை மாறிய ஈழத்து இளையோரும்!

கலாச்சாரம் என்று பார்த்தால் ஈழத்திலிருந்து இங்கே வருபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை Culture Shock தாக்காமல் இருந்ததில்லை. கனடாவில் தனிமனித உரிமைகளுக்கும், விருப்பு வெறுப்புகளுக்கும் அதிக மதிப்பு கொடுப்பதனால் அவர்களின் வாழ்க்கை முறையும் கூட சுதந்திரமாகவே, இன்னும் சொன்னால் கொஞ்சம் காட்டாற்று வெள்ளம் போன்றது. அது மொழி, நடை, உடை, மரபுகள், கல்வி என்று வாழ்க்கையின் எல்லா பக்கங்களிலும் கிளைபரப்பி ஓடிக்கொண்டிருக்கிறது. அதன் கட்டற்ற வேகத்தோடும் பண்புகளோடும் ஒட்டிக்கொண்டு ஓடவும் முடியாமல், வெட்டிக்கொண்டு வாழவும் முடியாமல் தத்தளிக்கும் போது ஈழத்தமிழர்கள் (பெற்றோரும் குழந்தைகளும்) தொடக்கத்தில் திணறத்தான் செய்வார்கள்.

புலத்தில் இப்படியான சவால்கள் எல்லோருக்கும் பொதுவானதுதான். ஆனால் ஒவ்வொருவரும் அவற்றை சமாளித்து தன் ஆளுமையை வளர்த்துக் கொள்வதில்தான் வேறுபடுகிறார்கள். மனிதனுக்கு எந்த கலாச்சாரம் அல்லது மதம் எதைக் கற்றுக் கொடுத்தாலும் சீரிய சிந்தனை, தனிமனித ஒழுக்கம் என்பனதான் ஓர் மனிதனை தலைநிமிர்ந்து வாழவைக்கும் என்பது என் கருத்து. சீரான சிந்தனை, தனிமனித ஒழுக்கம் என்பதெல்லாம் தேடல், கற்றுக்கொள்ளல் மற்றும் அனுபவம் மூலம்தான் சாத்தியமாகிறது. ஆனால் மாறாக மன உளைச்சலுக்கு ஆளாகி புலத்து வாழ்வின் அழுத்தங்களுக்கு ஆளாகும் போது சிலபேர் தவறான வடிகால்களை தேடிக் கொள்கிறார்கள்.

ஈழத்தமிழர்கள் குறிப்பாக இளைய சமுதாயம் போர்பூமியிலிருந்து கசக்கி எறியப்பட்டவர்கள் ஆதலால் சரியான நெறிப்படுத்தலும் வழிகாட்டலும் இன்றி ஆரம்பகாலங்களில் கொஞ்சமல்ல நிறையவே வன்முறைகளில் இளைப்பாறி மனச்சலனங்களோடு குழுச்சண்டைகளில் ஈடுபட்டார்கள். நானும் ஓர் முன்முடிவோடு யோசித்ததால் ஆரம்பத்தில் அவர்கள் மேல் எனக்கு கோபமே விஞ்சியிருந்தது. அதைப்பற்றி கொஞ்சம் ஆழமாக யோசிக்கையில் எப்படி தங்களை சூழ உள்ளவர்களிடமிருந்து தனிமைப்படுத்தப்பட்டு, தங்களை அறியாமலேயே வன்முறைக்குள் நழுவிப்போனார்கள் என்று ஓரளவுக்கு புரிந்தது.

இந்த நாட்டில் கல்விக் கூடங்களில் சகமாணவர்கள் அவர்களுக்குரிய comfort zone என்னவோ, அது பெற்றோர், வீடு முதல் சமூகம் வரை அவர்களின் செளகர்யங்கள், உரிமைகள் பாதுகாக்கப்பட்டிருக்கின்றன. எங்கள் குழந்தைகள் போரில் பெற்றோரை, இரத்த உறவுகளை இழந்தவர்கள். உறவினர்களின் உதவியில், தயவில் புலத்தில் வாழ்பவர்கள். இல்லையென்றால், கலாச்சார முரண்பாடுகள், அன்றாடவாழ்வின் அழுத்தங்கள் காரணமாக மனதின் சமநிலையை தடுமாறவிட்டு வீட்டோடு, பெற்றோரோடு முரண்பட்டு போவார்கள். பெற்றோர்களால் தமிழ் கலாச்சாரம் என்ற பெயரில் விலக்கிவைக்கப்பட்ட (taboo) சில நியாயமான விருப்பங்களுக்கு நட்பு வட்டத்தில் மட்டுமே அதற்குரிய அங்கீகாரம் கிட்டியது. ஒருசிலரின் முரண்பாடுகளின் உடன்பாடுகளே அவர்களை ஓர் குழுவாய் உருவாக்கியது.

இந்த குழுக்கள் என்பது தமிழ் இளையோர் சிலர் தங்களுக்குள் ஏற்பட்ட கருத்து மோதல்களினாலும் கூட உருவாக்கப்படதுதான். ஆனால், சில அரசியல் அநாமதேயங்கள் அதற்கு அரசியல் சாயம் பூசி அதில் குளிர்காய்ந்துகொண்டதுகள். இப்படியாக இவர்களின் வன்முறை சமன்பாடுகளில் இவர்களோடு எந்த சம்பந்தமும் இல்லாதவர்களின் உயிர்கள் பலிவாங்கப்பட்டபோது, தங்கள் சொந்த எதிர்காலத்தையே இருண்டதாய் ஆக்கிக் கொண்டபோது தான் வன்முறையிலிருந்து விழித்துக் கொண்டார்கள்.

தமிழ்சினிமாவில் காண்பிப்பது போல் ஒருவரின் உயிரை எடுத்துவிட்டு ஸ்லோ மோஷனில் இந்தநாட்டு சட்டத்திலிருந்து தப்ப முடியாது என்பதை விரைவாகவே புரிந்துகொண்டார்கள். புலத்தில் ஈழத்தமிழ்சமூகத்திற்கு இவர்களின் வன்முறை உண்டாக்கிய அவப்பெயர் இவர்களை தமிழர்களிடமிருந்து ஒதுக்கிவைத்தது. முடிவாக அவர்களே வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைத்துக்கொண்டார்கள். இன்றுவரை புலம்பெயர் வாழ்வில் இவர்களின் மன உளைச்சலையும் கலாச்சார பண்பாட்டு முரண்பாடுகளையும் ஒத்துக்கொள்ளும் என்னால் அதற்குரிய வடிகாலாய், வழிமுறையாய் இவர்களின் வன்முறைச் சமன்பாடுகளை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஆனாலும், எங்களை இன்று புலத்தில் தமிழனாய் தலை நிமிர்ந்து வாழவைப்பது இந்த இளைய சமுதாயம் என்றால் அது நிச்சயமாய் மிகையில்லை. இதைப்பற்றி விரிவாக அடுத்த பதிவில் சொல்கிறேன்.

இளையவர்களின் கலாச்சார முரண்பாடுகள் சீரியஸாக இருந்தால், பெரியவர்களின் முரண்பாடுகள் அர்த்தங்களோடு அபத்தங்களும் கலந்தது. திரைகடலோடியும் திரவியம் தேடு என்பதற்கிணங்க தமிழர்கள் பொருளீட்டுவதில் எவருக்கும் சளைத்தவர்கள் அல்ல. புலம் பெயர்ந்து வந்தாலும் வேலை, வேலையென்று ஓடுவார்கள். அலுக்காமல் சலிக்காமல் வேலை செய்வார்கள். மேலைத்தேய கலாச்சார சம்பிரதாயப்படி சனி, ஞாயிறு என்று வார இறுதி நாட்களில்தான் வாழ்க்கையை வாழ முயற்சிப்பார்கள். கல்யாணம், பிறந்தநாள் கொண்டாட்டம்,  சாவு என்று எல்லாத்துக்குமே Week-end தான்.

இந்தியாவிலிருந்து நிறையவே விதம், விதமாக ஆடை ஆபரணங்கள் இறக்குமதியாகின்றன. இவற்றையெல்லாம் உடுத்தி, அழகு காட்டி, உண்டு, குடித்து, புலத்து வாழ்க்கையை அனுபவிக்கவும் தவறவில்லை நாங்கள். இந்தியாவிலிருந்து இறக்குமதியாகும் புடவைகளில், ஆடைகளில் FLA (Fair Labor Association)  லேபிள் இருந்தால் மனட்சாட்சி உறுத்தாமல் இருக்கும் என்று நான் நடைமுறை சாத்தியமற்று சிந்திப்பதுமுண்டு. வியர்வை கூடங்களில் (Sweat Shops) தயாரிக்கப்பட்ட ஆடைகளை அணிய மனம் ஏனோ ஒப்புக்கொள்வதில்லை எனக்கு.

ஈழத் தமிழனுக்காக அழத் தவறினாலும் மெகா சீரியல்கள் பார்த்து கண்கள் கரைந்தோம். எங்கள் வாழ்க்கையை, அவலத்தை பிரதிபலிக்காத தமிழ் சினிமாவை உலகமெல்லாம் சக்கை போடு போடவைத்தோம். எப்படியோ, ஈழ, இந்திய, கனடிய கலாச்சாரங்களை ஒன்றாய் கலந்து வாரநாட்களில் கனடியர்களாகவும், வார இறுதி நாட்களில் ஈழத் தமிழர்களாகவும் இரட்டை வாழ்க்கை வாழ கற்றுக்கொண்டோம். கொஞ்சம் போதையோ, கவலையோ மிஞ்சிப்போனால், “சூ! அதென்ன வாழ்க்கை” என்று ஈழம் பற்றிய பழைய நினைவுகளை அடுத்தவர்கள் கேட்டே தீரவேண்டும் என்று அடம் பண்ணி ஒப்புவித்தோம்.

அப்படி ஒப்புவிக்கும் நினைவின் மீட்சிகள் உறவுகள் அல்லது நண்பர்களின் இழப்புகள், ஈழத்தில் நாங்கள் இழந்த சந்தோசம், பள்ளிக்கூடவாழ்க்கை, போர் தின்ற காதல், பழகிய நண்பர்கள், பறிகொடுத்த நண்பர்கள், ராணுவத்திடமிருந்தும் தலையாட்டியிடமிருந்தும் (கறுப்பு துணியால் முகம் மூடப்பட்ட ஆட்காட்டி) தப்பித்தது என்று மனதில் காட்சிகளாய் நீளும். உடல் இங்கேயும் மனம் ஈழத்திலுமாய் திரிசங்கு சொர்க்கத்தில் தவிப்போம். அதன் நீட்சியாய் தூக்கம் தொலைக்கும் இரவுகள். கலையாத தூக்கமும், தொலையாத துக்கமுமாய் திங்கட்கிழமை அடித்துப் பிடித்து காலில் சுடுதண்ணீர் கொட்டியது போல் வேலைக்கு ஓடுவோம்.  இன்னோர் அல்லது அடுத்த  week-end இல் வாழ்க்கையை வாழலாம் என்ற நம்பிக்கையுடன்…..!

_____________________________________________ தொடரும்……..

–          ரதி

vote-012

தொடர்புடைய பதிவுகள்