இரத்தத்தால் வரையப்பட்ட லத்தீன் அமெரிக்கா – பகுதி 2
பிரபல ஹாலிவூட் நடிகர்-இயக்குனர் மெல்கிப்சனின் “அபோகலிப்டோ”(Apocalypto) திரைப்படம், சில வருடங்களுக்கு முன்னர் உலகத் திரையரங்குகளில் சக்கை போடு போட்டது. மத்திய அமெரிக்காவில் ஸ்பானியர்கள் வருவதற்கு முன்னர் நடந்த சம்பவங்களைக் காட்டுவதாக அந்தப் படம் அமைந்திருந்தது. பண்டைய அமெரிக்க நாகரீகம் குறித்த மக்களின் அறியாமையை மூலதனமாகக் கொண்டு, திரைப்படம் தயாரிக்கப் பட்டிருந்தது. “அழிவின் விளிம்பில் இருந்த மாயா சாம்ராஜ்யத்தை ஆண்டவர்கள் கொடூரமான மனம் கொண்டவர்கள். பிற இன மக்களின் கிராமங்களை சூறையாடி, அப்பாவிகளை அடிமைகளாக பிடித்துச் சென்று தமது தெய்வங்களுக்கு நரபலி கொடுத்தார்கள். திரைப்படத்தின் இறுதிக் காட்சியில் (ஸ்பானிய) கிறிஸ்தவர்கள் வந்திறங்குகின்றனர். அப்போதிருந்து மாயா காட்டுமிராண்டிகளின் சாம்ராஜ்யம் அஸ்தமித்தது.” இது தான் மெல்கிப்சன் என்ற கத்தோலிக்க மத அடிப்படைவாதி சொல்லும் சேதி.
இன்றைய குவாத்தமாலாவிலும், மெக்சிகோவிலும் வாழ்ந்த மாயாக்கள் உயர்ந்த நாகரீகத்தைக் கொண்டிருந்தனர். அவர்கள் மொழிக்கென எழுத்து வடிவம் இருந்தது. கற்றறிந்தோர் குழாமான மதகுருக்கள் பருவநிலை மாற்றங்களை துல்லியமாக கணித்து வைத்தனர். அந்தக் கணிப்புகள் விவசாயிகளுக்கு பெரிதும் உதவியது. நாம் இன்று பயன்படுத்தும் நாட்காட்டி தோன்றுவதற்கு பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னரே, மாயாக்கள் 365 நாட்களைக் கொண்ட வருடத்தை கணித்திருந்தனர். அது மட்டுமல்ல, கணிதத்தில் பூஜ்ஜியத்தின் பாவனையும் அறிந்து வைத்திருந்தனர். அத்தகைய அரிய பொக்கிஷங்கள் யாவும், பின்னர் வந்த கிறிஸ்தவ மதவெறியர்களால் அழிக்கப்பட்டன. அவர்களைப் பொறுத்தவரை, “பைபிளுக்கு அப்பால் உலகில் எந்த நாகரீகமும் இருக்கவில்லை. நாளைய தலைமுறை அதைப்பற்றி எல்லாம் அறிந்து வைத்திருக்கக் கூடாது.” அதைத்தான் மெல்கிப்சனின் அப்போகலிப்டோவும் எதிர்பார்க்கிறது.
உலகின் பிற சாம்ராஜ்யவாதிகளைப் போல, மாயா இனத்தவர்களும் அயலில் இருந்த பிரதேசங்களை ஆக்கிரமித்து அடக்கி ஆண்டதை மறுப்பதற்கில்லை. மாயாக்களின் கோயில்களில் நரபலி கொடுக்கப்பட்டதுமுண்டு. இருப்பினும் மெல்கிப்சன் சித்தரித்ததைப் போல நரபலி கொடுப்பது ஒரு “தேசிய விளையாட்டுப் போட்டியாக” இருக்கவில்லை. அதே நேரம் சினிமாவில் வருவதைப் போல, “ஆயிரக்கணக்கான உடல்களைப் புதைத்த புதைகுழி” இருந்ததற்கான ஆதாரம் இல்லை. காலனிய காலத்தில் இருந்து தொடரும் பூர்வீக மக்களின் இனவழிப்பை மறைப்பதற்கு மெல்கிப்சனின் அப்போகலிப்டோ என்ற அரசியல் பிரச்சாரப் படம் பாடுபடுகின்றது. வரலாற்றைத் திரிபுபடுத்தி, பொழுதுபோக்கு என்ற பெயரில் ஏகாதிபத்திய அரசியலைத் திணிக்கும் ஆபத்தான காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
அமெரிக்காவில் ஸ்பானிய வெள்ளையர்கள் காலடி வைத்த பொழுது, பூர்வீக மக்கள் அவர்களை கடவுளின் தூதர்களாக கருதியதாக சரித்திரத்தில் எழுதப்பட்டுள்ளது. ஓரிறைக் கோட்பாட்டைக் கொண்ட கிறிஸ்தவ மதத்தின் கோணத்தில் இருந்து இதைப் பார்ப்பது தவறு. இன்றைய மெக்சிகோவில் அமைந்திருந்த அஸ்டெக் அரசவையில் நடந்த சம்பவம் ஒன்றை அடிப்படையாக வைத்தே அது எழுதப்பட்டது. அஸ்டெக் ராஜ்யத்தின் தலைநகரம் டேனோச்டிட்லான் (Tenochtitlan ) அன்றைய உலகின் பெரிய நகரங்களில் ஒன்றாக இருந்தது. ஒரு லட்சம் மக்கட்தொகையைக் கொண்ட நகரத்தில் அரண்மனை ஜோதிடர்களின் ஜோசியம் அமைதியைக் குலைத்தது. “பெரிய மிருகத்தின் மீதேறி வரும் வெளிறிய நிறம் கொண்ட மனிதர்கள் அஸ்டெக் ராஜ்யத்தை அபகரிப்பார்கள்.” அன்றைய அமெரிக்க கண்டத்தில் குதிரை இருக்கவில்லை. முதன்முதலாக குதிரை மீதேறி வந்த ஸ்பானிய வீரர்களை கண்ட மக்களும், மன்னனும், “கெட்சகோடல்” தெய்வத்தின் தூதுவர்களாகக் கருதினர். (பண்டைய மெக்சிக்கர்கள் பல தெய்வ வழிபாட்டைக் கொண்டவர்கள். அவர்கள் சில நேரம் ஸ்பானியர்களை எமதர்மனின் தூதுவர்களாக கருதியிருக்கலாம்.) விரைவிலேயே ஸ்பானியக் காலனியாதிக்கவாதிகளின் தங்கத்தின் மீதான பேராசை அவர்களின் சுயரூபத்தை தோலுரித்துக் காட்டியது.
தென் அமெரிக்கக் கண்டத்தின் அனைத்து பூர்வகுடிகளும் ஐரோப்பியரை கடவுளின் தூதுவர்களாக கருதி வணங்கி வழிவிடவில்லை. கண்டத்தின் தெற்குப் பகுதியில், (சிலி, ஆர்ஜெந்தீனா) ஐரோப்பியரால் நிரந்தரமான காலனியை அமைக்க முடியவில்லை. பூர்வீக மக்களின் தொடர்ச்சியான தாக்குதல்களை சமாளிக்க முடியாமல் காலனியாதிக்கவாதிகள் பின்வாங்கினார்கள். அந்தப் பகுதிகளை காலனிப்படுத்த இன்னும் பல நூறாண்டுகள் காத்திருக்க வேண்டியேற்பட்டது. போர்த்துக்கல் ஆக்கிரமித்த பிரேசிலில் வனாந்தரங்களும், விஷ ஜந்துக்களும் காலனியாதிக்கவாதிகளின் மிகப்பெரிய எதிரிகளாக இருந்தன. போர்த்துக்கல்லில் இருந்து கிரிமினல் குற்றவாளிகளுக்கு மன்னிப்பு அளித்து குடியேற ஊக்குவித்தார்கள். அப்படி இருந்தும் பலர் அங்கு செல்லத் தயங்கினார்கள்.
ஐரோப்பிய காலனியவாதிகளின் வருகையின் போது, தென் அமெரிக்காவில் மாபெரும் சாம்ராஜ்யம் இருந்தது. அடர்ந்த காடுகளையும், மலைத் தொடர்களையும், பாலைவனத்தையும் இயற்கை அரண்களாக கொண்டிருந்தது. இன்றைய எக்குவடோர் முதல் சிலி வரை 4000 கி.மீ. நீளமான ஒரே தேசம், “இன்கா ராஜ்ஜியம்” என அழைக்கப்பட்டது. வடக்கே இருந்த மாயாக்களைப் போல, இன்காக்கள் அயலில் இருந்த இனங்களை அடக்கி ஆளவில்லை. அவர்களின் ஆட்சி அதிகாரம் குடிமக்களின் அச்சத்தின் மீது கட்டப்பட்டிருக்கவில்லை. மாறாக சிறப்பான அரச நிர்வாகம் அனைவரையும் சமமான பிரஜைகளாக உள்வாங்கியது. இன்கா ராஜ்யத்திற்கு இன்னொரு சிறப்பும் உண்டு. அதன் பொருளாதார திட்டங்கள் பொதுவுடைமை சமூக அமைப்பை ஒத்துள்ளது.
“தவாந்தின்சுஜூ” (நான்கு திசைகளின் நாடு) ஐரோப்பியர் வருகைக்கு முன்னர் பலம் வாய்ந்த சாம்ராஜ்யமாக திகழ்ந்தது. தென் அமெரிக்க கண்டத்தில், சுமார் ஒரு மில்லியன் சதுர கி.மீ. பரப்பளவைக் கொண்டிருந்த தேசத்தில், குறிஞ்சி, பாலை என நான்கு வகை நிலங்களைக் கொண்டிருந்ததால் அந்தப் பெயர். இன்கா மக்களின் உயரிய நாகரீகம் என போற்றப்படும் சாம்ராஜ்யம், பொதுவுடைமை சமூக- பொருளாதார அமைப்பை அடிப்படையாக கொண்டிருந்தது. இன்கா இனத்தவரின் சாம்ராஜ்யம், பிற இனத்தவர்கள் மீதான அடக்குமுறையின் மீது கட்டப்படவில்லை. மாறாக சிறப்பாக செயல்படும் அரசியல் அமைப்பு முறை, அனைத்து மக்களையும் ஒரே தேசமாக இணைத்தது. சில வரலாற்று ஆசிரியர்கள் அதனை உலகின் முதலாவது கம்யூனிச ராஜ்ஜியம் என்றும் குறிப்பிடுகின்றனர்.
தவாந்தின்சுஜூ மக்கள் அனைவரும், “ஐய்லு” எனப்படும் நிர்வாகப் பிரிவுக்குள் அடக்கப்பட்டனர். ஒவ்வொரு பிரஜையும், (முன்பு சோஷலிச நாடுகளில் இருந்ததைப் போல) கூட்டுடமையாக்கப்பட்ட “கம்யூன்” சமூகத்தின் அங்கத்தவர் ஆவார். சக்கரவர்த்தியும், அரச குடும்பத்தினரும், அமைச்சர்களும் (தலைமை) ஐய்லுவை சேர்ந்தவர்கள். மாகாணங்களை சேர்ந்த ஆளுநர்களும் தலைமை ஐய்ளுவுக்குள் அடங்குவர். (அதாவது நமது காலத்து செனட் சபை போல.) போரில் புதிதாக வெற்றி கொள்ளப்பட்ட வேற்றினத்தவரின் பிரதேசமாகவிருப்பினும், அந்த இனத்தை சேர்ந்த ஒரு ஆளுநர் தலைநகர ஐய்ளுவுக்கு தெரிவு செய்யப்படுவார்.
நிலம் முழுவதும் அரசுடமையாக இருந்தது. எந்தவொரு தனியாரும் நிலத்திற்கு உரிமை கோர முடியாது. ஒவ்வொரு கிராமத்திலும், விளை நிலங்கள் மூன்றாக பிரிக்கப் பட்டிருந்தன. ஒரு பகுதி அரச குடும்பத்திற்குரியது. இரண்டாவது பகுதி ஆலயத்திற்கு அல்லது மதகுருக்களுக்கு. மூன்றாவது பகுதி விவசாயம் செய்யும் குடும்பங்களுக்கானது. பிறப்பு, இறப்பு, புதிய குடும்பங்கள் உருவாதல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, ஒவ்வொரு வருடமும் நிலம் புதிதாக பிரிக்கப்பட்டது. எல்லா நிலங்களிலும் அனைவரும் ஒன்று சேர்ந்து வேலை செய்ய வேண்டும். முதலில் அரச நிலத்திலும், இரண்டாவதாக கோயில் நிலத்திலும், மூன்றாவதாக குடிமக்கள் நிலத்திலும் வேலை செய்ய வேண்டும்.
அரச நிலத்தில் பெறப்படும் விளைச்சலால், அரச குடும்பம் மட்டும் பலனடையவில்லை. களஞ்சியத்தில் சேமிக்கப்படும் தானியம், நோயாளிகள், வயோதிபர், போன்ற சமூகத்தின் நலிந்த பிரிவினருக்கு வழங்கப்பட்டது. மேலும் வெள்ளம், பஞ்சம் தோன்றும் காலங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவளிக்க பயன்பட்டது. இன்கா மக்கள் தமது மொழிக்கு எழுத்து வடிவம் கொண்டிருக்கவில்லை. இருப்பினும் களஞ்சியப்படுத்தல், நிலப் பிரிப்பு போன்ற நிர்வாக நடைமுறைகளுக்கு சிக்கலான கணக்கெடுப்பு முறை ஒன்றை வைத்திருந்தனர். ஒவ்வொரு கிராமத்திற்கும் செல்லும் அரச கணக்காளர் கயிறொன்றில் முடிச்சுகளைப் போட்டு கணக்கிட்டுக் கொள்வார்.
இன்கா நாகரீகத்தில் (வாகன) சில்லின் பாவனை பற்றி யாரும் அறிந்திருக்கவில்லை. (ஒட்டகம் போன்ற) லாமா என்ற மிருகம் பொதி சுமந்து செல்ல பயன்பட்டது. இருப்பினும் கற்களைக் கொண்டு செப்பனிடப்பட்ட வீதிகள் சாம்ராஜ்யத்தின் எந்தப் பகுதியையும் தலைநகரோடு இணைத்தது. இன்கா ராஜாக்கள், தமக்கு எதிராக கிளர்ந்தெழுந்த இனங்களை தண்டிக்கத் தவறவில்லை. அவர்களை ஒட்டுமொத்தமாக வாழிடங்களில் இருந்து வெளியேற்றி எல்லைப்புறங்களில் குடியேற்றினார்கள். மேலும் புதிதாக வெல்லப்பட்ட பிரதேச மக்களின் தெய்வங்களை இன்கா மதத்திற்குள் உள்வாங்கினார்கள். இதனால் இந்து மதம் போன்ற புதிய மத அமைப்பு உருவாகி, ராஜ்ஜியத்தை இலகுவாக பரிபாலனம் செய்ய முடிந்தது. பிற்காலத்தில் செவ்விந்தியர்கள் கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய பொழுது, தமது பாரம்பரிய மத அனுஷ்டானங்களையும் தொடர்ந்து பேணி வந்தார்கள்.
ஸ்பானிய படையெடுப்பாளர்கள் இன்காக்களின் ராஜ்ஜியத்தை கைப்பற்றிய பின்னர், விவசாய நிலங்கள் கைவிடப்பட்டன. உருளைக்கிழங்கும், சோளமும் பயிரிடப்பட்ட நிலங்கள் புதர் மண்டிய காடுகளாகின. இன்கா மக்களின் பிரதான உணவாக இருந்த உருளைக்கிழங்கு, ஸ்பானிய காலனியாதிக்கவாதிகளால் ஐரோப்பாவில் அறிமுகப்படுத்தப் பட்டது. பின்னர் அது உலகம் முழுவதும் பரவியது. புதிதாக ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் தங்கம், வெள்ளி தோண்டுவது தான் ஸ்பானிய காலனிய எஜமானர்களின் ஒரேயொரு நோக்கமாக இருந்தது. இன்றைய பொலிவியாவில், பழைய இன்கா சாம்ராஜ்யத்திற்கு அருகில், “பொட்டோசி” என்ற நகரம் உருவானது. ஒரு காலத்தில் ஒரு லட்சம் பேர் வாழ்ந்த நகரம், அருகில் இருந்த வெள்ளிச் சுரங்கங்களுக்காகவே உருவானது. அங்கு அகழப்பட்ட வெள்ளிப்பாளங்கள் கப்பல் கப்பலாக ஸ்பெயினுக்கு அனுப்பப்பட்டன.
தென் அமெரிக்காவில் ஸ்பானியர்கள் தங்கம், வெள்ளி அள்ளிச் செல்வதைப் பற்றி கேள்விபட்ட ஒல்லாந்தர்களும், ஆங்கிலேயர்களும் அவற்றை வழிப்பறி செய்தனர். ஒல்லாந்து, ஆங்கில கடற்கொள்ளையர்கள் ஸ்பானிய கப்பல்களை வழிப்பறி செய்து தமது தாயகத்திற்கு கொண்டு சென்றனர். 1628 ம் ஆண்டு, Piet Hein என்ற ஒல்லாந்து கடற் கொள்ளைக்காரன் அபகரித்த செல்வம் வரலாற்றில் பதியப்பட்டுள்ளது. கியூப கடலோரம் வழிப்பறி செய்யப்பட்டு ஒல்லாந்து கொண்டுவரப்பட்ட கப்பலில், 177000 கிலோ வெள்ளி, 66 கிலோ தங்கம், 1000 முத்துக்கள் இருந்தன. கொள்ளையடிக்கப்பட்ட சரக்கின் மொத்த பெறுமதி எட்டு மில்லியன் யூரோக்கள்.
ஸ்பானியர்களால் உணவுப்பயிர் உற்பத்தியான விளைநிலங்கள் அழிக்கப்பட்டன. இன்று தென் அமெரிக்காவின் வறுமைக்கு அதுவும் முக்கிய காரணம். ஸ்பானியர்களால் இன்காக்களின் அரச வம்சம் அழிக்கப்பட்டது. குடி மக்களை சுரங்கங்களில் கட்டாய உழைப்பில் ஈடுபடுத்தினார்கள். இன்காக்களின் காலத்திலும் கட்டாய உழைப்பு நிலவியது. இருப்பினும் அதற்கு பிரதியுபகாரமாக இன்கா அரசு பாதுகாப்பையும், உணவையும் வழங்க கடமைப் பட்டிருந்தது. ஸ்பானியர்களிடம் அப்படிப்பட்ட கடமையுணர்வு இருக்கவில்லை. செலவின்றி பலனடைய நினைத்தார்கள். அன்றைக்கு செவ்வியந்தியர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை ஸ்பெயினில் இருந்து வந்த மதப்போதகரான Bartolome de La Casas எழுதி வைத்துள்ளார்.
“தங்கம், வெள்ளி சுரங்கங்கங்களில் இந்தியர்கள் கடுமையாக வேலை வாங்கப்பட்டனர். பெண்களும் வயல்களில் வேலை செய்தனர். ஸ்பானிய எஜமானர்கள் அவர்களுக்கு மிகக் குறைந்த அளவு உணவு வழங்கினார்கள். உறங்கும் பொது கூட, சங்கிலியால் பிணைக்கப்பட்டு கட்டாந்தரையில் படுத்து உறங்கினார்கள். என்பது அல்லது நூறு றாத்தல் எடையுள்ள பொதிகளை சுமந்து கொண்டு 200 மைல் தூரத்தை நடந்து செல்ல வேண்டியிருந்தது. அதே நேரம் ஸ்பானியர்கள் பல்லக்கில் தூக்கி வரப் பட்டார்கள். செவ்விந்தியர்கள் அவர்களின் சக்திக்கு மீறிய அளவு வேலை செய்ய பணிக்கப்பட்டனர். கடும் உழைப்பு காரணமாக சோர்ந்து விழுந்தால் சவுக்கடி கிடைக்கும். களைப்பால் வேலை செய்ய மறுத்தால் சித்திரவதை செய்யப்பட்டனர். அசாதாரணமான உழைப்புச் சுரண்டல் காரணமாக நூற்றுக்கணக்கான இந்தியர்கள் மரணமடைந்தார்கள்.”
கரீபியன் கடல் தீவுகளில் இன்று ஒரு செவ்விந்தியரைக் கூட காண முடியாது. தீவுகளில் வாழ்ந்த அனைத்து பழங்குடி இனங்களும் ஐரோப்பியரால் பூரணமாக அழித்தொழிக்கப் பட்டனர். ஸ்பானிய காலனியாதிக்கவாதிகளின் தங்கம் தேடும் பேராசையால் இனவழிப்புக்கு ஆளானார்கள். தங்கச் சுரங்கங்களில் அடிமைகளாக உழைத்த பூர்வீக குடிகள், ஸ்பானிய எஜமானர்களின் இம்சை தாங்க முடியாது, தமது பிள்ளைகளை கொன்று விட்டு, தாமும் கூட்டுத் தற்கொலை செய்து கொண்டனர்.
உழைப்புச் சுரண்டலை சகிக்க முடியாது தற்கொலை செய்த பரிதாபத்துக்குரிய ஜீவன்களை ஸ்பானிய அதிகாரிகள் ஏளனத்துடன் பார்த்தனர். “வேலை செய்து பழக்கமற்ற சோம்பேறிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள்…” என்று பரிகசித்தனர். நிச்சயமாக தென் அமெரிக்க பூர்வகுடிகள் கிறிஸ்தவ மதத்திற்கு மாறியதற்கும் தாங்க முடியாத உழைப்புச் சுரண்டலே காரணம். கிறிஸ்தவ மதத்திற்கு மாறினால், தாம் சமமான மனிதர்களாக நடத்தப் படுவோம் என எதிர்பார்த்தார்கள். ஆனால் ஸ்பானிய எஜமானர்களைப் பொறுத்த வரை, “கிறிஸ்தவர்களோ இல்லையோ, செவ்விந்தியர்கள் அனைவருமே அடிமைகள் தான்.”
ஸ்பானியர்களின் கொடுமைகளுக்கு அஞ்சி எல்லா அமெரிக்க பூர்வீக குடிகளும் தற்கொலை செய்து கொள்ளவில்லை. மெக்சிகோவில் ஹிடால்கோ என்ற பாதிரியார் தலைமையிலும், பெரு நாட்டில் துபாக் அமாரு என்ற இன்கா அரச குடும்ப வாரிசு தலைமையிலும் விடுதலைப் போராட்டங்கள் நடைபெற்றன. செவ்விந்தியர்களிடம் இருந்து அனைத்தையும் பறித்துக் கொண்ட ஸ்பானியர்கள் செல்வச் செழிப்புடன் வாழ்வதும், மண்ணின் மைந்தர்கள் வறுமையில் வாடுவதும், காலனிய காலம் முதல் இன்று வரை நிதர்சனமான காட்சிகள். “எனதருமை மக்களே! ஸ்பானியர்கள் எம்மிடம் இருந்து அபகரித்த மண்ணையும், செல்வத்தையும் மீட்டெடுப்போம்.” என்று அறைகூவல் விடுத்த துபாக் அமாருவின் பின்னால் ஆயிரமாயிரம் மக்கள் திரண்டனர். 1781 ல், துபாக் அமாருவின் விடுதலைப் படை தலைநகர் Cuzco வை முற்றுகையிடும் அளவுக்கு பெரிதாக இருந்தது. இறுதியில் சொந்த படையை சேர்ந்த தளபதி ஒருவனால் காட்டிக் கொடுக்கப்பட்டு, துபாக் அமாரு கைது செய்யப்பட்டான். காலனியாதிக்கவாதிகளுக்கு எதிரான பூர்வீக மக்களின் புரட்சி முறியடிக்கப்பட்டது.
சிறையில் இருந்த துபாக் அமாருவை பார்க்க வந்த ஸ்பானிய அதிகாரி, கிளர்ச்சியில் பங்கு கொண்டவர்களை காட்டிக் கொடுத்து விட்டு விடுதலையடையும் படி ஆசை காட்டினான். ஆனால் பணிய மறுத்த துபாக் அமாரு, “இங்கே இரண்டு பொறுப்பாளிகள் மட்டுமே உள்ளனர். ஒன்று, விடுதலைப் போராளியான நான். மற்றது, ஆக்கிரமிப்பாளனான நீ. இருவருமே மரணத்திற்கு தகுதியானவர்கள்.” என்றான். தலைநகரின் மத்திய பகுதிக்கு கொண்டு வரப்பட்ட துபாக் அமாருவும், அவன் மனைவியும், பிள்ளைகளும், பலர் பார்த்திருக்கும் வண்ணம் சித்திரவதை செய்யப்பட்டார்கள். துபாக் அமாருவின் கைகளையும், கால்களையும் கையிற்றால் பிணைத்து, நான்கு குதிரைகளில் கட்டி, நான்கு திசைகளில் இழுத்தார்கள். அப்போதும் அவனது கை கால்கள் கிழியவில்லை. பின்னர் தலையையும், கை,கால்களையும் தனியாக வெட்டியெடுத்து, ஒவ்வொரு உடல் பாகத்தையும் ஒவ்வொரு நகரத்திற்கு ஞாபகார்த்தமாக அனுப்பினார்கள். துபாக் அமாருவின் நான்காவது சந்ததி வரையில் அழிக்கப்படுவார்கள் என சூளுரைத்தார்கள்.
காலனியாதிக்கவாதிகளால் பூர்வகுடிகளின் விடுதலை வேட்கையை நான்காவது தலைமுறையிலும் அழிக்க முடியவில்லை. 22 ஏப்ரல் 1997 அன்று, “துபாக் அமாரு புரட்சி அமைப்பு”, பெரு நாட்டின் தலைநகர் லீமாவில் உள்ள ஜப்பானிய தூதுவராலயத்தை கைப்பற்றியது. 126 நாட்கள், 72 சர்வதேச தலைவர்களையும், உயர்மட்ட அதிகாரிகளையும் பணயக்கைதிகளாக பிடித்து வைத்திருந்தனர். தூதுவராலயத்தை சூழ்ந்த ஊடகங்களின் உதவியுடன், (அமெரிக்க) ஏகாதிபத்தியத்திற்கும், முதலாளித்துவத்திற்கும் எதிராக போர்ப்பிரகடனம் செய்தனர். இறுதியில் துபாக் அமாரு போராளிகள் அனைவரும் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டு விட்டனர். இருப்பினும் துபாக் அமாருக்கள் அந்த மண்ணில் மீண்டும் மீண்டும் பிறந்து கொண்டிருப்பார்கள் என்பதை, அந்த சம்பவம் உலகுக்கு எடுத்துக் காட்டியது.
(தொடரும்)
___________________________________________________
– கலையரசன்
தொடர்புடைய பதிவுகள்:
லத்தின் அமெரிக்கா ரத்தத்தால் எழுதபட்ட வரலாறு படைத்தது என்று கேள்வி பட்டிருக்கேன், ஆனா இந்த அளவுக்கு இருந்தததுன்னு இப்போ தான் தெரிஞ்சிகிட்டேன்!
அப்பாகலிடோ படத்தில் நாயகன் சூரிய கிரகணம் காரணமாக தலைவெட்டப்படாமல் தப்பிப்பான், அன்று இரவு அங்கிருந்து தப்பிக்கும் போது வானில் முழுநிலவு இருக்கும்!
அம்மாவாசை அன்று தான் சூரியகிரகணம் வரும்!
அருமையாக எழுதியிருக்கிறீர்கள் கலையரசன்…
A good attempt to expose the christians and their aggressive tactics,..
KEEP IT UP,..
அருமை தோழர் கலையரசன், இந்த மக்களின் வரலாறு பற்றி மேலும் அறிய ஆவலாக உள்ளேன்.. இன்கா – மாயன் நாகரீகத்தை சமைத்தவர்கள் தமிழர்களும் – சுமேரியர்களும் என்று கூறும் இந்த சுட்டியை பாருங்கள் .. http://viewzone2.com/ancientturksx.html இன்னுமொரு Conspiracy Theory ஆ என்று தெரியவில்லை இதைப்பற்றியும் உங்கள் கருத்தை அறிய விரும்புகிறேன்
இன்காக்களின் விவசாய பொருளாதர அமைப்பில் அரசன், ஆலயம், குடிமக்கள் என்று நிலத்தில் விவசாயம் இருந்திருக்கிறது. நிலத்திற்கும் தனியுடமை இல்லை. ஏறக்குறைய இத்தகைய அமைப்பு முறை தெற்காசிய நாடுகளில் குறிப்பாக இந்தியாவில் வெள்ளையர்கள் வருவதற்கு முன்பு வரை இருந்திருக்கிறது. இதை காரல் மார்க்ஸ் ஆசிய சொத்துடமை வடிவம் என்று குறிப்பிட்டு விளக்குகிறார்.
இந்தியாவில் பார்ப்பனிய சாதிய அமைப்பு முறை இதனாலேயே இறுகி இருந்த்து என்பது குறிப்பிடத்தக்கது. இதன்படி இங்கும் நிலத்தில் தனியுடமை இல்லை. நிலம் அனைத்தும் அரசன் அல்லது இறைவனுக்கு சொந்தம். விளைச்சலில் அரசன், ஆலயம், அதிகாரவர்க்கம், குருக்கள் போன்றவர்களுக்கு போக மிச்சம் மக்களால் பகிரப்பட்டது. எல்லா அரசுகளும் பாசன வசதியை பொறுப்புடன் செய்து வந்தன.
இந்த சமூக அமைப்பே இந்தியாவில் பல நூறாண்டுகளாக கோலேச்சி வந்த்து. உழைப்பாளிகள் அல்லது உற்பத்தி சக்திகளை கிராமங்களோடு இறுக்கமாக பின்னிப் பிணைத்த இந்த உற்பத்தி முறைதான் இந்தியாவின் புரட்சிகளற்ற நீண்ட மௌனமான வரலாற்றுக்கு அடிப்படை. யார் ஆண்டாலும், யார் ஆக்கிரமித்தாலும் இந்த சமூக அமைப்பு பாதிக்காமல் தொடர்ந்து இயங்கிவந்த்து.
இந்த சமூக அமைப்பின் மதமாகத்தான் பார்ப்பனிய இந்து மதம் பல சேர்க்கைகள், விதிகளுடன் உருவாகி நிலைபெற்றது. மக்களை மலிவான முறையில் பிரச்சினைகளற்ற முறையில் சுரண்டுவதற்கு இந்த உற்பத்தி முறை வாய்ப்பளித்தது என்பதால் எல்லா அரசர்களும் ஆளும் வர்க்கங்களும் இதை கேடின்றி பாராமரித்தன.
வெள்ளையர்கள்தான் தமது சுரண்டலுக்காக இந்த முறையை முதலில் உடைத்தனர். நிலத்தில் தனியுடமை கொண்டுவரப்பட்டது. ஜமீன்வாரி, இரயத்துவாரி, மொகல்வாரி முறைகள் ஏற்பட்டன. பாசன வசதி பொறுப்பை வெள்ளையர்கள் கைவிட்டனர். இதனாலேயே பல பஞ்சங்கள் காலனிய ஆட்சியில் ஏற்பட்டன. இன்கா நாட்டில் ஸ்பானியர்கள் தங்கத்தையும், வெள்ளியையும் கொண்டு சென்றதுபோல வெள்ளையர்கள் இந்தியாவின் எல்லா செல்வங்களையும் வகை தொகையின்றி அள்ளிச் சென்றனர். இப்படித்தான் ஆசிய சொத்துடமை அமைப்பு அடித்து நொறுக்கப்பட்டது.
இந்தியாவின் சாதிய அமைப்புமுறைக்கும் பல்வேறு பிற்போக்கு தனங்களுக்கும், பெரும் புரட்சிகள் வராதாதற்கும் இதுவே அடிப்படை காரணம். ஆயினும் இந்த பின்தங்கிய உற்பத்தி முறை மக்களுக்கு கஞ்சி ஊற்றி கவனித்த பாதுகாப்பு கூட இப்போதைய முறையில் இல்லை. அதனால்தான் வெள்ளையர்களால் உடைக்கப்பட்ட ஆசிய சொத்துடைமை முறையின் அழிவில் மக்கள் எதுவும் பெறவில்லை, இருந்த்தையும் இழந்தார்கள் என்கிறார் மார்க்ஸ்.
இந்தியாவைப் புரிந்து கொள்ள வேண்டுமென்றால் ஆசிய சொத்துடமை உற்பத்தி முறையை படிக்க வேண்டும்.
அருமையான பதிவு தோழர் கலையரசன், வினவு, கட்டுரையை வாசிக்கும் போது நானே இதைப்பற்றி எழுத நினைத்தேன், நீங்கள் எழுதி வேலையை மிச்சப்படுத்தி விட்டீர்கள்.. அது சரி, ஆசிய சொத்துடைமை வடிவத்தைப் பற்றி வலையிலோ வெளியிலோ எங்கு படிப்பதாம்.. நீங்க எழுதினாலாவது நாலு பேரு படிக்க முடியும்.. கொஞ்சம் மனசு வையுங்க.. கம்யூனிச கல்வி வேற காலியா இருக்கு.. அதுல ஏதாவது எழுதினாலாவது நெத்தியடி திரும்ப வர்ராறான்னு பாக்கலாம் 🙂
சரியான நானும் எழுத நினைத்ததை கேள்விகுறி எழுதி உதவி உள்ளீர்கள் வினவு சற்று நேரம் ஒதுக்க முயலுங்கள்.
கேள்விக்குறி,
கம்யூனிசக் கல்வியை ஆரம்பிப்பதாக திட்டமிருந்தாலும் நிறைய தயக்கம் இருக்கிறது. முதலில் நேரடி பேச்சில் வகுப்பு போல எடுக்க வேண்டிய விசயத்தை கட்டுரையாக எழுதித்தீருமா என்பதும் சந்தேகங்கள், கேள்விகளை நேரடியாக அணுகி விளக்குவது போல எழுத்தில் முடியுமா என்றும் சில பிரச்சினைகள் உள்ளன. இருப்பினும் ஒருவரம்புக்குட்பட்டு இதை செய்யவே உத்தேசம்.
@@பேச்சில் வகுப்பு போல எடுக்க வேண்டிய விசயத்தை கட்டுரையாக எழுதித்தீருமா என்பதும் @@@
தோழரே இதுதான் மேட்டரா.. பேசாம பேசிடவேண்டியதுதானே????
அருமை, இதை போலத்தான் திராவிடர்களை ஆரியர்கள் செய்திருக்ககூடும். இதைப்போல் திராவிட வரலாறுகளையும் எழுதுமாறு பணிகிறேன்.
சுத்திவளைச்சு தமிழன் என்றால் திராவிடன் என்றும், பெரியார் ஒருவர்தான் தலைவர் என்றும், கலைஞர் ஒருவர்தான் தமிழ் வளர்ப்பவர் என்றும் தோற்றுவிக்கப்பட்ட மாயையிலிருந்து தமிழர்கள் என்று விடுபடுகிறார்களொஅன்றுதான் விமோசனம். இது பார்ப்பனர்களின் மாயையை காட்டிலும் மோசமான மூளைச்சலவை..
சரியாக சொன்னீர்கள் அரங்காரசன்.
வாழ்த்துக்கள் கலைஅரசன் அருமையான பதிவு. வரலாற்றில் படுகொலைகள் என்று நிறையவே கேள்விபட்டிருக்கிறோம் ஆனால் ஒரு நாட்டின் பூரவகுடிகளையே தடம் தெரியாமல் அழித்த KODUMAIYALARKAL THEN AMERICA, VADA AMERICA, AUSTRALIA NADUKALIL NILAIKONDULLARKAL, ACHARIYAM ANAIVARUME EROPIYARKALAKAVE IRUPPATHU. VARALATRIL IVARKALAI VIDA KODUMAIYALAKAL IRUKKAVE MUDIYATHU ENA THONDRUKIRATHU. MELUM AUSTRALIA,US AKIYA NADUKALAI PATRIYUM PATHIVAI THODARA VENDUM.
அன்றும், இன்றும் வல்லான் வகுத்ததே வாய்க்கால் ..
அருமை கலை தொடருங்கள்
//திரைப்படத்தின் இறுதிக் காட்சியில் (ஸ்பானிய) கிறிஸ்தவர்கள் வந்திறங்குகின்றனர். அப்போதிருந்து மாயா காட்டுமிராண்டிகளின் சாம்ராஜ்யம் அஸ்தமித்தது//
எனக்கு அப்படித் தோன்றவில்லை. மெல் கிப்சன் தீவிர கத்தோலிக்க கிறிஸ்துவராய் இருந்தாலும் இந்த திரைப்படத்தின் ஆதார கருத்து பழங்குடியினரின் இருத்தியலுக்கான போராட்டமே. ஆரம்பக் காட்சிகளில் பழங்குடித் தலைவன் தன் மகனிடம் பேசும் வசனங்கள் அதைத்தான் காட்டுகின்றன. ‘இந்தக் காடு என்னுடையது. இது எனக்கப்புறம் என் மகனுக்கு சேரும்’ என்று தனது இருப்பிடம் வழியாக செல்லும் இன்னொரு இனக்குழுவிடம் சொல்லும் காட்சி மிகவும் முக்கியமானது. தொடர்ந்து தனது மகனிடம் பேசும்போது ‘உன் கண்களில் பயம் தெரிகிறது… வாழ்க்கை எப்பொழுதும் போராட்டமாகத்தான் இருக்கும்’ என்றும் சொல்கிறார்.
மேலும் பல நுணுக்கமான காட்சிகளால் அந்த பழங்குடி வாழ்க்கை முறையை காட்சிபடுத்தியிருப்பார். அதில் ஒரு கிழவி எப்பொழுதும் தனது மருமகனை (மகளின் கணவனை) மகளோடு உறவு கொள்ள விரட்டிக் கொண்டேயிருப்பாள். அவளுக்கு தேவை குடும்பம் தொடர ஒரு வாரிசு. வாட்டசாட்டமாக இருக்கும் அவனுக்கோ அந்த கிழவியின் புகார் வெட்கமளிப்பதாக இருக்கும். அவனுடைய நிலையை வைத்து அந்த பழங்குடியினர் கிண்டல் செய்வார்கள். வேட்டையாடிய காட்டுபன்றியின் விரையை பச்சையாக தின்றால் குழந்தை பிறக்கும் என்று சொல்ல அவனும் அவசரமாக புசிக்க முயல்கிறான். பிறகு ஒரு காட்சியில் பள்ளத்தில் இருக்கும் தாயும் (கர்ப்பவதி) மகனும் ஒரு இரவு முழுவதும் காட்டு விலங்குகள் மத்தியில் கழிக்கின்றனர். பையனுக்கு காலில் காயம் ஏற்பட அந்த தாய் அதற்கு கட்டெறும்புகள் மூலம் தையல் போடுகிறாள். எறும்பை பிடித்து காலில் ஏற்பட்ட காயத்தில் வைக்க அது இரு கால்களையும் ஆழமாக அழுத்தி இறுக்குகிறது. அப்படியே தலையை கிள்ளி எடுத்து விடுகிறாள். எறும்பின் மிச்ச உடல் காயத்தின் குறுக்கே தையல் போட்டது போலவே இறுக்கமாக இருக்கிறது. அந்த பையனே எறும்பை பிடித்து அம்மாவிடம் கொடுக்கிறான். இது போல் பல நுணுக்கமான காட்சியமைப்புகளுடன் பழங்குடியினரின் வாழ்வை காட்சிபடுத்திய படம் வேறொன்றும் நான் அறியேன்.
மெல் கிப்ஸன் கிறிஸ்துவர் என்றாலும் அவருடைய Passion of the Christ படத்தில் மிகவும் நேர்மையாகவே எடுத்திருப்பார். அவருடைய அரசியலை அவர் படத்தில் காட்டுவதில்லை என்பதே எனது புரிதல்.
மாயர்கள் நாகரீகத்தில் பல அம்சங்கள் உண்டு. அதில் நரபலியும் உண்டு. அந்தக் காட்சிகளில் உபயோகித்திருந்த பல அமைப்புகளும் மாயர்கள் நாகரீக அத்தாட்சிகளிலிருந்து எடுத்தாளப்பட்டவையே. முதலில் பார்த்த பழங்குடியினருக்கும் மாயர்களுக்கும் பெரிதாக தோற்ற வித்தியாசங்கள் கிடையாது. மாயர்களுடையது வளர்ச்சியடைந்த அரசியல் நாகரீகம். அதை முழுவதுமாக படத்தில் காண்பிக்கவில்லை. அவர்களின் மத பழக்கவழக்கங்களையும், கிரகணம் போன்ற நிகழ்வுகளை கணிக்கும் திறமை போன்றவற்றை தொட்டு சென்று அவர்களுடைய நரபலி பழக்கத்தினால் பாதிக்கப்படும் ஏனைய பழங்குடியினரை காட்சிபடுத்துகிறார்கள். குஷ்டத்தினால் பாதிக்கப்பட்ட குழந்தை கூட குறி சொல்லும்போது ‘உங்கள் அஸ்தமனம் ஆரம்பித்துவிட்டது. அதற்கு காரணமான சிறுத்தை இந்த காட்டிலேதான் இருக்கிறது’ என்று சொல்கிறது. மாயர்களின் நாகரீகத்தை பதிவு செய்ததினால் நமக்கு தெரிந்தது போல… இந்தக் கதை பதிவு செய்யப்படாத ஒரு பழங்குடி இனத்தவரின் கதையாகவே எனக்கு தெரிகிறது.
இறுதி காட்சியிலும் அந்த பழங்குடி இனத்து இளைஞன் ஸ்பானியர்களை பார்த்துவிட்டு தன்னுடைய ஓட்டம் நிற்காது என்று புரிந்து கொள்கிறான். அவன் இன்னமும் ஓடிக் கொண்டேதான் இருக்கிறான் என்பதே கதையின் சாராம்சமாக இருக்கிறது.
ஸ்ரீதர் நாராயணன்,
படத்தில் ஒரு வாசகம் வரும், சரியாக நினைவில்லை, “ஒரு நாகரிகத்தின் அழிவு அதனுள்ளேயே இருக்கிறது” என்பது போல. இதுதான் அந்தப்படத்தின் மையக்கரு. அதனால்தான் மாயர்கள் சுற்றுப்பட்டு எல்லா இடங்களிலும் இருந்து ஆயிரக்கணக்கான மக்களை பிடித்து வந்து நரபலி செய்வதை பிரம்மாண்டமாக காட்டியிருந்தார்கள். இது அப்பட்டமான பொய்யே அன்றி உண்மையல்ல. ஏனெனில் அடிமைகள் எனப்படுவோர் உழைப்புக்கான அல்லது சுரண்டலுக்கான செல்வங்கள் என்ற யதார்த்த நிலையை அறிந்த சமூகங்களைக் காட்டிலும் மாயர்கள் நாகரீகம் முன்னேறியது. அப்படி இருக்கையில் அவர்கள் வகைதொகையின்றி கூட்டம் கூட்டமாக நரபலி கொடுத்துக் கொண்டிருப்பதாக காட்டுவது வரலாற்றுக்கும், அன்றைய சமூக யாதர்த்த்திற்கும் புறம்பானது. இப்படிப்பட்ட அழிவில் போய்கொண்டிருக்கும் போதுதான் இறுதியில் ஸ்பானிஷ் கப்பல் வருவதாக படம் முடிகிறது. இதன்படி மாயர்களது அழிவை அவர்களே தேடிக்கொண்டார்கள் என்பதன்றி வேறென்ன?
இதுக்கு கட்டுரையிலேயே பதில் இருக்குன்னு நினைக்கிறேன் வினவு. மாயர்களுக்கு வானவியலில் இருந்த ஆர்வமும் அறிவும் (365 நாட்கள்) அவர்களுக்கு (அல்லது இது தெரிந்த மத குருக்களுக்கு) கிரகணத்தின் நாளும் தெரிந்திருக்குமில்லையா?
அங்கே பலி கொடுப்பதே, சூரியக் கடவுளுக்காத்தான். அந்த நாள் கிட்டத்தட்ட ஒரு விழா போல. மக்கள் எல்லோரும் கிரகணத்தைப் பார்த்து பயப்படும்போது, மதகுரு மட்டும்… லைட்டா சிரிச்சிட்டு ”சூரியக் கடவுள் பலியால் சமாதானமாகிட்டார்” -ன்னு சொல்லி, கிரகணம் முடியும் நிலையில் “ஒளியை திரும்பக் கொடு” -ன்னு சூரியனைப் பார்த்து சொல்லுவார்.
மத்தபடி.. நரபலி தினசரி நிகழ்வாக அங்கே நடப்பதாக சொல்லலை. வாதத்திற்கு… அது ஒரு விழா-ன்னும் சொல்லலை. நாம் எப்படி எடுத்துக்கறோம்னு மட்டும்தான் இருக்குன்னு நினைக்கிறேன்.
மத்தபடிக்கு… அபாகலிப்டோ படம் ஒரு ஃபிக்ஷன் மட்டும்தானே தவிர.. வரலாற்றையோ அல்லது மாயர்களின் வாழ்க்கையையோ எங்கயும் பிரதிபலிக்கலைன்னு நினைக்கிறேன்.
இதில் மாயர்களின் வரலாற்றைத் தேடுவதும், மெல்கிப்ஸனை குறை சொல்வதும் சரியான வாதமான்னு எனக்குத் தெரியலைங்க.
//இது அப்பட்டமான பொய்யே அன்றி உண்மையல்ல//
உண்மையாக இருக்கலாம் என்று சொல்வதை விட அப்பட்டமான பொய் என்று நிறுவுவது மிகவும் கடினமே. உங்களின் ஏனைய கருத்துகளையும் பார்ப்போம்.
// ஏனெனில் அடிமைகள் எனப்படுவோர் உழைப்புக்கான அல்லது சுரண்டலுக்கான செல்வங்கள் என்ற யதார்த்த நிலையை அறிந்த சமூகங்களைக் காட்டிலும் மாயர்கள் நாகரீகம் முன்னேறியது.//
ஆச்சர்யமாக இருக்கிறது. இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதிவரை அடிமை சமூகம் வழக்கத்தில் இருந்த போது மாயர்கள் மட்டும் அடிமை சமூக பாணியை விட்டொழித்துவிட்டார்கள் என்று எப்படி சொல்கிறீர்கள்? மலையாளத்தில் ஒரு பழமொழி உண்டு. ’நேற்றைய குற்றம் இன்றைய நியாயம் நாளைய சாத்திரம்’ என்று. அதையே வேறுவகையிலும் புரிந்து கொள்ளலாம். ’இன்றைய குற்றம் நேற்றைய நியாயம்’ என்றும். மாயர்கள் விதிவிலக்காக இருந்தார்கள் என்பதை எப்படி அறியப் பெற்றீர்கள்?
//அப்படி இருக்கையில் அவர்கள் வகைதொகையின்றி கூட்டம் கூட்டமாக நரபலி கொடுத்துக் கொண்டிருப்பதாக காட்டுவது வரலாற்றுக்கும், அன்றைய சமூக யாதர்த்த்திற்கும் புறம்பானது. // கிரகண நேரங்களை கணக்குகளால் கணிக்க முடிந்தவர்கள், அது எதனால் ஏற்படுகிறது என்பதை புரியாமல் இருந்த காலகட்டம் அது. பண்டைய இந்திய வானவியல் சாஸ்திரத்திலும் பஞ்சாங்க கணிப்பு போன்ற பழக்கங்கள் இருந்தாலும், கிரகணம் ஏற்படுவதற்கு புராண கதைகள்தான் காரணமாக சொல்லப்பட்டிருந்தன. அது போல் மாயர்கள் காலத்திலும் கதைகள் சொல்லப்பட்டிருக்கலாம். Ptolemy, Kepler போன்றோர் 16ம் நூற்றாண்டில்தான் சூரியன் நடுவில் இருக்க பூமிதான் சுற்றி வருகிறது என்று நிரூபித்தனர். அதுவரை அத்தனை மனித நாகரீகத்திலும் சூரியனும் ஒரு கோளாக கணக்கில் கொள்ளப்பட்டு பூமியே மையமாக அறியப்பட்டிருந்தது. மாயர்களின் வானவியல் அறிவையும் அவர்களுடைய நரபலி பழக்கங்களையும் இணைத்து புனையப்பட்ட கதை. வரலாறே அப்படி புனைவும் நிகழ்வும் கலந்துதானே படைக்கப்படுகிறது? இதில் அப்பட்டமான பொய் என்று எதை ஒதுக்குவது?
//இப்படிப்பட்ட அழிவில் போய்கொண்டிருக்கும் போதுதான் இறுதியில் ஸ்பானிஷ் கப்பல் வருவதாக படம் முடிகிறது. இதன்படி மாயர்களது அழிவை அவர்களே தேடிக்கொண்டார்கள் என்பதன்றி வேறென்ன?// ஆம். முதலில் அந்த பழங்குடியினர் அழிக்கப்பட்டார்கள். பின்னர் மாயர்கள். பின்னர் ஸ்பானியர்களும்… இது முடிவிலா சுழற்சிதானே?\\
மெல் கிப்ஸன் நிறைய ஆராய்ச்சி செய்தே எடுத்திருக்கிறார் என்பதற்கு படத்தின் பல நுணுக்கமான சான்றுகள் இருக்கின்றன. ஆனால் ஏன் மாயர்களின் நரபலி பழக்கவழக்கங்களை மட்டும் கொடூரமாக சித்திரித்து இருக்கிறார்? என்றால் அதற்கு என்னிடம் பதிலில்லை. ஆனால் படத்தின் கதைக்கு அவர் பங்கம் வராமலே செய்திருந்தார். எந்த காட்சிகளும் துருத்திக் கொண்டு இல்லை என்பதே என் புரிதல்.
ஸ்ரீதர்
மாயர்கள் அடிமை முறையை பயன்படுத்தினார்கள் என்பது அவர்களை நரபலி செய்து அழித்தார்கள் என்று பொருளில்லை. அடிமைகளை வைத்து பல தொன்மையான நாகரிகங்கள் குறிப்பிட்ட காலம் வரை தளைத்துள்ளன. வேற்று இனத்தவரை கொன்று அழிப்பது என்பது ஆரம்ப வரலாற்றில் சில இடங்களில் இருந்தனவே அன்றி அது பொதுப்போக்காக இல்லை. முக்கியமாக மாயர்கள் போன்ற சற்றே வளர்ச்சியடைந்த நாகரிகங்களில் அடிமைகள் உழைப்புச் சுரண்டலுக்காகத்தான் பயன்பட்டார்களே அன்றி நரபலி கொடுத்து அந்த நாகரிகம் தளைக்கவில்லை. நரபலி என்பது பல நாகரிகங்களில் அடையாளமாகவே செய்யப்பட்டன. மகாபாரதத்தில் கூட போருக்கு முந்தி நரபலி கொடுப்பதாக படித்திருக்கிறோம். அடிமைகளை கொல்வதை விட அவர்களை உயிருடன் வைத்து சுரண்டுவது இலாபகரமானது என்பதை அடிமை சமூதாய அமைப்புகள் அனைத்திற்கும் பொதுவான போக்கு. இவற்றை வரலாற்று ஆதாரங்களில் தேடுவதற்கு முன்னர் வரலாற்றை கண்டுபிடிக்கும் கண்ணோட்டம் அவசியம். மாயர்களில் காலத்தில் அவர்கள் அடைந்த முன்னேற்றம் என்பது அடிமைகளை உயிருவன் பயன்படுத்தியதிலிருந்தே என்பது தெளிவு. இல்லையேல் கூட்டம் கூட்டமாக கொன்றிருந்தால் படத்தில் நீங்கள் பார்த்திருக்கும் அந்த பிரம்மாண்டமான நகரம் சாத்தியமில்லை.
மெல்கிப்சன் படத்தில் நுணுக்கமான விவரங்களை காட்டியிருக்கிறார் என்பதை எறும்புத் தையிலிலிருந்தோ, வாரிசு இல்லாதவன் பன்றியின் விதையை உண்ணுவதிலிருந்தோ உவப்பதில் என்ன பயன்? இத்தகைய கிமிக்ஸ் எல்லாம் இன்றும் டிஸ்கவரி போன்ற சானல்களில் நிறைய வருகின்றன. நமக்குத் தேவை மாயர்களின் நாகரிகத்தின் சிறப்பு என்ன, அது எவ்வாறு அழிந்து போனது என்பதே. அதை மெல்கிப்சன் நரபலி என்று திரிக்கிறார்.
ஆனால் ஒரு இன மக்களை பூண்டோடு அழிப்பதற்கு வரலாற்றின் தொல்பருவத்திற்கு சென்று பார்க்கத் தேவையில்லை. வட, தென் அமெரிக்காவில் செவ்விந்தியர்களை பூண்டோடு அழித்த பெருமை முன்னேறிய நாகரிகத்தை சேர்ந்த ஐரோப்பியர்களையே சாரும். வரலாற்றின் குறுக்கும் நெடுக்குமான இந்த நிகழ்ச்சிப் போக்குகளை ஒரு ஹாலிவுட் படத்திலிருந்து அணுகவது மிகவும் ஆபத்தானது. மெல்கிப்சன் தனது படத்திற்கான ஆராய்ச்சியை பழங்குடி மக்களின் வாழ்க்கை விவரங்களில் உள்ள வித்தியாசமானவற்றை எடுப்பதற்கு மட்டும் பயன்படுத்திருக்கிறார். மாறாக அந்த நாகரிகத்தின் ஆன்மாவை அவர் சீண்டவே இல்லை.
இந்த கட்டுரைக்கான ஆதாரங்களும் மேற்கோள்களும் எங்கிருந்து பெறப்பட்டன என்று தெளிந்தால் நலம். இல்லாவிடின், இதுவும் மேல் கிப்சனின் காவியம் போலத்தான். 🙂
//இன்கா இனத்தவரின் சாம்ராஜ்யம், பிற இனத்தவர்கள் மீதான அடக்குமுறையின் மீது கட்டப்படவில்லை. மாறாக சிறப்பாக செயல்படும் அரசியல் அமைப்பு முறை, அனைத்து மக்களையும் ஒரே தேசமாக இணைத்தது. சில வரலாற்று ஆசிரியர்கள் அதனை உலகின் முதலாவது கம்யூனிச ராஜ்ஜியம் என்றும் குறிப்பிடுகின்றனர்.//
அதானே! என்னடா இது, வினவு தளத்துல இந்த படத்தை பற்றின விமரிசனமா என்று நினைத்தேன்.
நீங்கள் சொல்லும் இதே கருத்தை தான் கொஞ்சம் காலம் முன் ஹாய் மதனிலிம் வந்தது.
மெல் கிப்சனின் எல்லா படங்களும் அதீத வன்முறை உடையதாக தான் இருக்கிறது. தி பாஷன் ஆஃப் த க்ரைஸ்டில் உச்சகட்ட வன்முறை இருக்கும். முதல் முறை அப்போலகிப்டோ பார்த்து அவரின் மனநிலையை பற்றின பயம் வந்துவிட்டது.
“A great civilization is not conquered from without until it has destroyed itself from within” இதுதான் படத்தில் முதன்முதலில் சொல்லப்படும் வசனம்.. மாயன் கலாச்சாரத்தில் இருந்த சில மோசமான சடங்குகளும் அவர்களின் அதிகாரப் போக்குமே அவர்களின் அழிவுக்குக் காரணம் என்கிற ரீதியில் கிப்சன் சொல்லி இருப்பார்.. ஆனால் அதில் எக்கச்சக்கமான யதார்த்த மீறல்கள் இருந்தன என்பதுதான் உண்மை.. மற்றபடி புனையப்பட்ட ஒரு கதையில் இத்தனை அரசியல் இருக்கக்கூடும் என்பதாக எனக்குப் படவில்லை.. நண்பர் ஸ்ரீதர் நாராயணனோடு பெரிதும் ஒத்துப் போகிறேன்..
மாயர்களின் நாகரிகமும் தமிழர்களது நாகரிகத்தைப் போன்றது.
http://viewzone2.com/ancientturksx.html
சிறப்பான பதிவு. விவாதங்களும் அருமை. விவாதிக்க இயலாவிட்டாலும் அவ்வப்போது கவனித்து நிறைய கற்று வருகிறேன். கலையரசன் அவர்களுக்கு நன்றி
நானும் அந்த படத்தை பார்த்தேன் உண்மை என நம்பினேன் ,இந்த கட்டுரையை படித்தபிறகு உண்மையை அறியமுடிகிறது.உங்கள் பனி தொடருட்டும் வாழ்த்துக்கள்
holywood ,bbc போன்ற வகையறாக்கள் தம்மை பெரிய மேதாவிகளாக காட்ட முனைபவர்கள். குறிப்பாக holywood பிரமாண்ட படமெடுத்து மிரட்டுவார்கள்.அந்த பிரமாண்டத்துக்குள்ளே நைசாக வெள்ளை இன பெருமிதத்தையும் ,கம்யுனிஷ அவதூறுகளையும் வைப்பார்கள்.அவர்கள் காட்டும் பிரமாண்டத்தின் மூலம் தம்மை பெரிய அறிவாளிகள் போலவும் காட்டுவார்கள்.பொதுவாக அவர்கள் சொல்லும் “வரலாறு” நம்ம சாண்டில்யன் ஐயாவின் வரலாறுக்கு ஒப்பானது.”ஒஸ்கார்” விருது எல்லா கயமைகளையும் மறைத்துவிடும்.படம் எடுத்தவர்களும் பிறவி பயனை அடைந்து விடுவார்கள்.பிறகென்ன உண்மையான வரல்று ஆசிரியர்கள் திரும்ப கத்த வேண்டியது தான்.
cowboy படங்களில் பழங்குடி மக்கள் இழிவு படுத்துவார்கள்.பழங்குடி மக்களையும் ,கறுப்பின மக்களையும் தான் நடித்த படத்தில் இழிவு படுத்தினார்கள் என்பதிற்காக ஒஸ்கார் விருதை நிராகரித்து உலகை தன பக்கம் திருப்பியவர் புகழ் பெற்ற நடிகர் மார்லோன் பிராண்டோ.
சோகமான வரலாறு….இதே போல் தான் நமது நாட்டிலும் நடந்து இருக்கிறது, உதாரணம் ச்ரிச்தவரகளால் கோவாவில், பிறகு இந்ரைஅய் பங்களாதேஷ், மகாராராஷ்டிரா போன்ற பகுதிகளில் இஸ்லாமியர்களால் நடந்துள்ளது…இஸ்லாமியர்களால் சுமார் ௧ லக்சம் பேர் கொள்ளபட்டனட் கேரரளவில் அதுவும் ஆங்கிலேயர்கலிம் இருந்து விடுதளியவதற்கு சில வருடங்கள் முன்னால்..( Can Google Moplasthan Or Maapilai, Kerala Riots) and find more information…If we hindus not United it may happen tomorrow also.
அதிகமாகஅலங்காரம் அல்லது அரிதாரம்பூசிக்கொண்டவர்கள்ஆடம்பரத்துக்காகஆளில்லாத் தெருக்கோடியின்விளக்குக் கம்பத்தின் கீழேகாத்துக்கொண்டிருப்பதுதன் அழகைக் காட்டுவதற்காகமட்டுமல்ல.
– புதிய பாமரன்.