Thursday, December 5, 2024
முகப்புஉலகம்ஈழம்கனடாவில் “ஈழத்தின் நினைவுகள்” – இறுதிப்பாகம் – ரதி

கனடாவில் “ஈழத்தின் நினைவுகள்” – இறுதிப்பாகம் – ரதி

-

vote-012வசதி படைத்தவர்கள் போராடினால் அது போராட்டம். ஏழைகளின் போராட்டம் பயங்கரவாதம். இப்படித்தான் கனடிய பத்திரிகை ஒன்று கடந்தவருடம் ஈழப்போர் வேரறுக்கப்பட்ட காலத்தில் ஒரு தடவை எழுதியது. ஏழை ஈழத்தமிழர்களின் உரிமைப்போர் பயங்கரவாதமாக்கப்பட்டு, ஐம்பதாயிரம் உயிர்கள் காவு வாங்கப்பட்டு  ஓராண்டு உருண்டோடிவிட்டது. எங்கள் விடயத்தில் உலகத்தின் அறம் பிறழ்ந்து, எங்களுக்கு மட்டும் நீதி பிழைக்கவில்லை. இன்னும் இலங்கையில் எங்களுக்கு உயிர்வாழும் உரிமையும் கிடைக்கவில்லை.

மழை நின்றும் விடாத தூவானமாய் அரசபயங்கரவாதத்திற்கும் எந்த குறையும் இல்லை. ஈழத்தின் மண், பெண், பொருள் எல்லாம் சிங்களப் பேரினவாதத்தின் சொத்தாகிப்போனது. அவன் நினைத்தபடி சூறையாடலாம். கேள்வி கேட்க யாருமில்லா பூமியாகிப்போனது இன்று ஈழம். எங்கள் மண் இப்போது சிங்களர்களுக்கு சுற்றுலா மையம். எங்களின் அவலங்கள் அருங்காட்சிப்பொருள். ஈழத்தின், தமிழனின் பூர்வீக அடையாளங்கள் சிதைக்கப்பட்டு, அழிக்கப்பட்டு, எங்களின் வளங்களைச் சுரண்ட முதலீட்டாளர்களுக்கு வியாபாரத்தின் வாசல் கதவுகள் அகலத் திறந்துவிடப்பட்டிருக்கின்றன.

இப்போதும் யாழ்ப்பாணத்தில் இருந்து வரும் செய்தி பதின்மவயதுப்பெண் காணாமற்போனார், இளைஞர் சடலமாக மீட்பு, கேள்விமுறையற்ற சமூக சீர்கேடுகள். காணவும், கேட்கவும் சகிக்காத இந்த அவலங்கள் தான் இந்த பூலோகத்தின் பிதாமகர்களாக தங்களை பிரச்சாரப்படுத்தியவர்கள் ஈழத்தில் “பயங்கரவாதத்தை” அழித்த கதையின் விளைவு மற்றும் கிளைக்கதை. இந்த கிளைக்கதைகளின் முடிவுகள் இப்படித்தான் இருக்கும் என்று தெரிந்துதானே உலகத்து வீதிகளிலெல்லாம் இறங்கி ஈழத்தமிழன் போராடினான்.

ருவாண்டாவில் நடந்த இனப்படுகொலை தடுக்கப்பட்டிருக்கலாம். ஆனால், கனடா சர்வதேச சமூகமாக அதிலிருந்து தவறிவிட்டது என்று காலம் கடந்து மன்னிப்பு கேட்கிறது. ஐ. நாவும் அதை ஆஹா, ஓஹோ என்று பாராட்டுகிறது. ஈழத்தமிழனின் அழிவை சர்வதேசம் “இன அழிப்பு” என்று ஒத்துக்கொள்ளுமா என்பது ஒருபுறமிருக்கட்டும். இவ்வாறு, காலம் கடந்து எங்களிடம் மன்னிப்பு கேட்காதீர்கள் என்றுதான் கடந்தவருடம் இந்தப் பிதாமகர்களின் மனட்சாட்சியின் கதவுகளைத் தட்டினோம், திறக்கவில்லை. மனிதாபிமானத்தின் வாசலாவது திறக்கும் என்று வீதி, வீதியாய் விழுந்து கிடந்து அழுது புரண்டோம். மனிதம் செத்து சவமாகிவிட்டது, ஆதலால் செய்வதற்கு ஒன்றுமில்லை என்று தங்கள் செய்கைகளில் காட்டினார்கள்.

நாங்களும் விடாப்பிடியாக எங்களுக்கு நியாயம் கிடைக்கும்வரை ஓயப்போவதில்லை என்று இன்றுவரை போராடிக்கொண்டிருக்கிறோம். புலத்தில் தமிழன் அடங்கவே மாட்டான் என்று பலருடைய குடைச்சலுக்கும் எரிச்சலுக்கும் வேறு காரணமாக இருக்கிறோம். உலகம் முழுக்க சிதறிக்கிடந்த தமிழர்களை ஈழம் என்ற ஒற்றைச் சொல் இன்று ஒன்றாய் இணைத்திருக்கிறது. ஈழத்தமிழர்கள் தங்களுக்குள் ஒருகாலத்தில் ஏதேதோ காரணங்களினால் பிளவுபட்டிருந்தாலும் இன்று இனம் என்ற ரீதியில் ஒன்றுபட்டு நிற்கிறார்கள். நாங்கள் எப்படி ஒன்று பட்டோம் என்பதை என் பார்வையில் திரும்பிப் பார்க்கிறேன்.

ஈழத்திலிருந்து தமிழர்கள் தங்கள் சாதிய விழுமியங்களையும் கொஞ்சம் கட்டிக், காவிக்கொண்டுதான் கனடா வந்தார்கள். புலம்பெயர் தேசங்களிலும் ஈழத்தமிழர்கள் சாதிய வேற்றுமைகளோடும் முரண்பாடுகளோடும் மல்லுக்கட்டியவர்கள் தான். இப்படிப்பட்டவர்கள் கனடாவில் எப்படி ஒற்றுமையாய் வீதியில் இறங்கி போராடும் நிலைக்கு வந்தார்கள் என்று நீங்கள் ஆச்சரியப்படலாம். தம் இனம் அழிக்கப்படுவது கண்டும் கூட ஒன்று சேரவில்லை என்றால் எப்படி?

கனடாவில் சாதிய வேற்றுமைகள் தனிமனித முரண்பாட்டுக் கோலங்களாய் சிதறிக்கிடந்தது என்னவோ உண்மை தான். ஆனால் அது சமூக பண்பாட்டு உறவுகளில் விரிசல்களை கடந்தகாலத்தில் உண்டாக்கியது  என்று சொல்லுமளவிற்கு இல்லை என்பது தான் யதார்த்தம். ஆனாலும் ஈழத்தில் ஆரம்ப காலத்திலிருந்ததைப் போல் புலம் பெயர் தேசங்களில் சாதியின் பெயரால் யாருடைய முன்னேற்றமும் தடைப்பட்டதை நான் அறியவில்லை.

ஈழத்தின் பால் அக்கறை கொண்டவர்கள் இந்த வேற்றுமைகளை கடந்துதான் தங்கள் அர்ப்பணிப்புகளை இன்றுவரை செய்துகொண்டிருக்கிறார்கள். முந்தைய தலைமுறையைச் சேர்ந்த கொஞ்சம் அழுகிப்போன ஆப்பிள்கள் எப்போதும் போல் இன்னமும் அழுகிக்கொண்டுதானிருக்கின்றன. இவ்வளவு அழிவுகளுக்குப் பிறகும் நாம் சாதியால் பிளவுண்டு கிடந்தால், இந்த இனம் எப்போது தான் மீள்வது!! பிரிவுக்கு வேண்டுமானால் பிறர் காரணமாகலாம். ஈழத்தமிழர்களின் ஒற்றுமை என்பது அடுத்தவர் அறிவுரை கூற வருவதாய் கேலிப்பொருளாய்  இருக்கக்கூடாது என்பதுதான் என் கருத்து. அதை ஈழத்தமிழர்கள் எப்போதோ உணர்ந்தும் விட்டார்கள்.

எங்கள் புதிய தலைமுறை சாதிபேதம் அற்ற ஓர் சமுதாயத்தின் முன்னோடியாய் இருக்கிறது என்பதில் ஓர் ஈழத்தமிழாய் நான் பெருமைப்படுகிறேன். ஆம், எங்களிடம் சாதிபேதம் என்ற வேற்றுமைகள், முரண்பாடுகள் இருந்தது என்பதை ஒத்துக்கொள்கிறோம். ஆனால் கடந்தகால முரண்பாட்டு மூட்டைகளை அவிழ்த்துப்போட்டு ஆராய்ச்சி செய்வதில் இனிமேல் பயன் ஒன்றும் இல்லை. தயவு செய்து யாராவது பழங்கதை பேசி எங்கள் நிகழ்கால ஒற்றுமையை குலைக்காதீர்கள்.

ஆரம்பகாலங்களில் தமிழர் அமைப்புகள் என்பது பெரும்பாலும் ஊர்ச்சங்கங்கள் மற்றும் ஒன்றிரண்டு சமூக அமைப்புகள் (Social Movements) இப்படித்தான் இருந்தன. “பொங்குதமிழ்” என்ற நிகழ்வுதான் ஆரம்பத்தில் தமிழர்களை புலத்தில் ஒற்றுமையாய் சேரவைத்தது. எங்கள் உரிமைப்போரை வேரறுக்கும் முஸ்தீபு நடவடிக்கைகள் புலத்தில் இலங்கை அரசால் முடுக்கி விடப்பட்டபோது தமிழர்களால் தங்கள் ஒருமைப்பாட்டையும், ஈழவிடுதலையையும் வலியுறுத்தி எத்தனையோ தடைகளையும், ஒடுக்குமுறைகளையும் கடந்து நடத்தப்பட்ட நிகழ்வுதான் அது.

நாங்கள் என்ன தான் ஆயிரமாயிரமாய் கூடி எங்கள் அபிலாஷைகளை இவர்களுக்கு சொல்ல முயன்றாலும் எங்களின் செய்திகளுக்கு எந்தவொரு கனேடிய ஊடகமும் முக்கியத்துவம்  கொடுப்பதில்லை.  பயங்கரவாதத்திற்கு எதிரான என்ற போர்வையில் நாங்கள் ஈழத்தில் இறந்தர்வர்க்காய் வருடம் ஒருமுறை கூடியழக்கூட ஓர் மண்டபமேனும் கனடாவில் தரமறுத்தபோது ஜனநாயகம் இங்கேயும் ஏன் எங்களை மட்டும் புறக்கணிக்கிறது என்று வேதனையும், அயர்ச்சியுமே மிஞ்சியது.

அதன் பிறகு சின்ன, சின்னதாய் அறவழிப்போராட்டங்கள், சில அரசியல் முன்னெடுப்புகள் என்பன புலத்தில் நடந்தேறின. ஆனால், புலத்தில் Mainstream Media என்று சொல்லப்படுகிற தேசிய ஊடங்கங்களில் எங்கள் சமூக அமைப்புகளின் செயற்பாடுகள் செய்திகளில் புறக்கணிக்கப்பட்ட அரசியல் அப்போது ஏனோ புரியாமல் போனது. மாற்றங்கள் குறித்த எந்தவொரு சமூக அமைப்பின் முயற்சிகளும், போராட்டங்களும் பிரபல ஊடகங்களின் மூலம் தெரியவந்தால் அன்றி அந்த அமைப்புகளின் குறிக்கோள்கள் பொதுமக்களை அல்லது அதற்குரிய அரசியல் களங்களை சென்றடையாது என்பது தான் யதார்த்தமான உண்மை.

சிங்கள அரசு திரைமறைவில் அரசியல் ராஜதந்திர முயற்சிகளில் எங்களை முடக்கும் முயற்சிகளில் முனைப்பாய் இருக்க புலத்தில் எங்களின் அரசியல் வெளி முற்றுமுழுதாய் அடைக்கப்பட்டது. இலங்கையின் தலைநகரில் குண்டுவெடித்தால் பலகோணங்களில் படம்பிடித்து காட்டிய ஊடகங்கள், வடக்கு, கிழக்கில் தசாப்தங்களாய் அரச படைகள் நடத்தும் படுகொலைகளை அறியாமல் இருந்தார்களா என்று என் மனதில் கேள்வி எழாமல் இல்லை.

இப்படியே தமிழ் இணையத்தில், தமிழ் ஊடகங்கள் மூலம் மட்டுமே தாயக செய்திகளை அறியமுடிந்தது. ஈழத்திலிருந்து யாராவது தொலை பேசினால் எதைத் தான் பேசமுடியும். எல்லாம் உங்களுக்கு தெரியும் தானே என்று தங்கள் சொல்லமுடியாத அவலத்தை ஒற்றைவரியில் அடக்குவார்கள். ஈழத்தில் நிலைமைகள் மேசமடைந்து வன்னியில் அது உக்கிரமடையும் போது தான் ஈழத்தமிழர்கள் தாங்களாகவே வீதியில் இறங்கி போராடத்தொடங்கினார்கள். இந்தப் போராட்டங்களில் ஊர்ச்சங்கங்கள், சமூக அமைப்புகள், மாணவர் அமைப்புகள் எல்லோரும் காலத்தின் தேவை கருதி ஒன்றாய் நின்றார்கள்.

ஆனாலும், இவர்களையெல்லாம் முன்னின்று ஒன்றிணைத்து தமிழ் சமூகத்தை மட்டுமல்ல கனடிய சமூகத்தையே வியப்பில் ஆழ்த்தியவர்கள் எங்கள் இளையவர்கள். எங்கே, எதை, எப்படி செய்யவேண்டும் என்று அரசியல் கலந்து விளக்கமாய் சொல்லிகொடுத்தார்கள். இவர்களுக்கு பக்கபலமாய் போருக்கெதிரான அமைப்புகள், கல்விமான்கள், இங்குள்ள தொழிற்சங்கங்கள் , பல்கலைக்கழக மாணவர், இவர்களுக்கு களம் அமைத்துக்கொடுத்த தமிழ் ஊடகங்கள் மற்றும் பொருளாதார ரீதியில் உதவியளித்த தனியார் வியாபார நிறுவனங்கள் என்று எல்லோரும் உறுதுணையாய் நின்றார்கள்.

ஏற்கனவே தமிழன் மீது திட்டமிடப்பட்டு திணிக்கப்பட்ட தடைகளால் பயந்து கிடந்தவர்களுக்கு கனடாவின் உரிமைகள், சுதந்திரத்துக்கான சாசனத்தின் படி, “சிந்தனை, நம்பிக்கை, கருத்துரை, பத்திரிக்கை சுதந்திரம், பேச்சு சுதந்திரம், அமைதி நிலையில் ஒன்று கூடுதலுக்கான சுதந்திரம்” என்பதன் அடிப்படையில் வீதியில் இறங்கி போராடும் உரிமை உண்டு என்று புரிய வைத்தார்கள். இது எங்கள் சொந்த மண்ணல்ல. இங்கே எப்படி போராட முடியும் என்று தயங்கிய தமிழ் சமூகத்தை மிக குறுகிய காலத்தில் அரசியல் மயப்படுத்தினார்கள் எம் இளைய தலைமுறையினர்.

ஊர்வலங்கள், அமெரிக்க, இலங்கை, இந்திய, சீன தூதரகங்கள் முன் ஆர்ப்பாட்ட ஒன்றுகூடல், மனிதச்சங்கிலி இப்படித்தான் போராட்ட வடிவங்கள் இருந்தன. Acting Crowd என்ற கருத்தியல் காட்சியாய் கண் முன்  விரிவதை தமிழ் சினிமாவில் மட்டுமே பார்த்திருக்கிறேன். அதன் உண்மையான வடிவத்தை சில பல்கலைக்கழக மாணவர்கள் கனடாவிலுள்ள இலங்கை தூதரகத்துக்கு சென்று ஈழத்தமிழர்களை கொல்வதை நிறுத்தும்படி வேண்டுகோள்  விடுத்தபோதுதான் நேரடியாக கண்டுகொண்டேன். “நீங்கள் தானே கனடாவில் எங்களை பிரதிநிதித்துவப்படுத்துவதாக சொல்கிறீர்கள். அதனால் உங்களிடம் ஓர் வேண்டுகோளை முன்வைக்க வந்திருக்கிறோம்” என்று சொன்ன சில பல்கலைக்கழக மாணவர்களை அவர்கள் தமிழர்கள் என்பதால் “பயங்கரவாதிகள்” என்று முத்திரை குத்தி இலங்கை தூதரக அதிகாரிகள் கனடிய காவல் துறையை வேறு துணைக்கழைத்தார்கள்.

எப்போதுமே பரபரப்பு செய்திகளுக்கு அலையும் கனடிய ஊடகங்கள் பரிவாரங்களோடு வந்து அதை வானலையில் எடுத்துவந்து உதவினார்கள். மாணவர்கள் வரம்பு மீறுவார்கள்; அதை அப்படியே நேரலையில் ஒளிபரப்பி ஓர் பரபரப்பு செய்தி காட்டலாம் என்று காத்திருந்தார்கள். அவர்களின் எதிர்பார்ப்பு பொய்த்துப்போனது வேறுவிடயம். அது அப்படியே தமிழ் ஊடகங்கள் மூலமாக தமிழ் பொதுமக்களையும் சென்றடைந்தது. யாருடைய தூண்டுதலோ அல்லது வழிநடத்தலோ இல்லாமலே அங்கிருந்த மாணவர்களுக்கு ஏதாவது நடக்கக்கூடாது என்ற பதைப்புடனும், அடுத்து என்ன நடக்கும் என்ற அச்சத்துடனும் தமிழர்கள் Toronto விலுள்ள இலங்கை தூதரகம் முன் ஒன்றாய் கூடி கோசங்களை எழுப்பத்தொடங்கினர்.

இந்த நிகழ்வு மேலும் புலத்தில் தமிழர்களுக்கு வீதியில் இறங்கி போராடும் தைரியத்தை கொடுத்தது. முக்கியமான ஊர்வலம் என்றால் தமிழர்கள் அதிகம் வாழும் Ontario மாகாணத்தில் இதயப்பகுதி என்றழைக்கப்படுகிற Toronto வின் முக்கியமான தெருக்களில் நடந்ததை தான் குறிப்பிடவேண்டும். ஏறக்குறைய ஒரு லட்சம் மக்கள் கலந்து கொண்டார்கள். அடுத்து அமெரிக்க துணை தூதரகத்தின் முன் இரவு பகலாய், பனியையும் மழையையும், குளிரையும் கொஞ்சமேனும் பொருட்படுத்தாமல் மாதக்கணக்கில் நடந்த ஆர்ப்பாட்ட ஒன்றுகூடல். இவையெல்லாம் கனடிய ஊடகங்களின் கவனத்தை எங்கள் பக்கம் திருப்பியது.

அதுவரை ஈழத்தமிழர் பிரச்சனையைப் பற்றி பேசாத கனடிய ஊடகங்கள், ஈழப்பிரச்சனையில் இலங்கை அரசு சொல்வதிலிருந்து முற்றிலும் வித்தியாசமான தமிழர்களுக்கென்று ஓர் கருத்து உண்டு என்பதை புரிந்து கொள்ளத்தொடங்கினார்கள். Live, நேரடி, ஒளி, ஒலிபரப்பில் எம்மவர்களையும், சமூக அமைப்பை சேர்ந்த தலைவர்களையும் பேசவைத்து எங்கள் கருத்துகளை கனடிய சமூகத்தினருக்கும், அரசியல்வாதிகளுக்கும் எட்டச் செய்தார்கள். ஈழத்தமிழர்கள் பிரச்சனை ஓரளவிற்கு கனடிய அரசுக்கு தெரிந்தாலும் Mainstream Media மூலம் அது வெளியே சொல்லப்படவில்லை என்றால் அரசியல்வாதிகளும், அரசுகளும் வாழாதிருப்பார்கள்.

கனடிய ஊடகங்கள் எங்கள் செய்திக்கு முக்கியத்துவம் கொடுக்கத்தொடங்க எம்மவர்களும் இன்னும் அதிகமாக போராட்டங்களில் கலந்துகொள்ளத்தொடங்கினார்கள். சமூக அமைப்புகளோடு சேர்ந்து ஒட்டுமொத்த சமூகமாய் ஒன்றாய் நின்று முயற்சி செய்தபோது அதற்குரிய பலம், அங்கீகாரம் இரண்டுமே கிட்டியது.

ஈழத்தில் போர்நிறுத்தம் வரும்வரையில் ஓய்வதில்லை என்ற உறுதியுடன் ஊர்வலங்கள் போனோம், உண்ணாவிரதமிருந்தோம், ஒன்றுகூடி ஆர்ப்பாட்டம் செய்தோம். தமிழர்கள் வாழ்ந்த ஒவ்வோர் மாகாணத்திலும் (Quebec-Montreal, British Columbia-Vancouver, Ontario-Metro Toronto) நகர்களிலும் தங்கள் முதுமை, மூட்டுவலி என்று எதையும் பொருட்படுத்தாது முதியோரும், மகளிர் அமைப்புகளும் கவனயீர்ப்பு நிகழ்வுகளை நடத்தினோம். கனடிய அரசைப்பொறுத்தவரை எல்லாமே செவிடன் காதில் ஊதிய சங்காய் ஆனது.

இனிமேல் பொறுப்பதற்கு காலம் இல்லை என்று சில மாணவர்கள் கனடிய பாராளுமன்றத்தின் முன் வாரங்களாய் தாங்கள் வாக்களித்து, தேர்ந்தெடுத்து பாராளுமன்றத்திற்கு அனுப்பிய ஒருவராவது வந்து எங்கள் மனிதாபிமானக் கோரிக்கைகளை செவிமடுப்பார்கள் என்று இரவு பகலாய் எலும்பையும் துளைக்கும் குளிரில் விறைத்து கொண்டே காத்துக்கிடந்தார்கள். உண்ணாவிரதம் இருந்தார்கள். நாங்களும் எங்களால் முடிந்தவரை முப்பதாயிரம் பேர் வரை நாடாளுமன்றத்தின் முன் கூடி, கோஷமிட்டு, அழுது மண்டியிட்டு எங்கள் உறவுகளுக்காய் உயிர் பிச்சை கேட்டோம்.

பாராளுமன்றத்தை விடுமுறைக்காய் மூடும் கடைசி நாளில் நாங்கள் மழையிலும் குளிரிலும் வெளியே நம்பிக்கையின் கடைசி இழையும் அறுந்து போகும் தறுவாயில் உயிர் பதைத்துக் காத்துக்கிடந்தோம். எங்கள் இனப்படுகொலையை தடுத்து நிறுத்துங்கள் என்று நாங்கள் பாராளுமன்ற வாசலில் நின்ற அதேநேரம், சில அரசியல் வாதிகள்  Holocaust Survivors என்றழைக்கப்படும் யூத இன முதியோர்களை கைப்பிடித்து அழைத்து வந்து மேடையேற்றி யூத இனத்தவர்கள் படுகொலை செய்யப்பட்டதை, அதிலிருந்து தப்பிழைத்தவர்களின் கதைகளை உணர்வுபூர்வமாக, உருக்கமாக கேட்டுக்கொண்டிருந்ததை பிறகு தொலைக்காட்சியில் பார்க்க நேரிட்ட போது ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்கவே பயந்து (அழுதுவிடுவோம் என்ற பயம் தான்) கல்லாய் சமைந்தோம்.

இவற்றையெல்லாம் விட எரிச்சலான விடயம் கனடிய பாரளுமன்றத்தில் எங்களுக்காய் ஓர் சிறப்பு விவாதமொன்றில் பாராளுமன்ற உறுப்பினர்கள் (Visible Minority களுக்கான சிறப்பு விவாதம். வழக்கம் போல் எங்கள் கனடிய பிரதமர் கலந்துகொள்ளவில்லை என்பதை வருத்தம் ஏதுமின்றி பதிந்துகொள்கிறேன்) மூச்சைப்பிடித்து, இரவை நீட்டித்து   எங்களுக்காய்  விவாதம் செய்து “இலங்கை” அரசுக்கு ஒரு மில்லியன் டாலர்களை கொடுப்பது என்று தீர்மானம் நிறைவேற்றினார்கள். இதில் ஒற்றை காசாவது தமிழனுக்கு போய் சேருமா என்பது ஒருபுறமிருக்கட்டும். ஈழத்தில் வன்னி காடுகளில் செத்துக்கொண்டிருக்கும் தமிழனுக்காய், அவன் பெற்ற குழந்தைகளுக்காய் நாங்கள் போர் நிறுத்தம் வேண்டி நிற்க தமிழகத்திலிருந்து சட்டி பானையும், புடவை துணியும் அனுப்பிய கதைக்கும் இதற்கும் ஏதாவது வேறுபாடு உண்டா?

பூமிப்பந்தின் எந்தவொரு நாடாயினும் அரசியலின் இயங்குவிதி எப்போதுமே ஒன்றுதான் போலும். நாடாளுமன்றத்தின் கதவுகள் மூடப்பட, அடித்துப்பிடித்து, முண்டியடித்து மாகாண சபை மன்றத்தின் முன் கூடினோம் (Ontario, Queen’s Park). அங்கேயும் அழுதோம், ஒப்பாரி வைத்தோம், கோஷமிட்டோம், எங்கள் முன் தோன்றி ஓரிரு வார்த்தைகள் பேசிய குட்டி அரசியல் வாதிகளுக்கு வானைப்பிளக்கும் அளவிற்கு கை தட்டினோம். அவர்களும் இந்த அப்பாவிகள் எப்படியும் அடுத்த தேர்தலில் எனக்கே வாக்களிக்கும் அளவிற்கு பேசியிருக்கிறேன் என்ற திருப்தியோடு எங்களிடம் தமிழில் “நன்றி, வணக்கம்” சொல்லி விடை பெற்றார்கள்.

இவை தவிர ஒருமுறை Ontario, Toronto வில் அமெரிக்க துணைத்தூதரகத்திற்கு முன் கூடி நின்ற தமிழர்கள் ஊர்வலம் போகிறோம் என்று ஓர் இரவு அகால வேளையில் பெருந்தெரு (Gardner Express Way) ஒன்றை உயிரை கூட துச்சமாக மதித்து வழிமறித்தார்கள். உற்பத்திக்கான பொருட்களை சேவைகளை காவிச் செல்வதில் Ontario வில் இந்த பெருந்தெருக்கள் (Highway) மிக முக்கியமானவை. கனடிய சட்ட திட்டங்களின் படி பார்த்தால் பெருந்தெருவை வழிமறிப்பது என்பது எல்லை மீறும் செயல் தான். பொது மக்களுக்கு அசெளகர்யங்களை உண்டாக்கும் செயல் தான். என்னதான் ஈழத்தின் உறவுகள் படும் துன்பம் எங்களை வதைத்தாலும் யாருமே இங்கு வன்முறையில் ஈடுபடவில்லை என்பதும் மிகவும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது. அவர்கள் செய்ததது சரியா, பிழையா என்று இன்றுவரை என்னால் ஓர் முடிவுக்கு வர முடியவில்லை.

அன்றிரவு வேலைத்தளத்தில் இருந்ததனால் நான் பங்குபற்றவில்லை. ஆனால் அன்றிருந்த மனோ நிலையில் ஊர்வலத்தில் நானும் இருந்திருந்தால் நிச்சயம் அவர்களில் ஒருவாராகியிருப்பேன் என்று தான் தோன்றுகிறது. அன்று அரசு இயந்திரம் நினைத்திருந்தால் எம்மவர்களை அற்ப பதர்களாய் காவல் துறையை கொண்டு எத்தனையோ வழிகளில் அங்கிருந்து துரத்தியடித்திருக்க முடியும். ஏன், கைது செய்து சட்டப்படி நடவடிக்கை கூட எடுத்திருக்கலாம். அப்படி ஏன் செய்யவில்லை என்பதற்கு எனக்கு தெரிந்த ஒரே காரணம் அந்த நேரங் கெட்ட நேரத்தில் சின்னஞ்சிறு குழந்தைகளுடன் பல பெண்களும் அங்கு நின்றதது தான்.

அதை தொலைக்காட்சியில் பார்த்த போது உண்மையில் கொஞ்சம் அதிர்ந்து தான் போனேன். எங்கள் குடும்ப நண்பர்களில் ஒரு பெண் தனது ஆறே, ஆறு மாத குழந்தையுடன் அங்கு சென்று வந்த அனுபவத்தை பின்னர் எனக்கு சொன்னார். அன்று எங்களைப் பற்றி அநேகமான கனேடியர்கள் வாயிலிருந்து உதித்த வார்த்தைள், “They are crazy” என்பது தான். நிச்சயமாக யாரும் சட்டத்தை மதிக்காமல் இதை செய்யவில்லை என்பது தான் எனது கருத்து. இதையெல்லாம் Collective Behavior, Moral Panic என்று யாராவது விமர்சிக்கலாம். ஆனால், எங்கள் மீதான இந்த கருத்தியல் விமர்சனங்களைத் தாண்டி நாங்கள்  வேண்டியதெல்லாம் ஈழத்தில் இனப்படுகொலை தடுத்து நிறுத்தப்படவேண்டும், நிரந்தர போர்நிறுத்தம் செய்ய கனடா முயல வேண்டும் என்பது தான்.

இந்த ஒரு விடயத்தில் அன்று எங்கள் மனோநிலையை புரிந்து கொண்டு எங்கள் மீது கடும் நடவடிக்கை ஏதும் எடுக்காத கனடாவுக்கு என் நன்றிகள். அடுத்து, எந்தவொரு விடயத்திலும் சமூகத்தில் ஓர் பிரக்ஞையை, விழிப்புணர்வை உருவாக்க வேண்டுமானால் சில பிரபலங்களின் புகழும் திறமையும் கூட பயன்படுத்தப்படுவதுண்டு. எங்கள் புலம் பெயர் ஈழத் தமிழ் சமூகத்தில் சர்வதேச ரீதியில் புகழ் பெற்றவர்கள் என்று யாரும் எங்களுக்காய் குரல் கொடுக்குமளவிற்கு பிரபல்யம் அடைந்திருக்கவில்லை. ஆனால் ஓரளவிற்கேனும் இசை மூலம் அறியப்பட்டவர் என்ற ரீதியில் M.I.A, என்றழைக்கப்படுகிற மாயா அருட்பிரகாசம் என்பவர் தான் பிரித்தானிய, அமெரிக்க, கனேடிய தொலைக்காட்சிகள் மூலம் மறுக்கப்பட்ட ஈழத்தமிழர்களின் உரிமைகள் பற்றி பேசினார். இதற்காக அவர் தேவைக்கதிகமாகவே விமர்சனங்களுக்குள்ளானது வேறு விடயம்.

சோமாலியாவுக்கு ஓர் K’naan என்றால், ஈழத்திற்கு ஓர் M.I.A, மாயா. இசையில் புயலாய், சூறாவளியாய், தென்றலாய் என்றெல்லாம் அடைமொழி கொண்டவர்கள் அல்ல இவர்கள். ஆனால், தாம் சார்ந்த மக்களின் வலிகளை இசைமூலம் யாதார்த்தமாய் உலகிற்கு உணர்த்த முயலும் சாதாரணர்கள். இன்னும் புலத்தில் அவர்களின் திறமைகள் இனங்காணப்படாமல் எத்தனையோ இளைய தலைமுறையினர் எங்களின் வலிகளை பாடல்களாய் இசை மூலம் சொல்லும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

இறுதியாக புலம்பெயர் மண்ணில் இந்த போராட்டங்கள் அதன் விளைவுகள் பற்றிய இங்குள்ள மக்களின் கருத்துகள், நிலைப்பாடுகள் பற்றி சுருக்கமாக பதிந்து கொள்கிறேன். கனடியர்களில் ஒரு சாராரின் நிலைப்பாடு, உங்களுக்கு இந்த மண்ணில் அடைக்கலம் தந்திருக்கிறோம். உங்கள் பிரச்சனைகளை இங்கே கொண்டுவராதீர்கள் என்பதாகத்தான் இருந்தது. அவர்களின் கருத்தை முற்றுமுழுதாக மறுதலிக்க முடியாது தான். இங்குள்ள பெருந்தெருவை மறித்த போது இருவர் சொன்ன கருத்துக்களை இங்குள்ள ஊடகம் ஒன்று திருப்பி, திருப்பி ஒளிபரப்பியது. ஒருவர் சொன்னது, நான் மேலே சொன்னது தான். உங்கள் பிரச்சனைகளை இங்கே கொண்டு வராதீர்கள். அமைதியாய் இருக்கும் கனடாவில் பிரச்சனைகளை உண்டு பண்ணாதீர்கள்.

அமெரிக்காவின் வாலைப்பிடித்துக்கொண்டு இவர்கள் எந்தப்பிரச்சனையையும் கனடாவுக்குள் கொண்டுவருவதில்லை. எல்லாத்தையும் நாங்கள் தான் கொண்டுவருகிறோமா? என்னவோ போங்கள்!! இரண்டாமவர் சொன்னது அவர்களின் பிரச்சனையும், மனோ நிலையும் புரிந்துகொள்ளப்படவேண்டியவை. ஒரு முறை ஓர் ஊர்வலத்தின் போது நான்கு பாலஸ்தீனிய மாணவர்கள் எங்களிடம் வந்து சொன்னது, “We support you guys”. ஊர்வலங்கள், ஒன்றுகூடல்களின் போது நான் பொதுவாக கவனித்தது கறுப்பின மக்கள் தங்கள் ஆதரவை எங்களுக்கு தெரிவித்துப் போனது தான். “இப்போது வீதிகளில் நீங்கள் இவர்களுக்கு ஓர் இடைஞ்சலாய் இருக்கலாம். ஆனால், வரலாறு நிச்சயம் உங்களை ஓர் நாள் திரும்பிப்பார்க்கும்” என்று எங்களை கடந்து போன ஓர் கறுப்பின மூதாட்டி சொல்லிப்போனார்.

இவர்களுக்கு நாங்கள் அதிகமாய் உண்டு பண்ணிய இடைஞ்சல் என்னவென்பதை ஒரு ஆங்கில தொலைக்காட்சி நிருபர் அழகாகவும், சற்றே நக்கல் கலந்த தொனியுடனும் சொன்னார். இந்த ஊர்வலங்கள், ஒன்று கூடல்கள் கனடியர்களுக்கு “Ball Games” இற்கு நேரத்திற்கு போகமுடியாமல் போக்குவத்து நெரிசல்களை உண்டாக்கியது தான். கூடவே பத்திரிகைகளில், ஊடக கருத்து கணிப்புகளில் எங்கள் மீது விஷத்தை கக்கும், எங்களுக்கு ஆதரவளிக்கும் கருத்துகளும் பதியப்பட்டன. இனவழிப்பில் இருந்து தப்பிவந்த ருவாண்டாவை சேர்ந்தவர்கள் எங்களுக்காய் நகரின் மையப்பகுதியில் ஓர் இசைநிகழ்ச்சியோடு கூடிய ஓர் கவனயீர்ப்பு நிகழ்வை நடத்தினார்கள். நன்றிகள்.

ஆம், எங்கள் ஊர்வலங்கள், கவனயீர்ப்பு போராட்டங்கள் இங்குள்ள பொதுமக்களுக்கு சில அசெளகர்யங்களை உண்டுபண்ணியது என்பதை நான் மறுக்கவில்லை. பொதுமக்களுக்கு அசெளகர்யங்களை உண்டாக்குவது எங்கள் நோக்கமல்ல. எம் இனவழிப்பை தடுத்து நிறுத்த எங்களுக்கு வேறு வழியும் தெரியவில்லை. காவல் துறையினருடன் தள்ளு, முள்ளுப்பட்டதும் உண்டு. ஆனால், பெரும்பாலான சந்தர்ப்பங்களில் எங்களுக்கு ஆதரவளித்தார்கள் என்பதை விட தங்கள் கடமையை அவர்கள் செய்தார்கள் அவ்வளவே. இருந்தாலும் அவர்களுக்கும் எங்கள் நன்றிகள்.

ஒரு முறை Queen’s Park முன் கூடி நின்ற போது எங்களுக்கு எதிராக சில விஷமிகள் “எங்களை பயங்கரவாதிகள்” என்று எழுதி ஓர் சிறிய விமானத்தில் கட்டியிழுத்துக்கொண்டு Toronto வை சுற்றிப்பறந்தார்கள். காவல் துறை தலையிட்டு அந்த விமானத்தை உடனடியாக தரையிறக்க வைத்தது மறக்க முடியாதது. எங்களைப் பொறுத்துக் கொண்டதற்கு கனேடிய காவல் துறைக்கும், பொதுமக்களுக்கும் மீண்டும் நன்றிகள். நாம் கனடாவில் மறக்காமல் நன்றி சொல்லவேண்டிய மற்றவர்கள், தமிழக தமிழர்கள். கனடாவில் ஒப்பீடு ரீதியில் வட இந்தியர்களே அதிகம் வாழுகிறார்கள். தமிழ்நாட்டு தமிழர்கள் எண்ணிக்கையில் குறைவாய் தானிருக்கிறார்கள். அவர்கள் குறைந்த எண்ணிக்கையானோர் ஆயினும் எங்களோடு வீதிகளில் இறங்கி போராடத்தவறவில்லை. இது தங்களின் கடமை. தன் இனம் அழிக்கப்படுகிறது. அதனால் நான் இங்கே அவர்களுக்காய் குரல் கொடுக்கிறேன் என்று கண்கலங்கியபடியே சொன்னவர்களையும் பார்த்திருக்கிறேன். நன்றிகள் உறவுகளே.

இந்த போராட்டங்களின் மூலம் நாங்கள் முற்றுமுழுதாக எதையும் சாதிக்கவில்லை என்று சொல்லமுடியாது. என்னைப் பொறுத்தவரை இலங்கை அரசின் முகமூடியை ஓரளவிற்கு கிழிக்க முடிந்தது. எங்களின் மறுக்கப்பட்ட உரிமைகள், அபிலாஷைகளை உலகிற்கு சொல்ல முடிந்தது. இலங்கை அரசை, அவர்களின் பிரதிநிதிகளை கடந்து எங்கள் கருத்துகளையும் ஊடகங்கள் கேட்கவும், அவற்றை மக்களிடம் எடுத்து செல்லவும் முடிந்தது. தவிர கனேடியர்களே ஈழத்தமிழர்கள் விடயத்தில் கனடாவின் செயலற்ற தன்மைகளை சுட்டிக்காட்ட வைத்தது. கனடாவுக்கு இது தேவையற்ற சோலி. கனடா தானுண்டு தன் வேலையுண்டு என்று இருக்க வேண்டும் என்றும் சிலர் சொன்னார்கள். மிக முக்கியமாக நாங்கள் கவனிக்க வேண்டியது, நாங்கள் கனேடிய சமூகத்தால் அடையாளம் காணப்பட்டதும் தான். முதலில் பத்தோடு பதினொன்று நிலைதான்.

ஆனால், இந்த போராட்டங்களுக்கு பிறகு நாங்கள் ஓர் கட்டுக்கோப்பான, ஒற்றுமையான (ஒருபோதும் மறக்காதீர்கள் ஈழத்தமிழர்களே) சமூகம் என்று அடையாளம் காணப்பட்டோம். நாங்கள் ஊர்வலம் நடத்தினால் வீதிகள் கூட சுத்தமாகும். அவ்வளவு பொறுப்போடு எம் இளையோர் குப்பைகளை கூட பொறுக்கிப் போட்டார்கள். கனேடிய ஊடகங்கள், கவனயீர்ப்பு நிகழ்வில் ஒரு லட்சம் பேர் கலந்து கொண்டாலும் அதை நேர்த்தியாக, கட்டுக்கோப்பாக நடத்துவதை வெளிப்படையாகவே பாராட்டின. இவ்வளவையும் சாதித்துக்காட்டியவர்கள் எம் இளையோர்.

எமக்குரிய தீர்வை நோக்கிய சில வெளிச்சப்புள்ளிகள் சற்றே வெளியே தெரிய ஆரம்பித்திருக்கிறது. Channel 4 என்கிற பிரித்தானிய ஊடகம் முதல் சர்வதேச மன்னிப்புசபை (Amnesty International), சர்வதேச நெருக்கடிகள் குழு (International Crisis Group), மனித உரிமைகள் காப்பகம் (Human Rights Watch) போன்றவை இலங்கையில் போர்க்குற்றம் இழைக்கப்பட்டிருக்கிறது என்றும் இலங்கை அரசு போர்க்குற்றம் தொடர்பாக விசாரிக்கப்பட வேண்டும் என்று சர்வதேச சமூகத்திற்கு ஆதாரங்களோடு அழுத்தங்களை கொடுக்க ஆரம்பித்திருக்கிருக்கிறார்கள். இலங்கையின் போர்க்குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் எங்களுக்குரிய நீதி தானாகவே கிடைக்கும் என்று பல தரப்பினரும் சொல்கிறார்கள்.

ஆனால் அது ஒரு நீண்ட நெடுந்தூரப்பயணம். நாங்கள் வெட்டியாய் வாழாதிருந்தால் மேற்கொண்டு எதுவுமே நடக்காது. தொடர்ந்து எங்களின் ஒன்றுபட்ட செயற்பாடுகள் மூலம் அவர்களின் முயற்சிகளுக்கு ஈழத்தமிழர்களாக துணை புரிவோம். சர்வதேச சமூகத்திற்கு நாங்கள் கொடுக்கும் அழுத்தங்கள் தான் அவர்களையும் எங்கள் விடயத்தில் எதையாவது செய்யத்தூண்டும். தமிழக தமிழர்களே ஓர் அந்நிய தேசத்து ஊடகத்திற்கு எங்கள் இனப்படுகொலையை நிரூபிக்க வேண்டும் என்ற தேவை எந்தளவிற்கு இருக்கிறது என்று எனக்கு சொல்லத்தெரியவில்லை.

ஈழத்தின் இனப்படுகொலையை மிக அண்மையிலிருந்தும் இந்திய, தமிழக ஊடகங்கள் வெளியே கொண்டுவராமல் வாழாதிருக்கிறார்கள். அதை வெளியே தமிழகம் மட்டுமல்ல இந்தியா முழுதும் அறியும் படி செய்யுங்கள். ஓர் வரலாற்றுப்பிழையை அரசியல் வேண்டுமானால் இழைக்கட்டும். நீங்கள் வரலாற்றுக்கடமையிலிருந்து விலகாதீர்கள். ஈழப்போரின் விளைவாக கொதிநிலையில் இருக்கும் தமிழ்நாட்டின் இளைஞர்கள் மத்தியில் மாற்றங்கள் உருவாகுவதை அவதானிக்கிறேன். ஆரோக்கியமான, நம்பிக்கை தரும் மாற்றம். ஈழத்தின் பெயரால் அரசியல் நடத்துபவர்களை மக்களுக்கு அடையாளம் காட்டுங்கள்.

காலங்காலமாய் அடுத்தவர் மீதும், அடுத்த தலைமுறைகளிடமும் குற்றச்சாட்டுக்களை மட்டுமே கடத்திவிட்டு எமக்குரிய பொறுப்புகளிலிருந்து சுலபமாய் தப்பித்து வந்திருக்கிறோம். அந்தக்குற்ற உணர்விலிருந்து விடுபடவாவது எதையாவது சாதித்துவிட்டு அடுத்தவரை, அவர் தம் செயல்களை விமர்சிக்கலாம் என்பதே என் கருத்து. ஈழத்தின் உண்மை நிலையை, தேவையை தமிழகம் முழுக்க அறியச்செய்யுங்கள். இந்தியாவின், தமிழகத்தின் ஊடகங்களும், அரசியலும் செய்யத்தவறியதை நீங்கள் செய்வீர்கள் என்ற எதிர்பார்ப்புடனும், ஈழத்தின் விடிவை என் வாழ்நாளில் காணுவேன் என்ற நம்பிக்கையுடனும்…..!

———————————————————————————————–

நான் ஏன் வினவு தளத்தில் எழுத ஆரம்பித்தேன்! ஈழப்போர் கொஞ்சம் மோசமடையத்தொடங்க  என்னுள் ஓர் அமைதியின்மையும், பதட்டமும் பரவத்தொடங்கியது. எங்கள் மறுக்கப்பட்ட உரிமைகளுக்கான போராட்டம்  நசுக்கப்படுவது என்னை மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழ்சமூகத்தையே நம்பிக்கையற்றவர்களாக மாற்றிவிடுமோ என்ற பயம் தலைதூக்கியது. புதினம், Tamilnet, யாழ் களம் என்பதுதான் ஆரம்பத்தில் என் இணையத்தின் எல்லைகோடாய் இருந்தது. ஈழப்போர் உக்கிரமடையத்தொடங்க அதன் எல்லைக்கோடும் நீண்டது.

ஈழத்தின் வீழ்ச்சியில் மகிழ்ச்சி கொள்ளும் சில ஈழத்தமிழர்களும் இருக்கிறார்கள் என்ற உண்மை என்னை சுடத்தொடங்கியது. எங்கள் பக்க நியாயங்களை சொல்ல கொஞ்சம் இணையத்தில் அதிக நேரம் செலவிடத் தொடங்கினேன். அப்போது யாழ் களத்தில் அறிமுகமானது தான் வினவு தளம். நாங்கள் புலத்தில் வீதியில் நின்று போராடியபோது அவர்களும் சில போராட்டங்களை ஈழத்தமிழர்களுக்காக செய்ததை வினவு தளத்தில் பார்க்கநேரிட்டது. தமிழக ஊடகங்கள் செய்யவேண்டியதை இவர்கள் செய்துகொண்டிருப்பதாக தோன்றியது.

வினவு நண்பர்களுக்கு நன்றி சொல்ல வந்து, சிறிது சிறிதாய், அவசர அவசரமாய் பின்னூட்டமிட்டு விட்டு ஓடிக்கொண்டிருந்தேன். ஒரு நாள் என்னை மின்னஞ்சலில் இழுத்துப்பிடித்துக் கேட்டார்கள், ஈழம் பற்றிய உங்கள் அனுபவத்தை ஏன் வினவு தளத்தில் எழுதக்கூடாது என்று. முதலில் நிறையவே தயக்கம் தான் என்னிடமிருந்தது. இதற்கு முன் பதிவெழுதிய முன் அனுபவம் கூட எனக்கில்லை. எந்த நம்பிக்கையில் இவர்கள் என்னை எழுதச் சொல்கிறார்கள் என்று ஏதேதோ யோசித்தேன். இழுத்தடித்து வாரக்கணக்காய் யோசித்து சரி சொன்னேன். அவர்களின் நோக்கம் நல்லதாய் பட்டது. உண்மையில், என்னால் முடியும் என்று நிறையவே நம்பிக்கை கொடுத்தார்கள்.

ஒவ்வொரு பதிவையும் எழுதி முடித்துவிட்டு பரீட்சை எழுதிய ஓர் மாணவி போல் வினவின் பதிலுக்காய் காத்திருப்பேன். “இந்த பதிவும் நன்றாக வந்திருக்கிறது. உங்கள் எழுத்தின் முன்னேற்றத்தில் ஓர் தாயைப்போல் பூரிப்படைகிறோம்” என்று நிறையவே தட்டிக்கொடுத்தார்கள். சந்தோசப்பட்டேன். என்னை எழுதச்சொன்னவர்களின் நம்பிக்கையை காப்பாற்றவேண்டும் என்ற கவனத்துடன் முடிந்தவரை எழுத முயற்சித்தேன். ஏதாவது விடுபட்டுப்போனால் அதைரியப்படுத்தாமல் சுட்டிக்காடினார்கள். நன்றிகள்.

பதிவுலகின் ஓர் சாபக்கேடான தனிநபர் தாக்குதலுக்கு நானும் ஆளானேன். எடுத்த எடுப்பிலேயே என்னை ஒருவர் “Facist” என்று முத்திரை குத்த நிறையவே அதிர்ந்துதான் போனேன். அது இன்றுவரை கசப்பாய் என் மனதில் படிந்து போனது தவிர்க்கவியலாதது. இன்னொருவர் நான் அறியவே அறியாத ஓர் இணையத்தளத்தில் வேறு யாரோ பதிந்த கருத்தை நான் பதிந்ததாக என் மீது சகட்டு மேனிக்கு சேறு வாரி வீசியது எல்லாமே என்னை மன உளைச்சலுக்கு ஆளாக்கியது. இது அத்தனையும் நான் புலி அபிமானி என்பதால் தான்.

புலி பற்றி எழுது என்றார்கள், எழுதாதே என்றார்கள். ஈழத்தில் புலிகள் இல்லாத தமிழன் நிலை என்ன என்பதை இணையத்தில் எனக்கு உணர்த்தினார்கள். இதில் நான் ஈழ வரலாற்றை எழுதுவதாய் சிலரின் எதிர்ப்பு வேறு. ஏன் அந்த மண்ணில் பிறந்து வளர்ந்த, அந்த காற்றை சுவாசித்த, போரின் வலிகளை சுமக்கும் எனக்கு எந்த தகுதி இல்லை ஈழவரலாற்றை எழுதுவதற்கு என்று யோசிக்க வைத்தார்கள். நான் வினவு தளத்தில் அதை எழுதக்கூடாது என்று என்னை எதிருங்கள் எனக்கு ஆட்சேபனை இல்லை. எத்தனையோ பேர் எழுதி விடியாத ஈழத்தமிழன் விதி நான் எழுதியா விடியப்போகிறது என்று நினைத்து ஏன் தேவையற்ற மன உளைச்சலுக்கு ஆளாக வேண்டுமென்று எழுதமாட்டேன் என்று சொன்னேன்.

ஆனால், எனக்கு வினவு மற்றும் வினவு நண்பர்கள் உறுதுணையாய் இருந்தார்கள். ஆறுதலாய் இருந்தது. அப்போது நான் எழுதுவதை நிறுத்தக்கூடாது என்று மிகவும் அக்கறையோடு எனக்கு ஆதரவாக பேசியவர் நான் மதிக்கும் இணையத்தள நண்பர் R.V. மற்றும் பல நண்பர்கள். அவர்கள் அனைவருக்கும்  என் மனம் நிறைந்த நன்றிகள். நண்பர் R.V சொன்னது போல் நான் இணையத்தில் எழுதவந்து சில நல்ல நண்பர்களை சம்பாதித்தது சந்தோசமாக இருக்கிறது.

அது தவிர நான் ஈழத்தின் அவலத்தை என் அனுபவம் மூலம் சொன்னேன் என்பதை போலவே வினவுக்கு நான் ஈழம் பற்றி தொடர்ந்து எழுதுகிறேன் என்ற வாக்கை காப்பாற்றிவிட்டேன் என்பது கூட நிறைவை தருகிறது. ஈழம் பற்றி, ஈழத்தமிழனின் வலிகள் பற்றிப்பேச  உங்கள் தளத்தில் களம் அமைத்துக்கொடுத்த உங்களுக்கு என் நன்றிகள், வினவு.

ரதி

___________________________________________________

ரதியின் “ஈழத்தின் நினைவுகள்” இத்துடன் நிறைவுபெறுகிறது. எங்கள் கோரிக்கையை ஏற்று கிட்டத்தட்ட ஒரு வருட காலமாய் இந்த தொடரின் மூலம் தனது நினைவுகளை உணர்ச்சிக் குவியலாய் பகிர்ந்து கொண்ட ரதிக்கு நன்றி. இந்த தொடர் ஆரம்பித்தபோது முள்ளிவாய்க்காலில் இன அழிப்பு போர் முடிவுக்கு வந்திருந்தது. எல்லா நம்பிக்கைகளும் சோர்வுற்றிருந்த நேரத்தில் ஈழத்தின் நினைவுகளை மீண்டும் மீண்டும் மீட்டி கொண்டிவரும் அவசியமிருக்கிறது என்பதற்காகவே ரதியை எழுதுமாறு கோரினோம்.

இது அவரது தனிப்பட்ட அனுபவங்கள் மட்டுமல்ல, அகதிகளாய் விரட்டப்பட்ட ஈழத் தமிழினத்தின் வரலாற்றில் ஒர் அத்தியாயமும் கூட. இத்தகைய அனுபவங்கள் பதிவு செய்யப்படுவது எதிர்கால சந்ததியினருக்கு அவசியம். தனது அரசியல் தவறுகளை மீளாய்வு செய்து எதிர்காலத்தில் ஈழத்தமிழ் மக்கள் தங்களது உரிமைகளை வென்றெடுப்பார்கள். அந்த நம்பிக்கையுடன் ரதி இந்தத் தொடரை முடித்திருக்கிறார். போராடுவோம், இறுதிவரை!

–          வினவு

vote-012

ஈழத்து நினைவுகள் – அனைத்து பாகங்களும்….

  1. அருமையான தொடரை அளித்த ரதிக்கு நன்றி… தொடர்ந்து எழுதுங்கள்! 

    • நண்பா, தங்களின் புனை பெயர் விநோதமாக இருக்கிறது. தங்களின் கருத்து தங்கள் பெயர் காரணமாக கேலி பொருள் ஆகவேண்டுமா ???வேறு நல்ல பெயர் வைத்து கொள்ளலாம்மே !!!

    • Thanks for your moral support.  உங்களைப்போன்றவர்களின் பக்கபலம் தான் என்னைப்போன்ற புதியவர்களுக்கு எழுத தைரியம் கொடுக்கிறது. நன்றி.  

  2. முடிந்தவரை ஈழத்தின் வலி மிகுந்த நினைவுகளை வெளிக்கொணர்ந்து காட்டியிருக்கிறீர்கள். 

  3. மாற்றுக்கருத்தை கூறுபவர்கள் அனைவரும் எதிரிகளல்ல. உண்மையிலேயே உங்களின் நலன் கருதி ஒரு சரியான மாற்றுக் கருத்தை வைப்பவர்களே சிறந்த நண்பர்களாகவும் இருப்பார்கள்.

  4. வீரர்கள் வீழ்வதில்லை..விதைக்கப்படுகிறார்கள்….தமிழீழம்…நிச்சயம் மலரும்

  5. தோழி ரதி, கவலை வேண்டாம் வரலாறு ஒரே மாதிரி இருப்பதில்லை. நாம் வெல்வோம். தமிழினம் தலை நிமிரும். நீங்கள் தொடந்து எழுதுங்கள் நிறுத்தவேண்டாம்.இது முக்கிய நேரம்.

  6. ஈழத்தின் விடியலுக்காய் ஏங்கும், உழைக்கும் மற்றும் ஈழத்தமிழனுக்கு ஆறுதல் கூறும் உங்கள் அனைவருக்கும் நன்றிகள். 

  7. என்றும், எங்கும், எப்போதும்
    தோல்விகள் துரத்தி அடிக்கிறது.
    உரிமை, புரட்சி, எழுச்சி
    வார்த்தைகளின் வறட்சி
    நொறுங்கிப் போகிறது கொள்கை கோட்பாடு…!

  8. நல்ல தொடர் கட்டுரை.. தேர்ந்த எழுத்து.. வலி சொல்லும் வார்த்தைகள் ..புலிகளை எதிர்க்கும் எல்லோரும் புலிகள் ஏன் உருவானார்கள் என்பதை மறந்ததும் பெரிய வலி ..தமிழனே கூலியாய் காட்டிக் கொடுத்தான் என்பதும் வலியே..
    ஒரே ஆறுதல் புலம் பெயர் நாடுகளில் நம் போராட்டங்களை அந்த அரசாங்கங்கள் தடுக்காததுதான்…
    சிங்கப்பூர் மதியுரை அமைச்சர் திரு .லீ குவான் யூ சொன்னது ” தமிழர்களுக்கு இது தற்காலிக பின்னடைவுதான்”

  9. அத்தனை எதிர்ப்புக்களையும் அரசு இயந்திரங்கள் அமிழ்த்தி அதன்மீதே வீர நடை போடுகின்றன.எழுத்திலாவது உணர்வுகள் உயிர்ப்பித்தல் கொள்வதே இப்போதைக்கான சாத்தியமாக படுகிறது.

  10. எனக்கு K’naan இன் பாடல்களும் இசையும் பிடிக்கும் என்பதால் இதை சொல்லவில்லை. FIFA World Cup, கால்பந்து போட்டிகளில் பாடக்கிடைத்த சந்தர்ப்பத்திலும் தன் மக்கள் சார்ந்த உணர்வுகளை உலகிற்கு அறியத்தருகிறார். “So many wars settling scores…..” என்ற வரிகளிலிருந்து கேட்டுப்பாருங்கள், புரியும். ஏன் Jai-Ho என்ற சர்வதேச புகழ் பெற்ற ஓர் இசையால் (ஒரு வேளை அது ஹிந்தி என்பதால் எனக்கு புரியவில்லையோ!!) அந்த இசையமைப்பாளர் தான் சார்ந்த மக்கள் எவரின் வலிகளையும் சொல்ல முடியவில்லை என்று நினைக்கும் போது எரிச்சல் தான் மிஞ்சுகிறது. 

  11. போராட்டம் வெல்லட்டும். விரைவில் தமிழீழம் மலர வாழ்த்துகள். இருப்பினும் தமிழக தமிழர்களாகிய நாங்கள் ‘இந்திய தேர்தல் ‘ ஐ நம்பி இருந்தோம். என்ன ஒரு வெட்ககேடு !!! தமிழகத்தில் 234 தொகுதிகள் உண்டு. தினசரி ஒரு தொகுதியில் ஒரு போரட்டம் நடைபெற வேண்டும். இதில் செம்மொழி மாநாடு வேறு. துரோகிகளை அடையாளங் கொள்ளுங்கள். நிச்சயம் வெல்வோம்!!!

  12. போரின் வெற்றியை நினைவு கூறும் ராணுவ அணிவகுப்பை ராஜபக்சே ஏற்கும் படமும், செய்தியும் இன்று பத்திரிகைகளில் வந்துள்ளது. ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் சிலர் தாக்கப்பட்டதற்கு அளிக்கப்பட்ட ஊடக வெளிச்சத்தில் ஒரு சதவீதத்தை கூட ஈழப் படுகொலைகளுக்கு அளிக்கவில்லை இந்திய ஊடகங்கள். ஊடங்கள் வாயிலாகவே உண்மை மக்களை சேர முடியும் நிலையில் இத்தகைய புறக்கணிப்புகள் எவ்வளவு பெரிய அநீதி. போபாலின் யூனியன் கர்பைடால் பாதிக்கப்பட்டவர்கள், நீதிக்காக, இருபத்தைந்து ஆண்டுகளாக இன்னமும் கரங்களை உயர்த்தி வீதியிலே நிற்கிறார்கள். இதனை விட ஆழமான சதிகள் அடங்கிய ஈழத் தமிழர் அழித்தொழிப்பிற்கு நீதி கிடைக்க எவ்வளவு காலம் தான் காத்திருக்க வேண்டும்? ஈழத் தமிழர்களின் கண்ணீரை துடைக்க கூட நாம் கரங்கள் உயர்த்த அனுமதிக்கப்படவில்லை. உயர்த்திய கரங்களில் காரி உமிழ்ந்தார்கள் ‘இந்து’, ‘தினமலர்’ வாசகர்கள். சத்தமின்றி அதனை துடைப்பதை தவிர வேறு வழி தெரியவில்லை. ரதியின் இக்கட்டுரை தொடர் ஏற்படுத்தும் ஆற்றாமையும், துயரமும் பெரிது.

  13. நல்ல பதிவு ரதி. ஈழத்தமிழர்கள் தங்களுடைய ஒற்றுமையைப் பேணி, இரயாகரன் முதலிய உண்மையான இடதுசாரிகளோடு ஒன்றிணைந்து அவர்களின் நெறிப்படுத்தலில் போராட வேண்டும். கனடா, அமெரிக்கா, ஐரோப்பிய அரசுகளின் அலுவல்கங்களில் முன்போ, அவர்களுடைய பாராளுமன்ற பிரதிநிதிகளின் முன்போ போராடி கவனத்தை ஈர்க்கலாம் ஆனால் வெல்ல முடியாது. மாறாக இந்த நாடுகளில் உள்ள உழைக்கும் மக்களோடு சேர்ந்து வாழ முயற்சி செய்யுங்கள். அங்குள்ள வல்துசாரி ஊடகங்களால் அவர்களின் வேலையைப் பறித்து கொண்ட வந்தேறிகள் என்று தூற்றப்படும் உங்களைப் பற்றிய அழுக்குகளை அவர்கள் மனதிலிருந்து துடையுங்கள். அவர்களிடம் நீங்களும் அவர்கள் வர்க்கம்தான், அந்த வகையில் ஈழத்தில் கொள்ளப்படுபவர்களும் அவர்கள் சொந்தம் தான் என்ற உணர்வை ஏற்படுத்துங்கள். இந்த நாடுகளின் உழைக்கும் மக்கள் – இந்த தேசங்களை உலுக்குவார்கள் உங்கள் விடுதலை பெறும் வரை !

    மகிழ்ச்சி என்பது போராட்டம் என்ற மார்க்சின் வழியில் மகிழ்ச்சியாக போராட எமது வாழ்த்துக்கள்.

    செவ்வணக்கம் தோழி ரதி – எங்களுடனான உமது நட்பு தொடரட்டும்

  14. உணர்ச்சி பூர்வமான எழுச்சி கட்டுரை.
    பகிர்வுக்கு நன்றி.

  15. ரதிக்கு எனது கோடானு கோடி நன்றிகள். உங்கள் ஆக்கங்கங்கள் தொடர்ந்து வரும் என்று எதிர் பார்க்கிறேன். உங்கள் இப்பணி தொடர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    வினவு தளத்திற்க்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள். ஜெயமோகன் மூலம் சாரு நிவேதிதாவின் தளம் அறிமுகமானது. சாரு ஒரு முறை வினவுவை திட்டப்போய் வினவுவின் அறிமுகம் கிடைத்தது. எல்லாம் நன்மைக்கே என்பது உண்மைதான். வினவுவில் வரும் ஆக்கங்கள் மற்றும் பின்னூட்டங்கள் எல்லாவற்றையும் வாசிப்பேன். உங்கள் பணி தொடர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  16. ஈழத்தின் நினைவுகளைப் படித்து பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் நன்றிகள். 

    Anj, கோடான கோடி நன்றிகள் சொல்லுமளவிற்கு நான் ஒன்றுமே செய்யவில்லை. என் ஈழத்து உறவுகளுக்காக என்வரையில் என்ன முடியுமோ அதை செய்துகொண்டிருக்கிறேன்.

    கோடான கோடி நன்றிகளுக்கு சொந்தக்காரர்கள் பலர் இன்று உயிருடன் இல்லை, மீதிப்பேர் சித்திரவதைக்கூடங்களில்.

  17. சகோதரி ரதி அவர்களுக்கு ///கோடான கோடி நன்றிகளுக்கு சொந்தக்காரர்கள் பலர் இன்று உயிருடன் இல்லை, மீதிப்பேர் சித்திரவதைக்கூடங்களில்./// ஆமாம் முசுலிம் என்ற ஒரே கரணத்திற்காக தமிழர்களாக இருந்தும் சொந்த மண்ணிலிருந்து யாழ்ப்பணத்திலிருந்து முதூரில் இருந்து தமிழ் முசுலிம்களை வெளியேற்றி அகதிகாளக்கிய வெறிநாய்கள் இன்று பலர் உயிரோடு இல்லைதான் தமிழ் முசுலிம்கள் இல்லாத தமிழ் ஈழத்தை உருவாக்க நினைத்தவர்களுக்கு நீங்கள் வேண்டுமானல் கோடான கோடி நன்றிகள் சொல்லுங்கள் ஆனால் எங்களை பொறுத்தவரை பாசிச புலிகளும் ரசபக்சை இருவரும் ஒன்றுதான் 

    • ஹைதர்: துரத்தியதை ஞாயப்படுத்த வில்லை ஆனால்

      யாழ் நகரில் விமானம் குண்டு வீசும் போது சிறுவனான என்னை என் அப்பா சோனகதெருவிற்கு ஓடிப்போகசொல்வார். அந்த பகுதியில் குண்டு விழாது. இது சத்தியமான உண்மை(ஆதாரம்: கம்பவாதிரி ஜெயராஜ்)

      முஸ்லீம்களை துரத்தியபின் அதைப்பற்றி தமிழர்கள் எதிர்த்து பேசியஅளவிற்கு மயிரளவிற்காதது எந்த ஒரு முஸ்லீமும் (1வீதமாவது) பேசியிருக்கிறார்களா?

      கிழக்கில் இலங்கையின் மொத்த மூஸ்லீம் மக்களில் வெறும் 17வீதமே கிழக்கில். ஆனால் அங்கு இருக்கும் தமிழர்களுக்கு மூஸ்லிம்கள் செய்த அநியயம் பற்றி எந்த ஒரு முஸ்லிமாவது எழுதியிருக்கிறார்களா?

      ஒன்றும் வேண்டாம் கருணா செய்த கொலைகளை ஏன் உங்கள் சமூத்தினர் இப்போது பேசுவதில்லை.?

      ஐயா சோனகரே.. இப்போது உள்ள உங்களின் இளைய சோனக சமூகத்தில் எத்தனை வீதமானேர் தமிழில் படிக்க வழியிருந்தும் சிங்களத்தில் படிக்கிறார்கள்? நிச்சயமாக அது உங்கள் சமூகத்திற்கு நல்ல வழிதான். ஆனால் உங்களின் தமிழ் உணர்வும் நாட்டு உணர்வும் ஒன்றுதான். மற்றது.. உலகில் எந்த மூலையில் இருந்தாலும் உங்கள் சமூகத்திற்கு மொழி அரபிதான்.. மற்றும் படி அந்தநாட்டில் உள்ள மொழி எது படித்தால் வசதியோ அதுதான்..

  18. வெண்காட்டான்: புலியை எதிர்க்கும் தமிழர்கள் மட்டும் தான் சோனிகளை கலைத்ததை பற்றி கதைத்தார்கள்
    புலிகளுக்கு வால் பிடித்தவர்கள் அதற்க்கு சப்பை கட்டு கதைகளையே கூறினார்கள்..
    கருணா புலியில் இருக்கும் போது தான் கொன்றான்.. அதற்கு பின் தான் அவன் புலியின் தலைமைக்கே வந்தான்.. அவனை கொல்ல பணித்தது யார்?

      • வெண்காட்டான்: புலிகள் முஸ்லீம்களை கலைத்து விட்டு சொல்லிய நொண்டிசாக்குகலையே திருப்பி திருப்பி சொல்லவேண்டாம்..சிங்களவன் எப்படி தமிழ் அப்பாவிகளிடம் பலத்தை காட்டினார்களோ …அதையே புலிகளும் செய்தார்கள்..

        • முஸ்லிமகளுக்கு வக்கலாலத்து வாங்கியது போதும். புலிகள் விட்ட பிழைகளை வைத்து பிழைப்பு நடத்தும் உங்கள் போன்றவர்கள் எப்போதும் உண்டு..
          10 முஸ்லிம்களை காட்டுக்கள் வன்னியில்ஃ தமிழர் அழிவுற்றதை என்னி பதிவிடடவர்கள்..
          போங்கடா நீங்களும் உங்கட அரசியலும்.
          என்றும் சிறிலங்கா முஸ்லிம்மகள் (தமிழ் நாட்டு முஸ்லிம்மகள் அல்ல) தமிழருக்கு ஆதரவாக இருந்ததில்லை.. யாழ்லில் விமானம் குண்டு வீசும் போது சோனகர் தெருவிற்கு ஆக்கள் ஓடுவினம். என் என்றால் அங்க குண்டு விளாது. வெளியில இருந்து கொண்டு ஒரு மயிரும் தெரியமல் புலிகளை குறைசொல்லி இறுதியில் என்ன கண்டிர்கள். இப்போது தான் புலி இல்லையே.. மக்களுக்கு ஏதாவது செய்யலாமே. இங்கு வந்து சொறிவதற்கு? உங்களால் முடியாது. குறைந்தது அரசாங்கத்துடன் நக்கியாவது பிழைக்கலாமே.
          முஸ்லிம்களை துரத்தியது சரி பிழை என்பதை விட தமிழருக்கு குரல் கொடுக்க யார் வந்தார்கள்,? அதிகாரத்திற்கு எதிரான உங்கள் குரல் எத்திசையிலும் ஒலிக்கட்டும்.. புலிக்கூட்்டம் குறைவதில் உங்களுக்கு உள்ள அக்கறை உங்களின் உண்மை முகத்தை தெளிவாக காட்டுகிறது..

        • venkattan ///முஸ்லிமகளுக்கு வக்கலாலத்து வாங்கியது போதும். புலிகள் விட்ட பிழைகளை வைத்து பிழைப்பு நடத்தும் உங்கள் போன்றவர்கள் எப்போதும் உண்டு..///
          1.அமெரிக்க இந்தியாவை அடிமைப்படுத்தும் போது இந்தியாவுக்கு இந்தியா மக்களுக்கு வக்கலாத்து. 2.இந்தியா தன் மேலாதிக்கத்தை இலங்கை மீது தினிக்கும் போது இலங்கை அரசுக்கு வக்கலாத்து. 3.இலங்கை பேரினவாத அரசு அப்பாவி தமிழர்களையும் புலிகளையும் கொல்லும் போது அப்பாவி தமிழ்மக்களுக்கும் புலிகளுக்கும் வக்கலாத்து. 4.தமிழ் இனவேறி பாசிச புலிகள் தமிழ் முசுலிம்களை கொல்லும் போது முசுலிம்களுக்கு வக்கலாத்து. வல்லாதிக்க சக்திகளால் பதிக்கப்பட்ட எந்த இன மோழி மக்களாக இருந்தாலும் கம்னிஸ்ட்கள் அந்த மக்களின் தோழன் எந்த இனம் வல்லாதிக்க சக்திகளாக இருந்து அப்பாவி மக்களை அடக்கி ஒடுக்குகிறதோ அவர்களுக்கு கம்னிஸ்ட்கள் எதிரி அந்த வகையில் கம்னிஸ்ட்களுக்கு தோழர்களும் அதிகம் எதிரிகளும் அதைவிட அதிகம் இதுலாம் குறுகிய தமிழ் தேசிய வேறியர்காளன ஒங்களுக்கு எங்கே புரியப்போகுது அதுலாம் இருக்கட்டும் புலிகள் கொன்றது முசுலிம்களைய இல்லை தமிழர்களைய தமிழ் மொழியை தாய் மொழியாக கொண்ட அந்த தமிழ் முசுலிம்கள் தமிழர்களா இல்லையா?

        • அண்ணே venkattan
          ///முஸ்லிமகளுக்கு வக்கலாலத்து வாங்கியது போதும். புலிகள் விட்ட பிழைகளை வைத்து பிழைப்பு நடத்தும் உங்கள் போன்றவர்கள் எப்போதும் உண்டு../// 1.அமெரிக்கா இந்தியாவை அடிமைப்படுத்தும் போது இந்தியா மக்களுக்கும் இந்தியாவிற்கும் வக்கலாத்து 2. இந்தியா தன் மேலாண்மையை இலங்கையின் மீது தினிக்கும் போது இலங்கை அரசுக்கு வக்கலாத்து 3.இலங்கை பேரினவாத பாசிச அரசு அப்பாவி தமிழர்களையும் புலிகளையும் கொல்லும்போது கொன்றபோது புலிகளுக்கு வக்கலாத்து 4.குறுகிய தமிழ் இன வேறி பாசிச புலிகள் தமிழ் முசுலிம்களை கொன்றபோது தமிழ் முசுலிம்களுக்கு வக்கலாத்து வல்லதிக்க சக்திகளால் பதிக்கப்படுகிற எந்த இன மொழி மக்களாக இருந்தாலும் கம்னிஸ்ட்கள் அவர்களின் தோழன், அப்பாவி மக்களை சுரண்டி அடக்கி ஒடுக்குகின்ற எந்த இன மொழி பேசக்கூடிய வல்லாதிக்க சக்திகளாக இருந்தாலும் கம்னிஸ்ட் அவர்களின் எதிரிகள் கம்னிஸ்ட்களுக்கு தோழர்களும் அதிகம் அதைவிட எதிரிகளும் அதிகம் இது எங்கே குருகிய தமிழ் இன வேறிப்பிடித்த ஒங்களுக்கு புரிய போவுது சரி அதுலாம் இருக்கட்டும் புலிகளால் கொல்லப்பட்டவர்கள் முசுலிம்களா? இல்லை தமிழை தாய் மொழியாக கொண்டு அந்த மண்ணின் மைந்தர்களான தமிழர்களா?

  19. ” கோடான கோடி நன்றிகளுக்கு சொந்தக்காரர்கள் பலர் இன்று உயிருடன் இல்லை, மீதிப்பேர் சித்திரவதைக்கூடங்களில்…..”என்னே நன்றி கடன் !!

    ஏன் அவர்களுக்கு கோடானுகோடி நன்றி.
    1. தமிழ் மக்களை அரசியல் அனாதைகள் ஆக்கியதற்கு .
    2. உலகமெல்லாம் தமிழர்களை அகதியாக்கியதர்க்கு .(அப்படியான ஒரு தலைவர் இருந்ததால் தானே வெளிநாடுகளிலெல்லாம் நாம் வசதியாக வாழ்கிறோம் அல்லவா,தேசிய தலைவர் இல்லையென்றால் நாம் எப்படி வெளிநாடுகாளில் வசதியாக வழ முடியும்?)
    3. தேசிய தலைவரின் உறவினர்கள் சந்தைகள் ,கடைகள் நடாத்துவதும் சாத்தியமாகி உள்ளது .
    4.புலிகளின் நிதி சேகரிப்பாளர்( ? )நடிகை ரம்பாவை மணம் முடிக்க முடிந்துள்ளது. இதுவும் ஈழ தமிழருக்கு பெருமைதானே !!!சும்மா மேடைகளில் மட்டும் நடிகைகளுக்கு நகை போட்டால் போதுமா ?இதெல்லாம் அகதி தமிழனின் சாதனை தானே!!!
    சங்கமாடிய தமிழ் என பேசிய
    தம்பிமார் எல்லாம் கடல் கடந்தனர் …
    துப்பு கேட்டவர் ..நாயிலும் கீழவர் ..
    பாய் விரித்தால் போதும்
    படுத்துறங்கும் இவர்கள் எல்லாம் நாய் சாதி. – புதுவை இரத்தினதுரை

    “சங்கமாடிய தமிழ் என பேசிய
    தம்பிமார்” என்று இங்கே சொன்னது தங்களை எல்லாம் பெரிய கவிஞர்கள் என்று இன்று தம்பட்டம் அடிப்பவர்கலையே !!!

  20. excellent post. thanks rathi. We are not united. we try to point our mistakes. but we never reliased that made us week. உங்கள் பதிவு படிக்கும் பொது கண் கலங்கியது

  21. ரதி இப்போ டொராண்டோவில் நடைபெறும் ஊர்வலங்களில் எத்தனை பேர் கலந்து கொள்ளுகிறார்கள் ?
    அடுத்த வருடம் இதுவும் நடக்குமா?

    • dont worry. ppl are less now. be happy. this is what u want.
      தனக்கு தலைபோனாலும் பறவாயில்லை எதிரிக்கு சகுணம் பிழைக்க வேண்டும் என்ற ஒப்பற்ற தமிழன் இருக்கும் போது நீங்கள் மகிழ்சியாகவே இருக்கலாம்

      • Mr. Venkaaddaan:
        this is the reality…. people were never with LTTE.
        For diaspora it was a time passing show and “just in case if LTTE won” they can tell ltte they participated in the Demonstrations as their contribution…
        it was all show…
        what ltte did was for a show
        what diaspora did was a show…
        finally everything was a tragic show…..

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க