privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திவேலை நிறுத்தமா? கூட்டணிக்கு அச்சாரமா?

வேலை நிறுத்தமா? கூட்டணிக்கு அச்சாரமா?

-

பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வை எதிர்த்து இடதுசாரி கட்சிகளும், பா.ஜ.க அணியும் இன்று பாரத் பந்தை அறிவித்துள்ளன. இந்த விலை உயர்வை திரும்பப் பெறப்போவதில்லை என்று கல்லுளி மங்கன் மன்மோகன் சிங் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

குறிப்பாக டீசல் விலை உயர்வு என்பது எப்படி விலைவாசி உயர்வை அதிகரிக்கப் போகிறது என்பது அனைவரும் அறிந்த விசயம். பெட்ரோல், சமையல் எரிவாயு உயர்வு நடுத்தர மக்களையும், மண்ணெண்ணெய் விலை உயர்வு பாமர மக்களையும் கணிசமாக பாதிக்கவே செய்யும். ஒட்டு மொத்தமாக குடும்ப பட்ஜெட் என்பது இனி குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிக்கும்.

இதனால் பெரிய பாதிப்பில்லை என்று நாக்கூசாமல் கூறும் பிரணாப் முகர்ஜி பா.ஜ.க ஆட்சியிலிருந்த போது மண்ணெண்ணெய் விலை உயர்த்தப்பட்டதையும், பெட்ரோலியப் பொருட்களின் விலை நிர்ணயத்தை அரசு கட்டுப்பாட்டிலிருந்து விடுவிப்பது அமல்படுத்தப்பட்டதையும் சுட்டிக்காட்டுகிறார். பா.ஜ.க இப்போது ஆட்சியிலிருந்தாலும் இந்த உயர்வு என்பது நடக்கவே செய்யும் என்பது உண்மைதான். ஆனால் இந்த உண்மையை இடதுசாரிகள் உணரவில்லை.

பா.ஜ.கவினரோடு சேர்ந்து வேலை நிறுத்தம் என்பது அரசுக்கு எதிரான உணர்வு அவர்களுக்கு ஆதரவாகவே திரும்பும் என்பது உண்மை. கூடவே இந்துத்வ பாசிசத்தை நேரம் வரும்போது அமல்படுத்த காத்திருக்கும் கட்சிக்கு மக்கள் நலனுக்கான முகத்தை வழங்குவதற்கு துணை போவதையும் மார்க்சிஸ்ட்டுகள் உணரவில்லை.  இது தேசிய நிலவரம். இனி தமிழ்நாட்டு நிலவரத்துக்கு வருவோம்.

இங்கே அ.தி.மு.க தலைமையில் இடதுசாரி கட்சிகள் பந்த்தை ஆதரிக்கின்றன. அ.தி.மு.கவுக்கு விலைவாசி உயர்வை விட தமிழக அரசியலில் அவர்களது இடம் பயங்கரமாக ஆட்டம் கண்டுவருகிறது என்பதுதான் முக்கியமான பிரச்சினை. ஈரோடு முத்துசாமி, கரூர் சின்னசாமி, சேலம் செல்வகணபதி என்று முக்கியமான பிரமுகர்கள் அல்லது பெருச்சாளிகள் எல்லாம் தி.மு.கவில் சங்கமமாகி வருகின்றனர். ஜெயலலிதா ஒரு சாதரண தொண்டர் விபத்து காரணமாக மருத்துவமனையில் இருந்தால் கூட நேரில் சென்று பார்த்து ஆறுதல் கூறுகிறார். இருந்தும் கட்சியை கட்டுக்கோப்பாக வைத்திருக்க முடியவில்லை.

தி.மு.க அரசு இலவசத் திட்டங்கள், தேர்தலுக்கு அழகிரி ஃபார்முலா, ஊடக ஆதரவு, செம்மொழி மாநாடு என்று பலமாக ஆகிவருகிறது. இனிமேல தி.மு.கவை எதிர்ப்பது என்பது ஜெயலலிதாவுக்கு வாழ்வா சாவா போராட்டமாகவே இருக்கும். இந்நிலையில் தனது தலைமையில் பலமான கூட்டணி வேண்டும் என்பது ஜெயலலிதா விரும்பவது இயற்கையே. அதனால் ம.தி.மு.க, இடது சாரிகளை தக்கவைப்பதும் முடிந்தால் காங்கிரசைக்கூட கொண்டுவரவேண்டும் என்பது ஜெயாவின் கணக்கு. அது நடைபெறாமல் போனால் விஜயகாந்தை சேர்க்க வேண்டும் என்பது அந்த கட்சியினரது விருப்பமாக இருக்கிறது.

இந்நிலையில் பந்தை விஜயகாந்த் ஆதரிக்க வேண்டுமென்று தூதர்கள் மற்றும் மார்க்சிஸ்ட் தலைவர்கள் மூலம் விட்டுப் பார்த்தார்கள். விஜயகாந்தும் தொடர் தோல்வி மூலம் கலக்கமடைந்துள்ள தமது கட்சியை என்ன செய்தாவது தூக்கி நிறுத்தவேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளார். கூட்டணி இல்லாமல் இனி தமிழக அரசியலில் தமது கட்சி குப்பை கொட்ட முடியாது என்பதை  அவரது கட்சியினர் கேப்டனுக்கு மரண எச்சரிக்கையாகவே தெரிவித்து வருகின்றனர். தனியாக நின்று 2011இல் முதல்வராக வரவேண்டுமென்ற அவரது விருப்பம் இனி மனப்பால் நினைவாகக் கூட மலரமுடியாது என்பதே எதார்த்தம். 2011 மட்டுமல்ல, 2016இல் கூட இது கானல்நீர்தான்.

இருந்தாலும் கூட்டணிக் கணக்கில் தாம் எதிர்பார்க்கும் சீட்டுக்கள் உறுதியாக கிடைக்காத நிலையில் இந்த பந்தை வைத்து கூட்டணி உருவாகும் முயற்சியில் விஜயகாந்த மதில்மேல் பூனையாகவே உள்ளார். வேலை நிறுத்தத்தை ஆதரித்தோ, எதிர்த்தோ அவர் ஏதும் பேசவில்லை. பேரம் படியவில்லை என்பதே இதன் உட்கிடை. மேலும் எந்த கூட்டணிக்கும் தான் மிகுந்த எதிர்பார்ப்புடன் விலை போக தயாராக இருப்பது என்பதற்கு இந்த மதில்மேல் பூனை இடம் தோதாக இருக்கிறது. இத்தகைய ‘வரலாற்று முக்கியத்துவம்’ வாய்ந்த கூட்டணி சேர்க்கைக்கு இடதுசாரிகள் கறிவேப்பிலை போல ஜெயலலிதாவுக்கு பயன்படுகின்றனர். பாவம், என்ன செய்வது?

அடுத்து விஜயகாந்த் கூட்டணிக்குள் வந்தால் தனது இடம் கேள்விக்குள்ளாக்கப்படும் என்பதால் வைகோ வேறு கலக்கத்தில் உள்ளார். எனவே அ.தி.மு.க தலைமையில் தமிழ்நாட்டில் நடக்கும் பந்தின் உண்மையான கவலைகள் இதுதானன்றி விலை உயர்வு இல்லை.

மற்றபடி இந்த பந்தை எதிர்கொள்ளும் தி.மு.க அணியைப் பார்ப்போம். இது ஆளும் கட்சி நடத்தும் பந்த் இல்லை என்பதால் தமிழகத்தில் இது வெற்றிபெறாது என்பது கருணாநிதிக்கு நன்றாகவே தெரியும். விலைவாசி உயர்வுக்கு எதிராக மக்களது மனநிலை இருக்குமென்றாலும் தனது கவர்ச்சித் திட்டங்கள் மூலம் அதை மயக்கிவிடலாம் என்பது அவரது எண்ணம்.  தி.மு.க அணியில் இருக்கும் பா.ம.க ராமதாஸ் பந்த் குறித்து என்ன கூறுகிறார்?

“இந்த போராட்டத்தில் மக்கள் நலன் என்பதை விட அரசியல் ஆதாயமே முன்நிற்கிறது. எனவே இந்த முழு அடைப்பு மற்றும் வேலை நிறுத்தப் போராட்டத்தை பா.ம.க ஆதரிக்கவில்லை.” என்று கூறியிருக்கிறார். சரி, இருக்கட்டும். ராமதாஸ் நிலைப்பாட்டிலாவது மக்கள் நலன் இருக்க வேண்டுமே, இல்லை இங்கும் அரசியல் ஆதாயமே தொக்கி நிற்கிறது.

அ.தி.மு.க கூட்டணியில் பருப்பு வேகவில்லை என்பதும், தி.மு.கவின் பணபலத்தை எதிர்த்து நிற்க முடியாது என்பதும் வன்னியர் ஓட்டு வங்கி சிதறிவிட்டதும் அவரது கவலை. அதனால் வேறுவழியின்றி கருணாநிதியின் கால்களில் விழுந்து கிடப்பதைத் தவிர அவருக்கு போக்கிடமில்லை. அதனால் பந்தை எதிர்த்தாலும் பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வை எதிர்க்கிறாராம். அதை மத்திய அரசிடம் வலியுறுத்துவராம். அதற்குத்தானே பந்த் என்றால் அது அரசியல் ஆதாயமாம்.

இதைவிடப் பெரிய காமடி என்னவென்றால் இது போன்ற வேலை நிறுத்தங்கள் மக்களுக்கு இடையூறாக இருக்குமென்பதால் மக்கள் மன்றங்களில் மட்டும்தான் போராட வேண்டுமென்று அவர் கூறுகிறார். அதாவது பா.ம.க வேட்பாளர்களை தமிழக மக்கள் தெரிவு செய்தால் அவர்கள் பாராளுமன்றத்தில் இது குறித்து குரல் கொடுப்பார்கள். இன்னும் மந்திரிகளாக இருந்தால் அமைச்சரவைக் கூட்டத்தில் குரல் விடுவார்கள். இப்படி அவர்களை தெரிவு செய்யாத மக்கள் தவறு செய்திருக்கும் போது இத்தகைய விலை உயர்வு வரத்தானே செய்யும்?

ஆக பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வு என்பது இங்கே பிரச்சினையில்லை. மாறாக அந்த பிரச்சினை மூலம் கூட்டணிக்கான அச்சாரமே தலைபோகிற பிரச்சினையாக இருக்கிறது. ஒரு மக்கள் பிரச்சினையைக் கூட முழுது முற்றாக கையிலெடுத்துக் கொண்டு தமது சொந்த பலத்தில் மக்களை அணிதிரட்டிப் போராடுவதற்கு எந்த ஓட்டுக் கட்சியும் தயாராக இல்லை என்பதுதான் மிக முக்கியம். விலை உயர்வை விட இந்த அரசியல் சீரழிவு முக்கியமான பிரச்சினை இல்லையா?

——————————–