Sunday, October 1, 2023
முகப்புசெய்திவேலை நிறுத்தமா? கூட்டணிக்கு அச்சாரமா?

வேலை நிறுத்தமா? கூட்டணிக்கு அச்சாரமா?

-

பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வை எதிர்த்து இடதுசாரி கட்சிகளும், பா.ஜ.க அணியும் இன்று பாரத் பந்தை அறிவித்துள்ளன. இந்த விலை உயர்வை திரும்பப் பெறப்போவதில்லை என்று கல்லுளி மங்கன் மன்மோகன் சிங் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

குறிப்பாக டீசல் விலை உயர்வு என்பது எப்படி விலைவாசி உயர்வை அதிகரிக்கப் போகிறது என்பது அனைவரும் அறிந்த விசயம். பெட்ரோல், சமையல் எரிவாயு உயர்வு நடுத்தர மக்களையும், மண்ணெண்ணெய் விலை உயர்வு பாமர மக்களையும் கணிசமாக பாதிக்கவே செய்யும். ஒட்டு மொத்தமாக குடும்ப பட்ஜெட் என்பது இனி குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிக்கும்.

இதனால் பெரிய பாதிப்பில்லை என்று நாக்கூசாமல் கூறும் பிரணாப் முகர்ஜி பா.ஜ.க ஆட்சியிலிருந்த போது மண்ணெண்ணெய் விலை உயர்த்தப்பட்டதையும், பெட்ரோலியப் பொருட்களின் விலை நிர்ணயத்தை அரசு கட்டுப்பாட்டிலிருந்து விடுவிப்பது அமல்படுத்தப்பட்டதையும் சுட்டிக்காட்டுகிறார். பா.ஜ.க இப்போது ஆட்சியிலிருந்தாலும் இந்த உயர்வு என்பது நடக்கவே செய்யும் என்பது உண்மைதான். ஆனால் இந்த உண்மையை இடதுசாரிகள் உணரவில்லை.

பா.ஜ.கவினரோடு சேர்ந்து வேலை நிறுத்தம் என்பது அரசுக்கு எதிரான உணர்வு அவர்களுக்கு ஆதரவாகவே திரும்பும் என்பது உண்மை. கூடவே இந்துத்வ பாசிசத்தை நேரம் வரும்போது அமல்படுத்த காத்திருக்கும் கட்சிக்கு மக்கள் நலனுக்கான முகத்தை வழங்குவதற்கு துணை போவதையும் மார்க்சிஸ்ட்டுகள் உணரவில்லை.  இது தேசிய நிலவரம். இனி தமிழ்நாட்டு நிலவரத்துக்கு வருவோம்.

இங்கே அ.தி.மு.க தலைமையில் இடதுசாரி கட்சிகள் பந்த்தை ஆதரிக்கின்றன. அ.தி.மு.கவுக்கு விலைவாசி உயர்வை விட தமிழக அரசியலில் அவர்களது இடம் பயங்கரமாக ஆட்டம் கண்டுவருகிறது என்பதுதான் முக்கியமான பிரச்சினை. ஈரோடு முத்துசாமி, கரூர் சின்னசாமி, சேலம் செல்வகணபதி என்று முக்கியமான பிரமுகர்கள் அல்லது பெருச்சாளிகள் எல்லாம் தி.மு.கவில் சங்கமமாகி வருகின்றனர். ஜெயலலிதா ஒரு சாதரண தொண்டர் விபத்து காரணமாக மருத்துவமனையில் இருந்தால் கூட நேரில் சென்று பார்த்து ஆறுதல் கூறுகிறார். இருந்தும் கட்சியை கட்டுக்கோப்பாக வைத்திருக்க முடியவில்லை.

தி.மு.க அரசு இலவசத் திட்டங்கள், தேர்தலுக்கு அழகிரி ஃபார்முலா, ஊடக ஆதரவு, செம்மொழி மாநாடு என்று பலமாக ஆகிவருகிறது. இனிமேல தி.மு.கவை எதிர்ப்பது என்பது ஜெயலலிதாவுக்கு வாழ்வா சாவா போராட்டமாகவே இருக்கும். இந்நிலையில் தனது தலைமையில் பலமான கூட்டணி வேண்டும் என்பது ஜெயலலிதா விரும்பவது இயற்கையே. அதனால் ம.தி.மு.க, இடது சாரிகளை தக்கவைப்பதும் முடிந்தால் காங்கிரசைக்கூட கொண்டுவரவேண்டும் என்பது ஜெயாவின் கணக்கு. அது நடைபெறாமல் போனால் விஜயகாந்தை சேர்க்க வேண்டும் என்பது அந்த கட்சியினரது விருப்பமாக இருக்கிறது.

இந்நிலையில் பந்தை விஜயகாந்த் ஆதரிக்க வேண்டுமென்று தூதர்கள் மற்றும் மார்க்சிஸ்ட் தலைவர்கள் மூலம் விட்டுப் பார்த்தார்கள். விஜயகாந்தும் தொடர் தோல்வி மூலம் கலக்கமடைந்துள்ள தமது கட்சியை என்ன செய்தாவது தூக்கி நிறுத்தவேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளார். கூட்டணி இல்லாமல் இனி தமிழக அரசியலில் தமது கட்சி குப்பை கொட்ட முடியாது என்பதை  அவரது கட்சியினர் கேப்டனுக்கு மரண எச்சரிக்கையாகவே தெரிவித்து வருகின்றனர். தனியாக நின்று 2011இல் முதல்வராக வரவேண்டுமென்ற அவரது விருப்பம் இனி மனப்பால் நினைவாகக் கூட மலரமுடியாது என்பதே எதார்த்தம். 2011 மட்டுமல்ல, 2016இல் கூட இது கானல்நீர்தான்.

இருந்தாலும் கூட்டணிக் கணக்கில் தாம் எதிர்பார்க்கும் சீட்டுக்கள் உறுதியாக கிடைக்காத நிலையில் இந்த பந்தை வைத்து கூட்டணி உருவாகும் முயற்சியில் விஜயகாந்த மதில்மேல் பூனையாகவே உள்ளார். வேலை நிறுத்தத்தை ஆதரித்தோ, எதிர்த்தோ அவர் ஏதும் பேசவில்லை. பேரம் படியவில்லை என்பதே இதன் உட்கிடை. மேலும் எந்த கூட்டணிக்கும் தான் மிகுந்த எதிர்பார்ப்புடன் விலை போக தயாராக இருப்பது என்பதற்கு இந்த மதில்மேல் பூனை இடம் தோதாக இருக்கிறது. இத்தகைய ‘வரலாற்று முக்கியத்துவம்’ வாய்ந்த கூட்டணி சேர்க்கைக்கு இடதுசாரிகள் கறிவேப்பிலை போல ஜெயலலிதாவுக்கு பயன்படுகின்றனர். பாவம், என்ன செய்வது?

அடுத்து விஜயகாந்த் கூட்டணிக்குள் வந்தால் தனது இடம் கேள்விக்குள்ளாக்கப்படும் என்பதால் வைகோ வேறு கலக்கத்தில் உள்ளார். எனவே அ.தி.மு.க தலைமையில் தமிழ்நாட்டில் நடக்கும் பந்தின் உண்மையான கவலைகள் இதுதானன்றி விலை உயர்வு இல்லை.

மற்றபடி இந்த பந்தை எதிர்கொள்ளும் தி.மு.க அணியைப் பார்ப்போம். இது ஆளும் கட்சி நடத்தும் பந்த் இல்லை என்பதால் தமிழகத்தில் இது வெற்றிபெறாது என்பது கருணாநிதிக்கு நன்றாகவே தெரியும். விலைவாசி உயர்வுக்கு எதிராக மக்களது மனநிலை இருக்குமென்றாலும் தனது கவர்ச்சித் திட்டங்கள் மூலம் அதை மயக்கிவிடலாம் என்பது அவரது எண்ணம்.  தி.மு.க அணியில் இருக்கும் பா.ம.க ராமதாஸ் பந்த் குறித்து என்ன கூறுகிறார்?

“இந்த போராட்டத்தில் மக்கள் நலன் என்பதை விட அரசியல் ஆதாயமே முன்நிற்கிறது. எனவே இந்த முழு அடைப்பு மற்றும் வேலை நிறுத்தப் போராட்டத்தை பா.ம.க ஆதரிக்கவில்லை.” என்று கூறியிருக்கிறார். சரி, இருக்கட்டும். ராமதாஸ் நிலைப்பாட்டிலாவது மக்கள் நலன் இருக்க வேண்டுமே, இல்லை இங்கும் அரசியல் ஆதாயமே தொக்கி நிற்கிறது.

அ.தி.மு.க கூட்டணியில் பருப்பு வேகவில்லை என்பதும், தி.மு.கவின் பணபலத்தை எதிர்த்து நிற்க முடியாது என்பதும் வன்னியர் ஓட்டு வங்கி சிதறிவிட்டதும் அவரது கவலை. அதனால் வேறுவழியின்றி கருணாநிதியின் கால்களில் விழுந்து கிடப்பதைத் தவிர அவருக்கு போக்கிடமில்லை. அதனால் பந்தை எதிர்த்தாலும் பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வை எதிர்க்கிறாராம். அதை மத்திய அரசிடம் வலியுறுத்துவராம். அதற்குத்தானே பந்த் என்றால் அது அரசியல் ஆதாயமாம்.

இதைவிடப் பெரிய காமடி என்னவென்றால் இது போன்ற வேலை நிறுத்தங்கள் மக்களுக்கு இடையூறாக இருக்குமென்பதால் மக்கள் மன்றங்களில் மட்டும்தான் போராட வேண்டுமென்று அவர் கூறுகிறார். அதாவது பா.ம.க வேட்பாளர்களை தமிழக மக்கள் தெரிவு செய்தால் அவர்கள் பாராளுமன்றத்தில் இது குறித்து குரல் கொடுப்பார்கள். இன்னும் மந்திரிகளாக இருந்தால் அமைச்சரவைக் கூட்டத்தில் குரல் விடுவார்கள். இப்படி அவர்களை தெரிவு செய்யாத மக்கள் தவறு செய்திருக்கும் போது இத்தகைய விலை உயர்வு வரத்தானே செய்யும்?

ஆக பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வு என்பது இங்கே பிரச்சினையில்லை. மாறாக அந்த பிரச்சினை மூலம் கூட்டணிக்கான அச்சாரமே தலைபோகிற பிரச்சினையாக இருக்கிறது. ஒரு மக்கள் பிரச்சினையைக் கூட முழுது முற்றாக கையிலெடுத்துக் கொண்டு தமது சொந்த பலத்தில் மக்களை அணிதிரட்டிப் போராடுவதற்கு எந்த ஓட்டுக் கட்சியும் தயாராக இல்லை என்பதுதான் மிக முக்கியம். விலை உயர்வை விட இந்த அரசியல் சீரழிவு முக்கியமான பிரச்சினை இல்லையா?

——————————–

 

  1. மிகவும் சரியாய் சொன்னீகள். இந்த “வேலை நிறுத்தத்தில்” தங்கள் நிலைப் பாடு என்ன? எதிலும் அரசியல் என்பதற்கு பதிலாக எதிலும்
    பதவி, சீட்டுகள் என்ற இழிநிலை உருவாகியுள்ளது.

  2. //இங்கே அ.தி.மு.க தலைமையில் இடதுசாரி கட்சிகள் பந்த்தை ஆதரிக்கின்றன//

    //ராமதாஸ் நிலைப்பாட்டிலாவது மக்கள் நலன் இருக்க வேண்டுமே, இல்லை இங்கும் அரசியல் ஆதாயமே தொக்கி நிற்கிறது//

    பந்தை நடத்துரவனையும் திட்றீங்க…. ஆதரிக்கிரவனையும் திட்றீங்க. எதிர்க்கிரவனையும் திட்றீங்க…

    வெளியில உக்காந்துக்கிட்டு அடுத்தவனை சும்மா மானாவரியா திட்றது ரொம்ப எளிதுதான்..
    நீங்க என்னத்தை கிழிசீங்கன்னு கொஞ்சம் சொல்ல முடியுமா?

    • தம்பி, நீங்க கூட்த்தான் வினவ கேள்விகேக்குறீங்க/திட்டுறீங்க… திட்ட உங்களுக்கு என்ன தகுதி இருக்கு? நீங்க இதுவரைக்கும் என்ன புடுங்கியிருஃக்கீங்கன்னு நாங்க தெரிஞ்சுக்கலாமா???

      இப்படி கேட்டா நல்லாவா இருக்கும்…

      எப்படி இரண்டு தரப்பும் மக்களை ஏய்ச்சு பிழைக்குறாங்கன்னு எழுதுனா ரெண்டு திருடன்ல ஒருத்தனுக்கு சப்போட்டா இருக்கனும்னு சொன்னா எப்படி?

      • அவங்க என்ன பிரெச்சனைக்காக போராடுறாங்கன்னு சொல்றாங்களோ, அதற்காக நீங்க என்ன பண்ணீங்கன்னு சொல்லுங்க?

        ஏதாவது கேள்வி கேட்ட, பதில் சொல்றதே இல்லை.. கேள்வி கேட்டவனையே திருப்பி கேள்வி கேக்குறது உங்க பாணியோ…

        நீங்க ஏதாவது உருப்படியா பண்ணுங்கன்னு சொல்றேன்…

        • தம்பி, நீங்க ஏன் கேள்விகேட்டவனையே திருப்பி கேட்டீங்கன்னு கேட்டா அதே கேள்விய மறுபடியும் என்னைய கேக்குறீங்க… நான் சொல்றது இருக்கட்டும், இந்த பிரச்சனையை பத்தி வினவுல வந்த கட்டுரையை தொடர்புடைய சுட்டியிலும், பின்னூட்டத்துலையும் தோழருங்க விளக்கியிருக்காங்க.. அதுல ஏதனா சந்தேகம் இருந்தா கேளுங்க பேசுவோம்…

      • நானும் நீங்கள் எழுதுவதை ஏற்றுக்கொள்ளத்தான் செய்தேன். ஆனால் இணையத்தில் உங்களை பற்றிய ஒரு செய்தியை படிக்கும் முன். அதில் வினவு என்பது சிங்கள கம்யூனிஷ்ட்களின் மேற்பார்வையில் இந்திய தமிழர்களிடையே விடாமல் சண்டையை தூண்டிவிடும் ஒரு அமைப்பு.. உங்கள் வேலையே எதாவது ஒரு பிரச்னையை கையில் எடுப்பது அதை தீர்ப்பதற்கான வழியை ஆராயாமல் வாதி பிரதிவாதி இருவரையும் திட்டுவது. இதனால் பின்வரும் விளைவுகள் நிகழ்கின்றன.1) பல பதிவர்கள் இணைய தளம் என்பது நிகழ் பத்திரிகை விட மோசாமானது என்ற எண்ணத்தை விதைப்பது.2) ஈழ பிரச்னைகளில் நடக்கும் உருப்படியான கருத்து பரிமாற்றங்களை பின்னுக்கு தள்ளி நீங்கள் பேசும் விசயங்களை முன்னிறுத்துவது..3) உங்கள் கருத்துக்களுக்கு எதிரானவர்கள் முட்டாள்கள் என்கிற தோற்றத்தை ஏற்படுத்த முயல்வது(இதுதான் உங்கள் கருத்துக்களின் பலவீனமே).4) ஈழ பிரச்னைக்கு பின்தான் ஓரளவு இளைஞர்களும் அரசியலில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். அதனை முடக்கும் விதமாக உங்கள் நடவடிக்கைகள் இருக்கின்றன..திருத்தி கொள்ளுங்கள்(இந்த வார்த்தைக்கு உங்களிடம் கேவலமான திட்டு எனக்கு கிடைக்கும், நான் சொல்வது பொய்யாக இருந்தால் என்னை சேரும், இல்லை எனில் திரும்பவரும்). இந்த அளவு ஆழ்ந்து சிந்திக்க கூடிய நீங்கள் தீர்வுகளை முன் வைப்பதே சரியானவாதமாகும். தெரிந்தோ தெரியாமலோ வினவு தளத்தை ஒரு கூட்டம் வாசிக்கிறார்கள்.. அவர்கள் மூலம் பிரச்னைகளை தீர்க்கும் வழிகள் சம்பந்தமாக பதிவுகள் எழுதுங்கள்..

        • பாலா! இப்படித்தான் சீன கம்யூனிஸ்டுங்க கையாளுங்கறான், நேபாள் கம்யூனிஸ்டுங்க்கிட்ட காசு வாங்குறாங்கறான், மாவோயிஸ்டுங்க அடியாளுங்கறான், சிஐஏ உளவாளிங்கறான், ரஷ்ய ஏஜென்டுங்கறான்… இப்ப சிங்கள ஏஜன்டா…நாசமாப்போச்சு அவதூறு பரப்பவும் ஒரு அறிவு வேண்டாமா.. கேள்விதான் பட்டீங்களே கொஞ்சம் மெனக்கட்டு ஆராய்ச்சி பண்ணாமா இப்படியா வந்து ஒப்பிக்கறது..

          இப்ப ஈழப் பிரச்சனயை எடுத்துக்குவோம் வினவு என்ன எழுதி அக்குளுகுள்ளாரயா ஒளிச்சு வச்சிருக்கு எல்லா இதே தளத்துலதானே பதிஞ்சிருக்கு போய் படிச்சு பாக்க வேண்டீயதுதானே.. பிரச்சனைக்கு நாயமா தீர்வு சொல்லறது மட்டமில்லாம அதுல சமரசமில்லாம நிப்பதுனாலதான் நாங்க வினவுக்கு படிக்க வறோம்.. எங்கள கூட்டம் கும்பல்னு சொல்லி கேவலப்படுத்துவது நல்லாவா இருக்கு…என்னவோ போங்க

        • //நானும் நீங்கள் எழுதுவதை ஏற்றுக்கொள்ளத்தான் செய்தேன். ஆனால் இணையத்தில் உங்களை பற்றிய ஒரு செய்தியை படிக்கும் முன். அதில் வினவு என்பது சிங்கள கம்யூனிஷ்ட்களின் மேற்பார்வையில் இந்திய தமிழர்களிடையே விடாமல் சண்டையை தூண்டிவிடும் ஒரு அமைப்பு.. //

          இணையத்தில் இப்படி படிச்சிட்டு உடனே முடிவு பண்ணிட்டீங்களா? நீங்க ரெம்ம்ம்ப நல்லவரா இருப்பிங்க போல… இப்படியே அப்பாவியா திரியாதீங்க. இந்த ஊர் பயலுவ ஏமாத்திப்புடுவானுங்க.. அப்பறம் அந்த 1, 2, 3, எல்லாமே இணையத்துல போட்டுருந்தாங்களா?

        • ஜார்ஜ் புஷ் கூட்டம் என்றதற்கு மன்னிக்கவும். நானும் அந்த வாசகர் வட்டத்தில் ஒருவன் தான். நீங்கள் எழுதும் கருத்துக்களில் பலவற்றில்  எனக்கும் உடன்பாடு உண்டு. ஆனால்  100 சதவிகிதம் உங்களை ஏற்றுக்கொள்ள இயலாது. மேலும் எனக்கே உங்களிடம் கருத்து சொல்வதற்கு தயக்கமாக இருக்கிறது.. அந்த அளவிற்கு உங்கள் சர்வாதிகார மனப்பான்மை வெளிப்படுகிறது.. நீங்கள் அனைத்து விவகாரத்தையும் அனைவருக்கும் புரியும் வகையில் எழுதுகிறீர்கள். ஆனால் அதை நீங்கள் சொல்லும் போக்கு அதிர்வை ஏற்படுகிறது. நீங்கள் இதை உங்கள் கருத்துக்கான பலமாக நினைக்கலாம். ஆனால் அது நீண்ட காலத்திற்கு நீடிக்காது அல்லது பிரச்னையை தீர்க்க இயலாது. இது கருணாநிதியின் பாணி. ஒரு விஷயத்தை முடிக்காமல் அதற்க்கான தீர்வை சொல்லாமல் இழுத்து செல்வது.  (எ.கா:  காவிரி, முல்லை).   பொதெம்கின் நானும் இணையத்தில் பல வருடங்கள் பதிவர்களுடன் பழகி வருபவன்தான். சந்தேகத்தின் அடிப்படையிலேயே நான் இந்த பின்னூட்டத்தை எழுத நேர்ந்தது. ஏற்கனவே கருணாக்கள் நிறைந்த இந்த உலகத்தில் இப்படித்தான் இருக்க வேண்டி உள்ளது. வரும்காலம் உங்கள் நேர்மையை வெளிக்கட்டும்போது என் நிலைபாட்டை உங்கள் சார்பான நிலைக்கு மாற்றுவதில் எனக்கு தயக்கம் இருக்காது. நன்றி..!!

        • பாலா உங்கள் கருத்துகளையே பார்ப்போம்…

          ////நீங்கள் எழுதும் கருத்துக்களில் பலவற்றில் எனக்கும் உடன்பாடு உண்டு. ஆனால் 100 சதவிகிதம் உங்களை ஏற்றுக்கொள்ள இயலாது.////

          100% ஒருவரை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது விதியா? உடன்பாடு இல்லா விசயத்தை விவாதிப்பதுதானே தீர்வாகும். அப்போதுதான் யார் சரி என்ற முடிவுக்கு வரமுடியும்..

          ////மேலும் எனக்கே உங்களிடம் கருத்து சொல்வதற்கு தயக்கமாக இருக்கிறது.. அந்த அளவிற்கு உங்கள் சர்வாதிகார மனப்பான்மை வெளிப்படுகிறது.///////

          நேற்று சிங்கள ஏஜென்ட் என்றீர்கள், இன்று சர்வாதிகாரி என்கிறீர்கள்.. இதெல்லாம் கருத்து சொல்லுதல் இல்லையா? இப்படி அவதூறு அல்லது கடுமையான விமரிசனம் செய்யவே தயங்காத நீங்கள் ஏன் விவாதிக்க தயங்க வேண்டும்?ஏன் இந்த முரண்பாடு?

          /////நீங்கள் அனைத்து விவகாரத்தையும் அனைவருக்கும் புரியும் வகையில் எழுதுகிறீர்கள். ஆனால் அதை நீங்கள் சொல்லும் போக்கு அதிர்வை ஏற்படுகிறது.//////

          அனைவருக்கும் புரியும் படி ஒரு விசயத்தை எழுதுவது தவறா? அப்படி எழுதினால் அதிர்வுகள் வரத்தானே செய்யும்? மக்களின் அறியாமையை மயிலிறகால் வருடிக்கொடுத்து எழுப்ப முடியுமா இல்லை பறையடித்து துயில் கலைப்பது தவறா?

          //// நீங்கள் இதை உங்கள் கருத்துக்கான பலமாக நினைக்கலாம். ஆனால் அது நீண்ட காலத்திற்கு நீடிக்காது அல்லது பிரச்னையை தீர்க்க இயலாது. இது கருணாநிதியின் பாணி. ஒரு விஷயத்தை முடிக்காமல் அதற்க்கான தீர்வை சொல்லாமல் இழுத்து செல்வது. (எ.கா: காவிரி, முல்லை). ///

          வினவும் அதன் தோழமை அமைப்புகளை 1980 தொட்டே சொல்லிவருகின்ற எடுத்தவருகின்ற நிலைப்பாட்டில் இன்றளவும் மாற்றம் இல்லை, அவர்கள் சொல்லி வந்தபடிதானே நாட்டின் அரசியல் பொருளாதார சூழல்கள் மாறிவந்துள்ளது. தவிர இது கருணாநிதி பாணி என்பது சரியா?,,, கருணாநிதி என்னும் பிழைப்புவாதியின் கூட்டனி+குடும்ப அரசியலை வெளிப்படுத்தும் கருத்துகளையும் கடிதங்களையும் உங்களால் எப்படி வினவோடு ஒப்பிட முடிந்ததோ? அப்படி பார்த்தால் வினவில் கருணாநிதியை பற்றிய விமரிசனத்தையெல்லாம் எப்படி பார்ப்பீர்கள்.தவிர

          வெறும் விமர்சினம் மற்றுமல்ல தீர்வையும் தோழர்கள் முன்வைக்கின்றனர்… ஆனால் பாவம் உங்கள் கண்ணிற்கு அது தென்படுவதில்லை…அதற்கான காரணத்தையும் நீங்களே சொல்லிவிட்டீர்கள்

          ////வரும்காலம் உங்கள் நேர்மையை வெளிக்கட்டும்போது என் நிலைபாட்டை உங்கள் சார்பான நிலைக்கு மாற்றுவதில் எனக்கு தயக்கம் இருக்காத///

          அதாவது சமூக மாற்றத்திற்காக பாலா உழைக்கமாட்டார், வினவு தோழர்கள் உள்ளிட்ட மக்கள் உழைத்து சமூக மாற்றம் வரும்போது பாலாவும் மாறிக்கொள்வார்…

          இதெல்லாம் நிறையா கேட்டாச்சு சார்…. நீங்க ஒன்னு பண்ணுங்களேன், வினவு தோழர்களுக்கு போன் பண்ணி பேசி நேருல பாருங்க… இந்த சமூகமாற்ற இயக்கத்துல பங்களிப்பு செலுத்துங்க… நடைமுறையில இது சரியா தவறான்னு நீங்களே சோதிச்சு பாருங்க.. அப்ப புரியும் பிரச்சனை எந்த பக்கம் இருக்குன்னு..

          நன்றிங்க

  3. A great article VINAVU,, None of the parties are really interested in Commomn Man..

    VINAVU I request you to write an article on SEMMOZHI MAANADU and the happenings ; It will be very nice to read it in your style.

  4. சமிபகாலங்களில் இந்த அளவு வெற்றிபெற்ற பந்த் எதுவுமில்லை.கர்நாடகாவில் மக்கள் முழுமனதுடன் இதை செய்தார்கள்.ஒழுங்கான வழியில் சம்பாதிக்கும் யாருக்கும் இந்த விலைவாசி உண்மையில் பெரும் பிரச்சனை.கொள்கையின் பெயரால் எதிர் கட்ச்சிகள் பிரிந்து இருப்பதால் தான் ஒரு வார்ட் election இல் தனியாக நின்று ஜெயிக்கமுடியாத பிரணாப் போன்ற பேர்வழிகள் ஏழை ,நடுத்தர மக்களை பார்த்து கிண்டல் அடிக்கிறார்கள்..

    • திருமாவளவன் . வைக்கோ , செயலலிதா , ராமதாசு , கொலைஞர் ,சி.பி.ஐ , சி.பி.எம் போன்ற ஓட்டுப் பொறுக்கி நாய்கள் நடத்தும் வேலை நிறுத்தம் வெறும் கண் துடைப்பே … வேலை நிறுத்தம் என்றால் அதன் தாக்கம் அரசாங்கத்தை அடி பணிய வைக்க வேண்டும் .. அந்த அளவுக்கு இருக்க வேண்டும் .தங்கபாலுவின் காலில் ஒரு அடங்க மறுத்த சிறுத்தை விழுந்தது போல் ..அரசாங்கத்தின் காலில் விழக்கூடாது என்பதே வினவின் நிலைப்பாடாக இருக்கும் என்று நான் நம்புகிறேன் ..

  5. தோழரே வினவு இந்த பந்த்தைப்பற்றி விடுங்கள். இந்த பெட்ரோல்,டீசல்,கிரோசின்,கியாஸ் விலை உயர்வுப்பற்றி உங்களுடைய நிலைப்பாடு என்ன? இதனால் பாதிக்கப்பட்டு வரும் மக்களுக்கு நீங்கள் கூறும் வழி என்னவென்று கொஞ்சம் விளக்குங்கள்.

    • பெட்ரோல் பொருட்களின் விலை உயர்வில் பெரும்பாண்மையான மக்கள்தான் பாதிக்கப்படுகிறார்கள். மத்தியில் பா.ஜ.க அல்லது காங்கிரசு இரண்டில் எது இருந்தாலும், தமிழகத்தில் தி.மு.க, அ.தி.மு.க இரண்டில் எது இருந்தாலும் இந்த விலை உயர்வு என்பது நடந்தே தீரும். இதை ஓட்டுக்கட்சிகளின் அரசியலுக்கு வெளியே மக்களைத் திரட்டி, வணிகர்கள், லாரி உரிமையாளர்கள், போன்ற பாதிக்கப்படும் பிரிவினரை அணிசேர்த்துக் கொண்டு அரசை அச்சுறுத்தும் போராட்டத்தை நடத்த வேண்டும். அப்போதுதான் கல்லுளி மங்கனாய் பன்னாட்டு நிறுவனங்களுக்கு சேவகம் செய்யும் அரசாங்கங்களை பணியவைக்க முடியும். மாறாக யார் விலை உயர்வுக்கு காரணமோ அவர்களது பெயரில் நடக்கும் எதிர்ப்பு போராட்டம் என்பது உண்மையில் நேரெதிரான விளைவையே ஏற்படுத்தும்.

  6. வினவு நீங்கள் சொல்லுவது சரிதான். வேலை நிறுத்தம் என்பது எல்லாம் பொய். மக்களை ஏமாற்றும் வேலை.
    மக்கள் நலனில் உண்மையான அக்கறை இருந்தால் சாகும் வரை நாடு தழுவிய உண்ணாவிரதம் இருக்கட்டும். அப்போ நம்புறோம்.

    • என்னங்க பார்த்திபன்.யாருமே சாகும் வரை உண்ணாவிரதம் எல்லாம் இருக்க மாட்டாங்க. முக்கிய பல பிரச்சனைகளில் உண்ணாவிரதம் எனபதே ஒரு நாடகம்தான்.
      வேறு எதாவது கருத்து இருந்தா சொல்லுங்க.

  7. எரியும் கொள்ளியில் எந்த கொள்ளி நல்ல கொள்ளி என்று பார்க்கும் நிலையிலேயே பாராளுமன்ற பணநாயகம் சாரி ஜனநாயகம் நாட்டு மக்களை வைத்து உள்ளது.

    காங்கிரசோ, பிஜேபியோ இரண்டு பேருக்குமே உள்ள வேறுபாடு – உலகமய எஜமானர்களின் காலை யார் அதிகமாக நக்குகிறார்கள் என்பதுதான்.

    பெட்ரோலிய பொருட்களின் ஏற்ற இறக்கங்களை தாங்குவதற்காக நாட்டில் இருந்துவந்த பெட்ரோலிய தொகுப்பு நிதியினை உலக வங்கிகளின் கட்டளைக்கு ஏற்ப எடுத்து விட்டு அரசின் கட்டுப்பாட்டினை முதலாவதாக பிஜேபி அரசு நீக்கியது. அந்த பணத்தினை எடுத்து காண்டிராக்டாக சாப்பிட்டு விட்டார்கள்.

    இப்போது விலையின் மீது அரசுக்கு இருக்கும் கொஞ்ச நஞ்ச கட்டுப்பாட்டினையும் நீக்கி விட்டார்கள். இது காங்கிரஸ் தன்னுடைய எஜமானர்களுக்குக் காட்டும் விசுவாசம்.

    ஆக புதிய ஜனநாயக பாதையில் இந்த பித்தலாட்டக்கார்களை தூக்கி எரியாமல் மக்களுக்கு எந்தவிதமான விமோசனமும் இல்லை.

    ஆதவன்

  8. நல்ல பதிவு தான். பெட்ரோல் விலை உயர்வுக்கு பொதுஜனம், என்ன மாதிரியான எதிர்வினை புரியவேண்டும் என்று கூறியிருக்கலாமே !

    • அவர்கள் வழி சொன்னால் , பயங்கரவாதிகள் போல வழி கூறாதீர்கள், பிரச்சனை இல்லாத வழி ஏதேனும் இருந்தால் கூறுங்கள், சிங்கள கம்யூனிஸ்டுக்களின் ஆதரவாளர்கள் , சீன அடிவருடிகள் போல பேசாதீர்கள் என்று நீங்கள் கூறாமல் இருந்தால் .. வினவு பதில் அளிக்கும்.

      வழி சொன்னால் அப்படியே பின்னாலே கிளம்பி வந்து விடுவது போல தான் பேசுகிறீர்கள். ஒரு போராட்டம் , மறியலில் நீங்கள் கலந்து கொண்டதுண்டா ?.. ஓட்டுப் போடாதே புரட்சி செய் என்கிறார்கள் .. எவன அதிகம் கொடுக்கிறானோ அவனுக்கு போய் ஓட்டு போடுகிறீர்கள் அல்லவா ?. பின்னர் என்ன மயிற்றுக்கு வழி சொல்லுங்கள் , குழி சொல்லுங்கள் என்று .. வக்கனையாக கேள்வி வேறு ..

      • பொதுப்பிரச்னைகளுக்கு பலவிதமான தீர்வுகள் முன்வைக்கப்படுகின்றன. ஆனால் தீர்வு என்பது கானல் நீர் தான். இந்த சூழ்நிலைகளால் வெகுமக்கள் தன்னளவில் கொந்தளிப்பான மனநிலையை அடைந்துள்ளனர். வினவு நிலைப்பாடு நோக்கி ஈர்க்கப்பட்டு, முன்வரும் வேளையில் அதைப் பயன்படுத்திக் கொள்ளவேண்டியது அவசியம் என்றே கருதுகிறேன்.

  9. fuel and oil price is high once again. The reason our govt giving that international fuel market changes. Yes that we can accept, But this is because of the us and it’s dollars. The internationally used dollars that the us govt can easily dominate the oil based countries like soudi, iraq, purune,etc.. but the indian govt is avoiding to tell public about this real reasons and licking the us foot.

  10. இது போன்ற சம்பிரதாய போராட்டங்களில் தொழிற்சங்கங்களின் நிலைப்பாடுகைள குறிப்பிட்டு நான் முன்பு ஒருநாள் சம்பிரதாய வேலை நிறுத்தங்களை விமர்சனம் செய்து சிரிப்பாய் சிரிக்கிறது சிபிஎம் வேலை நிறுத்தம் என எழுதியவுடன், சாத்தூர் மாதவராஜ் தனது தீராத பக்கத்தில் அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் என – தொழிற்சங்க நடவடிக்கைகளை கொச்சைப்படுத்தக் கூடாது என விமர்சன கட்டுரை எழுதியிருந்தார். இன்றைய ஒரு நாள் வேலை நிறுத்தம் கூட அது போன்ற ஒரு சம்பிரதாய வேலைநிறுத்தமாக போன போதிலும்- மக்கள் கோபமும் ஒரு புறம் வெளிப்பட்டதாகத்தான் கருத வேண்டியுள்ளது. மதுரை போக்குவரத்துக் கழகத்தின் (மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், திண்டுக்கல், விருதுநகர்) என ஐந்து மண்டலங்களில் 3800 க்கு மேற்பட்ட பேருந்துகள் அரசால் இயக்கப் படுகிறது. இதில் 26000 தொழிலாளர்கள் பணிபுரிகிறார்கள். 1998ல் நடந்த ரகசிய வாக்கெடுப்பில் அண்ணா தொழிற்சங்கம் 21 சதவீதமும், சிஐடியு 14 சதவீதமும், (அன்றும் திமுக தான் ஆளும் கட்சி) வாக்குப் பெற்றிருந்தது. இரண்டும் சேர்ந்த கணக்கில் 15 சதவீதத்தை கழித்துவிட்டால் கூட 20 சதவீத தொழிலாளர்களாவது வேலை நிறுத்தத்தில் பங்கெடுத்திருக்க வேண்டும். இதில் மதிமுக- பார்வர்ட் பிளாக், தேமுதிக என அல்லு, சில்லு தொழிற்சங்கங்கள் வேறு வேலைநிறுத்தத்தில் பங்கு பெறப்போவதாக அறிவிப்பு ஆனால் (ஓட்டுனர், நடத்துனர் 24 மணி நேர – 365 நாள் சுழற்சி பணி என்பதால் வாரத்தின் ஒவ்வொரு நாளும் சிலருக்கு வார ஓய்வு நாளாக அமையும்)வார ஓய்வுகளையும் ஆப்சென்டாக போட்டும் இன்று ஆப்சென்ட் 11 சதவீதம் மட்டுமே. தினசரி இயக்க வேண்டிய பேருந்துகள் 3875 ஆனால் (ஸ்பேர்)உபரி பேருந்துகளையெல்லாம் சேர்த்து 3945 இயக்கியதாக கணக்கு காண்பித்து அரசிடம் அதிகாரி நல்ல பெயர் வாங்கியாயிற்று. இன்று காலை ஆளுங்கட்சி சொல்லி பேருந்தை எடுத்தவர் மதியம் பணிமாற்றம் என இறங்க கூடாது அவரே இரவு வரை பணி பார்த்துவிட வேண்டும் என்ற நிர்வாக நெருக்கடியுடன் வேலைநிறுத்தத்திற்கு ஆதரவே இல்லை என சீன் காண்பித்தாயிற்று. ஜெயா கொண்டுவந்த வேலை நிறுத்த தடை சட்டத்தினை அதன் மீதான உச்சநீதிமன்ற கருத்தினை இன்னும் மாற்றியமைக்காததால், தொழிற்தாவாச்சட்டப்படி 15 நாட்கள் முன்னறிவிப்பு கொடுக்காத வேலை நிறுத்தம் எனவே சிபிஎம்-மிலும் உறுப்பினர், சிஐடியு சங்கத்திலும் இருப்பவர் மட்டும் ஆப்சென்ட் ஆனால் போதும் என சங்கமே அறிவுறுத்தல். அதிமுக சங்கத்தில் பெரும்பாலானவர்கள் பணிக்கு ஆஜர். தொழிற்சங்கங்களின் எண்ணிக்கை குறையாதவரை, தொழிலாளர்கள் தன்னெழுச்சியாக போராட்டங்கைள முன்னெடுக்காதவரை இது போன்ற வேலை நிறுத்தங்கள் ஒருவர் தரப்பில் வெற்றி எனவும், மற்றவர் தரப்பில் ஆதரவே இல்லை என அவரவர் தொலைகாட்சியில் பறைசாற்றிக்கொள்ளவே பயன்படும். மற்றபடி பலன் எதுவும் இருக்காது. தொழிலாளர்களுக்கு அரசியல் சார்ந்து பாடங்கள் எடுக்க வேண்டும். மக்களையும் பங்கெடுக்க வைக்கும் தன்னெழுச்சி போராட்டங்களே நினைத்த இலக்கை அடைய முடியும். வேலை நிறுத்த தினத்தில் ஆப்சென்ட் ஆகும் தொழிலாளர்களை ஓரிடத்தில் குவிக்க ரயில் மறியல் என அறிவித்து அதற்கு 9 மணி முதல் தொழிலாளர்கள் காத்திருக்கையில் சிபிஎம் கொடிபறக்க, அண்ணா திமுக கொடி பறக்க, வைகோ கொடி பறக்க தலைவர்கள் வெள்ளை வேட்டி சகிதம் 11/00 மணிக்கு பல டாடா சுமோக்களில் வந்து இறங்கிய காட்சியைப் பார்த்தால் ஆங்காங்கே எழுகிற தன்னெழுச்சிகள் கூட கேலிக்கூத்தாகிவிடும் – சித்திரகுப்தன்

    • மிக அருமையாகச் சொன்னீர்கள் சித்திரகுப்தன். இந்த முதலாளித்துவக் கட்சிகளின் தொழிற்சங்கப் பொறிகளுக்குள் சிக்கிக் கொண்டு சிந்தித்தால் தொழிலாளர்கள் ஐக்கியப்படவும் முடியாது, அவர்களது போராட்டங்கள் வெற்றி பெறவும் முடியாது. 

  11. இது ஒரு அருமையான அலசல். உண்மைகளை போட்டு உடைத்துள்ளது வினவு. இது தான் வினவின் நிலைப்பாடு என்பது வரவேற்க கூடிய விஷயம். ஆதரிப்பதோ, எதிர்ப்பதோ ஒரு சார்பு தன்மையை கொண்டு வந்து விடும்.

    • இது ஒரு அருமையான அலசல். உண்மைகளை போட்டு உடைத்துள்ளது வினவு. இது தான் வினவின் நிலைப்பாடு என்பது வரவேற்க கூடிய விஷயம். ஆதரிப்பதோ, எதிர்ப்பதோ ஒரு சார்பு தன்மையை கொண்டு வந்து விடும்.

      ///////////////////////////////////////// தெளிவாக கூறுங்கள் தோழரே … ”ஓட்டுப் பொறுக்கிகள் நடத்தும் பந்த்தை ஆதரிப்பதோ, எதிர்ப்பதோ ஒரு சார்பு தன்மையை கொண்டு வந்து விடும். ”என்று ../////

  12. […] இத்தனையும் விட “டேய் கடைய மூட்றா என்பது தான்” தெளிவான அரசியல். ஆம் அவர்கள் தெளிவாக இருக்கிறார்கள் மக்களின் எதிரிகள் குறிப்பாக இந்த விலைவாசி உயர்வுக்கு எதிராக அவர்கள் போராடவில்லை. கருணாவிடம் பணம் சேருவதை எதிர்த்தே போராடுகிறார்கள். அவர்களுக்கெல்லாம் ஒரே அம்மாவான செயா திருடும் போது ஏதாவது விழும் அதை எப்போது நக்கலாம் என்ற ஆவலாய் திரிகிறர்கள். அதிமுக உள்ளிட்ட ஓட்டுப்பொறுக்கி கட்சிகளுக்கு மக்களைப்பற்றி கவலை இல்லை, மக்களுக்காக போராடுவதாகக் கூறி மக்களிடம் கொள்ளையடிப்பதுதான் அவர்களின் வேலை. அவர்களின் எதிரி உழைக்கும் மக்கள் தானே தவிர முதலாளிகள் அல்லவே!!!! Related topic வேலை நிறுத்தமா? கூட்டணிக்கு அச்சாரமா… […]

  13. […] இத்தனையும் விட “டேய் கடைய மூட்றா என்பது தான்” தெளிவான அரசியல். ஆம் அவர்கள் தெளிவாக இருக்கிறார்கள் மக்களின் எதிரிகள் குறிப்பாக இந்த விலைவாசி உயர்வுக்கு எதிராக அவர்கள் போராடவில்லை. கருணாவிடம் பணம் சேருவதை எதிர்த்தே போராடுகிறார்கள். அவர்களுக்கெல்லாம் ஒரே அம்மாவான செயா திருடும் போது ஏதாவது விழும் அதை எப்போது நக்கலாம் என்ற ஆவலாய் திரிகிறர்கள். அதிமுக உள்ளிட்ட ஓட்டுப்பொறுக்கி கட்சிகளுக்கு மக்களைப்பற்றி கவலை இல்லை, மக்களுக்காக போராடுவதாகக் கூறி மக்களிடம் கொள்ளையடிப்பதுதான் அவர்களின் வேலை. அவர்களின் எதிரி உழைக்கும் மக்கள் தானே தவிர முதலாளிகள் அல்லவே!!!! Related topic வேலை நிறுத்தமா? கூட்டணிக்கு அச்சாரமா… […]

  14. இங்க ‘பாலா’-ங்கற பேர்ல பேசிகிட்டு இருக்கற நல்ல மனுசனோட குரலைக் கேட்ட ஒடனே எனக்கு மண்டைக்குள்ள மணியடிக்குதே…

    வேற யாருக்காச்சும் இதே போல மணியடிக்குதா?

    //நானும் அந்த வாசகர் வட்டத்தில் ஒருவன் தான் நீங்கள் எழுதும் கருத்துக்களில் பலவற்றில் எனக்கும் உடன்பாடு உண்டு. ஆனால் 100 சதவிகிதம் உங்களை ஏற்றுக்கொள்ள இயலாது. மேலும் எனக்கே உங்களிடம் கருத்து சொல்வதற்கு தயக்கமாக இருக்கிறது.. அந்த அளவிற்கு உங்கள் சர்வாதிகார மனப்பான்மை வெளிப்படுகிறது.//

    //நானும் நீங்கள் எழுதுவதை ஏற்றுக்கொள்ளத்தான் செய்தேன். ஆனால் இணையத்தில் உங்களை பற்றிய ஒரு செய்தியை படிக்கும் முன்//

    //பிரச்னைகளை தீர்க்கும் வழிகள் சம்பந்தமாக பதிவுகள் எழுதுங்கள்..//

    எங்கேயோ கேட்ட குரல்ல்ல்ல்ல்…. எனக்கு சந்தேகமா இருக்கு. வேற யாருக்குமே சந்தேகம் வரலியா?

    • சேச்சே அவரா இருக்காதுங்க,,, .  மானே, தேனே, பொன்மானே மாதிரி மார்க்சியம், புரட்சி, தோழர் அப்பிடீன்னு அங்க இங்க வரவேயில்லயே தவிர அவரு இப்ப ஆசாதி கிட்ட கன்சல்ட் பண்ணாம புள்ளயார் சுழி கூட போடறதில்லையாம்.. ஆசாதி பதிவுலக பஞ்சாயத்துக்கு ஸ்கிரீன் பிளே டிஸ்கசன்ல பயங்கர பிசியா இருக்கார் அதனால அவரா இருக்காதுங்க… 

  15. ஒரு வேளை தமிழ்நாட்டில் மட்டும் விலைவாசி உயர்வு பாதிக்கவில்லையோ..? எல்லோரும் சுபிட்சமாக இருக்கிறோமோ..? நமக்காகத்தான் அரசே தவிர அவர்களுக்காக நாம் என்றில்லை. அப்படியிருக்க நம்மை ஆளும் உரிமையை கொடுத்த நமக்கு, அதே அரசை தட்டிக் கொடுக்கவும், எதிர்ப்பை காட்டவும் உரிமையிருக்கத்தானே செய்கிறது. ஏன் அதை பயன் படுத்தாமல் வெறும் ஊமைகளாய் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறோம்? ம்ஹாராஷ்ட்ராவில் ஆளும் ஆட்சியை எதிர்த்து பந்த் வெற்றிகரமாய் நடத்தியிருக்கிறார்கள்.? ஏன் இங்கு மட்டும் இப்படி? இலவச டிவிக்களும், டாஸ்மாக் சரக்குகளூம், மற்றும பல இலவசங்களூம் போதுமோ..

    நன்றி கேபிள் சங்கர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க