privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திபி.எஸ்.எல்.வி ராக்கெட்: அறிவியலுக்கு கோயிந்தா, கோயிந்தா !!

பி.எஸ்.எல்.வி ராக்கெட்: அறிவியலுக்கு கோயிந்தா, கோயிந்தா !!

-

மூன்று மாதங்களுக்கு முன்னர் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இஸ்ரோ விட்ட ஜி.எஸ்.எல்.வி ராக்கெட் தோல்வி அடைந்ததை அறிந்திருப்பீர்கள். இதனால் அந்நிறுவனத்தின் அறிவியலாளர்கள் சோர்ந்து போயிருக்க கூடும் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. இந்த தோல்வி ஏன் என்று அறிவியல் பூர்வமாக ஆய்ந்து அதை சரி செய்வதுதானே நியாயமானது? இது இந்தியாவிற்கு மட்டுமல்ல எந்த நாட்டு ராக்கெட்டிற்கும் பொருந்தும்.

நேற்று 12.7.2010 ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி சி-15 ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது. அதிலுள்ள செயற்கைக் கோள்கள் எல்லாம் பழுதின்றி சுற்றுவட்டப் பாதையில் நிறுத்தப்பட்டிருக்கின்றது. இதற்கான 51 மணிநேர கவுண்ட்டவுன் சனிக்கிழமையன்று துவங்கியது. இத்தகைய முக்கியமான தருணத்தில் ராக்கெட் ஏவும் வேலைகளோடு நமது விஞ்ஞானிகள் வேறு ஒரு ‘முக்கியமான’ விவகாரத்திலும் ஈடுபட்டிருக்கின்றனர்.

அதாவது ராக்கெட் வெற்றிகரமாக செலுத்தப்பட வேண்டுமென்பதற்காக திருப்பதி கோவிலுக்கு சென்று வழிபட்டிருக்கின்றனர். இஸ்ரோவின் தலைவர் கே.ராதாகிருஷ்ணன் உட்பட பல விஞ்ஞானிகள் கோவிலுக்கு சென்று சுப்ரபாத சேவையில் ஏழுமலையானை தரிசித்திருக்கின்றனர். ராக்கெட்டின் மாதிரி வடிவம் ஏழுமலையானின் பாதத்தில் வைத்து சிறப்பு வழிபாடும் நடத்தியிருக்கின்றனர்.

இதிலிருந்து என்னவெல்லாம் நடந்திருக்குமென்று யூகிக்க முடிகிறது. ராக்கெட் முன்னாடி தேங்காய் உடைத்து, சூடம் கொளுத்தி, கருப்பு கயிறு கட்டி, திருஷ்டி பொம்மையை பொருத்தி எல்லாம் செய்திருப்பார்கள் போலும். கவுண்ட்டவுன் நேரத்தில் திருப்பதி சென்று காஸ்ட்லி ஆண்டவனை வழிபட்டு ராக்கெட் வெற்றிக்கு இறைஞ்சுகிறார்கள் என்றால் இந்தியாவில் அறிவியல் உருப்படுமா?

சாதாரண வாழ்க்கைப் பிரச்சினைகளுக்காக ஆண்டவனை நோக்கி பாமார மக்கள் செல்வதற்கும் இந்த மெத்தப் படித்த சான்றோர்களுக்கும் என்ன வேறுபாடு? ஒருவேளை ராக்கெட் கடலில் வீழ்ந்தால் அதற்காக வெங்கடாசலபதியிடம் காப்பீடா பெற முடியும்? இல்லை ராக்கெட் கடலில் விழுந்ததற்கான அறிவியல் காரணங்களை திருப்பதி கோவிந்தாவா அலசி வழி சொல்லப் போகிறார்? ஏனைய்யா இப்படி அறிவியலை இழிவுபடுத்துகிறீர்கள்?

ஒருவேளை இஸ்ரோவின் தலைவர் முஸ்லிமாக இருந்து அவர் அதற்காக மெக்காவோ, நாகூருக்கோ செல்வதை இவர்கள் அனுமதிப்பார்களா? நாட்டின் உயர் ஆய்வு நிறுவனங்களில் கூட இந்துத்தவத்தின் வடிவங்கள் எப்படி உறுதியாக இருக்கின்றன என்பதற்கு இது ஒரு சான்று.

திருப்பதியில் போய் மொட்டைபோடுபவர்களுக்கு மீண்டும் முடி வளர்ந்து விடும் என்பதால் பிரச்சினையில்லை. ஆனால் அறிவியலுக்கும் மொட்டை அடித்து விட்டால் அறிவு வளருவது சாத்தியமில்லை.