privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திஉள்நாட்டுப் போருக்கு தயாராகிறது இந்திய அரசு !!

உள்நாட்டுப் போருக்கு தயாராகிறது இந்திய அரசு !!

-

ஜூன், 1, 2010 இல் மாவோயிஸ்ட்டுகளின் பொலிட்பீரோ உறுப்பினரும், செய்தித் தொடர்பாளருமான தோழர் ஆசாத்தையும், ஹெம் பாண்டே என்ற சோனல் கமிட்டி தோழரையும் நாகபுரி ரயில் நிலையத்தில் வைத்து ஆயுதங்கள் அற்ற நிராயுதபாணிகளாய் கைது செய்தது ஆந்திரப் பிரதேச சிறப்பு உளவுத் துறைப் போலிசு. பின்னர் அவர்களை ஹெலிகாப்டரில் அழைத்துச் சென்று அதிலாபாத் மாவட்ட காடுகளில் இறக்கி சுட்டுக் கொன்றுவிட்டு என்கவுண்டர் மோதலில் கொல்லப்பட்டதாக கதையும் விட்டது.

ஆந்திரப் பிரதேச சிறப்பு உளவுத் துறை என்பது இசுரேலினுடைய மொசாத் கொலைகார குழுவால் பயிற்சி பெற்றதாகும். தோழர் ஆசாத்தைப் போல பல தோழர்கள் இக்கொலைகாரர்களால் கொலை செய்யப்பட்டிருக்கின்றனர். ஆனால் இந்தக் கொலை அத்தோடு ஒன்று என்று மட்டும்  முடிவு செய்ய முடியாது. இதில் மிகப்பெரிய சதியும், வரவிருக்கும் பெரிய அபாயாமும் உள்ளது.

ஆபரேஷன் கீரின் ஹண்ட் நடவடிக்கையை ஆரம்பித்த மத்திய அரசு மாவோயிஸ்ட்டுகளை ஒழிக்கிறேன் என்ற பெயரில் மத்திய இந்தியாவின் பழங்குடி மக்கள் மீது மிகப்பெரும் போரை நடத்தி வருகிறது. இது குறித்து வினவில் பல கட்டுரைகளை வெளியிட்டுள்ளோம். படிக்காதவர்கள் அதை பொறுமையுடன் படிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

ப.சிதம்பரத்தின் தலைமையில் நடக்கும் இந்த நடவடிக்கையின் போது மாவோயிஸ்ட்டுகள் மோதலை  கைவிட்டுவிட்டு பேச்சு வார்த்தைக்கு வரவேண்டுமென்று சும்மா ஒரு பேச்சை மத்திய அரசு பேச ஆரம்பித்தது.  ஆன்மீகவாதியும், மனித உரிமை ஆர்வலருமான சுவாமி அக்னிவேஷ் என்பவர் இதை வைத்துக்கொண்டு இருதரப்பையும் பேசவைக்கும் முயற்சியை அரசு ஒப்புதலோடு சில மாதங்களாக செய்து வந்தார்.

ப. சிதம்பரமே கைப்பட எழுதிய கடிதம் ஒன்றில் இந்த பேச்சு வார்த்தை முயற்சியை எடுக்கும் அக்னிவேஷை ஆதரிப்பதாக எழுதியிருக்கிறார். இந்தக் கடிதம் இரகசியமானது என்று ப.சிதம்பரம் குறிப்பிட்டாலும் உள்துறை அமைச்சகத்திலிருந்து இது வேண்டுமென்றே ஊடகங்களுக்கு கொடுக்கப்பட்டது. இந்திய அரசின் மனிதாபிமான முகத்தை காட்ட வேண்டுமென்பதற்காகவே அவர்கள் இப்படி கசிய விட்டார்கள்.

இதற்காக சுவாமி அக்னிவேஷுக்கு மாவோயிஸ்ட்டு கட்சியின் செய்தித் தொடர்பாளரான தோழர் ஆசாத் எழுதிய கடிதம் மட்டும் இதுவரை ஊடகங்களால் பிரசுரிக்கப்படவில்லை. அதில் இந்திய அரசின் இரட்டை நிலைகளையும், ஏமாற்று வித்தைகளையும் தோழர் ஆசாத் தோலுரித்திருப்பார். இருப்பினும் பேச்சு வார்த்தைகளுக்கு அக்னிவேஷ் எடுக்கும் முயற்சிகளுக்கு அவர் தடையோ, எதிர்ப்போ சொல்லவில்லை.

இந்நிலையில் தொலைதூரத்திலிருந்து ரயில் பயணம் செய்து நாகபுரி வழியாக தண்டகாரண்யாவுக்கு செல்லும் வழியில் ஆந்திர உளவுத் துறை அவர்களை கைது செய்து அதிலாபாத்தில் கொன்றுவிட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த சுவாமி அக்னிவேஷ் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தை நேரில் பார்த்து தனது கண்டனத்தை தெரிவித்திருக்கிறார். அதற்கு ப.சி இது நடந்தது தனக்கு தெரியாது என்று பச்சையாக புளுகியதோடு அலட்சியமாகவும் இருப்பதை இப்போது அக்னிவேஷ் எழுதியிருக்கிறார்.

ஆக பேச்சு வார்த்தை என்ற பெயரில் மாவோயிஸ்ட்டுகளின் முக்கிய தலைவரை கண்டு பிடித்து கொன்றது மூலம் இந்திய அரசு தனது உண்மையான முகத்தை காட்டியிருக்கிறது. ஊடகங்கள் மூலம் மாவோயிஸ்ட்டுகள் மீது ஆளுமைக் கொலை செய்வதையும் அது செய்து வருகிறது. சுவாமி அக்னிவேஷ் போன்ற அறிஞர் பெருமக்கள் இப்போது இந்திய அரசு, ப.சியின் கொடூர வேடத்தை பட்டுப்புரிந்து கொண்டிருக்கின்றனர்.

மேற்கு வங்கத்தில் ஞானேஸ்வரி விரைவு ரயில் வண்டி தடம்புரண்டு விபத்துக்குள்ளாகி 149 மக்கள் கொல்லப்பட்டனர். இதற்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை ஆதரங்களோடு தோழர் ஆசாத் வெளியிட்ட பத்திரிகை செய்தியை எந்த ஊடகமும் கண்டு கொள்ளவில்லை. ஆனால் அந்த ரயில் விபத்துக்கு மாவோயிஸ்ட்டுகளே காரணமென்ற ப.சியின் பச்சைப்புளுகை மட்டும் தினசரி வாந்தி எடுக்கின்றனர்.

மாவோயிஸ்ட்டுகள் செயல்படும் மாநிலங்களின் முதல்வர்கள் மாநாட்டில் பேசிய ப.சி பல திட்டங்களை அறிவித்திருக்கிறார். அதன்படி மத்திய இந்தியாவில் சொந்த மக்களைக் கொல்லும் ஒரு பெரும் உள்நாட்டுப்போரை இந்திய அரசு நடத்தப்போவது அப்பட்டமாக தெரிய வந்திருக்கிறது.

நிறைய ஹெலிகாப்டர்களை போர் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவது, 400 புதிய காவல் நிலையங்களை பெரும் கோட்டை பாதுகாப்புடன் தலா இரண்டு கோடி ரூபாயில் இரண்டு ஆண்டில் உருவாக்குவது, சல்வா ஜூடும் குண்டர்களை சிறப்பு காவல் அதிகாரிகள் என்ற பெயரில் ஆயிரக் கணக்கில் சேர்ப்பது, ஓய்வு பெற்ற ராணுவ ஜெனரல் தலைமையில் ஒருங்கிணைந்த பாதுகாப்பு படையை உருவாக்கி ஈடுபடுத்துவது, இந்த மாநிலங்களில் 950 கோடி செலவில் புதிய சாலைகளையும், பாலங்களையும் கட்டுவது என பிரம்மாண்டமான போர் தயாரிப்பு திட்டங்கள் முடிவு செய்யப்பட்டு அமலுக்கு வரப்போகின்றது.

மாவோயிஸ்ட்டுகளை ஒடுக்கும் பணி தங்களுக்கு வருமென்பதால் அதிகாரிகளும், வீரர்களும் தயாராக இருக்க வேண்டுமென்று இராணுவத் தளபதி பேசியிருக்கிறார். விமானப்படைத் தளபதி சட்டீஸ்கர் மாநிலத்தின் மூன்று இடத்தில் விமானப்படை தளங்கள் அமைக்கப்படும் என்று அறிவித்திருக்கிறார்.

பா.ஜ.க, சி.பி.எம் உள்ளிட்ட நாட்டின் அனைத்து ஓட்டுக்கட்சிகளும் இந்த போரை ஆதரிக்கின்றன. சொல்லப்போனால் காங்கிரசு அரசின் வேகம் போறாது என்பதே அவற்றின் விமரிசனம்.

இந்த நிலையில் தோழர் ஆசாத்தின் படுகொலை மூலம் மத்திய அரசு தனது போரை தீவிரப்படுத்துவதாக அறிவித்துவிட்டது. ஊடகங்களும் அதற்கு தப்பாமல் தலையாட்டுகின்றன. சுவாமி அக்னிவேஷ் போன்றவர்கள் இந்திய அரசின் இரட்டை வேடத்தை கண்டு செய்வதறியாது திகைத்து நிற்கிறார்கள். இனி மத்திய இந்தியாவின் பழங்குடி மக்கள் கூட்டம் கூட்டமாக கொலை செய்யப்படுவார்கள்.

பன்னாட்டு நிறுவனங்களின் கொள்ள வேட்டைக்காக தண்ட காரண்யாவை கைப்பற்றத் துடிக்கும் ப.சிதம்பரத்தின் வெறி இப்போது பெரும் போராக மாறி நிற்கிறது.

மாவோயிஸ்ட்டுகள் மற்றும் அவர்களின் தலைமையில் அணிதிரண்டு போராடும் பழங்குடி மக்கள் இந்த ஆக்கிரமிப்புக்கு பணியப் போவதில்லை. சொந்த நாட்டையும், மக்களையும் அவர்களின் விடுதலையையும் நெஞ்சில் ஏந்தி போராடும் மண்ணின் மைந்தர்களை புரிந்து கொள்ளவோ, ஆதரிக்கவோ யாரும் இருக்க கூடாது என்பதற்காகவும் இந்திய அரசு கடுமை காட்டிவருகிறது.

“இல்லை, எங்கள் சொந்த மக்களை கொல்லும் இந்த அநீதியான போரை நாங்கள் எதிர்க்கிறோம்” என்ற குரல் நம்மிடமிருந்து தீவிரமாக ஒலிப்பதுதான் நாம் செய்ய வேண்டிய கடமை. இதைக் கூட செய்யவில்லை என்றால் அதுதான் தேசத்துரோகம். என்ன செய்யப் போகிறோம்?

___________________________________________