Thursday, May 1, 2025
முகப்புசெய்திவேதாந்தா - மத்திய அரசு: அடிக்கிற மாதிரி அடி, அழுவது போல அழு !!

வேதாந்தா – மத்திய அரசு: அடிக்கிற மாதிரி அடி, அழுவது போல அழு !!

-

ரிசாவின் நியாம்கிரி மலையில் டோங்கிரியா கோண்டு எனும் பழங்குடி மக்கள் இயற்கையை சார்ந்து காலம் காலமாக வாழ்ந்து வருகின்றனர். இங்கிருக்கும் மலையும், காடும் தான் இவர்களது வாழ்வாதாரத்திற்கு ஊற்று.

இந்நிலையில் இங்கு சுமார் 600 ஹெக்டேரில் வேதாந்தா அலுமினியம் எனும் பன்னாட்டு நிறுவனத்திற்கு பாக்சைட் சுரங்கம் வைத்துக் கொள்வதற்கு ஒரிசா அரசு அனுமதி அளித்தது. வேதாந்தாவுடன் ஒரிசா கனிமவளக் கழகம் எனும் மாநில அரசு அமைப்பும் தொழிலில் கூட்டு சேர்ந்துள்ளது.

தமது வாழ்வாதாரங்கள் பாதிக்கப்படுவதை எதிர்த்து அந்த மக்கள் வீரஞ்செறிந்த போராட்டத்தை நடத்தி வருகின்றனர். மறுபுறம் அதை ஒடுக்குவதற்கு வேதாந்தா நிறுவனமும், அரசுகளும் பல மாய்மாலங்களில் ஈடுபட்டு வருகின்றனர். கல்வி, மருத்துவம், என பல உதவித் திட்டங்களை அமல்படுத்தி வருவதாக நடித்துக் கொண்டு நியாம்கிரி மலையை முழுங்குவதற்கு வேதாந்தா நிறுவனம் முயற்சித்து வருகிறது.

பிரதமர் அலுவலகத்தின் கீழ் வரும் தேசிய ஆலோசனைக் கவுன்சில் என்ற சட்ட உரிமையற்ற ஆலோசனை மட்டும் கூறும் அமைப்பு என்.சி. சக்சேனா என்பவரது தலைமையில் ஒரு கமிட்டி அமைத்து அறிக்கை வெளியிட்டிருக்கிறது. இந்தக் கமிட்டி டோங்கிரியா மக்களின் வாழ்வு, பண்பாடு, மற்றும் இயற்கை வளம் எல்லாம் எப்படி பாதிக்கப்படும் என்று சொல்கிறது. அதை வைத்து வேதாந்தாவின் திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

ஆனால் இது வெறும் நாடகம்தான் என்பது முக்கியம். இடையில் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் தனது தயக்கங்களை வெளியிட்டிருந்தது. இவற்றையெல்லாம் எதிர்த்து வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தது. அதில் நீதிமன்றம் கூறிய தீர்ப்பில் வேதாந்தா நிறுவனம் தனது முயற்சிகளை நிலவும் சட்டத்திற்குட்பட்டு தொடரலாம் என்று தந்திரமாக அனுமதி வழங்கப்பட்டது.

நீதிமன்றம் தலையிட்டுள்ள நிலையில் என்ன செய்யலாம் என்று அரசு நிறுவனங்கள் யோசித்த வேளையில் (எல்லாம் ஒரு பாவ்லா) இந்திய அரசின் அட்டர்னி ஜெனரல் ஒரு கருத்தை கூறினார். அதன்படி சுற்றுச்சூழல் வனத்துறை அமைச்சகத்திற்கு இப்போதும் கூட அனுமதி அளிக்கலாமா, வேண்டாமா என்று முடிவு செய்யும் உரிமை இருக்கிறது என்றார். வேதாந்தா நிறுவனமோ தனக்கு உச்சநீதிமன்றம் அனுமதி கொடுத்து விட்டது என்கிறது.

ஆக மொத்தம் என்ன நடக்கிறது? வெளியே மக்கள் போராட்டம் தீவிரமாக நடந்து வரும் வேளையில் அதைத் தணிக்கும் வண்ணம் இந்திய அரசும்,  வேதாந்தா நிறுவனமும் நடத்தி வரும் கச்சிதமான நாடகம்தான் இது. பழஙக்குடி மக்களின் காவலனாக மாவோயிஸ்ட்டுகள் போராடி வரும்போது இந்த பிரச்சினையில் எடுத்தேன், கவிழ்த்தேன் என்று செய்ய முடியாத நிலையில் அரசு இருப்பதுதான் இப்போதுள்ள ஒரே பிரச்சினை.

இதுபோக ஒரிசாவின் நவீன்பட்நாயக் அரசுக்கும், காங்கிரசு கட்சிக்கும் உள்ள ஓட்டுக்கட்சி முரண்பாடும் ஒரு காரணம். ஆனால் வேதாந்தா விவகாரத்தில் இருவரும் ஒன்றுபட்டே நிற்கிறார்கள். ப.சிதம்பரம் கூட வேதாந்தாவின் இயக்குநராக முன்னர் வேலைபார்த்தவர்தான்.

காங்கிரசின் திக்விஜய் சிங் என்ற முன்னாள் முதலமைச்சர் பேசும் போது மாவோயிஸ்ட்டுகளை படை கொண்டு அடக்கும் ப.சிதம்பரத்தின் அணுகுமுறையைக் குறை கூறியிருந்தார்.  இது கொள்கை பற்றிய பிரச்சினை என்பதை விட காங்கிரசில் இருக்கும் கோஷ்டிகள் பற்றிய பிரச்சினை என்பது சாலப்பொருந்தும்.

இதனால் ஆத்திரமுற்ற சிதம்பரம், தன்னை விட திறமையாக யாரும் வேலை செய்ய முன்வந்தால் மகிழ்ச்சிதான் என்று பணிவாக கூறுவது போல அளந்து விட்டு விசயத்திற்கு வருகிறார். அதாவது மாவோயிஸ்ட்டுகளை அடக்குவது மாநில அரசுகளாம். அதற்கு மத்திய அரசு உதவி மட்டும் செய்கிறதாம். தாங்கள் செயல்படும் பகுதிகளில் மாவோயிஸ்ட்டுகள் பெரும் பணக்காரர்களாக மாறிவருகிறார்களாம். பல முதலாளிகளிடம் வரி வசூலித்து வருகிறார்களாம். இதனால் மத்திய அரசுக்கு வரவேண்டிய பணம் மாவோயிஸ்ட்டுகளுக்கு போகிறது என்று ஒநாய் போல வருத்தப்பட்டு கண்ணீர் விடுகிறார் சிதம்பரம்.

ப.சிதம்பரத்தின் கூற்றை நன்கு உற்று நோக்குங்கள். மாவோயிஸ்ட்டுகள் பிரச்சினை என்பது பழங்குடி மக்களின் உயிராதாரமான பிரச்சினைகளின் பால் எழுந்தது என்று அவர் கருதவில்லை. முதலாளிகளின் பணம் வசூலிக்கப்படுவதுதான் அவரது கவலை. அதில் நைசாக இந்திய அரசுக்கு வரவேண்டிய பணம் போச்சே என்று வடை போன மாதிரி ஒரு அக்கறை. ஸ்விஸ் வங்கியில் போடப்பட்டுள்ள ஆறு இலட்சம் கோடி கள்ளப்பணத்தை அனுமதித்த செட்டிநாட்டு சிதம்பரம் மாவோயிஸ்ட்டுகள் வரி வசூலிப்பது குறித்து கவலைப்படுகிறார். என்ன ஒரு நடிப்பு! ஆக மாவோயிஸ்ட்டுகளுக்கு பணம் ‘கட்டும்’ அபயாத்திலிருந்து முதலாளிகளைக் காப்பாற்றுவதற்கே “ஆபரேஷன் கீரீன் ஹண்ட்”. மற்றபடி பழங்குடி மக்களெல்லாம் கொசுமாதிரி புகை போட்டே ஒழிக்கப்பட வேண்டியவர்கள்.

ஆக இருவழிகளில் மத்திய அரசு செயல்படுகிறது. ஒன்று மாவோயிஸ்ட்டுகளை இராணுவ ரீதியில் ஒடுக்குவது. மற்றொன்று பழங்குடி மக்களுக்கு ஆதரவாக பேசுவது போல கமிட்டி,சுற்றுச்சூழல் என்று பேசியே நீர்த்துப் போகச்செய்வது. இறுதியில் வேதாந்தா நிறுவனம் தனது பாக்சைட் சுரங்கத்தை ஆரம்பிக்கப் போகிறது.

ஆனாவிலும் ஒரிசாவிலும், தண்டகாரண்யாவிலும் அடிபணியாமல் போரிடும் பழங்குடி மக்கள் இந்த நாடகத்தை தூக்கி எறிவார்கள். வேதாந்தா நிறுவனம் எத்தனை தடவை முயற்சி செய்தாலும் நியாம்கிரி மலையின் ஒரு குன்றைக்கூட கைப்பற்ற முடியாது. ஏனெனில் அந்த மலையில் ஒவ்வொரு அணுவிலும் பழங்குடி மக்களின் இரத்தமும், வேர்வையும் கலந்திருக்கிறது. அது இறுதி வரை பணியாது. போராடும். கடைசி பழங்குடி மனிதன் இருக்கும் வரையிலும் போராட்டம் தொடரும்.

_______________________________________________________________________