privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்ஐரோப்பாஜீன்ஸ் பேண்ட்டும், பாலியல் வன்முறையும் !

ஜீன்ஸ் பேண்ட்டும், பாலியல் வன்முறையும் !

-

த்தாண்டுகளுக்கு முன்பு இத்தாலியில் நடந்த ஒரு பாலியல் வன்முறை (கற்பழிப்பு) வழக்கில் நீதிமன்றம் குற்றவாளியை விடுதலை செய்தது. அந்தக் குற்றவாளி 45 வயதுடையவன், காரோட்டும் பயிற்சி அளிக்கும் போது ஒரு பெண்ணைப் பாலியல் வன்முறை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டவன். கீழ் நீதிமன்றத்தில் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டவன் மேல் நீதிமன்றத்தில் விடுவிக்கப்பட்டான். காரணம் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்டட அந்தப் பெண் சம்பவம் நடக்கும் போது இறுக்கமான ஜீன்ஸ் பேண்ட் அணிந்திருந்தாளாம். அதை அந்தப் பெண்ணின் அனுமதியில்லாமல் அகற்ற முடியாது என்பதால் நடந்தது கற்பழிப்பு இல்லை என விளக்கமளித்த நீதிமன்றம் மேலும் அந்தப் பெண்ணின் விருப்பத்தோடு நடந்த உறவு என்று அவனை விடுதலையும் செய்தது.

கார்டியன் செய்தித்தாளில் ஜூலி பின்டல் எழுதிய கட்டுரையை ஜூலை மாதம் இந்து பேப்பர் வெளியிட்டிருந்தது. ஆணாதிக்கத்தின் திமிரோடு படு பிற்போக்காக தீர்ப்பளித்திருக்கும் நீதிமன்றம் பத்தாண்டுகள் கழித்து இப்போது அந்த விளக்கத்தை வேறு ஒரு வழக்கில் திருத்திவிட்டதாம். தனது கூட்டாளியின் பதினாறு வயது மகளைக் கற்பழிக்க முயன்ற கயவன் மேற்கண்ட இறுக்கமான ஜீன்சு பேண்டு விளக்கத்தை வைத்து வாதிட்டபோது நீதிமன்றம் அதை ஏற்கவில்லையாம்.

இந்த சுயவிமரிசனத்தை எடுத்துக்கொள்வதற்கு பல போராட்டங்களும், பத்தாண்டு காலமும் ஆகியிருக்கிறது. பாலியல் வன்முறையின் பால் பல நீதிமன்றங்கள் உலகெங்கும் இப்படிப்பட்ட அணுகுமுறையைத்தான் கையாளுவதாக ஜூலி குறிப்பிடுகிறார். அதாவது ஒரு பெண் என்ன உடை அணிந்திருக்கிறாள், எப்படி நடந்துகொள்கிறாள் என்பதெல்லாம் கற்பழிப்பு வழக்குகளில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன. இதனால் பல குற்றவாளிகள் சட்டத்தின் ஓட்டைகள் வழியாக தப்பித்துக் கொள்கின்றனர். உலகெங்கும் பாலியல் வன்முறைகளுக்காக தண்டிக்கப்பட்ட குற்றவாளிகள் விகிதம் குறைவாகத்தான் உள்ளது.

தன்னை வல்லுறவுக்குள்ளாக்கிய அயோக்கியனை ஒரு பெண் பொது அரங்கில் தண்டிக்க நினைப்பதே அரிது. இந்தியா போன்ற நாடுகளில் அது இன்னமும் கடினமான ஒன்று. கற்பு, புனிதம் என்ற சங்கிலியில் பூட்டப்பட்டிருக்கும் ஒரு பெண் தான் கற்பழிக்கப்பட்டவள் என்று நீதி கோரினாலே அவள் வாழ்க்கை அத்துடன் முடிந்தது. பார்ப்பனியத்தின் விழுமியங்களால் இயங்கிவரும் சமூகம் அவளை புனிதம் கெட்ட அபலையாகத்தான் பார்க்கிறது. தமிழ் சினிமாவில் கூட கற்பழித்தவனைக் காப்பாற்றுவதற்கு வழக்குரைஞர் பாதிக்கப்பட்ட பெண்ணிடன் அவன் எங்கே கை வைத்து என்ன செய்தான் என்று வாதிடும்போது, எதுவும் சொல்ல முடியாமல் அந்தப் பெண் அழுது அரற்றுவாள். நிழலில் மட்டுமல்ல நிஜத்திலும் இதுதான் யதார்த்தமாக உள்ளது. சிதம்பரம் பத்மினி போன்ற வீரப் பெண்கள்தான் இந்தப் போராட்டத்தை எதிர் கொண்டு நீதியை நிலைநாட்டியிருக்கின்றனர். இவையெல்லாம் விதிவிலக்குகள்தான் என்ற போதும் சட்டமும், நீதிமன்றங்களும்கூட இதற்குத் தோதாகத்தான் இயங்குகின்றன என்பது முக்கியம்.

நீதிமன்றங்கள் மட்டுமல்ல கற்பழிப்புக்கு ஓரளவு பெண்களும் காரணமாக இருக்கின்றனர் என்பது உலகத்தின் பொதுப்புத்தியாக இருக்கிறது என்கிறார் ஜூலி. அம்னஸ்டி அமைப்பு சென்ற வருடம் உலகெங்கிலும் உள்ள இளைஞர்களிடம் நடத்திய கருத்துக் கணிப்பில் பதிலளித்த கால்பங்கினர் கற்பழிப்புக்கு பகுதியளவோ, முழுமையாகவோ பெண்களும் செக்சியான உடை அணிவதின் மூலம் காரணமாக இருக்கின்றனர் என்று தெரிவித்தனராம். இதையே அயர்லாந்தில் நடந்த ஆய்விலும் நாற்பது சதவீதம் பேர் வழிமொழிந்திருக்கின்றனர்.

ஆண்களின் கற்பழிப்பு நடவடிக்கைகளுக்கு வக்காலத்து வாங்கும் இந்தக் கருத்துக்கள் இந்தியா போன்ற பின்தங்கிய நாடுகளுக்கு மட்டுமல்ல முன்னேறிய நாடுளுக்கும் சொந்தமாக இருக்கிறது. ஒரு பெண் உடை அணிவதன் மூலம் ஒரு ஆணை கற்பழிப்பு நடவடிக்கைக்கு ஈர்க்கிறாள் என்ற வாதம் உண்மையில் பெண்ணைத்தான் குற்றவாளி ஆக்குகிறது. தப்பு செய்யும் ஆண்களெல்லாம் சூழ்நிலையின் கைதிகளாக கருதப்படுகிறார்கள். இதுதான் உலகத்தின் பொதுக்கருத்து என்றால் பெண்கள் சமூக வாழ்க்கையில் எத்தகைய அபாயத்துடன் வாழ வேண்டியிருக்கும்?

நைஜீரியாவில் ஒரு செனட்டர் ஒரு மசோதாவை முன்மொழிந்திருக்கிறாராம். அதன்படி ஒரு பெண் தனது அங்கங்கள் தெரியும் வண்ணம் உடையோ, குட்டைப் பாவாடையோ அணிந்து பொது இடத்தில் வலம் வந்தால் மூன்று மாதம் சிறை தண்டனையாம். இது அமலுக்கு வரும் பட்சத்தில் நைஜீரியாவின் சார்பில் ஒலிம்பிக் ஓட்டபந்தயத்தில் கலந்து கொண்ட வீராங்கனைகள் அனைவரும் குற்றவாளியாகி விடுவார்கள்! இதே போல போலந்திலும் ஒரு சட்டமன்ற உறுப்பினர் தெரு விபச்சாரத்தையும் கற்பழிப்புகளையும் குறைப்பதற்கு குட்டைப் பாவாடை அணிவதற்குத் தடை செய்யும் மசோதாவைத் தாக்கல் செய்வதற்கு திட்டமிட்டிருக்கிறாராம். வடக்கு மலேசியாவில் ஒரு பழமைவாத நகரக் கவுன்சில் குதிகால் செருப்புக்களையும், கண்ணைப் பறிக்கும் உதட்டுச் சாயங்களையும் தடை செய்வதன் மூலம் கற்பழிப்புக்களையும், முறையற்ற பாலியல் உறவுகளையும் குறைக்க திட்டமிட்டிருக்கிறதாம்.

இந்த விசயத்தில் இசுலாமியவாதிகளை யாரும் மிஞ்ச முடியாது. ஒரு தண்டியான சாக்குப்பையை உடல் முழுவதும் போர்த்திக் கொண்டு சுண்டுவிரலைக்கூட காட்டாமல் பெண்கள் நடமாடவேண்டும் என்பது அவர்கள் கருத்து. இதில் அனைவரும் தாலிபான்களாக இருக்கிறார்கள். இல்லையென்றால் ஆண்களின் காமம் தலைவிரித்து ஆடுமாம். ஏன்தான் ஆண்களை அப்படி காமவெறி பிடித்தவர்களாக அல்லா படைத்தார் என்பது தெரியவில்லை.

இறுதியாக ஜூலி பின்டால் பெண்களைப் பற்றி புனையப்பட்டிருக்கும் இக்கருத்துக்களைச் சாடி ஒரு பெண் என்ன அணிவது என்பதை அவள் தீர்மானிக்கட்டும், அதை மற்றவர்கள் கட்டளையிடத் தேவையில்லை, ஒரு பெண் குடித்திருந்தாலும், குட்டைப் பாவாடை அணிந்திருந்தாலும் யாரும் அவளைக் கற்பழிக்க முடியாது, அப்படி நடந்து கொண்டால் அது குற்றமே, அதற்கு பெண்ணைக் காரணமாக சொல்வதை ஏற்கமுடியாது என்கிறார்.

உண்மைதான். ஒரு பெண் சாக்குத் துணியை மூடியிருந்தாலும், திறந்த மார்பகத்தோடு நடமாடினாலும் அவளைக் கற்பழிக்க முடிவெடுத்து விட்ட கயவர்களுக்கு உடை ஒன்றும் ஒரு பொருட்டல்ல. ஒரு பெண் தனியாக ஆள் நடமாற்ற பகுதியில் சிக்குவதுதான் அவர்களுக்குத் தேவையான ஒன்று. இதைக் கடுமையான சட்டத்தின் மூலமே தண்டிக்க முடியுமேயன்றி பெண்கள் ஆபாசமாக ஆடை அணிகிறார்கள் என்று சால்ஜாப்பு சொல்வது பெண்ணை அடிமையாகக் கருதும் வெளிப்படையான ஆணாதிக்கத் திமிராகும்.

ஆனால் ஜூலி பின்டாலின் கருத்தோடு கூடுதலாக நாம் சொல்வதற்கு சில விசயங்கள் இருக்கின்றன. ஒரு பெண் எந்த ஆடை உடுத்த வேண்டும் என்பது அவளது விருப்பம, சுதந்திரத்தைப் பொறுத்தது என்பதில் சிறிய சிக்கல் இருக்கிறது. இன்றைய பெண்களின் நடை, உடை, பாவனைகளை அவர்கள் தெரிவு செய்வதில்லை. மாறாக பன்னாட்டு அழகு சாதன நிறுவனங்கள்தான் அவற்றைப் பயன்படுத்துமாறு பெண்களை நிர்ப்பந்திக்கின்றன. இந்நிறுவனங்களின் நோக்கம் பெண்களின் சுதந்திரத்தைப் பெற்றுத் தருவது அல்ல. மாறாக ஆணின் போகப்பொருளாக பெண்ணுடல் மாற்றப்பட வேண்டும் என்பதுதான். ஏனெனில் ஆண்களைக் கவருதற்குத்தான் ஆயிரக் கணக்கில் பொருட்கள் பெண்களின் மேக்கப் உலகில் குவிக்கப்படுகின்றன.

இந்தியாவில் பூவும், பொட்டும், வளையலும் அணிந்து ஒரு பெண் செல்வதற்கு காரணமென்ன? கணவனைக் கவருவதற்குத்தான். ஆனால் ஆண்கள் யாரும் பெண்களைக் கவருவதற்கு மல்லிகையைச் சூடுவதில்லை. தெருவோரம் நிற்கும் விலைமாது கூட இந்த அலங்காரங்களோடுதான் தனது வாடிக்கையாளரைக் கவருகிறாள். இவையின்றி அவளால் தொழிலைச் செய்ய முடியாது.

ஆண்களின் இன்பத்திற்காகப் பெண்களைக் கடைச்சரக்காக்கும் இந்த மாயவலையில் இருந்து பெண்கள் விடுபடவேண்டும். அரை நிர்வாண உடையுடன் நடக்கும் பேஷன் ஷோக்கள் எல்லாம் பெண்களின் விடுதலைக்காகவா நடத்தப்படுகின்றன? எந்த அளவுக்கு ஆண்களைக் கவர முடியும் என்பதே அவற்றின் அழகியல் விதி. உள்ளாடைகளைக்கூட ஆண்களின் கவர்ச்சிக்காகத் தயாரிக்கிறார்களேயன்றி பெண்களுக்கு அவை சிறப்பாகப் பயன்படவேண்டும் என்பதற்கல்ல.

எல்லா விளம்பரங்களிலும், ஏன் ஆண்கள் பயன்படுத்தும் பொருட்களுக்குக் கூட பெண் மாடல்கள்தான் தேவைப்படுகிறார்கள். இப்படி எல்லா வழியிலும் அல்லும் பகலும் பெண்ணுடல் என்பது உலக முதலாளித்துவ நிறுவனங்களால் அன்றாடம் கற்பழிக்கப்படுகின்றன. அதனால்தான் சொல்கிறோம் ஒரு பெண் தனக்குரிய ஆடைகளை அணிவதற்கு சுதந்திரமில்லை. இதைப்பெறவேண்டுமானால் போகப்பொருளாகக் கருதி திணிக்கப்படும் இந்த அழகியல் பொருட்களை மறுக்க வேண்டும். இவற்றைத் துறப்பதில்தான் பெண்ணழகு உண்மையாக மலர முடியும். ஆண்களைக் கவரும் விசயத்திலிருந்து பெண்கள் விடுதலையாவதுதான் அவளின் சுதந்திரத்திற்கான முதல் நிபந்தனை.

சமத்துவமான பெண்ணுரிமை என்பது அப்படித்தான் மீட்கப்பட முடியும். அப்போதுதான் நீதிமன்ற உதவியோடு ஆணாதிக்கம் நடத்தும் பாலியல் வன்முறைகளை எதிர்த்துப் போராட முடியும். இது குறித்து பெண் வாசகர்கள், பெண் பதிவர்கள் என்ன நினைக்கிறார்கள்? அதனால் ஆண்கள் கருத்துச் சொல்லக்கூடாது என்பதல்ல. விவாதத்திற்காகக் காத்திருக்கிறோம்!

(மீள்பதிவு) முதல் பதிப்பு – செப்-22-2008