privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திபூசணிக்காய் பெரிசா, பச்சை மிளகாய் பெரிசா - ஜ்யோவ்ராம் சுந்தர் ?

பூசணிக்காய் பெரிசா, பச்சை மிளகாய் பெரிசா – ஜ்யோவ்ராம் சுந்தர் ?

-

ம.க.இ.க பெரிய கட்சியா, சிறிய கட்சியா?

“இணையத்தை மட்டும் படிப்பவர்கள் ம.க.இ.கதான் தமிழகத்தின் மிகப் பெரிய அரசியல் இயக்கம் என நினைத்துக் கொள்வார்கள்.” – என்று கூகிள் பஸ்ஸில் (Google Buzz)  பிரபல இலக்கிய பதிவரும், பதிவுலகின் இலக்கிய குருஜியுமான ஜ்யோவ்ராம் சுந்தர் எழுதியிருந்தார்.  இதனை குசும்பன், சென்ஷி, அதுசரி, பால பாரதி, கோவி கண்ணன் முதலான பிரபல பதிவர்கள் லைக்கி(LIKE)யிருந்தனர்.

பிரபல பதிவர்கள் என்று குறிப்பிட்டிருப்பது இயல்பு நவிற்சியே. வஞ்சப்புகழ்ச்சி அல்ல. எனவே, கேலி கிண்டல் என்று நினைத்துக் கொண்டால் கம்பெனி பொறுப்பல்ல.. வினவு எதை எழுதினாலும் அதில் இன்டு, இடுக்கு, சந்து,பொந்து, லந்து களைக் கண்டுபிடிக்க சிலர் எப்போதும் காத்துக்கொண்டிருப்பதனால் இத்தகைய டிஸ்கியை போட்டு எழுத வேண்டியிருக்கிறது.

இனி சுந்தர்ஜியின் கருத்துக்கு வருவோம். “இணையத்தில் வினவு, மற்றும் ம க.இ.க தோழர்களின் தீவிர செயல்பாட்டை பார்த்துவிட்டு, தமிழ்நாட்டில் ம.க.இ.கதான் மிகப்பெரும் அரசியல் இயக்கம் என்று இன்டர்நெட்டையே நம்பியிருப்பவர்கள் தவறான முடிவுக்கு வருவார்கள். இருப்பினும் தமிழகத்தில் இருப்பவர்களும், இணையத்தை மட்டும் சாராதவர்களும் உண்மை நிலையை அறிவார்கள். மெய்நிகர் உலகத்தினை நம்புகிறவர்கள் நினைப்பது போல ம.க.இ.க என்பது மெய் உலகில் மிகப் பெரிய அரசியல் இயக்கமல்ல. ”பத்தோடு பதினொன்று. அத்தோடு இதுவும் ஒன்று” என்பதே அவரது பாட்டின் பொருள்.

மெய் உலகம், மெய்நிகர் உலகம் – எது உண்மை?

 

மெய் நிகர் உலகின் குடிமக்கள் பலர் மெய் உலகிலிருந்து துண்டிக்கப்பட்டிருப்பது உண்மைதான். எனினும் மெய் உலகில் வாழ்பவர்கள் எல்லாரும் மெய் நிலை உணர்ந்தவர்கள் என்று கூறமுடியுமா? அலுவலகத்துக்குச் செல்லும் தடத்தையும், சன் நியூஸையும், சீரியலையும், பஜ்ஜியின் எண்ணெயை உறிஞ்சுவதற்காக சேட்டன்மார்களால் வாங்கப்படும் தினத்தந்தியின் தலைப்புச் செய்திகளையும், தேநீரோடு சேர்த்து உறிஞ்சி, தம் அறிவை மேம்படுத்திக் கொள்பவர்களாகத்தான் பெரும்பான்மையான மெய் உலக தமிழர்கள் இருக்கிறார்கள். ஒரு வேளை இவர்களெல்லாம் தினசரிகளையும், வாரமிருமுறை இதழ்களையும் அட்டை டூ அட்டை படிப்பதாகவும் வைத்துக் கொள்வோம். அவையெல்லாம் உண்மைத் தமிழகத்தின் உரைகற்களா?

“தமிழ்நாட்டில் பிளஸ் டூ தேர்வு” என்ற செய்தியை – நேற்று, இன்று, நாளை மூன்றிலும் காலத்தை மட்டும் மாற்றிவிட்டு அதே ‘காலத்தை’ செய்தியாக (column) போடும் தினத்தந்தியோ, இழைத்துக் குழைத்து இந்துத்துவத் தமிழனை உருவாக்க முனைந்திருக்கும் தினமணியோ, லெட்டர்ஸ் டு எடிட்டர் அப்பாவுக்கும் WHAT THE F**K புத்திரனுக்கும் பாலம் அமைக்கும் முயற்சியில் எடை  கூடிக்கொண்டே போகும் ஹிந்துவோ, போலீஸ் அறிக்கைகளையும், அதிகார வர்க்க, அறிவாலயக் கிசு கிசுக்களையும், உளவுத்துறை அன்பர்களின் உதவிகளையும் வைத்து வாசகனின் புலனாய்வுத் திறனை வளர்த்து வரும் வாரமிருமுறை இதழ்களோ, சிட்னி உயிரியல் பூங்காவில் யானை குட்டி போட்டது முதல் ஹாலிவுட் நடிகையின் உள்ளாடை ஏலம் போட்டது வரையிலான உலகச் செய்திகளை வழங்கும் சன்.டி.வியோ மெய் உலகைப் பிரதிபலிப்பவையா?

இவற்றால் அறிவூட்டப்படும் மெய் உலகத் தமிழர்கள், தமிழ்நாட்டின் மிகப்பெரிய அரசியல் இயக்கம் என்று எதையெல்லாம் நினைத்துக் கொண்டிருக்கிறார்களோ, அதையெல்லாம் விட்டுவிட்டு, போயும் போயும் ம.க.இ.க வை மிகப்பெரிய அரசியல் இயக்கம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்களே மெய்நிகர் உலகத் தமிழர்கள், அதுதான் சுந்தரின் கவலை.

இணையத்தை அறியாத சாதாரண மக்களிடம் உள்ள சமூக அறிவு, இணையத்தில் மட்டும் உலவும் மக்களிடம் இருப்பதில்லை என்பது உண்மைதான். ஒன்றுமில்லாதவற்றைக் கூட கஷ்டப்பட்டு புரிந்து கொள்ள முயற்சி செய்து இறுதியில் குழப்பமாகவே காட்சியளிக்கிறார்கள் என்பதும் உண்மைதான். இதற்குக் காரணம் இணையம் மட்டுமே அல்ல. நுகர்வு கலாச்சாரத்தில் முனைவர் பட்டம் பெறும் அளவுக்கு முக்குளித்து வாழ்ந்து வரும் நடுத்தர வர்க்கத்தின் ‘அறிவு’ வெளிப்பாடே இது.

இணையத்தில் ம.க.இ.க – திட்டமிடப்பட்டதா?

பிளாக், ஆர்குட், ஃபேஸ் புக், டிவிட்டர், குழுமங்கள் என்று சோசியல் நெட்வொர்க்கிங்கின் கதவுகளை ஒவ்வொன்றாகத் திறந்து மூடிக்கொண்டிருக்கும் நெட்டிசன்கள், வீட்டுக்கு வெளியே கொலையே நடந்தாலும் கதவைத் திறந்து பார்ப்பதில்லையே, அது அல்ல சுந்தரின் கவலை. டிவிட்டரில் trishtrashers திரிஷாவையோ , Beingசல்மான் கானையோ ஃபாலோ செய்பவர்கள் மெய் உலகின் பிரபலங்களைத்தான் மெய்நிகர் உலகிலும் பாலோ செய்கிறார்கள் என்பதால், அவர்கள் ரசிகர் மன்றங்களுக்கும் உண்மைக்கும் நெருக்கமாக இருக்கிறார்கள் என்று சுந்தர் ஆறுதல் அடையக்கூடும். ம.க.இ.க தோழர்கள் தோற்றுவிக்கும் பொய் பிம்பம்தான் அவரது ஆற்றாமை.

வினவும், ம.க.இ.க தோழர்களும் இணையத்தில் செய்யும் வேலையின் பொருள் என்ன? மெய் உலகத்திற்கும் மெய் நிகர் உலகத்துக்கும் இடையில் நிலவும் இடைவெளியை அகற்ற முனைகிறோம். மெய் உலகத்திலும் இதே பணியைத்தான் செய்து வருகிறோம். இந்த முயற்சியின் நோக்கம் சமூக அக்கறை. இதில் குறிப்பிட்ட அளவுக்கு வெற்றியும் கண்டிருக்கிறோம். இவ்வளவுதான் விசயம்.

வினவுக்கு கிடைத்த அங்கீகாரமாகட்டும், பல தோழர்கள் ‘பிளாக்’ முதல் ‘டிவிட்டர்’ வரை பலவற்றிலும் புகுந்து புறப்படுவதாகட்டும், இவையெதுவும் திட்டமிட்டு நடத்தப்படவில்லை என்பதே உண்மை.

ம.க.இ.க விலோ அதன் தோழமை அமைப்புகளிலோ செயல்படும் ஆகப் பெரும்பான்மையான தோழர்களுக்கு இணையம் என்பது அவ்வளவு பரிச்சயமானதல்ல. எனினும் சமூகத்தின் பிற அரங்குகளில் எமது அமைப்புகள் ஊக்கமாகச் செயல்படுவதன் விளைவு இணையத்தில் பிரதிபலிக்கிறது. இதற்கு நாங்கள் என்ன செய்ய முடியும்?

வினவைப் பொறுத்தவரை நாங்கள் இணையத்தில் நுழைந்த பிறகுதான் ஏற்கெனவே பல தோழர்கள் இங்கே இருக்கிறார்கள் என்பதையே தெரிந்து கொண்டோம். பெரும்பாலனவர்களை பின்னூட்டங்கள்  வழியாக அறிந்தோம் என்பதே உண்மை. தமிழகத்தின் அரசியல் ஆர்வமுள்ள இளைஞர்களில் குறிப்பிடத்தக்க அளவினர் எமது அமைப்புகளில் உள்ளனர். ம.க.இ.க ஆதரவாளர்கள் பலர் ஐ.டி துறையிலும் பணியாற்றுவதால் இந்த இளமைத் துடிப்பு இணையம் வரை நீண்டிருக்கிறது. இதனை ஜீரணிக்க இயலாமல், ஏதோ ம.க.இ.க பயங்கரமாக திட்டமிட்டு, பதிவர்கள் பலரை இறக்கிவிட்டு இணையத்தில் ஊடுறுவி அதனைக் கைப்பற்ற முனைந்திருப்பதைப் போன்ற கற்பிதங்களை சில அறிவாளிகள் பரப்புகின்றனர். அதெல்லாம் உண்மையாக இருந்தால் மற்றெல்லோரையும் விட நாங்கள்தான் குதூகலிப்போம். செய்யாத சாதனைக்கு மகுடம் சூட்டுகிறார்கள் சில பேர். அதையெல்லாம் சுமக்க முடியுமா?

அரசியல் வலிமை எண்ணிக்கையிலா, ஆளுமையிலா?

அடுத்த கேள்வி, ஒரு அரசியல் இயக்கம் வலிமையானதா இல்லையா என்பதை எதை வைத்து முடிவு செய்வது? முதலில் நமக்கு தெரிகின்றவை புள்ளிவிவரங்கள். எந்தக் கட்சியில் எத்தனை உறுப்பினர்கள் என்ற விவரங்களை வைத்து அதை முடிவு செய்ய முடியுமென்று பலர் எண்ணுகின்றனர்.

சென்ற சட்டமன்ற தேர்தலில் தமிழ் சசி முதலான நண்பர்கள் “மாற்றம்” என்ற பெயரில் ஈழத்திற்காக ஜெயாவை ஆதரித்து இணையத்தில் பிரச்சாரம் செய்தனர். அப்போது ஒரு விவாதத்தில் ம.க.இ.கவின் தேர்தல் புறக்கணிப்பை பற்றிப் பேசும் போது தமிழ் சசி ” ம.க.இ.கவிற்கு எத்தனை உறுப்பினர்கள் இருக்கின்றனர், எத்தனை பேர் தொடர்ச்சியாக பணியாற்றி கொண்டிருக்கிறார்கள் ”  என்று கேட்டதாக ஞாபகம்.

தமிழ் சசி நுனிப்புல் மேய்பவரல்ல. எந்த விசயத்தை எடுத்தாலும் பருண்மையாக விவரங்களைச் சேகரித்தே தனது நிலைப்பாட்டை எழுதுகிறார் என்பது நல்லதுதான். ஆனால் இந்த வழிமுறை எல்லா சந்தரப்பங்களிலும் நம்மை உண்மையை நோக்கி இட்டுச் செல்லுமா?

கடந்த பல பத்தாண்டுகளில் இந்தியாவில் பஞ்சம் என்பதே இல்லை, இந்தியாவில உற்பத்தி செய்யப்படும் உணவுப் பொருட்களின் அளவு இந்திய மக்கள் நுகரும் அளவைக் காட்டிலும் அதிகம். பற்றாக்குறை இல்லை. எனவே, இது தன்னிறைவான உற்பத்தி என்று விக்கியில் ஒரு லிங்கை கொடுத்து அதியமான் வாதிடும்போது அது உண்மைதானே என்று தோன்றலாம்.

ஆனால் பஞ்சமா இல்லையா என்பதை எதைக் கொண்டு மதிப்பிடுவது? உற்பத்தியைக் கொண்டா, நுகர்வைக் கொண்டா? ஒரு அமெரிக்கன் ஒரு வருடத்தில் நுகரும் கோதுமை, இறைச்சி, முட்டை, காய்கனியின் அளவை விட இந்தியனின் நுகர்வு பல மடங்கு குறைவு. ஏன் இந்த வேறுபாடு?

இந்தியாவில் ஒரு வேளைச் சாப்பாடே ஏழைகளுக்கு பழக்கம். அதற்கு அடுத்தபடி இருவேளைச் சாப்பாடு உண்பவர்கள் வறுமைக்கோட்டுக்கு மேலே உள்ளதாக கணக்கிடப்படுகின்றனர். உற்பத்தி பற்றி பேசும் புள்ளிவிவரங்கள் பட்டினி கிடக்கும் இந்தியர்களை சாமர்த்தியமாக மறைக்கின்றன. ஒரு அரசாணை மூலம் “பஞ்சம்” என்ற சொல்லையே அரசு ஆவணங்களிலிருந்து மகாராட்டிர அரசு நீக்கிவிட்டது என்ற கேலிக்கூத்தை சமீபத்தில் இந்து நாளேட்டில் எழுதியிருக்கிறார் சாய்நாத்.

1970களில் வியட்நாமில் இருந்த அமெரிக்க படையின் பலத்தையும் வியட்நாம் கம்யூனிசக் கட்சியின் பலத்தையும் புள்ளி விவரங்களை மட்டும் வைத்து ஆய்வு செய்திருந்தால் என்ன முடிவுக்கு வந்திருக்க முடியும்? எந்தக் காலத்திலும் வியட்நாம் மக்கள் அமெரிக்க இராணுவத்தை வெல்ல முடியாது என்றுதான் மதிப்பிட்டிருக்க முடியும்.

புள்ளிவிவரங்கள் தரும் முடிவுக்கு நேர் எதிரான முடிவை வியட்நாம் வழங்கியது எப்படி? பெரிய கட்சியை சின்னக் கட்சி வென்றது எப்படி?  கோலியத்தை டேவிட் வீழ்த்தியது எப்படி?

நேபாள் மாவோயிஸ்ட்டுகள், ஈழத்தின் விடுதலைப் புலிகள் ஆகிய இருவரின் அரசியலையும் ஒதுக்கி விட்டு, அவர்களது படைபலம், ஆயுத பலத்தை வைத்து மட்டும் ஒப்பிட்டு ஆய்வு செய்திருந்தால் என்ன முடிவுக்கு வந்திருப்போம்? ஒரு கட்சியின் அரசியல் பலத்தை வெறும் எண்ணிக்கை சார்ந்த விசயமாக மட்டும் பார்த்து மதிப்பிடுவது பிழையான முடிவுகளுக்கே கொண்டு போய் சேர்க்கும்.

அரசியல் ஈடுபாட்டில் எது பெரிய கட்சி?

தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் அனைத்தும் உறுப்பினர் எண்ணிக்கைகளை கோடிகளிலும், இலட்சங்களிலும் கூறுகின்றனர். தொண்டனே இல்லாமல் முதலாளிகள் மட்டும் உள்ள காங்கிரசுக் கட்சி கூட தனக்கு ஒரு கோடி உறுப்பினர்கள் உள்ளதாகக் கூறுகிறது.

ஆனால் இந்த கட்சிகள் தேர்தலில் வாங்கிய வாக்குகளின் எண்ணிக்கை உறுப்பினர் எண்ணிக்கையில் பாதியைக்கூட எட்ட மறுக்கிறது.

சரி, இவற்றை விடுங்கள். ஒரு எளிய சூத்திரத்தின் மூலம் இதை புரிய முயற்சிப்போம். தமிழகத்தில் ம.க.இ.க உள்ளிட்ட பல அமைப்புகளும் அவ்வப்போது போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்துகின்றன. இவற்றுக்கு சொந்த செலவில் வந்து பங்கேற்போரை வைத்து ஒரு கட்சியின் பலத்தை மதிப்பிடுவதா, அல்லது பிரியாணிப் பொட்டலத்தின் பலத்தில் கூடும் கூட்டத்தை வைத்து மதிப்பிடுவதா? ஒரு வேளை கைதாகின்றவர்கள் ஓரிரு மாதம் சிறையில் இருக்க வேண்டுமென்றால்.. என்ன நடக்கும்?

அடுத்து பொதுக்கூட்டங்கள். எல்லா கட்சிகளும் இன்று தமது பொதுக்கூட்டங்களை ஈவன்ட் மேனேஜ்மெண்ட் கான்டிராக்ட்டர்கள் மூலம்தான் நடத்துகின்றன. இதற்குத் தேவை பணம். ஊழியர்கள் அல்ல. தி.மு.க, அ.தி.மு.க போன்ற கட்சிகளின் சுவரொட்டியைக் கூட அந்தக் கட்சிகளின் தொண்டர்கள் ஒட்டுவதில்லை. கொடி நடுவதில்லை. கூட்டத்திற்கு  மக்களைச் சேர்க்க குத்தாட்டம் நடத்தியும் முடியாமல், கூலிக்கு ஆள் பிடித்து வருகின்றனர். இத்தனைக்கும் பிறகு மேடையில் இருக்கும் ஆட்களை விட கீழே இருப்போரின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், பல சந்தரப்பங்களில் ஓட்டுக்கட்சி பேச்சாளர்கள் பின்பக்கம் திரும்பி பேச நேரிடுகிறது.

ம.க.இ.க வினர் நடத்தும் பொதுக்கூட்டங்களுக்கு மட்டும் எப்படிக் கூட்டம் வருகிறது? மற்ற கட்சிகளின் ஆடம்பர கட்அவுட் முதலான பிரம்மாண்டங்கள் இல்லாமல் எளிமையாக நடக்கும் எமது கூட்டங்களில், அனைத்து வேலைகளையும் தோழர்களே செய்கிறார்கள். எமது கலைக்குழுத் தோழர்கள் தாங்களே சொந்தமாகத் தயாரித்த புரட்சிகர கலைநிகழ்ச்சிகளைத்தான் நடத்துகிறார்கள். குத்தாட்டம் இல்லாமல் கூட்டம் கூடுகிறது. கூட்டத்திற்கு வரும் மக்களிடமே நிதி வசூலும் செய்யப்படுகிறது.

சமீபத்தில் தனக்கு வரலாறு காணாத கூட்டம் கூடியதாக ஜெயலலிதாவே குறிப்பிட்ட திருச்சி கூட்டத்தில் அம்மா என்ன சொன்னார்? “பெருந்திரளாக வந்திருக்கிறீர்கள். மகிழ்ச்சி. ஆனால் 1000 ரூபாய் வாங்கிக் கொண்டு ஓட்டை மாற்றிப் போட்டுவிடாதீர்கள்” என்று அதே கூட்டத்தில் தனது அச்சத்தை வெளியிட்டார் ஜெயல்லிதா. ஏன்? அந்த வரலாறு காணாத கூட்டம் என்பது 200 ரூபாயும், பிரியாணியும் கொடுத்து அழைத்து வரப்பட்ட கூட்டம் என்பது அம்மாவுக்குத் தெரியும். அதனால்தான் கூட்டத்தின் அளவைக்கண்டு மயங்காமல் அதன் தரத்தைக் குறித்து அவர் கவலைப்படுகிறார்.

அடுத்து கட்சி பத்திரிகை என்ற வகையினத்தை பார்க்கலாம். தமிழகத்தில் எல்லாக் கட்சிகளுக்கும் பத்திரிகைகள் உண்டு. தி.மு.கவின் முரசொலி, ம.தி.மு.கவின் சங்கொலி, அ.தி.மு.கவின் நமது எம்ஜிஆர், சி.பி.எம்மின் தீக்கதிர், சி.பி.ஐயின் ஜனசக்தி முதலான பத்திரிகைகள் வம்படியாக சந்தா சேர்க்கப்பட்டு தலையில் கட்டப்படுகின்றன. அவற்றைப் படிப்பவர்கள் எத்தனை பேர்? பழைய பேப்பர்காரருடைய துலாக்கோலின் சந்நிதியில்தான் அப்பத்திரிகைகளின் அஞ்சல் உறை பிரிக்கப்பட்டு தரம் எடைபோடப்படுகிறது.

25 ஆண்டுகளாக, மாதம் தோறும் பேருந்துகள், இரயில்கள், குடியிருப்புகள், ஆலைவாயில்கள் என நேரடியாக மக்களிடம் கொண்டு சென்று விற்கப்படுகிறது புதிய ஜனநாயகம் பத்திரிகை. கட்சி சார்பில்லாத ஆயிரக்கணக்கான மக்களிடம் தனது அரசியலைக் கொண்டு செல்லும் இப்படிப்பட்ட ஒரு பத்திரிகையையோ, இவ்வாறு விடாப்பிடியாக மக்களிடம் அதனைக் கொண்டு செல்லும் கட்சித் தொண்டர்களையோ, வேறு எந்தக் கட்சியிலாவது சுந்தர் காட்டுவாரா?

நாற்பது, ஐம்பது ரூபாய் விலை போட்டு, அதுவும் போதாமல் போத்தீஸ், சாரதாஸ், சென்னை சில்க்ஸ், நல்லி சில்க்ஸ் என்று பட்டுப் புடவைகளின் தயவில் சரசரக்கும் இலக்கியப் பத்திரிகைகள் நிரம்பிய உலகில், விளம்பரமே இல்லாமல் விற்பனைத் தொகையை மட்டும் நம்பி பத்திரிகை நடத்தும் வேறு ஏதாவதொரு பெரிய கட்சியை சுந்தர் நமக்கு அடையாளம் காட்டுவாரா?

பத்திரிகையை தாண்டி அவ்வப்போதான போராட்டங்களுக்கு வெளியிடப்படும் துண்டறிக்கை, சிறு வெளியீடுகள் இவற்றின் ஒட்டு மொத்த எண்ணிக்கை கோடிகளைத் தாண்டும். தற்போது போபால் வெளியீடு மட்டும் ஒரு இலட்சம் படிகள் விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன. ஜெயா ஆட்சியின் போது அவரது பாசிசத்தை அம்பலபடுத்தி அச்சடித்த வெளியீடுகளின் ஒட்டு மொத்த எண்ணிக்கை சில இலட்சங்கள். இந்த இலட்சங்களைக் கண்டு நாங்கள் மயங்குவதில்லை. இலக்கை நோக்கிய பயணத்தில் இவை சிறிய படிகள் மட்டுமே என்பதை எமது தோழர்கள் அறிவார்கள். இருந்தாலும் பூச்சியங்களின் எண்ணிக்கையை வைத்து சிறிது பெரிது பார்க்கும் அறிவாளிகளுக்காக இவற்றை தெரிவிக்க வேண்டியிருக்கிறது.

எமது அரசியலை மக்களிடம் கொண்டு செல்லவும், எமது அமைப்பை மக்கள் அறியச் செய்யவும் எந்தப் பத்திரிகை முதலாளியிடமும் சென்று நாங்கள் தலையைச் சொறிந்ததில்லை. கொள்கையை விட்டுக் கொடுத்து எந்தப் பிரபலத்தையும் வைத்து விளம்பரம் தேடவில்லை. எமது சொந்த உழைப்பில் சொந்தக் காலில் மட்டுமே நிற்கிறோம். அப்படிப்பட்ட வேறொரு பெரிய கட்சியை சுந்தர் நமக்கு காட்டுவாரா?

ம.க.இ.க வும் அதன் தோழமை அமைப்புகளும் தனது பிரச்சாரம், போராட்டங்களுக்கு மக்களை மட்டுமே சார்ந்திருக்கின்றன. முதலாளிகள், பெரும் வணிகர்கள் முதலானோரிடம் நன்கொடை வாங்குவதில்லை. தமிழகத்தின் பேருந்து நிலையங்கள், இரயில் நிலையங்கள், கடைவீதிகளில் தன்னந்தனியாக பிரச்சாரம் செய்து நிதி வசூலிக்கும் தோழர்களை யாரும் எங்கும் பார்க்கலாம்.

ஏதாவதொரு ஓய்வு நாளில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை சென்னையின் மின்சார ரயில்களில் பயணம் செய்து எமது தோழர்கள் செய்யும் அரசியல் பிரச்சாரத்தையும் மக்கள் வழங்கும் நிதியையும் சுந்தர் தனது சொந்தக் கண்ணால் பார்க்கட்டும். வேறு ஏதாவது ஒரு பெரிய்ய்ய கட்சிக்காரரை ஒரே ஒருநாள் அழைத்து வந்து அவரது கொள்கையைப் பேசி மக்களிடம் நிதி கேட்கச் சொல்லட்டும். எமது தோழர்களின் உழைப்போடு எந்தக் கட்சியின் தொண்டனின் உழைப்பை வேண்டுமானாலும் ஒப்பிட்டுப் பார்க்கட்டும்.

அறிஞர் அ.மார்க்சின் ஆதங்கம்!

ஒரே ஆள் பல பெயர்களில் பின்னூட்டம் போடுவதாகவும், பல பெயர்களில் வலைப்பூ நடத்துவதாகவும் முன்னாள் பேராசிரியர் அ.மார்க்ஸ் ஒரு முறை எழுதியிருந்தார். இதனை அவதூறு என்று சொல்வதை விட அவரது ஆதங்கம் என்று சொல்வது பொருத்தம். அவரது கருத்துப்படி ம.க.இ.க வினர் எனப்படுவோர் ஒரு சில நபர்களால் ஆட்டுவிக்கப்படும் சொந்த புத்தி இல்லாத மந்தைகள். மந்தைகள் எப்படி சொந்தமாக வலைப்பூ நடத்தமுடியும், பின்னூட்டம் போட முடியும் என்பது அவரது ஆய்வுக் கண்ணோட்டம் எழுப்பும் கேள்வி. எனவே ஒரு சிலர்தான் பல பெயர்களில் உலவவேண்டும் என்பது அவரது முடிவு. மேலும், கம்யூனிஸ்டு கட்சி-புரட்சி என்பன போன்ற கருத்தாக்கங்களே காலாவதியாகி, ம.க.இ.க உள்ளிட்ட இயக்கங்கள் தேய்ந்து வருகின்றன என்பது கடந்த 20 ஆண்டுகளாக அவர் பேணி வரும் நம்பிக்கையாதலால், ம.க.இ.க வினர் இத்தனை பேர் எழுதக்கூடும் என்பதையும் அவரால் நம்ப முடியவில்லை…வில்லை…வில்லை.

உயிரோடு இருப்பவனிடம் “நீ சாகவில்லை என்று நிரூபி” என்று கேட்கும் அறிவாளிகளுக்கு நாங்கள் எப்படி அய்யா பதில் சொல்ல முடியும்? முடியல 🙁

இரயில்களில் பேசும் தோழர்கள் தம் சொந்தக் குரலில்தான் பேசுகிறார்களா, அல்லது பதிவு செய்யப்பட்ட குரலுக்கு வாயசைக்கிறார்களா என்று பயணிகளிடம் அவர் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். ஒரு ஆள் பல பெயர்களில் ஒரே நேரத்தில் பின்னூட்டம் போடுவதைப் போல, ஒரே ஒரு ம.க.இ.க ஆள் ஒரே நேரத்தில் பல ரயில்களில் பிரச்சாரம் செய்கிறாரா என்று புலனாய்வு செய்து அவரது ஐ.பி நம்பரைக் கண்டுபிடிக்கலாம். வேறென்ன சொல்ல?

அணிகளின் அரசியல் அறிவு, அர்ப்பணிப்பு ஆகியவற்றிலும் மற்றெல்லோரையும் காட்டிலும் நாங்கள் முன்னேறியவர்களாக இருக்க வேண்டும் என்று விழைகிறோம். அவ்வாறு இருப்பதாகவும் கருதுகிறோம். அவ்வாறு இல்லாத தோழர்களை மேம்படுத்த முயல்கிறோம். அரசியல் தரம் குறித்த விசயத்தில் சிறிது எது பெரிது எது? ம.க.இ.க வை விட திமுகவோ, அதிமுகவோ, பாமகவோ, மார்க்சிஸ்டுகளோ தரத்தில் எங்ஙனம் பெரியவர்கள் என்று சுந்தர் எடை போட்டுக் கூறினால் தெரிந்து கொள்கிறோம். அவருடைய எடைக்கல்லை மட்டும் ஒரே ஒரு முறை கண்ணால் பார்த்துக் கொள்கிறோம்.

பெரிய கட்சிகள் செய்ய முடியாதவற்றை ‘சிறிய’ கட்சி செய்தது எங்ஙனம்?

ம.க.இ.க மற்றும் அதன் தோழமை அமைப்புகளுடைய செயல்பாட்டை விரித்துக் கூறுவதற்கு இது இடமல்ல. ஆனால் பெரிய்ய கட்சி சிறிய கட்சி என்ற ஒப்பீடு தோற்றுவிக்கும் பிரமைகளை உடைக்க சமீபத்திய எடுத்துக்காட்டுகள் சிலவற்றையாவது கூறவேண்டியுள்ளது.

சமீபத்திய செம்மொழி மாநாட்டை அம்பலப்படுத்தி அதற்காக தமிழகம் முழுவதும் தொண்டர்கள் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்ட பெரிய்ய கட்சி எது? அதைச் செய்த சிறிய கட்சி ம.க.இ.க. கோவை நகரில் மாநாட்டு வாயிலிலேயே துண்டறிக்கை விநியோகித்து சிறை சென்றோரைக் கொண்ட சிறிய கட்சியும் ம.க.இ.கவே.

பெரிய கட்சியான அ.தி.மு.கவின் தலைவி செம்மொழி மாநாட்டை எதிர்த்து பேசமுடியாமல் பம்மிக் கொண்டிருந்தார். பிறகு சிறிய கட்சியான ம.க.இ.க சார்பு வழக்குரைஞர்கள் தொடங்கிய உண்ணாவிரதப் போராட்டத்தைப் பிடித்துக் கொண்டு கரையேறினார். அதை ஆதரித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தினார். மருத்துவமனையில் இருந்த வழக்குரைஞர்களை அம்மா பார்க்க விரும்புவதாக அவரது அமைச்சர்கள் வந்து கூறியபோது, நாங்கள் பார்க்க விரும்பவில்லை என்று பதிலளித்தனர் வழக்குரைஞர்கள். அழகிரி ஆட்சி செய்யும் மதுரையில் அவரது கட்டைப் பஞ்சாயத்தை மறுத்து எதிர்த்தும் நின்றனர்.

உயர்நீதிமன்ற போலீசு வன்முறைக்கு எதிரான வழக்குரைஞர் போராட்டத்தில் முன் நின்றவர்களும் ம.க.இ.க ஆதரவு மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் வழக்குரைஞர்கள்தான். பெரிய்ய கட்சியான திமுகவை சேர்ந்தவரும், சங்கச் செயலருமான பால்.கனகராஜ், அப்பேற்பட்ட பெரிய்ய கட்சியிலிருந்தே தான் விலகுவதாக அப்போது அறிவிக்க வேண்டி வந்தது. உயர்நீதிமன்ற வளாகத்தில் கருணாநிதிக்கு கருப்புக் கொடி காட்டியவர்களும் மேற்படி சிறிய கட்சியினரே. அதற்காக அந்த வழக்குரைஞர்களைத் தாக்கிய திமுக ரவுடிகள் பெரிய்ய கட்சியை சேர்ந்தவர்கள் என்ற உண்மையை நாம் மறுக்க விரும்பவில்லை.

பெரிய்ய கட்சியான திமுக அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்குவதாகச் சொல்லி, பார்ப்பனரல்லாத மாணவர்கள் 250 பேரைப் பயிற்றுவித்து 2 ஆண்டுகளாகத் தெருவில் நிறுத்தியிருக்கிறது. அந்த மாணவர்கள் தங்கள் பிரச்சினையைத் தீர்ப்பதற்குத் தேடிப்பிடித்து அணுகியிருக்கும் கட்சியும் மேற்படி சிறிய கட்சியே. இணையத்தைப் பார்த்து ம.க.இ.கதான் பெரிய கட்சி என்று நம்பி ஏமாந்துதான் எங்களிடம் வந்து விட்டார்களா என்பதை அவர்களிடமே சுந்தர் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.

தில்லைக் கோயிலில் தமிழ் பாட முடியாத சிவனடியார் ஆறுமுகசாமி, ஆதீனங்களையும் அனைத்திந்திய ஆன்மீக கட்சியான பாரதிய ஜனதாவையும் விட்டுவிட்டு, எந்த பிரவுசிங் சென்டரில் உட்கார்ந்து ம.க.இ.க வை பெரிய கட்சி என்று கண்டுபிடித்தாரென்பதை அவரிடம் கேட்கலாம்.

ஈழப் போரின் இறுதிக் கட்டத்தில் தமிழகமெங்கும் பல கல்லூரிகளில் மாணவர்களைத் திரட்டி வீதிக்குக் கொண்டுவந்த ஒரே மாணவர் அமைப்பு ம.க.இ.க ஆதரவு புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி. இதற்காக அடி உதை பட்டதும் சிறை சென்றதும் அத்தோழர்களே. சந்தேகமிருப்பின் கமிசனர் ஆபீசில் விசாரித்துக் கொள்ளலாம். அந்த மாணவர்களுக்காக நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் சைதை நீதிமன்றத்தை முற்றுகையிட்டதும் போராடியதும் மெய் உலகில் நிகழந்தவையே.

முத்துக்குமாரின் மரணத்தை ஒரு போராட்டமாக மாற்றியதில் முக்கியப் பாத்திரம் ஆற்றிய பெரிய்ய கட்சி எது என்பதை, அவரது உடலை வணிகர் சங்க கட்டிடத்தில் வைத்திருந்த சங்கத்தலைவர் திரு.வெள்ளையனிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். வாய்ப்பிருந்தால் வைகோவிடமும் இதனைக் கேட்டறியலாம்.

சென்னையில் அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் பெற்றோர் ஆசிரியர் சங்கம் என்ற பெயரில் நடந்து வந்த கட்டாய நன்கொடைக் கொள்ளையைத் தடுத்து நிறுத்தியதுடன், வாங்கிய பணத்தை திரும்பக் கொடுக்க வைத்த்தும், சென்னையில் நடைபெற்ற போராட்டத்தின் விளைவாக தமிழகம் முழுவதற்கும் இது தொடர்பான அரசாணையைப் பிறப்பிக்க வைத்ததும் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி நடத்திய கெரோ போராட்டம்தான். இதுகுறித்த விவரங்கள் விக்கிபிடியாவில் கிடைக்காது. குரோம்பேட்டைக்கு ஒரு நடை நேரில் சென்றால் மாணவர்களிடமும் பெற்றோர்களிடமும் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். அவர்களெல்லாம் ஃபேஸ் புக்கில் இருக்கிறார்களா என்று தெரியவில்லை.

தனது தொழிலாளிகளை போடா வாடா என்று பேசிக்கொண்டிருந்த சாராய ரவுடி ஜேப்பியாரை, “வாங்க.. போங்க” என்று அழைக்க வைத்தது புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி. இன்டெர் நெட்டைப் பார்த்து ம.க.இ.கதான் தமிழகத்தின் பெரிய்ய கட்சி என்று நம்பித்தான் ஜேப்பியார் பயந்து விட்டார் போலும்!

ஆகஸ்டு 24 ஆம் தேதி திருச்சியில் 2000 பேருக்கு மேல் கூடிய புரட்சிகர மணவிழா ஒன்றை ம.க.இ.க நடத்தியது. ஒரே மேடையில் 3 சாதி மறுப்பு, மத மறுப்பு திருமணங்கள். இருந்தாலும் வீரபாண்டி ஆறுமுகத்தின் மகனுக்கு கலைஞர் நடத்தி வைத்த பெரிய்ய திருமணம்தானே பத்திரிகையில் வந்திருக்கிறது! ம.க.இ.க நடத்திய சின்ன மணவிழாவைப் பற்றி வினவு தளத்தில் செய்தி போட்டு, அதற்கு பத்து பேர் பின்னூட்டம் போட்டுக் கொண்டால் ம.க.இ.க வை பெரிய கட்சி என்று நம்பி ஏமாந்துவிட முடியுமா என்கிறார் சுந்தர்.

தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்ட உமாசங்கருக்கு ஆதரவாகவும், கருணாநிதி அரசின் மீதும் சன் டிவி, அழகிரி, ராஜாத்தி அம்மாள் மற்றும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் மீதும் அவர் முன்வைத்துள்ள பல ஆயிரம் கோடி ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு விசாரணை கோரியும் மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் சார்பில் தமிழகத்தின் பத்து நகரங்களில் கடந்த சில நாட்களில் ஆர்ப்பாட்டம் நடந்துள்ளது. இவற்றில் பல நூறு வழக்குரைஞர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள். “சன் நியூசில் செய்தி வந்திருக்கிறதா அப்போதுதான் நம்புவேன். நீங்கள் வினவு நீயூசில் போட்டுக்கொண்டால் பெரிய்ய கட்சியாகி விடுவீர்களா? மெய்யுலகைப் பற்றித் தெரியாமல் மெய்நிகர் உலகில் திரியும் டிவிட்டன் என்றா நினைத்தீர்கள் என்னை?” என்கிறார் சுந்தர்.

ம.க.இ.க ஒரு பெரிய்ய கட்சி என்று நாங்கள் கூவித்திரியவில்லை. ஆனால் சுந்தர் போன்றோரின் பிரமிப்புக்கும் வழிபாட்டுக்கும் உரிய பெரிய்ய கட்சிகளோடு ஒப்பிட்டு எங்களை சிறிய கட்சி என்று சித்தரிப்பதையும் ஏற்கவில்லை.

குழப்பமாக இருக்கிறதோ? பச்சை மிளகாயை விட பூசணிக்காய் பெரியது என்கிறார் சுந்தர். நாக்கில் சொரணை இருப்பவர்கள் இந்த ஒப்பீட்டை ஆதரித்துப் பேச முடியாது என்று நாங்கள் சொல்கிறோம். இதான் மேட்டர்.

சுந்தர் எழுப்பிய கேள்வியை திருப்பிப் போட்டால் இந்தப் புதிருக்கு ஒருவேளை விடை கிடைக்கக் கூடும்.

பெரிய கட்சிகளின் இணையப் புலிகள் பயப்படுவது ஏன்?

தமிழகத்தின் மிகப்பெரிய கட்சிகள் என்று சுந்தர் கருதும் கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள், தமது மேலாண்மையை இணையத்தில் நிலைநாட்டாதது ஏன்? ம.க.இ.க என்ற சிறிய கட்சியின் ஆட்கள், பெரிய கட்சியைப் போன்ற பொய்த்தோற்றத்தை இணையத்தில் உருவாக்கிக் கொண்டிருக்கும் சூழலில், இளைஞர் அணி, மகளிர் அணி போல அந்த பெரிய கட்சிகள் இணைய அணி ஒன்றை உருவாக்கி, தங்களை விளம்பரப் படுத்திக் கொள்ளாதது ஏன்?

சுந்தர் இன்று கூறியிருக்கும் கருத்தை விடுதலை சிறுத்தைகளின் ரவிக்குமார் அன்றே கூறியிருக்கிறார். தமிழ்நாடு முழுவதும் எழுதப்பட்டிருக்கும் சுவரெழுத்துகளை வைத்துப் பார்த்தால் ம.க.இ.க தான் பெரிய கட்சி என்று பார்ப்பவர்கள் நினைத்துக் கொள்வார்கள் என்றார் ரவிக்குமார். அது அவர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் எம்.எல்.ஏ ஆவதற்கு முன் தெரிவித்த கருத்து.

தமிழகத்தில் சுவர் விளம்பரத்தில்லும், டிஜிட்டல் பானர்களிலும் திமுக, அதிமுக வையெல்லாம் விஞ்சி நிற்பது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி என்பதை யாரும் மறுக்க முடியாது. அவற்றில் என்ன “கொள்கைகளை” எழுதியிருக்கிறார்கள் என்பதை ரவிக்குமாரால் இன்று விளக்கவும் முடியாது.

எல்லாக் கட்சிகளின் நிலையும் இதுதான். க-லை-ஞ-ர், அ-ம்-மா, தி-ரு-மா, அ-ய்-யா, சி-ன்-ன-ய்-யா, வை-கோ, கே-ப்-ட-ன்… இதுதான் கட்சி, இதுதான் கொள்கை. சுவரில் எழுதினாலும் பத்திரிகையில் எழுதினாலும், இணையத்தில் எழுதினாலும் மூணெழுத்து, நாலெழுத்து, ஐந்தெழுத்து மந்திரத்துக்கு மேல் யாரிடமும் எதுவும் கிடையாது. அப்புறம் என்னத்த எழுத?

பதிவுலகில் தி.மு.க, அ.தி.மு.க, பா.ம.க, சி.பி.எம், காங்கிரசு முதலான பெரிய்ய கட்சிகளைச் சேர்ந்த பதிவர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்களின் பதிவுகளில் கட்சி, கொள்கை சார்ந்த இடுகளைகளை தேடிக் கண்டுபிடிப்பது மென்மேலும் கடினமாகி வருகிறது.

இன்று குழலியிடம் பா.ம.கவையோ, லக்கிலுக்கிடம் தி.மு.கவையோ சஞ்செய் காந்தியிடம் காங்கிரசையோ அவர்கள் தற்போது எழுதுவதை வைத்து யாராவது கண்டுபிடிக்க முடியுமா? மாதவராஜ் கூட அரிதாகத்தான் அவரது கட்சி அரசியல் பார்வைகளை எழுதுகிறார். “சும்மா கூச்சப்படாதீங்க சார், அரசியல் பேசுங்க” என்று கூப்பிட்டாலும் முகத்தை மூடிக்கொண்டு ஓடும் நிலைதான் பல பேருக்கு.

கொஞ்சமாவது தனது அரசியல் சார்பை வெளிப்படுத்தும் சில பதிவர்களை விடுங்கள். எதிர்கவுஜைக்கெல்லாம் எதிர்க்கவுஜயும், மொக்கை முதல் மரண மொக்கை வரை எழுதுபவர்களுக்கு அரசியல் சார்பு இல்லையா? அல்லது அந்த நடுநிலை நாயகர்கள் தேர்தலில் ஓட்டு போடுவதில்லையா? தாங்கள் ஆதரிக்கும் கட்சியின் அரசியலை அவர்கள் எழுதக்கூடாது என்று நாங்களா தடுத்தோம்?

ஏன் எழுதுவதில்லை? சாதி மத வெறியை, பணக்கார மேட்டிமைத் தனத்தை, ஆணாதிக்கத்தை, அற்பவாதக் கருத்துகளை, தத்தம் கட்சிகளின் மக்கள் விரோதக் கொள்கைகளை நியாயப்படுத்த முடியாமல் கூச்சப்பட்டு அவர்கள் எழுதுவதில்லை என்றால்… கூச்சப்படத்தக்க அத்தகைய கருத்துகளையும் கட்சிகளையும் விட்டொழித்து வெளியே வாருங்கள் என்று அழைக்கிறோம்.

எழுத விரும்பினாலும் ம.க.இ.க கும்பலின் பதிலடியை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்ற அச்சத்தின் காரணமாக எழுதுவதில்ல என்றால், தமிழ்ப் பதிவுலகில் அப்படியொரு தார்மீக அச்சத்தைத் தோற்றுவித்திருக்கும் எமது தோழர்கள் பலரின் பணி குறித்து பெருமைப்படுகிறோம்.

சிறுபான்மை, பெரும்பான்மை – எண்ணிக்கையில் அல்ல, பிரதிநிதிப்படுத்துவதில்!

இந்த ஹைட் பார்க்கில், பேசுவதற்கான சுதந்திரமும் வாய்ப்பும் இருந்தும் பேச மறுக்கின்றவர்கள், பேசுகிறவர்களைக் குற்றம் சாட்ட முடியாது. சுதந்திரத்தைப் பயன்படுத்திக் கொள்ளவும், நிலைநாட்டிக் கொள்ளவும் இயலாதவர்கள், சுதந்திரத்துக்கு தகுதியற்றவர்களாகி விடுகிறார்கள். மெய் உலகிலும், மெய் நிகர் உலகிலும் இதுதான் உண்மை.

வினவு தளமோ மற்ற பல ம.க.இ.க ஆதரவாளர்களோ, அவரவர் பாணியில் அவரவர் புரிதலில் எதை எழுதினாலும் அரசியல் சார்புடன்தான் எழுதுகிறார்கள். ஆனால் பதிவர்களோ வாசகர்களோ எம்மை ஒதுக்கவில்லை. உரையாடுகிறார்கள், வாதாடுகிறார்கள், இணைகிறார்கள்.

உலக முதலாளி வர்க்கத்தின் கொள்ளைக்காக நிதிமூலதனத்தையும், உற்பத்தியையும், உழைப்பையும் இணைப்பதற்குப் பயன்படும் இணையம், தொழிலாளி வர்க்கத்தை இணைப்பதற்குப் பயன்படக்கூடாதா என்ன? ம.க.இ.க சிறுபான்மைதான், ஆனால் நாங்கள் பிரதிநிதித்துவப் படுத்தும் வர்க்கம்தான் சமூகத்தின் பெரும்பான்மை – நாங்கள் தற்போது எண்ணிக்கையில் சிறுபான்மையாக இருந்தாலும், எங்களது எழுத்தில் பெரும்பான்மையின் உணர்வு இருக்கத்தான் செய்யும். நாங்கள் பெரும்பான்மை பெற்றாக வேண்டும். அதுதான் எம் நோக்கம்.

கூலிக்கு மாரடித்து சுய ஆளுமை இழந்து, வாழ்வின் சுவை இழந்து, அடையாளம் இழந்து, சமூக உறவுகளை இழந்து, அந்த இழப்புகளைச் சரிக்கட்டிக் கொள்வதற்காகவோ, ஆறுதல் தேடுவதற்காகவோ, ஆர்குட்டுக்கும் பேஸ்புக்கிற்கும் பிளாக்கிற்கும் நாங்கள் யாரும் வரவில்லை.

இணையம் வருவதற்கு முன் எங்கள் தோழர்கள் தூங்கிக் கொண்டிருக்கவில்லை. இரவெல்லாம் கண்விழித்து சுவரில் எழுதினோம். சினிமா போஸ்டரை எடைக்கு வாங்கி, அதன் பின்புறத்தில் எழுதி ஒட்டினோம். பிறகு பத்திரிகை துவங்கி அதிலும் எழுதினோம். இன்று இணையம்.

நாளை அனைத்தும் மூடப்படுமானால்… எதிரியின் முதுகிலும் எழுதுவோம். எழுதியிருக்கிறார்கள். ரசிய இலக்கியங்களைப் படித்துப் பாருங்கள். சுவர்களுக்கெல்லாம் போலீசு காவல் போட்ட தஞ்சை நகரத்தில், போலீசு வாகனத்தில் சுவரொட்டி ஒட்டியிருக்கிறோம். புதிய கலாச்சாரத்தின் பழைய இதழ்களைப் புரட்டிப் பாருங்கள்.

காழ்ப்புகளையும் மனச்சாய்வுகளையும் அகற்றிவிட்டுப் பார்க்கும்போதுதான் பெரிது சிறிது என்ற அளவுகோலின் அசட்டுத்தனம் புரியும்.

எது “பெரிய” திரைப்படம், டைட்டானிக்கா, பொடம்கின் போர்க்கப்பலா? கலாநிதி மாறனைக் கேட்டால், “சந்தேகமென்ன, டைட்டானிக் தான்” என்று பதிலளிப்பார்.

ஜ்யோவ்ராம் சுந்தரைக் கேட்டால் என்ன பதில் சொல்வார்?………..சந்தேகமாக இருக்கிறது.