privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்ஊழல்அப்படியா திருவாளர் பிரதமர் அவர்களே! – பி.சாய்நாத்

அப்படியா திருவாளர் பிரதமர் அவர்களே! – பி.சாய்நாத்

-

மக்கள் உரிமைகளைப் பலாத்காரமாய் நசுக்குகின்ற கொள்கைகளை நாம் கொண்டிருக்கிறோம். மக்களோ தீர்வு வேண்டி நீதிமன்றங்களை அணுகுகிறார்கள்.  பிரதமரே, நீதிமன்றங்கள் அவர்களுக்கு எதை வழங்க வேண்டும் என நீங்கள் விரும்புகிறீர்கள்?

–             பி. சாய்நாத்

_______________________________________

மல்டிபிளெக்சுகளுக்கும் ஷாப்பிங்மால்களுக்கும் மானியத்துடன் 'இடம்' கொடுக்கும் அரசுக்கு தானியங்களை வைக்க இடமில்லையாம்

பிரதமர் அவர்களே,

உச்ச நீதிமன்றத்தை “மரியாதையுடன்” ஓரங்கட்டும் வகையில், உணவு தானியப் பிரச்சினையோ, அது பூசணம் பூத்துப் பாழாவதோ எல்லாம் கொள்கை விவகாரங்கள் எனத் தாங்கள் திருவாய் மலர்ந்ததை அறிந்து ஆச்சரியப்பட்டேன். தாங்கள் மிகச் சரியாகவே சொல்லியிருக்கிறீர்கள். இது யாரோ ஒருவர் அப்படிச் சொல்ல வேண்டிய நேரமும் கூட.  ஐ.மு. கூட்டணியினரின் மக்கள் மத்தியிலான வெற்று வாய்ச்சவடால்களில் இல்லாத நேர்மையை நீங்கள் நிறைவு செய்திருக்கிறீர்கள்.  பல மில்லியன் டன் உணவு தானியங்கள் பாழாகிக் கொண்டிருப்பதை ஒட்டி என்ன செய்யவேண்டும் என்று உங்களுடைய அரசாங்கம் தான் தீர்மானிக்க முடியும், நீதிமன்றமல்ல.

பசிகொண்ட மக்கள் புசிப்பதை விட அது பாழாவதே மேல் என்று உங்களது கொள்கை வழி நடத்துமானால், அதில் கோர்ட்டுக்கு என்ன வேலை. தாங்கள் கூறியதுபோல “கொள்கை வகுக்கும் கோட்டை” உங்களுடையதே.  எப்படியோ, ஒருவழியாக, பெருகும் பசிக்கொடுமையும், ஊட்டச்சத்து பற்றாக்குறையும், தானியங்கள் கெட்டொழிவதும், சேமிப்புக் கிடங்குகளின் பற்றாக்குறையும் எல்லாமே தாங்கள் பின்பற்றும் கொள்கை வழிவந்தவையே என்று ஒரு தேசத்தின் தலைவரே ஒப்புக்கொள்வது உள்ளபடியே மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது.  (இவையெல்லாம் உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளின் விளைவாய் ஏற்பட்டவை அல்ல என்பதை நான் அறிவேன்)

இதற்கெல்லாம் எதிர்க்கட்சிதான் காரணம், பருவ மழை பொய்த்து விட்டதுதான் காரணம், அல்லது புதிரான (ஆனால் இறுதியில் நலம் பயக்கும்) சந்தை நடவடிக்கைகள்தான் காரணம் எனத் தங்களுக்குக் கீழே உள்ளவர்கள் சமாளிக்கலாம்.  ஆனால், நீங்கள் அதைச் செய்யமாட்டீர்கள்.  இதற்கான காரணத்தை கொள்கைகளில் தெளிவாகக் காண்கிறீர்கள்.  கொள்கைகள் பெரிதும் வெளிப்படையானவை, பூடகமான சந்தை நடவடிக்கைகளுக்கு இவை எவ்வளவோ மேல்.

உணவு தானிய சேமிப்புக்கான இடவசதி:

உணவு தானிய சேமிப்புக்குக் கூடுதலாய் ஒரு பொதுக் கிடங்குகூட கட்டியமைக்கப்படவில்லை. ஆண்டுகள் பலவாய் அதற்காகச் சல்லிக்காசுகூட செலவிடப்படவில்லை என்பதும் கூட ஒரு கொள்கை முடிவுதான். தனியார் கட்டுமான நிறுவனங்களை மானியங்கள் வழங்கி “ஊக்குவித்து” நாடெங்கும் புதிய நகரங்களை நிர்மாணிக்கவும், பெருவளாகங்களையும், பிருமாண்டமான செய்தித் தொடர்பு சாதனங்களையும் கட்டியமைக்கவும் நமது அரசிடம் பணமிருக்கிறது.  ஆனால், தேசத்தின் உணவுதானியங்களை சேமிக்கக் கிடங்குகளைக் கட்டுவதற்கு மட்டும் ஏதுமில்லை.

மாறாக, தனியார் கிடங்குகளை வாடகைக்கு எடுப்பது என்ற ’புதிய’ எண்ணம் தலைதூக்கி இருக்கிறது.  ஐயா, இது ஒரு கேள்வியை எழுப்புகிறது.  சில மில்லியன் டன் தானியங்களை சேமிக்கத்தக்க கிடங்குகளைக் காலிசெய்வது என்று 2004-2006 ஆண்டுகளில் உங்கள் அரசாங்கம் கொள்கை ரீதியான முடிவு எடுத்தது ஏன்? ஒரு பன்னாட்டு ஆலோசனை நிறுவனத்திடம் பணத்தைக் கொட்டிக் கொடுத்துப் பெற்ற அறிவுரையின்படிதான் அந்த முடிவு எடுக்கப்பட்டது.  கிடங்குகளை மீண்டும் வாடகைக்கு எடுப்பது என்ற இந்த முடிவு பெருத்த அளவில் கூடுதல் வாடகைச் செலவைக் கொண்டு வருவதாகும்.  இது பஞ்சத்தில் அடிபட்டுக் கொண்டிருக்கும் கிட்டங்கி உரிமையாளர்களின் வயிற்றில் பால் வார்ப்பதாகும்.  (இந்த தலைகீழ் மாற்று ஆலோசனைக்காக அந்த பன்னாட்டு ஆலோசனை நிறுவனத்துக்கும் தாராளமான சன்மானம் வழங்கப்பட்டிருக்கும்)

மேலும், உங்களது புத்தம் புது கொள்கைகள் எல்லாம் கிடங்கு உடைமையாளர்களுக்கு ஆதாயமாக, “ஊக்குவிக்கும்”  அம்சங்களை முன்னெடுத்துச் செல்கின்றன. பிரணாப் முகர்ஜியின் பட்ஜெட் உரை (எண்.49) வாடகைக்கு எடுக்கும் உத்தரவாதக் காலத்தை ஐந்திலிருந்து ஏழாண்டுகளாக உயர்த்தி இருக்கிறது. அதன் பிறகு வாடகைக் காலம் 10 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டிருக்கிறது.  (நலம் விரும்பியின் ஒரு எச்சரிக்கை: மேற்படி பன்னாட்டு ஆலோசனை நிறுவனத்தின் முடிவுகளை மடத்தனமாக அமல்படுத்திய அரசுகள் தனக்கே சவக்குழி தோண்டிக் கொண்டன என்பதையே நடப்புகள் உணர்த்துகின்றன.  வேண்டுமானால், ஆந்திராவின் சந்திரபாபு நாயுடுவைக் கேட்டுக் கொள்ளுங்கள்) அரசுக்குச் சொந்தமான நிலத்தில் கிடங்குகளைக் கட்டி அமைப்பது என்ற தெரிவு என்றுமே இருந்து வந்திருக்கிறது.  சட்டீஷ்கர் அதை இப்போது நடைமுறைப்படுத்துகிறது.  நீண்டகால நோக்கில் இந்தத் தெரிவு மிகவும் சிக்கனமானது; பஞ்சத்தைச் சமாளிக்க வேண்டிய நமது தேவையைக் காசாக்கும் லாபவெறியை கட்டுப்படுத்தக் கூடியது. இவையெல்லாம் கொள்கை விவகாரங்களாக இருப்பதால், இது ஒரு ஆலோசனை மட்டுமே, ஆணையல்ல.

உச்ச நீதிமன்றத்துக்குத் தெளிய வைத்த உங்களது கருத்துப்படி உணவுதானியம் பாழாவதை கவனிப்பது எல்லாம் அவர்கள் வேலையல்ல.  தேசத்தின் மிக முக்கியமான பொருளாதார அறிஞராகிய நீங்கள் பாழாகிக்கொண்டும், திறந்த வெளியிலும், மோசமான கிடங்குகளிலும் கிடந்து இனி பாழாகவும் இருக்கும் தானியங்களை என்ன செய்வது என்பது பற்றி நன்கு சிந்தித்துத் தெளிந்த கொள்கைகளைக் கைவசம் வைத்திருப்பீர்கள் என்று உறுதியாக நம்புகிறேன்.   உங்களது தீர்க்கதரிசனத்தின் வழிவந்த யாராவது ஒருவர் இந்த கொள்கைகளை மூர்க்கமான எலி, பெருச்சாளிக் கூட்டத்துக்கு எடுத்துச் சொல்லவேண்டும் என ஆசைப்படுகிறேன்.  ஏனென்றால், அவை நீதிமன்றங்களின் தீர்ப்புகளை எல்லாம் துச்சமாகத் தள்ளிவிட்டு இந்த தானியங்களைத் தங்கள் விருப்பப்படி என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று தலைகொழுத்துத் திரிகின்றன.(தானியங்களைக் கொரிப்பதை விட்டு விலக ஒருக்கால் இந்த எலி, பெருச்சாளிக் கூட்டத்துக்கும் சில “ஊக்குவிப்புகள்” தேவைப்படுகின்றனவோ, என்னவோ)

இதனிடையே, பா.ஜ.க.வின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் “பிறவற்றுக்கு இடையே இதே பிரச்சினைக்குத்தான் தே.ஜ.கூட்டணி அரசு பெருத்த விலை கொடுத்தது; 2004 தேர்தலில் துடைத்தெறியப்பட்டது” என்பதை ஒப்புக்கொள்கிறார். அடேயப்பா, இந்தக் கொள்கையில் தான் இவர்களிடையே என்ன ஒற்றுமை.  உச்ச நீதிமன்றமும் கூட ஒப்புக்கொண்டுவிட்டது போல் தெரிகிறது.

டாக்டர் சிங் அவர்களே, ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு உச்ச நீதிமன்றம், உணவு பெறும் உரிமை தொடர்பான, நடப்பிலுள்ள இதே வழக்கில் (20 ஆகஸ்ட், 2001) “ஏழைகள், ஆதரவற்றோர் மற்றும் நலிந்த பிரிவினர் பஞ்சம் பசி பட்டினிக் கொடுமையை அனுபவிக்கக் கூடாதென்பதே இந்த நீதிமன்றத்தின் அக்கறைக்கு உரிய விஷயம்.  அது மத்திய அரசோ மாநில அரசோ எதுவாயினும், இக்கொடுமைகள் நிகழா வண்ணம் தடுப்பது அரசாங்கத்தின் முதன்மையான பொறுப்புகளில் ஒன்று.  இதை எவ்வாறு உத்தரவாதப்படுத்துவது என்பது கொள்கை தொடர்புடைய விஷயம். எனவே அந்தப் பொறுப்பு அரசாங்கத்திடமே விடப்படுகிறது.  நீதிமன்றம் உறுதி செய்துகொள்ள வேண்டிய விசயம் .. உணவு தானியங்கள் விரயமாக்கப்படக் கூடாது அல்லது எலிகள் தின்றொழிக்க விடக்கூடாது என்பதே.  உணவு பசித்தவனுக்குப் போய்ச்சேர வேண்டும் என்பதே இங்கு முக்கியமானது” என்று கூறியது.

தற்கொலை செய்துகொள்ளும் பல பதினாயிரம் விவசாயிகளும் கூட, பிரதமரே, உங்களோடு முற்றிலும் ஒத்துப்போகிறார்கள்.  தங்கள் இன்னுயிரை மாய்த்துக்கொள்ள விரட்டியது இந்தக் கொள்கையே, நீதிமன்றங்கள் அல்ல, என்பதை அவர்கள் அறிவார்கள். எனவேதான் தற்கொலை செய்துகொண்ட பலர் விட்டுச் சென்ற தற்கொலைக் கடிதங்களில் உங்கள் முகவிலாசத்தை, நிதியமைச்சருடையதை அல்லது நமது அன்பிற்குறிய, மகாராட்டிர முதல்வர் முகவரியைக் குறித்துச் சென்றனர்.  இந்தக் கடிதங்களில் எதையாவது, எப்போதாவது படித்திருக்கிறீர்களா, டாக்டர் சிங்?  உங்கள் காங். கட்சி ஆளும் மகாராட்டிர அரசு அதில் ஏதாவதொன்றை உங்களுக்குக் கொடுத்திருக்கிறதா?  அவர்களது கடன் சுமை பற்றி, வங்கிக் கடன் வாய்ப்பு பற்றி, இடுபொருட்களின் விலையேற்றம் மற்றும் விளை பொருட்களின் விலைச் சரிவு பற்றி எல்லாம் அவை பேசுகின்றன; அவர்களின் அழுகுரலுக்குக் காதுகொடுக்காத அரசாங்கங்கள் பற்றியும்தான்.  அவை தம் குடும்பத்தாருக்குக் கூட எழுதப்படவில்லை… உங்களுக்கு, உங்களுக்கும் உங்கள் கூட்டாளிகளுக்கும்தான் முகவரியிடப் பட்டிருக்கின்றன, டாக்டர் சிங்.  ஆம், அவர்கள் தங்கள் துயரங்களுக்குக் காரணமான கொள்கைகளை அறிந்திருந்தார்கள். எனவேதான் அக் கொள்கைகளை வகுத்தவர்களுக்குத் தங்கள் மரண சாசனங்களை முகவரியிட்டிருந்தார்கள்.

விவசாயிகளின் துயரம்

தாங்கள் செய்த வரலாற்றுச் சிறப்பு மிக்க 2006 – விதர்பா விஜயத்திற்குப் பின் வார்தாவைச் சேர்ந்த ராமகிருஷ்ண லோங்கர் தனது மரணக் குறிப்பில், “பிரதமரின் வருகையையும் அதை ஒட்டிய அவரது புதிய பயிர்க் கடன் பற்றிய அறிவிப்புகளையும் கண்டபின் நான் மீண்டும் வாழமுடியும் என்று நினைத்தேன். ஆனால், வங்கியில் ஒரு மாற்றமும் இல்லை. எனக்கு அங்கு எந்த மரியாதையும் இல்லை” என எழுதியிருக்கிறார்.  வாஷிமைச் சேர்ந்த ராமச்சந்திர ராவுத் தனது பிரச்சினையைப் பிரதமர் உணரவேண்டும் என்று தீவிரமாக எண்ணியதால் தனது மரணக் குறிப்பைப் பிரதமரே, தங்களுக்கு மட்டுமல்ல, குடியரசுத் தலைவர் மற்றும் உங்கள் கூட்டாளிகள் அனைவருக்கும் முகவரியிட்டு நூறு ரூபாய் முத்திரைத்தாளில் பதிவு செய்திருக்கிறார்.  அவர் தனது அறிவுக்கு எட்டியவரை தனது எதிர்ப்பை சட்டபூர்வமானதாக்க முயன்றிருக்கிறார். யாவத்மாலைச் சேர்ந்த ராமேஷ்வர் குஞ்சன்கர் தனது தற்கொலை அறிக்கையில் விவசாயிகளின் துயரத்துக்குப் பருத்தியின் கொள்முதல் விலையைக் குற்றம் சாட்டுகிறார். சகிபரோ அதாவோவின் விடைபெறும் கடிதம் அகோலா-அமராவதி பிராந்தியத்தின் பேய்த்தனமான கந்துவட்டிக் கொள்ளையைப் படம்பிடித்துக் காட்டியது போல உங்களுக்கு முகவரி இடப்படாத அவ்வாறான கடிதங்களும் உங்களது கொள்கைகளையே பேசின.

அவர்கள் அனைவருமே கொள்கையைக் காரணம் காட்டுகின்றனர். எந்த அளவுக்கு துல்லியமாக சொல்லி இருக்கிறார்கள் .. இருந்தார்கள்!  மகாராட்டிர மாநிலத்தில் 2008-ம் ஆண்டு கொடுக்கப்பட்ட “விவசாயக் கடனில்” பாதிக்கும் மேலான தொகை கிராம வங்கிகளால் வினியோகிக்கப்படவில்லை, நகர, மாநகர வங்கிக் கிளைகளால் வழங்கப்பட்டிருக்கின்றன என்பதையே சமீபத்திய வெளிப்பாடுகள் காட்டுகின்றன.  அதில் 42% ’பண’ப் பயிர் விவசாயத்தின் இதய நிலமான மும்பை மாநகரில் மட்டும் வழங்கப்பட்டிருக்கிறது.  (நிச்சயமாக, இந்த நகரத்தில் பெருவீத விவசாயம் நடக்கிறது. ஆனால் சற்று வித்தியாசமாக- இது ஏராளமான ஒப்பந்தங்களை விளைவிக்கிறது). ஒரு சில பெரும் நிறுவனங்கள் இந்த “விவசாயக் கடன்” தொகையின் பெரும்பகுதியை வளைத்துப் போட்டிருப்பதாகத் தெரிகிறது.  லோங்கார், ராவுத் போன்றவர்கள் வேளாண் கடனுக்கு தத்தளித்ததில் வியப்பொன்றும் இல்லை.  கோடீஸ்வரர்களுக்கும் இவர்களுக்கும் இடையே -உங்களுக்கு மிகவும் பிடித்தமான சொற்றொடர்களின் ஒன்றான – ”சமதள ஆடுகளம்”  [level playing field] எதுவும் சாத்தியமில்லை.

தங்களது அரசின் பிரத்தியேக பேராண்மைக்கு உட்பட்ட கொள்கையின் வெளிப்பாடுகள் இவ்வாறு இருக்கையில், நான் மண்டியிடுகிறேன்,  எனக்கு சற்று குழப்பமாக இருக்கிறது.  பல ஆண்டுகளாகத் தொடரும் இந்த அதிர்ச்சியூட்டும் விலையேற்றம் அரசு பின்பற்றும் கொள்கைகளின் தெளிவாய் முன் அனுமானிக்கப்பட்ட வெளிப்பாடுகள் தானே? இவ்வாண்டு, டொரொண்டோவில் உலகத் தலைவர்களிடையே “அனைவரையும் தழுவிய வளர்ச்சி” பற்றித் தாங்கள் உரையாற்றிக் கொண்டிருந்த நேரத்தில் உங்கள் அரசாங்கம் பெட்ரோல், டீசல் விலைக் கட்டுப்பாட்டை அகற்றவும், தளர்த்தவும் செய்தது.  மண்ணெண்ணை விலையைக் கூட உயர்த்தியது.

ஏற்கனவே அரைப்பட்டினியில் இருக்கும் லட்சோபலட்சம் மக்களின் உணவை மேலும் வெட்டிச் சுருக்கினவே இந்தக் கொள்கைகள், அவற்றை விவாதத்துக்கு உட்படுத்த முடியுமா? அந்தக் கொள்கைகள் மக்கள் உரிமைகளைப் பலாத்காரமாய் நசுக்குகின்ற போது மக்களோ தீர்வு வேண்டி நீதிமன்றங்களை அணுகுகிறார்கள்.  பிரதமரே, நீதிமன்றங்கள் என்ன செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?  உச்ச நீதிமன்றம் கொள்கை எதையும் வக்குக்கக் கூடாது என்று நீங்கள் சொல்லுவது சரிதான். ஆனால் உங்களது கொள்கைகளின் விளைவுகளை எதிர்த்து வாதாடும்போது அவர்கள் என்ன செய்வார்கள்? கொள்கைகள் மக்களால் வகுக்கப்படுகின்றன என்பது என்னைவிட உங்களுக்கு நன்றாகத் தெரியும். ஆனால், உங்கள் விசயத்திலோ அது பல பொருளாதார வல்லுனர்களால் எழுதப்படுகிறது.  சிறுவர் உழைப்பைத் தடை செய்ய எடுக்கப்பட்ட முயற்சிகளை எதிர்த்துப் போராடியவர்கள் உள்ளிட்ட வல்லுனர்கள் அவர்கள்.  அவர்களில் ஒருவர் ”ஏழைகளுக்குக் குழந்தை உழைப்பு தேவை” என்ற தலைப்பில் ‘தி நியூ யார்க் டைம்ஸ்’- ல் ஒரு கட்டுரையும் எழுதியுள்ளார் (நவம்பர் 29, 1994).  அதில் 13-வயதுப் பிள்ளையைத் தனது வீட்டில் வேலைக்கு வைத்திருப்பதாகவும் ஒப்புதல் அளித்திருக்கிறார்.  (இவர் பெட்ரோலியப் பொருட்களின் விலைக் கட்டுப்பாட்டை நீக்குவதற்கு ஆதரவாக நிற்பவரும் ஆவார் – விலை ஏற்றத்தை சமாளிக்க, வேறெதற்கும் அல்ல. ஒருக்கால் அது குழந்தை உழைப்புக்கு ஊக்கமளிக்கவும் இருக்குமோ?)

இந்த அரசாங்கத்தின் 2006-ம் ஆண்டு வாக்குறுதியான வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ளவர்கள் பற்றிய புதிய கணக்கெடுப்பு,   11-வது அய்ந்தாண்டுத் திட்டகாலத் துவக்கத்துக்கு முன்னால் முடிக்கப்பட வேண்டிய இது, முடிக்கப்படாது போனால் இந்த உச்ச நீதிமன்றம் என்ன செய்யும்? 1991 கணக்கெடுப்பின் அடிப்படையிலான 2000 ஆண்டின் மதிப்பீட்டின்படி இந்த அரசு மாநிலங்களுக்கு தானிய ஒதுக்கீடு செய்யுமானால், நீதிமன்றமோ அல்லது மற்றவர்களோ என்ன செய்யலாம்? இன்றைய நிலவரப்படி அல்லாமல், 20 ஆண்டுகள் பழைமையான 7 கோடி பேர்கள் மட்டுமே வ.கோ.கீ/ அந்தியோதயா உணவுத் திட்டம் மூலம் உணவு தானியம் பெறும்படியான கணக்கீடு இது.

இந்தத் தடுமாற்றங்களை எல்லாம் உச்ச நீதிமன்றம் சமாளிக்க முயலும் வேளையில், தங்களது கொள்கைகளை நாம் மறுபரிசீலனை செய்யலாம் என்பதே எனது தாழ்வான விண்ணப்பம். தங்களது உணவு மற்றும் வேளாண் அமைச்சருக்கு, அவர் யார், எங்கு இருக்கிறார் என்பது பற்றி உங்களுக்கு நினைவு இருக்குமானால், எனது இந்தக் கடிதத்தின் நகலை அனுப்பி வைப்பீர்களாயின் அதற்காகவும் உங்களுக்குப் பெரிதும் நன்றிக்கடன் பட்டவனாய் இருப்பேன்.

உங்கள் நேர்மையுள்ள,
பி. சாய்நாத்.

______________________________________________

பி.சாய்நாத், நன்றி – தி ஹிந்து, 14.090.2010
தமிழாக்கம் – அனாமதேயன்
______________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

  1. அப்படியா திருவாளர் பிரதமர் அவர்களே! – பி.சாய்நாத்…

    தற்கொலை செய்துகொண்ட பல பதினாயிரம் விவசாயிககள் விட்டுச் சென்ற தற்கொலைக் கடிதங்களில் உங்கள் முகவிலாசத்தை குறித்துச் சென்றனர்.பிரதமரே, எதையாவது, எப்போதாவது படித்திருக்கிறீர்களா…

  2. அருமையான கட்டுரை தோழர். அனைவரும் படிக்க வேண்டியதும். பகிர்வுக்கும் மொழிபெயர்ப்புக்கும் நன்றி

  3. தாங்கள் யார் என்பதை பலமுறை ஆளும் கட்சிகள் சொல்லிவிட்டன. யாருக்கு சேவை செய்கிறோம் என்பது மட்டுமல்ல, யாரை வெறுக்கிறோம் என்பதையும் சொல்லி விட்டார்கள். முடிவு எடுப்பது நம் கையில் தான் உள்ளது. சட்டம், நீதி, நேர்மை எல்லாம் ஏழைகளுக்கு மட்டும் தானா! அமைச்சரவைக்கு இல்லை போலும். என்னமோ கடைசியாக நீதி மன்றத்திடம் சென்றால் நீதி கிடைத்து விடும் என்போர்களே! நீதி மன்ற தீர்ப்பை அலட்சியப்படுத்திய கனவானை பற்றி தங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள். நீதி மன்றங்கள், அத்திப்பூத்தாற் போல் நல்ல தீர்ப்பை வழங்கினாலும், அத்தீர்ப்புகளை அலட்சியப்படுத்தும் மத்திய அரசை என்ன செய்யலாம். வேண்டுமென்றால் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வோமா! வேறு என்ன செய்ய வேண்டும் என்பதை சொல்லுங்கள்!

    • காஷ்மீரில் எறியப்படும் கற்கள் கோபாலபுரத்திலும் விழவேண்டும். என்ன செய்யலாம்…என்ன செய்யலாம் சொல்லுங்கள்

  4. இந்த கட்டுரையை ஹிந்துவில் படித்து அதன் தாக்கத்தில் தான் நான் ஒரு கதை எழுதினேன். மொழிபெயர்த்தமைக்கு நன்றி.

  5. இந்து பத்திரிக்கையில் இக் கட்டுரையைக் கண்டேன். ஆங்கிலபுலமை இன்மையால் இக்கட்டுரையின் கருப்பொருளை மட்டும் உள்வாங்கிக்கொண்டேன்.(முழு கருத்தையும் பெற இயலாத என் அற்ப ஆங்கில அறிவை நொந்துகொண்டு)

    இன்று உங்கள்மூலம்கிடைத்த தமிழாக்கம் மிகுந்த மகிழ்சி அளிக்கிறது.மிக்க நன்றி.
    மக்களைபற்றி சிந்திக்க திரானியற்ற அதி மேதாவி பிரதமருக்கு அமெரிக்கா, அணுஒப்பந்தம்,ஆட்சி,அதிகாரம்,உளுத்துப்போனபொருளாதாரம் பற்றிய சிந்தனைதான் பெரிதாய் படுகிறது.

  6. சூடான ஒரு கட்டுரையை சுடச்சுட மொழி பெயர்த்து அளித்தமைக்கு நன்றி.

  7. //புதிய நகரங்களை நிர்மாணிக்கவும், பெருவளாகங்களையும், பிருமாண்டமான செய்தித் தொடர்பு சாதனங்களையும் கட்டியமைக்கவும்//

    சாய்நாத்தின் மூலக் கட்டுரையில் நகரங்கள், மால்கள், மல்டிப்ளெக்ஸ்கள் என்றுதான் இருக்கிறது. செய்தித்தொடர்பு சாதனங்கள் என்று இல்லை.

    மற்றபடி நல்ல தமிழாக்கம். தரமான ஆங்கில கட்டுரைகளை உடனே மொழிமாற்றம் செய்து தமிழ் கூறும் நல்லுலகுக்கு வழங்கும் வினவின் பணி வாழ்க

    • கவனக் குறைவுக்கு வருந்துகிறேன். இனி இவ்வாறான தவறுகள் நிகழாவண்ணம் பார்த்துக்கொள்கிறேன். மன்னிக்கவும். தவறை சுட்டிக் காட்டியமைக்கு நன்றி.

  8. //சிறுவர் உழைப்பைத் தடை செய்ய எடுக்கப்பட்ட முயற்சிகளை எதிர்த்துப் போராடியவர்கள் உள்ளிட்ட வல்லுனர்கள் அவர்கள். அவர்களில் ஒருவர் ”ஏழைகளுக்குக் குழந்தை உழைப்பு தேவை” என்ற தலைப்பில் ‘தி நியூ யார்க் டைம்ஸ்’- ல் ஒரு கட்டுரையும் எழுதியுள்ளார்//

    இந்த கட்டுரையில் சாய்நாத் பெயர் குறிப்பிடாமல் சாடியிருக்கும் நபரின் பெயர் கௌசிக் பாசு. இந்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் என்ற பெத்த பதவி வேறு. கௌசிக் பாசு போன்ற “பொருளாதார மேதைகளை” செருப்பால் அடிக்க வேண்டும்.

    http://www.kaushikbasu.org/index.php

    இவரது இணைய தளத்திற்கு சென்று உங்கள் எதிர்ப்புகளை பதிவு செய்யுங்கள்.

  9. இது தொடர்பான கொசுறுச் செய்திகள்:

    //ஒரு பன்னாட்டு ஆலோசனை நிறுவனத்திடம் பணத்தைக் கொட்டிக் கொடுத்துப் பெற்ற அறிவுரை//
    அந்த பன்னாட்டு நிறுவனம் மெக்கின்ஸி கம்பெனி. இந்திய அரசு மெக்கின்ஸிக்கு ஆலோசனைக்காக வழங்கிய தொகை ரூபாய். 4.8 கோடி.

  10. I thank you to bring the writings of P.Sainath to tamil readers. I remember reading the translated articles of Mr P.Sainath in Pudhiya Jananayagam. Now your critics cannot oppose this as ‘you always write like this’.

  11. பிரதமர் மன்மோகன்சிங் உச்சநீதிமன்றத்தை அரசின் கொள்கை முடிவில் தலையிடக் கூடாது என்ற வார்த்தைகள் உதிர்த்த அன்றே வினவு தோழர்களை தொடர்பு கொண்டு ஒரு விமர்சனக் கட்டுரை உடனே எழுத ஆவல் என்பதை தெரிவித்தேன், அன்று சற்று மாறுபட்டு தோழர்கள் தெரிவித்ததால் வேறுபணியில் கவனமாகிவிட்டேன், ஆனால் இந்து நாளிதழில் திரு சாய்நாத் அவர்களின் கடிதம் வந்த அன்று அதனை படித்த போது மிகுந்த மகிழ்ச்சியாக இருந்ததுடன், இதை உடனடியாக தமிழாக்கம் செய்ய வேண்டும் என்றும் எண்ணினேன். ஆனால் கடந்த ஒரு வாரமாக எனது கணணியின் பழுது காரணமாக, இணையம் இணைப்பு கிடைப்பதில் உள்ள சிரமம் காரணமாக அதை செய்ய முடியவில்லை. ஆனால் இன்று தளத்தைப் பார்த்தபோது தோழர் அனாமதேயனின் அற்புதமான மொழிபெயர்ப்பு பார்த்து மிக மகிழ்ச்சியாக இருந்தது. வாழ்த்துக்கள். தோழர் அனாமதேயன் மின்னஞ்சல் முகவரியை தோழர் எனக்கு தெரிவித்தால் மகிழ்வேன் – சித்திரகுப்தன்

  12. சிறப்பான, தேவையான மொழிபெயர்ப்பு! நன்றி தோழர் அனாமதேயன்.

    இந்தியாவுக்கு உடனடி தேவை பல ’முந்தாசர் அல் ஜைதி’ க்கள்…
    பிய்ந்த செருப்புகள் காத்துக்கிடக்கின்றன!

  13. அறிவியல் பூர்வமாக இயேசு எங்கு பிறந்தார் என்று பகுதாய்து ஆதாரத்தோடு சொல்லுங்கள் தெரிந்துகொள்கிறோம் . எதிர்க்க துணிந்தால் அணைத்து மதங்களையும் நம்பிக்கைகளையும் எதிருங்கள் அல்லது அனைவரது நம்பிக்கைக்கும் மதிப்பளியுங்கள் . கோழை எனில் விட்டு விடுங்கள் . அமெரிக்க வீரர்கள் ஈராக் அல்லது ஆப்கானில் இடிந்த மசூதியின் மீது தாங்கள் வழி பட ஒரு சர்ச்ஐ கட்டுவதாக வைத்துகொள்வோம் , பிற்காலத்தில் அவ்விடம் யாருக்கு சொந்தம் என தீர்ப்பு வழங்குவீர்

  14. பி. சாய்நாத் ​போன்றவர்கள் அறிஜீவிகள். அவர்களு​டைய எழுத்துக்கள், மிக முக்கியமான நடப்பு சம்பவங்களின் மீதான தீவிரமான எதிர்வி​னைகளாக உள்ளன. ஆனால் என் ​போன்ற சராசரிகளுக்கு அதன் முன் க​தைச் சுருக்கத்​தை – அதாவது உணவு ​சேமிப்பு கிடங்குகளின் முக்கியத்துவம், வ​கைகள், உலகில் பிற நாடுகள் இதில் ​கையாளும் மு​றைகள், உணவுகிடங்குகள் தனியார் வசம் இருப்பதன் ஆபத்துகள், அரசின் ​கொள்​கைகளில் இது குறித்து காலந்​தோறும் ஏற்பட்ட மாற்றங்கள் அதன் காரணங்கள், சரியான மு​றை எப்படி இருக்க​வேண்டும் – முன்னு​ரையாக கூறிவிட்டு இக்கட்டு​ரை​யை ​கொடுத்திருந்தால், முழு​மையாக புரிந்து ​கொள்ள முடியும். மற்றபடி கட்டு​ரை மிக முக்கியமான எதிர்வி​னை என்ற அளவில் அத​னை ​மொழியாக்கம் ​செய்து ​வெளியிட்டதற்கு மிக்க நன்றி

Leave a Reply to கேள்விக்குறி பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க