privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்தி.மு.கஇராஜராஜ சோழன் ஆட்சி பொற்காலமா, துயரமா?

இராஜராஜ சோழன் ஆட்சி பொற்காலமா, துயரமா?

-

தமிழக அரச சார்பில் தஞ்சை பெரிய கோவிலை கட்டியதற்கு ஆயிரமாண்டு நிறைவு விழா நிகழ்த்தப் பெற்றது. மக்களாட்சிக்கு நிகரான நிர்வாகத்தையும், மக்கள் நல திட்டங்களையும் செயல்படுத்திய ராசராசனின் ஆட்சியை போல மத்தியிலும் மாநிலத்திலும் நல்லாட்சி நடைபெறுவதாக காங்கிரசு தலைவர் வாசன் கூறுகிறார். மக்களாட்சியை திறம்பட நடத்தியவன் ராசராசன் என்கிறார் கருணாநிதி. வரி கட்ட முடியாதவர்களின் நிலம் பறிக்கப்பட்டு கருவூலத்தில் சேர்க்கப்பட்டதாகவும் சொல்கிறார். கோவிலை கட்டுவது பெரிதல்ல தொடர்ந்து அதனை நிர்வகிப்பதுதான் சிரமம் என்கிறார் கனிமொழி.

ஆனால் தமிழனுக்கு வரலாறு இல்லை, எனவே குழு அமைத்து வரலாறு எழுத வேண்டும் என்கிறார் அமைச்சர் துரைமுருகன். தமிழ் மொழியே ஒரு வரலாறுதானே. தமிழை முடக்க நினைத்தவர்களிடமிருந்து திருமறைகளை மீட்டவன் ராசராசன், வடமொழியில் பாடுபவர்களை விட அதிக அளவில் ஓதுவார்களை பெரிய கோவிலில் நியமித்தான், ஒரு கலாச்சார மாற்றத்தை தடுத்து நிறுத்தினான் என்கிறார் அன்பழகன். பிற்காலத்தில் இன உணர்வு மங்கியதால் சமஸ்கிருத ஆதிக்கம் மிகுந்ததாகவும் அதனை 20 ஆம் நூற்றாண்டின் இன உணர்வு மீட்டெடுத்ததாகவும், அந்த போராட்டத்தின் விளைவாகத்தான் இன்று ஆலயங்களில் தமிழில் வழிபாடு கட்டாயமாக்கப்பட்டது என்றும் ஸ்டாலின் பேசுகிறார்.

திருமறைகளை கண்டெடுத்ததாக சொல்லப்படும் சிதம்பரத்திலேயே மனித உரிமை பாதுகாப்பு மையமும், சிவனடியார் ஆறுமுகசாமியும் இரத்தம் சிந்தி போராடித்தான் தமிழில் வழிபடும் உரிமையை பெற்றனர் என்பது சமகால வரலாறு.  வரலாறு இல்லாமல் எந்த சமூகமும் இல்லை. ஆனால் வரலாற்றை திரிக்க நினைக்கும் ஆளும் வர்க்கம் மேற்கண்டவாறு முரண்பாட்டுடன் பேசுவது இயல்பே. பெரிய கோவிலின் கல்வெட்டுக்களில்தான் தமிழகத்தில் முதன்முதலாக சமஸ்கிருதம் அச்சேறியது. முன்னர் தானமளிக்கப்பட்டு களப்பிரர் காலத்தில்  பிடுங்கப்பட்ட நிலங்களை மீண்டும் பார்ப்பனர்களுக்கே வழங்கியது சோழர் ஆட்சிதான். போரில் தோற்றவர்களில் இருந்தும் வரி கட்ட முடியாமல் போன குடியானவ வீடுகளில் இருந்தும் தகுதியான பெண்களை தெரிவு செய்து, உடலில் சூடும் போட்டு, கல்வெட்டுகளில் பெயரையும் பதிவு செய்து சுமார் 400 பேரை பெரிய கோவிலில் தேவரடியார் என்ற தாசி தொழிலில் ஈடுபடுத்தியவன் ராசராசன். மீந்த பெண்களை பெரிய கோவிலின் கொட்டாரத்தில் நெல் குற்ற அனுப்பினான்.

சோழர் காலத்தில் நீர்ப்பாசன வசதியை தனது கைப்பிடியில் வைத்திருந்தது கோவில் நிர்வாகமே. அன்றைய ஆளும்வர்க்கமான பார்ப்பன மற்றும் வெள்ளாள சாதிக்கு போக மீந்த ஆற்று மற்றும் ஏரி நீர்தான் குத்தகை விவசாயிகளுக்கு.  அதுவும் அவர்களுக்கு தோதான நேரத்தில்தான் அளிக்கப்பட்டது. எனவே விளைச்சல் குறைவதும், வரியோ பார்ப்பன வேளாள சாதிகளின் நில விளைச்சலுக்கு நிகராக இருப்பதும் தவிர்க்க முடியாத துயரமானது.

வரி கட்ட முடியாதவர்களுக்கு சிவ துரோகி என்ற பட்டமளித்து, அவர்களது நிலத்தை விற்று மைய அரசிடம் சமர்ப்பித்தது ஊர் சபை. அந்த விற்பனைக்கு ராசராசனும் அவனது தமக்கையும் பணம் அளித்ததை கல்வெட்டுகள் பல ஆதாரத்துடன் தெரிவிக்கின்றன. அந்த நிலங்கள் ஆலயத்திற்கு சொந்தமான தேவ தானங்களாகவும், பிராமணர்களுக்கு சொந்தமான பிரம்மதேயங்களாகவும் மற்றும் வேதகல்விச் சாலைகளுக்கான மானியத்திற்காக ஏற்படுத்தப்பட்ட சதுர்வேதி மங்கலங்களாகவும் பின்னர் மாற்றப்பட்டது. அதே நேரத்தில் வரிகட்ட முடியாத ஏழை குத்தகை விவசாயிகள் சிவ துரோக பட்டத்திலிருந்து தப்புவதற்காகவும் தமது பெண்டிரை ஆலய தாசி வேலைக்கு நேர்ந்து விட்ட கொடுமையும் சோழர் கால பொற்கால ஆட்சியில்தான் நிகழ்ந்தது.

பார்ப்பனர்களுக்கு ஒதுக்கப்படும் நிலங்கள் ஏற்கெனவே வளமான நெல் விளையும் பூமியாகவும், தேவரடியார்களுக்கு வழங்கப்பட்டது முதன்முதலாக விவசாயத்திற்காக திருத்தப்பட்ட தரிசு நிலமாகவும் இருந்ததை கல்வெட்டுக்களின் வழி அறிய முடிகிறது. அதிலும் நக்கன் போன்ற உயர்சாதி பெண்கள் தம்முடன் சொத்தாக பெற்று வரும் நிலத்திற்கு வரிவிலக்கு பெறுவதால் அவர்களே ஒரு கொடையாளியாகவும், வட்டிக்கு கடன் கொடுக்கும் லேவாதேவிக்காரராகவும் இருந்தனர். ஆனால் தாழ்த்தப்பட்ட குத்தகை விவசாயிகளின் பெண்டிருக்கோ அரசு ஒரு வேலி நிலம் தரும்.  பயிரிடும் அவர்களது தந்தையால் வரி கட்ட முடியாமல் மீண்டும் சிவதுரோகி ஆவதும் தொடர்ந்தது. இதனை அடுத்து வந்ததுதான் சதுரி மாணிக்கம் போன்ற பெண்களின் கோபுர தற்கொலைகளும் தொடர்ந்து வந்த மக்களது கலகங்களும்.

பெரிய காற்றளி கோவில், பெரிய விமானம், பெரிய நந்தி, பெரிய சிவலிங்கம், பெரிய பிரகாரம் என பெரிய கோவில் பெரிதாக மாத்திரமே திகழ்வதால் பெரிதினும் பெரிது கேள் என்பதற்கு இலக்கணமே ராசராசன்தான் என்கிறார் முன்னாள் துணைவேந்தர் ஔவை நடராசன். பேரரசு ஒன்று தோன்றியதும் இப்போதுதான். சுயசார்புள்ள கிராமத்தின் குறைந்த உபரியை மாத்திரமல்ல அதன் சுயசார்பையும் உறிஞ்சிதான் கோவிலும் பேரர‍சும் செழித்தது. 12 சதவீத வட்டிக்கு பணம் தரும் லேவாதேவி வேலையையும் வட்டி வசூலிக்க ஒரு படையையும் வைத்திருந்த பெரிய கோவிலைத்தான் பகைவர்களின் தாக்கதலில் இருந்து காப்பதற்காகவும் கட்டியிருப்பார்கள் என்கிறார் அன்பழகன்.

ஊர்சபையில் நிலம் வைத்திருப்பவன் மாத்திரம்தான் உறுப்பினராக முடியும். கோவில் பண்டாரம் ஆக கூட குறைந்த பட்ச தகுதி நிலம்தான். மன்னார்குடி ஊர்சபையே கூட வரி கட்ட முடியாமல் தாங்கள் சொந்த நாட்டில் அகதிகளாக போக இருப்பதாக தீர்மானம் இயற்றியிருக்கிறார்கள் என்றால் வரியின் கொடுமையை தனியாக சொல்ல வேண்டுமா என்ன?

நந்தா விளக்கு எரிப்பதற்காக ராசராசன் நாற்பது சாவாமூவா பேராடுகளை (எப்போதும் எண்ணிக்கை மாறாத வகையில் இறந்தவற்றுக்கு பதில் புதியதை வாங்கி விட வேண்டும்) கோவிலுக்கு தானமளிக்கிறான். தினமும் உழக்கு நெய் கொடுத்து விட்டு மீந்தவற்றை மேய்ப்பவர்கள் வைத்துக் கொள்ளலாமாம்.  பழ நைவேத்தியம் செய்வதற்காக பழ வியாபாரிகளுக்கு தரப்பட்ட கடனிலிருந்து வட்டிப்பணத்தை எடுத்துக் கொள்ள ஆணை பிறப்பித்தான் ராசராசன்.

ஒரு சமுதாய நோக்கத்தோடு கோவிலுக்கான எல்லா தரப்பு மக்களின் பங்களிப்பையும் பெரிய கோவிலின் கல்வெட்டுக்களில் காண முடிகிறது என்கிறார் தங்கம் தென்னரசு. 1000 பேர் ஆடிய கின்னஸ் சாதனை நடனத்தை கல்வெட்டிலும் பொறிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கிறார் நடனக்கலைஞர் பத்மா சுப்ரமணியம்.

அரசன் முதல் ஆண்டி வரை சோழர்களுக்கு ஒன்றுதான் என்கிறார்கள் இவர்கள். தனது விருப்பமில்லாமல் தனது குடும்பத்தை காப்பாற்ற தாசி தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட பெண் கல்வெட்டில் தனது பெயர் பொறிக்கப்பட வேண்டும் என்றா கோரியிருப்பாள்? தொழில் அடிப்படையில் தனது வாரிசுகளும் சேவை சாதிகளாக மாறுவ‌தற்கு உதவும் கல்வெட்டில் தனது பெயர் இல்லை என்பதற்காக குப்பனும் சுப்பனும் அழுதா இருப்பார்கள்? இழிவை உயர்வாக திரித்து விட்டு வரலாறு இப்படித்தான் எழுதப்பட வேண்டும் என்பார்கள் போலும்.

மதங்களை அரசுக்கு மேலாக வைத்திருந்த சூழலில் அவற்றை சமமாக பாவித்தவன் ராசராசன் என்கிறார் கனிமொழி. ஆனால் ஈசான சிவ பண்டிதர் என்பவரை காசுமீரத்திலிருந்து கொண்டு வந்து தனக்கு ராஜகுருவாக நியமித்து கொண்டான் ராசராசன். இவரது வழிகாட்டலின் பேரில் சூத்திர சாதியில் இருந்து சத்ரிய சாதியாக தன்னை மேனிலையாக்கம் செய்துகொள்ள விரும்பிய ராசராசன் ரண்யகர்ப்ப யாகமும் செய்து பார்ப்பனர்களுக்கு பொன்னையும் பொருளையும் நிலங்களையும் மக்களின் வரிப்பணத்திலிருந்து வாரி வழங்கினான்.

ஒரு கலாச்சார படையெடுப்பையே தடுத்து நிறுத்தினான் ராசராசன் என்கிறார் அன்பழகன்.  ஆனால் பார்ப்பன கலாச்சாரத்தை தமிழகத்தில் புகுத்தியவனே ராசராசன்தான் என்கிறது வரலாறு. அன்று எழுந்த வந்த வணிக வர்க்கத்தின் வியாபார நடவடிக்கைகளுக்கு சுங்கம் விதித்து முட்டுகட்டை போட்டதும் இவனது ஆட்சியில்தான். இதனை இவனது பேரனான முதல் குலோத்துங்கன் வந்து விலக்கி சுங்கம் தவிர்த்த சோழனாக பெயர் பெற்றதும் வரலாறாகித்தான் உள்ளது.

வரிக்கொடுமை தாங்காமல் தங்களைத் தாங்களே கோவிலுக்கு அடிமையாக விற்றுக்கொள்ளும் 12 குடும்பங்களின் கதை செங்கற்பட்டு மாவட்ட கல்வெட்டுக்களில் காணப்படுகிறது. பார்ப்பனர்களுக்கு பொற்காலமாக விளங்கிய இக்காலத்தில் மன்னனுடைய மூத்த சகோதரன் ஆதித்த கரிகாலனை கொன்ற பார்ப்பனர்களை கூட மனுஸ்மிருதி யின் படி நாடுகடத்த மட்டுமே செய்தான் ராசராசன். கோவில் சொத்துக்களை இன்று போலவே அன்றும் பார்ப்பனர்கள் கையாடல் செய்ததை கல்வெட்டுக்களில் காணப்படும் தண்டனைகளின் வழியே அறிய‌ முடிகிறது. கோவிலை மையமாக கொண்ட ஊரும் அதற்கு வெளியே சேரியையும் அமைத்த பெருமையும் சோழர்களுக்கே உண்டு.

குடவோலை முறையில் ஜனநாயகம் அன்று இருந்ததாக நீண்ட காலமாக வரலாற்று பாடப்புத்தகத்தில் சொல்லித் தருகிறார்கள். ஆனால் அந்த குடவோலையானது சொத்துள்ளவர்கள் மாத்திரமே இருக்கும் ஊர்சபையில் உள்ள பார்ப்பனர்களில் அவர்களது பிரதிநிதியை தெரிவுசெய்வதற்கு நடத்தப்படுவதே ஆகும் என்பதை சொல்லத் தவறுகிறார்கள். இப்போது நடக்கும் போலி ஜனநாயகத்திற்கான தேர்தலோடு தன்மையில், முடிவில் எல்லாம் ஒத்துப் போவதால் கருணாநிதி இதனை மக்களாட்சி என்று விளிப்பது ஒருவகையில் சரிதான்.

_______________________________________________

– வசந்தன்

_______________________________________________

இந்தக் கட்டுரை பிடித்திருக்கிறதா?

 

தொடர்புடைய பதிவுகள்