முகப்புவாழ்க்கைஅனுபவம்காரியக் கிறுக்கனிலிருந்து தோழராக..... ஒரு அனுபவம்!!

காரியக் கிறுக்கனிலிருந்து தோழராக….. ஒரு அனுபவம்!!

-

ம.க.இ.க-வின் மாநில இணைச்செயலர் தோழர் காளியப்பன் தலைமையில் தாலி, வரதட்சிணை, மொய் போன்ற சம்பிரதாய சடங்குகளை புறக்கணித்து  அஷ்டமி-நவமி என்று சொல்லப்படுகின்ற ‘அபசகுணமான’ நாளில் ரூ 9125/- செலவில் நடுவீதியில் மேடையமைத்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் முன்னிலையில்  புரட்சிக்கர திருமணம் செய்துக்கொண்டு 10-ஆண்டுகளை கடந்து வந்துவிட்டேன்.

இன்று தோழர் விஜியின் கட்டுரையை படித்தவுடன் சில மணித்துளிகள் எனது கடந்தகால நிகழ்வுகளை சிறிது நேரம் நினைத்துப்பார்த்ததை பதிவர்களோடு முன்வைத்து என் கருத்தாக இங்கே பதிவிடுகிறேன் ……

அந்நாளில் எனது தந்தை  சி.பி.எம் கட்சியிலிருந்து விலகி ம.க.இ.க-வில் இணைந்திருந்தார்.  நானோ அரசியலே நமக்கு வேண்டாமென ஒதுங்கி காரியக் கிறுக்கனாக இருந்தேன். ஏனென்றால் கம்யூனிச   சாயலில் வெளிவந்த விஜயகாந்த் படங்களைப் பார்த்து பார்த்து விஜயகாந்த் ரசிகர் நற்பணி மன்றத்திலும், நேருயுவக்கேந்திரா, ஆர்.எஸ்.எஸ் மற்றும் DYFI-யின் கிளைச் செயலாளர் வரையிலும் செயல்பட்டிருக்கிறேன்.எனது தந்தை MGRன்ADMK, DMK, CP(I)M வரைசெயல்பட்டிருக்கிறார்.

இவையாவற்றிலும் உதவாக்கரையையும், துரோகத்தையும், பிழைப்புவாதத்தையும் கண்டதால் எதிர்மறை அனுபவத்திலிருந்து காரியக்கிறுக்கனாக உயர்ந்திருந்தேன். ஊரிலுள்ள சாதிவெறித் தலைவர்கள், நாட்டாமை, ஊர்பெரியவர்கள் ஆகிய அனைவராலும் புத்திசாலிப் பையன், பிழைக்கத் தெரிந்தவன் என பாராட்டவும் பட்டேன். அதுவும் வெளியூரில் வேலை கிடைத்து செட்டில் ஆகிவிட்டதால் ஊர் சென்றபோதெல்லாம் விசேடமாக வந்து பார்த்துவிட்டு குசலம் விசாரித்துவிட்டு செல்வார்கள்.

கூடவே “உன் மேல் அதிகாரி காலால் இட்டதை நீ கையால் செய்யவேண்டும்” என்றெலாம் பொன்மொழிந்து வெத்தலைவாய்-பொக்கைவாயோடு வாழ்த்துவார்கள். இந்த ஒலியும் ஒளியும் நிகழ்சியில் என் தந்தை தூற்றப்படுகிறார் என்பதை நான் அன்று அறியாமலும் இல்லை.

இந்ந்லையில் எனது வீட்டில் எனது தந்தையுடன் சேர்ந்து தோழர்கள் இரவெல்லாம் கண்விழித்துக்கொண்டு ஆர்வமுடன் அரசியல் விவாதிப்பதும், விடிந்தப்பிறகு எவ்வித அயற்சியுமின்றி பிற வேலைகளில் பொறுப்பாக ஈடுபடுவதையும் கண்ணுற்ற நான் “தோழர்களிடம் இப்படி நீங்க மட்டும் உங்களை வருத்திக்கொண்டு சிரமப்படுகிறீர்கள்?பெரும்பாலானோர் இப்படி இல்லையே? நீங்க மட்டும் இந்த உலகத்தை மாற்றிடப் போறீங்களா?உங்களால் முடியுமா?நீங்க தேர்தல்ல ஓட்டுப்போடலைன்னா தேர்தலே நடக்காம போய்விடுமா? மக்களில் பெரும்பாலோனோர் சுயநலவாதிகள், அவர்களை திருத்தமுடியாது. ஏன்?…உங்க அமைப்பிலே கூட நீங்கமட்டும் இப்படி உண்மையாக இருக்கலாம், மற்றவர்களும் இருப்பார்கள் என்பதற்கு என்ன நிச்சயம்?” என என் சிறுவயது அனுபவத்திலிருந்து கேள்விகளால் துளைத்தெடுத்தேன்.

அதற்கெலாம் பொறுமையாகவும், பொறுப்புடனும் சலிக்காமல் தோழர்கள் விளக்கமளித்தனர். இதையெல்லாம் கேட்டுவிட்டு நான் இம்சை அரசன் வடிவேல் மாதிரி  “இல்லைஇல்லை இதையெல்லாம் ஏதோ என் மனம் ஏற்க மறுக்கிறது” என்ற தொனியில் ஒதுக்கிவிட்டு என் அம்மாவின் ஆதரவுடன் தோழர்களை வசைபாடும் அணிவரிசையில் பயணித்தேன்.

நாட்கள் பல கடந்து பிறகு என் தங்கைத் திருமணம் தந்தையின் ஏற்பாட்டில் சாதி மறுப்பு புரட்சிகர திருமணமாக இனிதே நடந்தேறியது (பு.மா.இ.மு-வின் பகுதி நேர ஊழியர்தான் மணமகன்). அதில் தோழர்கள் தங்களின் குடும்ப விழாவாக கருதி உற்சாகத்துடன் உழைத்தனர். இதற்கு நேர் எதிராக எனது உறவினர்கள் நெருங்கிவந்து அக்கறையோடு பேசுபவர்களாக நடித்து, “குலம்,கோத்திரம்,சாதி பார்க்காம தாலி,பூ பொட்டு இல்லாம முண்டமா அனுப்புறீங்க” என்று கடிந்து கொண்டனர்.

எனது சித்தப்பா ஒருவர் ஒரு படி மேலே சென்று “பார்! இன்னும் எண்ணி ஐந்தே வருசத்துல நம்ம பொண்ணை வாழாவெட்டியா வீட்டுக்கு அனுப்பிடறாங்களான்னு பார்! நாங்க சொல்றத கேட்கமாட்டேங்கிறீங்க, பின்னால அவதிப்படப்போறீங்க’ என்றெல்லாம் குறி சொன்னார். இதைக்கேட்டு எனக்கும் என் அம்மாவுக்கும்தான் மன உளைச்சல்.

பிறகு நாள் முழுவதும் யோசிச்சேன்! யோசிச்சேன்! இறுதியாக எனது உறவினர்களிடமிருந்து வெளிப்பட்ட அற்பத்தனங்களைப் புறந்தள்ளி தோழர்களின் உழைப்பு, தியாகத்துக்கு அஞ்சாமை போன்ற பண்புகளைப் பார்த்து “இதுதான் சரி” என முடிவெடுத்தேன். தொடர்ந்து தோழர்களிடம்
விவாதிப்பதும், அவர்களிடம் இணைந்து ஓரிரு வேலைகளில் பங்கேற்பதுமாக இருந்தேன். பிறகு நான் பணிபுரியும் ஆலைப்பகுதியில் உள்ள தோழர்களை வலிய சென்று சந்தித்து அவர்களுடனான தொடர்பில் என்னை இணைத்துக்கொண்டேன்.

பிறகு ஓராண்டு கழித்து எனது திருமணம். எனது உறவினர்களில் பணக்கார உறவினர்கள் ஓடோடிவந்து “பையன் படித்தவன், எந்தவித கெட்டப்பழக்கமும் இல்லாதவன், எல்லாவற்றுக்கும் மேலாக கைநிறைய சம்பளம் வாங்குகிறான்” என்றெலாம் வெளிப்படையாகவே கூறிக்கொண்டு கால்குலேசன்களோடே என்னை பார்த்தார்கள். இவையனைத்தையும் எள்முனையளவும் பொருட்படுத்தாமல் என் குடும்பத்தையொத்த(என் தந்தை கைத்தறி நெசவாளி) உழைக்கும் வர்க்கத்தை சேர்ந்த கட்டிடத் தொழிலாளி –யின் நான்கு மகள்களில் மூத்த மகளை மணந்தேன்.

எனது மகள்கள் இருவருக்கும் பூ,பொட்டு,நகை நட்டு,பக்தி,மூடநம்பிக்கைகள் அண்டாத,மேலும் மக்களை மதித்து போற்றும் சூழலை தந்து, தோழர்கள் புடைசூழ பராமரித்துவருகிறேன். அன்று விலகிய எமது சொந்தங்கள் இன்று எம்மை ஏற்று அங்கீகரித்து, எமது லட்சியத்திற்கு வழிவிட்டும், உதவிசெய்தும் நெருங்கி உறவாடி வருகின்றனர்.

“உறவினர்கள் கொண்டுள்ள பிற்போக்கு பண்பாட்டிலிருந்து நம்மை முறித்துக்கொள்வதால் ஏற்படும் தனிமைப்படுதல் என்பது தற்காலிகமானதே” என்பது என் அனுபவம்.

இந்நிலையில் தோழர் விஜியின் கடிதத்தை வினவில் படித்தவுடன் சில மணித்துளிகள் என்னை திரும்பிப்பார்க்க வைத்து அனுபவத்தை பரிசீலிக்கும்படி செய்தது மட்டுமின்றி புரட்சிகர திருமணம் செய்துகொண்ட, செய்துகொள்ளவிருக்கின்ற ஏராளமான தோழர்களுக்கும், இதனைப் படிக்கின்ற இளைஞர்களுக்கும் புது உத்வேகத்தையும்,நெஞ்சுரத்தையும்,துணிவையும் தூவி விதைக்கும் என்றால் மிகையல்ல. வெளியிட்ட வினவுக்கு வாழ்த்துக்கள்! நன்றி!

____________________________________
– சுடலை
____________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

 1. காரியக் கிறுக்கனிலிருந்து தோழராக ….. ஒரு அனுபவம் !!…

  தோழர் விஜியின் கட்டுரையை படித்தவுடன் சில மணித்துளிகள் எனது கடந்தகால நிகழ்வுகளை சிறிது நேரம் நினைத்துப்பார்த்ததை பதிவர்களோடு முன்வைத்து என் கருத்தாக இங்கே பதிவிடுகிறேன்…

 2. //“உன் மேல் அதிகாரி காலால் இட்டதை நீ கையால் செய்யவேண்டும்” என்றெலாம் பொன்மொழிந்து வெத்தலைவாய்-பொக்கைவாயோடு வாழ்த்துவார்கள். //

  ஊருக்கு செல்லும் போதெல்லாம் நானும் கேட்கின்ற வாசகங்கள் இவை.

  //எனது மகள்கள் இருவருக்கும் பூ,பொட்டு,நகை நட்டு,பக்தி,மூடநம்பிக்கைகள் அண்டாத,மேலும் மக்களை மதித்து போற்றும் சூழலை தந்து, தோழர்கள் புடைசூழ பராமரித்துவருகிறேன்.//

  வாழ்த்துக்கள் தோழரே! சொந்த பந்தங்களின் பிரிவு தற்காலிகமானது. நம்மைப் பார்த்து பார்த்து புரிதல் ஏற்படும் போது மீண்டும் இணைவார்கள் என்பது உறுதியான உண்மை.

 3. […] This post was mentioned on Twitter by வினவு, புலவன் புலிகேசி. புலவன் புலிகேசி said: RT @vinavu: காரியக் கிறுக்கனிலிருந்து தோழராக….. ஒரு அனுபவம்!! https://www.vinavu.com/2010/11/27/why-i/ […]

 4. ///தோழர்களிடம் இப்படி நீங்க மட்டும் உங்களை வருத்திக்கொண்டு சிரமப்படுகிறீர்கள்?பெரும்பாலானோர் இப்படி இல்லையே? நீங்க மட்டும் இந்த உலகத்தை மாற்றிடப் போறீங்களா?உங்களால் முடியுமா?நீங்க தேர்தல்ல ஓட்டுப்போடலைன்னா தேர்தலே நடக்காம போய்விடுமா? மக்களில் பெரும்பாலோனோர் சுயநலவாதிகள், அவர்களை திருத்தமுடியாது.///

  நானும் இதை என்னுடைய அம்மா அண்ணன், தம்பி முதல் நண்பர்கள் வரை அனைவரிடமும் கேட்டிருக்கிறேன்.

  ”நீயும் மக்களில் ஒருவன் தானே? நீ மாறி வா…. மக்கள் மாற மாட்டார்கள் என்று சொல்வதால் நீ சொல்லவருவது என்ன? நான் மாறமாட்டேன் என்றா?

  மக்கள் மாற மாட்டார்கள் என்றே வைத்துக்கொண்டாலும், நாம் மாறுவது மாற்றத்திற்கான முதல் அடி எடுத்துவைப்பதாக இருக்கட்டுமே!”
  – இப்படி நெருக்கி பிடித்து பேசினால், வெண்ணை போல நழுவி விடுவார்கள், விடுகிறார்கள்.

  //எமது சொந்தங்கள் இன்று எம்மை ஏற்று அங்கீகரித்து, எமது லட்சியத்திற்கு வழிவிட்டும், உதவிசெய்தும் நெருங்கி உறவாடி வருகின்றனர்.//

  உழைக்கும் வர்க்கத்தினராக இருந்தால் அவர்கள் இயல்பிலேயே இப்படி வந்து விடுகின்றனர்… ஆனால் நடுத்தர வெண்ணை வர்க்கமோ, கடைசிவரை தனது வரட்டு கௌரவத்தை, திமிரை விட்டுக்கொடுப்பதில்லை…

  //எனது மகள்கள் இருவருக்கும் பூ,பொட்டு,நகை நட்டு,பக்தி,மூடநம்பிக்கைகள் அண்டாத,மேலும் மக்களை மதித்து போற்றும் சூழலை தந்து, தோழர்கள் புடைசூழ பராமரித்துவருகிறேன்.//

  வாழ்த்துக்கள் தோழரே!!!

 5. //எனது மகள்கள் இருவருக்கும் பூ,பொட்டு,நகை நட்டு,பக்தி,மூடநம்பிக்கைகள் அண்டாத,மேலும் மக்களை மதித்து போற்றும் சூழலை தந்து, தோழர்கள் புடைசூழ பராமரித்துவருகிறேன்.//

  வாழ்த்துகள் .

  தோழர்கள் கூட சேர்ந்தாலே நட்புகளை ( போலி )இழக்கவேண்டிய காலமிது..நல்ல விஷயம் ஆனால்

 6. பூ,பொட்டு, நகை இல்லாம இருக்குறது புரட்சியா?
  வெங்காயம் யாரு தான் இருக்க முடியாது
  இதையேல்லாம் போயி புரட்சின்னு பேசிகின்னு
  போங்கப்ப

 7. அய்யா ஹைதர் அலி அவர்களே,

  “பூ,பொட்டு, நகை இல்லாம இருக்குறது புரட்சியா?” என்று ஏளனமாகக் கேள்வி கேட்கிறீர்கள்.

  நீங்கள் இஸ்லாமியரா அல்லது இந்துவா என்று எனக்குத் தெரியாது. உங்கள் வீட்டில் காலம் காலமாக பின்பற்றப்படும் ஒரு நடைமுறையை-குறிப்பாக பெண்கள் தொடர்பான-மீறிப் பாருங்கள். “வெங்காயம் யாரு தான் இருக்க முடியாது” என்ற உங்களின் எள்ளல் அர்த்தமற்றது என்பதை உணர்வீர்கள்.

  முதலில் இதற்கு முயற்சி செய்து பார்த்துவிட்டு அனுபவத்தை பின்னூட்டமிடுங்கள். ”பூ,பொட்டு,நகை இல்லாம இருக்குறது” புரட்சியா இல்லையா என்பது விளங்கும்.

  காலம் காலமாக பின்பற்றப்படும் ஒரு நடைமுறையை ஒருவர் மீறுவது புரட்சிதான். தற்போதைய நடைமுறையைத் தலைகீழாகப் புரட்டிப்போடுவதுதான் புரட்சி. ஏன் இதை செய்கிறார்கள் என்று கேள்வி கேட்டு விசயத்துக்குள் சென்றால் தர்க்கம் பொருள்ளுள்ளதாக இருக்கும். உங்களிடமிருந்து தர்க்கத்தை எதிர்பார்க்கலாமா?

  ஊரான்.

 8. //இவையனைத்தையும் எள்முனையளவும் பொருட்படுத்தாமல் என் குடும்பத்தையொத்த(என் தந்தை கைத்தறி நெசவாளி) உழைக்கும் வர்க்கத்தை சேர்ந்த கட்டிடத் தொழிலாளி –யின் நான்கு மகள்களில் மூத்த மகளை மணந்தேன்.//

  நல்ல பதிவு தோழர்

  கொண்ட கொள்கையினை வாழ்க்கையில் கடப் பிடிப்பது என்பது மிகவும் கடினமான செயல். செயலில் தோல்வியுறுவான்(ள்) அவனை(ளை) எள்ளி நன்கையாடலாம் என்ற சந்தர்ப்பவாதிகளின் நடுவில் வாழ்ந்து காட்டுவதும் ஒரு சாதனைதான்.

  ஒருவர் தன்னுடைய மத ,சாதி,சமூக பழக்க வழக்கங்களை பின் பற்றினால், அவருக்கு சமூக ஆதரவும், பொருளாதார வசதிகளும் தேடி வரும். சமூக அமைப்பை ,ஏற்ற தாழவை பாதுகாப்பது திருமணமும்,குடும்ப அமைப்புமே.அதனால் இதை பாதுகாப்பதில் அனைத்து ‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍__, _____,____,___, ____ வாதிகளும் மொத்தமாக செயல் படுவார்கள் .

  சமூக நீதி பேசும் அரசியல் வாதிகள் கூட அவர்கள் வீட்டு திருமணம் என்று வரும் போது சாதி,மத,பொருளாதார வட்டங்களை(ஏதாவது ஒன்று) விட்டு வெளி வருவது இல்லை.அரசியல்,மத வாதிகள் அவர்கள் இல்ல‌ திருமணத்தை பற்றி ஏதாவது வெளிப்படையாக கருத்து சொல்வார்களா?.

  அவர்கள் சொந்த விஷயத்தை எதற்கு வெளியே சொல்ல வேண்டுமென்று கேட்கலாம். மற்றவர்களுக்கு முன் மாதிரியாக இருப்பதை செயலில் காட்ட வேண்டுமல்லவா?

  தோழர்கள் தமது கொள்கைகளை தமது திருமணங்களில் நடைமுறைப் படுத்தி காட்டுவது காரியக்கிறுகனாகவே இருந்த என்னை( மற்றவர்களை பற்றி தெரியாது) வெட்கப் படுத்துகிற‌து.

 9. Good post.

  //எனது மகள்கள் இருவருக்கும் பூ,பொட்டு,நகை நட்டு,பக்தி,மூடநம்பிக்கைகள் அண்டாத,மேலும் மக்களை மதித்து போற்றும் சூழலை தந்து, /

  I wish all women were like this and stop buying and wearing costly jewels and silk sarees. It will be a great relief to us menfolks !!
  Before my marriage, many years ago, i asked my mother to look for a girl from ‘Pentacoast’ Christian group, where all forms of jewels, silk sarees, make up, and other ‘extra fittings’ are totally banned. fantastic concept and if all women of the world are like that how wonderful it would be !! We can save billions of rupees and our savings will be very very high !!

  and the jewellers and silk saree vendors will all go bankrupt. so will
  all beauticians, make up men parlours and what not. if only….

  I am a Gandhian in this matter.

Leave a Reply to ஹைதர் அலி பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க