Thursday, December 5, 2024
முகப்புவாழ்க்கைஅனுபவம்தாலி இல்லையா, இனி வீட்டுப் பக்கமே வராதே!

தாலி இல்லையா, இனி வீட்டுப் பக்கமே வராதே!

-

தாலி இல்லையா, இனி வீட்டுப் பக்கமே வராதே!

அன்புத் தோழிக்கு,

நலம்,நலம் அரிய ஆவல். நீ வெகு நாட்களாக எதிர்பார்த்திருந்த மகிழ்ச்சியான செய்தியொன்றை கூறவே இக்கடிதத்தை எழுதுகிறேன். ஆம் நீ நினைத்தது சரி தான். என்னுடைய மகளுக்கு திருமணம் ஏற்பாடாகியுள்ளது. நாங்கள் எதிர்பார்த்தது போலவே அவரும் சாதி,தாலி,வரதட்சிணை போன்ற பிற்போக்குத்தனங்களில் உடன்பாடில்லாதவர். ஆம், இது ஒரு புரட்சிகர திருமணம் தான்.

எங்களுடைய பெண்ணுக்கு இப்படி ஒருவரை கண்டடைய நாங்கள் பல மன உளைச்சல்களை எதிர் கொள்ள‌‌ வேண்டியிருந்தது. சிறுவயதிலிருந்தே எனது மகளை ஆணாதிக்கத்தை எதிர்ப்பவளாகவும், ஆணுக்கு பெண்ணை நுகர்வுப்பொருளாக்கும் ஆபரணங்களை சுமக்காத‌‌வளாகவும் தான் நாங்கள் வளர்த்தெடுத்தோம் என்பதை நீயும் அறிவாய். அவள் சிறுமியாக இருந்த போது எழாத பல்வேறு பிரச்சினைகளை அவளுடைய‌ பதின் பருவத்தின் போதும் அதன் பின்னரும் நாங்கள் எதிர்கொண்டோம்.

உறவினர் வீடுகளில் ஏதேனும் விசேசம் என்றால்,அக்கரை உள்ளவர்களை போல அனைவரும் எங்களை சுற்றி நின்று கொண்டு “பொட்டுக்கு கூட‌ நகை போடாம மொட்டக்கட்டையா இருக்காளே, இவளுக்கு எப்படிங்க‌ மாப்பிள்ளை தேடப்போறீங்க ? பொண்ணு இப்படி இருந்தா எவன் கட்டிக்குவான் ? மூட்டை தூக்குறவ‌ன் கூட 10 பவுன் நகை கேக்குற காலத்துல இப்படி புரட்சி கிரட்சின்னு பேசிக்கிட்டு இருக்க பொண்ண போய் எவன் கட்டிக்குவான் ? சரி நகையா போடலைன்னாலும் கூட பரவாயில்லை சொத்தாவாவது குடுங்க, பொண்ணு பேர்லயே கூட‌ டெபாசிட் பண்ணுங்க நாங்க மாப்ளை பார்க்கிறோம்” என்று பலவாறாக‌ யோசனை சொன்னவர்கள் பலர்.

வேறு சிலரோ “என்னது சாதி விட்டு சாதியா ! அப்படினா உன்னால‌ ஒரு கீழ்சாதி பையனை உன் பெண்ணுக்கு கல்யாண‌ம் பண்ணி வைக்க முடியுமா ?” என்றார்கள். பிற்போக்குதனங்களை எதிர்க்கக்கூடிய‌ யாராக இருந்தாலும் என் பெண்ணை அவருக்கு சந்தோஷமா கல்யாணம் செய்து வைப்போம்னு சொன்னேன்.

‘இந்த காலத்துக்கு இதெல்லாம் சரிப்படாது. கடைசில நீங்க எப்படி கல்யாணம் பன்னப்போறீங்கன்னு நாங்களும் பார்க்கத்தானே போறோம்’ என்று ஏளனம் செய்தார்கள். அதாவது எப்ப விழுவோம், கையை தட்டலாம் என்று காத்துக்கொண்டிருந்தார்கள். இது வர்க்கப்போராட்டத்தின் மற்றொரு வடிவமான‌ பிற்போக்கு கலாச்சாரத்திற்கெதிரான போராட்டம் என்பதை நாங்கள் உணர்ந்தே இருந்தோம் எனவே தான் இந்த போராட்டத்தின் ஒரு பக்கம் துன்பமானதாக இருந்தாலும் அதை எதிர்கொண்டு அதன் மறுபக்கமான‌ மகிழ்ச்சியை எங்களால் அடைய முடிந்தது.

சரியான வயது வந்ததும் எனது மகளின் விருப்பத்தை அறிந்து அவளுக்கேற்ற வாழ்க்கைத் துணையைத் தேடத் துவங்கினோம். சமூக ஆதரவு சக்திகளிடமும் சொல்லி வைப்போம் என்று சொல்லி வைத்தோம். ‘முற்போக்கு சிந்தனையாளர்கள்’ என்று அறியப்படுகிற‌‌ தி.க ‘தோழர்’களுக்கும் தகவல் தெரிவித்தோம். எதிர்பார்க்காதபடி அங்கிருந்தும் கூட‌ வந்தார்கள். வந்தவர்கள், ‘ உங்களுடைய கருத்துக்களில் எங்களுக்கு முழு உடன்பாடு தான் ஆனாலும் நீங்க சொல்ற மாதிரி எந்த மாற்றமும் இல்லாம‌ அப்படியே செய்யிறதுலயும் கொஞ்சம் பிரச்சினை இருக்கு. எங்களுக்கும் கவுரவம்னு ஒன்னு இருக்குல்லீங்களா ? குறைந்தப்பட்சம் மாப்பிள்ளையோடு வெளிய‌ போகும் போதாவ‌து பெண்னு நகைன்னு ஒன்ன போட்டுக்கிறது தானேங்க சரியா இருக்கும் ? அதுக்கு மட்டும் ஓக்கேன்னு சொல்லிட்டீங்கன்னா உடனே பேசி முடிச்சிடலாம் என்றார்கள்.

பெண்ணடிமைத்தனத்தை உணர்ந்து எனது இளம்பருவத்தில் நான் எனது தாலியையும், நகைகளையும் கழட்டி எறிந்த போது ‘என்னோட கவுரவத்துக்கு இழுக்கா இருக்கு இனிமே என் வீட்டுப்பக்கமே வராதே’ என்று என்னுடைய அப்பா கூறியதை நினைத்துக்கொண்டேன். ஆக எத்தனை தலைமுறை தாண்டினாலும் எல்லா ஆண்களும் தங்களுடைய‌ கவுரவத்தை பெண்களின் கழுத்தில் தான் தேடுகிறார்கள் என்பதை உணர்ந்துகொண்டோம். எங்களால் உங்களுடைய‌ கவுரவம் கெட வேண்டாம் நாங்கள் அதற்கானவர்களும் அல்ல எங்களுக்கு எங்களுடைய கொள்கை தான் முக்கியம் என்று ஒதுங்கிக்கொண்டோம்.

அதற்கடுத்து குடியையும், முதல் திருமணத்தையும் மறைத்துக் கொண்டு சம்பந்தம் பேச‌ வந்தார்கள். நாங்கள் இதை அறிந்து கேட்ட போது. ‘சமூகத்துல இதெல்லாம் சகஜம்தானேங்க’‌ என்றார்கள். ‘எங்களுக்கு இதெல்லாம் சகஜமில்லைங்க‌ என்று கூறி ஒதுங்கிக்கொண்டோம். ஒரு ஆண் எப்படிப்பட்டவனாகவும் இடுக்கலாம், குடிகாரனாக இருக்கலாம், பொம்பளை பொறுக்கியாக இருக்கலாம், முதல் திருமணத்தை மறைத்து பெண் தேடுபவனாக இருக்கலாம். ஆனால் ஒரு பெண் தன் மீது சுமத்தப்பட்டிருக்கும் அடிமைத்தனத்தை எதிர்ப்பவளாய், சுயமாக சிந்திப்பவளாய் இருக்கக்கூடாது அப்படி இயல்பாய் இருந்தால் இவர்களுக்கு அது விசித்திரமாய் இருக்கும்.

இவ்வாறு பல்வேறு காரணங்களால் மாப்பிள்ளை கிடைக்காமல் காலதாமதம் ஆக ஆக உறவினர் கூட்டம் உற்சாகமடைந்தது. ‘நாங்க தான் அப்பவே சொன்னோம்ல இதெல்லாம் நடக்காதுன்னு’ கேட்க மாட்டோம்னீங்க. சரி சரி அவளை நகைய போடச் சொல்லு, அவுக அவுக சொத்து பத்த வித்து கூட பிள்ளைக கல்யாணத்தை நடத்திகிட்டு இருக்காக, இந்தா அங்க மாப்பிள்ளை இருக்கு இங்க மாப்பிள்ளை இருக்குன்னு அக்கறைப்பட்டாங்க,கண்ணில் சோகமும்,கடைசியில எங்க பிடிக்கு வந்துட்டீங்க‌ல்லங்ற கெக்கலிப்போடவும் உதவிக்கரம் நீட்டினார்கள். ச்சீ,ச்சீ நம்முடைய‌ பலவீனத்தை இவங்க பயன்படுத்திக்க பார்க்கிறாங்க. நாம் அரசியல் ரீதியாக‌ உறுதியோடு நிற்க‌ வேண்டிய தருணமிது என்பதை உணர்ந்து அனைத்து ‘உதவி’களையும்  புறந்தள்ளினோம். கரிசனம் காட்டிக் கொண்டே எங்க பார்ப்போம், உன் பேருக்கு பின்னாடி சாதி போட்டுக்கிறயா இல்ல தோழரா நிக்கிறியான்னு பார்க்கலாமே என்று மார்தட்டினார்கள்.

இறுதியில் எங்களுடைய போராட்டத்திற்கு வெற்றி கிட்டியது ! எங்களுடைய பெண்ணுக்கு நாங்கள் எதிர்பார்த்தபடியே நல்ல‌ மாப்பிள்ளை கிடைத்தார். எங்களுடைய இக்கட்டான சூழலை பயன்படுத்திக் கொண்டு எப்படியாவது எங்களை பிற்போக்கின் பக்கம் தள்ளிவிட எங்களோடு‌ மல்லுக்கட்டிக்கொண்டிருந்த உறவினர்களிடம் இன்னார்தான் எங்களுடைய‌ மருமகன் என்று நாங்கள் பெருமிதத்துடன் அறிவித்த போது அவர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா ? எது நடக்கக் கூடாதுன்னு நினைச்சோமோ அது நடந்துரும் போல இருக்கே என்று எண்ணியவர்களாக பேச வார்த்தைகளின்றி இறுகிக் கொண்டார்கள். முகத்தை திருப்பிக் கொண்டார்கள். ‘என்னமோ செய்ங்க’ என்று கூறி எட்டி நின்று கொண்டார்கள்.

உறவினர்களின் துக்கத்திலும் சந்தோசத்திலும் மனதார பங்கெடுத்துக் கொண்டவர்கள் நாங்கள் ஆனால் எங்களுடைய‌‌ மகிழ்ச்சியில் பங்கெடுத்துக் கொள்ள உறவினர்கள் யாருமே முன்வரவில்லை. சரி இதுவும் ஒருவகை போராட்டம் தான் என்பதை உணர்ந்துகொண்டோம். பிற்போக்குத்தனங்களை எதிர்க்கும் போது அதை தாங்கி நிற்கும் உறவுகள் மட்டும் நீடிக்குமா என்ன ? அவற்றையும் இழக்கத்தான் வேண்டும். போராட்டத்தில் மலரும் புதிய உறவுகள் தான் மகிழ்ச்சி என்பதையும் அறிந்து கொண்டோம் எனவே எது வந்தாலும் எதிர்கொள்வோம் என ஆதரவு தந்த சமூக நண்பர்கள், அமைப்பு தோழர்களின் உதவியோடு திருமண ஏற்பாடுகளில் தீவிரமானோம்.

ஒரு நண்பர் சொன்னார், கரடு முரடான மலையில் ஏற முதலில் பாதை அமைப்பவர்கள் கற்களையும் வலிகளையும் தாங்கித்தான் ஆக வேண்டும், அதன் பிறகு பயணிப்பவர்களுக்கு அந்த‌ வலிகள் குறைவாக இருக்கும் இதெல்லாம் புதிய வழிக்கான விலைகள் என்றார். நாங்களும் அவ்வாறே எண்ணினோம் நாம் கூட இதில் பயணிப்போர் தான். நமக்கு முன் வீச்சரிவாளையும் வெந்தணலையும், கரைக்கின்ற கண்ணீரையும் கடந்து இதில் பாதை சமைத்தவர்கள் தான் எத்த‌னை எத்த‌னை பேர். எனவே இதுவெல்லாம் பெரிய வலியல்ல‌ சாதாரணமானது தான் என்று உணர்ந்து முன்னேறினோம்.

தன்னுடைய கடைசிகால‌ சேமிப்பு வரை வீணாக்கி, கடன் வாங்கி மீதி காலம் பூராவும் கஷ்டப்பட்டு சாதி,கவுரவம்,அந்தஸ்து என போலியான வாழ்க்கைக்குள் எங்களுடைய மகளை தள்ளிவிட நாங்கள் என்றுமே நினைத்துகூட பார்த்ததில்லை எவ்வளவு புறக்கணிப்புகள் வந்தாலும் அவற்றையெல்லாம் தாண்டி ஒரு சரியான வாழ்க்கைக்காக‌ போராடுவோம் என்று மனஉறுதியோடு தயாரானோம். கண்ணுக்கு தெரியாமல் வலி தரும் காயம் கன்ணீருக்கும், புறக்கணிப்புக்கும் உண்டு. இது யாரையும் சற்று அசைத்துப் பார்க்கும். தான் சுமக்க முடியாமல் சுமந்து கொண்டிருக்கும், தூக்கியெறிய முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் இந்த சுமையை, நம் மீதும் சுமத்த முடியாமல் போயிற்றே என்ற வருத்தம் அவர்களுக்கு.

ஆனால் இன்று எண்ணற்ற இளைஞர்கள் இவர்களின் கண்ணீர் ஆயுதங்களை எதிகொள்ளும் மனத்துணிவோடு முன்வருகிறார்கள். த‌ங்களை பினைத்துள்ள மாயச்சங்கிலிகளிலிருந்து விடுபட்டு வெளிவர பெண்களும் தயாராக உள்ளனர். இது பெருகும்.வளரும். தடைகள் என்றும் தாண்டுவத‌ற்கே. அந்நேரத்திற்கு அது வலி தரும் அனுபவம் என்றாலும் ஒரு சரியான வாழ்க்கை பாதைக்கான அடித்தளம் அதுவே. என்னுடைய‌ அனுபவத்தை உன்னிடம் பகிர்ந்து கொண்டது எனக்கு மன நிறைவை தருகிறது. இத்துடன் மண‌விழா அழைப்பிதழை அனுப்பியுள்ளேன். அவசியம் திருமணத்தில் குடும்பத்தோடு கலந்து கொள்ள வேண்டும், உன்னுடைய‌ வரவை எதிர்பார்த்திருப்பேன்.

அன்புத்தோழி
விஜி.

________________________________________________________________________________________________________

–          விஜி

(ம.க.இ.க ஆதரவாளர். தனது மகள் திருமண அனுபவத்தை இங்கே கடித வடிவில் தந்துள்ளார். அவரது மகளும், மருமகனும் தோழர்களாக செயல்படுகிறார்கள்)
_____________________________________________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

  1. தாலி இல்லையா, இனி வீட்டுப் பக்கமே வராதே!…

    ஒரு ஆண் எப்படிப்பட்டவனாகவும் இடுக்கலாம், ஆனால் ஒரு பெண் அடிமைத்தனத்தை எதிர்ப்பவளாய், சுயமாக சிந்திப்பவளாய் இருக்கக்கூடாது அப்படி இருந்தால் இவர்களுக்கு அது விசித்திரமாய் இருக்கும்….

  2. நமக்கு முன் வீச்சரிவாளையும் வெந்தணலையும், கரைக்கின்ற கண்ணீரையும் கடந்து இதில் பாதை சமைத்தவர்கள் தான் எத்த‌னை எத்த‌னை பேர்

    —–

    எத்தனை நிஜம்..

    நமக்கு சுகமான பாதை அமைக்க அவர்கள் வலி சுமந்தது போல நாமும் சில வலிகளை மகிழ்வாய் சுமக்க தயாராகணும்…

    வாழ்த்துகள் விஜி, உங்களுக்கும் மணமக்களுக்கும்…

    பெண்ணுக்கு துணிவு பற்றி இன்றைய என் பதிவு…

    http://punnagaithesam.blogspot.com/2010/11/3.html

    “புயலும் சீற்றமும் இருக்கும் கடலிலே கப்பலோட்டக்கூடிய மாலுமியே சிறந்தவன்.. நம் பெண்களுக்கு அதுதான் மிக தேவை..”

  3. Dear Sister,

    My best wishes to the newly married couple. I admire your courage to do what you believed to be right.
    Not many of us have such determination. You have created a new path. I salute you !

    Our society needs more and more people like you.

    Regards
    V.G.Sundar

  4. “பிற்போக்குத்தனங்களை எதிர்க்கும் போது அதை தாங்கி நிற்கும் உறவுகள் மட்டும் நீடிக்குமா என்ன ?”

    ஆழமான வரி, அருமையான கடிதம். எந்தவொரு இக்கட்டான நேரத்திலும் பிற்போக்கு பண்பாட்டிற்கெதிராக விடாப்பிடியாகப் போராடி வெற்றிகளை ஈட்டிக்கொண்டிருக்கும் தோழர் விஜி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  5. //பிற்போக்குத்தனங்களை எதிர்க்கும் போது அதை தாங்கி நிற்கும் உறவுகள் மட்டும் நீடிக்குமா என்ன ? அவற்றையும் இழக்கத்தான் வேண்டும். போராட்டத்தில் மலரும் புதிய உறவுகள் தான் மகிழ்ச்சி என்பதையும் அறிந்து கொண்டோம்//

    Ovvoru vaarthaiyum manathai kuthi kilikkirathu…! kurippaaga mele ulla vaarthaigal…

  6. தாலி அடிமைத்தனத்தின் சின்னம்..!
    வரதட்சணை வாங்குபவன் கையாலாகாத ஆண்மகன்…!!
    ஒருமணிநேரம் வந்து இருக்கையை தேய்த்துவிட்டு, உண்டு, ஊர்கதை பேசி வெட்டியே வாழ்ந்து சாகும் சொந்தங்களின் சொல்லுக்கு செவிசாய்க்காத உங்களின் புரட்சி எண்ணங்கள்,
    நிச்சயம் சமுதாய அடிமைத்தன விடுதலையே.

    நல்வாழ்த்துக்கள்.

  7. //தன்னுடைய கடைசிகால‌ சேமிப்பு வரை வீணாக்கி, கடன் வாங்கி மீதி காலம் பூராவும் கஷ்டப்பட்டு சாதி,கவுரவம்,அந்தஸ்து என போலியான வாழ்க்கைக்குள் எங்களுடைய மகளை தள்ளிவிட நாங்கள் என்றுமே நினைத்துகூட பார்த்ததில்லை//

    அருமையான வரிகள். இருந்தாலும் தன் துனையை தானே தேர்ந்தெடுக்காத எதுவும் புரட்சிகர திருமணங்கள் இல்லை. ஒரு ஆண் வரதட்சனை வாங்கமாட்டேன் என்பதை விட ஒரு பெண் வரதட்சனை கொடுக்க மாட்டேன் என்பது மேலும் புரட்சிகரமானது வாழும் இடத்தின் பேச்சுக்களை அவள் எதிர்நோக்க வேண்டும்.ஒரு சீர்திருத்த திருமணத்தை மிகவும் சிரமப்பட்டு நடத்த போகிற உங்கள் பிடிவாதத்திற்கும் மணமக்களுக்கும் புரட்சிகர வாழ்த்துக்கள்…மணமக்கள் வாழ்க பல்லாண்டு!

  8. MIGAVUM ARUMAIYANA KADITHAM.THIRUMANAM ENRU VANTHALE AMMA APPA SOLA THATA MUDIYATHU ENRU AVANGA PINAL OLINTHU KOLUM INRAYA ILINGARUKU MUNAL ORU MUNTHARANAMAHA THIHALHIRA THOLARUKU EN VAZHTHUKAL.PIRPOKU THANAKALI THOKI PIDIKUM SONTHAKALUKU IPADI THIRUMANAGAL ORU SERUPADIYAHA IRUKUM.IVARHAL ODAYA JATHI,MATHAM,PENADIMAITHANAM ODAITHERIUM…MANAMAKALUKU VAZHTHUKAL…

  9. வார்த்தைகளால் அலங்கரிக்க விரும்பவில்லை. மிகவும் நெகிழ்வாய், சந்தோஷமாய் இருக்கின்றது. தோழர் பாண்டியனின் திருமணத்துக்கு அழைப்பு வந்திருந்தும் கலந்துகொள்ள முடியவில்லை. இந்தத் திருமணத்துக்காவது அவசியம் கலந்துகொள்ள வேண்டும்.

  10. நல்லது.தாங்கள் இறுதிவரை போராட எனது பரிபூர்ன வாழ்த்துக்கள். திருமணம் என்ற வர்க்கப்போராட்டத்தில் இறுதிவரை போராடததால் தோல்வியை தழுவியுள்ளேன்

  11. மிகவும் நெகிழ்வாய், சந்தோஷமாய் இருக்கின்றது. தோழர் விஜி அவர்களுக்கு புரட்சிகர வாழ்த்துக்கள்.

  12. Vazhthukkal……….naanum idhu pondra pennaithan thedi kondirukiraen……ungal illa thirumanam (puratchikara) inidhai nadaipera meendum oru murai enadhu manamaarntha vazhthukkal……..

  13. //ஆக எத்தனை தலைமுறை தாண்டினாலும் எல்லா ஆண்களும் தங்களுடைய‌ கவுரவத்தை பெண்களின் கழுத்தில் தான் தேடுகிறார்கள் என்பதை உணர்ந்துகொண்டோம்//

    உண்மையான வரிகள், தங்களை முற்போக்கானவர்கள், பகுத்தறிவாளர்கள் என்று கூறிக்கொள்ளும் பலர் தாலி விடயத்தில் பிற்போக்கு பண்டாரங்களாகவே இருக்கின்றனர், தாலியில்லைனாலும் வெளிய போவும்போது ஒரு பெரிய செயினாவது போட்டுக்கொள்ளுங்கள் என பகுத்தறிவு பொங்க அட்வைஸ் செய்பவர்களை பார்த்திருக்கிறேன், ஆனால் வெளியில் புரட்சிகர பீரங்கிகளாக பில்டப் கொடுக்கிறார்கள். புரடசிகர திருமணம் என்பது சடங்கல்ல அது ஒரு வாழ்வியல் முறை ஏன் தாலிகட்டாம முண்டச்சியாட்டம் இருக்கறீங்க? என கேள்வி கேட்பவனின் கேள்வியை எதிர்க்கும் துணிச்சல் வேண்டும். அங்கே நம் அரசியலை பேச வேண்டும், அதற்குத்தான் சுயமரியாதை/புரட்சிகர திருமணங்கள். மேடையில் தாலியில்லாமல் திருமணம் செய்து கொண்டு பின்பு மனைவியை தாலிகட்டி கொள்ள சொல்லும் கோழைகளை கண்டுகொண்டு இருக்கிறேன்,என்னை பொறுத்தவரை கொள்கையில் உறுதியும், மனிதனாகத்தான் வாழவேண்டும் என்ற
    கொள்கையும் இருந்தால் புரட்சிகர திருமணங்கள் கடினமானதே அல்ல.

    ஒரு காலத்தில் நினைத்தே பார்க்கமுடியாத் வாழ்க்கை துணைநல ஒப்பந்தங்களை
    நடத்தி காட்டியவர் தந்தை பெரியார் அவர்கள், அவருக்கு பின் இன்றி பெரியார் தி.க வில் கூட அதன் உறுப்பினர்கள் பார்ப்பான் இல்லாமல் தாலி கட்டி திருமணம் செய்யும் அவலமும் நடக்கிறது, இன்று புரட்சிகர வாழ்க்கை துணைநல ஒப்பந்தங்களை நடத்தி கொண்டிருப்பவர்கள் மகஇகவும் அதன் தோழமை அமைப்புகளும்தான் என்பதே ஆணித்தரமான உண்மை, தந்தை பெரியார் அவர்கள் காலத்தில் நடக்காத ஒன்றையும் மகஇகவும் அதன் தோழமை அமைப்புகளும் செய்து கொண்டிருக்கிறார்கள், அது சாதி, மத ஒழிப்பதோடு இல்லாமல் வர்க்க பேதத்தையும் உடைக்கிறார்கள் இது உண்மையில் புரட்சிகரமானது

    மக்களை பிளக்கும் சாதியை
    மாதரை வதைக்கும் தாலியை
    சித்தத்தைய கெடுக்கும் சாத்திரத்தை
    ரத்தத்தையே கறக்கும் சீதனத்தை
    மொத்தமாய் புதைப்போம்!

    என்ற மகஇகவின் வரிகளோடு
    புரட்சிகர இல்வாழ்வை தொடங்கும் தோழர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

  14. “உறவினர்களின் துக்கத்திலும் சந்தோசத்திலும் மனதார பங்கெடுத்துக் கொண்டவர்கள் நாங்கள் ஆனால் எங்களுடைய‌‌ மகிழ்ச்சியில் பங்கெடுத்துக் கொள்ள உறவினர்கள் யாருமே முன்வரவில்லை.”

    ஆம். வரமாட்டார்கள்தான். உறவா அல்லது சடங்கு-சம்பிரதாயமா என்று வருகிறபோது அவர்கள் சடங்கு-சம்பிரதாயத்தின் பக்கமே நிற்கிறார்கள். இதை உடைப்பதற்கும் தொடர்ந்து போராட வேண்டியுள்ளது.

    உறவினர்களோ நண்பர்களோ பிற்போக்கு கருத்துக்களுக்கு ஆதரவாக இருப்பதால் மாக்ஸிம் கார்க்கியின் வார்த்தைகளில் சொல்லவேண்டும் என்றால் அவர்கள் கெட்டவர்கள் இல்லை; மாறாக அவர்கள் அறியாமையில் இருப்பவர்கள். அறியாமையிலிருந்து மீட்பதன் மூலமே அவர்களை சரியான கருத்தின பக்கம் கொண்டு வரமுடியும்.

    தோழரின் உறுதியான போராட்டம் மகிழ்வைத் தருகிறது. தோழர் விஜி அவர்களுக்கும் மணமக்களுக்கும் புரட்சிகர வாழ்த்துக்கள்.

    ஊரான்.

  15. சொந்த பந்தங்கள், ஊரார்கள் என எல்லோரும் ஒதுங்கி நின்றாலும் பிற்போக்கு கலாச்சாரத்தின் மீது காறி உமிழும் வண்ணம் எல்லா சவால்களையும், நெருக்கடிகளையும் எதிர்கொண்டு புரட்சிகர கலாச்சாரத்தை உயர்த்திப்பிடித்த தோழர் விஜி அவர்களின் மனோ உறுதியிலிருந்து நாமும் கற்றுக்கொள்ள வேண்டும். தோழர் விஜி அவர்களுக்கு புரட்சிகர வாழ்த்துக்கள்!

  16. //தான் சுமக்க முடியாமல் சுமந்து கொண்டிருக்கும், தூக்கியெறிய முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் இந்த சுமையை, நம் மீதும் சுமத்த முடியாமல் போயிற்றே என்ற வருத்தம் அவர்களுக்கு.// ஆமோதிக்கிறேன்.

    வாழ்த்துகள்.

  17. “போராட்டத்தில் மலரும் புதிய உறவுகள் தான் மகிழ்ச்சி என்பதையும் அறிந்து கொண்டோம்”

    மிகச்சரியானது தோழர் விஜி அவர்களே
    புரட்சிகர வாழ்த்துக்கள்.

  18. தோழர் விஜி அவர்களின் மகள் மற்றும் மருமகனுக்கு எனது புரட்சிகர வாழ்த்துக்கள்,

    இது போன்ற மன உறுதியுடன் அனைவரும் வாழ வேண்டும்

    “”ஒரு ஆண் எப்படிப்பட்டவனாகவும் இடுக்கலாம், குடிகாரனாக இருக்கலாம், பொம்பளை பொறுக்கியாக இருக்கலாம், முதல் திருமணத்தை மறைத்து பெண் தேடுபவனாக இருக்கலாம். ஆனால் ஒரு பெண் தன் மீது சுமத்தப்பட்டிருக்கும் அடிமைத்தனத்தை எதிர்ப்பவளாய், சுயமாக சிந்திப்பவளாய் இருக்கக்கூடாது அப்படி இயல்பாய் இருந்தால் இவர்களுக்கு அது விசித்திரமாய் இருக்கும்.””

    இது போன்ற கொள்கைகளுடன் ஆண்கள் இருந்தாலும் இந்த சமுதாயம் அவர்களை ஒதுக்கியே பார்க்கின்றது. இதெல்லாம் நமக்கு சரிவராது வேற வேலையை பாரு என்கிறார்கள், அப்படியிருக்க ஒரு பெண் தான் கொள்கையில் பின் வாங்காமல், இந்த சமுதாயத்தையும், உறவினர்களையும் சமாளித்து என்னை போன்றோர்களுக்கு ஒரு எடுத்துகாட்டாக இருக்கிறார்கள், உங்கள் மகளுக்கும் மகளின் கணவருக்கும் மீண்டும் எனது புரட்சிகர வாழ்த்துக்கள்………செவ்வனக்கங்கள்………

    நன்றி!…….

  19. unga theruvil thirumbi paarungal neenga mattum thani marama irupeergal..eanru thopagum intha puratchi? eazhuthu puligalum peachu puligalum samuthayathai seer saiya povadillai. veen vaadham.

  20. திருவாளர் அம்புரான்,

    இது வெறும் எழுத்தோ, பேச்சோ அல்ல, பேச்சையும், எழுத்தையும் நடைமுறையில் நிரூபித்து காட்டுவது.

    சிறு விதைகளே மரமாக மாறும்…புல்லுறுவிகளையும் மீறி…..

  21. பிற்போக்குதனங்களை குப்பையில் வீசி விட்டு, இல்லறத்தை ஏற்கும் மணமக்களுக்கு இனிய வாழ்த்துக்கள்.

  22. அருமை விஜி!

    அம்புரான் அவர்களின் எழுத்துக்கள் சிரிப்பை வரவைத்தன. முட்டாள் சமூகமெனும் ‘தோப்பில்’ மரமாக, தனிமனிதக் கோட்பாடு என்ற ஒன்றை கழற்றிப்போட்டால் மட்டுமே முடியும். இதுக்கு தனி மரமாவே இருந்துட்டு போறோம் சார்!

    ” eazhuthu puligalum peachu puligalum samuthayathai seer saiya povadillai. veen vaadham.” இதை முழு மனதுடன் ஆமோதிக்கிறேன் சார்.

    இது மாதிரி பதிவுகளை படிக்க நேரம் செலவழித்த பின்னரும், ‘அது சொல்ல வரும் கருத்து என்ன’, ‘அதிலும் கொஞ்சம் உண்மை இருக்குமோ’ என ஆராய மறுப்பவர்களுக்கு….இவை வீண் வாதமே…நேர விரயமே!

  23. இந்த மறுமொழியில் அம்புறான் மட்டுமே தனிமரமாக இருக்கிறார். அவரை விட்டு விடுங்கள். புரிந்தும் ஏற்க மறுப்பவர்கள் அவர்கள்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க