Tuesday, December 10, 2024
முகப்புகளச்செய்திகள்போராடும் உலகம்துனிசிய மக்கள் புரட்சியின் படிப்பினைகள்

துனிசிய மக்கள் புரட்சியின் படிப்பினைகள்

-

துனிசிய மக்கள் புரட்சியின் படிப்பினைகள்

“குறிப்பாக ஒடுக்கப்பட்ட அரபு மக்களுக்கும், முழு உலகிற்கும் துனிசிய மக்கள் ஒரு செய்தியை தெரிவிக்க விரும்புகின்றனர். எவரிடமிருந்தும் எதனையும் எதிர்பார்க்காதீர்கள். எல்லாமே உங்களிடம் உண்டு. மனதையும், சக்தியையும் முடமாக்கும் அச்சத்தில் இருந்து விடுபட்டு மேலெழுந்து வாருங்கள்.”
– ஒரு துனிசிய பதிவர்

துனிசிய புரட்சி ஒன்றுமில்லாத இடத்தில் இருந்து எழவில்லை. வெறும் கலவரங்கள் மட்டும் புரட்சியை தோற்றுவிப்பதில்லை. காட்டுத்தீ பரவுவதற்கு காய்ந்த மரங்களும், வெப்பநிலை அதிகரிப்பும் காரணமாக இருந்திருக்கும். அத்தகைய அகவய, புறக் காரணிகள் நமது கண்களுக்கு தெரிவதில்லை. துனிசிய மக்களின் எழுச்சியையும், பி.பி.சி. போன்ற சர்வதேச ஊடகங்கள் நீண்ட காலமாக இருட்டடிப்பு செய்து வந்தன. அதனால் தமிழிலும் அது குறித்த ஆய்வுகள் எதுவும் இல்லை. தகவல்கள் கூட குறைவாகவே ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டன. துனிசிய புரட்சியில் இருந்து பெற்ற படிப்பினைகளை, தமிழ் உழைக்கும் மக்களுக்கு கொண்டு சென்று சேர்க்கும் வரலாற்றுக் கடமை எமக்குண்டு. துனிசிய புரட்சி எவ்வாறு சாத்தியமாகிற்று? எத்தகைய அரசியல் சக்திகள் வழிநடத்தின? அது ஒரு பாட்டாளி வர்க்கப் புரட்சியா? பிரான்ஸ் போன்ற ஏகாதிபத்திய நாடுகள் ஏன் தலையிடவில்லை?

முதலில் துனிசிய மக்கள் எழுச்சி பற்றிய செய்திகள், ஏன் இவ்வளவு காலதாமதமாக நமக்கு வந்து சேர்ந்தன என்று பார்ப்போம். ஒரு மாதத்திற்கு முன்பு வரை, மக்கள் எழுச்சியினால் துனிசிய ஜனாதிபதி பென் அலி நாட்டை விட்டு தப்பியோடுவார், என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. நீண்ட காலமாக, துனிசியா எந்தவிதமான உள்நாட்டுப் பிரச்சினைகளுமற்ற ஸ்திரமான ஆட்சியைக் கொண்ட நாடாக அறியப்பட்டது. அயல்நாடுகளில் நடந்த அசம்பாவிதம் எதுவும் துனிசியாவில் நடக்கவில்லை. மத அடிப்படைவாதிகளுக்கு எதிரான போர், குண்டுவெடிப்பு, எதுவுமே இன்றி துனிசியா அமைதிப்பூங்காவாக காட்சியளித்தது. டிசம்பர் 17 , “சிடி புசிட்” என்ற சிறிய நகரத்தில், முஹமட் புவாசிசி என்ற இளைஞன் தீக்குளித்து மரணமடைந்தான். ஜனவரி 14 , ஜனாதிபதி பென் அலி நாட்டை விட்டு தப்பியோடினார். இடைப்பட்ட ஒரு மாத காலத்தில் நடந்த மாற்றங்கள் தாம், அரபுலகின் முதலாவது மக்கள் புரட்சிக்கு வழிவகுத்தது.

துனிசிய மக்கள் புரட்சியின் படிப்பினைகள்பென் அலியின் வெளியேற்றத்திற்கு ஒரு சில நாட்களுக்கு முன்னர் இருந்து தான் பி.பி.சி. துனிசியா பக்கம் கவனத்தை திருப்பியது. அது வரையில் அல்ஜசீரா மட்டுமே செய்தி தெரிவித்துக் கொண்டிருந்தது. துனிசியாவின் பெரு நகரங்களில் லட்சக்கணக்கான மக்கள் பங்குபற்றிய ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன. கடந்த ஒரு மாத காலமாக, நாட்டின் பல பாகங்களிலும், தினசரி அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடந்து கொண்டிருந்தன. ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் மீது போலிஸ் சுட்டது. குறைந்தது பத்துப் பேராவது மரணமடைந்தனர். மரணமடைந்தோர் எண்ணிக்கை என்பது என்று, ஊர்ஜிதப் படுத்தப் படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. வலைப்பதிவுகளில் எழுதிக் கொண்டிருந்த பதிவர்கள் பலர் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த செய்திகள் எதுவுமே வெளியுலகத்தை எட்டவில்லை. சர்வதேச ஊடகங்கள் அத்தனை கரிசனையுடன் நடந்து கொண்டன.

சர்வதேச ஊடகங்களின் மௌனத்திற்கு காரணம், இது மேற்குலகின் நிகழ்ச்சிநிரலின் படி நடக்கவில்லை என்பது தான். ஈரானில் தேர்தல் முடிவுகளை எதிர்த்து மாணவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டங்களுக்கு, மேற்குலக ஊடகங்களில் இரட்டிப்பு முக்கியத்துவம் அளிக்கப்பட்டன. போலிஸ் துப்பாக்கிச் சூட்டில் ஒரு மாணவி கொல்லப்பட்டதும், அந்த மாணவியின் இரத்தம் தோய்ந்த முகம் அனைத்து பத்திரிகைகளின் முதல் பக்கத்தில் பிரசுரமானது. மேற்குலக தலைவர்கள், கண்டனத்திற்கு மேல் கண்டனங்களை விடுத்துக் கொண்டிருந்தார்கள். துனிசிய சம்பவங்களை யாரும் அந்தளவு கவனம் எடுத்து பொருட்படுத்தியதாக தெரியவில்லை. பென் அலி தப்பியோடிய விமானம் மேலெழும் வரையில், அமெரிக்க அரசு வாய் திறக்கவில்லை. மிகவும் தாமதமாகத் தான் வாஷிங்டனில் இருந்து அறிக்கை வந்தது. அதுவும் எப்படி? “துனிசிய அரசின் நடவடிக்கைகளையிட்டு கவலையடைகிறோம். ஆர்ப்பாட்டக்காரர்களின் நடவடிக்கைகளும் சமாதான வழியில் இருக்காததால் கவலையடைகிறோம்.” (இது தானா நடுநிலைமை?)

துனிசிய மக்கள் தமது புரட்சியை, “மல்லிகைப்பூ புரட்சி” என்று பெயரிட்டு அழைக்கிறார்கள். மேற்குலக ஊடகங்கள் அந்த சொற்பிரயோகத்தை புறக்கணித்துள்ளன. இதே ஊடகங்கள், லெபனானில் நடந்ததை “சிடர் புரட்சி” என்று வர்ணித்தன. (அமெரிக்கா அப்படி பெயரிட்டு அழைத்தது.) லெபனானின் சிடர் புரட்சி, சிரிய நாட்டு படைகளை வெளியேற்றுவதை மட்டுமே குறிக்கோளாக கொண்டிருந்தது. ஜோர்ஜியாவில் “ரோஸ் புரட்சி”, உக்ரைனில் “ஆரஞ்சுப் புரட்சி” என்று கலர் கலரான புரட்சிகள் நடந்துள்ளன. பிற்காலத்தில் அதிகாரத்திற்கு வந்த, மேற்குலக சார்பு எதிர்க்கட்சிகளின் வர்ணத்தின் பெயரால் புரட்சிகள் நடந்தன. அந்தப் புரட்சிகளுக்கு எல்லாம், வெளிநாட்டு நிதி, மேற்குலக தொண்டு நிறுவனங்கள் ஊடாக கிடைத்துக் கொண்டிருந்தது. குறிப்பாக அமெரிக்க கோடீஸ்வரரின் “சோரோஸ் நிதியம்” ஆர்ப்பாட்டங்களை ஒழுங்குபடுத்த தேவையான செலவுகளை பொறுப்பேற்றது. துனிசிய புரட்சி இவற்றில் இருந்து பெருமளவு வேறுபடுகின்றது. எந்தவொரு வெளிநாட்டு சக்தியின் தூண்டுதலோ, நிதியுதவியோ இன்றி, தன்னெழுச்சியாக திரண்ட மக்கள் சர்வாதிகார அரசை தூக்கியெறிந்தனர்.

ஈரானில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் டிவிட்டரை பயன்படுத்தியதை, மேற்குலக ஊடகங்கள் “டிவிட்டர் புரட்சி” என்று பெருமையாக குறிப்பிட்டன. துனிசியாவிலும் டிவிட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி புரட்சி நடந்தது. நிச்சயமாக, இணையப் பாவனையாளர்கள் மட்டுமே புரட்சி நடத்தி விட முடியாது. வேலையற்ற இளைஞர்களின் கலவரம், உழைக்கும் வர்க்க மக்களின் ஆர்ப்பாட்டம், தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தம் போன்ற பல்வேறு காரணிகளும் கவனத்தில் எடுக்கத் தக்கன. இணையத்தை விட, இன்னொரு தொழில்நுட்பக் கண்டுபிடிப்பு புரட்சிக்கு பெரிதும் உதவியது. வீடியோ கமெரா கொண்ட செல்லிடத் தொலைபேசிகள், இன்று எல்லோர் கைகளிலும் பரவலாக புழங்குகின்றன. தெருவில் நடந்த ஒவ்வொரு நிகழ்வும் உடனுக்குடன் படமாக்கப்பட்டன. இப்போது தான் நேரடியாக தொலைபேசியில் இருந்து இணையத்திற்கு அனுப்பும் வசதி வந்து விட்டதே? கலவரங்கள், ஆர்ப்பாட்டங்களை காட்டும் வீடியோக்கள் சுடச்சுட “யூ டியூப்” பில் வெளியிடப்பட்டன. துனிசிய அரசின் அடக்குமுறையினால், பல யூடியூப் வீடியோக்கள் பின்னர் அழிக்கப்பட்டன. ஏற்கனவே துனிசியாவில் எதிர்க்கட்சிகளின் இணையத்தளங்களை பார்வையிடத் தடை இருந்தது. ஆயினும், டிவிட்டர், பேஸ்புக் தடை வருவதற்கு முன்னர், புரட்சியாளர்கள் முந்திக் கொண்டனர். கடுமையான செய்தித் தணிகை இருந்த நாட்டில், டிவிட்டர், பேஸ்புக் மூலம் தகவல்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன. பின்னர் அந்தத் தகவல்கள், தெருவில் ஆர்ப்பாட்டம் செய்த பாமரர்களுக்கும் எடுத்துச் செல்லப்பட்டது. ஆர்ப்பாட்டக்காரர்கள், பதிவர்கள், இணையப் பாவனையாளர்கள் அனைவரதும் கூட்டு முயற்சி இன்றி புரட்சி சாத்தியமாகி இருக்காது.

துனிசிய மக்கள் புரட்சியின் படிப்பினைகள்

துனிசிய பதிவர்கள், டிவிட்டர், பேஸ்புக் பாவனையாளர்கள் மட்டுமல்ல, ஐரோப்பாவில் புலம்பெயர்ந்து வாழ்ந்த துனிசியர்களும் விரைவான தகவல் பரிமாற்றத்திற்கு உதவியுள்ளனர். ஆனால் எந்தவொரு மேற்குலக ஊடகமும் இவற்றை கூர்ந்து கவனித்ததாக தெரியவில்லை. (ஈரான் மாணவர்களின் டிவிட்டர் தகவல்களுக்கு அவை தமது இணையத்தளத்தில் இடம் ஒதுக்கிக் கொடுத்திருந்தன.) துனிசிய மக்களில் பெரும்பான்மையானோர், அல்ஜசீரா தொலைக்காட்சி மூலமே தமது நாட்டில் நடக்கும் மாற்றங்களை அறிந்து கொண்டனர். சம்பவங்களை உடனுக்குடன் தெரிவித்தது மட்டுமல்ல, விவாதங்கள், ஆய்வுகள் மூலம், அல்ஜசீரா மக்கள் மனதை மாற்றிக் கொண்டிருந்தது. இவை எல்லாவற்றையும் விட, துனிசிய மக்களின் மனவுறுதி இறுதி வெற்றியை தேடித் தந்தது. அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் செய்தால் தண்டனைக்குள்ளாவோம் என்று தெரிந்து கொண்டும் வீதியில் இறங்கி போராடினார்கள். சனத்தொகையில் சரிபாதியான பெண்களும் தீரத்துடன் போராட்டத்தில் குதித்தனர். புரட்சியில் பலதரப்பட்ட மக்கள் பங்குபற்றினர். ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், வேலையற்றவர்கள், உழைக்கும் வர்க்க மக்கள், நடுத்தர வர்க்க மக்கள் எல்லோரும் கலந்து கொண்டனர்.

எந்த நாட்டிலும் பாட்டாளிகளின் எழுச்சி மட்டுமே புரட்சியை வெல்ல போதுமானதல்ல. நடுத்தர வர்க்கம் எந்தப் பக்கம் சாய்கின்றது என்பதும் அவசியம். பொருளாதார நெருக்கடியினால் ஒரு சிறிய மேட்டுக்குடியினர் மட்டுமே தப்பிப் பிழைக்க, பெரும்பான்மை நடுத்தர வர்க்கமும் மோசமாகப் பாதிக்கப்பட்டது. நடுத்தர வர்க்கத்திற்கு ஊதியம் குறைவது பிரச்சினை. தொழிலாளர்களுக்கு வேலையிழப்பு பிரச்சினை. வேலையற்றவர்களுக்கோ உணவு வாங்க பணமற்ற பிரச்சினை. ஒரு நாட்டின் மொத்த சனத்தொகையில் பெரும்பான்மையாக உள்ள உழைக்கும் வர்க்கமும், நடுத்தர வர்க்கமும் ஒன்று சேரும் போது தான் புரட்சி சாத்தியமாகின்றது. துனிசியாவில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் செய்தவர்களின் பக்கம் சார்ந்திருந்தமை பெரிய பலமாகும். துனிசிய தொழிலாளர் கூட்டமைப்பு, வேலைநிறுத்தங்களை ஒழுங்குபடுத்தியது. குறிப்பாக மக்கள் எழுச்சி நகரங்களில் பரவிய பொழுது, ஒரே நாளில் நாடளாவிய வேலை நிறுத்த போராட்டங்கள் அறிவிக்கப்பட்டன.

துனிசிய மக்கள் புரட்சியின் படிப்பினைகள்அரசியல் கொள்கையைப் பொறுத்தவரை, “இஸ்லாமிய- தேசியம்” அல்லது “அரபு- தேசியம்” பேசிய யாருமே ஊர்வலங்களில் பங்குபற்றவில்லை. அவர்களுக்கு வர்க்க அரசியல் ஒத்துக் கொள்ளாது. ஒதுங்கியே இருந்தார்கள். கம்யூனிஸ்டுகள், சோஷலிஸ்டுகள், பல்வேறு இடதுசாரி சிந்தனை கொண்டவர்களை அதிகமாக காண முடிந்தது. இதே நேரம், இராணுவம் எந்தப் பக்கம் நிற்கின்றது என்பது குறித்து தெளிவான விளக்கம் இல்லை. இராணுவம் மக்களின் பக்கம் நிற்பதாக பரவலாக நம்பப்படுகின்றது. ஆனால் எந்த நேரமும் எதுவும் நடக்கலாம். உண்மையில் பென் அலி வெளியேறுவதை இராணுவமும் விரும்பியதால், அமைதியான சதிப்புரட்சிக்கு உடந்தையாக இருந்திருக்கும் என்ற சந்தேகமும் உண்டு. இதுவரை காலமும் பாதுகாப்புப் படைகள் வசம் மட்டுமே ஆயுதங்கள் இருந்துள்ளன. தற்போது பொதுமக்கள் கைகளில் ஆயுதங்கள் சென்று விட்டதாக வதந்திகள் உலாவுகின்றன. இராணுவத்தில் புரட்சிக்கு ஆதரவான சிலராலேயே அப்படி நடந்திருக்க வாய்ப்புண்டு என்பதால், இராணுவம் எந்தவித நடவடிக்கையிலும் இறங்கவில்லை என்றும் கருதப்படுகின்றது.

துனிசியாவின் புரட்சி எத்தகைய குணாம்சத்தைக் கொண்டிருந்தது என்பதை ஆராய்வது அவசியம். எப்போதும் மேற்குலக நிலைப்பாட்டில் இருந்து உலகைப் பார்ப்பது பல தவறான புரிதலுக்கு வழிவகுக்கின்றது. மேற்குலக ஊடகங்கள் சில இதனை “விக்கிலீக்ஸ் புரட்சி” என்று குறிப்பிட்டன. விக்கிலீக்ஸ் கசிய விட்ட இரகசியங்கள் பல ஏற்கனவே பலருக்கு தெரிந்த சங்கதி தான். அவற்றை இப்போது தான் மேலைத்தேய வெகுஜன ஊடகங்கள் கண்டுபிடித்துள்ளன. தாங்கள் சொல்லித் தான் உலக மக்களுக்கு இவை எல்லாம் தெரிய வேண்டும், என்பது போன்ற நினைப்பில் மிதக்கின்றனர். துனிசியாவில் சர்வாதிகாரி பென் அலி குடும்பத்தின் ஊழல் குறித்து, விக்கிலீக்ஸ் சொல்லித் தான் தெரிய வேண்டும் என்று நினைப்பது மகா அபத்தம். அந்த கேபிளை எழுதிய அமெரிக்க தூதரக அதிகாரிக்கு அப்போது தான் ஞானம் பிறந்திருக்கலாம். 23 வருடங்களாக கொடுங்கோல் சர்வாதிகாரியின் கீழ் வாழும் துனிசிய மக்களுக்கு, இவை எல்லாம் அன்றாட வாழ்வியல் அனுபவம். சர்வாதிகாரத்தை எதிர்த்து போராடிய எத்தனையோ அரசியல் ஆர்வலர்கள், இரு தசாப்தங்களாக பிரான்சில் வாழ்கின்றனர். அவர்கள் அங்கிருந்த படியே பென் அலியின் அடக்குமுறை ஆட்சி பற்றியும், ஊழல் பற்றியும் தமக்கு தெரிந்த வழிகளில் எல்லாம் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். துனிசிய சர்வாதிகாரி மேற்குலக சார்பானவர் என்ற ஒரே காரணத்திற்காக, சர்வதேச ஊடகங்கள் அரச எதிர்ப்பாளர்களை புறக்கணித்து வந்துள்ளன.

கடந்த வருடம் பெல்ஜியத்தில் நடந்த சர்வதேச கம்யூனிஸ்ட் கட்சிகளின் மகாநாடு நடந்தது. பிரான்சில் அரசியல் அகதியாக வாழும், துனிசிய கம்யூனிஸ்ட் கட்சி பிரதிநிதி ஒருவரும் வந்திருந்தார். அவர் உரையாற்றும் பொழுது இஸ்லாமிய- தேசியவாதிகளுடனான வெகுஜன எதிர்ப்பு முன்னணியில் தமது கட்சி பங்கெடுப்பதை குறிப்பிட்டார். குறிப்பாக ரஷ்யாவை சேர்ந்த கம்யூனிஸ்டுகளுக்கு, “பிற்போக்கு மதவாதிகளுடனான கூட்டமைப்பு” என்ற கோட்பாட்டை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. காரசாரமான விவாதத்தின் முடிவிலும், அவர்களை தனது கருத்தோடு இணங்க வைக்க துனிசிய பிரதிநிதியால் முடியவில்லை. அரபுலகில் புரட்சி என்பது, “இன்டிபதா” என்றே புரிந்து கொள்ளப்படுகின்றது. இன்டிபதா என்றால் “அநீதிக்கு எதிரான மக்கள் எழுச்சி” என்றும் அர்த்தம் கொள்ளலாம். இன்டிபாதாவில் பாட்டாளி வர்க்கம் மட்டுமல்லாது, பிற பாதிக்கப்பட்ட வர்க்கங்களும் கலந்து கொள்வார்கள். அது சிறு முதலாளிகளாக இருக்கலாம், மத்தியதர வர்க்கமாக இருக்கலாம். மேற்கத்தய அரசியல் சித்தாந்தப்படி புரிந்து கொள்ள வேண்டுமானால், இதனை “ஜனநாயகப் புரட்சி” என்று அழைக்கலாம். சோஷலிசப் புரட்சிக்கு முந்திய, புதிய ஜனநாயகப் புரட்சி குறித்து மாவோ கூட நிறைய எழுதியுள்ளார். பிரெஞ்சுப் புரட்சி, பூர்ஷுவா வர்க்கத்தின் எழுச்சியாக இருந்த போதிலும், அது வரலாற்றில் முற்போக்கான பாத்திரம் வகித்ததை கார்ல் மார்க்ஸ் வரவேற்றுள்ளார்.

துனிசிய மக்கள் புரட்சியின் படிப்பினைகள்

துனிசியாவில் இடம்பெற்றது பாட்டாளி வர்க்கப் புரட்சியோ, அன்றி சோஷலிசப் புரட்சியோ அல்ல. அத்தகைய மாயை யாருடைய மனதிலும் இல்லை. துனிசிய மக்கள் மேற்குலகில் நிலவுவதைப் போல, அடிப்படை ஜனநாயக உரிமைகளுக்காக போராடினார்கள். கருத்துச் சுதந்திரம், அரசியல் சுதந்திரம், வேலைவாய்ப்புக்கான உத்தரவாதம், எல்லோருக்கும் உணவு கிடைக்கும் வசதி, இவை எல்லாம் மேற்கு ஐரோப்பாவில் தனி மனிதனுக்கு உறுதிப்படுத்தப்பட்ட உரிமைகள். மேற்கத்திய நெறிகளுக்கு உட்பட்ட தனி மனித உரிமைகள் தான், துனிசிய மக்களின் குறிக்கோளாக இருந்துள்ளது. புரட்சி அவற்றை சாத்தியமாக்கும் என்றே எல்லோரும் நம்புகின்றனர். அத்தகைய உரிமைகளை பெற்றுக் கொடுப்பதற்காக துனிசிய மக்களுக்கு உதவ வேண்டிய மேற்குலகம், ஒதுங்கியிருந்து மௌனம் சாதிக்கின்றது. ஜனநாயக விழுமியங்களை உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்வதாக கூறும் மேற்குலகின் இரட்டைவேடம் அம்பலமாகிக் கொண்டிருக்கிறது.

துனிசிய தொழிற்துறையில் 40 % முதலீட்டை செய்துள்ள பிரான்ஸ், சர்வாதிகாரி பென் அலிக்கு அடைக்கலம் கொடுக்க மறுத்தது. அதற்கு காரணம், பிரான்ஸ் துனிசிய மக்கள் பால் கொண்ட கரிசனை அல்ல. பிரான்சில் லட்சக்கணக்கான புலம்பெயர்ந்த துனிசியர்கள் வாழ்கிறார்கள். தனது நாட்டினுள்ளும் துனிசிய மக்களின் எழுச்சியை எதிர்கொள்ள பிரான்ஸ் தயாராக இல்லை. துனிசியா எண்ணெய் வளமற்ற சிறிய நாடு. அதனால் அமெரிக்காவும் தலையிடாமல் பிரச்சினையை தவிர்த்துக் கொள்கின்றது. “எண்ணெய் இல்லாத சின்னச்சிறு துனிசியாவில் வாழ்ந்த அதிர்ஷ்டசாலிகள் நாங்கள்.” என்று புரட்சி வென்றதற்கான காரணமாக துனிசியர்கள் கருதுகின்றனர்.

தற்போது எழுந்துள்ள அபாயம் என்னவெனில், சர்வதேசம் ஒத்துழையாமை இயக்கம் நடத்துவதன் மூலம் புரட்சியை தோல்வியடைய வைக்க முனையலாம். வேலையில்லாப்பிரச்சினை, உணவுப்பொருள் விலையேற்றம் போன்ற பொருளாதார பிரச்சனைகளை தீர்க்க, திறந்த சந்தைக் கொள்கையை முன்வைக்கலாம். “சந்தைக்கு அதிக சுதந்திரம் அளிக்கப்பட்டிருக்க வேண்டும்.” என்று நவ-தாராளவாத பொருளாதாரக் கொள்கையை போதிப்பார்கள். ஏற்கனவே ஐ.எம்.எப். ஆலோசனைப் படி, திறந்த சந்தை, உலகமயமாக்கல் என்று கிளம்பித் தான் பிரச்சினை இந்தளவு விஸ்வரூபம் எடுத்தது. சர்வதேச சமூகம் அந்த உண்மையை மறைக்கப் பார்க்கும். சிறிது காலத்தின் பின்னர் துனிசியர்கள் மீண்டும் ஒரு புரட்சியை நோக்கி தள்ளப்படுவார்கள். துனிசிய புரட்சியை, உலக நாடுகளில் தோன்றும் பல புரட்சிகளின் ஓர் அங்கமாகவே கருதப்பட வேண்டும்.

_________________________________________________________

– கலையரசன்

_________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

  1. துனிசியா : மக்கள் புரட்சியின் படிப்பினைகள் ! | வினவு!…

    துனிசிய மக்கள் ஒரு செய்தியை தெரிவிக்க விரும்புகின்றனர். எவரிடமிருந்தும் எதனையும் எதிர்பார்க்காதீர்கள். எல்லாமே உங்களிடம் உண்டு. மனதையும், சக்தியையும் முடமாக்கும் அச்சத்தில் இருந்து விடுபட்டு மேலெழுந்து வாருங்கள்.- ஒரு துனிசிய பதிவர்…

  2. மக்கள் தான் கதாநாயகர்கள் என்பதை சொல்கிறது. நாம் தான் கதாநாயகர்களை தேடி அலைகிறோம்.

    முற்றிலும் உண்மை.

  3. […] This post was mentioned on Twitter by வினவு and Mau, sandanamullai. sandanamullai said: துனிசிய மக்கள் புரட்சியின் படிப்பினைகள் https://www.vinavu.com/2011/01/21/lessons-from-tunisian-revolution/ […]

  4. மிக முக்கிய கட்டுரை. எனக்கும் நடுத்தர வர்கத்தினர் மீது எப்பொழுதும் நம்பிக்கை இல்லை ஆனால் புரட்சியின் தோழமை சக்திகளாயிற்றே. கட்டுரை, ஒரு நாட்டின் புரட்சிகர பாதையை அருமையாக விவரிக்கிறது..
    இனி எல்லா நாடுகளிலும் இணையம் சார்ந்த தணிக்கையும், உளவு வேலைகளும் தீவிரப்படுத்தப்படும்.

  5. என்ன வினவு சார் எவ்வளவு நாளைக்குத்தான் பொரட்சி பொரட்சி ன்னு பிலிம் காட்டுவிங்க. தெரு வித்தைக்காரன் கீரிக்கும் பாம்புக்கும் சண்டை
    விடப்போறேன்னு கடைசி வரைக்கும் டுபாக்கூர் விட்டுட்டு கடைசில அல்வா குடுத்துட்டு போற மாதிரி. எப்பதான் ரிலீஸ் பண்ணுவீங்க.

    துனீசியாவில் கூட ரிலீஸ் பண்ணிட்டிங்க, நாங்க என்ன பாவம் செய்தோம். பாவப்பட்ட விஜயே ஒருவழியா அவரோட காவலன ரிலீஸ் பண்ணிட்டாரு. நீங்க பொரட்சிய எப்ப வெளியிடுவீங்க. சொல்லுங்க சார். வேனுமின்ன சன் பிக்ச்சர்சில் படத்த வித்துடுங்களேன், கலாநிதி மாறன் பிரமாதமாக வெளியிடுவாரே.

    • Edisan//
      என்ன வினவு சார் எவ்வளவு நாளைக்குத்தான் பொரட்சி பொரட்சி ன்னு பிலிம் காட்டுவிங்க. தெரு வித்தைக்காரன் கீரிக்கும் பாம்புக்கும் சண்டை
      விடப்போறேன்னு கடைசி வரைக்கும் டுபாக்கூர் விட்டுட்டு கடைசில அல்வா குடுத்துட்டு போற மாதிரி. எப்பதான் ரிலீஸ் பண்ணுவீங்க. //

      எடிசன்//
      திருமணம் ஆன உடனே பிள்ளையை பெற முடியுமா? பத்து மாதமாவது பெறுத்துயிருக்கவேண்டும் அல்லவா? பிள்ளையை பெறவே பத்து மாதம் என்றால் புரட்சி என்பது அவ்வளவு சீக்கரமா வரும்.அது என்ன பிள்ளைவரம் வேண்டி சாமியாரை சென்று பார்க்கிற முட்டாள்தனமான செயலா?

  6. அட எடிசன் கூமுட்டையே! புரட்சி என்ன கடையில கால்கிலோ அரைகிலோன்னு வாங்குற புண்ணாக்குன்னு நெனச்சியா? அது எரிமலைய்யா! என்னிக்காவது ஒருநாள் வெடித்தெழத்தான் செய்யும். புர்ஞ்சிதா? லூசுத்தனமா கம்யூனிசத்தை எதிர்க்கிறத விட்டுப்புட்டு மொதல்ல கம்யூனிசம்னா என்னன்னு புரிஞ்சிக்கப் பாரு வோய்!

  7. //ஒரு மாதத்திற்கு முன்பு வரை, மக்கள் எழுச்சியினால் துனிசிய ஜனாதிபதி பென் அலி நாட்டை விட்டு தப்பியோடுவார், என்று யாரும் எதிர்பார்க்கவில்லை//

    இது உண்மை. வருட இறுதியில் விடுமுறைக்கு துனிசியாவில் உள்ள monastir என்ற ஊருக்கு சென்றிந்தேன். இரண்டு வாரத்தில் இவ்வளவு பெரிய மாற்றம் வருவதற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை. வெளியில் இருந்து பார்ப்பதற்கு நார்மலாக function செய்யும் society போல தான் தோன்றியது.

  8. //தன்னெழுச்சியாக திரண்ட மக்கள் சர்வாதிகார அரசை தூக்கியெறிந்தனர்.//
    இனி மக்கள் ஜனநாயக அரசு கட்டியமைக்கப்படுமா?

  9. “புரட்சிகரப் போராட்டம் எழுந்துள்ளதானது அரசியல் நனவு, முன்னோக்கு மற்றும் வேலைத்திட்டத்தின் கேள்வியை ஆக முக்கியமானதாக ஆக்கியுள்ளது. துனிசியா மற்றும் ஒட்டுமொத்த மத்திய கிழக்கின் வரலாறுமே நிரந்தரப் புரட்சி முன்னோக்கின் அடிப்படையில் ட்ரொட்ஸ்கி மற்றும் நான்காம் அகிலத்தால் படைக்கப்பட்ட உலகப் புரட்சிகர மூலோபாயத்தை அழுத்தம்திருத்தமாய் உறுதிப்படுத்துவதாக உள்ளன.
    ஸ்ராலினிசம், சமூக ஜனநாயகம் மற்றும் முதலாளித்துவ தேசியவாதத்திற்கு எதிரான வகையில் ட்ரொட்ஸ்கி விளக்கியதைப் போல, ஏகாதிபத்தியத்தின் சகாப்தத்தில், தாமதப்பட்டு முதலாளித்துவ அபிவிருத்தி கண்ட நாடுகளில் உள்ள முதலாளித்துவ வர்க்கங்கள் ஜனநாயகப் புரட்சியின் அடிப்படைக் கடமைகளில் எதனையும் ஆற்றுவதற்கு திறனற்றதாய் இருக்கின்றன. பலவீனமாகவும் சார்பு கொண்ட நிலையிலும், அத்துடன் அந்நிய ஏகாதிபத்தியம் மற்றும் பூர்விக நிலவுடைமை சக்திகளுடன் எண்ணிலடங்கா தளைகள் மூலம் கட்டப்பட்டுள்ள நிலையிலும் இருக்கிற துனிசியா போன்ற நாடுகளின் முதலாளித்துவ வர்க்கங்கள் அவை ஏகாதிபத்திய சக்திகளுக்கு காட்டுவதை விடவும் ஆயிரம் மடங்கு கூடுதலான அச்சத்தையும் குரோதத்தையும் தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர சக்தியை நோக்கிக் காட்டுகின்றன.”

    http://www.wsws.org/tamil/articles/2011/jan/110118_themass.shtml

  10. விக்கிலீக்ஸும் துனிசியாவும்

    Patrick Martin

    அமெரிக்க வெளியுறவுக் கொள்கை வல்லுனர்கள் கடந்த வாரம் துனிசிய நிகழ்வுகளை “முதல் விக்கீலிக்ஸ் புரட்சி” என்று விவரித்துள்ளனர். அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கொள்ளை முறை மற்றும் குற்றங்கள் மற்றும் உலகம் முழுவதும் அதனுடைய ஆதரவான நாடுகளின் கைக்கூலிக்கு இயங்கும்தனம் ஆகியவற்றை ஜூலியன் அசாஞ்ச் மற்றும் அவருடைய சக சிந்தனையாளர்கள் பல்லாயிரக்கணக்கான ஆவணங்களை வெளியிட்ட தைரியமான பணியினால் ஏற்பட்ட தாக்கத்திற்கு வாஷிங்டனில் இருந்து வந்துள்ள எரிச்சல்மிக்க மரியாதை எனலாம்.

    துனிசில் இருந்து அமெரிக்கத் தூதரகம் அனுப்பிய தகவல் ஆவணங்கள் 10இனை விக்கிலீக்ஸ் பகிரங்கப்படுத்தியது. இவை அனைத்துமே அமெரிக்கத் தூதர் ரொபேர்ட் கொடெக்கினால் கையெழுத்திடப்பட்டவை. வாடிக்கையாக அமெரிக்க அரசாங்கமும் அமெரிக்கச் செய்தி ஊடகமும் விக்கிலீக்ஸ் வெளியிடும் ஆவணங்கள் முக்கியமானவையல்ல, “புதிதாக எதையும்” வெளிப்படுத்தவில்லை, சொல்லப்போனால் அமெரிக்க இராஜதந்திர முறையைச் சாதகமாகக் காட்டுகின்றன என்று கூறப்படுவதை அதன் உள்ளடக்கம் பொய்யாக்குகிறது. இவற்றிற்கு அப்பால், தகவல் ஆவணங்கள் கணிசமான முறையில் துனிசிய ஆட்சியின் ஊழல்களை அம்பலப்படுத்தியுள்ளது, அதே போல் அமெரிக்கா “தலையசைத்து, கண்சிமிட்டி” நாட்டின் சிறைச்சாலைகளில் சித்திரவதை செய்யப்படுவது பற்றி ஏற்கும் அணுகுமுறையையும் அம்பலப்படுத்துகின்றன.

    இவை உலகெங்கிலும் ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளுக்கு வாஷிங்டன் ஆதரவு கொடுக்கிறது என்ற போலித்தன மோசடியையும் அம்பலப்படுத்துகின்றன.
    http://www.wsws.org/tamil/articles/2011/jan/110120_wikil.shtml

  11. புரட்சிக்கு பெயர் மல்லிகைப்பூவா?இப்பதாங்க எனக்கு மல்லிகைப்பூவை புடிச்சிருக்கு.நாமும் என்ன விலை கொடுத்துனாலும் வாங்குவோம்,பூவை அல்ல-புரட்சியை.

  12. நட்புடன் கலையரசன்,
    நாம் எழுதும் போது நமக்கென ஒரு வாசகர்வட்டத்தை உருவாக்கி அதற்கு மீண்டும் மீண்டும் ஊட்டச்சத்தை வழங்கும் ஒருவகையாகன் ஜெயமோகன் நடைமுறை நம் அனைவரிடமுமே உள்ளது. துனிசியப் புரட்ட்சியிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் தமிழில் அதனை மக்கள் மத்தியில் கொண்டு செல்லவேண்டும் என்று ஆரம்பிக்கும் நீங்கள், வழமைபோல அங்கு என்ன நடந்தது என்ற குறைந்தபட்ச அறிவு கூட இல்லாமல் எழுதியிருக்கிறீர்கள். ஜஸ்மின் புரட்சி என்று அவர்கள் கூறுவதன் அடிப்ப்டையே வேறு. பெல்ஜியத்தில் நடந்த மாநாடு குறித்து நீங்கள் கூறுவது தவறானது, இவை குறித்த ஆவண ஆதாரங்களுடன் நான் பொதுத்தளத்தில் விவாதிக்கத் தயார்; மக்களுக்கு உண்மை சொல்வதற்காக… மக்கள் மீது நம்பிக்கை இருந்தால் விவாதிப்போம்….

    • நட்புடன் silai,
      துனிசியாவில் நடந்த நிகழ்வுகள் குறித்து எனக்கு குறைந்த பட்ச அறிவு கூட இல்லை என்றே வைத்துக் கொள்வோம். அங்கே என்ன நடந்தது என்று நீங்களாவது விளக்கியிருக்கலாம். கடந்த வருடம் மே மாதம் பெல்ஜியம் புருசெல்ஸ் நகரில் நடந்த மகாநாட்டில் (19th International Communist Seminar, Brussels, 14-16 May 2010) நானும் கலந்து கொண்ட அனுபவத்தை வைத்து தான் எழுதியிருக்கிறேன். மகாநாட்டில் பங்குபற்றிய துனிசியா கம்யூனிஸ்ட் கட்சிகள் இவை: Parti du Travail Patriotique et Democratique de Tunisie & Parti Communist Ouvrier Tunisian. நீங்கள் எந்த மகாநாட்டை பற்றி குறிப்பிடுகின்றீர்கள் என்று கூற முடியுமா?

  13. துனிசியப் போராட்டம் குறித்து நான் விரிவாக ஆனால் நிச்சயமாக ஒருரிரு நாட்களுள் எழுதுகிறேன் மே மாதன் 15ம் தி பெல்ஜியம் கூட்டத்தில் நானும் கலந்துகொண்டேன். நீச்சலடித்துப் பார்த்ததில் அஜித் ரூபசிங்கவிற்கு வேண்டிய ஒரு சிங்களவர் மட்டும் தான் கலந்து கொண்டிருந்தார். வேறு யாரையும் நான் காணவில்லை. இதைவிட PCOT இலிருந்து சிலர் கலந்துகொண்டனர்.

    • Silai, நீங்கள் கலந்து கொண்ட மகாநாடு பற்றிய மேலதிக தகவல்கள் தர முடியுமா? மகாநாடு நிகழ்ச்சிநிரல் கிடைக்குமா? அது எங்கே நடந்தது? யார் ஏற்பாடு செய்தார்கள்? வேறெந்த கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்? ஏனெனில் நான் அறிந்த வரையில் இலங்கையை, அல்லது இந்தியாவை சேர்ந்த வேறு யாரும் கலந்து கொள்ளவில்லை. Parti Communist Ouvrier Tunisian (PCOT) லிருந்து “சிலர்” கலந்து கொள்ளவில்லை. பிரான்சில் புலம்பெயர்ந்து வாழும் ஒருவர் மட்டுமே கலந்து கொண்டார். ஆவண ஆதாரங்களுடன் பொதுத்தளத்தில் விவாதிக்க தயார் என்று ஏற்கனவே கூறியிருக்கின்றீர்கள்.

  14. உலகப் பொருளாதார நெருக்கடியும் கம்யூனிஸ்டுகளின் கடமையும் என்பது(crisis and the action of the communist parties) தான் மாநாட்டின் நோக்கமாக இருந்தது. பெல்ஜியம் தொழிலாளர் கட்சி ஏற்பாடு செய்திருந்தது. 39 நாடுகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டார்கள். தகவல் : 20 வது மாநாடு நடை பெறும் திகதி – மே 13 – 15 2011 பிரசல்ஸ்,

    • Silai, நீங்கள் எந்தக் கட்சி சார்பில் மகாநாட்டில் கலந்து கொண்டீர்கள்? நீங்கள் நீச்சலடித்து கண்டுபிடித்த சிங்களவர் எந்தக் கட்சியின் சார்பில் கலந்து கொண்டார்? எனக்குத் தெரிந்த வரையில் இலங்கை, இந்திய கட்சிகளை சேர்ந்த யாரும் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. மகாநாட்டில் கலந்து கொண்ட(45), கலந்து கொள்ளாமல் ஆதரவு தெரிவித்த(23) கட்சிகளின் பட்டியலை எடுத்து பாருங்கள்.

      //பெல்ஜியத்தில் நடந்த மாநாடு குறித்து நீங்கள் கூறுவது தவறானது, இவை குறித்த ஆவண ஆதாரங்களுடன் நான் பொதுத்தளத்தில் விவாதிக்கத் தயார்.//
      சரியானதை நீங்கள் இன்னும் கூறவில்லையே?

  15. //Edisan
    என்ன வினவு சார் எவ்வளவு நாளைக்குத்தான் பொரட்சி பொரட்சி ன்னு பிலிம் காட்டுவிங்க. தெரு வித்தைக்காரன் கீரிக்கும் பாம்புக்கும் சண்டை
    விடப்போறேன்னு கடைசி வரைக்கும் டுபாக்கூர் விட்டுட்டு கடைசில அல்வா குடுத்துட்டு போற மாதிரி. எப்பதான் ரிலீஸ் பண்ணுவீங்க.
    துனீசியாவில் கூட ரிலீஸ் பண்ணிட்டிங்க, நாங்க என்ன பாவம் செய்தோம். பாவப்பட்ட விஜயே ஒருவழியா அவரோட காவலன ரிலீஸ் பண்ணிட்டாரு. நீங்க பொரட்சிய எப்ப வெளியிடுவீங்க. சொல்லுங்க சார். வேனுமின்ன சன் பிக்ச்சர்சில் படத்த வித்துடுங்களேன், கலாநிதி மாறன் பிரமாதமாக வெளியிடுவாரே//
    ஐயோ பாவம் கீழ்ப்பாக்கத்திலிருந்து சுவர் ஏறி குதிச்சி ஓடிவந்த ஜீவனின் உளரல் இது.யாரும் டென்சன் ஆகவேண்டாம்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க