privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்ஈழம்தமிழக மீனவர் படுகொலைகள்: இரு நாட்டு மீனவர் மோதலா?

தமிழக மீனவர் படுகொலைகள்: இரு நாட்டு மீனவர் மோதலா?

-

savetnfishermanராமேஸ்வரம் மீனவர் படுகொலைகள் என்பது தனித்த பிரச்சனையல்ல. இலங்கையின் இனவாதப் போக்கிற்கும் அதை எதிர்த்துக் கிளம்பிய ஈழ மக்களின் ஆயுதப் போராட்டத்திற்கும், இப்போது மாபெரும் இனப்படுகொலை ஒன்றின் மூலம் போர் முடித்து வைக்கப்பட்டிருப்பதற்கும், இலங்கைக்கு வெளியே தமிழகத்தில் இலங்கை அரசுக்கு எதிராக எழும் எதிர்ப்புகளை நசுக்குவதற்கும், மீண்டும் ஒரு போராட்டம் ஈழத்தில் வேர் விடாத படி அதன் அஸ்திவாரங்களில் ஒன்றாக பாம்பன் பகுதியை தங்களின் இராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதும், தனியார் – தாராளமயத்திற்காக கடலையும் கரையோரங்களையும் பன்னாட்டு, உள்நாட்டு முதலாளிகளுக்கு தாரை வார்க்கவும், இன்னும் பல்வேறு காரணங்களுக்காய் இந்திய, இலங்கை அரசுகளின் இந்த கூட்டுக்கொலை இராமேஸ்வரத்தில் நடத்தப்படுகிறது.

இக்கொலைகளை இலங்கை கடற்படைகள் முப்பதாண்டுகளாய் செய்தது. இப்போது மீனவர்களைக் கொல்லவென்றே கூலிப்படைகளை நிறுவியிருக்கிறது இலங்கை. இந்தியா இக்கொலைகளை மறைமுகமாக ஆதரிக்கிறது. விஸ்தரிப்பு எண்ணம் கொண்ட இந்திய அரசும், பௌத்த சிங்கள பேரினவாத அரசும் இணைந்து தங்களின் சொந்த சுயலாப வர்த்தக, அரசியல் நலன்களுக்காய இக்கொலைகளை செய்து கொண்டு, கண் துடைப்பு நாடகங்களையும் நடத்திக் கொண்டிருக்கின்றது.

இரு நாட்டு தமிழர்களிடையே பிளவு?

இராமேஸ்வரம் மீனவர் படுகொலைகள் கடந்த முப்பதாண்டுகளாய் நடக்கிறது. சுமார் 500- க்கும் மேற்பட்ட மீனவர்கள் இதுவரை கொல்லப்பட்டிருக்கிறார்கள். விடுதலைப்புலிகள் வலுவாக இருந்த காலத்தில் போர், ஈழ மக்களின் துயரம், ஈழம் என்கிற அளவிலேயே தங்களின் தமிழார்வத்தை வெளிப்படுத்திய தமிழீழ விடுதலை ஆதரவாளர்கள் அதே அளவுக்கு தமிழக மீனவப் படுகொலைகளைக் கண்டித்ததில்லை.

ஈழ விவாகரம் தமிழகம் தழுவிய பிரச்சனையாக மாற்றப்பட்ட அளவுக்கு இராமேஸ்வரம் மீனவர் பிரச்சனை தமிழகம் தழுவிய பிரச்சனையாக மாற்றப்பட்டதில்லை. மாபெரும் இன அழிப்பின் பின்னர், ஈழ மக்கள் இராணுவ நிழலில் அமைதியான பின்னர் இப்போது அதிகமாக இராமேஸ்வரம் மீனவர் பிரச்சனை பேசப்படுகிறது. அதுவும் சிறிய அளவில்தான். திராவிட இயக்க அரசியலிலும் மீனவ மக்கள் பிரச்சனை பேசப்பட்டதும் இல்லை. அதற்கு அக்கறையான எந்த முடிவுகளும் எடுக்கப்பட்டதும் இல்லை.

ராஜீவ் கொலைக்கு முன்னர் இலங்கைக் கடற்படைக் கொலைகள் என்று மட்டுமே (அதுதான் உண்மை) சொல்லப்பட்ட மீனவர் படுகொலைகள், ராஜீவ் கொலைக்கு பின்னர் விடுதலைப்புலிகள் நிகழ்த்தும் கொலைகள் என்று பிரச்சாரப்படுத்தப்பட்டது. போர் காலத்தில் மரியா என்ற படகில் வந்து புலிகள் சுட்டுக் கொன்றதாகச் சொன்னார்கள். இந்த நிலையில்தான் 2009 – மே மாதம் போர் முடித்து வைக்கப்பட்டு விட்டது. இப்போது புலிகள் இல்லை. ஆனால் மீனவர் படுகொலை தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இப்போது சொல்கிறார்கள், “இலங்கை மீனவர்களின் வளங்களை இந்திய மீனவர்கள் கொள்ளையடிக்கிறார்கள், வலைகளை இந்தியப் படகுகள் சேதப்படுத்துகின்றன” என்கிறார்கள். இது தொடர்பாக இந்திய இலங்கை மீனவர்களிடையே நடந்த பேச்சு வார்த்தை தொடர்பாக ஆழமானதும் அவசியமானதுமான இக்கட்டுரையைப் படியுங்கள், பல உண்மைகளைத் தெரிந்து கொள்ளலாம். (இலங்கை : இராமேஸ்வரம் மீனவர் சந்திப்பு நடப்பது என்ன? – அகில். http://inioru.com/?p=16420 )

அதாவது நாம் தமிழக மீனவர்களைக் கொல்கிறது இலங்கை கடற்படை என்கிறோம். அவர்களோ “தமிழக மீனவர்கள் எல்லை தாண்டுகிறார்கள், மீன் வளங்களை அழிக்கிறார்கள், வலைகளை அறுத்தெரிகிறார்கள்” என்று தமிழக, ஈழத் தமிழ் மீனவர்களிடையே பிளவை உண்டு பண்ணுகிறார்கள். உண்மையில் தமிழக, ஈழத் தமிழ் மீனவர்களிடையே பிளவை உருவாக்கும் நோக்கம் யாருடையது? இரு நாட்டு மீனவர்களுடையதா? இரு நாட்டு அரசுகளுடையதா?

அந்த வகையில் கடைசியாக இலங்கையில் இருந்து வெளிவரும் வீரகேசரி இதழ் ( யாருக்கும் கேட்காத பருத்தித்துறை மீனவர்களின் குரல்!  http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=27971 ) இப்படி  ஒரு செய்தியை வெளியிட்டிருக்கிறது. ஈழ மக்கள் அமைதியாக்கப்பட்டு விட்ட நிலையில் அறிவுஜீவித்தளத்தில் இலங்கை அரசின் அரசியல் நிலைகளை முன்னெடுக்க விரும்பும் சிலர் பருத்தித்துறை மீனவர் குரலில் இப்போது பேசத் துவங்கியிருக்கிறார்கள்.

பருத்தித் துறைப் பகுதியைச் சார்ந்த மரியகுணஸ்டீன்,  // “இது சிங்க இறால் பிடிக்கும் காலம். இந்தக் காலத்தில் தெற்கிலிருந்து சிங்கள மக்களும் முனைப்பகுதிக்கு மீன்பிடிக்க வருகிறார்கள். கடல்மார்க்கமாகவே வந்து, அந்த வழியிலேயே அவர்கள் செல்கிறார்கள். இந்திய மீனவர்களால் தான் தொழிலில் எமக்கு அதிகம் நஷ்டம் ஏற்படுகிறது. நாம் வலை விரித்திருக்கும்போது விளக்குகள் எதுவுமின்றி வரும் அவர்கள் எமது வலைகளைக் கிழித்தெறிகிறார்கள். ரோலர் படகுகளால் எமது வலைகள் துண்டாக்கப்படுகின்றன. இதன் காரணமாக நாம் பாரிய இழப்புகளுக்கு முகங்கொடுக்கிறோம். கடந்த வாரம்கூட சுமார் ஒன்றரை லட்சம் ரூபா விரயமானது. இதுகுறித்து நாம் அதிகாரிகள் பலரிடமும் முறையிட்டோம். ஆனால் சாதகமான எந்த முடிவும் எட்டப்படவில்லை. இருவேறு நாடுகள் எனச் சொல்லிப் பிரிவினைவாதத்துடன் நாம் பார்க்கவில்லை. மனிதாபிமானம் வேண்டும் என்பதையே நான் கூற விரும்புகிறேன்” // என்று சொல்கிறார். இந்த அப்பாவி மீனவரை தன்னைப் போன்ற ஒரு ஒடுக்கப்பட்ட இனமான தமிழக மீனவர்களுக்கு எதிராகப் பேசத் தூண்டிய சக்தி எது?

விசைப்படகுகளால் வலைகள் கிழிக்கப்படுவதும், விரித்து வைக்கப்பட்டிருக்கும் வலைகளை விசைப்படகுகள் இழுத்துச் செல்வதும், மீன் பிடி எல்லைகளை தீர்மானிப்பதில் வரும் குழப்பங்களும் மீன்பிடித் தொழிலில் மிக மிக சாதாரணமானது. இது தொடர்பான பிரச்சினை தமிழக மீனவர்களிடையே கூட அடிக்கடி நடப்பதுண்டு. மேலும் இந்தப் பிரச்சினை உலகெங்கும் உள்ள மூன்றாம் உலக நாடுகளில் வாழும் மீனவர்கள் அடிக்கடி சந்திக்கக் கூடியதுதான்.

இலங்கையில் தெற்கில் இருந்து வரும் சிங்கள் மீனவர்கள் வடக்கில் தமிழ் மீனவர்களின் மீன் பிடி உரிமையை கட்டுப்படுத்தவில்லையா? கடல் மீன் பிடி உரிமையில் இலங்கையின் பெருந்தேசிய சிங்கள வெறி கடலில் தன் ஆதிக்கத்தை நிலை நிறுத்தவில்லையா?  இலங்கைக்குள்ளேயே நிலைமை இப்படி இருக்கும் போது ஒரு அப்பாவி மீனவனை தமிழக மீனவர்களுக்கு எதிராகப் பேசத் தூண்டும் குரல் இலங்கை அரசின் குரலல்லாமல் வேறு என்ன?

மீனவர்களின் நட்பு கடலின் ஆழத்தை விட அதிகமானது.

இந்திய இலங்கை மீனவர்கள் நட்பு மட்டுமல்ல உயிருக்கு உத்திரவாதமில்லாத உலகிலேயே உயிராபத்து அதிகமுள்ள தொழில்களில் ஒன்றாக மீன் பிடித்தொழிலில் மீனவர்கள் பேதம் பார்த்து பழகுவதில்லை. ஒரு சுரங்கத் தொழிலாளியின் உயிர் நாடியில் கசிந்து கொண்டிருக்கும் மரணம், அவனது எல்லையற்ற அன்பிற்கு அடையாளமாக இருப்பது போலதான் மீனவனின் அன்பும். அவன் உணர்வுகளால் உந்தப்படுகிறவன். சாதி மத பேதங்களுக்கு அப்பாற்பட்டவன். தான் அன்பு செலுத்தும் ஒன்றுக்காக உயிரைக் கூடக் கொடுக்க அஞ்சாதவன்.

இதுதான் மீனவர்களின் உணர்வுபூர்வமான வாழ்வு. அதே நேரம் அவர்களுக்குள்ளே எந்தப்பிரச்சினைக்காக மோதிக்கொண்டாலும் அது மூர்க்கமாக இருக்குமளவு அப்பாவித்தனமாகவும் இருக்கும். அவர்கள் சமவெளியின் கறைபடியாத எளிய மனிதர்கள். தமிழக மீனவனாக இருந்தாலும் இலங்கை தமிழ் மீனவனாக இருந்தாலும் இதுதான் உண்மை. பாரம்பரிய மீன் பிடித்தொழிலில் ஈடுபடும் ஒரு மீனவனின் கருணையையும் அன்பையும் வேறெந்த சமூகங்களிடமும் காண்பது அரிது. அப்படி ஒரு நீண்ட கால அன்பும் நட்பும் கலந்துதான் தமிழக ஈழத் தமிழ் மீனவர்களின் நட்பு. கச்சத்தீவும் அந்தோனியார் கோவிலும் அந்த நட்பிற்கு நீண்டகால சாட்சியமாக நிற்கின்றன.

இது போக எல்லை தாண்டி புயல் மழையில் சிக்கி தத்தளிக்கும் மீனவர்களை, பரஸ்பரம் காப்பாற்றி கரை சேர்த்து உணவு கொடுத்து உறவு வளர்த்த கதை மீனவனுடையது. வேதாரண்யத்திலும் , பேசாலையிலும், மன்னாரிலும்,  யாழ்பாணத்திலும், பாம்பனிலும், தூத்துக்குடியிலும், கன்னியாகுமரியிலும், என்று இரத்தமும் சதையுமாக இரு நாடு மீனவர்களின் உறவுகளையும் எந்த அழிவு சக்திகளின் எல்லைகளும் பிரித்து விட வில்லை. ஆனால் இன்று?

இரண்டு அரசுகளின் எண்ணங்களை ஈடேற்றவும் இந்த இரு நாட்டு மீனவர்களும் பலிகடாவாக்கப்பட்டிருக்கிறார்கள். இலங்கை அரசின் ஆதரவாளர்களோ அதை ஊதி விட்டு இந்த பிரிவினையை முன்னெடுக்கிறார்கள். தமிழக மீனவர்களைப் பொறுத்தவரையில் தடை செய்யப்பட்ட மடியை பயன்படுத்துவது என்பது ஏற்றுக் கொள்ள முடியாது. காரணம் இந்த மடிகள் முதலில் அழித்தது மீன் வளத்தை அல்ல, ஏழை கட்டுமரக்காரனின் மீன் பிடி உரிமையை. அது உள்ளூர் சிறு கட்டுமரக்காரனின் மீன் பிடி உரிமையை நசுக்குவது உண்மைதான். ஆனால் பிரச்சனை இதுவல்ல. தங்களின் சொந்த நலனை முன்னெடுக்க விரும்பும் அரசுகள் பழியை இவர்கள் மீது போட்டு, இவர்களை மோத விட்டு தங்களின் நலனை இராமேஸ்வரத்தில் முன்னெடுக்கின்றன.

உண்மையில் மீன் வளங்கள் இப்பிராந்தியத்தில் இல்லாது போகக் காரணம் பன்னாட்டு ஏக போக மீன் பிடி நிறுவனங்களே. மீன் வளம் பெருக வருடதிற்கு 45 நாட்கள் மீன் பிடித்தடையை உள்ளூர் மீனவர்களுக்கு கொண்டு வந்துள்ள இரு நாட்டு அரசுகளும் தங்களில் கடல்பரப்பில் ஏக போக பன்னாட்டு நிறுவனங்களை கடல் கொள்ளையில் ஈடுபட அனுமதித்துள்ளன. அவர்களுக்கு தடையும் இல்லை தண்டமும் இல்லை. ஆக இரு நாட்டு மீனவர்களும் போராட வேண்டியதும், எதிரியாக கருத வேண்டியதும்  இந்த பன்னாட்டு நிறுவனங்களைத் தானே தவிர தமிழக மீனவர்களை அல்ல.

பன்னாட்டு வர்த்தக நிறுவனங்களுக்காகவும் மீன் பிடி நிறுவனங்களுக்காகவும் சேது சமுத்திரத் திட்டத்தை தமிழனின் வரலாற்றுப் பெருமையாகக் காட்டும் அரசியல் வாதிகள் அதை மீனவர்கள் எதிர்ப்பதை கணக்கில் எடுக்க மறுக்கின்றனர். சேதுக் கால்வாய் திட்டம் இரு நாட்டு மீனவர்களுக்கும் பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் வணிகச் சூதாட்டம் என்பதுதான் உண்மை. கடலிலே இப்படியான கொள்ளைகள் ஒரு பக்கம் என்றால் கரையில் செயற்கைத் துறைமுகங்கள், கடலோர பூங்காக்கள், கேளிக்கை விடுதிகள்,  இறால் பண்ணைகள், என்று கடலோரங்களை தனியாரிடம் ஒப்படைக்க இன்னொரு சுனாமியாய் வருகிறது அடுத்தடுத்த திட்டங்கள்.

இவைகளை முன்னெடுக்கும் இந்திய அரசும், நீண்டகால அரசியல் நோக்கில் மீனவர்களை இராமேஸ்வரத்தில் இருந்து அப்புறப்படுத்த நினைக்கும் இலங்கையும்தான் இரு நாட்டு மீனவ மக்களின் எதிரிகளே தவிர கொலை செய்யப்பட்டவனையே எதிரியாகச் சித்தரிப்பது இன்னுமொரு அயோக்கியத்தனமல்லவா? ஆனால் கொல்லப்பட்ட மீனவர்களுக்கும், கொலை செய்யும் இலங்கை கடற்படைக்குமான பிரச்சனையை இந்திய, ஈழ மீனவர்களுக்கிடையிலான பிரச்சனையாக ஹிந்து ராம், பேராசிரியர் சூரியநாராயணன் போன்றவர்கள் பிரச்சாரம் செய்கின்றனர். ஹிந்து ராம் யார் என்பதை நான் சொல்லி யாரும் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை.

இணையத்திலிருந்து களத்திற்கு வாருங்கள்!

துனிசியாவிலும், எகிப்திலும் டிவிட்டர், பேஸ்புக் இணையங்கள் குறிப்பிடத் தக்க செல்வாக்கைச் செலுத்தினாலும் புரட்சியை அவை கொண்டு வந்து விடுவதில்லை. பெருந்திரள் மக்களை வீதிக்குத் திரட்டி வந்து ஆர்ப்பாட்டங்களை ஒருங்கிணைத்து அரசுக்கு நெருக்கடியைக் கொடுப்பதன் மூலமே அரசியல் கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்பதுதான் யதார்த்தம். ஆனால் டிவிட்டரிலேயே தொடங்கி டிவிட்டரிலேயே இந்தப் பிரச்சனை தீர்ந்து விடாது நண்பர்களே! ஒன்று திரட்டிய சக்தியை எங்கே எப்படி வெளிப்படுத்தி நெருக்கடியை உருவாக்குகிறோம் என்பதில்தான் இதன் வெற்றி அடங்கியிருக்கிறது.

இதனால் நாமெல்லாம் உடனே களமிறங்கி வெற்றியை ஈட்டிவிடுவோம் என்று சொல்லவில்லை. ஆனால் அதை நோக்கி தெளிவான கொள்கை, நடைமுறையோடு நாம் இந்தப்பிரச்சினையை கொண்டு செல்வது சரியாக இருக்கும். சிலர் மீனவர் பிரச்சினைக்காக எந்த அரசியல் கட்சியையும் எதிர்க்க கூடாது என்றெல்லாம் தவறான கருத்து வைத்திருக்கிறார்கள். இது குறித்து பின்னர் எழுதுகிறேன்.

ஆளும் வர்க்கங்களுக்கிடையிலான முரணை வரம்புக்குட்பட்டுதான் பயன்படுத்த முடியும். தண்டகாரண்யாவில் மாவோயிஸ்டுகளும் . காஷ்மீரில் போராடும் சக்திகளும் அப்படி ஓரளவுக்கு பயன்படுத்துகிறார்கள். பயன்படுத்துவதுதான் சரியும் கூட, அதில் மாற்றுக் கருத்து எதுவும் இல்லை. மேலும் அந்த முரண்பாட்டை பயன்படுத்துமளவு அவர்கள் ஒரு சக்திகளாக இருக்கிறார்கள். அப்படி இல்லாத போது நாமும் அப்படி இறங்கினால் நம்மைத்தான் ஆளும் வர்க்கம் பயன்படுத்திக் கொள்ளும்.

இப்போதே மீனவர் படுகொலை குறித்து பல்வேறு சதிக்கதைகளை இலங்கை அரசு உருவாக்கி தனது எடுபிடிகள் மூலம் பரப்பத் துவங்கியிருக்கிறது. அதிலொன்றுதான் இருநாட்டு மீனவர்களுக்கிடையே மோதல் என்ற கதை. இதையும் நாம் எதிர்கொண்டு வீழ்த்த வேண்டிய அவசியமிருக்கிறது. இதன்றி வெறுமனே மனிதாபிமானத்துடன் மட்டும் இந்தப் பிரச்சினையை எளிமைப்படுத்தி புரிந்து கொள்வது சரியல்ல என்பதோடு ஆபத்தானதும் கூட.

____________________________________________________

– வெண்மணி

_______________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

  1. தமிழக மீனவர் படுகொலைகள் : இரு நாட்டு மீனவர் மோதலா ?…

    ஈழ விவாகரம் தமிழகம் தழுவிய பிரச்சனையாக மாற்றப்பட்ட அளவுக்கு இராமேஸ்வரம் மீனவர் பிரச்சனை தமிழகம் தழுவிய பிரச்சனையாக மாற்றப்பட்டதில்லை….

  2. இதுதான் மீனவர்களின் உணர்வுபூர்வமான வாழ்வு. அதே நேரம் அவர்களுக்குள்ளே எந்தப்பிரச்சினைக்காக மோதிக்கொண்டாலும் அது மூர்க்கமாக இருக்குமளவு அப்பாவித்தனமாகவும் இருக்கும். அவர்கள் சமவெளியின் கறைபடியாத எளிய மனிதர்கள். தமிழக மீனவனாக இருந்தாலும் இலங்கை தமிழ் மீனவனாக இருந்தாலும் இதுதான் உண்மை. பாரம்பரிய மீன் பிடித்தொழிலில் ஈடுபடும் ஒரு மீனவனின் கருணையையும் அன்பையும் வேறெந்த சமூகங்களிடமும் காண்பது அரிது

    டிவிட்டர், பேஸ்புக் இணையங்கள் குறிப்பிடத் தக்க செல்வாக்கைச் செலுத்தினாலும் புரட்சியை அவை கொண்டு வந்து விடுவதில்லை. பெருந்திரள் மக்களை வீதிக்குத் திரட்டி வந்து ஆர்ப்பாட்டங்களை ஒருங்கிணைத்து அரசுக்கு நெருக்கடியைக் கொடுப்பதன் மூலமே அரசியல் கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்பதுதான் யதார்த்தம்

  3. […] This post was mentioned on Twitter by வினவு, வினவு. வினவு said: தமிழக மீனவர் படுகொலைகள்: இரு நாட்டு மீனவர் மோதலா? https://www.vinavu.com/2011/02/01/on-tn-fieshermen-killings/ […]

  4. நமது கிருத்துவ பாதிரியார்களை இலங்கைக்கு அனுப்பினால் உண்மை தெரிந்துவிடும். அவர்கள் தமிழ்நாடு/யாழ்/சிங்கள் மீனவர்களுடன் மதத்தால் உரையாடமுடியும். போரின் பின் மனசாந்திக்கென அவர்களை கொடூரன் நாட்டினுள் அனுமதிக்கலாம். மீனவர்கள் பெரும்பாலும் கிருத்துவத்தை பின்பற்றுபவர்கள். நாமே களத்தில் இறங்கினால்தான் உண்டு. நாம் எப்போது, எதற்கு முறையிட்டாலும் மறைவில் இருப்பது இந்திய பூதமே!. இந்திய‍ – இல‌ங்கை கூட்டு ரோந்து என்பது கொடுங்கோலனின் நெடுநாள் கனவு. இவ்விரு நாடுகளும் சேர்ந்து அமைதிபடை அமைத்து தமிழர்களை கொன்றதுபோதும். அமைதிப்படை, அதிரடிப்படை எல்லாம் மனித உரிமை மீறலை அரசுகளின் அனுமதியோடு நடத்துபவை. மீனவப்பெண்கள் நிம்மதியாக இருக்கவேண்டுமெனில், இந்திய -இலங்கை கூட்டுகளவாணித்தனம் முளைவிடும்போதே கிள்ளி எறியப்படவேண்டும். கடற்படையும், கடலோர காவல்படையும் மீனவர்கள் கொல்லப்படும்போது கை‍கட்டி ஏன்டா வேடிக்கைபார்த்ததுன்னா, கூட்டுபடையமைக்கனுமாம் கூட்டுப்பட.

  5. மீனவர்களுக்குள் சண்டை என்பது வேறு; தமிழக மீனவர்களை ராணுவம் கொல்வதென்பது வேறு. பழவேற்காடு தாண்டிவிட்டால் அல்லது உள்ளே வந்துவிட்டால் தமிழக மீனவர்களுக்கும் ஆந்திர மீனவர்களுக்கும் என்பது போலச் சண்டைதான் இலங்கை-தமிழ் மீனவர்கள் சண்டையும். வலைகள் கிழிபடுவதும், அறுபடுவதும் இரு தரப்புகளிலும் நிகழ்கின்றன. இன் நிகழ்வுகள் தொடர்ந்து கொண்டேதானிருக்கும்.

    ஆனால் எந்த மீனவன் இன்னொரு எல்லை தாண்டி வந்த மீனவனை கழுத்தில் கயிறு கட்டித் தூக்கிலுடிகிறான் / துப்பாகி ஏந்துகிறான்?
    இணையப் போராட்டங்களிலும் வீதியில் வந்து போராடுவதும் சிங்கள ராணுவ அதிகாரங்களைக் குறித்தும், நம் நாட்டு ராணுவத்தின் கையாலாகாத் தனத்தைக் குறித்தும்தான்.

    வலையறுபடும் மீனவர்கள் இன்று சண்டை போடுவார்கள்; நாளையே ஒன்றாகச் சேர்ந்து நடுக்கடலிலேயே மீன் வறுத்து உணபார்கள்!

    • புதிய பாமரன் அரசுகள் கூட அப்படித்தான். ஆனால் இந்த அரசுகளால் வதை படும் மக்களை வறுத்துத் தின்று விடுகிறார்கள்.

  6. மீனவர்கள் கடல் மேல் வாய்க்கால், வரம்புசண்டை போட்டார்கள், வலையை அறுத்தார்கள் என்பதெல்லாம் உண்மைதான். ஆனால் அதை பேசித்தீர்த்துக்கொள்ளவேண்டியவர்களும் அவர்களே.

    அது ஒருபுறமிருக்க, நிருபமா ராவுடன் டக்ளஸ் பேசியது ஏதோ ஈழத்தின் மீனவர்கள் மேல் அவருக்கு புதிதாய் பாசம் பொத்துக்கொண்டு வருவது போல் ஓர் தோற்றத்தை கொடுக்கிறது. சிங்கள அரசும் அதே பல்லவியைத்தான் பாடுகிறது. வடபகுதி மீனவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்று மிகவும் கவலைப்படுகிறார்களாம்.

    ஆனால், மயிலிட்டி மீனவர்களை தசாப்தங்களாக அடித்து விரட்டிவிட்டு, இன்றுவரை அவர்களை ஏன் மீன் பிடிக்க அனுமதிப்பதில்லை என்று இவர்களை கேட்க ஆளில்லை.

    மொத்தத்தில், இப்போ மீனவர்களுக்கு பொது எதிரி யார் என்பதை தெரிந்து தெளிவடைவதே நன்று.

    தமிழக மீனவர்களின் உயிர்களை காப்பாற்ற தற்போது எடுக்கப்படும் முயற்சிகள் பாராட்டப்பட வேண்டியவையே. இருந்தாலும் ஆறுகோடிப் பேரில் எத்தனை பேரை இது சென்றடையும் என்றெல்லாம் சொல்லத்தெரியவில்லை.

    எப்படியோ, தமிழக மீனவர்களை காப்பாற்றுவதிலாவது வெற்றி கிட்டட்டும்.

    • ரதி..

      ///அது ஒருபுறமிருக்க, நிருபமா ராவுடன் டக்ளஸ் பேசியது ஏதோ ஈழத்தின் மீனவர்கள் மேல் அவருக்கு புதிதாய் பாசம் பொத்துக்கொண்டு வருவது போல் ஓர் தோற்றத்தை கொடுக்கிறது. சிங்கள அரசும் அதே பல்லவியைத்தான் பாடுகிறது. வடபகுதி மீனவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்று மிகவும் கவலைப்படுகிறார்களாம்.

      ஆனால், மயிலிட்டி மீனவர்களை தசாப்தங்களாக அடித்து விரட்டிவிட்டு, இன்றுவரை அவர்களை ஏன் மீன் பிடிக்க அனுமதிப்பதில்லை என்று இவர்களை கேட்க ஆளில்லை. ///

      மயிலிட்டி மீனவர்களை மட்டுமல்ல… இலங்கைத்தீவின் பல மீனவக்கிராமங்களின் நிலையே இதுதான். இலங்கை மீனவர்கள் காலங்காலமாகக் கழுத்தறுக்கப்படும்போது இப்போது திடீரென அவர்களில் காட்டப்படுகிற பாசத்தை இலங்கை இராணுவத்தை நியாயப்படுத்தும் அயோக்கியத்தனமான முயற்சியாகவும், இந்திய ஊடகவெளியில் எழுந்திருக்கிற எழுச்சிக்கான ஒரு எதிர் விளைவாகவுமே பார்க்கக்கூடியதாய் இருக்கிறது.

      • கிருத்திகன் நீங்கள் சொல்றது சரிதான். நான் மயிலிட்டி என்று குறிப்பிட்டு சொல்லக்காரணம்…. நல்லா யோசிச்சுப்பாருங்கோ மயிலிட்டி… காங்கேசன் துறை, அப்பிடியே பலாலி என்று போகிறது. பலாலி விமானத்தளம் யாரால் புதுப்பிக்கப்பட்டது. யார் அங்கே காலூன்றி நிற்க ஆசைப்படுவது. காங்கேசன்துறையில் என்ன நடக்குது? காங்கேசன் துறையில் resort கட்டப்பட்டிருப்பதாக படித்திருக்கிறேன். Resort கட்டலாமாம். ஆனால், அந்த மண்ணுக்கு சொந்தக்காரன் அங்கே வாழவோ, மீன்பிடிக்கவோ அனுமதியில்லை.

        http://www.tamilnet.com/art.html?catid=13&artid=32744

        மொத்தத்தில் அந்த கரையோரம் இப்போ முழுக்க, முழுக்க உயர் பாதுகாப்பு வலயம்.

  7. //இவைகளை முன்னெடுக்கும் இந்திய அரசும், நீண்டகால அரசியல் நோக்கில் மீனவர்களை இராமேஸ்வரத்தில் இருந்து அப்புறப்படுத்த நினைக்கும் இலங்கையும்தான் இரு நாட்டு மீனவ மக்களின் எதிரிகளே தவிர கொலை செய்யப்பட்டவனையே எதிரியாகச் சித்தரிப்பது இன்னுமொரு அயோக்கியத்தனமல்லவா? //

    Though there could be conflicts between fishermen, the navy should not kill them. And the Indian Govt is deaf to their cries. There is definitely an element of inavaatham in this issue – no doubt.

    These people are just trying to divert this. I agree with you.

  8. “மீண்டும் ஒரு போராட்டம் ஈழத்தில் வேர் விடாத படி அதன் அஸ்திவாரங்களில் ஒன்றாக பாம்பன் பகுதியை தங்களின் இராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதும், தனியார் – தாராளமயத்திற்காக கடலையும் கரையோரங்களையும் பன்னாட்டு, உள்நாட்டு முதலாளிகளுக்கு தாரை வார்க்கவும், இன்னும் பல்வேறு காரணங்களுக்காய் இந்திய, இலங்கை அரசுகளின் இந்த கூட்டுக்கொலை இராமேஸ்வரத்தில் நடத்தப்படுகிறது.”

    தெளிவானப் பார்வை.

    காட்டு வேட்டை என்ற பெயரில் இந்தியாவில் பழங்குடி மக்கள் மீது இந்திய அரசு தொடுத்திருக்கும் யுத்தத்திற்கு இணையானது தமிழக மீனவர்கள் மீதான இலங்கை அரசின் தாக்குதல்.

    இரண்டையுமே ஐ.நா மன்றமும் ஜனநாயகம் பேசும் சர்வதேச நாடுகளும் வேடிக்கைதான் பார்க்கின்றன.

    வடக்கே நடக்கும் படுகொலைகளை நாம் வேடிக்கை பார்ப்பது போல தெற்கே நடக்கும் படுகொலைகளை அவர்கள் வேடிக்கை பார்க்கிறார்கள். யாரை நொந்து கொள்வது?

    ஒடுக்கப்படும் மக்கள் ஒன்றிணைந்து போராடாத வரை படுகொலைகள் ஓயப்போவதில்லை.

  9. //இந்த அப்பாவி மீனவரை தன்னைப் போன்ற ஒரு ஒடுக்கப்பட்ட இனமான தமிழக மீனவர்களுக்கு எதிராகப் பேசத் தூண்டிய சக்தி எது?/

    “இந்திய மீனவர்களின் இழுவை வலைகளைத்தான் நாங்கள் எதிர்க்கிறோம், சாதாரண மீன்பிடி படகுகளை அல்ல” என்று ஜாஃப்னா பல்கலைகழக பேராசிரியர் சூசை தெரிவித்ததாக கீழே உள்ள சுட்டி கட்டுரையாளர் கூறுகிறார்.

    http://www.southasiaanalysis.org/papers44/paper4304.html

    மேலும் இழுவை வலைகளை பயன்படுத்துவதை ஓராண்டுக்குள் படிப்படியாக நிறுத்திவிடுவதாக இந்திய மீனவர்கள் இலங்கை மீனவர்களுடன் சென்ற ஆகஸ்ட் மாதம் ஒப்பந்தம் செய்து கொண்டதாக கூறும் செய்தி இதோ. இந்த ஒப்பந்தப்படி வருடத்தில் 9½ மாதம் மட்டுமே மீன் பிடிப்பதற்கும், வாரம் இரு நாட்கள் வீதம் மொத்தம் 70 நாட்கள் மட்டுமே மீன் பிடிக்க முடியும்.

    http://www.colombopage.com/archive_10B/Aug25_1282717710CH.php

    தமிழக மீனவர்களின் படுகொலைகளை எந்த காரணங்களை கொண்டும் நியாயப்படுத்த முடியாது. ஆனால் மொழியால், தொழிலால் ஒன்று பட்டிருந்தாலும், தமிழக மீனவர்களின் நலன்களும் இலங்கை மீனவர்களின் நலன்களும் ஒன்றுக்கொன்று முரணானதுதான். இருக்கிற 50 கிலோமீட்டர் அகலத்தில் இருவரும் மீன் பிடித்தாக வேண்டிய கட்டாயம் இருக்கும் போது பிரச்சினைகள் வருவதில் வியப்பொன்றூமில்லை.

    இருநாட்டு மீனவர்களுக்கிடையே மோதல் என்ற கதை என்பதை “சதிக்கதை” என்று அலட்சியம் செய்து விடாது, தீர விசாரித்து உண்மையை வெளியிட வேண்டும். அரசியல் லாபத்துக்காக மீனவர்களின் வாழ்வோடு விளையாடாமல் இந்த பிரச்சனையில் அரசு உறுதி காட்ட வேண்டும்.

    • Ram Kameswaran

      அய்யா ராம் காமேச்வரரே சிறு கட்டுமரங்களை மட்டுமல்ல இழுவைப் படகுகளைக் கூட நீங்கள் தடுக்க முடியாது தடுக்கவும் கூடாது. வர்க்கப் பார்வையில் படகுகளுக்கும் கட்டுமரக்காரர்களுக்குமான முரண்களை பிடித்துக் கொண்டு அதை மீனவர் முரணாக சித்தரிக்க முயலாதீர்கள்.

      // மேலும் இழுவை வலைகளை பயன்படுத்துவதை ஓராண்டுக்குள் படிப்படியாக நிறுத்திவிடுவதாக இந்திய மீனவர்கள் இலங்கை மீனவர்களுடன் சென்ற ஆகஸ்ட் மாதம் ஒப்பந்தம் செய்து கொண்டதாக கூறும் செய்தி இதோ. இந்த ஒப்பந்தப்படி வருடத்தில் 9½ மாதம் மட்டுமே மீன் பிடிப்பதற்கும், வாரம் இரு நாட்கள் வீதம் மொத்தம் 70 நாட்கள் மட்டுமே மீன் பிடிக்க முடியும்.// தெரியும் இப்படித்தான் பேசுவீர்கள் என்று உங்களுக்காகத்தான் இந்த லிங்கே இதை கொஞ்சம் படியுங்காள்.
      ((இலங்கை : இராமேஸ்வரம் மீனவர் சந்திப்பு நடப்பது என்ன? – அகில். http://inioru.com/?p=16420 ) பேச்சு வார்த்தை என்ன? சட்ட ரீதியானது சட்டத்திற்கு அப்பாற்பட்டதா? கேரளாவைச் சார்ந்த விவேகானந்தன் என்கிற என்.ஜீ. ஓ- வாவால் முன்னெடுக்கப்பட்ட பேச்சு வார்த்தையை எங்கள் மீனவ மக்கள் எப்போதோ நிராகரித்து விட்டார்கள். ஒப்பந்தமாவது வெங்காயமாவது?
      சரி இரு நாட்டு மீனவர்களுக்கிடையிலான மோதல் என்பதும் அதனால் இக்கொலைகள் நடக்கிறது என்பதும் எப்போதிருந்து. முன்னர் புலிகள் கொன்றார்கள் என்றீர்கள். இப்போது கோஷ்டி மோதலால் நடக்கிறது என்கிறார்கள்.

  10. வினவு உட்பட தமிழ்நாட்டு பத்திரிகைகள் அவசியமில்லாமல் இன விரோதங்களை தூண்டாமல் இருந்தால் அதுவே போதும். காமாலைக் கண்ணனுக்கு கண்டதெல்லாம் மஞ்சள். சிங்களவன், கெட்டவன் என்று சதா தம்பட்டம் அடிப்பதே இந்த தூத்தேறிகள் செய்யும் தொழில். நாட்டில் நடக்கும் ஒவ்வொரு குற்றத்துக்கும் அதன் தலைவர்களை பொறுப்பு ஆக்குவது முட்டாள்த்தனம். இரண்டு அரசுகளும் முடிந்தளவு இப்படி துயர சம்பவங்கள் இடம்பெறாமல் பார்த்துக்கொள்ள முயலவேண்டுமே தவிர, எல்லாம் மன்மோகன் சிங்கின் தூண்டுதலில் நடக்கிறது அல்லது ராஜபக்சையின் மேற்பார்வையில் செய்யப்படுகிறது என்று “ரீல்” விடுவதை நிறுத்துங்கள். மக்களின் “உணர்ச்சியை ” தூண்டிவிட்டு கூத்து பார்க்கிற இணையங்களோ, பத்திரிகைகளோ கொடுங்கோல் அரசுகளை விட ஆபத்தானவை.

    • சிரஞ்சீவி, முதலில் கட்டுரையின் சாராம்சத்தை உள்வாங்கிவிட்டு அப்புறம் எழுதுங்கள். கட்டுரையின் எந்த இடத்தில் இன விரோதத்தை தூண்டும் விதத்தில் உள்ளது? தேசிப இன மக்களின் இயல்பான ஒற்றுமை உணர்வு பன்னாட்டு ஏகபோகத்திற்காக இந்திய, சிங்கள அரசுகளால் எவ்வாறு தூண்டிவிடப்படுகிறது என்பதைத்தானே கட்டுரை சுட்டிக்காட்டுகிறது!

    • இந்தச் சந்திப்பில் ஈபிடியிபின் செயலரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவும் கலந்து கொண்டார்.இதன்போது டக்ளஸ் தேவானந்தா,”சுமார் 30 ஆண்டு காலப் போருக்குப் பின்னர் வடக்கில் இப்போது தான் மீனவர்கள் சுதந்திரமாக தொழில் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இந்த நிலையில் அவர்கள் இந்திய மீனவர்களின் இழுவைப் படகுகளினால் பாரிய பிரச்சினைகளுக்கு உள்ளாகியுள்ளனர்.இந்தியாவின் கடல் எல்லைக்குட்பட்ட வளங்களை அழித்தொழித்து விட்டு இழுவைப்படகுகள் இப்போது சிறிலங்கா கடற்பகுதிகளிலுள்ள வளங்களை அழித்து வருவது மட்டுமன்றி எமது மீனவர்களின் வலைகளை பாரிய அளவில் சேதமாக்கியும் அச்சுறுத்தியும் வருகின்றன.இதற்கு விரைவாக முடிவு காணப்படுவது அவசியம்.இருதரப்பினரும் சந்தித்து தமது பிரச்சினைகளை பரிமாறிக் கலந்துரையாடுவதன் மூலம் இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும்” என்று கூறியுள்ளார்.// இப்போது தெரிகிறதா? இக்கட்டுரையின் நோக்கம்.

    • 1. ஒரு முறை அல்ல இரு முறை அல்ல, இது வரை ராமேஸ்வரக் கடற் கிராமங்களில் 500கும் மேல், இலங்கை ராணுவத்தால், துயர சம்பவங்கள் நடந்தேறிவிட்டன. தமிழகத்து தலைவர்களோ அல்லது அரசியல்வாதிகளோ இறக்கப்படவும் தயங்குகின்றனர். நமது கடற்படை கைகட்டி மௌனம் காக்கிறது.

      2. இந்திய ராணுவம் ஒரேயொரு மீனவனைக் கொன்றதாகவோ அல்லது தமிழக மீனவன் இன்னொரு மீனவனைக் கொன்றதாகவோ எந்த ஒரு புகாரும் இலங்கையிடமிருந்து இதுவரையில்லை.

      3. அதே சமயம் இந்திய ராணுவம் இலங்கை மீனவர்களை கொல்லவேண்டுமென்பதும் எவருடைய ஆவலாகவும் இருக்கப் போவதில்லை.

      4. இந்த சூழ் நிலையில், வினவு போன்றவர்களோ அல்லது மீனவர்களுக்காக குரல் எழுப்புகிறவர்களோ, ‘ரீல்’ விடாமல், உணர்ச்சிகளைத் தூண்டிவிடாமல், பதறாமல் இருந்து எந்த விதத்தில் போராடவேண்டும் அல்லது எடுத்துக் கூற வேண்டும் என்பதை, திரு. சிரஞ்சீவி அவர்களே, எங்களுக்கு விளக்கி வழி காட்டுங்கள். திக்குத் தெரியாமல் தவிக்கிறோம்.

      5. நானோ, திரு. சிரஞ்சீவியோ, வினவோ, எவராயிருந்தாலும் மீனவனின் உயிருக்கு மதிப்புக் கொடுப்பவராயிருப்போமென்று நினைக்கிறேன்.!

  11. தமிழக மீனவர் பிரச்சனையில் அரசியல் ஆதாயங்களுக்காக அவரவர் தரப்பு வாதங்களை அவரவர் சொல்லிக்கொண்டு மீனவர்களின் பொது எதிரிகளை மூடி மறைத்து வருவதோடு, மீனவர்களுக்கிடையிலே பிளவை ஏற்படுத்தும் சதித்தனங்களை புரிந்துகொள்ள முடியாமல் ஒரு குறுகிய இனவாதக் கண்ணோட்டத்திற்கு பலியாகும் எவருக்கும் இக்கட்டுரை ஒரு தொலை நோக்கிலான பொது எதிரிகளின் படி நிலையை அடையாளம் காட்டி தேசிய அடையாளங்களைக் கடந்து மீனவர்கள் ஒன்றிணைந்து போராட வேண்டிய அவசியத்தை உணர்த்துவதாக உள்ளது. இந்தக் கண்ணோட்டத்தைக் கண்டுதான் அரசு மட்டுமல்ல, இனவாதிகளும் அஞ்சுகின்றனர்.

  12. “கொல்லப்பட்ட மீனவர்களுக்கும், கொலை செய்யும் இலங்கை கடற்படைக்குமான பிரச்சனையை இந்திய, ஈழ மீனவர்களுக்கிடையிலான பிரச்சனையாக ஹிந்து ராம், பேராசிரியர் சூரியநாராயணன் போன்றவர்கள் பிரச்சாரம் செய்கின்றனர்.”

    பிளவுபடுத்தலை அழகாகச் செய்கிறார்கள். அரசுகளின் சூழ்ச்சியை சாதாரண மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். முதலாளித்துவ, பிராந்திய வல்லாதிக்க நலன்களுக்காக எவ்வளவு மலினமாகவும் இறங்கிவிட முடிகிறது இவர்களால்.

  13. தமிழக மீனவர் படுகொலைக்கு எதிராக இந்திய அரசு மொன்னைத்தனமான பதில்களை மட்டும் சொல்லிக்கொண்டு ,கண் துடைப்பு நாடகஙளை நடத்திக் கொண்டிருப்பது ஏன்?கருணானிதியும் ஒப்புக்குச் சப்பாணியாக மத்திய அரசுக்கு ஜால்ராப் போடுவதும் ஏன்?கடல் வளத்தை பன்னாட்டு நிறுவனஙகளுக்குக் காவு கொடுப்பதும் இலங்கையின் மீது இந்திய அரசின் விரிவாக்கக் கொள்கையும் தான்.இயல்பாகவே இந்திய அரசுக்கு தமிழர்கள் மீது இருந்துவரும் வெறுப்புணர்ச்சி,அதனை ஆழப்படுத்தும் வகையில் தமிழக ஓட்டுப் பொறுக்கிக் கட்சிகள் காங்கிரசுக்கு மாறி மாறிக் காவடி தூக்குவதும் தான்.தமிழ் மக்கள் இதை உணரவேண்டும்.

  14. [obscured] ராஜஹரன் அங்கம் வகிக்கும் , தமிழ் இன துரோகிகளின் அறிக்கை:

    இந்திய மீனவர்களை அழித்த, இலங்கை மீனவர்களை அழிக்க முனையும் கடற் கொள்ளையை நிறுத்து! அதை ஆதரிப்பதை நிறுத்து!!

    புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

    இலங்கை வடகடலில் இந்திய மீனவர்களின் கைதுக்கு எதிரான போராட்டங்கள், இலங்கையின் இறையாண்மையை மட்டுமின்றி அங்கு வாழும் மக்களின் உரிமையையும் கூட மறுக்கின்றது.

    இந்திய விஸ்தரிப்புவாதிகளும், தமிழக குறுந்தேசியவாதிகளும் இலங்கை மீனவர்களின் வாழ்வையே மறுத்து நிற்கின்றனர். எல்லையும் கடந்து கடல் வளத்தை அழிக்கின்ற அடாவடித்தனத்தை, அது நியாயப்படுத்துகின்றது. தமிழ் தேசியமும், இடது வேஷம் போட்ட தேசியவாதமும், இதற்கு பின்னால் நின்று குடை பிடிக்கின்றன. இந்த நிலையில் இலங்கை மீனவர்கள் அரசியல் அனாதைகளாகி, பேரினவாதத்திடமே தமக்கான நியாயத்தை கோருகின்ற அவலம்.

    யுத்தம் முடிந்து இருவருடங்களாகும் இன்றைய நிலையில், இலங்கை தமிழ் மீனவர்களின் நிலையில் எந்த மாற்றமுமில்லை. கிழக்கு மற்றும் தென் தமிழ் கரையோர பிரதேசக் கடல்வளம் சர்வதேச மீன்பிடிக் குத்தகைக்காரர்களான சீனர்கள், ஜப்பானியர்களாலும், உள்ளுர் அரசுசார் கிரிமினல்களாலும் சுரண்டப்படுகிறது. யுத்தத்தாலும், சுனாமியாலும், இயற்கை அனர்த்தங்களாலும் மீன்பிடிசார் சமூகம் பொருளாதார வறுமைக்குள் தள்ளப்பட்டுள்ளது.

    பாரியளவில் இனவழிப்பு யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மீனவர் சமூகம், இன்று இந்திய இழுவைப்படகுகளின் நாசகார மீன்பிடிமுறையால் சூறையாடப்படுகின்றனர். தேசத்தின் மீன்வளத்தை அத்துமீறி திருடுவது மட்டுமல்லாமல், மீன்வள வளர்ச்சிக்கு ஆதாரமான கடலடித்தள வளங்களையும் இந்திய இழுவைப்படகுகள் நாசப்படுத்துகின்றது. இதைத் தட்டிக் கேட்பாரின்றி நியாயப்படுத்தப்படுகின்றது.

    அத்துடன் ஏதிலிகளாக, யுத்தத்தின் பின்னும், இலங்கை அரசின் கொடும் முகாம்களிலிருந்து ஊர் திரும்பிய மீனவர் சமுதாயம் சிறுகச் சிறுக முதலிட்டு உருவாக்கிய மீன்பிடி உபகரணங்களையும், வலைகளையும் கூட கடற்கொள்ளையர்கள் அழித்தொழிக்கின்றனர். இவர்கள் தமிழக மீனவர்கள் போர்வையில், கடல் கொள்ளையில் ஈடுபடும் மூலதனமாகும்;.

    உலக அளவில் ஐந்தாவது பெரிய மீன்பிடித்திறனை கொண்ட இந்த இந்திய இழுவைப்படகுகள், தமது எல்லைக்குட்பட்ட கரையோர வளங்களை அழித்தது. இதன் மூலம் தன்சொந்த கரையோர சிறு மீன்பிடித் தொழிலாளர்களை பட்டினியாக்கி விட்டு, இன்று துளிர்க்க முயலும் எம் மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் அவர்களிடமிருந்து பறிக்கின்றது.

    இந்நிலைக்கெதிராக குரல் கொடுக்க வேண்டிய தமிழ்சமூகமும், இடதுசாரி இந்திய தோழர்களும், இந்நிலையை தமிழனுக்கும் சிங்களவனுக்கும் இடையிலான இன முரண்பாடாக சித்தரித்துக் காட்ட முயல்கின்றனர். இதன் அடிப்படையில், இலங்கை மீனவர்களை பலியிட்டு குறுகிய இனமுரண்பாட்டை மேலும் கூர்மையடையச் செய்கின்றனர். இதற்கு அவர்கள் சொல்லும் காரணம்;, இலங்கை இராணுவம் இந்திய மீனவர்களை கொல்கின்றதென்பதாகும். கொலைகள் நிறுத்தப்படவேண்டுமென்பதில் எமக்கு எந்தவித மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை. இதில் முரண்பாடும் இல்லை. அதேவேளை இலங்கை இராணுவம், இனவெறி இராணுவம் என்பதிலும் முரண்பாடில்லை.

    ஆனால் கொலைகளின் மறுபுறத்தில் இழுவைப் படகுகளால் நடாத்தப்படும் நாசகார மீன்பிடியும், அதனால் பாதிக்கப்படும் இலங்கை மீனவர் வாழ் நிலையையும், இக் கொலைகளைக் காட்டியே மூடிமறைக்கின்றனர். இந்திய அரசும், இந்தியாவை ஆளும் கட்சிகளும் இந்திய மூலதனத்தின் விஸ்தரிப்புவாதக் கொள்கைக்கு ஏற்ப பயன்படுத்துவதும், இதன் பின்னணியில் தான் அரங்கேறுகின்றது.

    இதன் அடிப்படையில் நாம் :

    இலங்கை அரசே!

     இலங்கையில் தடை செய்யப்பட்ட மீன்பிடி உபகரணம் மூலம் மீன்பிடியில் ஈடுபடுபவர்களின் (இந்திய வள்ளம் உள்பட) வள்ளங்களை முடக்கு!!
     அதன் உரிமையாளர் மீது சட்ட நடவடிக்கை எடு!!
     கூலிக்கு வந்தவர்களை உடன் விடுதலை செய்!!!
     பிராந்திய மீன்பிடி மேலாதிக்கம் செலுத்தும் சீனாவுக்கும், ஜப்பானுக்கும் வளங்கப்ப்பட்ட மீன்பிடி அனுமதியை உடனே நிறுத்து!!!
     கிழக்கு மற்றும் தென் இலங்கை மீன்பிடியை புனருத்தாரணம் செய்!!
     இறந்த தமிழக மீனவர்களுக்கும், இந்தியாவில் அத்துமீறி அழிந்த மீன்பிடி உபகரணங்களுக்கான நஷ்டஈடு வழங்கு!!

    இந்திய அரசே!

     பாக்குநீரிணையில் இழுவைப்படகு மீன்பிடியை உடனே தடை செய்!!
     இலங்கை தமிழ் மீனவர்களுக்கு அவர்களின் அழிந்து போன மீன்பிடி உபகரணங்களுகான நஷ்டஈடு வழங்கு!!

    இலங்கை அரசே! இந்திய அரசே!!

     மீனவர் கொலையை சர்வதேச மட்டத்தில் ஆராய ஆவன செய்!!!
     பாக்குநீரிணையின் இருகரையிலும் கரையோர மீன்பிடியை அபிவிருத்தி செய்!! அதை பாதுகாக்கும் மீன்பிடிக் கொள்கையை வை!!!

    • அறிக்கையிலே குறிப்பாக என்ன “தமிழ் இனத் துரோகத்” தவறு உள்ளது என்று சொன்னால் நன்றாயிருக்கும்.

      பெரிய ட்றாலர் உடைமையாளர்கட்கும் (அவர்களது சட்ட விரோத மீன்பிடிப்பிற்கும்) சிறு படகுகளில் மீன்பிடிக்கும் மீனவர்கட்கும் (அவர்கள் சூழலின் கட்டாயத்தால் எல்லை கடப்பதற்கும்) பெரும் வேறுபாடுண்டு.

      1974 இந்திய-இலங்கை உடன்படிக்கையால் ஏழை மீனவர்கள் இரு தரப்பிலும் பாதிக்கப் பட்டனர்.
      கடல் எல்லை கடக்கக் கூடாது என்பது ஏழை மீனவர்களுக்கு ஏற்புடைய ஒரு சட்டமல்ல. (பெரும் படகுக்காரர்கள் மீனின அழிவுக்கும் காரணமானவர்கள் என்பதும் முக்கியகனது. அவர்கள் மீண் வளத்தை கொள்ளையடிப்பதை ஏற்க இயலாது).
      அதையும் இந்த அறிக்கை கவனித்திருக்கலாம்.

      அறிக்கை அரச படைகளின் வன்முறையை கண்டித்துள்ளமையும் கவனிக்கத்தக்கது.

      இது வெறும் இனப் பிரச்சனை அல்ல, வர்க்கப் பரிமாணமும் உடையது.

      • //கடல் எல்லை கடக்கக் கூடாது என்பது ஏழை மீனவர்களுக்கு ஏற்புடைய ஒரு சட்டமல்ல. (பெரும் படகுக்காரர்கள் மீனின அழிவுக்கும் காரணமானவர்கள் என்பதும் முக்கியகனது. அவர்கள் மீண் வளத்தை கொள்ளையடிப்பதை ஏற்க இயலாது).
        அதையும் இந்த அறிக்கை கவனித்திருக்கலாம்./

        அறிக்கை சுட்டிக் காட்டும் பிரச்சினைகள் உண்மையானவைதாம். ஆனால் அவற்றை இலங்கை இறையாண்மை என்ற போதி மூட்டையின் பின் வைத்து சொல்லுவது ஏன்? ஒரு அடிப்படையான விசயத்தை மறந்துவிட்டு பேசுவதுதான் இவ்வாறு பார்ப்பதற்கு ஏதுவாகிறது. 40 கிலோ மீட்டரே உள்ள சிறு பிராந்தியத்தை நம்பி 2 லட்சத்திற்கும் அதிகமான மீனவர்கள் உள்ளனர்(இரு நாடுகளிலும் சேர்த்து, தோராயமாக) என்பதும் இரு நாட்டு மீனவர்களுமே பாரம்பரியமாக அந்தப் பகுதியில் மீன் பிடிக்கிறார்கள் என்பதும், எல்லைகள், இறையாண்மை போன்றவையெல்லாம் இந்திய-இலங்கை ஒப்பந்தத்திற்கு பிறகான விசயம் எனப்தையும், மீன்வர்களுக்கு அவை ஒரு பொருட்டல்ல என்பதையும் ஏன் தோழர் ராயகரன் உள்ளிட்ட இலங்கை மார்க்ஸியர்கள் கவனிக்கத் தவறுகிறார்கள்?

        இனத் துரோகிகள் என்று தோழர் ராயகரனை குறிப்பிட்டுள்ளதைப் பொறுத்தவரை, வர்க்க அரசியல் பேசுபவன் இனத் துரோகியாகத்தான் இருக்க முடியும். மார்க்ஸிய பேசுபவன் இனத் துரோகியாகத்தான் இருக்க முடியும். ஏனேனில் சொந்த இனத்தின் ஒடுக்கும் வர்க்கத்தை அவன் எதிர்க்கிறான். எனவே, ரயாகரன் உள்ளிட்ட என்னைப் போன்ற மார்க்ஸியர்கள் இனத் துரோகி என்று பட்டம் வாங்குவதில் சிறிது பெருமிதமே கொள்கிறோம்.

        ஆயினும், ராயகரன் முன் வைக்கும் மையமான வாதங்களில் ஒன்று அந்த 45 கிலோமிட்டர் அகலத்தில் இலங்கையாண்டை இருக்கின்ற 30 கிலோ மீட்டர் பரப்பில் ஈழப் போர் காரணமாக சில பத்தாண்டுகளாக மீன் வளம் அழிக்கப்படாமல் இருந்துள்ளதாம், இந்த காலத்தில் இந்திய மீனவர்கள் தமது வளத்தை அழித்துவிட்டு இலங்கை பரப்பிலும் தமது சுரண்டலை விரிவுபடுத்தத் தொடங்கினர், இப்போது போர் முடிவுற்ற நிலையில் இலங்கை மீனவர்கள் தமது க்டற்பரப்பின் மீதான உரிமை கோரும் போது முரன்பாடு எழுகிறது என்கிறார். மேலும், இந்தியப் பரப்பில் அழிவு ஏற்படுத்திய தமிழக மீனவர்களை, இலங்கை மீனவர்கள் எதிர்ப்பதொன்றும் ஆச்சர்யமில்லை என்கிறார் ராயகரனும் பல்வேறு இலங்கை மார்க்ஸியர்களும்-கலையரசன் உள்ளிட்டு.

        முரன்பாடு இருப்பது உண்மைதான். அது இருக்கும் என்பதும் உண்மைதான் (கேரளா-தமிழக, ஆந்திரா-தமிழக மீனவர், தமிழகத்திலேயே மீனவக் குப்பங்களிடையேயான முரன்பாடுகள் போன்றதே அது). அதுவல்ல இங்கு பிரச்சினை. இதனை மீறி இங்கு வேறு சில அரசியல் சக்திகள் செயல்படுகின்றனவே அவற்றின் நோக்கங்கள் வினையாற்றுகின்றனவே அதுதான் இங்கு முன்னெழுகின்றது.

        இதனையொட்டி சில கேள்விகள் எழுகின்றன,

        1/ இத்தனை ஆண்டுகள் வடகிழக்கு இலங்கையின் வளம் குறிப்பாக மன்னார் முதல் யாழ் வரையான பாக் சல சந்தியின் இலங்கைப் பகுதி வளம் இந்திய மீனவர்களால் அழிபடாமல் எப்படியிருந்தது? (இலங்கை மார்க்ஸியர்கள் சொல்வது படி இந்திய மீனவர்கள் யுத்த சூழலின் அனுகூலத்தில் அங்கு வெகு காலமாக மீன் பிடிக்கிறார்கள் எனில் அங்கும் அழிவு ஏற்பட்டிருக்க வேண்டுமே?)

        2/ சேது சமுத்திரம்-பாக் சல சந்தியின் இலங்கைப் பகுதி, இந்தியப் பகுதியின் மீன் வளப் பகிர்மானம், கடல் மண் படுகை என்ன வகைப்பட்டதாக உள்ளது? ஏனேனில் யாழ் குடாப் பகுதி மற்றும் கச்சத் தீவு பகுதிகள் மீன் பிடிப்புக்கு மிக அனுகூலமான இடங்களாகச் சொல்லப்படுகின்றன.

        3/ தமிழக மீனவர்கள் இரட்டை மீன் வலை (இங்கும் தடை செய்யப்பட்டதுதான்) உபயோகித்து சுரண்டுகிறார்கள் சரி. இதனை எதிர்க்கும் இலங்கை மீன்வர்கள் என்னவிதமானதை செய்யப் போகிறார்கள்? தற்போதைய இலங்கை அரசின் மீன் வளத் துறையின் திட்டங்கள், கொள்கைகளை நோக்கும் பொழுது அவை இன்னும் அபாயகரமான சுரண்டலை இந்தக் கடற்பரப்பில் கட்டவிழ்த்தும் விடும் நோக்கில் இருப்பது தெரிகிறதே?

        4/ இந்தப் பக்கம் தமிழக மீனவர்களின் சுரண்டல் என கை காட்டி விட்டு அந்தப் பக்கம் கேரின் நிறுவனத்தின் (இந்திய அரசு நிறுவனமான ஓ என் ஜி சி-ன் நிறுவனம்) எண்ணைய் கிணறு தோண்டும் திட்டத்தை மன்னாரில் எதிர்ப்பின்றி செய்து வருகிறதே இலங்கை அரசு? இந்தத் திட்டம் உருவாக்க இருக்கும் பாரிய கடற் அழிவல்லவா இங்கு முக்கியமானது? இதே போன்று வட கிழக்கு இலங்கையின் மீன் வளத்தை ஏற்றுமதிக்கானதாக சுரண்ட பெரும் அளவில் அமெரிக்க, சீன, ஜப்பான நிதியுதவி கொட்டப்பட்டு வருகிறதே இலங்கையில். இவை சிறு மீனவ்ர்களை வாழ வைக்குமா அல்லது ஓட விரட்டுமா?

        5/ ஒருவேளை இந்திரா காந்தி இலங்கை அரசுடன் போட்ட ஒப்பந்த்தத்தை தலைகீழாக மாற்றி தற்போதைய இலங்கை மீன்வருக்கான கடற் பரப்பு உரிமை தமிழக மீனவருக்கு வழங்கப்படுமானால் ரயாகரன் போன்றோர் அப்போதும் இறையாண்மைப் பிரச்சினையின் ஊடாக இதனை பார்ப்பார்களா? அப்படிப் பார்த்தால் அது இலங்கை மீன்வருக்கு பாதகமாக போய்விடாது? சர்வதேச சட்ட வரையறைகளின்படி தற்போதைய எல்லைப் பிரிப்பு ஒரு கேலிக்கூத்து என்பது தோழர் ரயாகரனுக்கு தெரியவில்லையா?

        விசயம் என்னவென்றால், இலங்கை – தமிழக சிறு மீன்வர்களின் பொருளாதார நலன் முதலாளித்துவ பொருளாதார நலன்களுடன் பின்னிப் பிணைக்கப்பட்டுவிட்டது. இந்த முரன்பாடு உருவாக்கும் போட்டிச் சூழலே இங்கு இலங்கை-தமிழக மீனவர் மோதலாக உருவெடுக்கிறது. உண்மையில் 45 கிலோமீட்டர் அகலமே உள்ள இந்த கடற்துண்டில் இரு தரப்பு மீனவர்களுக்குமே உரிமை உண்டு என்ப்தை அங்கீகரிப்பதில் இருந்தும், இவர்களின் முரன்பாட்டுக்குக் காரணமான பொது எதிரிகள்தான் முதன்மையாக எதிர்க்கப்பட வேண்டியவர்கள் என்ற பொது அரசியல் நோக்கிலிருந்துதாம்தான் இந்தப் பிரச்சினையை அணுக இயலும். இதை விடுத்து சிங்கள இன வெறி அரசின், இந்திய விரிவாக்க அரசின் பிரச்சாரத்திற்கு பலியாகியதாகவே இலங்கை மார்க்ஸியர்களின் நோக்குநிலை உள்ளது.

        • இந்த துண்டுப்பிரசுரத்தினை வெளியிட்டது புதிய ஜனநாயக மக்கள் முன்னணி என்னும் அமைப்பு. இந்த அமைப்பில் நானும் ஒரு உறுப்பினர். இதே போல் இராயாகரனும் மேலும் பலரும் உறுப்பினர்களாக உள்ளோம். உங்கள் விமர்சனங்களை பு.ஜ.ம.மு. இனை நோக்கி வைப்பதே மிகவும் சரியானதாக இருக்கும். உங்கள் விமர்சனங்களையும் தோழமையினையும் வரவேற்கின்றேன்..

  15. எனது குறிப்பு ரயாகரன் தொகுத்தளித்த கோரிக்கைகளின் அடிப்படையிலானது. குறிப்பான ஒவ்வொரு வாதத்தையும் விவாதிக்கவோ அது பற்றிக் கருத்துரைக்கவோ இது வசதியான இடமல்ல.
    அதினும் முக்கியமாக, அதன் சாராம்சத்தையும் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளின் பெறுமதியையும் அவற்றின் ஏற்புடைமையையும் முதலில் மதிப்பிடுவோம்.

    பெரிய மீன்பிடிப் படகுகள் செயற்படும் முறைக்கும் சிறியவை செயற்படும் முறைக்கும் பெரும் வேறுபாடுண்டு.
    பெரும் படகுகள் பயன்படுத்துகிற வலைகள் மீன்வளத்தை அழிப்பது பற்றிய கவலை ஆழ்கடல் மீன்வளம் தொடர்பாகவும் பலகாலமாக எழுப்பப்பட்டுவந்தது.

    ரயாகரன் எழுப்புகிற பிரச்சனையில் முக்கியமானது பெரும் மீன்பிடி முதலாளிகளதும் பன்னாட்டு மீன்பிடி நிறுவனங்களதும் செயற்பாடு பற்றிய எதிர்ப்பே.
    பெரும் படகுகள் வரும் வரை கடல் எல்லைகள் பிரிக்கப்படாத காலத்தில், இப் பிராந்தியத்தில், மீனவரிடையே நாடு, இனம் சார்ந்த மோதல்கள் இருக்கவில்லை.
    ஆனாற் கடந்த 20-25 ஆண்டுகளில் இலங்கை மீனவர்கள் பல முறை இந்தியப் பெரும் படகுகள் பற்றி எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

    “… 45 கிலோமீட்டர் அகலமே உள்ள இந்த கடற்துண்டில் இரு தரப்பு மீனவர்களுக்குமே உரிமை உண்டு என்பதை அங்கீகரிப்பதில் இருந்தும், இவர்களின் முரண்பாட்டுக்குக் காரணமான பொது எதிரிகள்தான் முதன்மையாக எதிர்க்கப்பட வேண்டியவர்கள் …”
    என்ற கருத்தில் எனக்கு ஒரு மறுப்புமில்லை. பெரும் படகுகள் இத்துணை சிறிய பரப்பில் கட்டுப்பாடின்றி இயங்கும் போது சிறு அளவில் மீன்பிடிப்போர் பாதிக்கப் படுகின்றனர். அது தான் பிரச்சனை.

    1974இன் கடல் எல்லை உடன்படிக்கைக்கு முந்திய நிலைமைகள், குறிப்பிட்ட அளவுக்கு உட்பட்ட படகுகட்கும் குறிப்பிட்ட வகையான மீன்பிடித் தொழில் நுட்பங்களுக்குக் கட்டுப்பாடற்ற மீன்பிடி உரிமைகளுடனும் பிறவற்றுக்கு இரு நாடுகளிடையிலுமான உடன்பாட்டின் அடிப்படையிலான கட்டுப்பாடுகளுடனும் பேணப்படுவது தான் மீனவ உழைப்பாளிகள் அனைவருக்கும் நல்ல தீர்வு.

    நாம் ராஜபக்ச ஆட்சியை எதிர்ப்பதால் இந்திய மேலாதிக்கத்தினதும் எகாதிபத்தியதினதும் குறுக்கீட்டையோ சூறையாடலையோ ஏற்க இயலாது.

  16. புதிய ஜனநாயக மக்கள் முன்னணியின் மீனவர் விவகாரம் குறித்து வெளியிடப்பட்ட பிரசுரத்திலுள்ள கோரிக்கைகள் பற்றிய விவாதத்தில் தங்களது கருத்துக்களை முன்வைக்கும் அனைவரினதும் கவனத்திற்கு

    இப்பிரசுரத்திலுள்ள கருத்துக்கள் கோரிக்கைகள் யாவும் புதிய ஜனநாயக மக்கள் முன்னணி என்ற ஸ்தாபத்தினுடையவை என்றவாறு பார்க்கப்படல் வேண்டும். அவ்வாறே அவை விவாதிக்கப்படலும் வேண்டும். ஒரு குறிப்பிட்ட நபருடைய தனிநடவடிக்கை என பார்க்கப்படலாகாது என புதிய ஜனநாயக மக்கள் முன்னணி இத்தால் வேண்டுதல் விடுக்கின்றது.

    இதுபோன்ற தவறுகளை முன்னரும் நாங்கள் எதிர்கொண்டபோதும் எதிர்காலத்தில் இவ்வாறான புதிய தவறுகளை விவாதங்களில் தவிர்ப்பீர்கள் என புதிய ஜனநாயக மக்கள் முன்னணி தோழமையுடன் எதிர்பார்க்கின்றது.

    புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

    • பு ஜ ம மு,
      மன்னிக்கவும்.
      ரயாகரனுடைய கூற்று என அறிமுகப்படுத்தப் பட்டதால் அவ்வாறு குறிப்பிட்டு எதிர்வினையாற்றினேன்.
      கருத்துக்கள் அறிக்கை பற்றியனவே ஒழிய ஆக்கியோர் பற்றியனவல்ல.

  17. வினவு, அசுரன், மற்றும் தமிழக தோழர்களிற்கு
    அரசுகள், பெருமுதலாளிகள், பன்னாட்டுமுதலாளிகள் சார்பாக குறுந்தேசியம் பேசும் சக்திகள் தெரிந்தோ, தெரியாமலோ பேசுகின்ற போது ஏழை சிறுமீனவர்களினதும், இயற்கையினதும் சார்பாக புதிய ஜனநாயக மக்கள் முன்ணணி குரல் கொடுக்கின்றது.
    இலங்கை பாசிச அரசின் தமிழக மீனவர்கள் கொலையை அறிக்கை கண்டிக்கிறது. தமிழ்நாட்டு பெருமுதலாளிகள் இந்தியகடற்கரைகளை சுரண்டி முடித்து விட்டு இலங்கைகரைகளிற்கு சுரண்ட வருவதையே அறிக்கை எதிர்க்கின்றது. இதை புரிந்து கொள்ளுவதற்கு தோழர்களிற்கு என்ன குழப்பம் என்று எனக்கு விளங்கவில்லை.

  18. “வினவு, அசுரன், மற்றும் தமிழக தோழர்களிற்கு” என்று ஏன் எல்லாரையும் வம்புக்கு இழுக்கிறிர்கள்?

    யாருடனும் முரண்படுவதற்கு யாருக்கும் ஒரு குழப்பமும் இருக்கத் தேவையில்லை.
    ஒவ்வொருவரும் தன் தன் வசம் உள்ள தகவல்களின் அடிப்படையில் கருத்துரைக்கிறார்.
    நண்பர்களது தவறான தகவல்களை திருத்துவது எதிரியுடனான முரண்பாட்டைக் கையாள்வது போன்ற செயலல்லவே.
    நமக்கு வேண்டியன சிறுபிள்ளைத்தனமான பட்டிமன்றங்களல்லவே!

    அசுரனின் கேள்விகளுக்கு நிதானமாக விளக்கககப் பதில் சொல்ல இயலாதென்றால், ஒரு உடன்பாடுமே அற்றவர்களை எவ்வாறு வென்றெடுக்க எண்ணுகிறிர்கள்?

    மக்கள் சார்ந்த ஒரு பிரச்சனை பற்றிய இவ் விவாததைப் பகைமையான திசையில் கொண்டு செல்லாமல் ஆளுக்காள் நியாயங்களை விளக்கிக் கலந்துரையாடுவது அதிகம் பயனுள்ளது.

  19. இந்திய படகுகளால் இலங்கை மீனவர்களின் வலைகள் அறுக்கபடுவது என்பது ஒரு சாதாரண நிகழ்வு அல்ல.மீன்பிடித்துறையில் வட இலங்கை மீனவர்களை விட , இந்திய மீனவர்களின் உபகரண சக்தி அபரிமிதமானது. இந்திய மீனவர்களுக்கு தம் வாழ்விற்கு எங்கு மீன் பிடிப்பது என்பதுதான் பிரச்சனை. இலங்கை மீனவர்களுக்கோ வாழ்வதே பிரச்சனை. யாரோ ஒரு சில நபர்களின் தவறுகளால் இரு சமுதாயத்திற்கும்மிடையே பிளவுகள் வந்துவிடக்கூடாது. இரு தரப்பின் பிரதிநிதிகளும் தங்களுக்குள் உடன்பாட்டிற்கு வரவேண்டும். அதை இதய சுத்தியோடு கடைப்பிடிக்கவேண்டும். நான் இந்தியாவிற்கு அகதியாக சென்றநேரம், கச்ச தீவருகே படகு பழுதடைந்து தத்தளித்த நேரம், “கெடந்து சாவுங்கடா இலங்கை தே— நாய்ங்களா” என்று கைவிட்டு போனவனும் இராமேஸ்வரம் மீனவன்தான். பின்பு எங்களை காப்பாற்றியவனும் ஒரு இராமேஸ்வரம் மீனவன்தான். ஊரு இரண்டுபட்டால் கூத்தாடிகளுக்கு கொண்டாட்டம் ஆகிவிடக்கூடாது இந்த பிரச்சனை.

  20. சிவசேகரம் அவர்கட்கு, நான் இங்கே பட்டிமன்றம் நடத்த வரவில்லை. இங்கு விவாதத்தில் கலந்து கொண்ட எல்லோரையும் விளித்தே எனது கருத்தை சொன்னேன். நான் சொல்வதை மற்றவர்கள் கேட்டே தீர வேண்டும் என்ற தொனி எங்கே இருக்கிறது என்று தயை கூர்ந்து தாங்கள் சுட்டி காட்டினால் என்னை திருத்திக் கொள்வேன்.
    வினவு. தமிழின துரோகி ரஜாகரன் என்பதை வெட்டாமல் அப்படியே வெளிவிட்டது. ஆனால் எனது முதலாவது பின்னோட்டத்தில் நான் கீழ்கண்டவாறு எழுதியதை வினவு வெளியிடவில்லை. எதிர்புரட்சிகர, பாசிச புலிகளின் பினாமி அமைப்பான பிரித்தானிய தமிழர் பேரவையினருடன் உறவாடும் இனியொருவின் கட்டுரையை வாசிக்க சொல்லி வினவு குறிப்பிட்டது நல்ல நகைச்சுவை என்று எழுதியிருந்தேன். புதியஜனநாயத்தில் எத்தனையோ கட்டுரைகளில் புலிகளை பாசிஸ்டுக்கள் என்று எழுதியிருக்கிறீர்கள். இனியொரு பிரித்தானிய தமிழர் பேரவை ஸ்கந்தாவை, இலங்கை புதிய ஜனநாயககட்சியின் தம்பையாவின் கூட்டத்திற்கு பேச அழைத்தது. எனவே யாரும் பேசாப்பொருளை நான் இங்கு பேசியதாக வினவு கருதி வெட்டியது ஏன் என்று அறிய ஆவலாக உள்ளேன். தாங்கள் இலங்கை மீனவர்களின் பிரச்சனைகளை அறிய வேண்டுமாயின் மணலை மைந்தன் தமிழரங்கத்தில் எழுதும் கட்டுரைகளை வாசிக்கவும். கடல்தொழிலாளியின் குரல் அது.
    Reply

    Forward

  21. ‘ “நான் சொல்வதை மற்றவர்கள் கேட்டே தீர வேண்டும்” என்ற தொனி எங்கே இருக்கிறது? ‘
    நீங்கள் அந்தத் தொனியில் எழுதியதாக எங்கே சொன்னேன்?

    “வினவு, அசுரன், மற்றும் தமிழக தோழர்களிற்கு……
    ……இதை புரிந்து கொள்ளுவதற்கு தோழர்களிற்கு என்ன குழப்பம் என்று எனக்கு விளங்கவில்லை.”

    ஒருவரின் இடுகையை வைத்து, எல்லாரும் ‘உங்கள் அமைப்பின் நிலைப்பாட்டுடன்’ முரண்படுவது போலல்லவா எழுதியுள்ளிர்கள்.
    இது தேவையா என்பதே என் கேள்வி.
    இது பயனற்ற பட்டிமன்றமாக மாறாதிருப்பது நன்று என்பது தான் என் விருப்பம் ஏனெனில் இது எல்லாரும் ஒரு பொது உடன்பாடு காண வேண்டிய பிரச்சனை.
    நீங்கள் சொன்னது சரியானது என்று நீங்கள் நம்பினால், அது பற்றி மேலும் தொடரமல் உங்களுக்கு என் நல் வாழ்த்துக்களுடன் விடை பெறுகிறேன்.

    வினவு என் மீதான தனிப்பட்ட தாக்குதல்களைக் கூடத்தான் வெளியிட்டுள்ளது.
    வலிந்து பிழை பிடிப்பதையும் தனிப்பட்ட தாக்குதல்களையுமே அரசியலாகக் கொண்ட இணையத்தளங்கள் உங்களுக்கு அருகிலேயே உள்ளன.
    உங்களால் எதுவும் செய்ய இயலுமா? என்னால் என்னவும் செய்ய இயலுமா?
    அப்படியான விடயங்களைப் புறக்கணிப்பது தகும்.
    தனிப்பட்ட தாக்குதல்களை நாம் ஒவ்வொருவரும் தவிர்த்தாலே விடயச் சார்பாகப், பேசலாம்.

    பொதுப்பட விஷயச் சார்பற்ற, தேவையற்ற எந்தச் சொல்லும் பயனுள்ள உரையாடலுக்கு உதவாது.

  22. ஐநா பொருளதர ஆய்வரிக்கை 2012 படி இந்திய கடல் தொழிலின் மதிப்பு ஆண்டிர்க்கு 50 லக்சம் கோடி

    இது ஆல் கடல் மீன் பிடிப்பு இல்லாமல் ஏன் என்ரால் இதை செய்வது பன்ணாட்டு கம்பனிகள் அது 55

    லக்சம் கோடி, இந்த கோடி கோடியை கூட்டு கொள்ளை அடிக்க இந்திய மற்றும் இலங்கை

    அரசியல்வாதிகள் , பண முதலைகள் இனைந்து செயல்படுதபடும் நாடகம் லக்க்ஷோப லக்சம்

    மீனவர்களின் வாழ்வாதாரத்தை பிடுங்குவது

    • வலுவான ஆதாரத்திற்கு நன்றி!மகேந்திரன் அவர்களே.

      இதற்கு இந்தியரசிடம் நவீனகப்பல்கள் அதற்கான பணங்கள் எம்மிடம் இல்லையென கூசாமல் பதில் சொல்வார்கள்.

      அம்பானியிடம் இருக்கும் சொத்துபணம் பாக்குநீரினை தண்ணீரை மூடிமறைப்பதற்கு கப்பல்கள் நிறுத்துவதற்கு போதுமானது.

      நரேந்திரமோடி தனது தேர்தல்பிரச்சாரத்தில் “தான் ஆட்சிக்கு வந்தால் வெளிநாட்டுகளில் பதுக்கி வைத்திருக்கும் அத்தனை பணத்தையும் இந்தியாவுக்கு கொண்டு வருவேன்” என உறுதியளித்தார்.

      இந்த வாக்குறுதி என்னவாயிற்று என்பது தெரியவில்லை.

      இந்த கறுப்புபணங்களை இந்தியமீனவர்களின் தொழில் ஆதாரங்களுக்கு பயன் படுத்தவேண்டுமென மீனவர்சங்கங்கள் கோரிக்கை வைக்கமுடியும்.

      தமிழ்நாட்டில் இருந்து கறுப்புபணமாக வெளிநாடுகளுக்கு போன பணம் அதுதமிழ்நாட்டுக்கே உரியது.தமிழ்நாட்டு மீனவர்சங்கம் தமது வாழ்வாதரத்தை மேம்படுத்துவதற்காக கோரிக்கை வைக்க முடியும். அதற்கு அவர்கள் உரிமை உள்ளவர்களே!.

      ஆனால் தேர்தல் வாக்குறுதிகள் தேர்தலுடன் அறுதியாவது போல இதையும் அப்படிதான் எண்ணவேண்டியுள்ளது.

      கறுப்புப்பணத்திலும் லஞ்சம் காண்பதே முதலாளித்துவம்.

Leave a Reply to inioru பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க