Monday, September 16, 2024
முகப்புகலைகவிதைஉயிர்த்தெழு!

உயிர்த்தெழு!

-

மெளனத்தை உடை.உயிர்த்தெழு
மர உதடு திற
பேசு !

பூமியின் புன்னகையை
மீட்டுத் தரும்
வேட்கையோடு
முன்முளைத்த மரபுகளை
முறித்தெறியும் வேகத்தோடு
பேசு !

கலைகளின்
ஒப்பனைகளைக் கழற்றி
நிகழ்வின் காயங்களை
வலியின் கனத்தோடு
விவரி !

பூவெறிந்து
பாவெறிந்து
கண்ணீர் எறிந்து
கற்களைக் கரைக்கும்
முயற்சியைத் துற.

அர்த்தங்களின்
அடர்த்தி குறையாத
ஆவேசத்தோடு
வீசு சொற்களை!
வேர்வரை விழட்டும்
மடமைகள்

இயல்களைத்
தெரிந்து கொள்.
இசங்களைப்
புரிந்து கொள்
பேசு!

சீழ்பிடித்த
சிகரங்களின் உள்ளழுக்கை
உண்மை விரல்களால்
தொடு
முகவரிகளின்
அக வரிகளை ஆய்வு செய்

உன்னை
இயல்பாய் வெளிப்படுத்து
பேசு!

ஞானவெறி கொள்!
ஞாலவெளி பற.

____________________________

– தீபன் , புதிய கலாச்சாரம், மே 2000
____________________________

வினவுடன் இணையுங்கள்

  1. உயிர்த்தெழு !…

    மெளனத்தை உடை.உயிர்த்தெழு, மர உதடு திற,பேசு ! பூமியின் புன்னகையை மீட்டுத் தரும் வேட்கையோடு.. முன்முளைத்த மரபுகளை முறித்தெறியும் வேகத்தோடு பேசு !…

  2. மரபுகளை முறிப்பேன்;
    நிகழ்வின் காயங்களை
    வலியால் விவரிப்பேன்;
    ஆவேச சொற்களை வீசுவேன்;
    இயல் இசங்களைத் தெரிந்து பேசுவேன்.

    நீ சொன்ன அனைத்தும் செய்யப்படும் –
    “கற்களைக் கரைக்கும்
    முயற்சியைத் துற”
    என்பதைத் தவிர்த்து.

    ஏனென்றால்
    இங்கே ஜாதி மதக் கற்களும்
    மடமைக் கற்களும்
    கரைகப்படக் காத்திருக்கின்றன.

    ஒன்றும் தெரியாததுபோல,
    கல் போல பாசாங்கு செய்யும்
    உயிருள்ள கற்கள்
    உதைபடக் காத்திருக்கின்றன.

    கற்களைக் கரைக்கும் முயற்சி
    இங்கே அதீதமாகத் தேவைப்படுகிறது
    என் தோழனே…!
    ஆதலால்
    கற்களையும் கரைப்போம்!

  3. வினவு,
    தோழர் தீபனின் கவிதை வரிகளுக்கிடையில் வரும் “.. .. ..” கவிதையை புரிந்து கொள்வதில் தடுமாற்றம் ஏற்படுத்துகிறது.’சனிக்கிழமை கவிதைகள் – 5’ல் சரியாக உள்ளது.

    இந்த குழப்பமான ‘கவிதை வரிப் பிரித்தலால்’ நான் ஏற்கெனவே அனுப்பிய பின்னூட்டம் தவறென்று நினைக்கிறேன். தோழர் தீபனின் அனைத்து கவிதை வரிகளுக்கும் உடன்படுகிறேன்.

    குழப்புகிற புள்ளிகளை நீக்கிவிடவும்.

  4. தோழர் தீபனின் புகைப்படம் புதிய கலாச்சாரத்திலோ அல்லது புதிய சனநாயகத்திலோ பிரசுரமானது இன்னமும் நினைவில் உள்ளது.கவிதையை பதிவிட்டமைக்கு வினவிற்கு நன்றி..

  5. தோழர் தீபன் இன்று உயிருடன் இல்லை என்ற வலி இக்கவிதையைப் படிக்கும் நேரத்தில் கனக்கிறது. தீபன் போன்ற ஒரு கவிஞர் இனி எப்போது?

  6. கவிதையை படித்ததும், தான் கொண்டிருந்த புரட்சிகர இலட்சியத்திற்கு, கடைசி வரை வேலை செய்த தோழர் தீபன் குறித்தான நினைவுகள் எழுகின்றன.

  7. நன்றி வினவு… எனது நாவலுக்கு பெயர் வைக்க நீண்ட நாட்களாக சிந்தித்துக்கொண்டு இருந்தேன்…வாழ்வில் சிலையாக போனவன் மீண்டு வரும் கதை…. புத்துயிர் என்று வைக்க ஆசைப்பட்டாளும் அது லியோ டால்ஸ்டாய் அவர்களின் நாவலின் பெயர் அது…வேறு பெயர் சிந்தித்த தருணத்தில் “உயிர்தெழு” பிடிபட்டது.. அந்த பெயரை கூகிளிட்டபோது இந்த வினவு கவிதை கட்டுரை கிடைத்தது.என் கதையின் கருவும் வாழ்வில் விழுந்து கிடந்தவன் இந்த கவிதை போன்றே எழுந்து வரும் நிலையில் தான் முடிகிறது. இந்த கவிதையை வெளியிட்ட வினவுக்கும் எழுதிய தோழர் தீபன் அவர்களுக்கு மிக்க நன்றி…

  8. உலகில் இன்று இல்லாத தோழருக்கு நன்றி சொல்லியுள்ளேன்… பின்னுட்டங்கள் மூலம் அவரை நாம் இழந்ததை அறிகின்றேன். ஆனாலும் முகமறியா அந்த தோழனுக்கு தான் என் நாவலை நினைவாக கொண்டு வரனும் என்று முடிவுக்கு வந்துவிட்டேன். முடிந்தால் தோழரின் படத்தை அவரை பற்றிய குறிப்புகளுடன் வினவில் வெளியிடுங்கள் வினவு.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க