privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்சி.பி.ஐ - சி.பி.எம்தளியில் இளிக்கும் போலிக் கம்யூனிஸ்டுகளின் சந்தர்ப்பவாதம்!

தளியில் இளிக்கும் போலிக் கம்யூனிஸ்டுகளின் சந்தர்ப்பவாதம்!

-

திண்டுக்கல் சி.பி.எம் வேட்பாளர் பாலபாரதியின் சொத்து மதிப்பு வெறும் ஒரு இலட்சம்தான் என்று சி.பி.எம் தோழர்கள் தங்கள் கட்சியின் எளிமையை ஆடம்பரமான அ.தி.மு.க கூட்டணிக்குள் இருந்து கொண்டு கடை விரிக்கிறார்கள். கொள்வார்தான் யாருமில்லை.

திருப்பூரின் தி.மு.க வேட்பாளர் கோவிந்தசாமி சென்ற தேர்தலில் சி.பி.எம் சார்பில் வெற்றி பெற்றார். திருப்பூரில் இவர் வளைத்திருக்கும் சொத்துக்கள் குறித்து உடன்பிறப்புகளே அசந்து போனதால்தான் அய்யாவுக்கு ஒரு பணக்காரர் கட்சியில் சீட்டு கிடைத்திருக்கிறது. கோவிந்தசாமி ஏராளமான சொத்து சேர்த்ததாகட்டும், இல்லை முதலாளிகளுக்கு ஆதரவாக அமைச்சரிடம் சூட்கேஸ் கொடுத்தாக இருக்கட்டும் அப்போதெல்லாம் சி.பி.எம் கட்சி இவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பின்னர் கருணாநிதிக்கு பாராட்டு விழா எடுக்கப் போகிறார் என்றதும்தான் வேறு வழியின்றி கட்சியை விட்டு வெளியேற்றியது.

பாலபாரதி போன்ற காந்திய எளிமைக்காரர்கள் இருக்கும் கட்சிதான் கோவிந்தசாமிகளையும் உருவாக்குகிறது. எனில் இந்த எளிமை தனிநபர் சம்பந்தப்பட்டதா, இல்லை கட்சி உருவாக்குவதா? கேரள முதலமைச்சர் அச்சுதானந்தன் கூட சொத்துக்கள் இல்லை என்றுதான் மனு தாக்கல் செய்திருக்கிறார். ஆனால் சி.பி.எம் மாநில செயலாளர் பினரயி விஜயன் லாட்டரி அதிபர் மார்ட்டினிடம் கட்சிக்காக ஆட்டையைப் போடவில்லையா? இந்த மார்ட்டின்தான் கருணாநிதிக்கு ஐம்பது இலட்சம் கொடுத்து கதை வசனம் எழுதி வாங்கி இளைஞன் படத்தை எடுத்து வெளியிட்டிருக்கிறார். கேரளாவில் சி.பி.எம் கட்சியின் சொத்து மதிப்பு மட்டும் சில ஆயிரம் கோடிகளைத் தாண்டிவிட்டது.

எளிமையான கட்சி என்றால் இந்த கோடி மதிப்பில் உள்ள சொத்து எதற்கு? மக்களைத் திரட்டி புரட்சி செய்யப்போவதில்லை என்று உறுதியாயிருக்கும் கட்சி சொத்துக்களை திரட்டி செட்டிலாவதில் வியப்பொன்றுமில்லை. இவர்கள் இன்னமும் கம்யூனிச நாடாக அங்கீகரிக்கும் சீனத்தின் கம்யூனிஸ்டுக் கட்சியில் சீனத்து டாடா, பிர்லா, அம்பானிகளெல்லாம் உறுப்பினர்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இந்த உண்மை தெரியாததால்தான் அதியமான் போன்ற முதலாளித்துவ கடுங்கோட்பாட்டுவாதிகள் கம்யூனிசத்தை எதிர்க்கிறார்கள். யாராவது அதற்குரிய சுட்டிகளை அளித்தால் அண்ணன் அதியமான் நாளை முதல் சி.பி.எம் கட்சியில் சேருவது உறுதி. எத்தனை நாளைக்குத்தான் விலை போகாத லிபரேட்டிரியனாக தனிமையில் வாட முடியும்?

போலிக் கம்யூனிஸ்டு கட்சிகளில் நிரூபன் சக்கரவர்த்தி போன்ற எளியவர்களும், கோவிந்தசாமி போன்ற வலியவர்களும் சேர்ந்து செயல்பட முடியும் என்பதுதான் முக்கியமானது. ஓட்டுக் கட்சி அரசியலில் மூழ்கி எல்லா சந்தர்ப்பவாதங்களையும் கற்றுத் தேர்ந்த கட்சியில் இனியும் எதற்கு அந்த எளிமை சென்டிமெண்ட்?

சரி, இனி இந்த தேர்தல் தளியில் அளித்திருக்கும் ஒரு சந்தர்ப்பவாதத்தின் கதையை பார்ப்போம்.

கிருஷ்ணகிரி மாவட்டம் தளி தொகுதியில் சென்ற சட்டமன்ற தேர்தலில் சி.பி.ஐ கட்சியின் வேட்பாளராக போட்டியிட்டவர் நாகராஜ் ரெட்டி. தமிழகத்தில் சாதிப்பெயர் போடும் வழக்கம் எப்போதோ ஒழிந்தாலும் சமத்துவம் பேசும் போலிக் கம்யூனிஸ்டுகள் மட்டும் இன்னும் அதை விடவில்லை. கிடக்கட்டும். இந்த நாகராஜ் ரெட்டிக்கு தொகுதி போனதால் ஏமாற்றம் அடைந்த சி.பி.எம் கட்சியைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர் சுயேச்சையாக போட்டியிட்டு 2,500 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியடைகிறார்.

அப்போது சி.பி.எம், சி.பி.ஐ இரண்டும் தி.மு.க கூட்டணியில்தான் இருந்தன. காங்கிரசு கட்சியில்தான் சீட்டு கிடைக்காத நாட்டாமைகள் போட்டி வேட்பாளராக மல்லுக்கட்டுவது வழக்கம். இந்தத் தேர்தலிலும் அதையே பார்க்கிறோம். ஆனால் போலிகளும் இதற்கு விதிவிலக்கு அல்ல. கட்சி முடிவு செய்ததை மீறி போட்டிட்டு வெற்றிபெறும் அளவுக்கு அவர் தனிப்பட்ட சாதி, வர்க்க செல்வாக்கோடு அந்த தொகுதியில் இருந்திருக்கிறார் என்பது தெரிகிறது. இதனால் தர்மசங்கடத்திற்கு ஆளான சி.பி.எம் கட்சி அந்த ராமச்சந்திரனை கட்சியிலிருந்து நீக்கி விடுகிறது.

சரி, அத்தோடு அந்த ராமச்சந்திரனது கம்யூனிஸ்ட்டு நாடக வாழ்க்கை முடிவுக்கு வந்ததா என்றால் இல்லை. இந்த ராமச்சந்திரன் சுயேட்சை வேட்பாளராகவே வெற்றி பெறுமளவு செல்வாக்கு கொண்டவர் என்பதால் சி.பி.ஐ கட்சி இவரை சேர்த்துக் கொண்டது. இது தி.மு.க, அ.தி.மு.க இரண்டிலும் மாறி மாறி சேரும் பெருச்சாளிகளின் நடவடிக்கைகளுக்கு ஒப்பானது.

இந்த தேர்தலில் தளி தொகுதி சி.பி.ஐ கட்சிக்கு ஒதுக்கப்பட்டு அதன் வேட்பாளராக இதே ராமச்சந்திரன் போட்டியிடுகிறார். தளி தொகுதிக்கு முட்டி மோதி வாய்ப்பு கிடைக்காத நாகராஜ் ரெட்டி காரு தற்போது ராமச்சந்திரனை எப்படியாவது தோற்கடிக்க வேண்டுமென்று அறிவித்திருக்கிறார். இதற்காக மாவட்டம் முழுவதும் சுற்றுப்பிரயாணம் செய்து எதிர்த்து போட்டியிடும் தி.மு.க வேட்பாளரை வெற்றிபெற வைப்போமென சபதமும் ஏற்றிருக்கிறார்.

மேலும் நம்ம ரெட்டிகாரு ஒரு குண்டை தூக்கி போட்டிருக்கிறார். தளி சீட்டை ஐம்பது இலட்ச ரூபாய்க்கு தா.பாண்டியனும், மகேந்திரனும் (சி.பி.ஐ தலைவர்கள்) விற்றுவிட்டதாக குற்றம் சாட்டியிருக்கிறார். உடனே போயஸ் தோட்டத்து பூசாரி தா.பாண்டியன் ரெட்டியை கட்டம் கட்டி கட்சியை விட்டு நீக்கி விட்டார். மேலும் ஐம்பது இலட்சம் ரூபாய் மேட்டருக்காக அவதூறு வழக்கு போடப்போவதாகவும் சும்மா ஒரு பேச்சுக்கு அறிவித்திருக்கிறார்.

நாகராஜ் ரெட்டி ஏதோ ஒரு சாதாரண பொறுப்பில் உள்ளவர் அல்ல. கம்யூனிஸ்டு கட்சிகளில் ஒருவர் உறுப்பினராக வேண்டுமென்றால் தேர்வு நிலைக்காலம், பயிற்சிக்காலம் எல்லாம் முடித்து விட்டுத்தான் ஆக முடியும். அதனால் ஒரு தோழர் மாவட்ட செயலாளராக வர வேண்டுமென்றால் அவர் பல சுற்று நிலைகளை முடித்து விட்டுத்தான் வரமுடியும். அப்படிப்பட்டவர் தா.பாண்டியன் ஐம்பது இலட்சத்திற்கு தொகுதியை விற்று விட்டார் என்று சொன்னால் அது சாதாரணமானதில்லையே?

சரி ஒரு வேளை தொகுதி இவருக்கு கிடைத்திருந்தால் எவ்வளவு தொகை  கொடுத்திருப்பாரோ தெரியாது. ஒருவேளை இவருக்கு பேரம் படியவில்லையோ தெரியவில்லை. கூட்டிக் கழித்து பார்த்தால் இது கம்யூனிஸ்டு கட்சியா, இல்லை வேட்டியை கிழிக்கும் தமிழக காங்கிரசு கட்சியா என்று உங்களுக்கு தோன்றலாம். ஆனால் நம்ம தோழர்களுக்கு தோன்றவில்லையே?

தேர்தல் பாதையில் சீரழிந்து எல்லா சந்தர்ப்பவாதங்களையும் அணிந்து கொண்டு போலிக் கம்யூனிஸ்டுகள் இன்னமும் தங்களை கம்யூனிஸ்டு கட்சி என்று அறிவித்துக் கொள்வதுதான் கொடுமையிலும் கொடுமை. இன்னமும் மக்களை நேசித்து, புரட்சியை நெஞ்சிலேந்தி வாழ்வதில் உண்மையாக இருக்கும் தோழர்கள் இந்த போலிக் கம்யூனிஸ்டுகட்சிகளிலிருந்து வெளியேறி புரட்சிகர கட்சிகளில் சேர வேண்டும். தேர்தல் பாதை திருடர் பாதை என்பதை அவர்கள் இன்னமும் உணரவில்லை என்றால் அவர்களும் கூட்டணி தலைவி புரட்சித் தலைவயின் தலைமையில் புர்ரரச்சி செய்ய வேண்டியதுதான். வரலாறு பழித்துரைக்கும் தோழர்களே, முடிவெடுங்கள்!