Friday, May 2, 2025
முகப்புசெய்திசச்சின் டென்டுல்கரின் 35லட்ச ரூபாய் இரத்தப் புத்தகம்! காறித்துப்புவோம் !!

சச்சின் டென்டுல்கரின் 35லட்ச ரூபாய் இரத்தப் புத்தகம்! காறித்துப்புவோம் !!

-

கிராகன் மீடியா (kraken media) என்ற பிரபலமான ஐரோப்பிய புத்தக வெளியீட்டு  நிறுவனம் சச்சின் டெண்டுல்கரது சுயசரிதையை புத்தகமாக வெளியிடப் போகிறது. இது ஏதோ பத்தோடு ஒன்றாக நினைத்து விடாதீர்கள்.

அரை மீட்டர் குறுக்களவும், 37 கிலோ எடையும் கொண்ட இந்தப் புத்தகத்தில் இதுவரை வெளிவராத சச்சினது குடும்பப் படங்ளும், சுயசரிதை அனுபவங்களும் இடம் பெறுகின்றன. முக்கியமாக சச்சினது இரத்தத்தை கலந்து தயாரிக்கப்பட்ட காகிதக் கூழினால் செய்யப்பட்ட இளஞ்சிவப்பு காகிதம் இந்த நூலில் இடம் பெற்றிருக்கும்.

ரத்தம் கலந்திருக்கும் இந்த விலை மதிக்க முடியாத புத்தகத்தின் விலை ரூ. 35 இலட்சம். மேலும் சச்சினது எச்சிலை பயன்படுத்தி அவரது டி என் ஏ விவரங்கள் சேகரிக்கப்பட்டு அதுவும் இணைப்பாக இந்த புத்தகத்தில் இருக்கும். இந்த சிறப்புகளுக்கு பொருத்தமாக அட்டை தங்கத்தில் ஜொலிக்குமாம்.

இவ்வளவு மதிப்புகளைக் கொண்டிருக்கும் இந்த புத்தகம் மொத்தமாக பத்து பிரதிகளே தயாரிக்கப்படும். அதற்கான ஆர்டரும் முன்பதிவும் முடிந்து விட்டனவாம்.

இந்த வரலாற்று சிறப்பு மிக்க நூலைப்பற்றி கிராகன் மீடியாவின் தலைமை நிர்வாகி கார்ல் ஃபவ்லர் கூறும் போது, “ கிரிக்கெட் இரசிகர்களின் கடவுளாக போற்றப்படும் சச்சினை யாராவது எளிதில் நெருங்க முடியுமா? அதனால்தான் இவ்வளவு அதிக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது ” என்று காரணத்தை பக்தியுடன் விவரிக்கிறார்.

மேலும் “ இந்த புத்தகத்தின் மூலம் கிடைக்கம் பணம் மும்பையில் உள்ள டெண்டுல்கரது அறக்கட்டளை கட்டி வரும் பள்ளிக்கூடத்திற்கு நன்கொடையாக அளிக்கப்படும் ” என்றும் கூறுகிறார். அதனால் இது கொள்ளை என்று யாரும் நினைத்துவிடக்கூடாது. அதாவது சச்சின் தனது இரத்தத்தை விற்று பள்ளிக்கூடம் கட்டுகிறாராம்.

அடுத்து கிடைத்தற்கரிய புத்தகத்தை 35 இலட்சம் கொடுத்து வாங்க முடியாதவர்களுக்காக ஒன்றரை இலட்ச ரூபாயில் இதே புத்தகம் தயாராகிறது. ஆனால் ரத்தம் கலந்த காகிதம் இதில் இருக்காது.

பதிப்புலகில் இத்தகைய மைல்கற்களைக் கொண்டிருக்கும் இந்த புத்தகம் அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெற இருக்கும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் போது வெளியிடப்படுமாம். அதுதானே டெண்டுல்கரது கடைசி உலகக் கோப்பை போட்டி!

மேற்கு வங்கத்தில் நேற்று நடந்த இரயில் விபத்தில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட காயமடைந்த மக்களுக்கு தேவையான இரத்தம் கிடைக்க வில்லை என்பதாக பத்திரிகைகள் எழுதியிருந்தன. இது கேள்விப்பட்டு மற்ற பயணிகளும், அருகாமை ஊர் மக்களும் உடன் ரத்தம் கொடுக்கத்  திரண்டனர்.

ரத்த தானத்தின் அருமையை நாம் இப்படித்தான் கேள்விப்படுகிறோம். அதிக ரத்தப்போக்கினால் பெண்கள் படும் அவலங்களையும் அறிந்திருப்போம். கணிசமான பெண்கள் ரத்த சோகையினால் பாதிக்கப்பட்டிருப்பதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

இப்படி சக மனிதனது இடர் கண்டு கொடுக்கப்படும் இரத்தத்தை சச்சினது புத்தகம் மகா இழிவாக, சுயவிளம்பர வெறிக்காக கேவலப்படுத்துகிறது. ஏன் இரத்தம், எச்சிலோடு முடித்து விட்டார்கள் என்பது தெரியவில்லை. சச்சினது சளி, வியர்வை, விந்து என எல்லாவற்றையும் சேர்த்திருக்கலாமே?

பத்து புத்தகங்களது தொகையான மூன்றரை கோடி ரூபாய் சச்சின் கட்டும் பள்ளிக்குத்தானே போகிறது என்று சிலர் ஆறுதல்படுத்தலாம். ஆனால் டெண்டுல்கரது மூன்று வருடங்களுக்கான விளம்பர ஊதியம் மட்டும் 185 கோடி. இது போக அவரது பந்தய வருமானங்கள், பழைய விளம்பர வருமானங்கள், ஓட்டல் முதலான தொழில் வருமானங்கள் தனி. இப்படி பெரும் முதலாளியாக வாழும் அவருக்கு பள்ளி கட்டுவதற்குகூட தனது இரத்தத்தை காட்டி 3.5 கோடியை வசூலிக்கிறார் என்றால் என்ன பொருள்?

1.5 இலட்ச ரூபாய் புத்தகம் எவ்வவளவு விற்கப் போகிறது என்பது தெரியவில்லை. குறைந்தது 5000 பிரதிகள் என்றால் 75 கோடி ரூபாய் வருகிறது. இதில் பத்து சதவீத ராயல்டி என்றால் சச்சினுக்கு 7.5 கோடி கிடைக்கும். இது போக சுயசரிதை ஒப்பந்தத்திற்கு தனி தொகை. 75 கோடியில் பாதிக்கும் மேல் இலாபம் கிரேகான் நிறுவனத்திற்கு கிடைக்கும்.

இரத்தத்தை காட்டி விளம்பரம் செய்வதற்கு 3.5 கோடி. இலாபம் 30 கோடி.

பாதிக்கும் மேற்பட்ட மக்கள் வறுமைக்கோட்டிற்கு கீழே வாழும் இந்தியாவில்தான் இத்தகைய ஆபாசங்களும் நடைபெறுகின்றன. சினிமாவைப் போல புதிய மதமாக தலையெடுத்திருக்கும்கிரிக்கெட்டின் வீச்சு காரணமாகத்தான் இந்த ஆபாசங்கள் தைரியமாக சந்தைக்கு வருகின்றன. சாமர்த்தியமாக மோசடி செய்து இரசிகனை ஏமாற்றுகின்றன.

டெண்டுல்கரது பவுண்டரிக்கும், சிக்சருக்கும் கைதட்டியவர்கள் சுரணையிருந்தால் இந்த ரத்தப் புத்தகத்தின் மீது காறித் துப்புங்கள்!!