privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபார்வைகேள்வி-பதில்யார் தமிழன்? எவை தமிழர் உணவு? பொதுவுடமை வளர்கிறதா?

யார் தமிழன்? எவை தமிழர் உணவு? பொதுவுடமை வளர்கிறதா?

-

கேள்வி: தமிழன் இன்று எவ்வாறு அறியப்படுகிறான்?

– குரு

அன்புள்ள குரு,

முதலில் தமிழன் என்ற வார்த்தைக்கு இறுக்கமான இலக்கணத்தை வரையறுக்க இயலுமா தெரியவில்லை. பொதுவில் தமிழ்நாட்டில் வாழ்ந்து தமிழை பேசக்கூடியவர்கள்தான் தமிழரென்று நீங்கள் கருதுவீர்கள் என்றால் இன்று தமிழன் என்ற பெயரில் அவன் அறியப்படுவதில்லை. தமிழோடு பல பெயர்கள் சூழலுக்கேற்றவாறு ஒட்டிக் கொண்டுள்ளன.

சன்.டி.வி மெகா சீரியல் பார்க்கும் குடும்பத் தமிழன், கலைஞர் டி.வியின் மானாட மயிலாடவில் லயிக்கும் குதூகலத் தமிழன், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ஐ.பி.எல்லில் இரசிக்கும் லோக்கல் தமிழன், டெண்டுல்கர் சதமடித்தால் ஆர்ப்பரிக்கும் இந்தியத் தமிழன், ராணா படத்துக்காக நா தொ போட்டு காத்திருக்கும் இரசிகத் தமிழன், கமலின் அடுத்த கெட்டப்புக்காக தவம் இருக்கும் உலக சினிமாத் தமிழன், தினமலரின் ஜோசியப் பக்கத்தை காசு கொடுத்து நம்பும் மூடநம்பிக்கைத் தமிழன், சாய்பாபாவுக்காக கண்ணீர் விட்டு அழும் பக்தித் தமிழன், நித்தியானந்தாவுக்கு படம் போட்டு பிரச்சாரம் செய்யும் எழுத்தாளத் தமிழன், பால் தினகரனுக்காக பாக்கெட் மணி அனுப்பும் பரதேசித் தமிழன்,  விசா இல்லாமல் மலேசியா சென்று சிறையில் வாடும் கனவுத் தமிழன், விசாவோடு வளைகுடாவில் முடங்கிப் போன நனவுத் தமிழன், பச்சை அட்டையோடு அமெரிக்காவில் செட்டிலான பணக்காரத் தமிழன், தீக்குச்சி அடுக்கி பீடி சுருட்டும் ஏழை இளையத் தமிழன், பங்குச் சந்தையில் சூதாடி பணம் சேர்த்து முன்னேறும் காரியவாதத் தமிழன், பிசா – பர்கர்- கென்டகி சிக்கனோடு வாழும் சிட்டித் தமிழன், முறுக்கு சட்டியோடு ஆந்திராவுக்கு பிழைக்க போயிருக்கும் வில்லேஜ் தமிழன், தேயிலைத் தோட்டங்களில் பனியால் கருகும் தோட்டத் தமிழன், ஆர்கானிக் டீயைச் சுவைத்தவாறே நட்சத்திர விடுதியில் பிசினஸ் பேசும் முதலாளித் தமிழன், கரும்பலகை இல்லாத பள்ளிக்கூடத்தில் பயிலும் கிராமத்து தமிழன், கணினி – செல்பேசியோடு பள்ளிக்கு செல்லும் பட்டணத்து தமிழன், இலங்கை கப்பற்படையிடம் சிக்காமல் கடலில் தொழில் செய்ய பாடுபடும் மீனவத் தமிழன், ஜெயலலிதாவின் காலில் விழுந்து கிடக்கும் மறத் தமிழன், கருணாநிதி குடும்ப அரசியல் தொழிலை ஏற்றுக் கொள்ளும் உடன்பிறப்புத் தமிழன், சோனியாவிடமும் அடிமைப்பட்டுக் கிடக்கும் வேட்டிக் கிழிப்புத் தமிழன்,

இறுதியாக பதிவுலகில் ‘வட போச்சே’ என்று பின்னூட்டமிடும் வெட்டித் தமிழன், போதுமா?

நன்றி

____________________________________________________________

கேள்வி: நம் நாட்டைப் பொருத்தவரையில் பொதுவுடைமைக் கொள்கை என்பது வளரத் துவங்கியிருக்கிறதா? வளர்ந்து கொண்டிருக்கிறதா? அல்லது வளருமா? ஏனென்றால் பொதுவுடைமைப் பற்றிய போதிய சிந்தனை பொதுமக்களிடம் சென்றடையவில்லை என்பதும் உண்மைதானே?

– இனியவன்

அன்புள்ள இனியவன்,

நம் நாட்டில் பொதுவுடைமைக் கொள்கையின் வளர்ச்சி என்பது பொதுவுடமைக் கட்சிகளின் வளர்ச்சி, தேய்வோடு சம்பந்தப்பட்டது. இடது, வலது கம்யூனிஸ்ட் கட்சிகள் பாராளுமன்ற தேர்தல் சகதியில் விழுந்து புரண்டு சரணடைந்து விட்டார்கள். 1925 முதல் 1960கள் வரை இவர்களே பொதுவுடைமைக் கட்சியென அறியப்பட்டார்கள். முக்கியமாக இந்தியாவின் விசேட சமூக நிலைமைகளை ஆய்வு செய்து எவ்வாறு புரட்சி செய்யப் போகிறோம் என்பதில் சோடை போனார்கள். 47க்கு முன்பிருந்தே காங்கிரசு, காந்தியின் வாலாகவும் செயல்பட்டார்கள். தமது சொந்தக் கொள்கையின் மூலம் மக்களைத் திரட்டமுடியும் என்ற நம்பிக்கை இல்லாது இருந்தார்கள்.

இவர்களுக்கு மாற்றாக இவர்களிடமிருந்தே கிளம்பி இவர்களது திரிபுவாதத்தை தகர்த்தெறிந்து 1960களின் பிற்பகுதியில் எழுந்த நக்சல்பாரிக் கட்சி ஆரம்பத்தில் இழைத்த இடது தீவிரத் தவறுகள் காரணமாக பின்னடைவு கண்டது. பிறகு சில மாநிலங்களில் தவறுகளை திருத்திக் கொண்டு தீவிரமாக செயல்பட ஆரம்பித்திருக்கிறது.

1990களில் உலக அளவில் சோவியத் யூனியன் என்ற பெயரில் இருந்த போலி கம்யூனிசம் விழுந்த போது ஒரு அதிர்ச்சி இருந்தது. பின்னர் அடுத்த பத்தாண்டுகளில் முதலாளித்துவ நாடுகளில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக தற்போது மேற்குலகின் மக்கள் பொதுவுடமை கொள்கைகளை தேடிப் படிப்பதாக ஊடகங்கள் கூறுகின்றன.

இந்தியாவிலும் இடதுசாரி முகாமைச் சேர்ந்த அறிவு ஜீவிகளே ஊடகங்களில் காத்திரமான ஆய்வுக் கட்டுரைகளை எழுதுகிறார்கள். மறுகாலனியாக்கத்தின் கேடுகளை எதிர்த்து இடதுசாரி கட்சிகளே தொடர்ந்து போராடுகின்றன. தமிழகத்தில் என்.சி.பி.எச், பாரதி புத்தகலாயம், கீழைக்காற்று கடைகளில் மார்க்சிய நூல்கள் அதிகம் விற்கின்றன. விற்றுத் தீர்ந்த பல நூல்கள் இப்போது கிடைப்பதில்லை.

எனினும் போலிக் கம்யூனிஸ்டுகளின் கெட்ட பெயர் உருவாக்கியிருக்கும் சூழல் எங்களையும் அடிக்கிறது. வினவில் கூட பல புதியவர்கள் சீனா, மே.வங்கத்தை வைத்து எங்கள் விமரிசிப்பது இன்னமும் நடக்கிறது. போயஸ் தோட்டத்தில் சென்று அம்மா காலில் விழாத குறையாக செஞ்சட்டை தலைவர்கள் நடத்தும் பூஜை குறித்து நாங்கள் எவ்வளவுதான் விமரிசித்தாலும் மக்களுக்கு மனம் ஒப்புவதில்லை. இருப்பினும் பொதுவில் போலிக் கம்யூனிஸ்டுக் கட்சித் தலைவர்களையும் உள்ளிட்டு கம்யூனிஸ்டுகள் என்றாலே எளிமையானவர்கள், ஊழல் செய்யாதவர்கள், மக்களுக்காக போராடுபவர்கள் என்று மக்கள் சந்தேகமின்றி கருதுகிறார்கள். கூடவே இவர்களை பிழைக்கத் தெரியாதவர்கள் என்றும் செல்லமாகவும் கடிந்து கொள்வார்கள்.

எங்களைப் பொறுத்த வரை  தமிழகத்தில் ஒவ்வொரு மாதமும் பேருந்துகள், இரயில்கள், குடியிருப்புகள், ஆலைகள் என எல்லா இடங்களிலும் பல இலட்சக்கணக்கான மக்களை எங்கள் தோழர்கள் சந்தித்து பிரச்சாரம் செய்கிறார்கள். இதற்கு மேலும் பொதுவுடமைக் கொள்கை வளர்கிறது என்பதற்கு வினவின் சிறு வெற்றியையும் சொல்லலாமே?

மற்ற கொள்கைகளெல்லாம் அநீதியான இந்த உலகோடு ஒட்ட ஒழுகும் தன்மையைக் கொண்டிருப்பதால் அவைகள் மக்களிடம் பரப்புவது சுலபம். ஆனால் பொதுவுடைமை கொள்கை என்பது ஒட்டு மொத்த சமூகத்தையும் அடியோடு மாற்றவேண்டும் என்பதை இலக்காகக் கொண்டிருப்பதால் மக்களிடம் பரப்புவது சிரமம். ஆனால் பிரச்சினைகளோடு ஓடிக்கொண்டிருக்கும் வாழ்க்கையில் பொதுவுடைமைக் கொள்கைகள் மட்டுமே மக்களோடு இணைவதற்கான எதிர்காலத்தைக் கொண்டிருக்கிறது.

என்ன சொல்கிறீர்கள்?

நன்றி.

_________________________________________________________________

கேள்வி: ஆங்கிலத்தில் மூன்று வேளை உண்ணுவதற்கும் பிரேக்பாஸ்ட், லஞ்ச், டின்னர் என்று பெயர்கள் உள்ளன. அது போன்று தமிழில் உண்டா?

– சுதா செந்தில்

அன்புள்ள சுதா செந்தில்,

மூன்று வேளை சாப்பாடு ஆங்கிலப் பெயர்களுக்கு இணையாக தமிழில் உண்டா என்று தமிழிறிஞர்களைத்தான் கேட்க வேண்டும். எங்களுக்குத் தெரிந்து இல்லை என்றுதான் நினைக்கிறோம். ஒருவேளை தமிழ் மொழியில் அப்படிப் பெயர்கள் இருந்தாலும் தமிழ் மக்களிடம் இத்தகைய மும்முறை சாப்பாட்டுப் பெயர்கள் வழக்கத்தில் இல்லை என்பதை நிச்சயமாகக் கூறலாம். ஏனெனில் இன்றும் கூட பெரும்பான்மைத் தமிழ் மக்களின் வீடுகளில் மூன்று முறை சமையலோ, சாப்பாடோ கிடையாது. அதிக பட்சம் ஒரு முறைதான் சமையலே! இதுதான் யதார்த்தம் எனும் போது மூன்று பெயர்களுக்கான தேவையே எழவில்லையே?

“தி கிட்” எனும் சார்லி சாப்ளினது திரைப்படத்தில் அவர் ஒரு அனாதைச் சிறுவனை வளர்ப்பார். அவரது குடிசையில் ஓட்டை ஒடிசலுடன் இருக்கும் ஒரு மேசைதான் டைனிங் டேபிள். சாப்பிட இருந்தாலும், இல்லாவிட்டாலும் டேபிள் மேனர்சோடு சிறுவனை சாப்பிடுமாறு சாப்ளின் பயிற்சி அளிப்பார். வயிற்றுக்கில்லையென்றாலும் நாகரீகத்தை விட முடியாதல்லவா என்று சாப்ளின் கேலி செய்வது இங்கு நினைவுக்கு வருகிறது.

தமிழக உணவு வகைகள், வட்டார உணவு ருசிகள் என்று இப்போது நகர்ப்புறத்து நடுத்தர வர்க்கத்தை குறிவைத்து நடத்தப்படும் உணவு மேளாக்கள் எல்லாம் வட்டார ஆதிக்க சாதியினரின் உணவு பழக்கங்களைத்தான் வைத்திருக்கின்றன. ஆனால் நிலமற்ற கூலி விவசாயிகளும் சரி, இல்லை சிறு விவசாயிகளும் சரி, இல்லை கொஞ்சம் வசதியான விவசாயிகளாக இருந்தாலும் சரி இத்தகைய தினுசு தினுசான உணவு வகைகளெல்லாம் அவர்களது வாழ்வில் இல்லை.

காலையில் நீராகாரம், மதியம் வற மிளகாய் அல்லது பச்சைமிளகாயோடு பழையது, இரவு சுடு சோறு என்பதே பெரும்பாலான கிராமத்து மக்களது உணவு. இதுவும் கூட முன்னர் தினை வகைகளோடு கம்பு, கேழ்வரகு, சோளம் முதலியவற்றை வைத்து களி, கூழ், ரொட்டி என்று இருந்தது. இன்றும் கூட பல கிராமங்களில் தீபாவளி, பொங்கல் முதலான பண்டிகைகளின் போதுதான் இட்லி, தோசையை செய்கிறார்கள். தருமபுரியில் களி உருண்டையை சாப்பிடும் திறனை வைத்து சித்தாள், பெரியாள் ஊதியத்தை முடிவு செய்வார்கள். இந்தக் களியை நீங்கள் மென்று சுவைக்க முடியாது. அப்படியே விழுங்க வேண்டும்.

குமரி மாவட்டத்தில் நீர் அதிகம் உள்ள பருப்புக் குழம்பு, தஞ்சையிலோ, ஈரோட்டிலோ இருக்கும் விவசாயிகளிடம் புளி கரைத்த நீர்க்குழம்பு இவைதான் அன்றாட குழம்பு வகைகள். அந்த குழம்பில் அன்று என்ன காய் போடுகிறார்கள் என்பதுதான் அவர்களுக்கு விசேசம். சென்னையின் சேரிகளில் வாழும் மக்கள் அனைவரும் இரவுதான் முறையான சமையல் செய்து சாப்பிடுகிறார்கள். பகலில் தேநீர், பன் என்று ஏதோ ஓட்டுகிறார்கள். இவர்களது அசைவ சமையல் கூட கோழி, மீன்களின் கழிவாக கருதப்படும் பகுதிகளை வைத்தே இருக்கும். அதாவது கோழிக் குழம்பு என்றால் கோழிகளின் தலை இருக்கும்.

அறுசுவைகளுக்கும் பெயர் பெற்ற செட்டிநாட்டு சமையல், பார்ப்பனர் சமையல், சைவ வேளாளர் சமையல், கொங்கு சமையல் போன்றவையெல்லாம் பெரும்பாலான மக்களின் அன்றாட வாழ்வில் இல்லை. ஆனால் பத்திரிகைகளெல்லாம் இவற்றைத்தான் தமிழரது உணவு வகைகள் என்று போற்றுகின்றன. நிலவுடமை சமூகத்தின் சுரண்டலில் தலைமை இடம் வகிக்கும் இத்தகைய சாதிகளது வாழ்க்கை முறையில்தான் இத்தகைய விருந்துகள் இருக்க முடியும். ஆனால் இவற்றை மட்டும் தமிழர் உணவு என்று சொல்வது முழுத் தமிழகத்தையும் பிரதிபலிப்பதாக ஆகாது.

சான்றாக ஆம்பூர் பிரியாணி, மாட்டுக்கறி வறுவலை தமிழர் உணவாக இவர்கள் ஏற்கமாட்டார்கள். ஆனால் இன்று நகர்ப்புறங்களின் கடுமுழைப்பு தொழிலாளிகள் தங்களது புரதத் தேவைக்காக கையேந்தி பவன்களில் மலிவான மாட்டுக்கறி உணவை விரும்பி சாப்பிடுகிறார்கள். டிகாஷன் காபியை விரும்பி அருந்துபவர்கள் அநேகம் பேர் பார்ப்பன ‘மேல்’ சாதியதினர்தான். ஆனால் தேநீர் என்பது தொழிலாளிகளின் பானமாக இருக்கிறது. சென்னை புள்ளாபுரத்தில் அருந்ததியினர் வாழும் பகுதியில் மாட்டுக்கறி உப்புக்கண்டத்தில் செய்யப்படும் சிப்ஸ் மிகவும் பிரபலம்.

ஆக தமிழர்களது உணவு முறைகள் அனைத்தும் வர்க்க வாழ்நிலைக்கேற்ப பிரிந்து இருக்கிறது. சாரத்தில் மூன்று வேளை சாப்பிடும் பழக்கமோ, வசதியோ அற்ற மக்கள் கணிசமாக வாழும் நாட்டில் நாம் ஆங்கில முறையில் மூன்று வேளை உண்ணுவதற்கான பெயர்களுக்கு எங்கே போவது?

மதுரையைச் சேர்ந்த மாவட்டங்களில் என்னதான் விருந்து சாப்பிட்டாலும் மக்கள் “கஞ்சி குடிச்சாச்சா” என்றுதான் கேட்பார்கள். அதையே நாமும் தமிழக உணவு முறைப் பெயராக கொள்ளலாமே? என்ன சொல்கிறீர்கள்?

நன்றி.

__________________________________________

வினவுடன் இணையுங்கள்