Wednesday, June 7, 2023
முகப்புபுதிய ஜனநாயகம்கம்யூனிசக் கல்விவீட்டில் தெலுங்கு, வெளியே தமிழ்...நான் யார்? எனது அடையாளம் எது?

வீட்டில் தெலுங்கு, வெளியே தமிழ்…நான் யார்? எனது அடையாளம் எது?

-

கேள்வி :
நான் பிறந்தது முதல் கடந்த 27 வருடங்களாக நம் தமிழ் நாட்டில் வசித்து வருகிறேன்….குறிப்பாக வேலை காரணமாக சென்னையில் கடந்த 6 ஆண்டுகளாக வசித்து வருகிறேன். சமீபத்தில் நான் தங்கியிருந்த தனியார் விடுதியில் ஒரு நாள் நான் தெலுங்கில் பேசிய காரணத்திற்காக என் பக்கத்து அறையை சேர்ந்த சில அன்பர்களால் தாக்கப்பட்டேன். என்னை கொல்டி என்றும் வந்தேறி என்றும் அர்ச்சித்து என்னை அந்த இடத்தை விட்டு வெளியேறச் சொன்னார்கள். நான் என்னை பற்றி எடுத்து சொன்னேன்…நாங்கள் எப்போதோ நாயக்கர் ஆட்சிக்காலத்தில் குடிபெயர்ந்து கடந்த சில நூற்றாண்டுகளாகவே தமிழர் பண்பாடோடு கலந்து எங்கள் வாழ்கை முறையை கொண்டுள்ளோம் என்றும்…தெலுங்கில் ஒன்றும் எழுதவோ முழுமையாக பேசவோ வாசிக்கவோ தெரியாது…..எனக்கு தமிழ் தான் எல்லாமும் என்று வாதிட்டேன். பயனாக மேலும் இரண்டு குத்துகள் மார்பில் விழுந்தன. நான் என்னை மனப்பூர்வமாக ஒரு தமிழனாகவே கருதுகிறேன். எனக்கு பல நேரங்களில் என்னைப் பற்றி தர்மசங்கடமாகவே உணர்கிறேன். நான் தமிழன்தான் என்பதை மற்றவர்கள் எப்படி உணர்வார்கள்..?என் தாய் மொழி தெலுங்கு என்ற காரணத்திற்காக நான் தமிழில் சிந்திப்பதை எழுதுவதை யாராலும் தடுக்க முடியாது அல்லவா? என் கேள்வி இதுதான்…நான் என்னை யாராக நினைப்பது?? இதை பற்றி நியாமான பதிலுக்கு வினவை விட்டால் நாதியில்லை. ஒருவேளை இந்த கேள்வி மிகவும் மொன்னையாகவோ ஒரு சரியான புரிதலுடனோ இல்லாமலிருப்பின் மன்னிக்கவும்.

–       கார்த்திகேயன்

அன்புள்ள கார்த்திகேயன்,

உங்களுக்கு இழைக்கப்பட்டிருக்கும் அநீதி குறித்து மிகவும் வருந்துகிறோம், கோபம் கொள்கிறோம், கண்டனம் தெரிவிக்கிறோம்.

உங்களை யாராக நினைப்பது என்ற கேள்விக்கு பதில், தெலுங்கை தாய்மொழியாகக் கொண்ட தமிழன் என்று தைரியமாக சொல்லுங்கள்! இதில் மூடி மறைப்பதற்கோ, தற்காப்பு நிலையில் நின்று பேசுவதோ தேவையில்லை.

தமிழக எல்லைகளில் வாழும் மக்கள் அனைவரும் இரு மொழிகளையும் தெரிந்திருக்க வேண்டிய அவசியமிருக்கிறது. கேரள, கர்நாடக, ஆந்திர எல்லையில் இருக்கும் மக்கள் தேவை கருதி இப்படி இரு மொழி பயன்பாட்டுக்காரர்களாக இருக்கிறார்கள். சில நேரம் தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட மக்கள் எல்லைக்கு அந்தப்புறத்திலும், மற்ற மாநில மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்ட மக்கள் இங்கேயும் வாழவேண்டியிருக்கலாம். எல்லை என்பது நிர்வாக வசதிக்காக ஏற்படுத்தப்பட்ட ஒன்றே அன்றி அதுவே எல்லாமும் அல்ல.

பாக் இந்திய எல்லையில் இருக்கும் மக்களுக்கு இரண்டு நாடுகளும் ஒன்றுதான். இங்கே ஊதிவிடப்படும் தேசபக்தி காய்ச்சலோடெல்லாம் அங்கே  அவர்கள் வாழ முடியாது. அவர்களது கால்நடைகள் எல்லையைத் தாண்டி மேயும். திருமண மற்றும் இதர விசேட நிகழ்ச்சிகளுக்கு அவர்கள் அடிக்கடி எல்லையை தாண்ட வேண்டியிருக்கும். இருநாட்டு இராணுவங்களில் யார் தாக்கினாலும் அதன் பாதிப்பு இருநாட்டு மக்களுக்கும் உண்டு. எனவே இந்தியாவில் பாதுகாப்பாக இருந்து கொண்டு தேசபக்தி சாமியாடும் அம்பிகளின் மனநிலைக்கும் எல்லையில் வாழும் அந்த மக்களின் மனநிலைக்கும் பாரிய வேறுபாடு உண்டு.

எனவே எந்த தேசிய இன மக்கள் வாழும் நாட்டிலும் இது போன்ற வேற்று மொழி பேசும் மக்கள் சிறுபான்மையினராக இருப்பார்கள். இங்கே பெரும்பான்மையாக இருக்கும் தமிழ் மொழி பேசும் மக்கள் கூட பெங்களூருவிலோ இல்லை மும்பை தாரவியிலோ, திருவனந்தபுரத்திலோ  மொழிச் சிறுபான்மையினராக இருக்கிறார்கள். இங்கு மற்ற மொழி மக்கள் கேலி செய்யப்படுவது போல அங்கே அவர்கள் மதராசி, பாண்டிக்காரன் என்று கேலி செய்யப்படுகிறார்கள். இதைத் தாண்டி எல்லா இடங்களிலும் உழைக்கும் மக்களிடையே மொழிவெறி என்பது கிஞ்சித்தும் கிடையாது.

மேலும் நீங்கள் குறிப்பிட்டது போல நாயக்கர் காலம் போல பல்வேறு வரலாற்றுக் காலங்களினூடாக தமிழகத்தில் பல்வேறு தேசிய இன மக்கள் குடியேறியிருக்கிறார்கள். அதில் மராத்தி, கன்னடம், மலையாளம், உருது,  இந்தி என்று பல மொழி பேசுபவர்கள் உண்டு. இந்தியா முழுவதுமே பல நூற்றாண்டுகளாக இந்த மொழிக் கலப்பு நடந்திருக்கிறது. இதில் தூய தேசிய ரத்தத்தைக் கொண்ட இனம் என்று எதுவும் இல்லை. எனவே வெவ்வேறு தாய்மொழிகளைக் கொண்டவர்கள் ஒரு தேசிய இனத்தில் இருப்பது இந்தியா முழுமைக்கும் உள்ள ஒன்று. இத்தகைய கலப்பு இன்றி எந்த தேசிய இனமும், மாநிலமும் இல்லை.

நீங்கள் கேரளத்தில் கொல்லம் நகர் வரையிலும் முழுக்க தமிழ் மொழி மட்டுமே கூட பேசி வாழ முடியும். முழு கேரளத்திலும் கூட தமிழை மட்டும் வைத்துக் கொண்டு பயணம் செய்யலாம். அதே போல திருப்பதி, சித்தூர் மாவட்டங்களில் தமிழும் முழுப் பயன்பாட்டில் உள்ளது. தெலுங்கு பேசும் மக்கள் வேலூர் வரையிலும் வந்து செல்ல முடியும். கன்னட மொழி பேசும் மக்கள் ஓசூர் வரையிலும் புழங்குகிறார்கள். இவையெல்லாம் யதார்த்தமாக மக்களிடையே தவிர்க்கவியலாமல் இருக்கின்ற மொழிக் கலப்பு அம்சங்கள்.

உங்களைப் போன்ற பின்னணி கொண்டவர்கள் சில நூற்றாண்டுகளுக்கு முன்னரே குடியேறி வீட்டில் மட்டும் அதுவும் கொச்சைத் தெலுங்கு பேசிவிட்டு, பொதுவெளியில் தமிழராக வாழ்ந்து வருபவர்கள். ஆனால் தற்போது கூட ஆந்திராவிலோ, இல்லை கேரளாவிலோ இருந்து மக்கள் இங்கு குடியேறி வாழலாம். தத்தமது தாய்மொழிகளைப் பேசும் மலையாளியாகவோ இல்லை தெலுங்கராகவோ தமிழ்நாட்டில் வாழலாம். இதை தவறு என்று சொல்ல யாருக்கும் உரிமை இல்லை. தமிழ்நாட்டில் தமிழை தாய்மொழியாகக் கொண்டவர்தான் வாழ முடியும் என்பது சட்டப்படியும், தார்மீகரீதியாகவும், யதார்த்தமாகவும் சரியல்ல.

இந்தியாவில்  காலனிய ஆட்சிக் காலத்தில்தான் தேசிய இனங்கள் தத்தமது அடையாளங்களோடு தோன்றத் துவங்கியிருந்தது. அவை முழு நிறைவான வளர்ச்சி பெற்ற தேசிய இனங்களாக மாறிக் கொள்வதற்கு காலனிய ஆட்சி தடையாக இருந்தது. ஆங்கிலேயர்கள் வருவதற்கு முன்னர் தமிழன் என்ற உணர்வோ இல்லை நாடோ இங்கு இருந்ததில்லை. சங்ககாலம் தொட்டு தமிழனது அடையாளங்கள் பாடல்கள் மூலம் பேசப்பட்டாலும் அவை இன்றைய தமிழனது தேசிய உணர்வை கொண்டிருக்கவில்லை, கொண்டிருக்கவும் வாய்ப்பில்லை. அன்று சேர, சோழ, பாண்டிய நாடுகளாகத்தான் மக்கள் இருந்தார்கள். இன்றும் தென்கேரள மக்கள் தமிழ் மக்களை பாண்டிக்காரர்கள் என்றுதான் அழைக்கிறார்கள். இன்று நாம் பேசும் பொதுவான தமிழ்மொழி கூட அன்று இருந்ததில்லை. கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு பொருளாதாரப் பரிவர்த்தனை காரணமாகவே நாம் பேசும் இன்றைய பொதுத் தமிழ் உருவாகியிருக்கிறது. இன்றும் கச்சாவான கொங்கு தமிழ், திருவிதாங்கூர் தமிழ், மலைவாழ் மக்களின் தமிழ், சென்னைத் தமிழ் , தெலுங்குத் தமிழ், கன்னடத் தமிழ், மலையாளத் தமிழ் முதலான வழக்குகளை பொதுவான தமிழர்களே புரிந்து கொள்வது கடினம்.

முன்னர் வட்டாரத் தமிழ் வழக்கு மட்டும் பேசி வந்தவர்கள் இன்று உள்ளூரில் மட்டும் அப்படிப் பேசிவிட்டு பிழைக்க வந்த இடத்தில் பொதுத் தமிழை பயன்படுத்த ஆரம்பித்திருக்கின்றனர். இப்படித்தான் பத்திரிகைகள், சினிமா, இலக்கியம், அலுவலங்களில் பயன்படும் பொதுத் தமிழ் உருவாகியிருக்கிறது.

ஆங்கிலேயருக்கு முன்னர் தமிழ்நாட்டு மக்களிடையே ஒன்று சேர்ந்து வாழ்வதற்கான பொருளாதாரத் தேவையோ, சாத்தியமோ இருந்ததில்லை. ஒரு நபர் என்ன மொழியைப் பேசுகிறார் என்பது அவருடைய சமூக – பொருளாதார வாழ்க்கையே தீர்மானிக்கின்றது. நாமக்கல் லாரி டிரைவர்கள் வட இந்தியாவுக்கு அடிக்கடி செல்வதன் மூலம் இந்தி மொழியைக் கற்கின்றனர். பஞ்சாபிலிருந்து இங்கு வரும் சிங் டிரைவர்கள் தமிழைக் கற்கின்றனர். கன்னியாகுமாரியில் மணல், சிப்பி விற்கும் சிறுவன் ஐந்தாறு இந்திய மொழிகளைப் பேசுகிறான். சென்னை அண்ணா சமாதியில் மீன் வருவலை விற்கும் மீனவர் வங்க மொழியை சரளமாகப் பேசுகிறார். மும்பையில் வாழும் பிற தேசிய இன மக்கள் தத்தமது தாய் மொழியோடு மராத்தி, இந்தி, உருதுவை கற்றுத் தேர்கின்றனர். இன்று தமிழகத்தில் அதிகார, நிர்வாக, பொழுது போக்கு துறைகளில் ஆங்கிலம் கோலேச்சுகிறது. ஏழை எளிய மக்கள் கூட சரளமான ஆங்கில வார்த்தைகளை தமது பயன்பாட்டுக்கு பயன்படுத்துகின்றனர். இவற்றை யதார்த்தமாக புரிந்து கொள்ள வேண்டும்.

அடுத்து இயல்பாகவே இப்படி மொழிக்கலப்பு ஏற்படுவதை, ஏற்பட்டு விட்டதை யாரும் தடுத்து நிறுத்த முடியாது. மேலும் பல்வேறு தேசிய இன மக்கள் இப்படி கலந்து வாழும் சூழலை நாம் கைதட்டி வரவேற்க வேண்டும். சாதிகளுக்குள் சாதி மறுப்பு மணம் நடக்க வேண்டும் என்று விரும்புவது போல தேசிய இனங்களுக்குள்ளும் இனமறுப்பு மணங்கள் நடக்க வேண்டும் என்கிறோம். எதிர்காலத்தில் இத்தகைய இனங்கள் கலந்து மனித இனம் ஒன்றே எனும் நிலை வருவதே தேவையானது, சாத்தியமானது, அறிவியல் பூர்வமானது, எதிர்காலத்தைக் கொண்டிருப்பது என்கிறோம். அப்பா பஞ்சாபியாகவும், அம்மா தமிழாகவும் இருந்தால் பிள்ளைகள் இரண்டு மொழிகளையும் தெரிந்து கொள்வதோடு, இரு மாநில பண்பாடுகளையும் அறிந்து கொண்டு முன்னோக்கி செல்லும். மக்களிடையே ஒற்றுமை வளரும். இப்படி தமிழ், மலையாள, கன்னட, தெலுங்கு, மராத்தி, பீகாரி, உ.பி என எல்லா இனங்களும் கலக்க வேண்டும். நம்நாட்டில் மட்டுமல்ல உலக அளவிலும் இப்போது இருக்கும் இனங்கள் எதிர்காலத்தில் இப்படித்தான் கலந்து எழும். தூய இனம் என்பதற்கு வரலாற்றில் எதிர்காலமில்லை.

இப்படி மற்ற தேசிய இனமக்கள் தமிழ்நாட்டில் குடியேறினால் தமிழர் வளம் அழியும் என்று தமிழின வெறியர்கள் கூப்பாடு போடுவார்கள். இது உண்மையெனக் கொண்டால் இன்று ஈழத்தமிழர்கள் ஐரோப்பாவிலும், கனடாவிலும் இலட்சக்கணக்கில் வாழ்கிறார்கள். இவர்களைப் போன்ற அகதிகள் அங்கே வாழ்வதால் அந்தந்த நாடுகளின் வெள்ளையர்களுக்கு வாழ்க்கை பாதிக்கப்படுகிறது என்று அங்கே புதிய நாசிசக் கட்சிகள் தோன்றி ஓரளவுக்கு செல்வாக்கோடு இருக்கின்றன. தமிழ்நாட்டில் மற்ற மொழிக்காரர்கள் இருக்க்க் கூடாது என்று பாசிசம் பேசும் தமிழினவெறியர்கள் ஐரோப்பிய பாசிஸ்ட்டுகள் சொல்வதையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

இன்று மும்பையில் ஏழை பீகாரிகளை வெறிகொண்டு தாக்கும் சிவசேனா வெறிநாய்களை மனிதநேயம் கொண்டோர் எவரேனும் ஏற்றுக் கொள்வார்களா? தமிழ்நாட்டில் இருக்கும் அதுவும் டாடா சுமோவில் நிரப்புமளவு தொண்டர் படையுள்ள கட்சிகளைச் சேர்ந்த சில தமிழின வெறியர்கள்தான் அப்படி ராஜ்தாக்கரேவுக்கு பல்லக்கு தூக்குகிறார்கள். தமிழர்கள் வாழும் தமிழ்நாட்டு தெருக்களையும், கழிப்பறைகளையும் தெலுங்கு பேசும் அருந்ததி இன மக்கள்தான் சுத்தம் செய்கின்றனர். எங்கள் கழிவுகளை அகற்றுவதற்குத் தெலுங்கர்கள்  தேவையில்லை, இனி நாங்களே முதலியார், கவுண்டர், தேவர், கோனார் என்று முறை வைத்து சுத்தம் செய்து கொள்கிறோம் என்று சுத்த தமிழர்கள் முன்வருவார்களா? அதே போன்று இரவுக் காவல் காக்கும் நேபாளத்து கூர்காக்கள், தச்சு வேலை செய்யும் ராஜஸ்தானத்து தொழிலாளர்கள், காங்கிரீட் கலவை போடும் தெலங்கு தொழிலாளர்கள், சாலையில் குழி பறிக்கும் கன்னட தொழிலாளர்கள், உணவகங்களில் மேசையை துடைக்கும் வடகிழக்கு தொழிலாளர்கள் என்று இவர்களது வேலையை தமிழன்தான் செய்ய வேண்டும் என்று யாராவது கேட்க முன்வருவார்களா என்ன?

அதே போன்று நாமக்கல் முட்டை, கோழியை மலையாளிகளுக்கு விற்க கூடாது, கம்பத்தின் காய்கனிகளை கேரளாவுக்கு கொண்டு செல்லக்கூடாது, ஈரோட்டின் மஞ்சள் தமிழக எல்லையைத் தாண்ட முடியாது, திருப்பூரின் உள்ளாடைகள் மற்ற மாநிலங்களுக்கு விற்க கூடாது என்று தூய தமிழினவாதிகள் பிரச்சாரம் செய்தால் மக்களே நையப் புடைப்பார்கள். அதே போன்று இன்று தமிழகம் சாப்பிடும் சோறு, காய்கள், மளிகைப் பொருட்களில் கணிசமானவை அண்டை மாநிலங்களிலிருந்து வருவபைதான்.

இன்று தமிழக வளத்தை அப்படியே கொள்ளையடிப்பவர்கள் மலையாளிகளோ, தெலுங்கர்களோ அல்லர். பன்னாட்டு நிறுவனங்களும், தரகு முதலாளிகளும்தான் நம் வளத்தை சுருட்டிக் கொண்டு செல்கின்றனர். இவர்களுக்கெல்லாம் இன அடையாளம் ஏதுதமில்லை. ரிலையன்ஸ், ஹூண்டாய், ஃபோர்டு, செயின்ட் கோபெய்ன் முதலான நிறுவனங்களை வெளியேற்றுவதற்கு இந்த தமிழினவாதிகள் வருவார்களா? மாட்டார்கள். மாறாக டீக்கடை வைத்திருக்கும் மலையாளிகளை விரட்ட வேண்டுமென்று துள்ளிக் குதித்து வருவார்கள். இதுதான் இவர்களது தமிழ் வீரத்தின் இலட்சணம்.

இதனால் இந்தியாவில் தேசிய இன ஒடுக்குமுறை இல்லை என்று பொருளல்ல. பார்ப்பனிய இந்து தேசிய ஒடுக்கு முறையினால் தமிழ் மட்டுமல்ல பிற தேசிய இனங்களும் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அதனால்தான் இந்தியாவில் உள்ள தேசிய இனங்களுக்கு சுயநிர்ணய உரிமை வேண்டும் என்கிறோம். மொழி, பண்பாடு, கல்வி என்று எல்லாத் துறைகளிலும் இந்த ஒடுக்கு முறையை நாம் எதிர்த்துப் போராட வேண்டும். காவிரி, முல்லைப் பெரியாறு பிரச்சினைகளில் தமிழகத்தின் உரிமை பறிக்கப்பட்டிருக்கிறது என்பதற்காக நாம் மைய அரசை எதிர்த்து போர்க்குணத்தோடு போராட வேண்டும். மாறாக அதன் பொருட்டு கன்னட, மலையாள மக்களை இனவெறி கொண்டு பகைத்துக் கொள்வதில் பயனில்லை.

எனினும் இந்திய மக்களின் பல்வேறு பிரச்சினைகளுக்கும் தீர்வு என்பது பொது எதிரியை அவர்கள் ஒன்று சேர்ந்து எதிர்ப்பதிலேயே வரும். அதை பிரிந்து கொண்டு செய்வதால் பயனில்லை. சுயநிர்ணய உரிமை வேண்டும் என்று சொல்வதோடு இந்தியாவின் தேசிய இன மக்கள் வர்க்க ரீதியாக ஒன்று சேர்ந்து வாழவேண்டும் என்பதையும் சேர்த்தே சொல்கிறோம். அதே போன்று ஒவ்வொரு தேசிய இனத்தின் தனித்தன்மை என்பது அதனுடைய ஜனநாயக விழுமியங்களுக்காகவே போற்றப்படவேண்டும். அவற்றில் இருக்கும் நிலவுடமை பிற்போக்குத்தனங்களை எதிர்க்க வேண்டும்.

தமிழிசை மரபு, பார்ப்பனிய எதிர்ப்பு மரபு போன்றவைதான் தமிழின் போற்றுதலுக்குரிய மரபுகள். இதைத் தவிர தமிழில் இன்று கோலேச்சுவது சாதிய ஆதிக்கம்தான். தாழத்த்தப்பட்ட தமிழர்களை ஊருக்குள் செருப்போடு செல்லக்கூடாது என்றுதான் ஆதிக்க சாதி தமிழர்கள் நடத்துகிறார்கள். இந்நிலையில் தலித் தமிழன் எங்கனம் தமிழனென்று உணர முடியும்? இப்படி சாதியால் மட்டுமல்ல வர்க்க ரீதியாகவும் தமிழர்கள் பிரிந்து கிடக்கிறார்கள். டி.வி.எஸ் அய்யங்காரும், ஸ்பிக் முத்தையா செட்டியாரும், பொள்ளாச்சி மகாலிங்கமும் வேண்டுமானால் முதலாளிகள் என்ற முறையில் தமிழன் என்று பேச முடியும். ஆனால் இவர்களோடு சரிக்கு சமமாக தொழிலாளிகள், நிலமற்ற விவசாயிகள் தமிழனென்று பழக முடியுமா என்ன?

ஆகவே சாதி, மத, மொழி அடையாளங்களையெல்லாம் விட வர்க்க அடையாளமே நம் வாழ்க்கையை தீர்மானிக்கின்ற ஒன்றாக இருக்கிறது. கார்த்திகேயன், அதன்படி நீங்கள் உங்களை உழைக்கின்ற வர்க்கமாக நினைத்து வாழுங்கள். உழைக்கும் வர்க்கத்தில் விவசாயிகள், தொழிலாளிகள், நடுத்தர வர்க்கம் போன்றவர்களோடு இணைந்து எழும் அந்த வர்க்க உணர்வே நமது வாழ்க்கைப் பிரச்சினைகளுக்கு தீர்க்கும் வல்லமையை தரும்.

எனினும் தமிழின வெறியர்களுக்கு எதிர்காலமில்லை என்று நாம் அவரசமாக முடிவெடுத்துவிடக்கூடாது. இன்று வட மாநிலத் தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கில் தமிழகம் வந்து வேலை செய்கின்றனர். நாளை இவர்கள் இன வேறுபாடு கடந்து தமிழக தொழிலாளிகளோடு சேர்ந்து போராடும் நேரத்தில் முதலாளிகள் இதை திட்டமிட்டு பிரிக்கும் வண்ணம் தமிழின வெறியை தூண்டிவிடலாம். அப்படித்தான் மும்பை டெக்ஸ்டைல்ஸ் தொழிலாளர் சங்கங்களை உடைப்பதற்கு முதலாளிகள் சிவசேனாவை வளர்த்து விட்டனர்.

தமிழகத்தில் அப்படி ஒரு நிலை வந்தால் நாம் இனவேறுபாடு இன்றி தொழிலாளிகளை அணிதிரட்டி முதலாளிகளையும் அவர்களது காசில் வரும் தமிழின வெறியர்களையும் வேரறுக்க வேண்டும். கம்யூனிஸ்டுகளாகிய நாங்கள் அதை நிச்சயம் செய்வோம். மதவெறி, சாதிவெறிக்கு மட்டுமல்ல இனவெறிக்கும் தமிழகத்தில் இடமில்லை என்று காட்டுவோம்.

கார்த்திகேயன்,

இந்த பதில் உங்களது குழப்பத்தையும், துயரத்தையும் தணித்து விட்டு தலைநிமிர்ந்து வாழும் தைரியத்தை தந்திருக்கிறதா? அறிய ஆவலாயிருக்கிறோம். நன்றி

_____________________________________________________________

வினவுக்கு நன்கொடை தாருங்கள்

[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

 1. அவர்களைப் பற்றிக் கவலைப்படாமல் மனநிம்மதியுடன் உஙகள் வெலையைப் பாருஙகள்..

  முதலில் வேரு தங்குமிடத்திற்க்கு மாறவும்….

  உங்கள் மனத்தால்நீ ஒரு பச்சைத் தாமிழன்…

  • இது ஒரு மிகப்பெரிய பொய் – இதுவரை தமிழகத்தை ஆண்டவரெல்லாம் தெலுங்கர்கள் ( அண்ணாதுரை , கருநாய் நிதி) , கன்னடர் ( செயலலித ) மற்றும் மலையாளி ( எம்கியார்) – ஒரோ ஒரு தமிழன் மட்டும் தான் தமிழகத்தை இதுவரை ஆண்டுள்ளான் – காமராஜ். அவரையும் இந்த திராவிடர்கள் தமிழை வைத்தே தோற்கடித்தனர். இப்போதைய எதிர்க்கட்சி தலைவர் கூட தெலுங்கர் தான். மிகப்பெரிய தமிழ் உணர்வாளராக காட்டிகொள்ளும் வைகோ கூட தெலுங்கை தாய்மொழியாக கொண்டவர்தான். முல்லைபெரியாறு நீரை நாம் மலையாளிகளிடம் கேட்கக் கூடாதாம் – ஏனென்றால் அங்கே கேட்டால் கம்யுனிஸ்ட் கட்சி மறுபடியும் அங்கே ஆட்சியை பிடிக்க முடியாது . தமிழ்நாட்டு கம்யுனிஸ்ட்கள் முல்லை பெரியாறு நீரை கேட்டு போராட்டம் செய்யச் சொல்லுங்கள் – கேரளா கொம்யுநிச்ட்கள் நேராக வந்து அவர்களின் கொட்டையை நசுக்கி விட்டு செல்வார்கள்

 2. இந்த விசயத்தில் 100 சத ஆதரவை வினவிற்குத் தெரிவித்துக் கொள்கிறேன்…‘
  தமிழ் பேசும் மக்கள் தனது வேலைக்காக பெங்களுர் மும்பை என்று பரந்து விரிந்து கிடக்கிறார்கள்… அவர்கள் வாழ்வில் தமிழ் தலிபான்கள் மண் அள்ளிப் போடப் போகிறார்கள்… அவர்கள் (hypothetically) வேலையற்று வந்தால், அப்படிப் பல கோடி மக்களுக்கு சோறு போட இந்த தமிழ் தலிபான்களால் இயலவே இயலாது… அதை அந்தத் தமிழ் தலிபான்களுக்கு நாம் உணர்ந்த வேண்டும்.. அதில் உங்கள் பணி முக்கியமானது மகத்தானது

 3. புரட்சிக்கு தமிழனை நம்பி புரியோஜனமில்லைன்னு- மனவாடுகளையும், சேட்டன்களையும் தயார் பண்ணிறிங்களா. நடத்துங்க, நடத்துங்க…

 4. கார்த்திகேயனுக்கு மட்டுமல்ல படிக்கிற எல்லோருக்கும் தலை நிமிர்ந்து வாழும் தைரியத்தை கொடுக்கும் பதிவு இது.ஓடுகாலிகள்,பெ.மணியரசன் கும்பல் போன்றவர்கள் இந்த பதிவை படித்தவுடன் ஓடியே போய் விடுவார்கள்

 5. கார்த்திகேயன் நீங்கள் தெலுங்கு பேசியகாரணத்தால் அடிவிழுந்தது என்று கூறுகிறீர்களே இதை ஏற்றுக்கொள்ள்வே முடியவில்லை.அப்படி தமிழ் வெறி பிடித்தவர்கள் கண்டிப்பாக தமிழ்நாட்டில் இல்லை. ஏன்னென்றால் இங்கு இன ஒன்றுமையே கிடையாது.எல்லாம் சாதி ஒற்றுமைதான். நீங்களோ அல்லது உங்களை அடித்தவர்களோ வேறு ஏதாவது உள்காரணம் இருக்கலாம் என்று நினைக்கிறேன். இங்கு சிலபேர் தமிழ் தாலிபன்கள் என்று தமிழ்களை கூறுவதை ஏற்றுக்கொள்ளவே முடியாது.பார்ப்பனர்களை எதிர்ப்பதால் குறிப்பாக தமிழகம் முக்கிய பங்கு வகிப்பதால் இப்படி கூப்பிட்டு சில கருங்காளிகள் ஆனந்தம் அடைகின்றனர்கள்.

 6. எங்க வீட்டுக் கல்யாண ஆல்பத்தைப் பார்த்த இலங்கைத் தோழி
  ஒருவர், ‘நீங்க கள்ளத் தமிழரா?’ன்னு கேட்டாங்க:(

  பிகு: நியூஸி நாட்டில் கிறைஸ்ட்சர்ச் மாநகரில் தமிழ்ச்சங்கம் ஆரம்பித்த குழுவில் நாங்களும் இருவர்.

 7. இந்தக் கட்டுரையின் பொதுக் கருத்தோடு ஒன்றுபடும் அதே நேரத்தில் கார்த்திகேயனின் கேள்வி பல சந்தேகங்களை எழுப்புகிறது. தமிழின வெறியோடு இவரை அடித்தவர்கள் யார்? நான் சென்னையின் பல இடங்களில் இந்தி மொழி பேசும் மக்கள் வாய் விட்டு சிரித்து, கும்மாளமிடுவதை பார்த்திருக்கிறேன். யாரும் ஒரு சின்ன நியுசன்ஸ் என்ற வகையில் கூட முறைத்துப் பார்த்ததில்லை. என் பணியிடத்திலும் அடிக்கிற அளவுக்கு ஒரு இனவெறி பிரச்சினையை பார்த்ததில்லை. சாதிப் பிரச்சினையும், மதப் பிரச்சினையும் இங்கு கொலோச்சுகின்றனவே தவிர இனவெறி மற்றவரை தாக்குமளவு இல்லை என்பதே தமிழகத்தின் சிறப்பு. ஐதராபாத்தை சேர்ந்த நண்பன் ஒருவன் சென்னை ஒரு முழு காஸ்மோபாலிட்டன் என்று மன நிறைவோடு என்னிடம் சொல்லி அல்லாவுக்கு நன்றி தெரிவித்தான். நான் அவனிடம் முதலில் தந்தை பெரியாருக்கு நன்றி தெரிவிக்க சொன்னேன். எழுத்திலும், பேச்சிலும் இங்கு தமிழ் தேசிய வெறி சிறிய அளவுக்கு இருப்பதை ஏற்கிறேன். அது மிக சிறுபான்மையிரால் எழுப்பப்படுகிறது. கார்த்திகேயனின் கேள்வியில் அவரை அடித்த நபர்களின் அரசியலையோ, காரணத்தையோ தெரிவிக்கவில்லை. இந்த கேள்வியின் உண்மை தன்மையை தோழர்கள் பரிசீலிப்பது நல்லது. தமிழ் சமூகத்தை இழிவுபடுத்தும் நோக்கத்தற்காக ஜெயமோகன் பதிலளிக்க விரும்பும் பாணியில் கார்த்திகேயனின் கேள்வி உள்ளது..

  • திரு சுக்டெவ்,

   I agree with you and your comments. I was in Chennai nearly 10 years with multiple language, culture people as you said i never faced any kind of incidents even debates also like Mr. Karthikeyan said. And also, the people in Chennai mansion and bachelors are running behind the jobs and careers from other parts of Tamilnadu. No body doesn’t have that mind and time to think.

   I think, this issue is been created intentionally to spoil our Tamilians culture. Why the issue came here that is the big question now…

   As of my knowledge, this is the first debate for Tamil people attacks other language people in Chennai. It can’t believable….

   I really don’t know how Vinavu has given the importance without cross check the incident..

   • Hi Bilal,

    Vinavu has made its stance clear on the misgivings of the reply to Karthikeyan somewhere down the line of comments here. Kindly read that also. But I wonder why Mr. Karthikeyan doesn’t have anything to say further on this issue.

   • Dear Aliyar,

    What you have wriiten is absolutely right. this has been created intentionally and it is quite surprising. As a Tamilian, no one will hit anybody because they speak in other language. And Especially Telugu and Telugu people are very much friendly with our people.

    So, he might have been beaten for some other valid reasons.

    Please ignore this topic

  • சரியான மதிப்பீடு. உங்கள் கருத்தையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

 8. பெரியாருக்கு எதற்கு நன்றி என்று தெரியவிலையே? சென்னை காஸ்மோபொலிட்டன் சிட்டியானதற்கு நம் பொருளாதாரக் கொள்கைகளும் அதன் விளைவாய் வந்தேரிய பன்னாட்டு நிறுவனங்களின் விருப்பத்திற்கேற்ற மந்தைகளாய் மாறிவிட்ட சமகாலத்து சமூகமும்தானே?
  இதில் பெரியார் எங்கே வந்தார். இன்னும் சொல்லப்போனால் பெரியாருக்கு தமிழ்மேலும் தமிழர்மேலும் மதிப்போ மரியாதையோ இருந்தது கிடையாது.

  • பெரியாருக்குத் தமிழும் தமிழனும் இருந்த நிலை பற்றிய மனவருத்தம் தான் அவரைக் கடிந்து பேச வைத்தது.
   தமிழன் உருப்பட வேன்டுமானால் தமிழன் நவீன பகுத்தறிவுச் சிந்தனையை உள்வாங்க வேண்டும் என்பது அவரது கருத்து.
   தமிழர் “காட்டுமிராண்டிகளாக” வாழும் காரணங்களுள் அவர்கள் உள்வாங்கிய சாதிய வர்ணாசிரமச் சிந்தனை மூடநம்பிக்கைகள் போன்றன உள்ளடங்குமென்பது அவரது மதிப்பீடு.
   தமிழர், முக்கியமாகத்த் தமிழன் தமிழன் என மார்தட்டியவர்கள், பெரியாரின் மதிப்புக்கு ஏற்ற மக்களாக இருந்தார்களா?

   • “தமிழன் தமிழன் என மார்தட்டியவர்கள், பெரியாரின் மதிப்புக்கு ஏற்ற மக்களாக இருந்தார்களா?”

    பெரியாரின் மதிப்பை பெறவேண்டிய அளவிற்கு அவர் எந்த வகையில் சிறந்தவர். சிலப்பதிகாரத்தையும், கம்பராமாயணத்தையும் சிறு ஆராய்ச்சியும் அனுகுமுறையும் இல்லாமலேயே கண்டபடி விமர்சித்தவர் அவர். அன்றைய தமிழர்களின் மதிப்புக்கு ஏற்றபடிதான் பெரியார் இருந்தாரா?

    • //பெரியாரின் மதிப்பை பெறவேண்டிய அளவிற்கு அவர் எந்த வகையில் சிறந்தவர்.//

     வேற்றுகிரக வாசிகள் தமிழ்நாட்டிலும் இருக்காய்ங்களோ 🙂

    • தமிழரிடையே, முக்கியமாக ஒடுக்கப்பட்ட தமிழரிடையே, பெரியாருக்கு அன்றும் இன்றும் மதிப்பு உள்ளது.
     பெரியாருடன்நன் பல விடயங்களில் மறுபடுகிறேன், ஆனால் அவர் வாயில்வந்தபடி பேசுகிற ஒருவராக இருக்கவில்லை. அவர் சொன்ன ஒவ்வொன்றுக்கும் மதிக்கத்தக்க காரணம் இருந்தது.

  • ஒரு சமூகத்தில் நிலவும் ஜனநாயக பண்பு வலுவான ஒரு சமூக இயக்கத்தின் பங்களிப்பு இல்லாமல் சாத்தியமில்லை என்பதை முதலில் புரிந்து கொள்க. நன்கு துலக்கமான ஒரு உண்மையை சொல்ல வேண்டுமானால், வேறு மாநிலத்தவர்களின் பெயருக்கு பின்னால் ஒட்டிக்கொண்டிருக்கும் சாதிய வால்– யாதவ், ரெட்டி, குட்டி என்பன தமிழகத்தில் இல்லை. குறைந்தபட்சம் அத்தகைய சாதி அடையாளத்தை போட்டு கொள்வது குறித்த வெட்க உணர்வு இங்கு இருப்பதற்கு காரணம் பெரியார் இயக்கத்தின் பங்களிப்பே. பிரஞ்சு புரட்சி தோல்விதான். ஜிரோண்டின்களும், ஜேக்கொபின்களும் தோற்றுப் போனார்கள். நெப்போலியன் போனபார்த்தின் military despotism வந்தது. ஆனாலும் பல நேர்மறையான அம்சங்களை பிரஞ்சு சமூகம் கண்டது. மதம் அரசியல் விவகாரங்களில் இருந்து ஒதுக்கப்பட்டது, போராட்டங்கள் logical conclusion நோக்கி சென்றது போன்றன. துக்ளக் சோ விடம் அரசியல் பயிலும் உங்கள் வறுமையை எண்ணி பரிதாபப்படுகிறேன்.

   பெரியார் தமிழர்களை இழிவுபடுத்தினார் என்று நீங்கள் சொல்வதை மெய்ப்பிக்க அவருடைய கூற்றுகளை உள்ளடக்கத்தோடு முன் வைத்து விவாதிக்க தாயாரா ?

 9. சாதி, மத, மொழி அடையாளங்களையெல்லாம் விட வர்க்க அடையாளமே நம் வாழ்க்கையை தீர்மானிக்கின்ற ஒன்றாக இருக்கிறது.பாட்டாளி வர்க்கமா? முதலாளி வர்க்கமா? இதுதான் உன்மை.

 10. “தமில் வால்க, வலர்க; தமிலால்தான் நாங்கல் தமிலர்கலாயிருக்கிறோம், தானைத் தமிலன் வால்க…”
  என்கிற மேடைப் பேச்சைக் கேட்டு வருத்தமுற்ற தெலுங்கரா நீங்கள்?

  தாய் மொழி தெலுங்காயினும் உங்கள் நாக்கு தமிழைத் தவறாகப் பேசத்தெரியாத வரையிலும், நீங்கள் தமிழை சரியாக உச்சரிக்கும் வரையிலும், நீங்கள்தான் உண்மைத் தமிழர்!
  அவ்வகையில் எத்தனையோ மேன்மைமிகு தெலுங்கு பேசும், அல்லது கவியெழுதும், உண்மைத் தமிழர்களை நானறிவேன்.

  தங்களின் பதவியேற்பு உறுதிமொழியைக்கூட தெளிவாக படிக்க முடியாத, மிகச் சிறந்த சூறாவளி மேடைப்பேச்சாளர்கள் தமிழகத்தே மெத்தவும் உள்ளனர்.

  “நான் படிக்காதவன், தமிழை எழுதவோ,படிக்கவோ தெரியாது, என்னுடைய தமிழ் உச்சரிப்பில் ஏதேனும் தவறிருந்தால், நான் அதை திருத்திக் கொண்டாகவேண்டும்” என்கிற முகவுரையோடு தமிழ் நாட்டில் பதவிஏற்பவர்கள், பதவியேற்றால் அதை
  நீங்கள் மனிதாபிமானத்தோடு மன்னித்தருள்க!

  அவ்வாறில்லாமல், எனோதானோவென்று அவர்கள் வெட்கமற்று, தம் உறுதிமொழியைப் படித்திருந்தால் அவர்களைவிட தெலுங்கராகிய உங்களைத்தான் நாங்கள் சிரமேற்கொண்டு தமிழனென்று போற்றுவோம்!

  பரம்பரைத் தமிழர்கள், அல்லது மறத்தமிழர்கள், அல்லது புரட்சித் தமிழர்கள்;
  எப்படியாவது வைத்துக் கொள்ளுங்கள்.
  அத்தகைய தமிழர்கள் ‘நடாத்தும்’, தமிழ் வளர்க்கும், தொலைக்காட்சிப் பெட்டிக்குள்ளிருந்து பேசும் நிகழ்ச்சித் தொகுப்பாளர்களின் தடுமாற்றமான, ததிங்கிணத்தோம் தமிழை கேட்க நேர்ந்து, நீங்கள் தெலுங்கராயிருந்தும், தூக்குப் போட்டுக்கொள்ள தவிக்கிறீர்களென்றால் ;

  நீங்கள்தான் உண்மையான தமிழ் வளர்க்கும் தெலுங்குத் தாய்மொழியாளர்!

  உங்கள் தாய்மொழி தெலுங்காயினும், நீங்கள் சிறந்த தமிழ்ப் படிப்பாளியென்றால்…,
  தயவு செய்து தவறாகத் தமிழ் பேசும் தமிழரை பிடறியிலடித்து திருத்துங்கள்!

 11. வன்முறை என்பது எதற்காக என்றாலும் கண்டிக்க தக்கது.அடித்தவர்கள் மீது புகார் கொடுக்காமல் பதிவிட்டு என்ன செய்யலாம் என்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.அடித்தவர்கள் இவருக்கு தெரிந்தவர்கள் போல் தெரிகிறது,பிற்கு நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன்?.

  தமிழ் பேசும் அனைவரும் கூட சமாக நட‌த்தப்படுவது இல்லை.ஒரு வேளை பிறமொழி தாழ்த்தப்பட்டவராக இருக்கும் பட்சத்தில் ,தாழ்த்தப்பட்ட தமிழர் நடைமுறையில் சந்திக்கும் அவலங்களை நீங்களும் சந்திக்க நேரிடும்.

  தமிழ்நாட்டில் வாழும் ,இந்திய குடிய்யுரிமை உள்ள அனைவருமே சம உரிமை உடையவர்கள்.தமிழ் பேச தெரிய வேண்டிய அவசியம் கூட கிடையாது.பிற மொழியை தாய் மொழியாக கொண்டவர்கள்(உயர் சாதி,இடைப்ப்ட்ட சாதியினர்) அரசியலில் பெரிய பதவிகள் அடைவதற்கு கூட தடையில்லாத மாநிலம் இது.இதில் தவறு இல்லை.தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமை பற்றி வினவில் ஒரு பதிவிடுமாறு ஒரு வேண்டுகோள்.

 12. அந்த அன்பர் வெறியர்களால் தாக்கப்பட்டது மிகுந்த வருத்ததை ஏற்படுத்துகின்றது. இந்த நவநாகரிக உலகில் ஒற்றை அடையாளம் என்பதில் இருந்து விலகி ஒரு மனிதருக்கு பன்முக அடையாளம் வரத் தொடங்கிவிட்டது. நான் ஒரு இந்தோ- சீனன், ஒரு அமெரிக்க-இத்தாலியன், ஒரு ஆங்கிலோ-இந்தியன் எனக் கூறும் அளவுக்குப் பன்முகமாக மனிதன் மாறிவருகின்றான் ……..

  தமிழ்நாட்டில் நெடுங்காலமாக வாழ்பவர்கள், தம்மை தமிழர்களாக உணர்பவர்கள் முழுமையாக தமிழர்களாகவே வாழ்வது சிறந்தது என்பது எனது தனிப்பட்டக் கருத்து… இங்குள்ள தெலுங்கு வம்சாவளியினர் அகமணமுறையைத் தவிர்த்து தமிழர்களோடு கலப்பு மணம் புரிந்தால் வெகுவிரைவில் யாவரும் தமிழர்கள் என கொண்டாடப்படலாமே !!!

  மற்றப்படி வீட்டில் விரும்பிய மொழி பேசுவதில் தடைப் போடுவது நியாயமாகப் படவில்லை, மலையாளி, கொல்டி, மார்வாரி என அவர்களைத் தாக்குவதிலும் எனக்கு உடன்பாடில்லை.. தமிழ்நாட்டில் தமிழ் மொழி பேசவும், படிக்கவும் தெரிந்திருந்தால் போதுமானது.. அதையும் தாண்டி தமிழை திணித்தல் மனிதாபிமானமற்ற செயல்… அதே போல இங்கு தமிழே தெரியாமலும் இருத்தல் முறையற்ற செயல் ..

 13. தமிழர்களிடம் இன அல்லது மொழிவெறி என்பதை என்னால்
  நினைத்துக்கூட பார்க்க இயலவில்லை.
  உண்மையாக பார்த்தால் ஏனைய மாநிலங்களோடு ஒப்பிடுகையில்
  கொஞ்சம் பரிதாபப்படும் நிலையிலேயே தமிழனின் மொழிப்பற்று உள்ளது.
  இதை பிற மாநிலங்களில் வசிக்கும் தமிழர்கள் உணர்ந்திருப்பார்கள்.
  இந்த சம்பவம் உண்மையெனில் மிக மோசமான ஒன்று.

 14. பல நூறாண்டுகள் தமிழகத்தில் வாழ்ந்துவரும் பிறமொழிகளை தாய்மொழியாக கொண்டோரும் தமிழர்களே.வரலாற்றின் போக்கில் பலமொழிகாரர்கள் ஒரேநிலப்பரப்பில் குடியேறி வாழ்வது தவிர்க்க முடியாதது.பிற மொழிகளை தாய்மொழியாக கொண்டோரும் அந்த நிலப்பரப்பில் பெரும்பான்மையாக வாழும் மொழியினரின் தேசிய இனத்தை சேர்ந்தவர்களாகத்தான் கொள்ளமுடியும்.தமிழகத்தில் வாழும் பிற மொழிகளை தாய்மொழியாக கொண்டோரும் தமிழர்களே.இது குறித்த வினவின் கருத்துக்கள் ஏற்கத்தக்கவை.

  ஆனால் கார்த்திகேயன் தான் தெலுங்கில் பேசியதற்காக தாக்கப்பட்டேன் என்று சொல்வது நம்புகிறார் போலில்லை.அப்படியான இனவெறி இங்கு கிடையாது.தமிழர்களை இனவெறியர்களாக சித்தரிக்கும் கெட்ட உள்நோக்கத்துடன் இப்படி ஒரு புனைசுருட்டு அவிழ்த்து விடப்படுகிறது.
  கேள்வி என்ற பெயரில் யார் எதைக்கேட்டாலும் அதை ஆராயாமல் அப்படியே வெளியிட்டு இந்த மோசடிப் பரப்புரைக்கு வினவும் துணை போயிருப்பது கண்டனத்திற்குரியது.

  • நண்பர்களே,
   இங்கு கார்த்திகேயன் குறிப்பிட்டிருக்கும் சம்பவம் தமிழகத்தில் சரளமாக நடக்கும் ஒன்று என்பது போல நாங்கள் கருதவில்லை. இது நடந்திருந்தாலும் அரிதினும் அரிதான ஒன்றாகவே கருதுகிறோம். இங்கு வினவு சார்பில் அளிக்கப்பட்டிருக்கும் கருத்து பொதுவில் பல் தேசிய இனங்களின் ஐக்கியமும், முரண்பாடும் யதார்த்தத்தில் என்னவாக இருக்கிறது என்பதை பற்றிய ஒரு பறவைப் பார்வையே. அதே நேரம் இனவெறியின் கருத்து ரீதியான அடிப்படை எப்படி தோன்றும் என்பதையும் குறிப்பிட்டிருக்கிறோம். பொதுவில் தமிழக மக்கள் இனவெறி கொண்டவர்களல்ல என்பதுதான் எமது கருத்தும். கட்டுரையில் கூட எல்லா தேசிய இனங்களிலும் உழைக்கும் மக்களிடம் இனவெறி பெரிய அளவு இருக்காது என்பது குறிப்பிடப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் இனவெறி தாண்டவாமடுகிறது என்பது போன்ற தொனியை இந்த கட்டுரை அளிக்கவில்லை என்றுதான் கருதுகிறோம்.

   அடுத்து கார்த்திகேயன் கேட்டிருப்பது போல உண்மையிலேயே அந்த சம்பவம் நடந்திருக்கிறதா என்று நாங்கள் கண்டுபிடிக்க இயலாது. ஆனால் அந்த கேள்வில் வேறு மொழி பேசுபவர்கள் தமிழகத்தில் இருப்பது குறித்த சிக்கல்களை புரிந்து கொள்ள முடியும் என்று கருதுகிறோம். மேலும் கார்த்திகேயன் தமிழர்கள் மீதான விசமப் பிரச்சாரத்திற்காக கேட்டிருப்பதாக நாங்கள் கருதவில்லை. ஆனால் அந்த கேள்வி மூலம் தமிழர்கள் இனவெறி கொண்டவர்கள் என்ற சித்திரம் தருவதாக உள்ளது என்பதை கட்டுரையில் குறிப்பிட்டு அப்படி இல்லை என்பதை எழுதியிருக்க வேண்டும். அதற்காக சுயவிமரிசனம் செய்து கொள்கிறோம்.

   • Well said. Can you please include an example of E.V.R.Periyar who’s mother tongue is Kannada and Bharathiyar who’s mother tongue is Telugu. We accept them as our Tamil leaders….

   • வினவுக்கு…
    காங்ரஸ் பெரியார் ஏன் திராவிடத்தை வளார்க்க வேண்டும், தமிழின உணர்வை வளார்க்க வேண்டும்.

    சுதந்திரத்திற்க்கு போராடும் போதே இரு பானை வைத்த பாப்பனிய ஆதிக்கத்தை அளிக்க வேண்டும், அதற்க்கு கடவுளின் முகவரா அவர்களைநினைக்கும் பாமரன் ஒன்று சேரவேண்டும். அப்படி உருவனது தான் திராவிடம், தமிழினம் உணர்வு.

    மற்றபடி தமிழற்கள் வெறியர்கள் அல்ல என்பதை அனைவரும் புரிந்து கொள்ளவேண்டும். ரஜினிகாந்திற்க்காக பல்வேறு நேற்த்திகள் செய்வது இதற்க்கு உதாரணம்.

 15. வணக்கம்……
  மேற்படி கட்டுரை எழுதிய ஆசிரியருக்கு தமிழின வாதிகள் மேல் அப்படி என்ன கோபமோ தெரியவில்லை. கார்த்திகேயனுக்கு நடந்திருப்பது உண்மை என்றால் அது கண்டிக்க பட வேண்டியது தான். அனால் இது வரை எந்த தமிழ் அமைப்பை சேர்ந்தவர்கள் பிற மொழி பேசும் மக்களை இங்கு தாக்கி இருக்கிறார்கள் என்று சொல்ல முடியுமா, இந்தியன் என்கிற வார்த்தைக்கு உண்மையான அர்த்தத்தை இந்த தமிழ் மண்ணில் தான் காண முடியும். வந்தாரை வாழ வைக்கும் பூமி என்பது தான் இன்று வரை இந்த தமிழ்நாட்டிற்க்கு காலம் காலமாக உள்ள பெயர். இல்லை என்றால் மராத்திய சரபோஜிகளும். ஆந்திர நாயகர்களும் தமிழர்களை ஆண்டிருக்க முடியுமா. அவ்வுளவு ஏன் இன்று தமிழகத்தின் சென்னை,கோவை,மதுரை என்று அணைத்து முக்கிய மாவட்டங்களிலும் மின்னணு பொருட்கள் முதல் மளிகை பொருட்கள் வரை மொத்த வர்த்தக தொழிலில் (whole sale business) கோலோச்சி வருபவர்களில் நூற்றுக்கு 80 விழுக்காடு வடநாட்டை சேர்ந்த மார்வாடிகள் தான். எந்த மாநிலத்தில் தமிழன் தன் சொந்த அடையாளத்தோடு வாழ முடிகிறது . கர்நாடக மாநிலத்தில் எந்த அசம்பாவிதம் நடந்தாலும் முதலில் தாக்கி சூறை ஆட படுவது அங்கு இருக்கும் தமிழர்களின் வணிக நிறுவனங்கள் தான். காவேரி நீரை திறந்து விட சொல்லி இங்கு ஆர்ப்பாட்டம் நடத்தினால் உடனே கன்னட வெறியர்களால் அங்கு இருக்கும் தமிழனின் சொத்து தான் சுரண்டி சூறை ஆட படுகிறது. அவ்வுளவு ஏன் கன்னட நடிகர் ராஜ்குமார் இறந்து போன அன்று கலவரத்தில் இடு பட்ட கன்னட வெறி நாய்கள் தமிழனின் கடைகளில் வீடுகளில் புகுந்து தாக்குதல் நடத்தினார்களே.

  //இதைத் தாண்டி எல்லா இடங்களிலும் உழைக்கும் மக்களிடையே மொழிவெறி என்பது கிஞ்சித்தும் கிடையாது.//

  எதன் அடிப்படையில் ஆசிரியர் இப்படி சொல்கிறார் என்று தெரியவில்லை. காவேரியில் இருந்து தமிழகத்திற்கு நீர் தர கூடாது என்று போரடிவர்களில் பெரும்பான்மையோர் மாண்டியா என்னும் ஊரின் விவசாய பாட்டாளி வர்க்கம் தான். ஏன் காவேரியில் இருந்து பெரும் தண்ணீரை என்ன தமிழகத்தில் இருக்கும் பன்னாட்டு நிறுவனங்களும் பணக்கார சாராய ஆலைகளுமா பயன்படுத்த போகிறது தினமும் வானத்தை பார்த்து மழைக்கு ஏங்கும் தமிழக விவசாயி தான் பயன் அடைய போகிறான். இந்த உண்மையை ஒன்றும் உணராதவர்கள் இல்லை மாண்டியா விவசாயிகள். அதே போன்று பெரியார் அணையை உடைக்க வேண்டும் என்று கூறும் மலையாளிகளின் திமிரை என்னென்று சொல்வது. இங்கு இருந்து பால், அரிசி, மாட்டிறைச்சி, காய்கறி போன்றைவைகளை பெற்று கொன்று தமிழ் நாட்டிற்க்கு தண்ணீர் தர முடியாது பெரியார் அணையை உடைப்பேன் என்று கூறும் மலையாளிகளின் பரந்த மனப்பான்மையை என்னென்று சொல்வது. சொன்னாரே கேரளா நீர் பாசன துறை அமைச்சர் பிரேமச்சந்திரன் பெரியார் அணையை உடைத்தால் அந்த அணையின் நீரை நம்பி இருக்கும் தமிழக மக்கள் விவசாயிகள் பாதிக்க படமாட்டார்கள என்ற கேள்விக்கு உடனே அவர் ” பெரியார் ஆணை மிக பலவீனமாக உள்ளது எந்நேரத்திலும் அது உடைந்து அணையை சுற்றி இருக்கும் மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம். தமிழ்நாட்டின் விவசாயத்தை விட இங்கு இருக்கும் எங்கள் மக்களின் உயிர் தான் முக்கியம்” என்று ஒரு அண்ட புளுகு புளுகினாரே. பெரியார் ஆணை நல்ல நிலையில் தான் இருக்கிறது. இதை எதிர்த்து எந்த கம்யூனிஸ்ட் கட்சி இங்கு ஆர்ப்பாட்டம் நடத்தியது. பிரேமச்சந்திரன் சொன்ன கருத்தை தமிழ்நாட்டில் இருக்கும் டீ கடை நடத்தும் மலையாளி கூட ஆதரிக்கிறான். வேண்டுமானால் தமிழன் என்கிற அடையாளம் தெரியாமல் கேரளாவை சேர்ந்தவன் என்று கூறி மலையாளத்தில் பேசி பாருங்கள் அப்போது தெரியும் மலையாள பாட்டாளி வர்க்கம் எப்படி யோசிக்கிறது என்று. முல்லை பெரியார் ஆணை மீது கை வைத்து பார்க்கட்டும் அப்போது மலையாளிகள் தெரிந்து கொள்வார்கள் தமிழர்கள் யார் என்று. ஒவ்வொரு தமிழனும் கேரளாந்தகனாக மாறுவான். தமிழரின் இன எழுச்சி ஏற்றம் பெறுமாக.

  • நண்பரே, உங்கள் வாதப்படி காவிரியிலும், முல்லைப் பெரியாரிலும் நீர் தர முறையே கன்னட, மலையாள மக்கள் மறுக்கிறார்கள். சரி, இதற்கு நீங்கள் என்ன தீர்வு வைத்திருக்கிறீர்கள்? தமிழன் உணர்வு பெற்று இரு மாநில மக்களோடு போர் தொடுக்க வேண்டுமா? இதன்றி வேறென்ன தீர்வு சாத்தியமாகும், கொஞ்சம் விளக்கமாக சொல்லுங்களேன்.

   கர்நாடகா, கேரளா இரண்டிலும் கட்சிகளும், சில இனவெறி அமைப்புகளும் இத்தகைய இனவெறியைத் தூண்டுகிறார்கள். அதற்கு ஓரளவு அந்த மக்களும் பலியாகியிருக்கிறார்கள் என்பது உண்மைதான். அதற்கு நாம் மாநிலங்களை சமத்துவத்தோடு ஆட்சி செய்வதாக கூறும் மத்திய அரசைத்தான் மிரட்ட வேண்டும். தமிழகத்தின் நியாயமான பங்கை உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பிறகும் அமல்படுத்த மறுக்கும் மத்திய அரசை எதிர்த்து போர்க்குணமிக்க போராட்டங்களை நடத்த வேண்டும். மத்திய அரசுக்கு தமிழக மக்கள் வரி கொடுக்க மாட்டார்கள், நிர்வாக அமைப்புக்கு அடிபணிய மாட்டார்கள் என்று போராடினால் அது மத்திய அரசுக்கு பெரும் சிக்கலை தோற்றுவிக்கும். ஏனெனில் இப்போதுள்ள மாநிலங்களை ஆளுவது மத்திய அரசுதானே?

 16. காலம் தந்த படிப்பினைகளில் இருந்து வினவு திருந்தியதாகத் தெரியவில்லை.வினவு ஒரு தமிழினத் துரோகி என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்து விட்டீர்கள்.இப்படி வந்தேறிகளுக்கு சாமரசம் வீசியதால் தான் சிங்களன் என்ற வந்தேறி தமிழனை ஒடுக்கும்படி ஆயிற்று.நிச்சயம் தமிழர்கள் இப்படி செய்திருக்க மாட்டார்கள் பதில் இப்படி தமிழனை தமிழ் சமூகத்தையும் இழிவு படுத்துவது போல தான் இருக்கும் என்பதை தெரிந்து கொண்டே கேட்கப் பட்ட கேள்வி தான் இது.ஆந்த்ராவில் தமிழர்கள் எப்படி மதிக்கப் படுகிறார்கள் என்பதையும் கொஞ்சம் ஒரு எட்டு போய் பார்த்து விட்டு வந்து அதையும் எழுதினால் உங்களின் நடு நிலையை ஏற்றுக் கொள்ளலாம்.மிக மோசமான தன்னலவாதிகள் தான் இந்த கூட்டம்.கொங்குத் தமிழ் கச்சடாவா? கச்சடா என்ற வார்த்தையே கொங்குத் தமிழில் இல்லை மிகவும் மரியாதையான தமிழ் கொங்குத் தமிழ்

  • எழில், புலி படத்தை போட்டுவிட்டு புலியின் உறுமலுக்குப் பதில் பூனை கத்துவது போல பேசினால் எப்படி?

   தமிழ்நாட்டு தமிழர்களும், ஈழத்தமிழர்களும் ஒரே தேசிய இனமல்ல. இருவேறு தேசிய இன மக்கள். இருவருக்கும் மொழி, பண்பாடு என்று பல ஒற்றுமை இருந்தாலும் இருவேறுதேசிய இனங்கள்தான். அமெரிக்காவிலும் ஆங்கிலம், இங்கிலாந்திலும் ஆங்கிலம் என்றாலும் இருவரும் வேறு நாட்டு மக்கள்தானே?

   இலங்கையில் சிங்கள மக்கள்தான் பெரும்பான்மை தேசிய இனம். அவ்வளவு பெரிய கூட்டத்தை சிறுபான்மை தமிழ் மக்கள் உள்ளே விட்டு ஆட்சியில் அமர்த்தினார்களா? கணக்குக்கு பொருத்தமாக பேசுங்கள் எழில். அடுத்து கொங்கு தமிழ் கச்சடா என்று எழுதவில்லை. கச்சாவான என்றுதான் எழுதியிருக்கிறோம். கச்சா என்றால் ராவான அல்லது சமையல் செய்யப்படாதா காய்கறிகள் போல என்று வையுங்களேன். இழிவு படுத்தும் பொருள் அதில் இல்லை. மேலும் கொங்கு தமிழ், கொங்கு பண்பாடு, கொங்கு நாட்டு மக்கள் அனைத்திலும் உள்ள கொங்கு என்பது கொங்கு வேளாள கவுண்டர்களின் ஆதிக்க சாதிப் பண்பாட்டையே குறிக்கிறது.

   இறுதியாக ஏற்கனவே சொன்னதுதான். உங்களுக்கு வரலாறு, புவியியல் எதுவுமே தெரியவில்லை. வாருங்கள் நேரில் பேசி கற்கலாம் என்றாலும் உங்கள் ஈகோ தடுக்கிறது. என்ன செய்வதென்று தெரியவில்லை. நீங்களே ஒரு வழி சொல்லுங்கள். எல்லா பிரச்சினைகளையும் மொத்தமாக ஃபைசல் செய்யலாம்.

   • ” இலங்கையில் சிங்கள மக்கள்தான் பெரும்பான்மை தேசிய இனம். அவ்வளவு பெரிய கூட்டத்தை சிறுபான்மை தமிழ் மக்கள் உள்ளே விட்டு ஆட்சியில் அமர்த்தினார்களா? ”

    உண்மையான கருத்து…

   • வினவு உங்களுக்குதான் வரலாறு புவியியல் மட்டுமல்ல குடிமையியல், சமூகவியல் கூடத் தெரியவில்லை. ஈழத்தமிழனும் இந்தியத் தமிழனும் இரு வேறு தேசிய இனம். அது தனித்தனி நாட்டில் வசிப்பதால் தனி தனி தேசிய இனம் என்ற வகைப்பாடு எந்த அடிப்படையில் சரி? முதலில் இந்த தேசிய இனம் என்ற முட்டாள் தனமான வாதத்தை தூக்கி எறியுங்கள். ருசியாவில் கேக் சாப்பிடுகிறார்கள் என்றால் இங்கும் சாப்பிட முடியாது.ருசிய மாதிரியை இங்கு கொண்டு வந்து காபி பேஸ்ட் செய்ய முயலாதீர்கள்.
    ஜிம்பாப்வே யில் வெள்ளையன் அடிபடும் போது அமெரிக்கா,பிரிட்டன்,ஆஸ்திரேலிய வெள்ளையனுக்கும் துடிக்கிறதே அது எந்த உணர்வு? அது வேறு நாடு அது அவர்கள் பிரச்சினை என்று விட முடியுமா?
    உலகத்திலேயே வினவிற்கு மட்டும் தான் இது போன்ற சிந்தனைகள் வரும்.

    // தமிழ்நாட்டில் இருக்கும் அதுவும் டாடா சுமோவில் நிரப்புமளவு தொண்டர் படையுள்ள கட்சிகளைச் சேர்ந்த சில தமிழின வெறியர்கள்தான்// உங்களுக்கு மட்டும் பல கோடி வேண்டாம் லட்சக் கணக்கான உறுப்பினர்கள் உள்ளார்களா? உங்களது அமைப்பு இயங்குவதே இணையத்தில்தான் என்று ஒரு தோற்றம் இருக்கிறது உங்களது புரட்சி அல்லது நீங்கள் நம்பும் புரட்சி என்பது இணையத்தில் தோன்றி இணையத்தில் வளர்ந்து இணையத்திலேயே பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை நிலை நாட்டி பின்னர் இணையத்திலேயே திரிபு வாதிகளும் வந்து இணையத்திலேயே மரித்து விடும் என்று தான் தோன்றுகிறது. அவர்கள் எண்ணிக்கையில் சிறிதாக இருக்கலாம் நீங்கள் சொன்னதைப் போலவே தான் இது பச்சை மிளகாய்க்கும் ம.க.இ.க வினவு என்ற பூசணிக்காய்க்கும் உள்ள வேறுபாடு தான் என்றே வைத்துக் கொள்ளுங்கள்

    இங்கு இனம் என்ற சொல் தான் முதன்மையானது.அது மொழியை மட்டும் அடிப்படையாகக் கொண்டது.அதற்குள் தாய்மொழியை கொண்டவர்கள் மட்டுமே அடங்குவார்கள்.வந்தேறிகள் தமிழ் பேசுகிறார்கள் தமிழனை விட நன்றாக எழுதுகிறார்கள் என்பதெல்லாம் வெறும் அறிவு தொடர்புடையது மட்டுமே. அவர்களின் உணர்வென்பது அவர்களின் அவர்களின் தாய் மொழி வழிப்பட்டது மட்டுமே

    அதாவது காவிரி கலவரத்தின் போது இங்குள்ள கன்னடர்கள் கள்ள மௌனம் சாதிப்பதும் முல்லைப் பெரியாரில் இங்குள்ள மலையாளிகள் கள்ள மௌனம் சாதிப்பதும் அந்தப் புள்ளியில் தான்.கருநாடகத்தில் தமிழன் தாக்கப்படும்போது தமிழர்கள் கன்னடர்களைத் தாக்கினார்களா? அந்த பெருந்தன்மை எனும் இளிச்சவாயத்தனம் என்ன தீர்வைக் கொண்டு வந்தது? காவிரியில் தண்ணீரே தர முடியாது என்று ஆணவமாகத் தான் முடிந்தது. இதே நாம் தனித் தனி நாடுகளாக இருந்தால் என்ன நடந்திருக்கும்? போர் அறிவிப்பு வந்து ஐ.நா தலையிட்டு ஒரு தீர்வைக் கொண்டு வந்திருக்கும் இந்தியா பாக்கிஸ்தானுக்கு இடையில் வந்த சிந்து நதி நீர் பிரச்சினைக்கு வந்த தீர்வு போல நிச்சயம் ஒரு தீர்வு வந்திருக்கும். சிங்களவன் ஒரு வந்தேறி என்பதற்கு வரலாற்று ஆதாரங்கள் இருக்கிறது ஒரு ஒரியக் காட்டுமிராண்டி கூட்டம் தான் சிங்களவன்.
    அடுத்தது கொங்கு //மேலும் கொங்கு தமிழ், கொங்கு பண்பாடு, கொங்கு நாட்டு மக்கள் அனைத்திலும் உள்ள கொங்கு என்பது கொங்கு வேளாள கவுண்டர்களின் ஆதிக்க சாதிப் பண்பாட்டையே குறிக்கிறது. //

    உங்களின் சுடலை ஞானம் புல்லரிக்க வைக்கறது வினவு. ஒன்றைத் தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள்
    கொங்கு என்ற அடை மொழி கொங்கு வெள்ளாளர்களுக்கு மட்டுமே உரித்தானது அல்ல அது கொங்கு செட்டியார்கள் கொங்கு நாவிதர்கள்,வளர் கொங்கு வெள்ளாளர் என்ற மற்ற சாதிகளுக்கும் உரித்தானது.கொங்கு செட்டியார்கள் கொங்கு மண்டலத்தில் மட்டும் அவர்கள் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் என்று அரசாங்கமே அறிவித்துள்ளது. மண்ணின் பெயர் தான் மக்களுக்கு சூட்டப் பட்டதே தவிர மக்களின் பெயர் மண்ணுக்கு சூட்டப் படவில்லை இந்த குறைந்தபட்ச அறிவு கூட உங்களுக்கு கிடையாதா? சென்னையின் வெப்பம் உங்களது மூளையையும் சேர்த்து வரள செய்து விட்டதா?

    கர்நாடகா, கேரளா இரண்டிலும் கட்சிகளும், சில இனவெறி அமைப்புகளும் இத்தகைய இனவெறியைத் தூண்டுகிறார்கள். அதற்கு ஓரளவு அந்த மக்களும் பலியாகியிருக்கிறார்கள் என்பது உண்மைதான்// எப்பேர்ப்பட்ட உண்மை இது. ஓரளவாம் ஓரளவு அண்ணாச்சி ஓரளவு அல்ல முழுமையாக பலி ஆகி இருக்கிறார்கள். உங்களுக்கு தான் எந்த ஊருக்கும் போகாமலேயே சென்னையில் இருந்தே உங்களின் ஆழ் மன உணர்வு எல்லா தகவல்களையும் தருகிறதே. இது ஜெயமோகன் பாணியில் உள்ளொளி என்று கருதலாமா?

    இறுதியாக
    உங்களிடம் பாடம் படிக்கும் அளவுக்கு நான் இல்லை என்று பல முறை சொல்லிவிட்டேன் அந்தத் தகுதி சென்னையில் குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டும் உங்களுக்கு இல்லை. ஓர் Phd ஆய்வாளன் இரண்டாம் வகுப்பு மாணவனிடம் பாடம் படிக்க முடியுமா? அதியமானின் நிலைப்பாடு தான் எனதும்.

    • எழில்:
     “ஓர் PhD ஆய்வாளன் இரண்டாம் வகுப்பு மாணவனிடம் பாடம் படிக்க முடியுமா?

     பல பி.எச்டிக்களுக்கு உலக அறிவு கம்மி.

     பல PhD ஆய்வாளர்களுக்கு உலக அறிவை வழங்க இரண்டாம் வகுப்புப் படிப்பே அதிகம்.”

    • எழில், செயமோகன் இருவருமே பெற்று Pக்D பலருக்கு அதைபெற்றுத்தரும்பணியில் இருக்கும் என்னிடம் பாடம் பயில தயாரா?
     ஓர் Pக்D , அல்ல ஒரு Pக்D என்பதே சரி. பிழைநீக்கி எழுதும் முறை – கி-ஆ-பே-வி யின் நூலை நீஙகள் அவசியம் படிக்க வேண்டும். செயமோகனுக்கு அந்த நூல் அவசியமில்லை. ஏனெனில் அவர் பெயரே தமிழ் இல்லையே!

     இனம் மொழியால், பண்பாட்டால், நாட்டால் வருவதல்ல. பிறப்பால் வருவது. தென்னாப்பிரிக்காவில் தமிழ் குடும்பத்தில் பிறந்து, ஆங்கிலமே பிறப்பு தொடங்கி தாய்மிழியாய்ப் பேசினாலும் அக்குழந்தை தமிழ்க்குழந்தை. தமிழ்நாட்டிட்டிலே பிறந்து, தமிழ் மட்டுமே பேசினாலும், ஐரோப்பியர்களுக்கு பிறந்த குழந்தை ஐரோப்பிய குழந்தையேதான். இனம் மரபணுவால் கெனெடிச்ச் தீர்மானிக்கப் படுகிறது.

     என்ன எழில், செயமோகன் உங்கள் அறிவுக்கு அப்பால் எழுதிவிட்டேனோ?

     ஈழத்தமிழனும் தமிழகத் தமிழனும் ஒரே இனமா இல்லையா என்பது அவர்களின் பரபணுவை ஆய்ந்தால் தெரியும். சோழனும் ஈழத்தமிழனும் மண உறவு கொண்ட்டிருந்ததற்கும் பாண்டியனும் சிங்களனும் மண உறவு கொண்ட்டிருந்ததற்கும் கல்வெட்டு செப்பேடு சான்றுகள் உள்ளன. பிற்காலச் சோழர்கள் சளுக்கியர்களோடு மண உறவு கொண்ட்டிருந்ததற்கும் கல்வெட்டு செப்பேடு சான்றுகள் உள்ளன. பிற்காலத்தில் கிழக்கு சளுக்கியர்களே தெலுங்கர் என்றும் மேற்கு சளுக்கியர்களே கன்னடியர்கள் என்றும் ஆனார்கள். இன்றும் கன்னடதில் 50 விழுக்காடு தமிழ்ச் சொற்களே இருக்கின்றன. வட்டல் நாகராசு வாரிசுகள் வேண்டுமானால் வேண்டுமானால் மீதமுள்ள 50 விழுக்காடு கன்னட சொற்களோடு உரையாடிக்கொள்ளலாம்.

     சளுக்கியர்கள் தங்களுக்கு வடக்கே இருந்த அங்க, வங்க, பாஞ்சால, மகத மக்களோடு மண உறவு வைத்திருந்தார்கள். இராசராசனுக்கும் சளுக்கிய இளவரசிக்கும் பிறந்த்தவன் தான் தமிழினம் மிகப்போற்றும் மாவீரன் இராசேந்திரன்.

     தமிழ் மன்னர்கள் சளுக்கியர்களையும் பிற அரசுகளையும் வென்றபோது தமிழ் வீரர்கள் அந்தந்த நாட்டிலேயே தங்கி அந்த நாட்டுப்பெண்களை மணந்து பின் சோழ, சேர, பாண்டிய நாட்டுக்கு குடிபெயர்ந்ததும், பிற நாட்டு மன்னர்கள் சோழ, சேர, பாண்டிய நாடுகளை வென்றபோது அந்த நாட்டு வீரர்கள் தமிழ்ப் பெண்களை மணந்து தமிழ்நாட்டிலேயே வாழ்ந்த்ததும் அன்றி அவர்கள் நாட்டுக்கு குடிபெயர்ந்ததும் நிறைய நடந்தன. தமிழ் மன்னர்களின் கல்வெட்டுகள் மனிப்பிரவாளம் மற்றும் கிரந்த எழுத்துக்களை கையாண்டிருப்பதும் நிறையக் காணலாம்.

     என்ன எழில், உங்கள் புலிப் படத்தை தாண்டி எழுதுகிறேனோ?

     கொஞ்சம் குழப்பம்தான், யார் எந்த இனம் என்பது? கலப்புக்கு கலப்புக்கு கலப்புக்கு கலப்பு என பல நூற்றாண்டுகளைத் தாண்டியது இந்திய ஈழ மக்கள் வரலாறூ. சிங்களர்கள் ஒன்றும் வங்க அரசிக்கும் சிங்கத்துக்கும் பிறந்தவர்கள் என்று மகாவம்சம் பிதற்றுவதை நான் நம்பவில்லை. நாங்குனேரி நாஞ்சில் வின்சென்ட் நாசரேத்திலிருந்தும், அறந்தாங்கி அல்லாபிச்சை அரேபியாவிலிருந்தும் குதிக்கவில்லை.

     ஆனால் ஐரோப்பிய, அரேபிய கலப்பின மக்களும், கலப்பின மக்களோடு கலந்த மக்களும் இருக்கிறார்கள்.

     ஆங்கிலேயர்களுக்குமுன் இந்தியா என்ற நாடும் இருந்ததில்லை, தமிழ்நாடு என்று ஒன்றும் இருந்ததில்லை. ஆங்கிலேயர் வந்த போது ஏன், சேர, சோழ, பாண்டிய நாடுகளே இருக்கவில்லை. புதுக்கோட்டை, சிவகங்கை, பாஞ்சாலங்குறிச்சி என்பது போன்று பலகுட்டி அரசுகளே இருந்தன. பல தமிழர் பகுதிகள் நாயக்கர்களால் (கட்டபொம்மன் உட்பட)ஆளப்பட்டிருந்தன.

     தமிழ்பேசும் பார்ப்பணர்களின் தாய்மொழி முழுக்க முழுக்க 100 விழுக்காடு தமிழே. அகம் என்பதுபோன்ற பல தூய தமிழ்ச் சொற்கள் பார்ப்பணர்களால் மட்டுமே வழங்கப்படுகிறது. சமசுகிரதம் என்றால் முழுவதும் ஆக்கப்படாத (சமைக்கப்படாத) மொழி என்றே பெயர். இதை ஒரு பார்ப்பணரிடம் இருந்த்துதால் கற்றுக்கொண்டேன். கட்டளைக்களித்துரையில் கவிதைபாடி மாநில அளவில் கதை கட்டுரை கவிதைப்போட்டிகளில் வென்ற நான் இந்தியும் சமக்கிரதமும் கல்லூரிநாட்களில் பயின்றேன். பார்ப்பணர்களின் தாய்மொழி சமக்கிரதமல்ல, தமிழே. ஆங்கிலத்தில் science, engineering,medicine, law , பயின்றதால் தமிழர் ஐரோப்பியரும் அல்லர்; வேதங்களை சமக்கிரதத்தில் பயின்று ஓதிய பார்ப்பணர்கள் ஆரியர்களூம் அல்லர். உண்மையைச் சொல்லப்போனால் நிறையப் பார்ப்பணர்களுக்கு சமக்கிரதத்தில் வேதங்களை மனப்பாடம் செய்தார்களே தவிர அதன் பொருள் தெரியாது. நாம் எப்படி பல ஆங்கில பாடங்களை ஆங்கிலத்திலேயே படிக்கிறோமோ அதேபோல் வேதங்களை சமக்கிரதத்திலேயே பயில்கிறார்கள். பாவம். நம்மவர்கள் பலர் பொருள் புரியாமல் அப்படி ஆங்கிலத்தில் மனப்பாடம் செய்து தேர்வு எழுதி மாநில அளவில் முதலிடம் வருவதுபோல் பார்ப்பணர்களில் பலரும் வேதங்களை சமக்கிரதத்திலேயே மனப்பாடம் செய்து ஓதிக்கொண்டிருக்கிறார்கள். அந்த உண்மையான தமிழர்களை ஆரியர் என்று அநியாயமாக அறிவில்லாமல் சொல்வதை நிறுத்துங்கள்.

     என்னளவுக்கு மொழி, இலக்கியம், இலக்கணம், பண்டைதமிழர் வரலாறு நீங்கள் படித்திருக்க வாய்ப்பில்லை. நீங்கள் மட்டுமல்ல, நீங்கள்நினைத்துக்கொண்டிருக்கிறீர்களே பெரிய அறிஞர்கள் என்று அவர்களுக்கும் முடியாத ஒன்றே.