உதயமாகிறது முற்போக்குப் பண்பாட்டிற்கானதொரு புதிய இணையதளம்!

புரட்சிகர, முற்போக்கு அரசியல், பண்பாட்டிற்கான முதல் கலைக்களஞ்சிய இணையதளமாக, பெருவிழா.காம் இருக்கும் என்று கருதுகிறோம். மிகக் குறுகிய காலத்தில் இவ்விணையதளத்தைத் தொடங்கியுள்ளோம்.

அன்பார்ந்த உழைக்கும் மக்களே, ஜனநாயக சக்திகளே!

“சாதி, மதம் கடந்து காதலிக்க, மணம் முடிக்க வேண்டும் ஜனநாயகம்” என்கிற பண்பாட்டுப் போர் முழக்கத்தோடு கடந்த டிசம்பர் 28 ஆம் தேதி மக்கள் அதிகாரக் கழகத்தின் மாநில இணைச் செயலாளர் தோழர் ரவி – தோழர் ராதிகா அவர்களின் புரட்சிகர மண விழா எழுச்சிகரமாக நடைபெற்றது. இம்மண விழா ஜனநாயக சக்திகள், இளைஞர்கள், பெண்கள் என அனைவர் மத்தியிலும் பெருவாரியான ஆதரவைப் பெற்றது.

தமிழ்நாட்டில் ஆணவப் படுகொலைகள், சாதிய தாக்குதல் அதிகரித்து வருவதற்கு ஆதிக்கச் சாதிவெறிச் சங்கங்களும் அவற்றில் ஊடுருவியுள்ள ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. சங்கப் பரிவாரக் கும்பலும்தான் காரணம். உழைக்கும் மக்கள் மத்தியில் அதிகரித்துவரும் சாதியற்ற, சமத்துவ உணர்வின் வெளிப்பாடுதான் சாதி, மதம் கடந்த உறவுகள், மணங்கள். இந்த உறவுக்கு எதிராகப் பிற்போக்குச் சக்திகள் தொடுக்கும் போரே சாதிய தாக்குதல்களும், ஆணவப் படுகொலைகளுமாகும். இந்தப் பிற்போக்குப் போருக்கு எதிராக, சாதிகளற்ற சமத்துவ சமுதாயத்தைப் படைப்பதற்கான ஒரு பண்பாட்டுப் போரை நாம் தொடுக்க வேண்டும் என்பதை உணர்த்துவதன் தொடக்கமாக, தோழர் ரவி – தோழர் ராதிகா அவர்களின் மண விழா மக்கள் பங்கேற்புடன் எழுச்சிகரமாக நடத்தப்பட்டது.

சாதியற்ற சமத்துவப் பண்பாட்டைப் படைக்கும் நோக்கத்தில், தமிழ்நாட்டின், உழைக்கும் மக்களின் முற்போக்குப் பண்பாட்டை உயர்த்திப் பிடிக்க வேண்டியுள்ளது. அந்தவகையில், எழுச்சிகரமாக நடந்தேறிய இந்த மணவிழாவின் தொடர்ச்சியாக, “தமிழ்நாட்டுப் பண்பாட்டுப் பெருவிழா”-வை வருகின்ற பிப்ரவரி 21 ஆம் தேதி, மதுரை தமுக்கம் மைதானத்தில் நடத்த உள்ளோம்.

இப்பெருவிழாவில், பார்ப்பனிய எதிர்ப்பு, முற்போக்கு மரபை உணர்த்தும் கலைநிகழ்ச்சிகள், ஆணவப் படுகொலையின் இரத்தச் சாட்சிகள், சாதி, மத மறுப்பு இணையர்களின் அனுபவப் பகிர்வுகள், கருத்துரைகள் கண்காட்சிகள், ஓவியக் காட்சிகள், அரசியல் முன்னணியாளர்களின் எழுச்சி உரைகள் ஆகிய நிகழ்ச்சிகள் இடம்பெற இருக்கின்றன.

இப்பெருவிழாவிற்கான எமது அறிமுகத் துண்டறிக்கையானது ஜனநாயக சக்திகள், உழைக்கும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த அறிமுகத் துண்டறிக்கையை சமூக ஊடகப் பக்கங்களில் பல இலட்சக்கணக்கானவர்கள் பார்த்தும் பகிர்ந்தும் வருகின்றனர். மக்கள் அதிகாரக் கழகத்தின் மாநில இணைச் செயலாளர்கள் மேற்கொண்டுள்ள “எழுச்சிப் பயணத்திற்கு” ஜனநாயக சக்திகள் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் எமது தோழர்கள் மேற்கொண்டு வருகின்ற பரப்புரையானது உழைக்கும் மக்கள் மத்தியில் வீச்சாக சென்று கொண்டிருக்கிறது.

“சாதி, மதம் கடந்து காதலிக்க மணம் முடிக்க வேண்டும் ஜனநாயகம்” என்கிற முழக்கமானது மக்களிடம் பெரும் ஆதரவைப் பெற்றுவருவதையே இந்தப் பரப்புரைகள் நமக்கு உணர்த்துகின்றன.

“தமிழ்நாட்டுப் பண்பாட்டுப் பெருவிழா”வை ஒட்டி மேற்கொள்ளப்படும் அனைத்து நடவடிக்கைகளையும் ஆவணப்பட்டுத்தும் விதமாக, பெருவிழா.காம் (www.peruvizha.com) என்கிற இணைய முகவரியில் ஒரு கலைக்களஞ்சிய வகைப்பட்ட இணைய தளத்தைத் தொடங்கியுள்ளோம். இத்துடன், சமூக ஊடகப் பக்கங்களையும் உருவாக்கியுள்ளோம். இதற்கான, முகநூல் பக்கத்தின் பெயர்: www.facebook.com/peruvizha இன்ஸ்டாகிராம் பெயர்: www.instagram.com/peruvizha பின்தொடரவும் கேட்டுக் கொள்கிறோம்.

இவற்றின் இலச்சினையாக, தமிழ் மொழியின் சிறப்புகளில் முக்கியமான ”ழ” என்ற எழுத்தை அடையாளப்படுத்தியுள்ளோம்.

இந்த எமது இணையதளம் 02-02-2026 ஆம் தேதி மாலை 7 மணியிலிருந்து இயங்கத் தொடங்கவுள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த எமது இணையதளத்திற்கு வருகைப் புரிந்தும், எமது பதிவுகளை மக்கள் மத்தியில் பரப்பியும் ஆதரவளிக்குமாறும் முற்போக்கு, ஜனநாயக சக்திகளையும் உழைக்கும் மக்களையும் எமது அமைப்புகளின் நட்புச் சக்திகளையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

இணைய வழியில் தமிழ்நாட்டின் முற்போக்குப் பண்பாட்டை உயர்த்திப் பிடிக்கும் ஓர் ஆயுதமாக இந்த இணைய தளமும், சமூக ஊடகப் பக்கங்களும் அமையும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

“தமிழ்நாட்டுப் பண்பாட்டுப் பெருவிழா” என்கின்ற இந்த இயக்கமானது, எமது அமைப்பான மக்கள் கலை இலக்கியக் கழகம், ஏகாதிபத்திய கார்ப்பரேட் சீரழிவுப் பண்பாட்டுக்கு எதிராகவும் பார்ப்பனிய பிற்போக்குப் பண்பாட்டுக்கு எதிராகவும் உழைக்கும் மக்களின் பண்பாட்டை உயர்த்திப் பிடித்து, 90-களில் நடத்தி வந்த “தமிழ் மக்கள் இசைவிழா”வின் தொடர்ச்சியாகும்.

இன்று, ஆணவப் படுகொலைகள், சாதிவெறித் தாக்குதல்களுக்கு எதிராகத் தொடங்கியுள்ள இந்த, தமிழ்நாட்டுப் பண்பாட்டுப் பெருவிழாவானது, பாசிசத்திற்கு எதிராக உழைக்கும் மக்களைப் பண்பாடு ரீதியாக திரட்டும் ஓர் அரங்கமாகத் திகழும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

அந்தவகையில், பெருவிழா.காம் என்கிற எமது இணைய தளத்தில், தமிழ்நாட்டின் பார்ப்பனிய எதிர்ப்பு மரபு, முற்போக்குச் சிந்தனைகள், உழைக்கும் மக்களின் முன்னேறிய பண்பாடு, கலை, இலக்கியங்கள், நாடகங்கள், திரைப்படங்களையும், சமூக மாற்றத்திற்காகப் போராடி இரத்தச் சாட்சிகளாகியுள்ள ஈகியர்களையும் ஆவணப்படுத்துக்கிறோம். தமிழ்நாட்டுப் பண்பாட்டுப் பெருவிழாவின் நிகழ்ச்சிகளையும் பதிவேற்றுகிறோம்.

ஜனநாயக சக்திகளும், உழைக்கும் மக்களும் மேற்கண்ட நோக்கத்திற்கு உகந்த தங்களது பகுதியின் செய்திகள், ஆவணங்களை எமது info@peruvizha.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

புரட்சிகர, முற்போக்கு அரசியல், பண்பாட்டிற்கான முதல் கலைக்களஞ்சிய இணையதளமாக, பெருவிழா.காம் இருக்கும் என்று கருதுகிறோம். மிகக் குறுகிய காலத்தில் இவ்விணையதளத்தைத் தொடங்கியுள்ளோம். இதில் நிறை, குறைகள் இருந்தால் அவற்றை பற்றிய தங்களது விமர்சனங்கள், கருத்துகள், ஆலோசனைகளை info@peruvizha.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கும் பின்னூட்டங்களிலும் 9626162209 என்கிற எமது எண்ணுக்கும் தொடர்பு கொண்டு தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

மிக கடுமையான பொருளாதார நெருக்கடியில் இந்த இயக்கத்தைத் தொடங்கி, இணைய தளத்தையும் தொடங்கியுள்ளோம். இதற்கு ஜனநாயக சக்திகள் தங்களால் இயன்ற நிதியை அளித்து உதவுமாறுக் கேட்டுக்கொள்கிறோம்.

மக்கள் அதிகாரக் கழகம்,
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
தமிழ்நாடு-புதுச்சேரி.

தொடர்பு எண்:
9962366321 – 9791653200 – 9444836641 – 7397404242

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க