privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கஅதிரடி ரிலீஸ் - ஈழத்தாய் இரண்டாவது அவதாரம்!

அதிரடி ரிலீஸ் – ஈழத்தாய் இரண்டாவது அவதாரம்!

-

ஜெயலலிதாமிழக சட்டசபையில் கடந்த புதன்கிழமையன்று இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக அறிவிக்க கோரியும், இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்கும்படியும் வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இணையத்திலும், தமிழ்தேசிய ஆர்வலர்கள் மத்தியிலும் இதற்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. எதுவுமே நடக்காத நிலையில் இந்த அளவுக்காவது தீர்மானம் போட்டிருக்கும் ஜெயாவை பாராட்ட வேண்டும் என்பதுதான் அனைவரது கருத்தாகவும் உள்ளது.

தீர்மானத்தை ஆதரித்த திமுக கடைசியில் விஜயகாந்தின் குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்க அவகாசம் அளிக்கப்படாத காரணத்தால் வெளிநடப்பு செய்தது. மறுநாள் சட்டசபையில் கச்சத்தீவை மீட்பதற்காக தாம் நடத்தும் சட்டப் போராட்டத்தில் வருவாய்த்துறையையும் ஒரு வாதியாக சேர்க்க உச்சநீதி மன்றத்திடமும் கோரி ஒரு தீர்மானத்தை கொண்டு வந்தார் ஜெயலலிதா.

வருவாய்த்துறையிடம் ஆதாரமாக உள்ள 1972-ல் வெளியிடப்பட்ட ராமநாதபுரம் மாவட்ட விவரச் சுவடி, அதற்கு முன் ராஜா ராமராவ் வெளியிட்ட ராமநாதபுர மாவட்ட மானுவல், 1915, 1929 மற்றும் 1933-ஆம் ஆண்டுகளில் வெளியிடப்பட்ட ராமநாதபுர மாவட்டத்துப் புள்ளிவிவரங்கள் அடங்கிய பின்னிணைப்பு, 1899-ல் ஏ.ஜெ. ஸ்டூவர்ட்டு எழுதிய சென்னை ராசதானியிலுள்ள திருநெல்வேலி மாவட்ட மானுவல் போன்ற பல்வேறு ஆதாரங்களைக் கொண்டு வெளியிடப்பட்டது என்றும், அதில், ராமேசுவரத்திற்கு வட கிழக்கே, 10 மைல் தொலைவில் கச்சத்தீவு இருக்கிறது என்றும்; ஜமீன் ஒழிப்புக்கு முன்னர், ராமநாதபுரம் அரசர் இத்தீவை தனி நபர்களுக்கு குத்தகைக்கு விட்டுக் கொண்டிருந்தார் என்றும்; இந்தத் தீவின் சர்வே எண் 1250; பரப்பளவு 285.20 ஏக்கர் என்றும்; இந்தத் தீவு ராமேஸ்வரம் கர்ணத்தின் அதிகார எல்லைக்கு உட்பட்டது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ராமநாதபுரம் வட்டத்தில் உள்ள தீவு என்றால் கச்சத்தீவை அது குறிக்கிறது என்றும் குறிப்பிட்டார் ஜெயா.

1974- இல் தமிழக முதல்வராக கருணாநிதி இருக்கும் போதுதான் தமிழர்களின் பாரம்பரிய உரிமை உள்ள கச்சத்தீவு மத்தியில் இருந்த காங்கிரசு அரசால் தாரை வார்க்கப்பட்டது. அப்போதே இதுபற்றிய கேள்விகளுக்கு மழுப்பலாக பதில் சொல்லித் தப்பியவர்தான் கருணாநிதி எனக் குறிப்பிட்ட ஜெயலலிதா, அஞ்சலக அரசியல் நடத்தியதாக கருணாநிதியின் பிரதமருக்கான கடிதங்களை நக்கலடிக்கவும் தயங்கவில்லை. முல்லைப் பெரியாறு துவங்கி காவிரிப் பிரச்சினை வரை அனைத்தையுமே தீர்க்க‌ முந்தைய‌ திமுக‌ அர‌சு எந்த‌ முய‌ற்சியும் செய்ய‌வில்லை என‌க் குற்ற‌ம் சாட்டினார் விஜ‌ய‌காந்த். தமிழ் சமூகத்தை அழித்த பெருமையும் திமுக விற்கே உண்டு என்றும் குற்றம்சாட்டிய அவர் கலைஞரின் 4 மணிநேர உண்ணாவிரதம் என்ற நாடகத்தையும் கிண்டல் செய்தார். இத‌னைய‌டுத்துதான் முதல் நாளில் திமுக சட்டசபையில் இருந்து வெளியேறிய‌து.

தில்லியில் சென்று முகாமிட்டு ம‌ற்ற‌ மாநில‌ அர‌சிய‌ல் த‌லைவ‌ர்க‌ளைக் கூட்டி பேசி ம‌த்திய‌ அர‌சுக்கு அழுத்த‌ம் த‌ர‌ வேண்டும் என்கிறார் நெடுமாற‌ன். இல‌ங்கை மீதான‌ பொருளாதார‌த் த‌டைவிதிக்க‌ கோரி இந்திய‌ அர‌சை ஐ.நா.விட‌ம் வ‌லியுறுத்த‌க் கோரும் தீர்மான‌த்தையும், முள்வேலி முகாமிலிருக்கும் ம‌க்க‌ளுக்கு நிவார‌ண‌ம் அளிக்க‌ வ‌லியுறுத்தும் தீர்மான‌மும் ந‌ம்பிக்கை த‌ருவ‌தாக‌ உள்ள‌து என்கிறார் வைகோ. ச‌க‌ல‌ ஈழ‌ ஆத‌ர‌வாள‌ர்க‌ளும் இதுபோல‌ பாலைவ‌ன‌த்துச் சோலையாக‌ இத்தீர்மான‌த்தை பார்க்கின்ற‌ன‌ர்.

மத்திய அரசை வலியுறுத்தும் இத்தீர்மானத்தில் கச்சத்தீவுப் பிரச்சினையைப் பொறுத்தவரையில் மத்திய அரசையும் மாநில அரசையும் 2008 இல் பிரதிவாதியாக அன்று வாதியாக இருந்த ஜெயா சேர்த்திருக்கிறார். இன்று அவர்தான் பிரதிவாதி, வாதியும் அவர்தான். இந்த கேலிக்கூத்துக்கு மத்தியிலும் வருவாய்த்துறையையும் வாதியாக சேர்க்கச் சொல்லவும் அவர் தயங்கவில்லை. இதற்கும் மேலாக இரு நாடுகளுக்கிடையிலான ஒப்பந்தங்களை அல்லது ஒரு நாடு தனிநபருடன் போடும் பரஸ்பர ஒப்பந்தங்களை ரத்து செய்ய கோரும் வழக்கு உச்சநீதிமன்றத்தில் அறுபதுகளில் தொடுக்கப்பட்டிருந்தால் கூட வெற்றி கண்டிருக்காது. அரசின் வெளியுறவுக் கொள்கையில் நீதிமன்றம் தலையிட முடியும் என்றிருந்தால் நாம் அமெரிக்க அணுசக்தி அடிமை ஒப்பந்தத்தைக் கூட ஒரு ரிட் போட்டு தூக்கி எறிந்திருக்கலேமே?

புதிய பொருளாதாரக் கொள்கைகள் அமுலாக்கப்பட்ட பிறகு குறிப்பாக 90 களுக்குப் பிறகு இதுபோன்ற வழக்குகள் வெற்றி பெற முடியாது என்பது நம்மை விட ஜெயாவுக்கு நன்றாகத் தெரியும். கச்சத்தீவு மீதான நமது உரிமை விட்டுக்கொடுக்கப்பட்டது சரியல்ல என்பதுதானே வாதம். அப்படியானால் நமது நாட்டில் இன்று அமுலாகிக் கொண்டிருக்கும் சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் கூட நமது நாட்டுச் சட்டம் செல்லுபடியாகாதே அதற்கு எதிராக ஜெயாவோ கருணாநிதியோ பேச முன் வருவார்களா ? மாட்டார்கள். மாறாக, நான்தான் நோக்கியாவை கொண்டு வந்தேன், எனது ஆட்சிக் காலத்தில்தான் ஹூண்டாய் கம்பெனிக்கு நிலம் ஒதுக்கினோம் என்றெல்லாம் கூறி தாங்கள் நாட்டு மக்களது இறையாண்மையை விற்றதையே தொழில் வளர்ச்சி, தேசத்தின் வளர்ச்சி என்றெல்லாம் பீற்றித் திரிந்த்தை அனைவரும் அறிவார்கள்.

கச்சத்தீவை மீட்க மற்ற மாநில அரசியல்கட்சி தலைவர்களோடு பேசி மத்திய அரசுக்கு எதிராக போராடி அழுத்தம் தர ஜெயாவுக்கு ஐடியா கொடுக்கிறார் மாவீரன். யாருக்கு கச்சத்தீவை மீட்க வேண்டும் என்பது தேவையாக இருக்கிறது என்பதை குறைந்தபட்சமாக பரிசீலித்தாலே இதனை எளிதாகப் புரிந்து கொள்ளலாம். இத்தீவில் மீனவர்களுக்கான பயன்பாட்டைத் தாண்டி எதாவது பொருளாதார கனிம வளம் இருக்கிறதா ? இல்லை இந்த இடம் ஏதாவது ராணுவரீதியில் கேந்திரமான இடமா ? என்பதை பரிசீலித்தால் இல்லை என்றுதான் பதில் கிடைக்கிறது. இதில் மீனவர்கள் மாத்திரமே பாதிக்கப்படுவதால்தானே அரசு இதனை கண்டுகொள்ளாமல் இருக்கிறது.

ஒருவேளை கச்சத்தீவில் மட்டும் எண்ணையும், இரும்புத் தாதும் அளப்பறிய அளவில் இருப்பதாக வைத்துக் கொண்டால் இந்தப் பிரச்சினை என்றோ ஃபைசல் செய்யப்பட்டிருக்கும். தமிழக மீனவர்கள் மட்டுமே இதில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் எனும் போது இதை ஒரு முக்கியப் பிரச்சினையாக கட்சிகளும், அரசும் ஏன் கருதப்போகிறது? கச்சத்தீவு மீட்கப்பட வேண்டுமென்றால் அது தமிழக மக்களை அணிதிரட்டி மத்திய அரசை எதிர்த்து போர்க்குணமிக்க போராட்டங்களை நடத்துவதன் மூலமே செய்ய முடியும். அதற்கு தயாரில்லாத கட்சிகள் இப்படி வெத்து சவடால் அடிப்பதையே ஈழ ஆதரவாளர்கள் கொண்டாடினால் அதை என்னவென்று சொல்ல?

பன்னாட்டு நிறுவனங்களின் பகாசுரக் கப்பல்களில் பிடிக்கப்படும் மீனை நமது மீனவர்களுக்கு கிடைக்கச் செய்வதையா அரசு செய்கிறது? இல்லை. கடலின் மீதான மீனவர்களின் உரிமையாக இருக்கட்டும், நிலத்தின் மீதான விவசாயிகளின் உரிமையாக இருக்கட்டும் எல்லாவற்றிலும் 90 களுக்குப் பிறகு அரசு வெளிப்படையாக வேறு மாதிரிதானே நடந்து கொள்கிறது. அதில் கருணாநிதி ஆட்சிக்கும் ஜெயா ஆட்சிக்கும் என்ன வித்தியாசம் வந்துவிட முடியும். இப்போது கூட காணாமல் போன மீனவர்களை கண்டுபிடிக்க கடித அரசியலைத்தானே ஜெயாவும் பின்பற்றி இருக்கிறார்.

ஆனால் இதே ஜெயாதான் கச்சத்தீவு பிரச்சினையில் ஸ்வரண்சிங் இடம் கருணாநிதி வருத்தம் மட்டும்தான் தெரிவித்தார், எதிர்ப்பெல்லாம் தெரிவிக்கவில்லை என்று சொல்லியிருக்கிறார்.

சொந்த நாட்டு மக்கள் மீது பன்னாட்டு முதலாளிகளுக்காக மத்திய இந்தியாவில் பசுமை வேட்டை என்ற பெயரில் போர் நடத்தி அவர்களை உள்நாட்டில் அகதிகளாக ஓட விட்டிருக்கும் மன்மோகன்சிங் அரசு இலங்கை முள்வேலி முகாமை பற்றி அக்கறை கொள்ள வாய்ப்பில்லை. இரு நாடுகளுக்கிடையிலான பிரச்சினையில் தான் ஒன்றும் சொல்ல முடியாது என்றுதான் உச்ச நீதிமன்றம் சொல்ல முடியும். மேலும் அரசின் கொள்கை முடிவு, அது உள்நாடாக இருந்தாலே தலையிடாத நீதிமன்றமா இன்று அயல்நாடு சம்பந்தப்பட்ட விசயங்களில் முடிவு செய்துவிடும்?

மேலும் ஜமீன்தாரி ஒழிப்புக்கு முன்னர் இருந்த வருவாய்த்துறையின் ஆவணங்களை முன்வைப்பது என்பதே இந்த வழக்கினை நீர்த்துப் போக வைப்பதற்கான வழிமுறைதான். உச்சநீதி மன்றத்தின் தீர்ப்புகள் பலவும் பின்னால் சட்டமாக வாய்ப்புள்ளதால் இதுபற்றி எதிரான தீர்ப்புதான் கிடைக்கும். எல்லாவற்றுக்கும் மேலாக கச்சத்தீவு மீட்கப்பட வேண்டும் என உச்சநீதி மன்றம் தீர்ப்பு கொடுத்தால் அதனை நடைமுறைப்படுத்த அதிகாரமில்லை என்பது  ஒருபுறமிருக்க உள்நாட்டு சிறப்பு பொருளாதார மண்டலங்களையும் மீட்டு வரைமுறைப்படுத்த வேண்டிய போராட்டம் உள்நாட்டில் கிளம்ப வாய்ப்புள்ளதையும் அவர்களை அறிவார்கள். கருணாநிதியின் கடித அரசியலை மிஞ்சி இந்த சட்டமன்றத் தீர்மான அரசியலுக்கு எந்த பலனுமில்லை.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கூடி மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை பெற்றுத்தான் கச்சத்தீவை கொடுத்திருக்க வேண்டும் என்ற வாதமெல்லாம் எடுபடாது. 1994 ல் சொந்த நாட்டில் பொதுத்துறை நவரத்னாக்களை தனியாருக்கு விற்க வழிவகை செய்ய காட் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நரசிம்மராவ் அரசு பிறகுதான் அதனை நாடாளுமன்றத்தில் தெரிவித்தது. எதிர்க்கட்சிகள் விவாதிக்க கோரிய போதும் அன்றைய நாடாளுமன்றம் வாக்கெடுப்பில்லாத விவாதங்களை மாத்திரம்தான் அனுமதித்தது. இதற்கு பிறகும் கச்சத்தீவை ஜனநாயக முறைப்படி நாடாளுமன்றத்தில் பேசிக் கொடுத்திருக்க வேண்டும் என்ற வாதம் எடுபடாது.

_________________________________________________

லங்கை மீதான பொருளாதாரத் தடை விதிக்க கோரும் தீர்மானத்தில் கடித அரசியலில் உள்ள பலம் கூட இல்லை. ஆனால் அதுதான் நம்பிக்கை ஊட்டுவதாக வைகோ முதல் சாதாரண தமிழ் உணர்வாளர்கள் வரை கருதுகின்றனர். பான் கி மூன் ஒரு மூவர் குழுவை அமைத்துள்ளார். அது அதிகாரப்பூர்வ ஐ.நா குழு அல்ல என்பதை ஜெயாவே சட்டமன்றத்தில் தனது உரையில் சுட்டிக் காட்டி உள்ளார். இந்தக்குழு ஆதாரங்களை வெளியிட்டுள்ளது, சில பரிந்துரைகளையும் தந்துள்ளது. இதனைப் பெற்றுக் கொண்ட ஐ.நா செயலர் இதனை பாதுகாப்பு சபை மற்றும் பொதுச்சபைகளில் வைத்துப் பேசுகிறார் என்றால் அதில் இது பெரும்பான்மை உறுப்பினர்களால் ஏற்கப்பட வேண்டும். இலங்கைப் பிரச்சினையில் தங்களது  பொருளாதார, ராணுவ நலன்களை இவர்கள் விட்டுத்தர வேண்டும். இதற்குப் பிறகு அவர்கள் ஒரு விசாரணைக் கமிசன் அமைத்து, அதில் குற்றம் நிரூபிக்கப்படுவது நடக்க வேண்டும். விசாரணைக்கு இலங்கை சம்மதிக்க வேண்டும். இதெல்லாம் சாத்தியமா ? இதற்கு மத்திய அரசு ஐ.நா சபையை வலியுறுத்தி தீர்மானம் நாடாளுமன்றத்தில் போட்டால் கூட அதனை பான் கி மூன் கண்டுகொள்ள வேண்டும் என்று எந்த நிர்ப்பந்தமும் கிடையாது. அப்புறம் இந்த தீர்மானத்தால் என்ன பயன் ?

தீர்மானங்களுக்குப் பதிலாக தமிழக மீனவர்களுக்கும், ஈழத்தமிழர்களுக்கும் இழைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் அநீதிகளுக்கு எதிராக இனிமேல் தமிழகத்தின் வரிவருவாய் மத்திய அரசுக்கு வராது என அறிவிக்க வேண்டும். மத்திய அரசின் அங்கமான உச்சநீதி மன்றத்தின் தீர்ப்புகளுக்கு நாங்கள் கட்டுப்பட மாட்டோம் என அறிவிக்க வேண்டும். இதனை ஜெயலலிதாவோ கருணாநிதியோ செய்ய மாட்டார்கள். அப்படி செய்தால் அரசு என்பதன் உண்மையான பொருளை ஆளும்வர்க்கம் அவர்களுக்கு நன்றாகப் புரியவைத்து விடும்.

கருணாநிதி எழுதிய கடிதத்தின் மதிப்பிற்கும், தமிழக சட்டசபை நிறைவேற்றியிருக்கும் தீர்மானத்திற்கும் மயிரளவு கூட வித்தியாசம் இல்லை. இந்தத் தீர்மானத்திற்கு எந்தவிதமான சட்ட ரீதியாகவோ, நடைமுறை சார்ந்தோ எந்த மதிப்புமில்லை. அதனால்தான் துணிந்து செய்திருக்கிறார் ஜெயலலிதா. ஏற்கனவே தமிழ் மொழி ஆட்சிமொழியாக வேண்டும் என்ற கருணாநிதி அரசின் தீர்மானத்திற்கு என்ன மதிப்பிருக்கிறதோ அதுதான் இதற்கும்.

இன்று தமிழகத்தின் விடிவெள்ளி போல காட்சியளிக்கும் பாசிச ஜெயாவின் முதலாவது ஆட்சிக்காலத்தில்தான் விடுதலைப்புலிகள் இயக்கத்தை தடைசெய்யக் கோரும் தீர்மானத்தை நிறைவேற்றினார். ஈழத் தமிழ் மக்களுக்கு ஆதரவாகவோ அல்லது தமிழ்தேசிய அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு ஜனநாயக அமைப்புகளையும் தமது முந்தைய ஆட்சிகளில் ஒடுக்க அயராது பாடுபட்டவர் ஜெயா. இதில் நெடுமாறனும் வைகோவும் கூட தப்பவில்லை.

கடந்த 2001 – 06 ஆட்சியில் மத மாற்றத் தடைச் சட்டம், ஆடு கோழி பலியிட தடை என இந்துபாசிச அமைப்புக்களின் கோரிக்கையை சட்டமாக ஆக்கிய ஜெயா, ஜெயேந்திரனை கைது செய்த ஒரே காரணத்துக்காக பார்ப்பன எதிர்ப்பு போராளி என நாம் வீரமணி போல கொண்டாட முடியுமா ? இன்று அவர் மட்டுமா சோ ராமசாமி கூட ஈழ மக்களின் நல்வாழ்வுக்காக கண்ணீர் விடத் துவங்கி விட்டார்.

ஆனால் இவர்களுத தீர்மானங்கள், கருத்துக்களால் வரலாறு நிர்ணயிக்கப்படுவதில்லை. கடந்த நாடாளுமன்றத் தேர்தல் காலத்தில் முதலில் போர் என்றால் மரணங்கள் சகஜம்தான் எனத் தெரிவித்த அம்மையார் உடனடியாக ஈழத்தாயாக அவதாரம் எடுத்து 16 சீட் கிடைத்தவுடன் கொடை நாடு போய் ஓய்வெடுக்கத் துவங்கினார். முள்ளிவாய்க்காலுக்காக இன்றுவரை கூட ஒரு அறிக்கை கூட எதிர்த்து வெளியிடாதவர்தான் ஜெயா. எல்லா ஜனநாயக இயக்கங்களுக்கும் எதிரான அவர் அன்று தனி ஈழத்தைக் கூட ஆதரித்தார். அவருக்காக பல தமிழ் தேசிய அமைப்புகளும் பிரச்சாரம் செய்தனர்.

அதன்பிறகு பிரச்சாரம் செய்யப் போனவர்கள் மாத்திரம் அவ்வப்போது போராட்டங்களை நடத்திக் கொண்டிருந்தனர். ஆனால் அம்மையார் அறிக்கைப் போர் மாத்திரம் நடத்திக் கொண்டிருந்தார். ஆட்சியில் இல்லாது போன காலத்தில் வந்த அவரது அறிக்கையை விட சட்டசபைத் தீர்மானம் கடினமானது அல்ல என நன்றாகப் புரிந்த பிறகும் இதாவது நடக்கிறதே என்பது போராட முடியாமல் துவண்டு போகின்றவர்கள் மற்றும் போராட முடியாதவர்களின் வாதம்.

உத்தரவாதமான எதிர்காலத்தை தங்களது வாழ்க்கை நடைமுறையில் வர்க்க நலனில் இருந்து பெறுபவர்கள் முள்வேலி முகாமை அதற்குள் இருக்கும் மனிதர்களது எதிர்காலத்தை தீர்மானிக்கும் போராட்டத்தில் ஈடுபட முடியாது. அவர்களுக்கு சட்டசபைத் தீர்மானமே பெரிய சாதனைதான். இதனை இணையத்திலும், செய்தித்தாளிலும் படிப்பதற்காக நேரம் ஒதுக்கியதே அவர்கள் செய்த மாபெரும் தியாகமாகத்தான் அவர்கள் கருதிக் கொண்டிருப்பார்கள்.

ஈழத்தமிழ் மக்களின் விடுதலைக்கு  இடைவிடாத போராட்டம் மூலமே வழி கிடைக்கும். சட்டப்பூர்வமாகப் போராடி பாசிசத்தை வெல்ல முடியாது. இது ஜெயா போன்ற பாசிஸ்டுகளுக்கு புரியுமென்பதால்தான் அவர்கள் இதுபோன்ற நடக்க முடியாத விசயங்களுக்காக போராடுவது போல போராடுகிறார்கள். சீமான், நெடுமாறன், வைகோ, ருத்ரகுமாரன் என நீளும் ஒரு தமிழ்தேசிய பட்டியலே தனக்குப் பின்னால் திரளும் எனத் தெரிந்துதான் ஈழத்தாய் இரண்டாம் அவதாரம் எடுத்திருக்கிறார். இவர்களது சரணாகதி அரசியலுக்கு பொருத்தமாக அட்டைக்கத்தியை இடுப்பில் சொருகியபடி புரட்சித்தலைவி உலா வருகிறார். புறநானூற்று தாயை கண்ட திருப்தியில் புளங்காகிதம் அடைகிறது நடுத்தர வர்க்கம்.

________________________________

• வசந்தன்
________________________________

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்