privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்அமெரிக்காஇரத்தத்தால் வரையப்பட்ட லத்தீன் அமெரிக்கா !புதிய தொடர் !!

இரத்தத்தால் வரையப்பட்ட லத்தீன் அமெரிக்கா !புதிய தொடர் !!

-

தோழர் கலையரசனின் “ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா” தொடர் வினவுத் தளத்தில் வெளிவந்து வாசகர்களின் வரவேற்பைப் பெற்று, பின்னர் அது தனி நூலாக வெளிவந்து சென்னை புத்தகக் கண்காட்சியில் பெரும் எண்ணிக்கையில் விற்பனையானது. இப்போது அவர் எழுதும் லத்தீன் அமெரிக்காவைப் பற்றிய தொடரை வெளியிடுவதில் வினவு பெருமை கொள்கிறது. தோழர்கள், வாசகர்கள், பதிவர்கள் அனைவரும் இந்த தொடரைப் படித்து பயன்பெறுவதோடு, அது தொடர்பான அரசியல் விவாதங்களில் பங்கு கொள்ளுமாறும் கோருகிறோம். – வினவு

____________________________________________________________

உலகில் இன்னொரு அமெரிக்கா இருக்கிறது. அனைவருக்கும் தெரிந்த “ஐக்கிய அமெரிக்க நாடுகளை” விட பரப்பளவால் இரண்டு மடங்கு பெரியது. அந்தக் கண்டத்தை சேர்ந்த 500 மில்லியன் மக்கட்தொகை ஸ்பானிய, போர்த்துக்கீசிய மொழிகளைப் பேசுவதால் “லத்தீன் அமெரிக்கா” என்றும் அழைக்கப்படுகின்றது. இந்த மொழிகள் பண்டைய லத்தீன் மொழியின் அடிப்படையில் அமைந்ததால் அந்தப் பெயர் வந்தது. சரியான அர்த்தத்துடன் தான் அந்தப் பெயர் சூட்டப்பட்டதா?

வாஷிங்டனை தலைநகராகக் கொண்ட அமெரிக்கா என்ற 50 மாநிலங்களின் குடியரசில், நாற்பது மிலியன் ஸ்பானிய மொழி பேசுபவர்கள் வாழ்கிறார்கள். அது இன்று உலகில் ஐந்தாவது ஸ்பானிய மொழி பேசும் நாடு! நியூ மெக்சிகோ போன்ற மாநிலங்களில் ஆங்கிலத்தை விட, ஸ்பானிஷ் அதிகம் பேசப்படுகின்றது.தென் கிழக்கு ஃப்ளோரிடா என்றழைக்கப்படும் மூன்று மாவட்டங்களில் மட்டும் (மயாமி, ப்ராவர்ட், பாம் பீச்) ஸ்பானிய மொழி பேசுபவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகம்.  இன்னும் கொஞ்சம் மேலே செல்லுங்கள். கனடாவில் லத்தீன் அடிப்படையில் அமைந்த இன்னொரு மொழியான பிரெஞ்சு பேசும் மக்கள் தனியாக “கெ பெக்” (Québec ) என்ற மாநில சுயாட்சியின் கீழ் வாழ்கின்றனர்.

தென் அமெரிக்கா கண்டம் முழுவதும் லத்தீன் மொழிகள் மட்டுமே பேசப் படுகின்றனவா? கயானாவிலும் சிறிய கரீபியன் தீவுகளிலும் ஆங்கிலம் ஆட்சி மொழி. சுரினாமில், நெதர்லாந்து உத்தியோகபூர்வ மொழி. இவை லத்தீன் அடிப்படை அற்ற, ஜேர்மனிய மொழிக் குடும்பத்தை சேர்ந்த மொழிகள். சிலி நாட்டில் கணிசமான அளவு ஜெர்மானியர்கள், தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களில் வாழ்கின்றார்கள். அவை இன்றும் “குட்டி ஜெர்மனிகளாக” காணப்படுகின்றன. பிரேசிலில் சாவோ பவுலோ (São Paulo) நகரில் வாழும் சில மில்லியன் ஜப்பானியர்கள், இன்றைக்கும் தமது ஜப்பானிய மொழியை மறக்கவில்லை.

பெரு நாட்டு பொருளாதாரத்தில், ஜப்பானிய வணிகர்களின் ஆதிக்கம் தவிர்க்க முடியாதது. அங்கே புஜிமோரி (புலம்பெயர்ந்தாலும் பெயரை மாற்றவில்லை) என்ற ஜப்பானியர் ஒரு தசாப்தமாக ஜனாதிபதியாக வீற்றிருந்தார். பதவியிழந்ததும் பாட்டன்மாரின் தாயகத்தில் சென்று தஞ்சம் புகுந்தார். ஆர்ஜன்தீனாவில் ஒரு மில்லியன் ஆங்கிலேயர்கள், விக்டோரியா இராணி காலத்து தொடர்புக்கு சாட்சியாக வாழ்கின்றனர். புவனொஸ் ஐரெஸ் (Buenos Aires ) நகரில் சாயங்கால தேநீர் விருந்தில் “புவனஸ் அயர்ஸ் ஹெரால்ட்” நாளேட்டுடன், ஆங்கிலம் பேசுவதை இன்றைக்கும் பார்க்கலாம்.

அமெரிக்கா என்ற புதிய பூமியை கொலம்பஸ் கண்டுபிடித்தது ஒரு புறம் இருக்கட்டும். யார் “லத்தீன் அமெரிக்கா” என்ற சொல்லைக் கண்டுபிடித்தார்கள்? நிச்சயமாக 19 ம் நூற்றாண்டு பிரெஞ்சு காலனியாதிக்கவாதிகளின் அரசியல் சொல்லாடலாக இருக்க வேண்டும். வட அமெரிக்கக் கண்டத்தில் பெருமளவு பகுதிகளை கபளீகரம் செய்த ஆங்கிலேயரை எதிர்க்க முடியாமல் போர்க்களத்தில் தோல்வியுற்றனர் பிரெஞ்சுக்காரர்கள். லூசியானா (அமெரிக்கா), கெபேக் (கனடா) என்று தமது உடன்பிறப்புகளின் மாநிலங்களையும் பறிகொடுத்தார்கள்.

பிரெஞ்சு அரசுக்கு கொள்கை வகுத்துக் கொடுத்த அறிவுஜீவிகளின் மனதில் தோன்றிய தீர்க்கதரிசனம் வரப்போகும் உலகை மாற்றியது. வட அமெரிக்க ஆங்கிலேயரின் பலத்தை சமன் செய்ய தென் அமெரிக்காவை முன் நிறுத்தினார்கள். எதிர்க்கட்சிக் கூட்டணிக்கு வைத்த பெயரான லத்தீன் அமெரிக்கா என்ற சொற்பதம் இன்று வரை நிலைத்து நிற்கிறது.

“கொலம்பஸ் 1492 ம் ஆண்டு அமெரிக்காவைக் கண்டுபிடித்தார்.” உலக நாடுகள் எங்கும் பள்ளிச் சிறுவர்களின் மனதில் புகுத்தப்படும் சரித்திர பாடம். அமெரிக்கா ஒன்றும் அட்லாண்டிக் சமுத்திரத்தின் அடியில் மறைந்திருக்கவில்லை, கொலம்பஸ் வந்து கண்டுபிடிப்பதற்கு. கொலம்பஸ் வருவதற்கு 35000 வருடங்களுக்கு முன்னரே ஆசியாவில் இருந்து (இன்றைய ரஷ்யாவின் கிழக்கு எல்லை) மக்கள் அமெரிக்கா வந்து குடிபுகுந்துள்ளனர். தெற்கு நோக்கி இடம்பெயர்ந்த ஆசிய இனக்குழுக்கள், நாகரிக வளர்ச்சி அடைந்திருந்தனர். மாபெரும் சாம்ராஜ்யங்களைக் கட்டியுள்ளனர். இந்த நாகரீங்களில் பல, கொலம்பஸ் பஹாமாஸ் தீவில் கால் பதிப்பதற்கு நூறாண்டுகளுக்கு முன்னரே அழிந்து விட்டன. கொலம்பஸ் பிறப்பதற்கு பல நூறாண்டுகளுக்கு முன்னரே ஸ்காண்டிநேவியாவில் இருந்து வந்த வைகிங் மக்கள் குடியேறியுள்ளனர். சிறு தொகையினரே என்றாலும், கனடாவில் அகழ்ந்தெடுக்கப்பட்ட “நியூ பவுன்ட்லான்ட்”(New Foundland ) எனுமிடத்தில் தமது தடயங்களை விட்டுச் சென்றுள்ளனர். இதைவிட எழுதப்பட்ட ஆவணங்கள் கிடைக்கப் பெறாத பினீசிய(லெபனான்), சீன கடலோடிகளின் கண்டுபிடிப்புகள் பற்றிப் பேசப்படுவதில்லை. அப்படியானால் கொலம்பஸ் எந்த வகையில் முக்கியத்துவம் பெறுகிறார்?

500 வருட கால “ஐரோப்பிய மையவாத அரசியல்” கொலம்பஸின் உதவி இன்றி உயிர் பெற்றிருக்காது. இன்றைக்கு ஐரோப்பிய கலாச்சாரம் உலகை ஆக்கிரமித்திருக்கிறது. ஐரோப்பியரின் அரசியல் ஆதிக்கம் உலகை அச்சுறுத்துகிறது. அதற்கெல்லாம் அவர்கள் கொலம்பஸிற்கு நன்றிக்கடன் பட்டுள்ளனர். ஆம், ஐரோப்பியர்கள் உலகை ஆள வழி திறந்து விட்டவர்தான் கொலம்பஸ்.

அன்றைய ஸ்பானிய இராணி இசபெல்லா தனது நகைகளை விற்று கொலம்பஸின் கடற்பயணத்திற்கு நிதி சேர்த்தார். அவர் கண்களில் கனவுகள் இருந்தன. கடல் கடந்து புதிய பிரதேசங்களை ஆக்கிரமிக்கும் கனவு. நூறாண்டுகளுக்கு முன்பு உதிரிகளாக உலகை சுற்றிய கடலோடிகள் எழுதிவைத்த குறிப்புகளுடன் வந்தார், ஜெனோவாவை (இன்று, இத்தாலி) சேர்ந்த கொலம்பஸ். “செல்வந்த நாடான இந்தியாவில் இருந்து சரசேனர்கள் (அரேபிய முஸ்லிம்கள்) திரவியங்களை கொண்டு வந்து விற்று லாபம் சம்பாதிக்கின்றனர். நாம் நேரடியாக வியாபாரத்தில் இறங்க வேண்டுமானால் கடல் பாதையை கண்டுபிடிக்க வேண்டும்.” கொலம்பஸின் திட்டம் இசபெல்லாவின் மனதில் ஆழமான தாக்கத்தை உண்டுபண்ணியது.

கஸ்திலிய நாட்டு (ஸ்பானியாவின் பழைய பெயர்) கொடியுடன் புறப்பட்ட கொலம்பஸின் கப்பல்கள் பஹாமாஸ் தீவில் தரை தட்டின. ஆரம்பத்தில் தங்கம் கிடைக்கிறதா எனத் தேடினார்கள். அது கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் கரீபியன் தீவுகளின் மக்களை அடிமைப்படுத்தினார்கள். மூட்டைப்பூச்சிகளைக் கொல்வதைப் போல தேடித் தேடி அழித்தார்கள். இன்றைய உலகம் அதை இனவழிப்பு என்று கூறும். அன்று அதுதான் அரச கொள்கை. கத்தோலிக்க கிறிஸ்தவ மதமும் இனவழிப்புக்கு துணை போனது. முதலில் கரீபியன் கடல் பகுதி தீவுகளை சுத்திகரித்தார்கள். பிறகு ஸ்பானியாவில் இருந்து படைகளைத் தருவித்தார்கள். மத்திய அமெரிக்காவை கைப்பற்ற குறி வைத்தார்கள். இவை அனைத்தும் கொலம்பஸின் காலத்தில் நடந்தவை.

கொலம்பஸ் ஒரு கண்டுபிடிப்பாளன் மட்டுமல்ல, கப்பற்படைத் தலைவன், நிர்வாகி… இவ்வாறு மட்டும் வரலாற்றில் பதியப்பட்டிருக்கலாம். ஆனால் கூடச் சென்ற கொலம்பஸின் தம்பி ஒரு ஆக்கிரமிப்புப் படைகளின் தளபதி. ஆம், கொலம்பஸ் வெறுமனே அமெரிக்காவை கண்டுபிடித்ததுடன் நிறுத்திக் கொள்ளவில்லை. படையெடுத்து ஆக்கிரமிக்கவும், அடிமைப்படுத்தவும் வழிகாட்டினான். அதனால் தான் எமது சரித்திரப் பாட நூல்களில் கொலம்பஸிற்கு சிறப்பான இடம் வழங்கப் பட்டுள்ளது. உலகம் கண்டிராத மாபெரும் இனவழிப்புக்கு வித்திட்ட ஒருவர் உதாரண புருஷராக போற்றப்படுகிறார்.

அமெரிக்காவை கண்டுபிடித்தது ஒரு தற்செயல் நிகழ்வல்ல. கொலம்பஸ் புறப்படுவதற்கு 50 வருடங்களுக்கு முன்னரே, ஸ்பானிய, போர்த்துக்கேய கடலோடிகள் அட்லாண்டிக் சமுத்திரத்தில் அருகில் இருந்த தீவுகளை கண்டுபிடித்தார்கள். கனாரி, மடைரா போன்ற தீவுகளை சொந்தமாக்கிக் கொண்டார்கள். ஆப்பிரிக்காவின் சில கரைகளுக்கும் சென்றார்கள். அங்கு வாழ்ந்த மக்களை சிறைப் பிடித்தார்கள். தாய்நாட்டில் அடிமைகளாக வேலை வாங்கினார்கள். அன்றைய ஐரோப்பாவில் அவர்களிடம் தான் சிறந்த கடற்படை இருந்தது. நவீன கப்பல்கள் இருந்தன.

ஆனால் அவர்கள் தாயகம் இன்றைய ஸ்பெயின், போர்த்துக்கல்லின் வடக்கே உள்ள ஒரு சிறிய பிரதேசமாக இருந்தது. இபேரிய உபகண்டம் என்றழைக்கப் படும் அந்தப் பகுதியில், பெருமளவு அரேபியரின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தன. அரபு ஸ்பெயினும், போர்த்துக்கல்லும் ஐரோப்பாக் கண்டத்திலேயே நாகரிக வளர்ச்சி அடைந்த பகுதியாக இருந்தது. உயர்தர கம்பளியை இங்கிலாந்திற்கு ஏற்றுமதி செய்யுமளவிற்கு வணிகத்தில் சிறந்து விளங்கியது. தொழிற்துறை வளர்ச்சி காணப்பட்டது. வடக்கே இருந்த கிறிஸ்தவ ஸ்பானியர்களும், போர்த்துக்கேயரும் இதைப் பார்த்து பொறாமைப்பட்டார்கள்.

முஸ்லிம்களுக்கு எதிரான கத்தோலிக்கர்களின் புனிதப்போர் அறிவிக்கப் பட்டது. உண்மையான ஆண்டவரைக் கொண்ட கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்தவர்கள், மோசக்கார முஸ்லிம்களை எதிர்த்து போரிட வேண்டும் என்றார்கள். வத்திக்கானில் இருந்த பாப்பரசரும் ஆசீர்வாதம் வழங்கினார். வரலாற்றில் அது, இரு மதங்களுக்கு இடையிலான போராக பதியப்பட்டது. உலக வரலாற்றில் இடம்பெற்ற மாபெரும் அரசியல் பிரச்சாரம் அது. புனிதப் போரை நடத்தியவர்களிடம் கத்தோலிக்க மதவெறி மட்டும் காணப்படவில்லை. அவர்கள் மனதில் பூகோள அரசியல் ஆதிக்கமும், செல்வத்தைக் கொள்ளையிட்டு பொருளாதார முன்னேற்றம் காணும் நோக்கமும் மறைந்திருந்தன. ஆனால் அனைத்தையும் மதப் போர்வையால் மூடிக் கொண்டார்கள். மக்களை தம் பின்னால் அணிதிரட்ட மதம் என்ற சித்தாந்தத்தை கையில் எடுத்தார்கள். அவர்களின் நோக்கம் நிறைவேறியது. மதம் மக்களைப் பிரித்தது. போர்க்கள வெற்றிகளைப் பெற்றுத் தந்தது.

அன்றும் இன்றும் புனையப்படும் பிரச்சாரத்திற்கு மாறாக, அரபு முஸ்லிம்களின் ஆட்சியில் இருந்த ஸ்பெயினிலும், போர்த்துக்கல்லிலும் மதப் பிரச்சினை அறவே இருக்கவில்லை. பெரும்பான்மை முஸ்லிம்களும், சிறுபான்மை கிறிஸ்தவர்களும், யூதர்களும் சமாதான சகவாழ்வு வாழ்ந்து வந்தனர். கத்தோலிக்கப் படைகள், அரபு முஸ்லிம்களை ஸ்பெயினில் இருந்து அடித்து விரட்டின. ஸ்பெயினிலும், போர்த்துகல்லிலும் ஆட்சிக்கு வந்த கத்தோலிக்க அரசர்களின் நாட்டில் முஸ்லிம்களுக்கும், யூதர்களுக்கும் இடம் இருக்கவில்லை. அனைவரும் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டனர். அல்லாவிட்டால் கொல்லப்பட்டனர்.

ஆயிரம் ஆண்டு கால இஸ்லாமியப் பேரரசை தோற்கடித்த கத்தோலிக்க ஸ்பெயினும், போர்த்துக்கல்லும் ஐரோப்பிய வல்லரசுகளாக மாறின. அவர்கள் வட ஆப்பிரிக்கா மீதும் படையெடுத்தனர். சில பகுதிகளை தக்க வைத்துக் கொண்டனர். (மொரோக்கோவின் வட கரையை சேர்ந்த செயுத்தா,மெலியா இன்றைக்கும் ஸ்பெயினின் பகுதிகள்.) ஆனால் அவர்களது தொலைநோக்கு முழுவதும் தங்கம் விளையும் புது உலகம் மீதிருந்தது. கொலம்பஸின் பின்னர் மாபெரும் கடற்படையணிகள் அமெரிக்கா என்ற கண்டம் நோக்கி பயணமாகின. அதில் ஒரு பகுதி தான் இந்தியாவிற்கு கடல்வழிப் பாதை கண்டுபிடிப்பது. அவர்களுக்கு அதுவரை தடையாகவிருந்த அரேபியரின் அச்சுறுத்தல் இப்போது இல்லை. உலகம் ஐரோப்பியருக்காக திறந்து விடப்பட்டது. அடுத்தடுத்து ஆப்பிரிக்கா, ஆசியா, இலங்கை, இந்தியா எல்லாவற்றையும் ஆக்கிரமித்தார்கள். ஐரோப்பியரின் காலனிய சாம்ராஜ்யங்களின் கீழ் கொண்டு வந்தார்கள்.

உலகை வெல்லக்  கிளம்பிய ஐரோப்பியர்கள், அமெரிக்கக் கண்டங்களை மட்டும் குடியேறுவதற்காக தேர்ந்தெடுத்தார்கள். அவர்கள் அமெரிக்காவை ஆண்டவரால் தமக்கு நிச்சயிக்கப் பட்ட பூமியாக கருதிக் கொண்டார்கள். மத்திய அமெரிக்காவில் வந்திறங்கிய ஸ்பெயின் அரச பிரதிநிதிகளும், கத்தோலிக்க பாதிரிகளும் ஆண்டவன் கட்டளையை பறைசாற்றினார்கள். “இதனால் அனைவருக்கும் அறிவிக்கப் படுவதாவது. பரிசுத்த வேதாகமத்தின் கர்த்தர் எமக்கு இந்த நாட்டை சொந்தமாக்கும் படி உத்தரவிட்டுள்ளார்…” அவர்களின் அறிவிப்பை செவி மடுப்பதற்கு அந்தப் பிரதேசத்தில் எந்த மனிதப் பிறவியும் காணப்படவில்லை.

_________________________________________________________

–          தொடரும்

தோழர் கலையரசனின் வலைப்பூ முகவரி: http://kalaiy.blogspot.com/

vote-012

தொடர்புடைய பதிவுகள்:

  1. தோழர் கலையரசனது புதிய தொடரை ரொம்ப நாளா எதிர்பார்த்தோம். இப்போ லத்தின் அமெரிக்கா தொடர் அருமையா ஆரம்பித்திருப்பதில் மகிழ்ச்சி, வாழ்த்துக்கள் !

  2. உண்​மையான வரலாற்​றை ​தேடிப்பிடித்து எழுதியிருக்கிறீர்கள். ​​மொழி ந​டை நன்றாக உள்ளது. ​தோழர் க​லையரசனுக்கு வாழ்த்துக்கள்!

  3. நல்ல அறிமுகம்… பயனுள்ள தொடராக இருக்கும் என்று நம்புகிறேன். இந்த தொடரை முழுமையாக வாசித்த பின், லத்தீன் அமெரிக்க இலக்கியங்கள் குறித்து மீள் வாசிப்பு செய்யலாம் என்று நினைக்கிறேன்.
    தோழமையுடன்
    பைத்தியக்காரன்

  4. ஆயிரமாண்டு நீடித்த இசுலாமிய பேரர‍சு எது எனவும், அவர்கள் தோற்கடிக்கப்பட்ட வரலாற்றை விபரங்களுடனும் விளக்குவீர்களா…

    • ஆம் ஆயிரமாண்டு நீடித்த இஸ்லாமிய பேரரசு எது என்பதும், கொலம்பஸ் வருவதற்கு 35000 வருடங்களுக்கு முன்னரா அல்லது 3500 ஆண்டுகளுக்கு முன்னரா என்பதை தெளிவுபடுத்துக. ஏனெனில் 35000 வருடங்கள் என்பது கொஞ்சம் பிரமிபூட்டும் படியாக உள்ளது.

      • 35000 (முப்பத்து ஐயாயிரம்) வருடங்களுக்கு முன்னர் என்பது சரியானதே. அமெரிக்க பூர்வீக குடிகள் அப்போதே ஆசியாக் கண்டத்தில் இருந்து இடம்பெயர்ந்து வந்து விட்டதற்கான சான்றுகள் உள்ளன. The traditional theory has been that these early migrants moved into the Beringia land bridge between eastern Siberia and present-day Alaska around 40,000 — 17,000 years ago, when sea levels were significantly lowered due to the Quaternary glaciation.[https://genographic.nationalgeographic.com/genographic/lan/en/atlas.html?era=e003]
        ஸ்பெயின், போர்த்துக்கல் ஆகிய நாடுகள் ஆயிரம் ஆண்டுகளாக (கி.பி. 711 – 1492) மூர் இஸ்லாமியப் பேரரசின் பகுதிகளாக இருந்துள்ளமை ஒரு வரலாற்று உண்மை. இது குறித்து உங்களது தேடல் இன்னும் அதிக பிரமிப்பை கொடுக்கும். மேலதிக தகவல்களை கீழ்வரும் சுட்டிகளில் பெற்றுக் கொள்ளலாம். இவ்விடத்தில் அதைப் பற்றி விரிவாக பேசுவது லத்தீன் அமெரிக்க கட்டுரைத் தொடரின் நோக்கம் அல்ல.
        Al-Andalus
        http://en.wikipedia.org/wiki/Al-Andalus
        மறைக்கப்பட்ட இஸ்லாமிய-ஐரோப்பாவின் வரலாறு
        http://kalaiy.blogspot.com/2008/10/blog-post_4584.html

      • 35000 ஆண்டுகள் என்பது சரியானது தான். அலாஸ்காவுக்கும் சைபீரியாவுக்கும் இடையிலிருக்கும் 90கிமி தூரமுள்ள பெர்ரிங் நீரிணை இன்றைக்கு 30000 – 40000 ஆண்டுக்கு முந்திய காலத்தில் கடல்மட்டம் இன்றைவிட 60 மி அளவுக்கு தாழ்ந்திருந்த போது பெர்ரிங் நிலப்பாலமாக இருந்தது. இந்த நிலப்பாலத்தின் வழியாகத்தான் ஆதிமனித குடியேற்றங்கள் நிகழ்ந்தன. இதை 1930 ல் நியூ மெக்சிகோ மாநிலத்திலுள்ள குளொவிஸ் என்னுமிடத்தில் நடத்தப்பட்ட அகழாய்வுகள் மெய்ப்பிக்கின்றன. அதே நேரம் டாம் டில்கி எனும் வரலாற்றாய்வாளர் சிலி நாட்டிலுள்ள மாண்ட் வெர்த்தில் நடத்தப்பட்ட ஆய்வுகளைக் கொண்டு 35000 ஆண்டுகளுக்கு முன்னல்ல அதற்கும் முன்னரே குடியேற்றங்கள் நடந்திருக்கவேண்டும் என கருத்து தெரிவித்திருக்கிறார்.

        செங்கொடி 

  5. ///மியாமி, நியூ மெக்சிகோ போன்ற மாநிலங்களில்///

    இதில் மயாமி மட்டும் மாநிலமில்லை கலையரசன்.

    தென் கிழக்கு ஃப்ளோரிடா என்னும் மூணு மாவட்டங்களில் மட்டும் (மயாமி, ப்ராவர்ட், பாம் பீச்) ஸ்பானிஷ் பேசுபவர்களின் எண்ணிக்கை ரொம்ப அதிகம். அதிலும் குறிப்பா மயாமி கவுண்டியில் (நகரத்தில் மட்டுமல்ல).

    இவங்க பெரும்பாலும் க்யூபாவில் இருந்து லீகல்+இல்லீகலாக குடியேறினவங்க. காரணம், அமெரிக்காவின் கடைக்கோடியாக கருதும் கீ வெஸ்ட்டில் இருந்து, க்யூபா வெறும் 90 மைல்கள் மட்டும்தான்.

    வடக்கு ஃப்ளோரிடாவில் இவங்க எண்ணிக்கையை விரல் விட்டு எண்ணிடலாம்.

    • தவறை சுட்டிக் காட்டியதற்கு நன்றி ஹாலிவூட் பாலா. அதனை திருத்தி விடுமாறு வினவை வேண்டுகிறேன்.

  6. தோழர் கலையரசனோட அப்பிரிக்க தொடருல நிறைய விசயங்களை தெரிஞ்சுக்கிட்டேன். சிலருக்கு புத்தகத்தை பரிசாவும் கொடுத்தேன். இந்த தொடரையும் ஆவலா படிக்கேன். நன்றி!

  7. அத்தனை விசயங்களும் நான் படித்ததற்கு நேர்மாறாய் உண்மையான வரலாற்றை சொல்லும் தொடர் வாழ்த்துக்கள் 

  8. பாராட்டுகளை அள்ளிக் குவித்துக் கொண்டிருக்கும் அனைத்து தோழர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

  9. மிக அருமையான தொடர், வாழ்த்துக்கள்.இதைபோல பல உலக வரலாறுகளை தொடர்ந்து எழுதுங்கள்

  10. வினவுக்கு நன்றி… தோழர் கலையரசன் அவர்களுக்கும்.
    எனக்கு ஒரு ஆசை.
    அப்பு, பாலன், கலியபெருமாள் போன்ற தோழர்கள் பற்றியும் எழுதலாம்.
    கருத்து முரண்பாடு, பொருள் முரண்பாடு…. போன்றவைகளைக் கடந்து, அவர்களது சரிதம் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டியவையே.
    அவற்றையும் வெளியிடலாம்.

  11. முந்தைய பின்னோட்டத்தின் தொடர்ச்சி…
    தனி நபர் சங்கதிகள் எல்லாமே, தனி நபர் வழிபாடு ஆகிவிடாது.

  12. அருமையான வரலாற்று பயண தொடர்…சுவாரசியமாக உள்ளது.அதிக நாள் இடைவெளி இல்லமால் தொடர்ந்து வெளியிடவும் . 

  13. very good article ….. a new value frontier in the midst of false histories. Vinavu is leading a good intelectual at the same time a mass base blog …. wishes to Mr.Kalaiarasan.

  14. ரினவு,
    அப்பு, பாலன், புலவர் பற்றி எழுதுங்கள் என்று வேண்டுகோள் விடுத்தேன்.
    வினவு பதில் என்ன?

    • தோழர்கள் அப்பு, பாலன் குறித்த வரலாற்றை எழுதும் வாய்ப்பு எங்களுக்கு இல்லை. இருப்பினும் அவர்களைப் பற்றி தெரிந்த தோழர்களைக் கொண்டு எழுத முயல்கிறோம்.

    • புலவர் கலிய பெருமாள் குறித்து, வர்க்கத்திலிருந்து ஜாதியை நோக்கி திரிந்த அவரது புரட்சி குறித்து முன்பு புஜ வில் ஒரு கட்டுரை வந்ததாய் நினைவு.

      செங்கொடி 

  15. வாழ்த்துக்கள் தோழர் கலையரசன் !
    மேலும் சில குறிப்புக்கள்:
    கொலம்பஸ் அமெரிக்காவை ” கண்டு பிடிக்க ” முன்பே விகிங் ( viking ) என்கிற ஸ்கண்டிநேவிய நாடுகளை ( டென்மார்க்.சுவீடன் .நோர்வே ) சேர்ந்த கடலோடிகள் 500 ஆண்டுகள் முன்பே கண்டு பிடித்து விட்டார்கள். கடல் பாதை வழியே வடக்கு நோக்கி பயணித்த அவர்கள் கிரீன் லேன்ட் ( எக்சிமொக்கள் வாழும் நாடு ) ஊடாக சென்று அமெரிக்காவை அடைந்தார்கள் என வரலாறு கூறுகிறது.அதற்கு புதை பொருள் ஆராச்சிகள் ஆதாரமாக உள்ளன. இன்றும் கிரீன்லாந்து டென்மார்க் காலனியாக உள்ளது.எக்சிமொக்கள் ,மற்றும் அமெரிக்க பூர்வீக மக்கள் ( செவ்விந்தியர்கள் ) இன ரீதியிலும் மொங்கோலிய இனத்தை சேர்ந்தவர்கள் என்பதும் கவனிக்கத்தக்கது.அவர்கள் மெக்ஸிகோ, மற்றும் தென் அமரிக்கா முழுவதும் பரவி இருக்கிறார்கள்.” இங்கா” என்கிற உயர்ந்த நாகரீகத்தை படைத்தவர்கள் .2000 ஆண்டுகளுக்கு முன்பே காய்ந்த புற்களால் கட்டப்பட்ட கப்பல்கள் மூலம் எகிப்து நாட்டுடன் தொடர்பு வைத்திருந்தவர்கள்.அவர்கள் உருவாக்கிய பிரமிட்டுக்கள் உலகை வியக்க வைப்பவை.ஐரோப்பியர் வருகைக்கு சில நூற்றாண்டுகள் முன்பே தாங்கள் அழிந்து போக போவதாக சில இதீகங்களை எண்ணி வாழ்ந்தார்கள்.முதன் முதலாக வெள்ளை நிற ஐரோப்பியர்களை கண்ட போது அவர்களை தேவ தூதர்கள் என எண்ணி தமது செல்வங்களை ( தங்கம் ) கொடுத்து வரவேற்றார்கள். ஓடுகின்ற ஆற்று நீரில் படிந்து கிடக்கின்ற தங்கத்தை கண்ட பேராசை பிடித்த வெள்ளையர்கள் அவர்களை ஏமாற்றி ,அழித்து , நாட்டையும் அபகரித்தார்கள்.

    கொலம்பஸ் மஹாராணியிடம் கும்பிட்டு மன்றாடி இந்தியாவை நோக்கி தான் பயணித்தார்.தவறான திசையில் சென்ற கப்பல் அமெரிக்க கண்டத்தை அடைந்தது.பூர்வீக குடிகளை கண்ட அவர்கள் கருப்பான இந்தியர்களுக்கு பதிலாக சிவந்த மேனியுடைய மக்களை கண்டதும் அவர்களை ” சிவப்பு இந்தியர்கள் ” என அழைத்தார்கள்.இந்தியர்கள் என்றே அவர்கள் நம்பினார்கள்.தவறுதலாக அவர்கள் அழைத்தது இன்று வரை நிலைத்துள்ளது.

  16. நன்றி யோகன்.கலைரசன் அவர்களே எதற்காக கடல் வழி கண்டுபிடித்தார்கள்

    • இந்தியா, சீனாவுடனான வர்த்தகம் தரை வழியாக தான் நடைபெற்று வந்தது. சீனாவில் இருந்து சென்ற பட்டு, இந்தியாவில் இருந்து சென்ற வாசனைத் திரவியங்களுக்கு ஐரோப்பிய சந்தையில் கொள்ளை லாபம் கிடைத்தது. ஆனால் ஒரு பிரச்சினை. ஆசியாவுடனான வர்த்தகம் முழுவதும் அரேபியரில் கையில் இருந்தது. ஐரோப்பாவுக்கும், ஆசியாவுக்கும் இடையில் இருந்தவை எல்லாம் முஸ்லிம் நாடுகள். சர்வதேச வர்த்தகத்தில் அரேபியரின் ஏகபோக ஆதிக்கத்தை முறியடிக்கத் தான் கொலம்பஸ் இந்தியாவுக்கு கடல்வழிப் பாதை கண்டுபிடிக்க வேண்டியிருந்தது.
      It is all about buisiness

  17. பல மாதங்களுக்கு பிறகு மீண்டும் ஒரு அருமையான தொடர் எழுத துவங்கியிருக்கும் கலையரசன் தோழருக்கு வாழ்த்துக்கள்.

    அறிவாளிகளை (அப்துல் கலாம் மாணவர்களை- உயபம் – வினவு) மனதில் கொண்டு எழுதாதீர்கள். அவர்கள் எப்படியும் படித்துவிடுவார்கள். எங்களை போன்ற கடைசி பெஞ்ச் மாணவர்களை மனதில் கொண்டு எழுதுங்கள்.

    நிறைய யோசிக்க வைக்கிற, பல தகவல்களை உள்ளடக்கிய கட்டுரைகள் எனக்கு எப்பவும் கொஞ்சம் அலர்ஜி. ஆனால் நிறைய கத்து தருதே! அழுது கொண்டே படிக்கும்…

    மீண்டும் வாழ்த்துக்களுடன்,

    நொந்தகுமாரன்

  18. தெரியாத செய்தி பல…தொடருக்கு நன்றி…வாழ்த்துக்கள்….

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க